தாலி – வேலியா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,160 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலில் கார் வந்து நின்றது. சரோஜினி இறங்கிக் கொண்டு கதவைச் சாத்திக் கையசைத்து விடை கொடுத்தாள். மெதுவாகக் கார் ஊர்ந்து சென்று பின் வேகமாய்ச் சென்றது. சரோஜினி தனது காலணியைக் கழற்றிவிட்டு வெளியில் இருந்த குழாயில் காலைக் கழுவிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். தமிழ்ப் பேராசிரியர் விவேகானந்தர் அவளை இன்முகத்தோடு வரவேற்றார். நேரே சென்று அவரது கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டவளாய்த் திரும்பிவந்து இருக்கையில் அமர்ந்தாள் சரோஜினி.

“சாப்பிட்டீயாமா…” கனிவுடன் வந்தது பேராசிரியரின் குரல். முடிந்தது என்பதற்கடையாளமாய்த் தன் தலையை ஆட்டிப் புன்முறுவல் பூத்தாள், அந்தப் பேரிளம் பெண். அவளையே இமையாது நோக்கிய பேராசிரியர் –

“சரோஜினி உன்னை ஒன்று கேட்டால் கோபப்பட மாட்டாயே…” அமைதியாய்க் கேட்கிறாள். பார்வையோ அவர் விழிகளில் ஆழமாய்ப் பதிந்தது.

“இல்லையய்யா… நீங்கள் தந்தைக்குச் சமமானவர்… என் நலனில் அக்கறையுள்ளவர். உங்களுக்கு என் விஷயத்தில் எல்லா உரிமையும் உண்டு… நான் வருந்தமாட்டேன். சாதாரணமாய்க் கேளுங்கள்” என்றாள்.

சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. பின் அவர் பேசினார்.

உன்னை யாரா கொண்டு வந்து விட்டுப் போனதைப் பார்த்தேன். உனக்குக் கார் உண்டு நீ கார் ஓட்டுவாய்; இருந்தும் யாரோ ஓர் ஆடவனுடன் நீ புதிதாய் வந்தது எனக்குப் புதிதாய் இருந்தது. யாரம்மா அவன்?.. உனக்கும் அவனுக்கும் என்ன உறவு? நான் தெரிந்து கொள்ளலாமா?” சரோஜினி கொஞ்சம் தன்னை இயல்பாக்கிக் கொண் டாள். பின் அமைதியாக

“அவர் என் நண்பர் ஐயா..” என்றாள்.

“நண்பர் என்றால் சாதாரண நண்பரா இல்லை..!”

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறோம். இரண்டு பேரும் கணவர் மனைவியா வாழ முடிவு பண்ணிட்டோம். இப்போ அவர் இருக்கிற வீட்லதான் நான் இருக்கேன். எனக்காக அவர்… அவருக்காக நான் அப்படிங்கிற நிலை மைக்கு நாங்க வந்துட்டோம். இப்ப எனக்கு எல்லாமே அவர்தான்யா.

“சரோஜினி.. ஏற்கெனவே நீ ஒருத்தனை நம்பி அவனால வீதிக்கு வந்த பெண்.! உனக்கும் கல்யாணமாகிக் குழந்தையும் இருக்கு. இந்த நிலைமையில் இப்ப நீ…”

கவலையோடு கேட்கிறார் பேராசிரியர். உண்மை தான் ஐயா….ஏற்கெனவே ஊரும் உறவும் அரிய எனக்கு மண மானது, அந்தத் திருமணத்தின் அடையாளமா ஒரு குழந்தை இருக்கிறதும்… அந்தக் கணவன் உயிரோட இருந்தும் நான் நிராதரவா வீதியில நின்றதும் உண்மைதான்… அதை நான் மறக்கலை… மறுக்கவும் இல்லை… அதுக்காக வாழ்நாள் பூராவும் இப்படியே தனி மரமா கிடந்துதான் சாகணுமா? என்னோட எதிர்காலம் என் பிள்ளையோட எதிர்காலம் கௌரவமா இருக்க வேண்டாமா? நான் அமைதியா… மகிழ்ச்சியா… வாழ வேண்டாமா… என்னோட பிள்ளைக்கு இந்தச் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து மரியாதை வேண்டாமா?.. இதையெல்லாம் இவர் எனக்குத் தர்றேன்னு சொல்லி என்னை அவர் மனைவியாக்கிட்டார் ஐயா..?”

”அப்படியா… ரொம்ப சந்தோஷம்மா… ஆனா நீ அவரோட மனைவிங்கிறதுக்கான அடையாளம் எதையும் உங்கிட்டே காணோமே…நீ ஒரு இந்துப் பெண்ணாச்சே, அதிலேயும் சுத்தத் தமிழச்சி..

