தரிசனம் வேண்டாம்





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முள்வேலியுள் வீடு. வீட்டுக்கு வெளியே, வேலிக்குள் சிமிட்டி மேடைமீது கால்களை நீட்டியபடி, நாற்காலியில் சாய்ந்தபடி ஏதோ குருட்டு யோசனை.
கிணற்றடியில் பிள்ளையாண்டான், லாடம் அடிக்க வீழ்த்திய மாடைப்போல் ‘யமாஹாவை’க் கிடத்தி என்னத்தையோ நோண்டிக் கொண்டிருக்கிறான்.
பால் இன்னும் வரவில்லை. காப்பி காணாமல் மண்டை விடியில் அவள் எல்லார் மேலும் எரிந்து விழுந்துகொண்டிருக்கிறாள்.
பசி வயிற்றைக் கிள்ளுகிறது. ஆனால் இந்த சமயம் வாய் திறந்து ஒன்றுக்கொன்று வார்த்தை தடித்துப்போனால், தாங்கிக்கொள்ள இப்போதெல்லாம் சக்தியில்லை.
என் ஜன்னலுக்கெதிரே செம்பருத்திப் பூ ஒன்று கைக் கெட்டா உயரத்தினின்று சிரிக்கிறது. உன் பெருமையும் ராங்கியும் இன்று ராத்தாளாது. நாளைக் காலை, தலை யவிழ்ந்து, அலங்கோலமாய் இதழ் குலைந்து காலடியில் கிடப்பாய்.
ஓ, இந்த எண்ணத்தில் எனக்கும் சந்தோஷமென்று நினைக்காதே. நான், என் மாலையில் இருக்கிறேன். மாலை யென்ன, இருட்டே வந்தாச்சு.
கீழ் கறுத்து, மேவானில் சாயங்கள் தோய்கின்றன. ஆனால் இன்னும் கொஞ்சநேரத்தில் நீர்த்துப்போய்… இப்பவே ஆங்காங்கே இருளின் ‘ரிப்பன்கன்’ மரங்களி னின்று. செடிகளினின்று, முள்வேலியினின்று தொங்கி, காற்றில் அலைய ஆரம்பித்துவிட்டன. வேளை முதிர முதிர, இருள் தன் கறுப்பு அங்கியை அடர்த்தியாகத் தானே முடைந்து கொண்டு விடும்.
தெருவில் நடமாட்டம் அவசரமாகிவிட்டது. ரயிலடி வீட்டுக்கு மிக்கக் கிட்ட. வேலையிலிருந்து, பள்ளியிலிருந்து அவரவர் ஜோலியிலிருந்து சிறுவர், சிறுமியர், ஆடவர் பெண்டிர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ரயிலடிக்குப் போய்க் கொண்டுமிருக்கின்றனர், பெரிய ஸ்டேஷனுக்குப் போய், பெரிய ரயில்களைப் பிடிக்க,
இது, இந்தக் காக்ஷிதான் என் பொழுதுபோக்கு, என்னைப் போன்றவர்க்கு.
வாசலுக்கு வெளியே ஒரு பசு மாடு; கள்ளப்பார்வை யோடு நிற்கிறது. ஏன் என்று எனக்குத் தெரியும். ஆடி விதைகள் கண்டிருக்கும் முளைகளைப் பதம் பார்க்க. ஏற்கெனவே ருசி கண்ட மாடு. அவ்வப்போது அவளுடைய கூக்குரல்கள், இடும் சாபங்கள் சான்று.
ஆனால் ஒன்றிரண்டு வாழைக் கன்றுகளிலிருந்து பயந்து கொண்டே எட்டிப் பார்க்கும் குருத்துக்கள், தொட்டியில் கொத்தமல்லித் துளிர்கள், ஓரிரண்டு பூச்செடிகள், இவ்வளவு தான். இதற்குமேல் இந்த மண்ணுக்குச் சக்தியில்லை.
