தன்வினை தன்னைச் சுடும்..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 192

(பழைய கதை புதிய பாடல்)
இருபது வயது இளைஞனாம்
இளமை ததும்பும் பருவமாம்
உழுது விதைக்கும் தோட்டத்தில்
ஒற்றை யாளாய் இருந்தனன்.
விதைத்துக் கொண்டு இருந்தவன்
‘புலி!புலி!’ என்றலறிட
அருகிலிருந்த தோட்டத்தார்
அந்தக் குரலைக் கேட்டதும்
மிரண்டு அரற்றும் இளைஞனை
மீட்க நெருங்கி அவனையே
எங்கே புலியைக் காட்டென
ஏக குரலில் கேட்டதும்
‘இங்கு இல்லை!’ உங்களை
ஏய்க்கப் பொய்யைக் கூறினேன்
என்று சொல்லிச் சிரித்திட
ஏக மாக யாவரும்
அவனைக் கடுமை யாகவே
கடிந்து விட்டுச் சென்றனர்.
இந்த வண்ணம் பலமுறை
ஏய்த்து வந்தான் அவனுமே!
அந்தி மாலைப் பொழுதிலே
அவனும் வீடு திரும்பிட
எங்கிருந்தோ பாய்ந்தது
எட்டடி நீளக் பெரும்புலி!
அன்று அவனும் அலறினான்
ஆபத்தென்று பதறினான்.
அவனைக் காக்க ஒருவரும்
அருகில் வரவே இல்லையாம்!
அழைத்த அவனின் குரலையே
அசட்டை செய்து அனைவரும்
‘சேட்டை அவனும் செய்கிறான்
சும்மா!’ என்று ஒதுங்கிட
பெரும்புலிக்கு இளைஞனும்
பலியாய் ஆகிப் போயினன்
தன்வினை தன்னைச் சுட்டிட
தானழிந்து போயினான்!.
‘பொய்சொல்லக் கூடாது!’ என்றும்
‘சொல்லென்று சொன்னாலும்
சோறில்லை!’ என்றாலும்
பொய்சொல்லக் கூடாது என்றும்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
