தார் கொப்புளங்கள்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஜே ஜே’ என வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் வீதி.
அங்கிருந்து கிளை வகுத்து உட்புறமாகச் செல்லும் ஒரு பாதை அதன் ஓரமாக ஒரு கல்லடுப்பு.
மும்முனை வடிவிலான அதன்மீது ராஜ கம்பீரத்துடன் ஒரு பீப்பா அமர்ந்திருக்க ‘கதகத’ வென கொப்புளங்கள் மினுமினுக்க தார் கொதித்துக் கொண்டிருக்கிறது.
கரும்புகை குபுகுபுவென வெளியில் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
அடுப்பின் முன்னால் ஜோசப் குந்தியிருக்கிறான்.
நெருப்பு கனன்று கொண்டிருக்கும் அடுப்பினுள் நீண்ட பெரிய கட்டைகளைத் திணித்துக் கொண்டிருக்கின்றான். வியர்வை மழையென வழிகிறது.
நீண்ட அடர்த்தியான சாய்பாபா கேசம். மயிற்றோகை என முன் சரிந்து முகத்தைப் புதைத்துவிட, சட்டென பின்னால் உதறி முனை கறுத்த கட்டைகளை தீப்பொறிகள் சிதற உள்ளே திணிப்பதில் கவனம் முழுவதும் ஒன்றிக் கிடக்கிறது.
தொழிலில் ஒரு தவக்கோலம்.
“ஜோசப்!”
செவிகளுக்குள் சத்தம் ஊடுருவியதாகத் தெரியவில்லை.
“ஜோசப்!” உச்சரிப்பு ரப்பராக நீண்டு ஒலிக்கிறது. ஓவசியர் சுப்ரமணியத்தார்தான் எரிச்சலுடன் கத்துகிறார்.
ஜோசப்பின் தலை நிமிர்கிறது. வியர்வை ஒழுகும் முக நிலத்தில் முளைவிட்டிருக்கும் மயிர்க்கற்றைகளின் நமைச்சல் பொறுக்க முடியாமல் பரபரவென சொறிந்து கொண்டு கறுத்து சுருங்கிவிட்டிருக்கும் கண்ணிமைகளுக்குள் புதைந்து கிடக்கும் சிவப்புக் கண்களால் முழுசிப் பார்க்கிறான்.
“இஞ்ச வா! இஞ்ச வா!”
ஓவசியர் கைகளை அசைத்து அவசரமாக பதட்டமுடன் கூப்பிட்டார்.
ஜோசப் எழுந்து வேகமாக நடந்துசென்று அவர் முன் நின்றான்.
“ஜோசப்! இஞ்ச பார்! சும்மா அடுப்போட மாரடிக்காதே. தார் தன்பாட்டில் கொதிக்கும்…”
ஓவசியரின் கண்டனம் கலந்த உபதேசம்.
ஜோசப் தலைக்கேசத்திற்குள் விரல்களை நுழைத்து பரபரவெனச் சொறிகிறான். எதுவும் புரியவில்லை என்றால் அவன் அப்படித்தான். சுப்ரமணியத்தாருக்கும் அது தெரியும்.
“…என்னடாப்பா புரியல்லியோ! அடுப்போட மாரடிக்காதே. அது தன்போக்கிலே எரியும். அங்க பார்! ரோட்டுல பள்ளம். அத கொஞ்சம் கொத்திச் சமப்படுத்து. ஓடு! ஓடு!”
கொஞ்சம் பணிவாகிவிட்டால் ஓவசியர் இப்படித்தான் கட்டளை பிரம்மா ஆகிவிடுவார்.
ஜோசப்பின் நிமிர்ந்த முகம் என்ன என்பதுபோல் சுப்ரமணியத்தாரின் கண்களை ஊடுருவுகின்றது.
‘என்ன! நேரத்தை வீணடிக்கிறேனா? ஒவ்வொரு நிமிஷமும் மெஷினாகத்தானே சுத்திச் சுத்தி வேலை செய்றேன்…!’