நேற்றுவரை வாசலுக்குக் காவல் இரண்டு பூவரசுகள் நின்றிருந்தன. இன்று ஒன்றுதான் நிற்கிறது. மற்றதை வெட்டித் துண்டம் போட்டு வேலியோரமாக அடுக்கியாகி விட்டது. வீட்டில் இதுபற்றி இரண்டு கட்சிகள். “மரம் நிழல் தருகிறது. குளுமை தருகிறது இருந்து விட்டுப் போகட்டும். மறுக்கட்சி: “உதிரும் இலைகள் ஒரு அடி ஆழத்துக்குக் குப்பை. உள்ளே பாம்பு இருந்தாலும் தெரி யாது. பெருக்கிப் பெருக்கி இடுப்பு விட்டுப்போறது. இடி விழுந்த மரம்தானே!”
அழிக்கும் கட்சிதான் ஜெயிப்பு. எப்பவுமே அப்படித் தானே!
வருடக்கணக்காக பார்வை பழகிப்போன மரம்.இப்போ அதன் இடத்தில் அதைக் காணாமல் ‘திக்’கென்கிறது.
“ஸார், எக்ஸ்க்யூஸ்மி, உள்ளே வரலாமா?”
நினைத்ததற்கும் சீக்கிரமே கவிஞ்கிபோச்சு. வாசலில் ஒரு உருவக்கோடு.
“கண்ணாடி போட்டால்தான் நான் ஆள்” என்று சொல்லிக்கொண்டே, மேடைமீது கிடந்த மூக்குக் கண்ணாடியை எடுக்குமுன்-
“Don’t bother-” உள்ளே வந்து என் கையிலிருந்து மெதுவாகப் பிடுங்கி மேடைமீது வைத்துவிட்டு, மேடையில் உட்கார்ந்தாள்.
“Hope you don’t mind-” இப்படி அனுமதியில்லாமல் நுழைந்து உங்கள் நேரத்தை ஆக்ரமிப்பதை.
கண்ணாடியை அணிந்து கொண்டேன் (அவள் சொன்னால் கேட்கணுமா என்ன?).
குரலின் திடத்துக்கு உடம்பு ஆகிருதியில்லை, தோளில் மாட்டியிருந்த பையை (டிபன் சம்புடம்)க் கழற்றிப் பக்கத் தில் வைத்துக்கொண்டாள். அழகென்று அடித்துச் சொல்ல முடியாதானாலும், முகத்திலும் பாவனைகளிலும் ஒரு இயல்பான நேர்த்தி தெரிந்தது. அவள் உட்கார்ந்திருந்த வாகில், தெரு விளக்கின் வெளிச்சம், அவள் முகபாவங்களை அங்க அசைவுகளை ஏற்றிற்று.
“நாம் இதற்கு முன் சந்தித்திருக்கிறோமா?”
“அது அவசியமா?”
மௌனமானேன்.
“ஸார்; ரூடாயிருக்கணும்னு எண்ணமில்லை. உங்களை எனக்குத் தெரியும். ஆனால் என்னை உங்களுக்குத் தெரிந் திருக்கக் காரணமில்லை. நான் உங்களுடைய வாசகி.”
‘”Nice.”
“தினமும் காலையும் மாலையும் இந்த வழியாத்தான் போறேன் வரேன்”
“Employer?”
“உம். டவுனில் ஒரு சின்னக் கம்பெனிதான். டைபிஸ்ட்.”
“I see, ஸார் என்ன பண்றாரோ?'”
“ஸார் இருந்தால்தானே ! No, sir for me.”
வெடுக். இஷ்டமில்லாத பதில் என்ன அர்த்தம்? ஆனால் தெரிந்து எனக்கு என்ன ஆகவேண்டும்?
“காலையில் நேரம் பற்றாது. எல்லாமே ஆபீஸ் அவசரம். மாலையில் திரும்பி வரும்போது சில சமயங்களில் இப்பப் போலவே உட்கார்ந்திருப்பேன். ஆனால் ஏதோ கூச்சம். நான் அப்படியொன்றும் லஜ்ஜைப்படுவர்களில் சேர்த்தியில்லை. இருந்…தா…லும்… இழுத்தாள். ”உங்கள் எழுத்து உங்களைப்பற்றிக் கொடுக்கற இமேஜ்னு நினைக்கிறேன். இந்த மனுஷன் அண்டவிடுவாறா?” ஆனால் இன்று தூரத்திலேயே உங்களைப் பார்த்ததுமே முடிவு பண்ணிவிட்டேன் இப்படியே எத்தனை நாள் தள்ளிண்டு போறது?”
