தயை





(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இது பக்தி கலந்தது, மந்திரம் ஏறியது. எனவே இதன் மகத்துவம் அற்புதமானது”

அவல் முடிச்சினை மடியிலே பக்குவப்படுத்திக் கொண்டு குசேலர் துவாரகாபுரி வந்து சேர்ந்தார்.
நீண்ட காலம் பிரிந்திருந்த ஆருயிர்த் தோழன் கண்ணனைப் பார்க்கும் பரவசம் அவர் நெஞ்சினில் நிரம்பி வழிந்தது.
கண்ணன் தரிசனம் சித்தித்தது. பாசங்கொண்ட இரண்டு உள்ளங்கள் அன்பிலே பிணைந்தன.
அதே சமயம் குசேலரின் உள்ளத்தில் சுரணை ஒன்றின் தாக்குதல்!
“இந்தக் கண்ணன் எவ்வளவு சம்பத்துக்களுடன் வாழ்கின்றான்! இவனுக்கு நான் கையுறையாகக் கொண்டு வந்திருப்பது அவல் முடிச்சு. இங்கு அறுசுவை உண்டிகள் மலிந்து வழிந்து கிடக்கையில், கந்தல் துணியிலே முடிந்து கிடக்கும் அவல் சுவைக்கவா போகின்றது? அவன் நட்பின் நிமித்தம் இதனை ஏற்றுக் கொண்டாலும் சூழ இருப்பவர்கள் கேவலமாக நினைக்க மாட்டார்களா? என்னைப் பற்றிக் கேவலமாக நினைத்தாலும் பாதகமில்லை. இந்தப் பரம தரித்திரனுடன் நட்புரிமை பாராட்டும் கண்ணனைப் பற்றிப் பிரபுக்கள் கேவலமாக நினைக்கப் போகிறார்கள்”
குசேலரின் உள்ளத்தில் ஊர்தி செய்யும் சுரணையைக் கண்ணனும் அறிவான். அன்பின் சுரப்பிலே அவன் முகத்தில் புன்னகைக் கொத்தொன்று சினைத்தது.
“குசேலா! நீண்ட காலம் கழித்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறாய். உன் பாலிய நண்பனுக்கு என்ன கொண்டு வந்தாய்?”
குசேலர் தயக்கத்துடன் அவல் முடிச்சை மடியிலிருந்து எடுத்தார்.
“என் இல்லாள் கொஞ்சம் அவல் செய்து தந்தனள்…”
“அவலா? சாப்பிட்டு எவ்வளவு காலமாகின்றது? நினைக்கவே நாக்கில் ஜலமூறுகின்றது…தா! ” என மகிழ்ச்சி பெருகக் கூறி, பல நாள் உண்ணா நோன்பு இயற்றியவனைப் போல, அவலை ஆவலுடன் சாப்பிடத் தொடங்கினான்.
தன்னையே குசேலரின் அன்பிற்கு அடிமையாக்கும் பிரகடனத்துடன் எடுத்த பிடி அவலை உண்ண ஒண்ணாது கண்ணனின் மனைவி தடுத்தனள்.
“அடிமையாகத் துணிந்தீர்களே! இந்தப் பிடி அவலிலே அப்படி என்னதான் அபூர்வச் சுவை இருக்கிறது? என அவள் இரகசியமாகக் கேட்டாள்.
“ருக்மினி! உனக்கு இஃது அவலாகத் தோன்றலாம். இது பக்தி கலந்தது: மந்திரம் ஏறியது. எனவே இதன் மகத்துவம் அற்புதமானது” என விளக்கிய கண்ணபிரான் குசேலரை அருள் சுரக்கப் பார்த்தான்!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.