தியாகத்தின் எல்லை..!
‘ எட்டு மாத கருவிற்கு அப்பா தேவை. சாதி, மதம் தேவை இல்லை. முப்பது வயதிற்குள் நோய் நொடி ஏதுமில்லாத இளைஞர்கள் , மனைவியை இழந்த விருப்பமுள்ள ஆண்கள் இந்த விளம்பரம் கண்ட பதினைந்து தினங்களுக்குள் கீழ் கண்ட முகவரிக்கு நேரில் வரவும் . ‘
கீழே முகவரி இருந்தது.
இப்படிக்கூட விளம்பரம் செய்வார்களா என்று ஆச்சரியப்படுகிருறீர்களா..? ! – செய்திருக்கின்றார்களே…?!
நான் கொண்டிருக்கும் லட்சியத்திற்கு இந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்குள் மகிழ்ச்சி பரவியது.
என்னைப் பற்றிக் கொஞ்சம் உங்களுக்குத் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
பெயர் ரமேஷ். படிப்பு பொறியியல். வயது 28 . தனியார் கம்பெனி ஒன்றில் முக்கால் லட்சம் சம்பளம். அழகு என்பது எனக்கு ப்ளஸோ , மைனஸோ இல்லை. குறை சொல்ல முடியாத அளவிற்கு அழகு மற்றும் நிறம். நான் கொஞ்சம் முற்போக்குவாதி மற்றும் சீர்திருத்தவாதி. தெய்வ நம்பிக்கை இல்லாதவன்.
நான் சம்பாதிக்க ஆரம்பித்திலிருந்தே பெரிய பெரிய இடங்களிருந்து வரன்கள் வந்தன. என்னைப் பெத்தவங்க…. பணத்தாசை மற்றும் பையன் நல்லா இருக்கணும் என்கிறதுக்காக உடனே திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிச்சாங்க. நான் ஒரே அடியாய்த் தெளிவாய்ச் சொன்னேன்.
” வரதச்சணை எதுவுமில்லாம….. ஒரு விதவை , இல்லை… அநாதை , அபலைப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன். இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம். மன்னிச்சுடுங்க. ” என்றேன்.
அம்மா அப்பாவுக்கு அதிர்ச்சி மட்டுமில்லாமரொம்ப வருத்தம்.
” எங்க விருப்பமில்லாம எதையாவது செய்து தொலை. எப்படியாவது நீ நல்லா இருந்தா சரி !” – விட்டுட்டாங்க.
இப்ப சொல்லுங்க.. இந்த மாதிரி குறிக்கோள், லட்சியத்தோடு இருக்கிற எனக்கு இந்த விளம்பரம் மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் என்ன செய்யும்..? மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனா பாருங்க… எனக்குப் பக்கத்துல இந்த விளம்பரத்தைப் பார்த்து எப்படியெல்லாம் கமெண்ட் அடிக்கிறாங்க. பத்திக்கிட்டு வருது.
ஒருத்தன் சொல்றான்.
” இன்னொருத்தன் பிள்ளைக்கு அப்பனாக வர்றீயான்னு கேக்கிற அளவுக்கு நாடு எவ்வளவு தூரம் கெட்டுப் போய்க் கிடக்குப் பார்த்தியா..? ”
” எவன் புள்ளைக்கு எவன்டா அப்பனாப் போவான்..? எந்த மானம் , ரோசமுள்ள ஆம்பளையாவது போவானா ….?! அப்படிப் போறவன்தான் மனுசனா..!? ”
” அது இல்ல மச்சி ! எவன்கிட்டயோ ஆள் ஏமாந்துட்டாப் போலிருக்கு. கலைக்க முடியல . இளிச்சவாயன் எவனாவது கிடைக்க மாட்டானா… பணத்தால ஆளைக் குளிப்பாட்டி, மொழுகி…. தலையில கட்டிடலாம் என்கிற நப்பாசையினாலதான் இந்த ஏற்பாடு விளம்பரம். ”
” ஏம்ப்பா ! இப்படி விளம்பரம் கொடுக்க அவளுக்கு மட்டுமில்லாம பெத்தவங்களுக்கே வெட்கமா இருக்காது..? ! பணம் இருக்கு என்கிறதுனால இப்படி ஒரு விளம்பரம் கொடுத்து எவன் தலையிலாவது கட்டி வாழ அப்படி என்னடா மானம்கெட்டஆசை..! ச்சை !! ”
– இப்படி அந்த இளைஞர்கள் , ஆம்பளைங்க வாய்க்கு வந்தபடி பேசுறதைப் பார்க்கும்போது எனக்கு… வெண்கல கடையில ஆனை புகுந்தாற்போல் அவனுங்களை அடிச்சி துவசம் பண்ணும் அளவுக்கு ஆத்திரம் வருது.
