தவப் பயன்




(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுவாமி நிர்மலானந்தரை ஒருநாள் மாலை திடீரென்று ஆஸ்ரமத்தில் காணவில்லை சாயங்காலம் ஐந்து மணிக் கெல்லாம் அவர் தனியே எழுந்து உலாவப் போவது வழக்கம். அப்போது சீடர்கள் எவரையும் அழைத்துக் கொள்ளாமல், தியானத்தில் ஆழ்ந்தவண்ணம் தன்னந்தனி யாகவே நடந்து செல்லுவார். அநேகமாக பொழுது இருட்டுவதற்குள் சுவாமிகள் ஆஸ்ரமத்திற்குத் திரும்பி விடு வார். திரும்பும்போது மட்டிலும் சிஷ்யர்கள் சிறிது தூரம் சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து வருவார்கள்.
அன்று நிர்மலானந்தர் சூரியாஸ்தமனம் ஆகி இரண்டு நாழிகைப் பொழுது கழிந்தும் வராததைக் கண்டு சிஷ்யர் கள் திடுக்கிட்டுப் போனார்கள். சுவாமிகளிடம் ஞானோப தேசம் பெறும் உயர்ந்த நோக்கத்துடன் சிலரும், திரு நீறும் ஆசீர்வாதமும் பெறும் சாதாரண நோக்கத்துடன் சிலருமாக ஒரு சிறு கூட்டம் வழக்கம்போல வந்து ஆஸ்ர மத்தில் அமர்ந்திருந்தது; காத்திருந்தது.
சுவாமிகளை இன்னும் காணவில்லை.
சிஷ்யர்களைவிட பக்தகோடிகள் மிகவும் அதிகக் கவலையில் ஆழ்ந்தனர்.
சிஷ்யர்களுக்கு ஓரளவு துணிச்சல் இருப்பதற்குச் சில காரணங்கள் உண்டு.
சில சமயங்களில் நிர்மலானந்தர் உலாவப் போகும் நோக்கத்துடன் ஆஸ்ரமத்தை
ஆஸ்ரமத்தை விட்டுப் புறப்படுவார். ஆனால், ஆஸ்ரமத்தின் வேலியைத் தாண்டியதும் வெட்ட வெளியில் அப்படியே உட்கார்ந்துவிடுவார். உடனே பக வத்தியானம்தான். அன்று அவ்வளவோடு உலாவும் காரி யம் முடிந்துவிடும். தியானம் கலைந்ததும் நேரத்தைப் பார்த்துக்கொண்டு ஆஸ்ரமத்துக்குத் திரும்பி விடுவார். இதற்கு விதிவிலக்காகத் தியானம் கலையும்போது நள்ளி ரவு ஆகிவிட்டிருந்தாலும், மேற்கொண்டும் சாயங்காலத் தைப் போலவே பாவித்து, அந்தக் காடாந்தகாரமான நிசியிலும் உலாவப் போய் வருவது உண்டு.
அன்று அவர் திருவுள்ளம் எப்படி இருந்ததோ? அவ ரைக் கருவியாகக்கொண்டு ஆட்டுவிப்பவனின் திருவுள்ளப் பாங்கு எதுவோ? அவர் அன்று எங்கே, எந்த நிலையில், எதற்காகத் தாமதித்தாரோ?
சமீபத்தில் எங்காவது இருப்பார் என்ற நம்பிக்கையும் நேரம் செல்லச் செல்ல சிஷ்யர்களுக்குக் குறைந்துவிட்டது.
பக்தர்களின் மன வியாகூலமே சிஷ்யர்களை அமைதி யுடன் அமர்ந்து காத்திருக்கும்படி விடவில்லை.
மூவர் – சிஷ்யர்கள் – புறப்பட்டார்கள். பக்தகோடிகளில் வயதான கிழவர் ஒருவரும் கூடப்புறப்பட்டார்.
நல்ல நிலா அடித்தது.
பொட்டல் வெளியில் சுவடுகள் பதியாவிட்டாலும், நிர்மலானந்தர் எந்த வழியில் சென்றிருப்பார் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் அல்ல. ஏனென்றால் ஆஸ்ரமத் திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதை தான் பரந்த வெளியை நோக்கிச் செல்லும் பாதை. வடக்குப்பாதை ஊரை நோக்கிச் செல்கிறது. வேறு பாதைகள் கிடையாது.
நான்கு பேரும் நடந்தனர். சமீபத்தில் எங்காவது நிர்மலானந்தர் அமர்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தினால் கால்நடையில் பயபக்தி தயக்கம் கொடுத்தது. சுற்றிலும் இரையும் சில்வண்டுகளின் ஓசையை பாதிக்காதவாறு மௌனமாக, காலடி ஓசை நூலளவும் கேட்காமல் பாதங்கள் அடி எடுத்து வைத்தன.
இப்படி ஒரு மைல் நடந்தார்கள்.
ஒரு மைலுக்கு மேலும் நடந்தாய் விட்டது.
பாதையின் வலது புறத்தில் சப்பாத்திக்கள்ளிப் புதரின் நடுவில் சிறிது மேடான ஒரு கரும்பாறை உண்டு. அது நிலவில் குழியில் விழுந்த யானையின் முதுகு போலத் தோற்றமளித்தது. அதன் மேல் கரும்பரப்பை வகிர்ந்து கொண்டு செந்நிறத் தூலமாக ஏதோ கிடந்தது.
பரபரப்புடன் மனம் கலங்கி நால்வரும் அந்தப் பாறையை நோக்கி ஓடினார்கள். அவர்களில் ஏழை மனம் படைத்த ஒரு சிஷ்யனின் கண்களில் கண்ணீர் திரண்டது. உடன் சென்ற கிழவரின் இரைகின்ற சுவாசம் அந்த இடத்தில் மட்டுப்பட்டு மெளனம் பூண்டது. நால்வரும் போய்ப் பார்த்தார்கள்.
காஷாயதாரியான கருங்கல் சயனத்தில் கிடந்தநிர்மலானந்தர் ‘பூரணம்’ பெற்று விடவில்லை. அன்றையத் தியானம் சயன அவசத்தில் நடைபெற்றது. அவ்வளவேதான். எதிர்பார்த்தபடி, சிஷ்யர்கள் பயப்படும்படி யாக எதுவும் நடந்துவிடவில்லை. ஆனால்…
தன்னை மறந்து படுத்திருக்கும் நிர்மலானந்தரின் வாயிலும், வாயருகில் பாறையிலும், காய்ந்து சருகாகிப் போன பெயர் தெரியாத இலைகள் ஏதோ கிடந்தன. சப்பாத்திக் கள்ளியின் காய்கள் சில பக்கத்தில் இருந்தன. சுவாமிகளின் ஒரு கால் பாறையிலும், மற்றொரு கால் சப்பாத்திப் புதரிலும் கிடந்தது. இடையில் சுற்றியிருந்த காஷாயத் துணியின் செம்பாதி காற்றில் பறந்துபோய் சப்பாத்தியின் மேல் ஒட்டிக்கொண்டிருந்தது..
நால்வருக்கும் நிஷ்டையைக் கலைக்கப்பயம். ஆனால் சுவாமிகளின் பரிதாப நிலையைக்கண்டு சொல்லொணாத மனவே தனை.
அந்தப் பாறையின் சரிவான ஒரு பகுதியில், சுவாமி களின் ஸ்தானத்துக்குச் சற்று இறக்கமாக, மரியாதை யுடன் உட்கார்ந்து ஈஸ்வரத் தியானத்தில் ஆழ்ந்து விட்டார் கள்.. உண்மையில் அது தியானம் அன்று; மௌனமான பிரார்த்தனையே.
எவ்வளவு நேரம் சென்றதோ?
சற்றே அபூரணம் பெற்ற அன்றைய நிலா, உச்சி வானத்தின் மைய விளிம்பைத் தொட்டது போல மேலேறி வந்துவிட்டது.
சுவாமிகளின் சரீரம் சிறிது அசைந்தது. அசைந்த தெல்லாம் இவ்வளவே; பாறையில் கிடந்த மற்றொரு காலையும் எடுத்து சப்பாத்தியின் மேல் போட்டார். தாங்க முடியாத சுமை கீழே விழுந்தது போல, கால் ‘தொப் பென்று சப்பாத்தியில் விழுந்தது. எத்தனை முட்கள் அந்த மிருதுவான கால்களில் குத்தினவோ என்று கவலைப் படத் தொடங்கு முன்பே, நல்ல பாம்பு ஒன்று சப்பாத்திப் புதரிலிருந்து திடீரென்று சீறி எழுந்து, தன் படத்தை அகல விரித்து, தலையைச் சாய்ந்த வண்ணம் மிகவும் பல மாக சுவாமிகளின் இடது பாதத்தில் மோதிக் கடித்து விட்டது. பாம்புக் கடியினால் சுவாமிகளின் மேனியில் சிறிதாவது சலனம் ஏற்படட்டுமே!