”Thank you. ஆனால் நான் அப்படி நெருப்பு நடுவில் நின்றுகொண்டு இருக்கிறேனா பார்?”
“Not that. எல்லாருமே நமக்கு நாமே பண்ணிக்கிற அர்த்தம்தான். என்னுடைய பதினஞ்சாவது வயசிலிருந்ே நீங்கள் எனக்குப் பழக்கம். [ mean உங்களுடைய எழுத்து. அவள் சிரித்தபோது, முகத்திலிருந்து ஐந்தாறு வருடங்கள் உதிர்ந்தன.என்ன வயதிருக்கும் முப்பது, முப்பத்தி அஞ்சு? முகத்தில் ஒளியும் நிழலும் மாறும் வேகத்தில், வயதை ஸ்திரம் பண்ண முடியவில்லை.
”Thank you” என்றேன்.
ஏன்னா அம்மா அப்போத்தான் செத்துப்போனாள்.
இவள் யாரோடு பேசினாலும் இப்படி ‘ஷாக் ட்ரீட்டு மெண்ட்தானோ?
என் பையன் இரண்டு தம்ளர்களில் காப்பி கொணர்ந்து எங்களிடையே வைத்துவிட்டுப் போனான். பால் எப்போ வந்தது? விருந்தாளியை எப்போ உணர்ந்தாள்? அதெல்லாம் புரியாத குழப்பங்கள். None of my business. காப்பியைக் காணுவோமா என்றாகிவிட்டது. காப்பி நன்றாக இருந்தது.
அவள் சீப்பிக் குடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்?
“நாங்கள் சின்னக் குடும்பம் அப்பா, அம்மா, நான், தம்பி. ஏழ்மையான குடும்பம்தான். ஒரு காலத்தில் சரியாத் தானிருந்தோமாம். அப்போ கூட்டுக் குடும்பம். அந்தக் காலத்து மிராசுதர்பார். நிலத்தைப் பண்ணையாளிடமோ, குத்தகைக்காரனிடமோ விட்டுவிட்டு வாசல் திண்ணையில், பக்கத்தில் வெற்றிலைச் செல்லம், பறங்கிக்காய்ப் பெரிசுக்கு வெள்ளிக் கூஜாவில் தீர்த்தம், போது போவதே தெரியாமல் சீட்டாட்டம். இந்த வர்க்கம்பற்றி என்னைவிட உங்களுக்கே தெரியும். நேரில் பார்த்திருப்பீர்கள். இவர்களுடைய தர்பாருக்கு எதிரே கை கட்டிக்கொண்டு, சிரம் குனிந்து நின்றுகொண்டிருந்த காத்தான். செல்லான் முருகன், சுடலைகளே ஒருநாள் – இல்லை, படிப்படியாக இவர்களை விழுங்கி விட்டார்கள். சட்டமும் அவர்கள் பங்கிலிருந்தது. கூட்டுக்குடும்பம் உடைஞ்சு சுக்கல் சுக்கலாச் சிதறிப்போச்சு. அதில் ஒரு சிதறல் நாங்கள். நாங்கள், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் சிரமம்தான்.
அப்பாவைப் பார்த்தாலே பயமாயிருக்கும். புரியாத பயம். அப்பா முகத்தில் கோபம் தனியாத் தெரியல்லே. ஆனால் உள்ளூரத் தன்னைத்தானே தஹிச்சுண்டு – “ஓ, உங்களுடைய பாத்திரங்களில் இதுமாதிரி அலாமிகள் வரா..”
ஆனால் அப்பாவையும் முழுக்கச் சொல்வதற்கில்லை. நல்ல காலம் பார்த்தவராச்சே! சாந்தவர்கள் சமாதானமாக மாட்டார்கள். ஆகவே அப்பாவின் முன்னிலையிலிருந்து அம்மாதான் எங்களுக்குத் தஞ்சம்.
அப்பாவுடன் தானும் இழந்த வாழ்வு, அம்மாவை அப்பா அளவுக்குப் பாதிக்கவில்லை. பாதிக்கவேயில்லையோ, அம்மாவோ வேறே. தனியென் ே சொல்லவேண்டும். அவளும் நல்ல இடத்திலிருந்து வந்தவள்தான். வீட்டுக்கு ஒரே பெண். செல்லப்பெண். நிறைய சீரும் செனத்தியுமாத் தான் வந்தாள். ஆனால் குடும்பத்தின் ஆடிக்காற்றில் அடிச்சுண்டு போனதைத் தனியாக் கணக்கிட முடியுமா? கணக்கிடலாமா?
ஓ, இப்படிக் கொட்டி ஆத்திக்கத்தான் உங்களைத் தேடி வந்தேன் என்று எண்ண வேண்டாம். நான் எந்தத் திட்டத்துடனும் வரவில்லை. பேச்சுப் போறது அப்படி. அதற்கு நான் மன்னிப்புக் கோரப்போவதில்லை. என் அம்மாவைப்பற்றிப் பேசறேன். நீங்கள் அம்மாவைப்பற்றி நிறைய எழுதியிருக்கேள். எழுதறேள். உங்கள் எழுத்தம்மா வோடு என் அம்மா அங்கங்கே இடிக்கறா. அல்லது அப்படி நினைச்சுக்க எனக்குப் பிடிக்கறதோ என்னவோ”.
அவள் தலையை உதறுகையில் நடு வகிடிலிருந்து இரு பக்கங்களிலும் கூந்தலின் வீழ்ச்சிகள், கத்தி வீச்சுக்கள் போல் அலைந்தன.
“உலகம் பூரா ஒரே அம்மா” முனகினேன்.
“ஆ, அதையும் எழுதியிருக்கேள். ஒருவேளை அது தான் என்னை இங்கே இழுத்ததோ என்னவோ?”
தலைக்கு நேரே பூவரசங்கிளையில் கூட்டில் குஞ்சுகளின் ஆரவாரம். தாய்ப்பக்ஷி திரும்பியிருக்கிறது. இனி இன்று வெளியே போகாது.
“அம்மா artist. அவள் ஓவியம் தீட்டவில்லை. கதை எழுதவில்லை. கவிதை புனையவில்லை. ஆனால் artist. இன்னதென்று வார்த்தையாலோ விரலாலோ தொட்டுச் சொல்ல முடியாது. ஆனால் ‘அது’ அவளிடமிருந்தது. The elusive it. விரலைச் சொடுக்கினாள். ”yow know what I mea? தான் அபூர்வமான நல்ல நேரங்களில் அப்பாவே சொல்வார். அவள் நல்ல Stock; yow know what I mean? மேன்மக்கள் அதாவது அவள் உடுத்தினது பருத்தி ஆனாலும் அவள்மேல் அது பட்டின் அந்தஸ்து பெற்றது. வாக்கு அவள் நாக்கு நுனியிலிருந்து உதிர்கையில், தனி ஓசை. நளினம், ஜதி கொண்டன. அவளைப்பற்றி நிறையப் பேசறேன். அப்படியும் நான் எண்ணியபடி வெளிக்கொண்டு வரப் போதவில்லை.
அடங்கினாள்.
காத்திருந்தேன்.
தெருவிளக்குப் ‘பொட்டென’ அணைந்தது. எங்களை இருள் சூழ்ந்துகொண்டது. இது இப்படித்தான் ‘மக்கர்’ பண்ணும்.
அப்போத்தான் பூத்த மலர் மணம் எதிர்த்திசையினின்று வருகிறது.
காலையில் பூக்கும் பூக்கள்
மாலையில் பூக்கும் பூக்கள்
சில அந்தியில், இரவில் சில
சில நடு நிசியில்
இங்கே நட்டதில் குறைச்சலில்லை. தண்ணீர் விட்டதில் குறைச்சலில்லை. ஆனால் இந்த மண்ணுக்கு இவ்வளவு தான்; நீ புழுங்கினாலும், ஆறினாலும், தேறினாலும் மணக்கும் பூக்கள் எல்லாம் மாற்றான் தோட்டத்து மலர்கள்.