கண்களுக்குள் பொதிந்து கிடக்கும் வினாவும் பதிலும் அதுதான்.
ஓர் அம்பாகி ‘சுரீர்’ எனப் பறக்கும் அந்தக் கேள்வி சுப்ரமணியத்தார் நெஞ்சக் கூட்டைத் தாக்கி ஊடுருவுகிறது. அவன் கண்களின் மொழி அவருக்குப் புரியும்.
அனலென எரிக்கும் வெயிலில் பொசுங்கி, கறுத்தும் சிவந்தும் விளங்கும் ஜோசப்பின் முகத்தில் ஆறெனப் பெருகி உதிர்ந்து கொண்டிருக்கும் வியர்வைத் துளிகளை சுப்ரமணியத்தார் பார்த்தார்.
சில கணங்கள்:
மனதில் ஒரு துன்ப உறுத்தல்.
மனச்சாட்சியின் எதிர்வு.
சட்டெனப் பார்வையை விலக்கிக் கொள்கிறார்.
“சரி சரி, வேலையைச் செய்” லேசாக உறுமினார்.
‘ஊமைப் பயல் முறைக்கிறான்’ மனம் பயத்துடன் பொருமுகிறது.
வீதியில் தூவப்பட்டுக் கிடக்கும் சரளைக் கற்களை ராட்சத டிரக்டர் மிதித்து அரைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது.
கஞ்சாச் சுருட்டு வாயில் கனன்று கொண்டிருக்க, ‘குபுக்குபுக்’கென புகையை வெளியே தள்ளும் உரிஞ்சலுடன் டிரைவர் லிண்டன் அலட்சியமாக டிரக்டரை முன்னும் பின்னும் செலுத்திக் கொண்டிருக்கிறான்.
“சூப்பர்!”
விரல்களை மடித்து அழுத்திச் சொன்ன சுப்ரமணியத்தார் லிண்டனைப் பார்த்து பல்லெல்லாம் வெளியில் கொட்டப் புன்னகைத்தார்.
லிண்டன் ஹொந்தாய், லஸ்ஸனாய் ஹரியட்ட கொரனவா!” “லிண்டன் சரியாய்ச் செய்கிறாய்!”
இது ஓவசியரின் பாராட்டுப் பத்திரம்.
லிண்டன் சண்டியன். அதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவன். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். இது சாணக்கியம்…
‘குட் பப்ளிக் ரிலேசன் நோலேஜ்!’
ஓவசியர் தன் பொதுசன தொடர்பு அறிவின் ஆழத்தை நினைத்து பிரமிக்கிறார். “வெல்டன்’ என தன்னையே தட்டிவிட்டுக் கொள்கிறார்.
பாராட்டுப் பத்திரம் லிண்டனை வசியப்படுத்தவில்லை.
அவன் கண்களில் அலட்சியம்.
‘பலயன் தெமலா யண்ட…’
(‘சரிதான் போடா தமிழா!’)
அவனுடைய கண்கள் அந்த வார்த்தைகளை உமிழ்ந்தன.
கஞ்சாச் சுருட்டைக் கையிலிருந்து ஓர் உறிஞ்சலுக்காக மறுபடியும் வாயில் வைத்து லேசாகச் சிரித்து, சிவந்து சிறுத்துவிட்டிருக்கும் கண்களால் ஓர் அலட்சியப் பார்வையை ஏவியதன் பின்னரே, அந்த வார்த்தைகளின் உமிழ்வு.
ஜோசப் அசையவில்லை.
அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
சுப்ரமணியத்தார் கண்கள் அவனுடைய தபஸ் நிலையைக் கண்டுவிட்டன.
லேசான நடுக்கம் அவரை ஆட்கொள்கிறது.