இப்படி செய்ய…. நான் என்ன சினிமா கதாநாயகனா.?! இல்லே… இங்கே நடக்கிறதுதான் படப்பிடிப்பா..? ! எதுவும் கிடையாது. நடப்பு எல்லாம் உண்மை.
ஆனாலும்….
” ஏன்டா ! உங்களுக்கு வாய்க்கப் போற மனைவி…. உத்தமி , சுத்தமானவள்ன்னு தெரியுமா..? ரொம்ப புத்திசாலித்தனமா மருத்துவ பரிசோதனையில் கன்னித்தன்மையோட ஒருத்தியைக் கட்டினாலும் அவள் உடலால கெடலைன்னாலும் மனசால கெட்டிருக்க மாட்டாள்ன்னு என்னடா நிச்சயம்..? ” ன்னு கேட்க எனக்கு வாய் துடிக்குதுங்க கேட்க முடியுமா..? கேட்டா நான் முழுசா வீடு போய் சேர முடியுமா..? ” – காதைப் பொத்திக்கணும் போல இருக்கு.
ஆனாலும் முடியல…
” ஏம்ப்பா ! இன்னொருத்தன் தொட்டத்தைத் தொடுறதுக்கு அருவருப்பா இருக்காது..?!! ” இது இன்னொருத்தன் .
அருவருப்புன்னா என்னங்க..? எல்லாம் மனசு நிர்ணியக்கறது. அதை ஒழுங்கா பக்குவப் படுத்திட்டோம்ன்னா…. அருவறுப்பாவது ஒண்ணாவது !!
” மாப்ளே ! இந்தப் பொண்ணை ஒருத்தன் திருமணம் செய்து கொள்றதாவே வைச்சுக்குவோம் . முதலிரவு நடக்குமா..? நடக்காதா..? ” ஒருத்தனுக்கு ரொம்ப முக்கிய சந்தேகம். !
இதுக்கு மேல எனக்கு அந்த இடத்துல நிக்கிறதுக்குப் பொறுமை இல்லீங்க. கோபப்பட்டு ஏதாவது எக்குத்தப்பா கிளம்பிட்டேன்.
நான் முடிவு பண்ணிட்டேன். இந்தப் பொண்ணுக்கு வாழ்வு தர்றதா தீர்மானம் பண்ணிட்டேன். !
அப்புறம் என்ன !. மறுநாளே கிளம்பிட்டேன்.
பேருந்துல போகும்போது திடீர்ன்னு ஒரு சந்தேகம்.
‘ இந்த விளம்பரம் உண்மையா , பொய்யா ..? ‘ ன்னு . கூடவே…. கிளம்பியாச்சு . எது எப்படின்னு போய் பார்த்துடுவோம் ! ன்னு துணிச்சல் வந்துடுச்சு.
என்னைப் போல் எத்தினிப் பேர் வருவாங்கன்னு மனசு கணக்குப் போட்டுச்சு. நூறு பேராவது கண்டிப்பா வருவான். இவ்வளவு துணிச்சலா தினசரி தாள்ல விளம்பரம் கொடுத்து வரன் தேடுறாங்கன்னா அவுங்க கண்டிப்பா பெரிய பணக்காரங்களாத்தான் இருக்கணும். பணத்தை அனுபவிக்கலாம் என்கிற நினைப்பிலாவது நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு பலபேர் வரலாம்.
முப்பது வயசுல பத்துப் பிள்ளைகள் பெத்து, மனைவியைப் பறிகொடுத்தவன்கூட வரலாம். வந்து… எனக்கு ரெண்டு புள்ளைங்கதான் இருக்கு. நான் பெண்ணைக் கலியாணம் பண்ணிக்கிறேன்னு பொய்க்கூட சொல்லலாம். இதையெல்லாம் உண்மையா பொய்யான்னு ஆராய்ந்து மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்க அவுங்களுக்குத் திறமை இருக்கணும்.