“அம்மாவின் விரல்கள் அற்புதமானவை. நீண்டு, மெலிந்து, நுனி கூம்பி, வீணையின் ஸ்வரக் கட்டுக்களை அவை நெருடுகையில், மேல்பாய்கையில், பதுங்குகையில், ஓடு கையில், தேடுகையில், தயங்குகையில், நாதங்கள் புறப்பட்டு அவள் விரல்களினிடையே ஒளிந்து விளையாடுவதைக் கவ னித்துக்கொண்டேயிருப்பேன். அலுக்காது. அப்போ சங்கீ தத்தைப்பற்றி எனக்கென்ன தெரியும்? இப்பத்தான் என்ன தெரியும்? ஓ, விடுங்கள். உனக்கு ஆசையில்லை. ஆசை யில்லாதவளுக்குச் சொல்லிக் கொடுக்கமாட்டேன்’ என்று அம்மா தீர்த்துச் சொல்லிவிட்டாள்.
ஓ நான் சொல்லவில்லையோ, அம்மா வைணீகை என்று? அம்மா தன் வீணையைத் தன்னோடு கொண்டு வந்தாள். அந்தக் குடும்பமே ஸங்கீதப் பரம்பரை. அம்மா வின் வீணை அவளுடைய முப்பாட்டனார் வாசித்ததாம். நேரம் கிடைத்தபோதெல்லாம் அம்மா அத்தோடுதான் இருப்பாள். அம்மாவின் வித்வத்தை எடைபோட இந்த வீட்டில் யாருக்கும் யோக்யதை கிடையாது.
அம்மாவின் சாதகத்தில் எனக்கு ஆலாபனை, பாட்டு, ஸாஹித்யம் – தனியாகத் தெரியவில்லை. நாதரீதியில் அவளுக்கும் வீணைக்கும் இடையே ஏதோ சம்பாஷணை, சிந்தனைப் பெருக்கு; இல்லை வீணைமூலம் தாத்தாவுடன் பேச்சு? இதெல்லாம் என் எண்ணம். அசட்டு எண்ணம். ஆனால் முற்றிலும் அசடா? ஏனெனில் வீணைக்கும் அவளுக்கும் இடையே ஒரு தனி உறவு கொண்டாடியது போலத் தோன்றிற்று சிறுத்தையை முதுகைத் தடவி, அதன் புள்ளிகளை ஒவ்வொன்றாய் எண்ணி, அதில் சிறுத்தை உறக்கம் கலைந்து தனி விழிப்புப்பெற்று Sorry or am I sorry?
ஓரிரவு-
எனக்குத் தூக்கத்தில் கனா மாதிரி ஏதோ சத்தம் கேட்ட மாதிரி. விடிகாலையில் அலறல் சத்தம் கேட்டுத் தூக்கம் வெடுக்கெனக் கலைந்து அலறிப் புடைத்து எழுந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினால்-
கூடத்தில் அம்மா மார்க்குலையில் கையை வைத்துக் கொண்டு நின்றாள். எதிரே பாயில் வீணை ரெண்டு துண்டாய்க் கிடந்தது.
தலைக்கு நேரே பட்சிக்கூட்டில் க்றீஈஈச் திடுக் கென்றது. வெட்டின தண்ணீர்போல் எங்கள்மேல் மெளனம் மூடிக்கொண்டது.
நேரம் கழித்து.
என்ன? எப்போ?? எப்படி???
கேள்விகளுக்குக் குறைச்சலில்லை. பதில் கிடைத்து விட்டால், வீணை ஒட்டிக்கொண்டுவிடுமா?
வேலைக்காரி இன்னும் சாணி தெளிக்கவே வரவில்லை.