‘உந்த சண்டிப் பயல்களை வைத்து வேலை வாங்க முடியாது எண்டுதான் ஒரு கொழும்பு ஊமைத் தமிழனை வைத்து வேலை வாங்கலாமெண்டு பார்த்தால் உவன் வேற மொறைக்கிறான். காலம் கெட்டுத்தான் போச்சுது!’
மனம் குமைகின்றது.
உடலின் நடுக்கம் அதிகரித்து அதிர்வாகின்றது.
‘வேலை ஒழுங்காக அமையாவிட்டால் புரமோஷனுக்கு அதோகதிதான்…’ என்ற எண்ணம் நீரோட்டமாக மனத்தில் காய்ச்சலின் அழுத்தமாகிறது.
‘எண்டாலும் என்ன உவன் தமிழன்தானே! பச்சாபத்தனமாகப் பேசி ஆசாமியின்ற மனச தொட்டுடலாம்….’
எண்ண அலைகள் நெஞ்சில் குதித்து கும்மாளித்துப் பாய்ந்து, விரிந்து படர, நாடியை விரல் நக நுனியினால் நறுக்கியவாறே யோசனையில் ஆழ்ந்து நிற்கிறார்.
“ஜோசப்! தம்பி ஜோசப்! நேரம் போகுது ராசா. இதுகளுக்குள்ள நீதான் கெட்டிக்காரன். இந்த சீனாப் பயலுகள் உருப்படியில்லாதவனுங்க. ஒன்றையும் ஒழுங்காகச் செய்யாத கூட்டம். எங்கே சட்டு புட்டென உன் கெட்டித்தனத்தைக் காட்டு பார்ப்போம். இதோ இஞ்ச இஞ்ச இங்கேதான் பள்ளமா இருக்கு. மண்வெட்டியால் கொத்தி, சமப்படுத்தி….”
இப்படியே ‘மளமள’வென வார்த்தைகளைக் கொட்டி விட்டு ஏதோ தமாசைச் சொன்னதுபோல் கபகபவென தலையைச் சுற்றி கையை ஆட்டிக்கொண்டு சிரிக்கிறார்.
‘இதென்னடா’ என்பதுபோல ஜோசப் இன்னமும் அவரைப் பார்த்துக்கொண்டுதான் நிற்கிறான்.
சுப்ரமணியத்தாரின் சர்வாங்கத்தையும் அவனுடைய கண்கள் அளந்து கொண்டிருக்கின்றன.
நரையும் பழுப்புமான தலைக் கேசம், முன்தள்ளிய நெற்றி, குறுகலான கண்கள், சுருக்கம் விழுந்த முகம்… ‘பாவம்!’
ஜோசப்பின் மனம் நினைக்கிறது, ‘ஐயோ’ எனப் பரிதாபப்பால் நெஞ்சில் சுரக்கிறது.
‘எதற்காக இந்த மனிதன் அந்தரப்பட்டுத் தடுமாறிச் சாகிறான்.’
மனத்தில் எண்ணங்கள் நீரோட்டமென விரைந்தோடகாடென் மண்டிக்கிடக்கும் தலைக்கேசத்திற்குள் விரல்களை நுழைத்து ‘பரபர’வெனச் சொறிகிறான்.
தெய்வ தரிசனம் பெற்றவர்போல் சுப்ரமணியத்தார் முகம் மலர்ந்தார்.
‘தலை சொறிதல்’ ஜோசப் வேலைக்குத் தயாராகிவிட்டான் என்பதன் குறியீடு அல்லவா.
ஜோசப்பின் கைகளில் கடப்பாரை ஏறிக்கொள்கிறது.
டமார் டமார் டமார்!
நிலமாதாவின் வயிறு பிளக்கிறது.
அவனுக்கு மெதுவாக வேலை செய்யத் தெரியாது. எதிலும் ஓர் அசுர வேகம்.
சுப்ரமணியத்தார் மரநிழலில் நின்று யோசனையில் ஆழ்ந்துவிட்டிருந்தார்.
‘நாளைக்குத் திறப்பு விழா. பிரதமரும் ஜனாதிபதியும் வருகை தருவார்கள். வீதி சுத்தமாக இருக்க வேண்டும்’ இது நகரசபை மேயரின் ஆணித்தரமான கட்டளை…
கதிர்காமக் கந்தனுக்குத் தூக்குகின்ற காவடியாக கட்டளையை சிரமேற்கொண்டு கரகமாடுவதில் தவிப்புடன் ஈடுபட்டுள்ளார் ஓவசியர் சுப்ரமணியத்தார்.
மூன்று நாள்கள் தொடர்ச்சியாக வீதி செப்பனிடும் வேலை அமர்க்களப்படுகிறது.
முதல் நாள் :
மத்தியான வேளையில்தான் சுப்ரமணியத்தார் வேலை நடைபெறுமிடத்திற்கு வந்தார்.
‘அட, என்ன இது லேபர்ஸ் எல்லாம் மரத்தடியில் சீட்டுக் கச்சேரியல்லவா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.’
சர்வாங்கமும் படபடக்கிறது.
என்ன செய்வது? பெருந் தடுமாற்றம்.
அப்பொழுதுதான் அந்தப் புதிய ஆசாமியை கண்கள் கண்டன.
‘ஜோசப்!’
பேச முடியாதவன். பிறவி ஊமை. முனிசுபாலிட்டித் தொழிலாளியாகப் புதிதாகச் சேர்ந்துள்ளான்.
வேலை வேலை வேலையென்று வாங்கித் தள்ளுவதற்கு உடும்புப் பிடியாக அவனைக் கௌவிக் கொண்டார்.
செப்பனிடப்படும் இந்தப் பாதை பல வருடங்களாகவே சீர்கெட்டுக் கிடக்கின்றது. பல இடங்களில் பள்ளங்கள். பள்ளிக்கூட சிறுவர், சிறுமியரை விபத்துக் கழுகுகள் கொத்திக் குதறிவிட்டன.
பல பெட்டிசன்கள்.
பயன் எதுவும் இல்லை. மழைக்காலத்தில் குளமும் குட்டையுமாக பலி பீடம் உருவாகிவிடும்.
வருடா வருடம் நகரசபை வீதி செப்பனிடும் செலவிற்கான பகுதியில் அந்த வீதியின் பெயரும் பதிவாகிக் கொண்டே வருகிறது.
இந்த வீதியின் கரையில் வீடமைப்புத் திட்டமொன்று உருவாகி நிமிர்ந்துவிட்டது. தேர்தல் நெருங்குவதால் உடனடியாகத் திறப்பு விழா நடைபெற வேண்டும். திறப்பு விழாவிற்குப் பிரதமரும், ஜனாதிபதியும் வருகை தருகிறார்கள் என்றதும் மேயரும் நகரசபை அதிகாரிகளும் வெலவெலத்துப் போனார்கள்.
வீதி இருக்கும் நிலைமையை அறிந்ததும் மேயர் வள்ளென சுப்ரமணியத்தார் மீது பாய்ந்தார்.
மூன்று நாட்களுக்குள் வீதி பளிச்சென மாற வேண்டும் என்ற கட்டளை சீறலுடன் பிறந்தது.
மூன்று நாட்கள்.
‘அடேங்கப்பா’ என சுப்ரமணியத்தார் தலையில் கை வைத்துக் கொண்டார்.
முனிசுபாலிட்டி தொழிலாளர்களை வைத்துக் கபட நாடகம் ஆடி மாதந்தோறும் பெருந்தொகையைச் சன்மானமாகக் கொண்டிருக்கும் அவருக்கு அவர்களை வைத்து எப்படி வேலை வாங்குவது என்பது பிரச்சினையாகிவிட்டது.