இவ்வளவு துணிச்சல் , முற்போக்கா விளம்பரம் கொடுத்தவங்க இதை பத்தியெல்லாம் யோசிக்காமலா இருப்பாங்க.??!
எத்தனை பேர் வந்தாலென்ன.! நாமளும் போய்ப் பார்ப்போம். இந்தப் பொண்ணு இல்லைன்னா நாட்டுல நமக்கேத்தப்படி எத்தனையோ பொண்ணு. நாட்டுல விதவைகள் அபலைகளுக்குமா பஞ்சம்.?! ‘ இப்படி பலவாறு யோசனைப் பண்ணிக்கிட்டே நான் அந்த ஊர்ல போய் இறங்கிட்டேன்.
அப்புறம் விலாசம் தேடி, அந்த தெருவுக்குப் போனா… அந்த வீட்டுக்கு முன்னாடி ஒருத்தனைக் காணோம் !! ஒரு ஈ , காக்கா இல்லே.
இங்கே ஒரு ஆம்பிளைக் கூடவா சீர்திருத்தவாதி இல்லே ! சீர்திருத்தம் அது இதுன்னு எழுதுறானுங்க, பேசுறானுங்க… எல்லாம் சுத்த மார் தூக்கல் வெளிவேசம்தானா ..?!!.
‘ இவ்ளோ தூரம் வந்து முன் வச்ச காலைப் பின் வைக்காம போய் பார்ப்போம் ! ‘ நினைச்சி தைரியமா திறந்திருந்த அந்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.
சரியா அஞ்சு நிமிசத்துல உள்ளே இருந்து பணக்காரத்தனமா ஒரு அம்மா வந்தாங்க.
” யாரு நீங்க…? ” விசாரிச்சாங்க.
‘ தப்பான விலாசத்துக்கு வந்துட்டோமா..?! ‘ ன்னு எனக்குள் ஒரு சின்ன குழப்பம்.
” நா… நான்… ” குழறினேன் .
” புரியல… ” அவுங்க முகத்துல குழப்பம்.
உடனே நான் கையில உள்ள தினசரியை விரித்துக்காட்டி..
” இது உங்க விளம்பரம்தானே ..??…” கேட்டேன்.
” ஆமா..”
” இது சம்பந்தமா வந்திருக்கேன் ! ”
இதைக் கேட்டதும் அவுங்க முகத்துல சட்டுன்னு ஆயிரம் ஓல்ட் மின்சாரம்.
நம்ப முடியாமல்…. என்னை மேலும் கீழும் ஆச்சரியம் , வியப்பாய்ப் பார்த்தாங்க.
” வாங்க… வாங்க… ” பரபரப்பா குரல் கொடுத்து , அழைச்சி… உள்ளே திரும்பினாங்க.
நான் அவுங்கள பின் தொடர்ந்து போனேன்.
அவுங்க எதிர் சோபாவுல என்னை உட்காரச் சொன்னாங்க. .
அமர்ந்தேன்.
அவுங்க எதிர் சோபாவுல அமர்ந்தாங்க.
என்ன பேசுறது… எப்படி தொடங்குறது…? ன்னு எனக்குள் கொஞ்சம் குழப்பம் தடுமாற்றம் .
என்னதான் துணிவு , துணிச்சலா வந்தாலும்…. முன் பின் அறிமுகம் , பழக்கமில்லாத இடம். இந்த தயக்கம் , தடுமாற்றம இருக்கத்தானேச் செய்யும்.?!
அப்புறம்…. நான் சுதாரிச்சி… என்னைப் பத்தின முழு விசத்தையும் விலாவாரியாய்ச் சொல்லிட்டு….. நான் இந்தக் கம்பெனியிலதான் வேல செய்யுறேன்னு சொல்லி அதன் அடையாள காட்டினேன்.
எல்லாத்தையும் ரொம்ப அக்கறை , கவனமா கேட்டு…. பார்வையாலேயே என்னை முழுசா அளவெடுத்து ஆராய்ஞ்சி பார்த்தவங்க நான் கொடுத்ததையும் வாங்கிப் பார்த்தாங்க.
முகத்தில் மலர்ச்சி . மனசுக்குத் திருப்திப் போல.
” பொண்ணைப் பார்க்குறீங்களா..? ” கேட்டாங்க.
” ம்..ம்ம்… ” தலையாட்டினேன்.
” ஒரு நிமிஷம். போய் அழைச்சு வர்றேன் ! ” சொல்லி உள்ளே போனாங்க .அறைக்குள் நுழைஞ்சாங்க.
அவுங்க போன பிறகு…. தனியா இருந்த நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே கவனிச்சேன்.
ஆடம்பரமான வீடு. எல்லா இடங்களிலேயும் பணக்காரத்தனம்.
இதெல்லாம் எனக்குத் தேவை இல்லாதது இதுக்காகவா வந்தேன். ! நினைச்சி மிரட்சியான மனசை இறுக்கி பிடிச்சேன்.
கட்டுப்பட்டுச்சி.
ஒரு நிமிசம்ன்னு சொல்லிட்டுப் போனவங்க கால் மணி நேரம் கழிச்சி திரும்பி வந்தாங்க.
கூடவே… ஏறக்குறைய இருபத்தைந்து வயதில் பட்டுப் புடவையில் பொண்ணு . எட்டுமாத வயிறு மேடிட்டுருந்தது. முகத்தில் தாய்மையின் கொள்ளை அழகு. நெற்றியில் பொட்டு. தலையில் மங்களகரமாய் மல்லிகைப் பூ .
புதுப்பொண்ணுதான். ஆனா முகத்தில் மலர்ச்சி இல்லே.
சோகமா வந்து எனக்கு முன்னால் உட்கார்ந்திச்சு. குனிஞ்ச தலை நிமிரலை .
அவமானம் , பயம் .. வேணாம்மா. நான்தான் எதுக்கும் தயாராய் உன்னை ஏத்துக்க வந்திருக்கேன். கவலைப்படாதே. எதுக்கு வருத்தம் , சோகம்..? உன் கடந்த கால வாழ்க்கை எனக்குத் தேவை இல்லாதது. கண்டிப்பா மறந்தும் கேட்கமாட்டேன். என்னைப் பத்தி உனக்குத் தெரியாது . திருமணம் ஆனதும் பாரு. புரியும் ! ‘ மனசுக்குள் சொல்லி பார்த்தேன்.
ரொம்ப திருப்தி.
மலர்ச்சியாய்த் தலையாட்டினேன்.
அதை அடுத்து….
” நீ போம்மா. நான் பேசிட்டு வர்றேன். ” அந்த அம்மாள் அவளைப் பார்த்தது கனிவாச் சொல்ல… அவள் மெல்ல எழுந்து நடந்தாள் .
போகும்போது அவள் என்னை ஜாடையாய்க் கவனிப்பாள் என்று எதிர்பார்த்தேன்.
பார்க்கவில்லை.
அவள் தாய்மையின் சுமையில் அசைந்து அசைந்து செல்வதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
எதிரில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் பேச ஆரம்பித்தாள்.
” இவ பேரு லட்சுமி. இவளோட கணவர்… இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் ப… பலி. ” நிறுத்தினாள் .
திருமணம் ஆகாதவன். கன்னிப்பெண் கர்ப்பம். நினைத்து வந்த எனக்கு… இது எதிர்பாராதது !
‘ அடப்பாவமே…! ‘ – சடக்கென்று எனக்குள் பரிவு பச்சாதாபம் தொற்ற.. பட்டென்று நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.
அவள் தொடர்ந்தாள்.
” பாவம் ! வாழ வேண்டியவ … நொறுங்கிப் போய்ட்டாள். நான்தான் அவளைத் தேற்றி , ஒரு மாசத்துல சகஜ நிலைக்குக் கொண்டு வந்து …. மறுமணம் செய்து வைக்கிறேன்ன்னு சொன்னேன். மறுத்தாள் . என்னால எப்படி முடியும்ன்னு …அழுதாள், துடிச்சாள் .. ஊர், உலகம் , உறவுகள் என்ன சொல்லும்ன்னு பதறினாள். எங்க ரெண்டு பேருக்குள்ள எவ்வளவோ வாக்குவாதங்கள், தர்க்கங்கள், பேச்சுகள். அதையெல்லாம் விலாவாரியாய்ச் சொல்ல ஒரு நாள் போதாது. மெதுவா… அடி மேல் அடி அடிச்சி அவளைச் சம்மதிக்க வைச்சுட்டேன். வரன்களைச் சொந்தத்தில் பார்த்தேன் . ஒன்னும் சரி வரலை. நான் மனசு தளரல . நாடு முன்னேறி இருக்கு. எத்தனையோ நல்லவங்க இருக்காங்க. இவளை ஏத்துக்குவாங்கன்னு என் மனசு சொல்லிச்சு. அதனால தைரியமா விளம்பரம் கொடுத்தேன்…” அவள் சோகக் கிணற்றின் அடி ஆழத்திலிருந்து பேசினாள் . குரல் அவ்வளவு வலியாய் இருந்தது .
வாய் ஏதும் பேசமுடியாமல் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த எனக்குள்ளும் அந்த சோகம் வந்து ஒட்டிக்கொண்டது.
” நான் விளம்பரம் கொடுத்து பத்து நாட்களாகியும் ஒருத்தரும் வரல. சொந்தம் பந்தம் உலகம் கேலி பேசுற அளவுக்கு…… நாமதான் நாட்டுல நல்லவங்களும் இருப்பாங்க என்கிற தைரியத்துல முட்டாள்தனமா விளம்பரம் கொடுத்துட்டோமோன்னு நொறுங்கிப் போன சமயத்துலதான் நம்பிக்கை நட்சத்திரமா நீங்க வந்த்திருக்கீங்க . ” சொல்லி என்னைப் பார்த்தாள் .
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சிறிது நேரம் எங்களுக்குள் வாய் பேச்சில்லா மவுனம்.
” லட்சுமியை உங்களுக்குப் பிடிச்சிருக்கா..? ” மௌனத்தை உடைத்தாள் .
” பிடிச்சிருக்கு..! ” எந்தவித தயக்கமுமில்லாமல் பளிச்சென்று சொன்னேன்.
” நல்லா யோசனைப் பண்ணி சொல்லுங்க. பரிவு , பச்சாதாபம் , நான் சீர்திருத்தவாதின்னு வெளியில காட்டி மார் தட்டிக்கிறதுக்காக …இளமை முறுக்குல அவரசப்பட்டு முடிவெடுக்க வேணாம். பின்னால உங்களைப் பத்தி உலகம் எவ்வளவோ கேலி பேசும். அதையெல்லாம் தாங்கிக்கிற பக்குவம் வேணும். ” சொன்னாள் .
இப்போது என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம்.
வாயைத் திறந்தேன்.
” என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. நான் வயசுல சின்னவனாய் இருந்தாலும் அறிவு, புத்தியில் தெளிவானவன் . நான்….. விருப்பு , வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். எல்லோரும் நடந்த பாதையில் நடந்து… மடிந்து போக எனக்கு விருப்பமில்லே. கரடோ முரடோ … எனக்கு புது பாதையில் போகவே விருப்பம். அதில் என்ன கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் அதைப் பத்தி கவலைக் கிடையாது. தைரியமா துணிச்சலாய் எதிர்த்து நடப்பேன். இதை இந்த திருமணத்திற்குப் பிறகு தெரிஞ்சிப்பீங்க. ” சொன்னேன்.
அவள்….கண்களை அகலமாய்த் திறந்து என்னை ஆச்சரியம், வியப்பாய்ப் பார்த்தாள் .
தொடர்ந்தேன் .
” என் அளவுக்குப் பொண்ணு பக்குவப்பட்டிருக்கணும் அதுதான் என் விருப்பம். தன் பழசுகளையெல்லாம் சுத்தமாய் மறந்துட்டு என்.. அன்பு , அரவணைப்பு , ஆசைகளை அவுங்க முழுசா ஏத்துக்கணும். வெளியில வாய்க்கு வந்தபடி பேசுறவங்களைப் பார்த்து தூசின்னு நெனைச்சி ஒதுக்கணும் , ஒதுங்கனும். சோகமில்லாம என் அளவுக்கு அவுங்களும் சந்தோசமா வாழ்க்கையை வாழனும். அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்…” நிறுத்தினேன் .
‘ என்ன..? ‘ – பார்த்தாள் .
” நான் வாழ வைக்கிற தெய்வமாய் நினைச்சி லட்சுமி வாழக் கூடாது. ஒரு சாதாரண , சராசரி கணவன் மனைவியாய் வாழனும். இது முக்கியம் ! ” சொன்னேன்.
” அப்படியே நடப்பாள். அந்த அளவுக்கு நான் லட்சுமிக்குப் பாடம் எடுத்திருக்கேன். அப்போ… திருமணம் நிச்சயத்தைப் பத்தி உங்க அப்பா , அம்மாவைப் பார்த்து நான் பேசணும் .” சொன்னாள் .
” நாளைக்கே வரலாம் ! ” சொல்லிக் கிளம்பினேன்.
அந்த அம்மா அப்படியே யார் துணையும் இல்லாம வீட்டுக்கு வந்தாங்க. அப்பா , அம்மாவைப் பார்த்தாங்க , பேசினாங்க.
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.
என் விருப்பப்படியே எளிமையாய் பதிவுத் திருமணம்.
லட்சுமிக் கையைப் பிடிச்சதும்…
” டேய் ! எல்லாரும்… சீர்திருத்தம் , சீர்திருத்தம்…. அது இதுன்னு பேசறீங்களேடா. ஒருத்தனாவது இதுமாதிரி துணிஞ்சி ஒரு காரியம் பண்ணி இருப்பீங்களாடா..” ன்னு இந்த நாட்டையே கேட்கணும்போல மனசுக்குள் ஓர் திமிறல் .
அட போங்க சார். நான் இப்படி பீத்தி , பெருமையடிக்கவா இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கேன். இல்லே.!!
அதனால அந்தத் திமிறலை அடக்கி ஒடுக்கினேன்.
ஆனாலும் … இந்த மனசு இருக்கே ரொம்ப பொல்லாதது. அதுக்குள்ள ஒரு அமானுஷ்யமான ஒரு கர்வம் , பெருமை வந்து உட்கார்ந்து என் நடையிலேயே ஒரு மாற்றம்.
வீட்டுக்கு வந்து நானும் என் மனைவி லட்சுமியும் ஊருக்குக் கிளம்பும்போது அந்த அம்மாவைப் பார்த்து கேட்டேன்…
” இவ்வளவு தூரம் எல்லாமுமே நடந்து முடிஞ்சாலும் இதுவரை நீங்க யாரு, லட்சுமிக்கு என்ன உறவுன்னு நானும் விசாரிக்கல, நீங்களும் சொல்லலை . நீங்க லட்சுமிக்கு அம்மா . எனக்கு அத்தைதானே ..?! ” கேட்டு அவுங்க முகத்தைப் பார்த்தேன்.
” என் பேரு காமாட்சி. ஆனா உங்களுக்கு நான் அத்தை இல்லே. ! ” சொன்னாங்க.
” என்ன சொல்றீங்க..?! ” – குழப்பமாப் பார்த்தேன்.
” நான் லட்சுமியோட சக்களத்தி. மூத்தவள், முதல்தாரம். ! ” ன்னாங்க.
அதிர்ச்சியாய் இருந்தது .
” எங்களுக்குள் குழந்தை இல்லேன்னு இவளை இரண்டாம்தாரமா என் கணவருக்குக் கட்டி வச்சேன். ! ”
அதிர்ச்சியின் எல்லைக்குப் போய் எனக்குள் பிரமாண்ட பிரமிப்பு !!
‘ தான் தாலி இழந்த பின்னும் தன் சக்களத்தியையா .. தன் பெண்ணைப் போல் அக்கறையாய்ப் பாவித்து திருமணம் செய்து கொடுத்தாள் . ?!
இருவருமே தாலி இழந்த நிலையில்… என்னதான் வயதாகிப் போனாலும் எப்படி ஒரு பெண்ணால்அடுத்தவளை வாழ வைக்க மனசு வந்தது..?
வாரிசே இல்லாத நிலையில் இன்னொருவளுக்கு வழி விட்டு.. வாரிசு உருவான பின்பு அதை இன்னொருவருக்குத் தானம் வார்க்க மனசு வருமா..?!
நான்தான் உலகத்திலேயே யாரும் செய்யாததைச் செய்தது போல கர்வப்பட்டுக்கொண்டேனே.. இவள்… இவள்… தன் கணவனோடு வாழ்ந்தாள் , படுத்தாள், அதற்காக வரிசையும் பெற்றாள் , உண்டானாள் என்பதற்காக ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை வீணடிப்பதா என்று யோசித்து செய்திருக்கிறாள்..?!!! – நினைக்க நான் அவளுக்கு முன் சிறு புள்ளியாகத் தோன்ற…
” நீங்க லட்சுமிக்கு எப்படி இருந்தாலும்…. என்னைப் பொறுத்தவரையில் இவளுக்கு அம்மா.! எனக்கு அத்தை.!! வர்றேன்.! ” சொல்லி நடந்தேன்.
எப்புடீஈஈ…?!!!