அவர் கேள்வியில் அவள் கொஞ்சம் தடுமாறினாள்.

“நமது பண்பாடு மட்டுமில்லே. இந்துவோ கிறிஸ்டீனோ முஸ்லீமோ… யாராயிருந்தாலும் அவரவர் வாழ்க்கை முறைகளுக்கு ஒரு பாரம்பரியம், மரியாதை, கட்டுப்பாடுன்னு சில முறைகள் இருக்கு. அதை நாம மதிக்கணும். உன்னை வாழவைத்த அந்தப் பெரிய மனசுக்காரனுக்கு இது ஏன் தெரியலை… நிராதரவா நின்ன ஒரு பெண்ணுக்கு மனசு வந்து ஒருத்தன் புதுவாழ்வு தரான்னா அவன் தெய்வத்துக்குச் சமமானவன். ஆனால் அவனுக்குன்னு சில கடமைகள். பொறுப்புகள் இருக்கே. அதை ஏன் அவன் நினைக்கலே?”

“அவருக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை ஐயா” – தாலி கட்றது, பதிவுத் திருமணம் பண்றது, மோதிரம் மாத்திக்கிறது இதெல்லாம் வெறும் கேலிக்கூத்துன்னு சொல்றானா… ஆயிரம் பேரைக் கூட்டி வைச்சு தாலி கட்டினாலோ..சட்டப்படி பதிவு பண்ணினாலோ… மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணினாலோ அதனால எந்தப் பாதுகாப்பும், மரியாதையோ இல்லைங்கறாரு.

“அதை நான் ஒத்துக்குறேன்… ஏன்னா என்னோடு முதல் திருமணம் சொந்தக்காரங்க கூடி நின்னு நிச்சயம் பண்ணி மோதிரம் போட்டாங்க… ஆயிரம் பேரு ஆசீர்வாதம் பண்ணித்தான் என் கழுத்தில தாலி கட்டினாரு…அதுக்கப் புறம் சட்டப்படி பதிவுத் திருமணமும் நடந்துச்சு. ஆனா, அபாண்டமா பழி சுமத்தி என்னை அவர் விவாகரத்து செய்தப்ப இந்த மோதிரமும்… தாலியும்… சட்டமும் எந்த வகையிலேயும் எனக்கு உதவி செய்யலியே அய்யா… நான் தடுமாறித் தவிக்கறப்ப எனக்கு எந்த வகையிலேயும் பாதுகாப்புத் தரலியே..!”

முழுநிலாக் காலத்துக் கடல்போல் ஆர்ப்பரித்துப் பொங்கினாள் அந்த மங்கை… உடம்பு குலுங்கியது; உள்ளத்தின் குமுறலினால், கண்கள் சிவந்தன. அதில் நீர் கரைகட்டியது. பேராசிரியர் ஆதரவாய் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“ஆவேசப்படாதே மகளே! நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகள் அதை மதிக்கின்ற – வழிபடுகின்ற – பின்பற்றுகின்ற ஒழுக்கச் சீலர்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. அவை மிருகங்களைப் போல் வாழ்கின்ற மனிதர்களுக்காகக் கொண்டு வரப்பட்டவை அல்ல. நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்த ஒவ்வொரு விஷயத்திலும் உன்னதமான கருத்துகள் இருக்கின்றன… உன்னைப் போன்ற அவசரக் காரர்கள் அதை முழுமையாக உணர்ந்தால்தான் அதன் உன்னதம்.. மகிமை உங்களுக்குப் புரியும்.. நீங்கள் சொல்கின்ற நாகரிக வேக வாழ்க்கையில் இதுவெல்லாம் உங்களுக்குப் புரியாதம்மா…”

எது புரியலேன்னு சொல்ல வர்றீங்கய்யா… தாலின்னு சொல்லிக் கட்டிட்டு அதை வெச்சுப் பெண்களை அடிமையாக்கி அவுங்களைக் கொடுமைப்படுத்தறதை நான் புரிஞ்சுக்கலியா?.. அதை என்னோட கழுத்தில் போட்டிருந்த ஒவ்வொரு வினாடியும் நான் பட்ட அவஸ்தை உங்களுக்குத் தெரியுமா…அந்தத் தாலியைக் கட்டிய பாவி… அவன் ஒரு மனித மிருகம்… அவன் போட்ட தாலியே என்னை அணுஅணுவா கொண்ணுகிட்டு இருந்தது உங்களுக்குத் தெரியுமா அய்யா..?”

“கேவலம் ஒரு சின்ன தாலி எப்படிம்மா உன்னைக் கொடுமைப்படுத்த முடியும்..?”

“அது கழுத்தில இருந்தப்ப… அதைக் கட்டியவன் நான்தான்னு சொல்லிக்கிட்டு அவன் என்னைச் சித்திரவதை பண்ணினானே அய்யா… அதைக் கட்டித்தானே அவன் என்னை உரிமை கொண்டாடினான்…”

“இதே தாலியைக் கட்டினவன் மனிதனா… புனிதனா… அன்பு நிறைந்தவன… பண்பாளனா… இருந்து உன்னை வாழ வெச்சிருந்தா அந்தத் தாலியை நீ வெறுப்பியா… உனக்கு அந்தத் தாலி மேல வெறுப்புதான் வந்திருக்குமா?”

சட்டென்று நிமிர்ந்தாள் சரோஜினி? கண்களில் ஓர் புதிய மின்னல்… முகத்தில் ஓர் ஏக்கம்..

“இல்லை அய்யா… நிச்சயமா நான் அதை வெறுக்கமாட்டேன்… சத்தியமா அதை வெறுத்திருக்க மாட்டேன். அதன்மேல் எனக்கு இப்படி ஒரு வெறுப்பு ஏற்பட்டிருக்காது…’

குழந்தையாய்த் தேம்புகிறாள்.

“உண்மைதான்மா… தாலியைக் கட்டினவனைப் பொறுத்ததுதான் தாலியோட மரியாதை… எத்தனையோ ஏழைப் பெண்கள் வெறும் மஞ்சள் கயிற்றை மட்டும் கபத்தில் போட்டுக் கொண்டு தன் கணவனை அதில் பார்க்கும் பண்பை நான் பார்த்திருக்கிறேன். அது ஓர் அன்புச் சின்னம்…அடிமைச் சின்னம் அல்ல.. இரண்டு ஒன்றுபட்ட உள்ளங்களை இறுக்கிப் பிணைத்து வைக்கும் அன்புக் கயிறு.

காலங் காலமா உன்னை நானே காத்திருப்பேன்னு தன் காதலைத் தன்னோட அன்பை உரிமையாக்கித் தன் துணை விக்கு அவன் தருகின்ற உரிமைப் பட்டயம் அது…! அது இல்லாம இரண்டுபேர் வாழறது வாழ்க்கை உரிமையில்லாத நிலத்தில் உழுது பயிரிடும் கோமாளித்தனமான வாழ்க்கை…”

சரோஜினி புரியாமல் அவரைப் பார்த்தாள். “மகளே… நீ நன்றாகப் படித்தவள்… உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வீட்டையோ காரையோ வாங்க வேண்டுமென்றால், நாம் பணம் கொடுத்தவுடன் நமக்கு அதற்கான உரிமைப் பத்திரம் கிடைக்கும். அதை வைத்துத் தான் நாம் அதைப் பயன்படுத்த முடியும். அதைப்போல்தான் பெண்ணும் அவளோடு தொடங்கும் வாழ்வும்.

‘ஒரு பெண்ணுக்கு ஒருவன் கொடுக்கும் பணமும் காசும் பொருளும் அன்பும் உலகத்தில் அவளுக்கு முழு மரியாதையைக் கொடுத்துவிட முடியாது. அவனது உரிமையை நிலைநாட்ட அவள் அவனது உரிமை என்பதை அவர்கள் இருவருமே உணர்ந்து கொள்ள அவன் கொடுக்க வேண்டிய முதல் மரியாதையே அந்தத் தாலிதான்.

“அதை முதலில் அவனை உனக்குத் தரச் சொல்லு… அப்புறமா அதோட மகத்துவத்தை நீயே தெரிஞ்சுக்குவ…

சரோஜினி … நாகரிகத்தில் முதல் மனிதர்களே நாம் தாம்மா… நாம் காட்டின பண்புகள்தாம் இந்த உலகம் பூரா பரவிக் கிடக்குது. நமது முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயங்கள் எப்படி ஆன்மீகத்தை வளர்க்குதோ அதே மாதரிதான் நாம் கட்டிக் காப்பாத்தற பாரம்பரிய மரபு முறைகளும்.. உன்னோட அன்பருக்கும் உனக்கும் என்னோட மனப்பூர்வமான வாழ்த்துகள், உங்களோட புதுவாழ்வு பூரண நிலவாப் பிரகாசிக்கட்டும்”

சொல்லிக் கொண்டே அவர் உள்ளே போகிறார். சரோஜினி எழுந்து போய்த் தொலைபேசியில் எண்களைச் சுழற்றுகிறாள். எதிர் முனையில் அவன்

“இதோ வருகிறேன் டார்லிங்… வாசலிலே நில்” என்றான்.

– தமிழ் முரசு 18-2-96.

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

சிங்கை தமிழ்ச்செல்வம் நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *