தப்புக்கு தண்டனை!
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 9,556
வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள் மகன், மகள் பேரப்பிள்ளைகள் என எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் அம்பலவாணன் மட்டும் தனியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருக்கு சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லை. அவர் முதியோர் இல்லத்தில் வந்து தஞ்சம் அடைந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. அப்போது அவருக்கு பழைய நினைவுகள் வர….
அன்று தன் மகன் சக்தி பத்தாம் வகுப்பு அரசாங்க பொது தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தான்.
அம்பலவாணன் கோவிலுக்கு சென்று தன் மகன் பெயரில் அர்ச்சனை வைத்துவிட்டு வந்தார்.
டேய் சக்தி, இந்த பரீட்சையில நீ படித்தது எல்லாமே நினைவுக்கு வரவேண்டும் நல்லப்டியா பரீட்சை எழுதவேண்டு என்று உன் பெயரில் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்து இருக்கேன் எடுத்துக்கோ
சரிப்பா என்று விபூதியை எடுத்து நெற்றியில் இட்டான்.
அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்பினான்.
அம்பலவாணன் அவனை பள்ளியில் விட்டு விட்டு வந்தார்.
அவன் ஆவரேஜ் லெவலில் தான் படிப்பான். அவன் 450 மதிப்பெண்களுக்கு மேலாக எடுத்தால் தான் அவன் நினைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் கிடைக்கும். ஆனால் அவன் அவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பது சாத்தியமல்ல. அவன் நன்றாக தான் படிப்பான் என்னவோ தெரியல பரீட்சை எழுதும் போது எல்லாம் மறந்து விடுகிறான் என்று அம்பலவாணன் அடிக்கடி தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ரோடு ட்ரான்ஸ்போர்ட் & ஹைவேஸ் ஆபிஸில் உயர் பதவியில் இருக்கும் சாதாரண நபர். மிகவும் நேர்மையானவர், சம்மளம் தவிர வேறு எந்த லஞ்சமும் வாங்கும் பழக்கமில்லாத மிடில் கிளாஸ் அதிகாரி. அவருக்கு சக்தி ஒரே மகன் என்பதால் அதிக செல்லம். அவர் மனைவி சாவித்திரியும் மகன் மீது ரொம்ப பாசம் கொண்டவள். தன் மகன் வேண்டும் என்று சொல்லி முடிப்பதறக்குள் அதனை சமைத்து எடுத்து வந்துவிடுவாள். சக்தியும் இருவரும் மீதும் அதிக அன்பு வைத்துள்ளான்.
அவர்கள் ஊரில் உயர் வகுப்பு படிப்பதற்கு இரண்டு பெரிய பள்ளிகள் உள்ளது. அதில் +1 க்கு சீட் கிடைப்பது என்பது பெரிய கஷ்டம். மெரிட் இருந்தால் மட்டுமே கிடைக்கும். 10-ம் வகுப்பு வரை படிப்பதற்கு எத்தனை பள்ளிகள் இருந்தாலும் உயர் வகுப்புக்குரிய பள்ளி என்றால் அந்த ஊரில் இந்த இரண்டு பள்ளிகள் தான். 100 சதவிகத தேர்ச்சி தான் எப்போதும். இந்த இரு பள்ளியில் ஒரு பள்ளி மாணவர்கள் அந்த மாவட்டத்தின் முதலிடம் வருவார்கள். சிறந்த பள்ளி மற்றும் சிறந்த கல்வி தரம் வாய்ந்த பள்ளி. அதில் தான் தன் மகனை சேர்க்க விரும்பினார் அம்பலவாணன்.
எப்படி சீட் வாங்கபோறோம் என்ற நினைப்பிலே அவரது வேலை போய்க்கொண்டிருந்தது.
அப்போது ஒருவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து, தடித்த மீசை, கையில் பெரிய மோதிரம், கழுத்தில் கனத்த செயின் அணிந்த ஒருவர் அம்பலவாணன் முன்பு வந்தமர்ந்தார். அவரிடம் உத்தரவு வாங்கிதான் உட்காரவேண்டும் என்ற சின்ன பொது அறிவு கூட இல்லை.
வணக்கம். நான் தான் இந்த ஏரியா கவுன்சிலர் பொன்னம்பலம். இவர் கவுன்சிலர் மட்டுமல்ல அந்த ஏரியா தாதாவும் கூட.
சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்.
நான் இங்க இருக்குற மக்களுக்கு நல்லது செய்யனும் பிறப்பு எடுத்து வந்திருக்கேன்னு அடிக்கடி நம்ம பசங்க சொல்லிகிட்டே இருப்பாங்க.
அதெல்லாம் இப்போ எங்கிட்ட ஏன் சொல்றீங்க.
விசயம் இருக்கு கொஞ்சம் பொறுமையா இருங்க சார்.
ஏய் அந்த பைலை கொஞ்சம் குடுடா என தன்னுடன் வந்தவரிடம் கேட்டார்.
சார் இந்தாங்க இதுல நம்ம மெயின் ரோடு போடறதுக்குண்டான பட்ஜெட் போட்டு கொண்டுவந்துருக்கேன். நீங்க தான் அந்த ரோடு போடறது உரிய கான்ட்ராக்ட் எனக்கே ஒதுக்கனும்.
டெண்டர் விட்டுருக்கோம்ல, அதுல யாரோட டெண்டர் அரசாங்கத்துக்கு ஒத்துப்போகுதோ அவங்களுக்கு கொடுப்பாங்க.
உங்க டாக்குமெண்ட்டை குடுத்துட்டு போங்க சார்.
அப்படி பேசாதீங்க நீங்க எனக்கே இந்த டெண்டரை கொடுக்கனும்.
என்ன எனக்கு ஆர்டர் போடுறீங்க சார். நான் உங்களுக்கு வேலை பாக்கல, அரசாங்கத்துக்கு தான் வேலை பாக்குறேன். எது சட்டமோ அது படி நடக்கும். நீங்க கிளம்பலாம். என்று வணக்கம் போட்டார் அம்பலவாணன்.
என்ன சார் நீங்க உலகம் புரியாம இருக்கீங்க. எங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா நீங்க பாத்துக்கனும். உங்களுக்கு பிரச்சினைன்னா நாங்க பாத்துப்போம்ல
உங்க பையனை அந்த பெரிய பள்ளிகூடத்துல சேர்ப்பதற்கு யோசனை பண்ணி கவலைப்பட்டுட்டு இருக்கீங்க. அதை நான் வாங்கி தாரேன். நீங்க இந்த டெண்டரை எனக்கு குடுத்தா நல்லா இருக்கும். அப்புறம் நான் கிளம்புறேன் அம்பலவாணன் சார்.
ஒரு மாதம் கழித்து ரிசல்ட் தேதி.
சக்தி மொபைல் போனில் தன் மதிப்பெண் எவ்வளவு என்று பார்த்தான். 500 க்கு 392 மதிப்பெண்களே எடுத்திருந்தான்.
அம்பலவாணன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது பொன்னம்பலம் வந்து ஒரு அப்ளிகேசன் பாரத்தை நீட்டினார்.
சார் இதுல உங்க பையனுக்கு வேண்டிய படிப்பை எழுதிக்கொடுங்க நீங்க நினைச்ச பள்ளிக்கூடத்திலேயே உங்க பையனை படிக்கவைங்க இந்தாங்க என்று கையில் திணித்துவிட்டு போனார்.
அந்த பாரத்தில் HM கையெழுத்துடன், recommended by Ponnambalam என்று இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் அவரது இருக்கையில் அப்படியே அமர்ந்தார்.
உடன் பணிபுரியும் அவர் தோழன் வந்து…
அம்பலவாணா யோசிக்காதே, பேசாம அவனுக்கு டெண்டரை குடுத்துட்டு நீ சந்தோசமா உன் பையனை படிக்கவை. ஒன்றும் பிரச்சினை இல்லை.
இந்த பொன்னம்பலமும் ரொம்ப மோசமானவன் இல்லை. மக்களுக்கு நல்லதும் பண்ணுவான். அப்படியே அவனும் கொஞ்சம் லாபம் பார்த்துக்குவான். நம்பி அந்த டெண்டரில் கையெழுத்து போட்டு மேல தள்ளிவிடு என்றார்.
அம்பலவாணன் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார். தன் நேர்மைக்கு வந்த சோதனையா என்று வருந்திக்கொண்டிருந்தார். இதுவரை நான் குறுக்கு வழியில் சென்று வேலை பார்த்தது இல்லையே, தற்போது தன் பையனுக்காக இதை ஒப்புக்கொள்ளவா? தன் மகனுக்கு இந்த படிப்பு கிடைத்தால் மேல் படிப்பு, வேலை என்று நல்லா வருவான் என்றெண்ணினார். ஒரு வழியாக அவர் முடிவுக்கு வந்தவர் பொன்னம்பலத்துக்கு போன் போட்டு வரச்சொன்னார்.
நான் உங்களுக்கே இந்த டெண்டர் விடுறேன். நல்லபடியா ரோடு போடனும். நீங்க செய்த உதவிக்காக நான் பண்றேன். இருந்தாலும் நீங்க உங்க பங்கை சரியா பண்ணனும்.
ரொம்ப நன்றி சார். என்று டெண்டரை வாங்கிகொண்டு கிளம்பினார் பொன்னம்பலம்.
மறுநாளே, தன் மகனை அழைத்துசென்று அவர் நினைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர்த்துவிட்டு பணத்தை கட்டிவிட்டு வந்தார்.
தன் மகனும் சந்தோசமாக பள்ளிக்கு சென்று வந்தான். அந்த பள்ளிக்கூடம் ஊரைவிட்டு தள்ளி இருப்பதால் பள்ளி பஸ்ஸில் தான் போகவேண்டும். அவனும் தினமும் பஸ்ஸில் போய் வந்தான். வீட்டின் அருகே பஸ் ஸ்டாப் என்பதால் பிரச்சினை இல்லை.
பொன்னம்பலும் தன் வேலையை செவ்வனே செய்து முடித்தார். அழகான ரோடு போட்டு தனது ப்ராஜெக்ட்டை முடித்தார்.
ஆறு – ஏழு மாதம் போய் இருக்கும், நல்ல மழை ஒரு வாரம் தொடர்ந்து விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
நீல சாயம் வெளுத்தது போல், புதியதாக போட்ட ரோடு குண்டும் குழியுமாக மாறியது.
பேருந்துகள் வாகனங்கள் சென்று வர சிரமப்பட்டன. எல்லாரும் ரோடு போட்டவனையும் அவனுக்கு அப்ரூவல் கொடுத்தவனையும் திட்டிக்கொண்டே அந்த சாலையை கடந்தனர்.
அன்று மாலையில் பள்ளி விட்டு ஸ்கூல் பஸ்ஸில் திரும்பி வந்துகொண்டிருந்தான் சக்தி.
ஸ்டாப் வருமுன்னே வாசலருகே வந்து தன் நண்பர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லிகொண்டு, சைகையில் பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.
அப்போது பெரிய பள்ளம் ஒன்று வர டிரைவர் தடுமாறி திடீரென பிரேக் அடித்தார். வாசலில் நின்ற சக்தி நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்த இடத்திலேயே அவன் தலையில் அடிபட்டு அப்படியே இறந்தான்.
சேதி கேட்ட அம்பலவாணனும் சாவித்திரியும் ஓடி வந்தனர். அவன் இறந்த சேதி கேட்டு ஆடிப்போய்விட்டார்கள். ஓ வென இருவரும் கதறி அழுதார்கள். அங்கிருந்தவர்கள் எல்லாம் புதியதாய் ரோடு போட்டு என்ன பிரயோசனம் அதற்குள் பல்லிழுத்து விட்டதே. டிரைவர் பள்ளம் பார்த்து போவானா எதிரில் வரும் வாகனம் பார்த்து போவானா என்று குறை பேச ஆரம்பித்தனர்.
அம்பலவாணன் அவர்கள் பேசுவதை கேட்டவுன், நானே என் மகனை கொன்றுவிட்டேனே என்று கதறி அழுதார்.
தனக்கு இருந்த ஒரே மகனை பறிகொடுத்த வேதனையில் சாவித்திரியும் உடல்நிலை சரியில்லாமல் சரியாக சாப்பிடாமல் அடுத்த ஒரிரு மாதத்திலேயே அவரும் இறந்துவிட்டார்.
ஏற்கனவே மனவேதனையில் இருந்த அம்பலவாணன் தன் மனைவியையும் பிரிந்து மிகவும் துக்கத்திற்கு உள்ளானார். தனக்கு மட்டும் ஏன் சாவு வரவில்லை என்று புலம்பியவாறு பித்து பிடித்தவர் போல் இருந்தார்.
அப்போது அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு கொஞ்சம் தேறிய நிலையில் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள்.
முதியோர் இல்லத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தன் காலத்தை ஓட்டி வந்தார் அம்பலவாணன். பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவர் தன் முன்னாடி குழந்தைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் முதியோர்களை பார்த்து ரசிக்கலானார்.
பாவம் அவர் என்ன செய்வார் பொன்னம்பலம் நல்லபடியாக செய்வான் என்று நம்பி டெண்டரை அவனுக்கே கொடுத்தார். அவன் தரமில்லா ரோடு போட்டதற்கு அம்பலவாணனுக்கு தண்டனையா என கேட்கலாம். அதாவது நம் பேச்சு முதல் செயல் என எல்லாவற்றிற்கும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எதிர்வினை அல்லது கர்மா உண்டு. ஆகையால் தப்பு யார் செய்தாலும் தண்டனை கிடைத்துவிடும். அம்பலவாணன் தெரிந்தே தன் சுயலாபத்திற்காக குற்றம் புரிந்துள்ளார். அதுபோல் பொன்னம்பலத்துக்கும் தண்டனை காத்திருக்கும்.
வாழ்வில் நிறைய சோதனைகள் வரும், அதை தாண்டி ஜெயித்து வருவதே புத்திசாலித்தனம். அதில் நாம் தெரிந்தே தப்பு செய்யக்கூடாது. தெரியாமல் நடந்துவிட்டால் அது தவறு நாம தெரிந்தே குற்றம் செய்தால் அது மிக பெரிய தப்பு. அதை ஒருபோதும் நாம் செய்யக்கூடாது. முன்பெல்லாம் போன ஜென்மத்து பாவம் என்று சொல்லுவோம். ஆனால் தற்போது உடனே தண்டனை கிடைத்துவிடுகிறது. நாம் ஒருவருக்கு எதை செய்கிறோமோ அது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும், அது உதவியாக இருந்தாலும் சரி குற்றமாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சரி.
நல்லதை செய்யுங்கள் நல்லதை பெறுங்கள்!!!!!!!!!!!
Karma is a boomarang… Super
இக்காலத்திற்கு உகந்த கதை
மிகவும் அருமை……