எலி? பெருச்சாளி தட்டிவிட்டிருக்குமா? இத்தனை நாள் இல்லாமல் இன்னிக்குப் புதுசாவா? அதன் நீலப் பட்டுரையில் எப்பவுமே பட்டுப்பாயில் மல்லாக்க வைத்தி ருக்கும் வீணை இன்றுவரை இப்படியே இருந்துவிட்டு எலி தள்ளிப் புரண்டுவிடுமா? அப்படி எலியும் மெனக்கெட்டு எத்தனை ‘தம்’ பிடிக்கணும்!
தம்பி விஷமக் கொடுக்குத்தான். ஆனால் இன்னும் படுக்கையைவிட்டு எழ வேயில்லையே! நேற்று எல்லாரும் படுக்கப் போகும்போது வீணை சரியாத்தானேயிருந்தது? நடு இரவில் எழுந்து தள்ளிவிட்டு வந்து படுத்துக்கொண் டானா? அசட்டுப்பிசட்டுத் தனமாய் எண்ணுவதற்கும் ஒரு எல்லை கிடையாதா?
அப்பா அறையைவிட்டு எழுந்துவந்து எங்கள் தோற்றத் தைக் கண்டு நேரே அம்மாவிடம் போய் அவளை அணைத் துக்கொண்டார். அவர் கண்கள் பெருகின. அம்மாவையும் அப்பாவையும் அப்படிப் பார்த்தது அதுவே முதல் தடவை. கடைசித் தடவையும் அதுதான்.
அன்று அந்த அலறலுக்குப் பிறகு ஆத்திரமாவோ அழுகையாவோ அம்மாவிடமிருந்து அந்த மாதிரி சத்தம் வரவில்லை.
ஆனால் வீணையோடு அவளும் சேர்ந்து உள் முதிர்ந்து போய்விட்டாள் என்று எங்களுக்குத் தெரிந்தது. ஆனால் வெளிக் காண்பித்துக்கொள்ளமாட்டாள். Slender and oroud. சில சமயங்களில், யோசனையில் பூமியை விரல் நுனிகளால் தட்டிக்கொண்டு… வீணை ஞாபகம். விரல்களின் வழி அவளுக்கு மட்டும் கேட்ட நாதம் கசிந்ததோ? நாத சிந்தாமணி என்று ஒரு ராகமிருக்கிறதாமே!
எதிலுமே அப்புறம் அம்மாவுக்கு முனைப்பு இல்லை. ஒரு காட்சி நினைவில் பிதுங்குகிறது. இதோ இந்த நிமிஷம் சொல்லும்படியாக.
இது மாதிரிதான் அந்தி முன் குறிகள் ஏதுமில்லாமல் திடீரென மழை. கொட்டோ கொட்டெனக் கொட்டிற்று. கூடத்து ஜன்னலில் பதித்த கண்ணாடித் தகடுகளின்மேல் தாரைகள் வழிந்தன. வழிந்துகொண்டேயிருந்தன. அம்மா படுக்கையினின்று எழுந்து கைகளை விரித்தபடி அங்கு நோக்கிச் சென்றாள். யாரோ விளித்தமாதிரி. சுவாமி அலமாரியில் அகல் சுடரின் மங்கிய ஆடும் வெளிச்சத்தில் கூடத்தின் இருள் தீவிரம் கொண்டது. என்னவோ அவள் உதடுகள் அசைந்தன. ஆனால் எனக்குக் காது கேட்டது.
“வானத்தின் கண்ணீர் பூமியைக் கழுவுகிறது.”
எனக்குப் புல்லரித்தது.
“சியாமளீ!”
“அம்மா!” ஓடிப்போய்க் கட்டிக்கொண்டேன்.
என் தலையைச் செல்லமாக் கோதிக்கொண்டே பாவம் சியாமளீ – உன் தலையில் பெரிய கனத்தைச் சுமத்திட்டுப் போறேன். உஷ், அழாதே – அதெல்லாம் அப்புறம். அப்புறம் –
“அப்படியெல்லாம் சொல்லாதேம்மா! எனக்குப் பயமா யிருக்கு” என்று தேம்பினேன்.
“பயப்படாதே. அணைத்துக்கொண்டாள். “பயந்தால் உன்னை விட்டுடுமா. என்னை விட்டுடுமா? நீ சமத்து. எனக்குத் தெரியும்.