சிஷ்யர்களின் ரத்தம் உறைந்துவிட்டது. அடுத்தவனைப் பாம்பு படம் விரித்துக் கடிப்பதை மனித வர்க்கமே கண்ணாரக் காண்பது, அதுதான் முதல் தடவையோ என்று கருதக்கூடியவாறு அவ்வளவு பிரத்யக்ஷ நிலையில் நடந்தேறிய இந்த அபாயத்தைக் கண்டு எழுந்து ஓடிய அந் நால்வரும் சப்பாத்தியிலேயே மிதித்தார்கள். ஒவ் வொரு முள்ளும் ஒரு விசப் பல்லாகக் குத்தியது. ஆனால் பாம்பு இவர்களை நோக்கி வரவில்லை. வேறு திசையில் நெளிந்துவிட்டது. பாறையின் மேல் மின்னி நெளிந்த அதன் சரீரம், பாறையில் ஏதோ விஷ ஊற்றுக் கிளம்பி வடிந்தது போல் இருந்தது.
இனி சுவாமிகளை எழுப்பாமல் இருந்தால் மரியா தைக்கு அர்த்தம் கிடையாது. பூவைப்போலத் தொடுவது போல், தரையில் புதைந்த ஆணி வேரைப் பிடுங்குவது போல் அவ்வளவு முரட்டுத்தனமாக சுவாமிகளைத் தூக்கி உட்கார வைத்தனர்.
நிர்மலானந்தர் எழுந்து அமர்ந்தார். அவருடைய விழிகள் மலர்ந்தன. வாயிலிருந்த சருகுகளைத் துப்பினார். துப்பும்போது, பாதி மென்ற கள்ளிப்பழம் ஒன்று முறிந்த முள்ளுடன் பாறையில் விழுந்தது,
“இதுவா ஆகாரம்?” என்று பிரமித்தார் உடன் சென்ற கிழவர்.
நிர்மலானந்தரின் ஆகாரம் எதுவென்று அவருக்கு இவ்வளவு காலத்துக்குப் பின் அன்றுதான் தெரிய வந்தது. காரணம் கிழவர் ஊருக்குப் புதிது.
“தங்களை விஷம் தீண்டி விட்டது” என்று சொன்னான் ஒரு சிஷ்யன், வாயை ஒரு கையால் மூடிக்கொண்டே.
மற்ற இருவரும், இரண்டு கால்களிலும் உள்ள சப்பாத்தி முட்களைத் தடவித் தடவிப் பிடுங்கினார்கள். அவர்களுடைய கைகளில், முள் தைத்த புண்களில் கசிந்த ரத்தம் படிந்து படிந்து, மருதாணியிட்டது போல மாறி விட்டது.
“முட்களா? அவற்றை ஏன் பிடுங்க வேண்டும்” என்று சாவதானமாகச் சொல்லிவிட்டு, “எப்போது பாம்பு கடித்தது?” என்று கேட்டார் சுவாமிகள்.
கிழவர் ஆச்சரியத்தினால் ஸ்தம்பித்துவிட்டார்.
நடந்த விருத்தாந்தத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கு முன்பே, நிர்மலானந்தர் “பாரம் தாங்க முடிய வில்லை; படுக்க வேண்டும்” என்று பாறையில் சாய்ந்தார்.
பாம்பு கடித்ததன் விளைவாக நிர்மலானந்தர் மயக்கம் எய்தி, பிதற்றுகிறாரென்றே நால்வரும் நினைத்தனர். விஷம் தலைக்கேறிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், பாரம் விஷத்தினால் வந்ததல்ல; மாமிச பிண்டத்தைத் தூக்கிச் சுமப்பது நிர்மலானந்தர் நெடுநாளாக அனுபவித்து வரும் வேதனை: அன்று சுமக்கவே முடியாமல் போனதனால்தான் பாறையில் போய்ப் படுத்துவிட்டார்.
பின்னும் காலதாமதம் கூடாது என்று, நிர்மலானந்தரை மூவரும் எடுத்துச் சுமந்து ஆஸ்ரமத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். தாம் நடக்கவே சிரமப்படும் கிழவர் பரிவோடு ஒரு கையினால், நிர்மலானந்தரின் சரீரத்தைச் சுமக்க முடியாவிட்டாலும், தொட்டுக்கொண்டு தள்ளாடி நடந்து வந்தார்.
பாதி வழி தாண்டுமுன்பே, சுவாமிகளின் உதடுகள் ஒரு பக்கம் கோணித் திறந்தன. வாயில் கொப்பளித்த நுரை சிலந்திப் பூச்சியின் நூல்களைப் போலக் காற்றில் ஆடி அறுந்தன. நிர்மலானந்தரின் மண்ணுலகத் தொடர்பு நுரை நூலைக் காட்டிலும் இலகுவாக அவ்வளவு அரவம் அற்று அறுபட்டது. நிர்மலானந்தர் தம் வாழ்நாளெல்லாம் சுமந்த பாரத்தைத் தம் சிஷ்யர்களின் தோளிலும் தலையிலும் இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.
உபதேசத்துக்காகவும், ஆசீர்வாதத்துக்காகவும் வந்த ஜனங்களின் முன் நிர்மலானந்தரின் சரீரத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் சிஷ்யர்களும் கிழவரும்.
மறுநாள் ஆஸ்ரமம் கல்லறையாக மாறியது.
மட்பாண்ட ஓடு உடைந்துவிட்டது. மாயக் குயவர் அந்த ஓட்டைச் சமைத்து அதன் உள்ளே வைத்து அனுப்பிய ஆத்ம அமிர்தம் திவலைகூட மண்ணுலகக் குழப்பத்தில் சிந்தாமல் சிதறாமல், கொடுத்தாலும் குறைவுபடாத நித்யபூரண வஸ்துவாய், குயவரிடமே திரும்பியது. அமிர்தம் ஆகவேண்டிய காலம் ஆகி நன்கு பண்பட்டு, சுவையோடும் திண்மையோடும் சுவர்க்கம் புகுந்தது.
நிர்மலானந்தர் மறைந்தார்: நிர்மலானந்தம் எஞ்சியது.
எண்ணற்ற முனிவர்களின், புண்ணிய புருஷர்களின், ஆன்ம சொரூபங்கள் இன்பத்தின் பரவெளியில், அமர போகம் துய்த்துக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வ மண்டலத்தில் நிர்மலானந்தருக்கு மரியாதை மிகுந்த பீடம் கிடைத்தது. என்றுமாய், எதுவுமாய், காலமும் தூரமும் அற்றிருக்கும் இந்தச் சுவர்க்க போகம் அல்ல நிர்மலானந்தருடைய நித்ய தபசின் கோரிக்கை. மண்ணுலகத்தைத் துறந்த இதயம், விண்ணுலகத்தில் அதைப் பெற்று அனுபவிக்க விரும்பவில்லை.
இன்னும் ‘நான்’ நசியவில்லை; அவன்’ இன்னும் அவனாகத்தான் இருக்கிறான். ‘அவன்’, ‘நான்’ ஆக வில்லை; ‘நான்’, ‘அவன்’ ஆகவில்லை. கேவலம் தூல சரீரத்தைக் களைந்துவிட்டால் ஈஸ்வர ஐக்கியம் கிட்டி விடுமா?
இன்னும் எத்தனை வருஷங்கள், எத்தனை வியாழ வட்டங்கள் தபசிருக்க வேண்டுமோ, அந்த அத்வைத நிலையைப் பெறுவதற்கு? நல்லவேளையாக இங்குக் காலம் என்ற பிரக்ஞை இல்லை. ஆனாலும் சுவர்க்கத் தின் போக நிலத்தில், புழுவெனத் துடித்து உபசாந்தப் பரவெளியை நோக்கித் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது நிர்மலானந்தரின் ஜீவான்மா.
பரமான்மா வந்தது; பூலோகப் பஞ்சாங்கப்படி. நிர்மலானந்தரின் ஆன்மா சுவர்க்கத்திற்குப்போன பதினைந்தாம் நாளில் கடவுள் அந்தப் புதிய விருந்தைக் காண வந்தார். மோனப் பிரார்த்தனை அன்றே கடவுளுக்கு எட்டியது என்றாலும், சுவர்க்கானுபவச் சதுரங்கத்தில் நிர்மலானந்தரின் ஆத்ம விளையாட்டு வெற்றி பெறுகிறதா, தோற்கிறதா என்று பரிசோதனை செய்யத் தொடங்கியதுதான் இந்தப் பதினைந்து நாள் தாமதத் துக்குக் காரணம்.
பதினைந்து நாட்களுக்குப் பின் நிர்மலானந்தரின் முன் பிரசன்னமானார் கடவுள். வாழ்நாளெல்லாம் தபசில் கழித்த தம் பக்த சிரோன்மணிக்கு இந்தப் பதினைந்து நாளைய அனுபவம் எவ்வளவு பெரிய சுகத்தை அள்ளிக் கொடுத்திருக்கும் என்று எண்ணி ஆனந்த பரவசத்துடன் பக்தனைக் காண வந்தார். மறுதினந்தான் நிர்மலானந்தரின் கடைசித் தளையை, எஞ்சியிருக்கும் ‘நான்’ என்ற பிரக்ஞையை, சுட்டறுப்பது என்பது தெய்வத் திருவுள்ளம்.
தெய்வ விஜயம், பிரக்ஞையைப் போன்ற ஒரு சங்கேதத்தின் மூலம் நிர்மலானந்தருக்குத் தெரிந்தது. இறைவனின் பாதத்தில் மலர்ப்பலி இடுவதைப்போல தம் ஆத் மாவைப் பரிபூரணமாகச் சமர்ப்பித்தார் நிர்மலானந்தர்.
“சுவர்க்கம் பிடிக்கவில்லைப் போலும்! உம் கோரிக்கையை அறிந்தோம். உம் ஆத்மத் தேட்டம் விரைவில் சித்தி பெறும்” என்றார் கடவுள்,
கடவுளின் வார்த்தைகளை எல்லாம் கிரஹித்துக் கொண்டாலும், சுவர்க்கம் என்ற பதம் நிர்மலானந்தரைப் பிரமிக்கச் செய்து விட்டது.
‘சுவர்க்கம்!… சுவர்க்கம் என்றால்… அப்படியானால் தற்போதைய வாசஸ்தலம் சுவர்க்கம் தானா?’ என்ற திகைப்பு நிர்மலானந்தரை ஊமையாக்கிவிட்டது. எழுதாக்கிளவிக்கு நாயகனாக இலங்குபவனுக்குப் பேசாத சிந்தை, தாய்மொழியைப் போலப் பரிச்சயப்பட்ட வஸ்து நிர்மலானந்தரின் திகைப்பு அவருக்குப் புரிந்தது.
“சுவர்க்கம் இல்லாமல் வேறு என்ன? நரகம் என்று நினைத்தீரா?”
கடவுள் சிரித்தார்!
“எதுவும் நினைக்கவில்லை. சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் பேதம் காணும் அந்தச் சரீர பரிசோதகன் என்றோ சாம்பலாகிவிட்டான் என்பது நாங்கள் அறியாதது அல்லவே? மண்ணுலகிலும் கூட, மலருக்கும் முள்ளுக்கும் மலருக்கும் விஷப்பல்லுக்கும் வேற்றுமை கண்டறியாதிருந்த ஜீவன் இப்போது ஐம்பொறிக்கூட்டை உதறிவிட்ட பிறகு, சுவர்க்கத்தை எங்ஙனம் உணரும்? நரகத்தை உணர்வதும் எங்ஙனம்?”
மாயக் குயவர் எத்தனையோ லட்சோபலட்சம் மண் பாண்டங்களை வனைந்து கொண்டிருக்கிறார். அவற்றில் எத்தனை பங்கப்படாமல் விதித்திருக்கும் காலவரையறை வந்து சந்திக்கும் வரையிலும் பயன்பட்டு, விளைபயன்களை விண்ணுக்கு அனுப்புமோ? எத்தனை மண்பாண்டங்கள், கூத்தாடிக் கூத்தாடி தம்மையே உடைத்துப் பாழாக்கிக் கொள்ளுமோ? மண்பாண்டங்கள். பற்பல உருவில், பற்பல வர்ணங்களில் தயாராகிக் குவிந்திருக்கின்றன.
குயவர் ஒரு சிறு பாண்டத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார். அது பூவுலகில் ராஜ்குமாரனாக வந்து பிறக்குமோ, ஒரு முனிவனாக வந்து அவதரிக்குமோ தெரியவில்லை. ஆனால் பாண்டம் உருப்பெறாமல் குலைந்து சரிந்து கொண்டிருந்தது. வேறு பல கலவை களைச் சேர்த்துக் குழைத்துப் பாண்டத்தை உருவாக்க முயன்றார் குயவர். பழையபடியும் அது கருவிலேயே சிதை வுற்றது. மற்றும் பல கலவைகளைக் கலந்து திரும்பவும்…
கடவுள் நையாண்டிச் சிரிப்புச் சிரித்தார்.
“மாயக் குயவரே! பாண்டத்தின் உருவ அமைப்பைச் சிதையாமல் நிறுத்தி வைக்கும் பிரதானமான கலவை என் அடைக்கலத்தில் உள்ளது.”
கை சோர்ந்துபோய் வணக்கத்துடன் திரும்பிப் பார்த்தார் மாயக்குயவர்.
“ஜீவான்மா ஒன்று மண்ணுலகிலிருந்து விடுதலை பெற்றுத் துறக்கம் பெற்றது. பிரம்ம ஐக்கியம், இரண்டறக் சுலக்கும் அத்வைதநிலை- இதுதான் அதன் இன்றையக் கோரிக்கை.அந்த ஆன்மாவும், அதன் கோரிக்கையும் அந்தரத்தில் நிற்கும்போது பாண்டத்தை உருவாக்குவது எப்படி?”
மௌனமாக இருந்தார் மாயக் குயவர்.
மண்ணுலகில் அது மலருக்கும் முள்ளுக்கும் பேதம் காணவில்லை; புலன்களைச் சுட்டறுக்கும் தபசை மேற் கொண்டு விட்டது. சுவர்க்கம் எய்தியது.
சுவர்க்கத்தின் தன்மை அந்த ஜீவனைத் தீண்டக்கூட இல்லை. சுவர்க்கத்தில் இருக்கிற பிரக்ஞையாவது இருக்கட்டுமே! இன்று அதை நரகத்திற்கு அனுப்பினாலும் இன்றைய நிலையை இழக்காத பக்குவத்துடன் அது இருக்கிறது.
அது வேண்டுவது பிரம்ம ஐக்கியம்; பரமாத்ம ஜீவாத்ம சங்கமம். அது கிட்டினால் அந்த ஆத்மா மாறுதல் பெற்று விடுமா? இன்ப துன்பத்தை உணராத பேரின்ப உபாசகனாக இருந்த அந்த ஆன்மா எம்மோடு அத்வைத நிலையில் இருந்தால் என்ன? ஆஸ்ரமத்தில் சந்நியாசியாக இருந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான்.
இன்ப துன்பத்தை உணராத தபசென்றாலும் கூட இந்தத் தபசு பயங்கரத் தபசு. சுவர்க்க, நரக பேதங்களையும், அத்வைத வெளியையும், ஆஸ்ரம வெளியையும் ஒன்றாக்கும் படியான இந்தப் பயங்கரத்தபசு சுவர்க்கத்திலும் சுகம் காணவில்லை: பரப்பிரம்மத்திலும் சுகம் காணப்போவதில்லை. மரத்துப்போனது, செத்தது, எங்கே கிடந்தால் என்ன? முக்தியும், முதல்வனும் சாலையோரச் சத்திரங்களாகிவிட்டன; லட்சிய ஸ்தானங்களாக இல்லை. அந்த ஆத்மாவுக்கு இனி எந்த வழியைக் காண்பிப்பது?
தபசிற்குப் பலனாக, சுகமான வாழ்க்கையை உணர்ந்து துய்க்கும் ஒரு பிறப்பை பழைப்படியும் அதே பூலோக வாழ்க்கையை, அதற்குச் சுட்டிக்காட்டுவதை விடச் சிறந்த பிரதி உபகாரம் வேறு எதுவும் இல்லை. அதற்குச் செய்யும் பேருதவியும், பரிகாரமும், பிராயச்சித்தமும் அதுவே.
நிர்மலானந்த சுவாமிகள் காலமான பதினாறாம் நாளில், ஆஸ்ரமத் தோட்டத்தின் நடுவில் சிவலிங்கம் வைத்துக் கட்டப்பட்டு இன்னும் ஈரம் உலராது இருக்கும் அவருடைய சிமிண்ட் சமாதியின் தென்புறத்தில் அன்றுதான் பிறந்த ஓர் அணில் குஞ்சு, மண்ணுலகை முதல் முதலாக ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. அதன் மேல் படும் காலை இள வெய்யில் அதற்குச் சுவர்க்கபோகமாக இருந்தது. தன்னை மறந்து, அந்த இன்பத்தில் ஆழ்ந்து, அதில் இரண்டறக் கலக்கவும் செய்தது அந்த அணில் குஞ்சு.
– தேர்ந்த தமிழ்ச் சிறுகதைகள், க.பொ.த. உயர்தர வகுப்புக்குரியது, இரண்டாம் பதிப்பு: தை 2002, ஸ்ரீ சுப்ரமணிய புத்தகசாலை, யாழ்ப்பாணம்.