எவருமே ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை. ஆனால் பெயர் பதிவாகிவிடும். அதற்காக மாதச் சம்பளத்தில் ஒரு பகுதி சுளையாக அவருக்குக் கிடைக்கும் இந்த லட்சணத்தில் அவர்களை வைத்து மூன்று நாட்களில் வேலையை முடித்துவிட முடியுமா என்ன?
ஜோசப் அவருடைய நம்பிக்கை நட்சத்திரமாகப் பிரகாசிக்கின்றான்.
தமிழன்! அதிலும் ஊமை.
ஆஹா!
கடூரமான வெயில்.
ஜோசப்பின் மேலும் கீழும் கடப்பாரையுடன் உயரும் கைகள் நிலமாதாவின் உடலைத் துவம்சம் செய்கின்றன.
கடற்பாரை கற்களைக் கிளறி எடுக்க டிராக்டரின் இரும்பு உருளைகள் கடகடவென உருண்டு அவற்றை மிதித்து, நசுக்கி சமப்படுத்த தார் கொட்டி மணலைத் தூவி விட்டால் விடியலில் வீதி பளபளவென் பிரகாசமிடும்.
மரத்தடியில் நிற்கும் சுப்ரமணியத்தார் ‘சூ சூ சூ… என்ன வெயில்’ என சூள் கொட்டுகிறார்.
தொழிலாளர்கள் ஆளுக்கொரு மூலையில் குந்தி பீடி புகைப்பும், கஞ்சா இழுப்புமாக கண் சிவந்து கிடக்க, ஜோசப் வெயிலில் எரிந்து கருகி வீதிக்குத் தார் வார்த்துக் கொண்டிருக்கிறான்.
வியர்வை மழையில் அவன் தெப்பமாகி விட்டிருக்கிறான்.
தூரத்தில் பச்சை நிற டட்சன் காரொன்று வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
மர நிழலில் நாடி செறிந்து சந்நியாசியாகிவிட்டிருந்த சுப்ரமணியத்தாரின் கண்கள் அதனைக் கண்டுவிட்டன.
ஒரு பாய்ச்சல்.
சுப்ரமணியத்தார் பாய்ந்தார். மின்னலின் வேகம்.
ஜோசப்பின் கையிலிருந்த தார்வார்ப்பு பறித்தெடுக்கப்பட்டு அவர் கைக்குள் இறுகியது.
டட்சன் ‘சறே’லென நிற்கிறது.
‘ஆ, ஐயோ, அம்மா…’
ஜோசப்பின் ஆத்மா அலறுகிறது. ஓர் ஊமைப் படத்தின் காட்சி போல அவன் துடி துடித்து அங்குமிங்கும் குதித்துக் குதித்து ஓடுகிறான்.
தன்னை மறந்து தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்போல் பம்மாத்துக்காட்டிக் கொண்டிருந்த சுப்ரமணியத்தார் ஜோசப்பின் கால்களில் மறமறவென கொதிக்கும் தாரை மளமளவென வார்த்துவிடுகிறார்.
தொழிலாளர்கள் எல்லாம் கலவரமடைந்து எழுந்தார்கள்.
திறப்பு விழா சிறப்பாக நடந்தது.
நகர சபை மேலதிகாரிக்குப் புகழ்மாலை. உளம் மகிழ்ந்த அவர் இரு கடிதங்களை டைப் செய்து சுப்ரமணியத்தாருக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு கடிதம் : சிறப்பான வேலைக்காக ஓவசியர்
சுப்ரமணியத்தாருக்கு சம்பள உயர்வு.
இரண்டாவது கடிதம்:
வைத்தியசாலையில் தார் கொப்புளங்களோடு நெஞ்சிற்குள் துன்பக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் ஜோசப்பிற்கு கவனக்குறைவு, வேலை செய்யும்போது அதிகாரியை முறைத்துப் பார்த்தல் போன்ற குற்றங்களுக்காக ஒரு மாத வேலை நீக்கம்.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |