தயா
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தனை பேரிலும் அவள் தான் அதி குதூகலமா யிருந்தாள். வருவோரை வா, போவோரை இரு என்று. கைக்குழந்தைக்காரிகளுக்குப் பசும்பால் தேடிக் கொடுத்து ஜுரக்காரக் குழந்தைகளுக்குச் சமையல்கார மாமாவைத் ‘தாஜா’ பண்ணி மிளகு ரஸம் பண்ணச் செய்து கொடுத்து ஊட்டும் குழந்தையைத் தாயின் இடுப்பிலிருந்து பிடுங்கித் தன் இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஊட்டி, நலங்கு பாடி, ஏசல் பாடி, சிரிப்பும் கேளிக்கையும் சளைத்த இடத்தில் தான் புகுந்து முட்டக்கொடுத்து மறுபடி மூட்டி விட்டு, மோதல்கள் பயமுறுத்திய இடத்தில் குறுக்கே விழுந்து அவைகளின் கதியைச் சிரிப்பாய் மாற்றி, அங்கும் இங்கும் எங்குமெனப் பம்பரமாய், சமயத்தின் உயிராய்…
சம்பந்திப் பிராம்மணன். ஸாதாரணமாய் ரொம்பப் பேசாதவர்; அவரே மூக்கின்மேல் சரிந்த கண்ணாடிமேல் எட்டிப் பார்த்துக்கொண்டு, “யார் அந்தக் குட்டி? குறு குறு சுறுசுறு வென்று சிரித்த முகமாய் சொருக்களாக்குட்டி?” என்றார்.
‘யாரைச் சொல்றேள்?”
“அதோ நம் பக்கத்தில், சந்தனம் தாம்பூலம் விசாரிக்கிறாளே?”
”எவள்? அந்தக் கத்தரிப்பூக் கலறிப் புடைவையும் கறுத்த அரக்கில் ப்ளஷ் ரவிக்கையுமா? அது தான் தயா!”
“தயா! தயா! பேர் கொஞ்சம் புது தினுசாயில்லை?”
“தயான்னுதான் யாரும் அழைக்கிறா; அதுக்குத் தான் அவளும் ஏன் என்கிறாள்.”
“தயா! தயா! பேர் மாதிரிதான் இருக்கிறாள் குளு குளுன்னு! நாம் செய்ய வேண்டிய உபசாரங்கள் எல்லாம் அவள் செய்கிறாப் போல் இருக்கிறதே! நம் மாத்துப் பெண்கள் எல்லாம் எங்கே?’
“நம் பெண்களா? எல்லாம் ஆபீஸர் ஆம்படையாள் கள்னா! நீங்களும் என்னவோ இன்னிக்குத்தான் புதிசாக் கண்டமாதிரி கேக்கறேளே! நம்மாத்துக் கலியாணத்துக்கு நாமேன்னா அவாளைப் பத்திரிக்கையும் பழமும் வெச்சு அழைக்கணும் ? பாருங்கள், நீங்களே பாருங்கள்; அது அதுகள் மூலைக்கு மூலை நின்னுண்டு தாக்கல் மோக்கல் இல்லாமே பேசிண்டு நிக்கிற அக்கிரமத்தை! காமாக்ஷி! ஏ விசாலம்!! ஏ புவனம்!”
ஆத்திரத்தோடு அழைப்பிலே உயர்ந்த குரல் கேட்டு அவள் சப்தத்தின் திக்கில் முகம் திருப்பினாள். நடு வகிடின் இரு மருங்கிலும் வங்கி வங்கியாய்ப் படிந்த கூந்தலிலிருந்து இரு சுருள்கள் பிரிந்து மின்சார விசிறியின் விசைக் காற்றில் நெற்றி மேட்டில் விளையாடின. மைக் கோடுகளென ஒழுங்கான புருவ வளைவுகளின் எழுச்சியின் மேல் மிதந்த பொட்டு வேர்வையில் கரைந்து குங்குமம் வழிந்து முகத்தில் ஒரு பிரஸன்னம் வீசிற்று.
“என்ன மாமி வேணும்?”
“எங்காத்து நாட்டுப் பெண்கள் எல்லாம் எங்கே கூப் பிட்ட குரலுக்கு ஏன் என்காமே?”
“கல்யாணமோ கார்த்திகையோன்னு அப்படித் தான் இருக்கும். நான் இருக்கேனே உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கோ.”
“நீ யாரு குட்டி?”
“தயா.”
“தயா சரி; நீ பெண்ணாத்தைச் சேர்ந்தவளா, பிள்ளை யாத்துக்காரியா?”
“கல்யாணத்துலே அது மாதிரி யெல்லாம் கட்சி யிருக்கணுமா மாமா? எல்லாம் ஒரே கொட்டு மேளம் தானே! நான் உங்காத்து மாப்பிள்ளைக்குத் தங்கை. மாமியும், மாமாவும் சேர்ந்து நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்.”
“நன்னாயிரு மகராஜியா, தோளோடுதாலி தொங்கத் தொங்கக் கட்டிண்டு என்னிக்கும் சந்தோஷமா, சௌபாக்யமாயிருக்கணும், காரியத்தோடு காரியமா உன் அம்மாவை உனக்குச் சுற்றிப்போடச் சொல்லு. பாக்கறவ சுண் எல்லாமே நல்ல கண் என்று சொல்ல முடியுமா? என் கண்ணே சுடாமல் இருக்கணும், சிரித்த முகமா, தெச்சு முள்ளை எடுக்கிற மாதிரி, இவ்வளவு சமத்தாப் பேசிண்டு, இவ்வளவு பொறுப்பா – உன்னைக் கட்டினவன் கொடுத்து வைச்சவன்தான் : சந்தேகமேயில்லை. உன்னை எங்கே கொடுத்திருக்கிறது? உன் ஆத்துக்காரர் கல்யாணத்துக்கு வந்திருக்காரா? என்ன குழந்தை? ஏன் அழறே? ஏதாவது தப்பு நேர்ந்துடுத்தா? என்னை மன்னிச்சுக்கோ. எங்கே போறே, ஏ குழந்தை தயா! தயா!!”
ஆனால் அவள் சரசரவென அவ்விடம் விட்டு விரைந்து பந்தலில் நெறிந்த கூட்டத்துள் புகுந்து மறைந்து விட்டாள்.
“தீயா. தயா!”
வயது சோர்ந்த குரலின் தேடல் நெருங்கிக் கொண்டே வந்தது.
“ஏ ஐயா, ஸுபா, தயாவைக் கண்டேளோ?”
“இல்லையேம்மா!” யதேச்சையாய் ஒரே சமயத்தில் ஒரே பதிலில் இரு குரல்களும் இரு ஸ்தாயியில் ஒருமித்தன.
“நீங்கள் என்ன பண்ணறேள்?”
“என்ன பண்ணனும்?”
“அங்கே என்ன நடந்திண்டிருக்கு…?”
“எல்லாம் நடந்தாயிடுத்து”. அக்காவும் தங்கையும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் கண்களில் விஷமமும் ரகஸ்ய அர்த்தங்களும் தத்தித் தித்தித்தன,
“அப்படியா?'”
“ஆமாம். அப்படித்தான்!! அம்மா இப்படித்தான் ஏதாவது அர்த்தமில்லாமல் கேட்டுக் கொண்டு தொணப்பிக் கொண்டிருப்பாள். வயதானதோடு வாத்தியார் பெண்டாட்டியில்லையா?”
”என்னடி சொல்றேள்?”
ஸுபா அருகே வந்து ஒவ்வொரு விரலாய் மடக்கினாள்.
“இதைக் கேட்டுக்கோ. காலையிலே தாலி கட்டியாச்சா? இப்போ கதவைச் சாத்தியாச்சு. இனிமேல் ஒண்ணும் பாக்கியில்லை.”
“என்ன ஸுபா. அவ்வளவு சுருக்க முடிச்சுட்டியே?”
”பின்னே என்ன இன்னும் பாக்கி?”
“காலையில் கட்டுச் சாதக் கூடையும் கருவடாமும் இருக்கே!”
“இருக்கு. அதையும் வாங்கிண்டு நின்னா, இன்னுமா கிளம்பல்லேன்னு சவுக்கு உருண்டைக் கட்டையாலே உதையுமிருக்கு”.
“உருண்டைக் கட்டை எஞ்சியிருந்தால்?” இரு’கெக்கேக்’கள் ஒரு ‘க்றீச்’சில் கலந்தன.
“தயாவைக் காணோமே!ஏ தயா. தயா!”
“இதென்ன சவலை மாதிரி உன் கையொட்டிக் குழந்தையை மடியில் போட்டுத் தூங்கப் பண்ண்ணுமா?”
“தயா, எங்கேடி போயிட்டே?”
மூலையில் வைத்த மண் தொட்டியினின்று எழுந்த பெரிய ‘க்ரோட்டன்’ஸின் நிழலின் கீழிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பிற்று.
இதென்ன, ஒரு ஆட்டை மடக்க மூணு புலியா?
“ஏண்டி தயா, இருட்டில் என்ன பண்றே?”
“என்ன பண்ணுவா? ஏதாவது குருட்டுயோசனை தான். எங்களைப் போலவாளுக்கு இது மாதிரி சமயங்கள் தானே;”
தயாவின் பார்வை ஜயாவின் மேல் தாழ்ந்து ஆழ்ந்தது. பாவம், ஜயா, தன்னைத்தான் நொந்து கொள்கிறாள்.
“அப்பா! கால் விட்டுப் போறது!” அம்மா உடம்பை மெதுவாய் இறக்கிக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்தாள். அம்மாவுக்குப் பாரி உடம்பு.
“அப்பாடா-எப்போப்பா வீடுபோய்ச் சேருவோம்னு இருக்கு.”
”பாவம், பிள்ளையாத்துச் சம்பந்தி, மங்கு மங்குன்னு காரியம் செஞ்சு களைச்சுப் போச்சாக்கும்.”
“என் நாளிலே வேணது செஞ்சாச்சு. அதுக்கில்லே, இந்தப் பிராமணனுக்கு தையிலே நடக்கிற கல்யாணத் துக்கு வாழைக்காயைத் தவிர வேறே காய்கறி அகப்படலியா?”
“இந்த வயஸுலே. இந்த உடம்பிலே அம்மா, உனக்கு இந்த நாக்கு வேண்டாம், உனக்குத்தான் வாழைக்காய் பிடிக்குமே!”
“அதுக்காக?”
“ஜயா, அம்மா சொல்றதும் நியாயந்தான். மூஞ்சிலே அடிச்ச மாதிரி, வந்ததிலிருந்து இதென்ன ஓயாமே வாழைக் காயை வெந்த கறி, வதக்கின கறி, துருவல் கறி, ஸாம்பாரில் வாழைக்காய்த்தான்…?”
“கூட்டிலே கூடன்னா வாழைக்காய்?’
“வசனமே உண்டு : வாழைக்காய்க்கூட்டும் வளர்த்தெடுத்த பிள்ளையும்!”
“அதான் எடுத்தாச்சு வளர்த்தாச்சு கொடுத்தாச்சே!”
“இதென்ன புதுப் பிரலாபம்?”
“இந்த நாளிலே பிள்ளையை வாங்கறதேது? பிள்ளையைக் கொடுக்கறதுதானே உண்டு!’
“நம்ம பிள்ளை நல்ல பிள்ளையம்மா.”
“அரசப் பிரதட்சிணம் பண்ணி இடதுகையாலே சாப்பிட்டு…”-
“கோவில் படியை நெய்யாலே மெழுகி, பிள்ளைப் பூச்சி முழுங்கி_”
“தவங்கிடந்து ராமேசுவரம் போய்”
“உச்சிப் பிள்ளையாருக்குத் தினம் ஒரு குடம் காவேரியிலிருந்து ஈரப்புடைவையோடு ஜலம் எடுத்து வந்து-”
“ஆசையாச் சுமந்து அருமையாப் பெற்றபிள்ளை. எங்கேயோ படித்துறையில் கண்டெடுத்து வளர்த்த பிள்ளையல்ல.”
“வாழைக்காய்க் கூட்டுமாதிரி-”
“நன்னாயிருக்கு! அம்மாவும் பெண்ணும் மாத்தி மாத்தி எதிர்ஸ்வரம் போட்டு ஸம்பந்தி மண்டையை உருட்டு உருட்டுன்னு உருட்டறது!”
“ஆமாண்டி ஸுபா. அவர் மண்டைகூட நன்னா, பெரிசா உருண்டையா இல்லே? குடுமியைப் பிச்ச நலங்குத் தேங்காய் மாதிரி?”
”மண்டை பெரிசானால் மூளை ஜாஸ்தி.”
“கெட்டிக்காரர்.”
“ஸந்தேகமா? இல்லாட்டா இவ்வளவு பெரிய காரியத்தை இவ்வளவு சொல்பத்துலே அடக்கிவிட முடியுமா?”
“அதுக்கென்ன பண்றது? அவாவாளுக்கு முடிஞ்சுதுதானே?”
“அழகாயிருக்கு நீ பரிஞ்சுக்கறது! நாம் மாத்திரம் கொல்லையிலே யானை கட்டி வாழறோமா? ஆனால், அதுக் காக சமயம் போது இல்லையா? எல்லாத்துக்கும் ஒரே பெப்பேயா? எனக்கும்தான் இல்லை. ஆனால், உன் கல்யாணத்தின் போது பந்தல் மாத்திரம் ”
“ஐயோ போறுமேம்மா! சற்றே நிறுத்திக்கோயேன், கேட்டுக் கேட்டு எங்களுக்கே காது புளிச்சுப் போச்சு.”
“அதுக்குச் சொல்ல வல்லே-”
“என்ன சொல்லவல்லே? மீனாட்சியம்மன் கலியாணம் கூட எங்கள் கலியாணத்துக்குப் பிந்திதான் போயேன்-“
அவரவர் யோசனைகளின் படலங்கள் அவரவர்களை மூடியதில் பேச்சு சற்றே மறந்தது.
“கிரிக் க்ரிக் கிர்க் – கிர்க்-‘”
க்ரோட்டன்ஸில் பாச்சை.
அந்தி இருளில் முகங்கள் கரைய ஆரம்பித்துவிட்டன.
“ஆமாம் – ரொம்ப அழகா கல்யாணம் பண்ணி வெச்சியே!” – ஸுபாவின் குரல். சிலந்தி நூல் போல். குரல் இருளினின்று, இழை பிரிந்து இருளூடே வந்து எட்டிற்று.
”ஏன், நான் பணண கலியாணத்துலே என்ன கோணலாம்?”
“போறும் நிறுத்திக்கோ! நீயும் நீ பண்ணின உன் கல்யாண வைபவங்களும் -” தன்னிடத்திலிருந்து ஜயா திடீரெனச் சீறினாள். அம்மா கூடக் கொஞ்சம் மிரண்டு போனாள். அவள் இடத்தில் இருளில் அவள் உருவம் சற்று உள்ளுக்கு இழுத்துக் கொண்டாற் போலிருந்தது.
”நீ தெருவையே அடைச்சுப் போட்ட பந்தலும் வேளைக்குப் பதினாறு பரிசாரகன் பரிமாறினதும் ஊஞ்ச லைப் பூவாலேயே இழைச்சதும் யாருக்கு வேண்டிக் கிடக்கு?”
”ஊரே மகிமையாத்தான் பேசிண்டது.”
“ஒண்ணுந் தெரியாத மாதிரி வேஷம் போடாதே அம்மா ஸ்பா பல்லைக் கடித்தாள். “இப்போ எப்படி இருக்கோம்?”
“மூணும் மூணு தினுஸாய். ஸுபாவாம், ஜயாவாம், தயாவாம்! நாமும் நம்ம பேரும்!”
“உங்க அப்பா ஆசையா வெச்ச பேர்கள்டீ!”
“ஆமா. ஆசையா வெச்சாளே அவலமாய் முடிய?”
“உஷ்? ஸுபா. சற்றே அடக்கிக்கோ. நம்மை யாராவது கவனிக்கப் போறா”
“யார் வேணாலும் கவனிக்கட்டும். நான் அடங்க மாட்டேன் – நான் பிடாரி- எனக்கு வெறி வந்திருக்கு? கூரைமேலே ஏறி நின்னு கூவுவேன். என்னை யார் கேக்கறது!”
”சரி. கத்து. நன்னா கத்து. சுபம் நடக்கிற இடத்தில் உனக்குத்தான் தெரியும்ணு அடிச்சு விழு-”
“அதுக்கென்ன பண்றது? என்னிக்கும் என் கஷ்டம் என்னுது தானே!”
“யார் இல்லேன்னா?”
“ஏதோ இந்தமட்டுக்குமாவது ஒத்துக்கறையே! தோ பார்; மன்னன் மலையா வெச்சிட்டுப் போகாவிட்டாலும் இடுப்பு நிறைஞ்சு உடுக்கவும் வயிறு நிறையத் திங்கவும் எனக்குக் குறைவில்லை, உடுக்கவும் தான் உடுக்கிறேன்’ தின்னவும் தான் திங்கறேன். யாரிருந்தாலும் போனாலும் வயிறு கேக்கிறதா? அழுந்த வாரிப் பின்னிக்கவும் பின்னிக்கிறேன்; ஒரு சமயம் அரை சமயம் கனகாம்பர மும் டிஸம்பரும் சூட்டிக்கவும் தான் செய்யறேன். எனக்கு மிஞ்சி யாருன்னு வளையவும் வரேன். ஆனால் என் வீட்டில் மாஸம் எட்டணாவுக்குச் சாக்கடை வாரும் லச்சி நெற்றியில் காலணா அகலத்துக்குத் துலங்கும் குங்குமத்துக்கெதிரே என்ன விதவிதமான பட்டாடையும் நகையும் பண்டங்களும் ஜம்பம் சாயறதோ? ஒரு சமயம் போதுக்கு அவளுக்கு இருக்கிற யோக்யதை எனக்கு உண்டோ!”
“ஸுபா-”
தூரத்தில் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் ரயில் ‘கிறீர் ஈச்ச்ச்’ – என ஊதிற்று.
“என்னை என் பேரையிட்டே அழைக்காதே — என்னைக் கேலி வேறே பண்ணனுமா? ஸ்பாவாம் ஸுபா! என் பேரே ஒரு பொய். அதனாலே நானும் ஒரு பெரும் பொய் – பொய்- பொய்-”
விக்கல்கள் துக்கத்தின் சுக்கல்கள்.
“ஸுபா. உன் கஷ்டம் எனக்குப் புரியலியா? ஆனால் இந்த வயசில் என் வயிற்றுப் பிறப்பு மூணும் மூணு கோலமா நிக்கறதைப் பார்த்து ஸஹிச்சுண்டு நான் இன்னும் இருக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கே. அதுக்கென்ன சொல்றே!”
“‘இது தானே உன் பெருமை! நான் உலகத்தை எப்படித் தாங்கறேன்? எல்லோரும் என்னைப் பாருங்கோ?’ – இதுதானே உன் பல்லவி!”
“என்னை என்ன பண்ணச் சொல்றேள்?”
“அம்மா, நீ என்ன தான் மேருவாயிரு. உன் பெண்களை நீ கல்யாணம் பண்ணிக் கொடுத்த விஷயத் தில் உனக்கு ராசியில்லை ஓப்புக்கறையா?”
“அத்தோடு இல்லை ஜயா. நமக்குப் பேர் வெச்சதிலும் ராசியில்லே.”
”நன்னாச் சொன்னே- நீ ஸுபா, நான் ஜயா. நாம் படிக்கிறோம் கேட்கிறோம். வெற்றியின் அறிகுறியா. இங்கே கட்டடம் கட்டினா, அங்கே ஸ்தூபி எழுப்பி னான்னு. ஆனால் தோல்வியின் வெற்றிக்கு நான்தான் கோரி, இத்தனை நாள் கழிச்சு இப்போ சொல்றேன். என் வீட்டில் எனக்கு மாத்துப் பேர் என்ன தெரியுமோ? தொடைச்சல்ஸ்!””
“சே!”
“சேயாவது சூயாவது! வீட்டில் யார் எப்படி யிருந் தாலும், மாமனார் குதிரை வாலில் கட்டிப் பறக்க விட்டாலும், பிள்ளைக்கு வியாபாரத்துலே நஷ்டமானா லும், நாலு நாத்தனார்களுக்குக் கலியாணமாகி அதனால் கடனானாலும்’ மச்சினன் சினிமாவிலும் ஓட்டலிலும் அனுப்பற பணத்தையும் படிக்கிற நேரத்தையும் செல வழிச்சிட்டுப் பரீக்ஷையில் “டக் அடிச்சாலும். எல்லாம் வந்தவள் படி மிதிச்ச வேளை! மாமியார் இப்போ லை மறைவு. தலை மறைவு கூடப் பார்க்கறதில்லே ‘மூத்த பிள்ளைக்குக் கலியாணம் பண்ணி. நாட்டுப் பெண் வீட்டுக்கு வந்த மிச்சம் ஆகாசமும் பூமியும்தான் போலிருக்கு! இன்னுமிருக்கு. இளைய பிள்ளை சீமந்தம் என்கிறார். த்தனையிலும் வருஷம் தப்பினாலும் குழந்தையோ. குறைப் பிரசவமோ தப்பரதில்லை. ஸூபா ஒரு பழம் புடவை தரமாட்டாளா, அம்மா ஒரு கல்சட்டி கொடுக்க மாட்டாளா, அம்பி சங்கராந்தி மஞ்கள் குங்குமம் பணத்தில் இத்த வருஷம் ஓரு ரெண்டு ரூபாகூட ஏற்ற மாட்டானா என்று அலையறேன், வலை போடறேன். மீன் சிக்காமல், பழம் பொத்தல் கூடை மாட்டிண்டாலும் அதையும் விடுவதற்கில்லை ஆண்டி அப்பன். ஜயாவின் ஜயபேரிகையை இன்னும் கொட்டணுமா, இது போதுமா?”
“நம்ம ரெண்டு பேரும்தான் இப்படி இருக்கோம்னா தயாவைப் பாரேன்!”
“தயா என்ன பேச்சு மூச்சே காணோம்? உடம்பிலே உசிர் இருக்கா. தொட்டுப் பாரு -”
“நமக்கெல்லாம் உசிர் அவ்வளவு லேசாப் போயிடுமா? உசிரோடு செத்திண்டிருந்தாலும் இருப்போமே ஒழிய, உசிர் விட்டுடுவோமா?”
“நாம் தான் வாயறியாமல் கத்தறோம். தயா வாய் திறக்கிறாளா பார்,”
“தயாவே கொஞ்சம் அழுத்தக்காரி!’
“சும்மா சொல்லாதேயுங்கோடி அவளை! பிறர் கஷ்டம் துளிக்கூட சஹிக்க மாட்டாள் குழந்தை.”
“அதனால் தான் அவள் தயா”.
“அவள் பேர் தயா. அவள் புருஷ்ன் பேர் தீனபந்து, கேட்கணுவா கிருபையின் பிரவாகம்!”
“தயா சிந்தோ தீன பந்தோ – என்ன தயா, பேச மாட்டையா”
“தயா மௌன சாமியாராயிட்டாள் அம்மா.'”
“புருஷன் சாமியாரானால் அவள் மெளனமாவாவது இருக்க வேண்டாமா?”
“இந்த வேடிக்கை நிஜமா உங்களுக்கு வேண்டி யிருக்கா? உங்கள் மாதிரி கொட்டி ஆத்திக்கிற கஷ்டமா அவள் கஷ்டம்? குழந்தையை ஏன் கொத்திப் பிடுங்க றேள்?” ஸுபா தயாவின் கையை இழுத்துத் தன் கையுள் வைத்துக் கொண்டாள்.
”தயா. உன் கை எப்படிப் பட்டுப் போல் மெத்துனு இருக்கு! அம்மா சொல்றமாதிரி, எப்படி தயா நீ ஸஹிச் சிண்டிருக்கே? நான் சில சமயங்கள், நம்மைப் பற்றி யோசனை பண்ணுவேன். நான்தான் அழிஞ்சாச்சு. ஜயா மூழ்கிப் போயாச்சு. ஒரு தினுஸாய் எங்கள் வாழ்க்கையில் இனிமே மாறுதல் இல்லைன்னு முடிவு கட்டியாகி விட்டது. ஆனால், அப்படியுமில்லாது இப்படியுமில்லாத நிலைமையை நீ எப்படிப் பொறுத்திண்டிருக்கே? எங்கள் மாதிரி ஒரு சமயமேனும் வாய்விட்டுக் கத்த மாட்டே? அதுவே எனக்கு அதிசயமாயிருக்கு!”
“அஸிகையா யிருக்குன்னு நிஜத்தைச் சொல்லு.”
“தயா, தயா ஏ ஊமை!”
“என்ன? சொல்ல என்ன இருக்கிறது?” தயா பெரு மூச்செறிந்தாள்.
“என்ன இல்லை! விட்டுப்போய் வருஷம் எட்டாறது. நீ குங்குமம் இட்டுண்டிருக்கே. நான் இட்டுக்கலே, எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?”
“என்ன ஸுபா, ஏன் கொடுமை பேசறே?”
“நான் கொடுமை பேசலேம்மா. உள்ளதைச் சொல்றேன். நெய்யில் வதக்கினால் தேவலையா. நெருப் பில் சுட்டால் தேவலையா பண்டத்தின் வேதனை ஓண்ணு தானே! தயா, நீயா என் எதிரில் தொட்டுக் கொள்ள மாட்டாய்; இதோ. உன் கையை உன் நெஞ்சில் வெச்சுக் கேக்கறேன், தீனபந்து திரும்பி வருவான்னு உனக்குத் தோணறதோ?”
“எனக்கென்ன தெரியும்? நாம் என்ன முக்காலமும் அறிஞ்சவளா?”
“உன் நம்பிக்கை தான் என்ன?”
“நம்பிக்கை இன்ன உருன்னு யார் கண்டது? நாமா நினைக்கிற உருவைத் தவிர அதுவா அவாவாளுக்குத் தக்கபடி சுயமா, தானா, தனியா எடுத்து அவாளே அறியாமல் அவாளைத் தாங்கற நிஜ உரு ஒண்ணு அதுக்கிருக்கே!”
”தயா, கொஞ்சம் தயை புரி, அப்பாவின் பாண்டித்ய மெல்லாம் உனக்கே ஸாஸனம்னு ஒப்புக்கறோம், ஆனால் பளிச்சுனு சொல்லேன்,”
“இப்போ நீங்கள் சொன்ன தெல்லாம் விடப் புதிசா நான் என்ன சொல்லப் போறேன்!”
“சொல்லேன்.”
“நம் துக்கம் தோல்வி, அழிவு அழிவு இவைகளே நம் பக்க பலங்கள்.”
“இதென்ன அர்த்தம் பண்ணற அனர்த்தம்?”
“ஆமாம். இதுவும் பொருள் காண்பதின் ஒரு விதம்”.
“ஓ; நீ சொல்றையே, நம்பிக்கையின் நிஜ உரு இது தானா?”
“இல்லை என்பதற்கு உண்டோ?”
“இருந்தாலும் தயா, ஒரு நாளா இரு நாளா? நாளைக்கு, நாளைக்குன்னு ஒண்ணா, ரெண்டா? எட்டு வருஷம்! ஓரொரு சமயம், ஒரு ஒரு நிமிஷமும் கழுத்தின் மேல் இரும்புக் குண்டாய் இறுத்தறது எனக்குத் தெரியாதா?”
“நாளை, நாளை! இருக்கும் வரை காலத்துக்குக் கணக்கேது? நாம் போன பின்னும், இன்று போயும் ‘நாளை’ உண்டு. உசிரே அதுதானே! நம் தோல்வியும், துக்கமும் அழியுமா?”
“நீ என்ன தான் சொல்லு; இனிமேல் உன் புருஷன் திரும்பி வந்தால் அதிசயம்தான். ஒண்ணு : அன்னிக்குச் சாமியாரோடு ராவோடு ராவா ஓடிப் போனானே. அப்படியே அவனும் காஷாயம் வாங்கிண்டிருக்கணும்; இல்லாட்டா சொல்ல வாய் கூசறது-“
“சம்பந்தம் பிரஸ்தாபமாகும் போதே எங்காத்துலே சொன்னா. அவாளை என் மாமனாருக்குத் தெரியும். பையன் ஒரு தினுஸா எதிலேயுமே பற்றில்லாமல் ஒத்த ரோடும் பேசாமல் மணிக் கணக்கில் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஞானம் மாதிரி ஒரு தினுசாய் இருப்பான்னு சொன்னார். ஆனால் அப்பாதான் பிடிவாதமா, பையன் தேஜஸ்ஸாயிருக்கான், ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கிறது, தயாவுக்கு ஜாதகத்திலே இரண்டு பிள்ளையும் ஒரு பெண்ணும் இருக்கிறது’ன்னு முனைஞ்சு நின்னுட்டார். யார் தலையெழுத்தை யார் மாத்தறது? எழுதினவனாலேயே முடியாதே!”
அதே சமயத்தில் மணவறையில் ஸம்பத் தன் மனைவி யிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“தயா தூய்மையானவள். வாழ்க்கை இன்னதென்று அறியுமுன்னால் சாந்திக்கு முன்னாலேயே அவள் கணவன் காணாமல் போய் விட்டான். தயா ரொம்பவும் பட்டவள். அவளை நாங்கள் எங்கள் உள்ளங்கையில் ஏந்திக் கொண்டிருக் கிறோம். அவள் மனம் நோக நீயும் காணக் கூடாது-”
“அதெல்லாம் அந்தக் காலம் ”
தெருவில் யாரோ உரக்கப் பாடிக் கொண்டே போனான்.
உள்ளே ஸம்பத் இரைந்து கொண்டிருந்தான்.
“அந்த நாளில் அம்மா பற்றுக் கைக்கு ஜலம் கேட்டால் காதில் விழாத மாதிரி போய்க் கொண்டேயிருப்பேன் இப்போ என்னடா என்றால் கைக் குழந்தைக்குத் தலை துவட்டிக் கொண்டிருக்கிறேன். அம்மா போய்ச் சேர்ந்தாளோ அவள் இடிச் சொல் தப்பித்தேன். வீட்டில் இரண்டு பொம்மனாட்டிகள் இருக்கிறீர்கள். இந்த மூணு பசங்களை மேய்க்க வக்கில்லை. ஓவ்வொருத்திக்கும் வீட்டு ஆண் பிள்ளையைவிட ஜோலி தலைக்கு மேல். நிற்கிறது தயா ஏ தயா, தயா? எங்கேயாவது பரோபகாரம் பண்ணப் போயிட்டாளா?”
அடுக்குள்ளிருந்து ஜானகியின் குரல் எட்டிற்று.
”அக்காவுக்கும் எனக்கும் நீங்கள் வெளியில் போயிருந்தப்போ தர்க்கம்.”
“உங்களுக்கு வேறென்ன வேலை?”
”யாரோ பிச்சைக்கு வந்தவளை விரட்டிட்டேனாம் -”
காதில் வாங்கிக் கொண்டதும் வாங்கிக் கொள்ளாத துமாய் ஸம்பத் மாடியேறினான். “ஒரு நாளைப் பார்த்தால் போல், ஒரு நாளைக்காவது ஆபீஸைப் பத்து மணி முள் முனையில்லாமல் அடைந்ததில்லை. தினமும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வருஷக் கணக்காய்!- இதென்ன வீடோ, என்ன குடித்தனமோ.”
தயா ஜன்னலண்டை நின்றிருந்தாள். அரவம் கேட்டுத் திரும்பிச் சட்டென, கண்ணில் ஏதோ தூசி விழுந்த மாதிரி கசக்க முயன்றாள்.
“என்ன தயா? இந்தப் பயலைப் பார்த்துக்கொள்ளக் கூடாதா?” அவன் சொல்லி முடியும் வரை பயல் காத்துக் கொண்டிருக்க வில்லை. அத்தே!’ அப்பா கையிலிருந்து தாவி விட்டான். இரண்டு அடி முன் ஓடி வந்து தாங்கிக் கொண்டாளோ பிழைத்தது,
“என்ன மூக்கு நுனி சிவந்து ‘பட் பட்’ பண்றது?முட்டி ஜலதோஷமோ?”
அவள் முகத்தில் புன்னகை கட்ட வில்லை.
“ரொம்பக் கோபமோ? கோபம் வராதவாளுக்கு கோபம் வந்தால் பயமாயிருக்கிறதே!”
“கோபிக்க நான் யார் அண்ணா? எனக்குக் கோபம் இல்லை. மனம் தான் குழம்பறது. மறுபடியும் நிலைப்படும் வரை அவஸ்தை தானே!”
“தயா, ஒண்ணு சொல்கிறேன். வருவோருக்கெல்லாம் போடுவதனால், நாமும் ஓடு எடுத்துக்கொண்டு அவர்களோடு கிளம்பிவிட வேண்டியதுதான்! பிச்சையெடுப்பதில் வெற்றி பெறுவது எப்படி என்று முறை வகுத்துப் புஸ்தகம் போடும் அளவுக்கு அது தொழிலாய் முற்றிவிட்டது தெரியுமோன்னோ?”
அவள் செவி வாங்கியதோ இல்லையோ, தனக்குத் தானே பொருமிக் கொண்டிருந்தாள்.
“படியேறி மரமாத் தழைஞ்சு அட்சதை போடுங்கோ’ என்று கேட்கிறாள். போ போ! உன் மாதிரி எத்தனையோ பேர், இதே வேலையாப் போச்சு!’ மன்னிக்கு ஏதோ குழந்தைப் பிடுங்கல், வேலையலுப்பு என்றே வைச்சுக்கறேன், வந்தவளும் அப்படித்தான் கொண்டாளோ என்னவோ, சாந்தமா, ‘அப்படிச் சொல்ல ஆகாது குழந்தை, நான் வயஸானவள், சுமங்கலி, வெள்ளிக் கிழமை வந்திருக்கிறேன். நான் பிச்சையெடுக்கிறவள் இல்லை. வேண்டுதலையில் மடியேந்தறேன். இல்லை என்காதே’ன்னு புத்தி மாதிரி. இன்னொரு சான்ஸ் கொடுக்கற மாதிரி சொல்றாள். ‘இது மாதிரி வேஷம் போடறவாளையும் எத்தனையோ பேர் பார்த்திருக்கிறேன்’ என்றால் என்ன அர்த்தம்? அரிசியை எடுத்துண்டு நான் வந்திண்டே இருக்கேன்; அதற்குள் அந்தப் பாட்டி ஒண்ணுமே பேசல்லை. குறுஞ்சிரிப்பு சிரிச்சுண்டு விருக்குனு போயிட்டா, ஏந்திய கையோடு துரத்திண்டே போய்த் தெரு முனை வரைக்கும் தேடினேன். ஆனால் மின்னலா மறைஞ்சுட்டா. ஒரு நிமிஷம் திக் பிரமை பிடிச்ச என் நினைப்பே எனக்கில்லை. நினைவு திரும்பினதும் பார்த்தால் கையில் அரிசி காணோம். ஆனால் தலைப்பு கனத்தது. என்னையுமறியாமல் மடியில் கட்டிண்டிருக்கேன். அப்படி நடுத் தெருவில் மடிப்பிச்சையோடு தனியா நான் நிக்கிறதைத் திடீர்னு நானே உணர்ந்ததும் அடி வயிற்றில் நெருப்பு வெச்ச மாதிரி சுறீல்னுது. அதிலிருந்து தான் தேறப் பார்க்கிறேன். ஆனால் தேறுதல் வரவில்லை அண்ணா; இதுவரை தெரியவில்லை. ஆனால் இன்னிக்குத்தான் பயமா யிருக்கு. என் நம்பிக்கை ஆட்டம் கொடுத்துப் போச்சோ? நான் இது வரை நினைச்சிருந்த மாதிரி ‘நாளை’ என்பது கிடையாதோ? இன்று தான் உண்டோ?”
குரல் இழுத்த திரி மாதிரி சிந்தனையில் மங்கிற்று.
“அவளே வந்தாளா? இல்லை. வந்து காண்பிக்க வந்தவளா? தும்பையா நரைச்ச கூந்தல் மஞ்சள் கூடப் பூத்து விட்டது.மங்கலம் யாருக்கும் பிறவியோடு பிறந்தது. வேஷம் போடுவதும் போட்டுக்கறதும் நாமாத்தான் என்பதற்கு அத்தாட்சி மாதிரி. வேஷம் வேஷம் என்று கொண்டே ஒரு நாள் வேஷம் கலைந்த பின்னும் வேஷம் மாறாமல் இருந்தால் அப்போ அது வேஷமா? நிஜமா? அப்பவும் அது வேஷந்தானா, இல்லை, வேறு ஏதாவதா?எது நிஜம்?”
சம்பத் அடிக்கடி கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். நேரமாகி விட்டதே. ஜானகி தட்டுப் போட்டு விட்டாளா, இல்லையா. தெரியவில்லையே?
ஸம்பத் சாப்பாட்டின் முடிவை நெருங்கிக்கொண்டிருந் தான். எதிரே தயா தன் இலையில் சாதத்தை வைத்துப் பரிமாறிக் கொண்டு, தான் சாப்பிட ஆயத்தமாகிக் கொண்டி ருந்தாள். ஜானகி அடுக்குள்ளில் ஒழித்துக் கொண்டிருந்தாள்.
மோருஞ் சாதத்தைக் கப்பிக்கொண்டே ஸம்பத், “என்ன தயா இன்னிக்கு இலை மரியாதை?”
”என்னவோ இன்னிக்கு உனக்கு டிபன் பொட்டலம் கட்டிக் கொடுத்ததில் மிஞ்சினதை வீணாக்க மனமில்லை.”
“ஆனாலுல் கையகலம்தானே இருக்கிறது?”
“சரியாப் போச்சு! இதை வைச்சுண்டு அசுவமேத யாகம் பண்ணலாம்!”
“ஜானகி. இன்னும் கொஞ்சம் சாதம் போடேன்!”
உள்ளிருந்து மொண மொணப்பும், சிப்பல் தட்டும் வெண்கலப் பானையும் இடித்துக் கொள்ளும் சப்தங்களும் வந்தன.
”என்ன ஜலதரங்கம் அடிக்கிறாய்?”
”ஆமாம்! பின்னே என்ன? வடியலிலேயே கொஞ்சம் குறைஞ்சு போச்சு, ராவேளை ஒரு கவளம் குறைஞ்சால் தான் என்னன்னு நான் அசுவாரஸ்யமா இருந்துட்டேன்னா இன்னிக்கின்னு உங்களுக்கு மோருஞ் சாதத்திலே சந்தேகம் வரது.”
”சரி சரி, வேண்டாம். ஆனால் ஜானகி நீ ஆனாலும் இவ்வளவு சுட்டிச் சமத்தாய் இருக்க வேண்டாம். இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ‘அரை’ என்றால் ‘2001’, ‘உரை’ என்றால் ‘காணோம்’ என்கிறாய் -”
“அன்ன பிச்சை!”
ஸம்பத்துக்கு வந்த சிரிப்பில் பசியெரிச்சலும் கலந்து குரல் கடுத்தது.
“‘போ’ப்பா பேர்! சாப்பாடு ஆகிவிட்டது!”
“இரு இரு. வந்தூட்டேன்.”
தன் இலையிலிருந்து சாதத்தை அள்ளிக்கொண்டு தயா வாசற் பக்கம் ஓடினாள்.
“தயா! தயா!” அவனுக்கும் புரியாமல் ஸம்பத்துக்குச் சீற்றம் மூண்டது.
கலத்திலிருந்து எழுந்து கைகூட அலம்பாது வேகமாய்ப் பின்னாலேயே சென்றான். ஆனால் அதற்குள் தயா போய்த் திரும்பி ரேழி வாசற்படியில் எதிர்ப்பட்டு விட்டாள். ஓட் இடமின்றி எதிர்ப்பில் திரும்பிவிட்ட வேட்டைபோல் திடீரென அவளிடமிருந்து ஒரு உக்கிரம் வீசிற்று, கூடத்தின் மின்சார வெள்ளத்தில் அவள் நெற்றியின் வெளிர் பளீரிட்டது. விழி மேட்டில் விளக்கின் ஒளி பட்டு, கருவிழியின் உள் மணியிலிருந்து ஒளிச் சிதர்கள் தெறித்தன. நெற்றிக் குங்குமம் கண் சிமிட்டிற்று. உள் ஏற்றிக் கொண் டால் போல் உடல் முழுவதும் தகதகத்தது. வாய் குழறிற்று. கைகள் ரேழியிருளைக் காட்டிக் காட்டிப் பறந்தன.
“பாழு – பாழு – யாழு பாழ் – விழட்ட இழுந்தியே யாழு – பாழு=”
ஸம்பத் ஒரு அடி பின்னடைந்தான்.
அவள் மேல் ப்ரமித்த பார்வையைப் பெயர்க்க முடியவில்லை. முட்டியின் கீழ் கால் விட்டது.
– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.