“பயமாயிருக்கேம்மா!” அழுதேன்.
அவள் பார்வை ஒளி கூட்டிக்கொண்டு. என்னை இந்த ஜன்ம மட்டுமல்ல, அதற்கும் முற்பிறவியிலிருந்தே அடையாளம் கண்டுகொண்ட கனிவுடன் என்மேல் குனிந்தது.
‘ஒண்ணு கேளு. கலைமகளில் ஒரு கதை வந்திருக்கு அதைப் படி. மனசுக்குத் தெளிவு ஏற்படும். சொல்லிக் காண்டே என்மேல் தாங்கியபடி படுக்கைக்குச் சென்று சாய்ந்தாள். இப்படித்தான் படிச்சு, மனசைத் திசை திருப்பிப் பள்ளம் விழுந்த இடத்தை இட்டு நிரப்பிக்க வேண்டியதுதான் வாழ்க்கையில் வேறு என்னதான் இருக்கு?’ கண்ணை மூடிக்கொண்டாள். அசதி ஆயிட்டுது
பத்து நாட்கள் கழிச்சு அம்மாவை எடுத்துண்டு போய், ஆத்து மணலுக் கந்தண்டை, கருவேல மரத்தடியில் வெச்சாச்சு.
அப்பாமேல் கவிஞ்ச புழுக்கம் முன்னிலும் ஸஹிக்க முடியல்லே. கண்கள் பாட்டுக்குப் பெருகியபடியே, மனுஷன் பேசமாட்டான். அம்மாமேல் இவ்வளவு தாங்கிண்டா இந்த மனுஷன் இருந்தார்? இப்படி உள்ளேயே வெச்சுண்டு இருப்பானேன்? வாய்விட்டு வீற மாட்டானா? எந்த நிமிஷம் வெடிப்பானோ? இது அம்மா போன பயத்தைக் காட்டிலும் பயமாயிருந்தது.
ஆமாம். வெடிச்சார் ஒருநாள்.எப்படி? ஒரு பக்கம் விழுந்து, நாக்கும் இழுத்துவிட்டது. எழுதிக் காண்பிக் கட்டும்னு நோட்டும் பென்சிலும் கொடுத்தால் எழுத்து கிறுக்கிண்டு போறது. கண்கள் பேசத் தவிக்கின்றன. என்னவோ சொல்லப் பார்க்கின் றன. ஆனால் கண்ணுக்குத் தெரிந்த பாஷை கண்ணீர்தானே! அவைபாட்டுக்குப் பெருகியபடி”.
தூண்டிய சிந்தனையில் இருவரும் ஆழ்ந்து எந்நேரமோ? நாங்கள் அமிழ்ந்துபோன நிசப்தத்தினின்று ஒரு பெரும் பெருமூச்சு எழுந்தது. நாங்கள் இல்லை. பூமியின் கேவலா? தனி மரம் ஒண்டிமரம் பூவரசா?
“ஸார். உங்களிடம் அனுதாபம் வேண்டவில்லை. ஆனால் எனக்குக் கிண்ணம் விளிம்பு துளும்பிற்று. அப்பா வுக்குக் கையில் சாதத்தைப் பிசைந்து வைக்க வேண்டும்; சமயங்களில் ஊட்டவும் செய்ய வேண்டியிருந்தது; குழந்தை பெறாமலே நான் தாயாகிவிட்டேன்.
பிறகு எங்கள் அரிச்சந்திர புராணமெல்லாம் உங்களுக்கு வேண்டாம் பட்டணம் போக முடிவெடுத்து – முடிவு என்னுடையதுதான்– கிராமம் நீங்கள் எழுதும் Fairyland இல்லை – சென்னைக்கு மூட்டை கட்டும்போது, அம்மாவின் ட்ரங்க் பெட்டியை ஒழிக்கையில், அவளுடைய துணிமணி மடிப்பிலிருந்து ஒரு கலைமகள் விழுந்தது, புரட்டின பக்கத் தில் இருந்த கதையின் ஆரம்ப வாக்யமே மனதைச் சுண்டி யிழுத்தது. போட்டது போட்டபடி அங்கேயே உட்கார்ந்து படித்தேன். படித்து முடித்தவுடன் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன்; என்னேரம் தெரியவில்ல்ல.
“என்ன கதையோ?”
“காலம் காலம் கற்பார்ந்த காலமாய் என்று ஆரம்பிக் கிறது. அதான் ஒரு ஆற்று மணல் பள்ளத்தில் ஒரு கல்லின் வழுக்கை மண்டை லேசாகத் தெரிகிறது. அதைச் சுற்றி உலகம் நல்லது பொல்லாதுடன் அதன் நியதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கால இயக்கத்தில் ஒரு சம்பவத்தின் முத்தாய்ப்பாய், அதுவே கதையின் முத்தாய்ப்பாய், அதை மூடிக்கொண்டிருந்த குப்பை செத்தைகள் கலைந்து ஒரு ஸ்வயம்புலிங்கம் வெளிப்படுகிறது.
‘ஆ! யோகம்.’
“yes. ஒரு தெளிவு உணர்ந்தேன். ஓ எல்லாமே இது தானா இவ்வளவுதானா? தெய்வமும் ஒரு சாஷிதான் என்கிற தெளிவு. இந்தத் தெளிவும். அது தந்த ஆதரவும் என்னிடம் நிரந்தரமாகத் தங்கின என்று சொல்ல மாட்டேன். அது சாத்யமில்லை. நாம் மனித ஜன்மம் தானே! ஆனால் கண்ணில் ஒரு கீறு அகன்று திறந்து கொண்டது. திறந்தது மூடிக்கொள்ளவில்லை. அது எனக்கு ஒரு திருப்புமுனை: உங்களுக்குச் சாதனை.
இது தெளிவுதானா? தெளிவோ இல்லையோ கூடவே ஒரு பிடிவாதம் வளர்கிறது. விதியே உன்னால் முடிந்தது இவ்வளவுதானா? என்ற சவாலுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறோம். வேறு வழியும் ஏது? நீ அழுதுகொண்டே யிருந்தாலும் விழிக்கு அக்கரையில்லை.
ஆச்சு; இருபது வருடங்கள் ஓடியாச்சு.தம்பி, இங்கே மூச்சுத் திணறுகிறது’ என்று வடக்கே பிழைக்கப் போய் விட்டான்
அப்பா இப்போ படுக்கையாகிவிட்டார். கண்ணுக்குத் தெரிய, நாளொரு இம்மி தேய்ந்துக்கொண்டே வருகிறார். அம்மாவின் மறைவிலிருந்து நான் எப்பவோ தேறிவிட்டேன். ஆனால் இவரால் ஏன் முடியவில்லை? எனக்கு ஆச்சரிய மாவேயிருக்கிறது. கண்ணீர் அருவியாகவே மாறிவிட்டார். முதலில் வடிக்க உடம்பில் இவ்வளவு கண்ணீர் இருக்க முடியுமா? இல்லை கண்ணில் கோளாறா? இல்லை டாக்டர் பார்த தாச்சு. கண்ணில் ஒண்ணுமில்லை. மனசில்தான் வெச்சிண்டு தவிக்கிறார். சொல்ல முடில்லே. நாக்கு இழுத்துவிட்டதே! அப்பாவைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கு –
“நான் நினைக்கிறேன் ஒருவேளை – “
சடக்கெனக் குனிந்து மூர்க்கமாக என் வாயைப் பொத்தி னாள். ஒருவேளை என்ன – எந்த வேளையும் வேண்டாம். நான் எதுவும் தெரிந்துகொள்ள ஆசைப்படவில்லை சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது. அவை தெரி யாமலே உங்கள் கதையின் ஸ்வயம்புலிங்கம் போல, குப்பை செத்தைகளுக்கடியில் புதைந்தே கிடக்கட்டும். தரிசனம் வேண்டாம்.
‘விர்ர்ர்’ரென்று எழுந்து போய்விட்டாள். அப்புறம் அவள் இந்தப்பக்கம் வரவேயில்லை.
– இதயம் பேசுகிறது
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |