தனியொருவனுக்கு…





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கதையிலே நமது சமுதாயத்தின் கோரமுகங்களில் ஒன்று முழுமையாகச் சித்திரிக்கப்படுகிறது ; கதைஞருடைய சமுதாயப் பார்வையும் சிந்தனை வளமும் பளிச்கிடுகின்றன. செட்டான மொழிநடையும் மட்டான சம்பவததொகுப்பும் கொண்டு, ஓர் உணர்ச்சிக் காவியமாக இதனை உருவாக்கியிருக்கிறார். மனிதாபிமானத்தின் குரல் கதையிலே ஓங்கி ஒலிக்கிறது. “வானமே, நீ இடிந்து விழுந்து இந்த உலகத்தை அழித்து விடு!” அந்த ஆசிரியரது மனம் மாத்திரமல்ல; நமது உள்ளமுந்தான் இப்படி ஓலமிடுகிறது!
பிஞ்சிற் பழுத்து, வெதும்பிய பழத்தின் சுருங்கியதோல் அதன் காலந்தவறிய செயலுக்கு அளவுகோலிடுவதுபோல அவனது முக அமைப்பு வயதுக்குமிஞ்சிப் பெற்றுவிட்ட அனுபவத்தைத் துலாம்பரப்படுத்துகின்றது. ஒரே பார்வை யில் சகலரும் இதை அவதானித்துக்கொள்ளலாம், நான் என்றோ இதனை அவதானித்துக்கொண்டுவிட்டேன்.
அவன் – பாபு.
‘பூனைக்குட்டி’ – இது வனது பட்டப்பெயர். பாபு என்ற பெயரை விட்டு, ‘பூனைக்குட்டி’ என்ற பட்டப்பெய ரைச் சொல்லியே எல்லோரும் அழைப்பார்கள்.
இவன் எப்பொழுதும் சோர்ந்துபோயிருப்பான் இதன் காரணமாகவே இந்தப் பட்டப் பெயர் இவனுக்கு வந்தது. பட்டப் பெயர் சொன்னால் மற்றைய மாணவர்கள் கோபிப் பார்கள்; ஆசிரியரிடம் முறையிட்டுக்கொள்வார்கள். இவனோ தன் பட்டப் பெயர் பற்றிக் கவலைப்பட்டுக்கொள்வதில்லை.
நான் இந்தப் பாடசாலைக்கு மாற்றலாகிவந்து பத்து மாதங்களாகின்றன. இந்த வகுப்புக்குரிய ஆசிரியர் வராத நேரங்களில் நான் வந்துபோவேன். இன்றும் அப்படித்தான்.
மூன்றாம் வகுப்பு.
தங்களைப்பற்றிச் சரிவரப் புரியாத உள்ளங்கள். அவற் றிலும் எத்தனை ரகங்கள்! இவர்களில் இவன் பூனைக் குட்டி தனியானவன்,
இவன் ஒருபொழுதும் தலையை நிமிர்த்திக்கொள்வதில்லை பிறந்த இரண்டொரு தினங்களில் மண்ணில் தவழுகின்ற நாய்க்குட்டிகளின் கண்களைப்போல, இவன் கண்களை அரை குறையாக மூடிக்கொணடிருப்பான்.
ஆரம்பகாலங்களில் இந்தச் செயலுக்குரிய காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின் விசாரித்ததில் இவன் பிறவியிலேயே கண்ணோய் உள்ளவன் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
இவனது கண்களில் ஒளி பட்டால் கண்ணெரிவுண்டாகி கண்ணீ வடியும்; அப்படிப்பட்ட நோய். இருளில் மட்டும் இவனால் தலைநிமிர முடியும்.
பரிதாபத்திற் குரியவன்; அவன் – அந்தப் பூனைக்குட்டி, சகமாணவர்களால் குற்றஞ் சுமத்தப்பட்டு, விசாரணைக்காக என்முன் நிற்கிறான்,
வழமைபோல் தலைதாழ்த்தி நிற்கிறான்.
வகுப்பிலே பெரும் அமைதி.
“பாபு” – பட்டப்பெயரை நானும் சொல்லக் கூடாது என்பதற்காக அவனது உள்ள பெயரைச் சொல்லுகிறேன்.
“சேர்”
“பிஸ்கெற் களவெடுத்தியா?” நான்கேட்கிறேன். மதிய போசன இடைவேளைக்குமுன், கீழ்வகுப்பு மாணவர்களுக்கு பிஸ்கற் கொடுக்கப்படும். வழமைபோல, இன்றும் இந்த வகுப்பிற்கு பிஸ்கற் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, இவன், தான் பெறவேணடிய ஐந்து பிஸ்கற்றுகளைப் பெற்றுக் காண்டபின், கொடுத்தவர்களுக்குத் தெரியாமல் சில பிஸ் கற்றுகளை எடுத்துவிட்டான். இதைச் சில மாணவர்கள் கண்டுகொண்டு என்னிடம் முறையிட்டுவிட்டனர்.
நான் ஆசிரியன்; வகுப்பில் நடந்த தவறை மாணவர் களே சுட்டிக் காட்டும்போது நான் எப்படி விசாரிக்காமல் விடலாம்? பாபு எனது அனுதாபத்திற்கு உரியவன்தான். என்ன செய்வது!
பாபு மெளனமாகவே நிற்கிறான்.
“பாபு…”
“சேர்…”
“நீ பிஸ்கெற் களவெடுத்தியா?”
“….”
“பாபு”
“சேர்…’
“என்னைப் பார்.”
“எனக்குப் பாக்கேலாது சேர்” அவள் கூறுகிறான் இப்போதுதான் நான் என் தவறை உணர்ந்து கொள்கிறேன். அவன் கண் நோயாளி.
“சேர், இவன் பூனைக்குட்டி பிஸ்கெற் எடுத்ததை நான் கண்டனான், சேர். எங்கையோ ஒளிச்சுப் போட்டான்.” இதே வகுப்பு மாணவன் நவாஜி கூறுகிறான்.
எனது அனுதாபம்! ஆசிரியப் பொறுப்பு!
இவைகளைத்தான் விட்டாலும் இவன் நவாஜி இதே பாடசாலை அதிபரின் மகன். இவன் கண்டிப்பாக அதிபரிடம் கூறுவான்; கூறினால்! அதிகாரம் என்னைப் பொறுப்பற்ற ஆசிரியனாக்கி,
“சேர் உவன் பூனைக்குட்டி முந்தியும் களவெடுத்து மற்றச் சேர்மார் நல்லாய் அடிச்சவை.” இதே வகுப்பு மாணவி யாழினி கூறுகிறாள்.
“சேர், உந்தப் பூனைக்குட்டியின்ரை அம்மாதான் சேர் எங்கட வீட்டு முத்தங் கூட்டிறவ.” ஜெயராணி கூறுகிறாள்.
அவள் மிகவும் பணக்காரி நான் அவளைப் பார்க்கிறேன். அவள் கிறீம் பிஸ்கற்றைக் கடிக்கிறாள்.
“ஏன் ஜெயராணி, நீங்கள் இஞ்சை குடுக்கிற பிஸ்கெற் வாங்கிறதில்லையா?”
“வாங்கிறனான் சேர்.”
“அப்ப அது எங்கை?”
“அதை வைச்சிருக்கிறன் சேர்;”
“அதைச் சாப்பிடுறதில்லையா?”
”இல்லை சேர்; அதை வாங்கிச் சாப்பிடவேண்டாமெண்டு மம்மி சொன்னவ நான் ஒவ்வொரு நாளும் கிறீம் பிஸ்கற் கொண்டு வாறனான் சேர்.”
“அப்ப அந்த பிஸ்கெற்றுகளைக் கொண்டுபோய் என்ன செய்வீங்கள்?”
“நாய்க்குப் போடுவன்; இல்லாட்டி, எங்கட வேலைக்காரியின்ரை பிள்ளைக்குக் குடுப்பன்” ஜெயராணி சர்வ சாதாரணமாகக் கூறுகிறாள்.
நாய் அல்லது, வேலைக்காரியின் பிள்ளை! வேறுபாடற்ற சீவன்கள்! எனது மனக்கூர் சமூகத்தில் குத்தித் தெறிக்கிறது.
இவன் பாபு ஏன் களவெடுத்தான்?… பசியாயிருக்குமோ?
“பாபு…”
“சேர்…”
“காலையிலே என்ன சாப்பிட்டனி?”
“ஒண்டுமில்லை சேர்.”
“ஏன்?”
“காலையிலை தேத்தண்ணிமட்டும்தான் குடிப்பம். சாப்பிடுகிறதில்லை.” அவன் கூறுகிறான். பசியால்தான் இவன் களவெடுத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறேன்.
விசாரணை?…
அதையும் தவிர்க்க முடியவில்லை
எனது மனம் மனச்சாட்சிக் கூண்டினுள் இருந்து துடிக்கிறது!
பாபு…
கறுத்தவன்; மிகக் கட்டையன்; வெளிறி ஊதிய சொக்கைகள். எண்ணெய் தண்ணி இன்றி செம்புக் கம்பிபோல் ஆகிவிட்ட தலைமயிர். ஒரு சேட்டு. காற்சட்டை சாறம்போல உடுத்திருப்பான். ஒரு சீலைப்பை; அது எப்பொமுதும் அவனது தோளில்தான் இருக்கும். ஒரு பென்சிலை தனது கைக்குள்ளே பொத்தி வைத்துக்கொள்வான் அதன் முனை பற்களாற் கடிக்கப்பட்டிருக்கும். புத்தகம் என்று இவனிடம் ஒன்றுமில்லை. சில ஒற்றைகளுடன் கூடிய இரண்டு கொப்பிகள். அவ்வளவுதான்.
பாடசாலைக்கு அதிகமாகப் பிந்தித்தான் வருவான், இன்றுகூடப் பிந்தித்தான் வந்தான். வந்தவன் எதுவுமே கூறிக்கொள்ளாமல் தனது இடத்தில் அமர்ந்துகொண்டான்.
கேட்டால் எதுவும் சொல்லமாட்டான்; எப்போதும் சோர்ந்து போய்த்தான் இருப்பான்.
தினசரி நான் பின்னேரங்களிற் கடற்கரைக்குச் செல் லும்போது இவனது குடிசையைத் தாண்டித்தான் செல்வேன். ஓரு புளியமரம்; மரத்து அடியோடு சிறு பிள்ளைகள் விளை யாட்டுக்காகப் போட்டதுபோன்றதொரு கொட்டில், அது தான் அவனது வீடு. புளியமரத்தடியில் தான் ஏதோ சமையல் நடக்கும்.
இவனுக்குக் கீழ் இன்னும் இரண்டு சிறுசுகள்.
“சேர்.”-சிந்தனையிலிருந்த என்னை யாழினி அழைக் கிறாள். அவள் பிஸ்கெற்றுகளைப் பக்குவமாக உடைத்து, ஒரு கொப்பியின் மேற்பரப்பில் வைத்து நாகரிகமாக என்னிடம் நீட்டுகிறாள், இதற்குமுன்பும் சிலதடவைகள் இப்படிச் செய்திருக்கிறாள்,
நாகரிகச் சூழலில் வாழுகின்ற எதிரொலி. நான் ஒரு துண்டை எடுக்கிறேன்.
“தாங்ஸ்.” – என்னையறியாமல் நான் கூறிவிட்டேன்; என்னிடமுள்ள நாகரிகப்பற்றின் வேகம்!
“நோ மென்ஷன் சேர்?” யாழினி கூறிவிட்டுச்செல்கிறாள்.
“சேர், உவன் பூனைக்குட்டியின்ரை அம்மாதான் எங்கடை மில்லிலை உமி புடைக்கிறவ. உமியைப் புடைச்சு வாற அரிசியிலை எங்களுக்கு அரைவாசியைத் தந்திட்டு அரைவாசியை அவ காண்டுபோய்ச் சோறு சமைக்கிறவ” ஒரு மாணவி கூறுகிறாள்.
உமியைப் புடைத்து… அரிசி எடுத்து.. அதிலும் அரைவாசியைக் கொடுத்துவிட்டு மிகுதியில் சோறு!எத்தனை சீவன்கள்!
எனது உடலில் பல நரம்புகள் வெடித்துச் சிதறுவது போன்ற உணர்வு!
தலையை நிமிர்த்திக் கூறிய அந்த மாணவியை நான் பார்க்கிறேன்.
அவள்-
பிஸ்கெற்றுகளைக் கொப்பிக்குள் வைத்து கொப்பியின் மேற்பரப்பில் கைகளைப் பொத்திப் பிடித்துக் குத்தி, அந்த பிஸ்கெற்றுகளைத் தூளாக்குகின்றாள்.
“நீங்கள் பிஸ்கெற் சாப்பிடுறதில்லையா?”
“இல்லை சேர்.”
“அப்ப ஏன் குத்தித் தூளாக்குகிறியள்?”
“சும்மா.. விளையாட்டுக்கு.” அந்த மாணவி சர்வ சாதாரணமாகக் கூறுகிறாள்.
“பிஸ்கெற்றை உப்பிடியெல்லாம் செய்யக்கூடாது. வாங்கினால் சாப்பிடவேணும்.”
“இந்த பிஸ்கெற்றை எப்பிடிச் சேர் சாப்பிடுகிறது?” அவள் திருப்பி என்னிடம் கேட்கின்றாள்.
“ஏன்?”
“பாக்கவே அருவருப்பா இருக்கு சேர்.” அவள் முகத்தைச் சுளித்தபடி கூறுகின்றாள். அந்த பிஸ்கெற்றுகள் அந்த மாணவிக்கு ஓரு விளையாட்டுப் பொருள்.
வகுப்பு மீண்டும் அமைதியாகின்றது. திரும்பவும் என் பார்வை பாபுமீது படிகின்றது.
“பாபு”
“சேர்…”
”உனக்கு ஐயா இருக்கா?”
“இல்லை சேர்.”
“சேர், சேர், இவன் பூனைக்குட்டியின்ரை ஐயாதான் சேர் சந்தையுக்கை மூட்டை தூக்குறவர் ஒரு மூட்டை தூக்கிக்கொண்டு வரயுக்கை றோட்டிலை விழுந்து கழுத்து முறிஞ்சு செத்துப்போனார் சேர்!” மாணவன் அலோசியஸ் கூறுகிறான்.
என்னால் விசாரணையைத் தொடர முடியாமல் இருக்கின்றது.
“சரி, இண்டைக்கு பாபுவை விடுவம். எனிமேல் இப்படிச் செய்தால் பாப்பம்.” ஒருவாறு சமாளிக்க முயல்கிறேன்.
“சேர், உவன் பூனைக்குட்டி நெடுகலும் உப்பிடித்தான், சேர். நீங்கள் விடாதையுங்கோ, விட்டால் பிறகு இவனைப் பார்த்து எல்லோரும் களவெடுப்பினம்.” ஒரு மாணவன் கூறுகிறான்.
“சேர், உவையெல்லாம் பணக்காரர் சேர். உப்பிடித்தான் கதைப்பினம், உவன் பூனைக்குட்டி பாவம் சேர். அவனை அடியாதையுங்கோ.” ஒரேயொரு மாணவன் பாபுவுக்காக வக்காலத்து வாங்குகிறான்.
கிட்டத்தட்ட பாபுவின் பிரதிதான் அவனும். வர்க்க உணர்வோ என்னவோ!
“சேர், சேர்! இவன்ரை ஐயாவும் சந்தையுக்கை மூட்டை தூக்கிறவர். அதுதான் இவன் பூனைக்குட்யை விடச் சொல்றான், சேர்.” திரும்பவும் அதிபரின் மகன் நவாஜி எழுந்துநின்று கூறுகின்றான்.
“சேர்!”
“என்ன?”
“நான் போய் பிரம்பு எடுத்து வரட்டே சேர்.” அதே நவாஜி கேட்கின்றான். எப்படியும் பாபுவைத் தண்டனைக் குள்ளாக்கவேண்டும் என்ற எண்ணம்.
”சரி, எடுத்துவா.” நான் கூற நவாஜி செல்கிறான்.
நான் பாபுவைப் பார்க்கிறேன்.
“இவ்வளவு மாணவரும் கூறுகின்றனரே, இவன் பாபு உண்மையாகவே களவெடுத்திருப்பானா! அப்படி எடுத்திருந்தால் பசிதான் காரணமா!” எனது மனம் உண்மைகாண முனைகின்றது.
“பாபு”
“சேர்…”
“உனக்குப் பசிக்கிதா?”
“இல்லை சேர்”
“காலமையும் நீ சாப்பிடவில்லை… அப்ப பசிக்கும் தானே?”
“…”
“என்ன பாபு, பசிதானே?”
“இல்லை சேர்… நான் வீட்டிலைதான் சாப்பிடயில்லை… வழியிலை சாப்பிட்டனான்.”
“என்ன சாப்பிட்டனி?”
“வாற வழியிலை… அந்தத் தேங்காய்க்கடை சேர்… அந்தக் கடைக்கு முன்னாலை, அழுகிப்போன தேங்காய்களை எறிஞ்சிருந்தவை. அதிலை தெரிஞ்சு, நல்ல தேங்காய்த் துண்டுகளைத் திண்டனான்.” அவன் கூறுகிறான். பொறுக்கித் தின்ற அந்த வெட்க உணர்வோ என்னவோ, அவன் விட்டு விட்டுக் கூறிய அந்தப் பேச்சு….
ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாய் விஷங் கலந்த ஈட்டிகளாய் என் செவிப்பறையிற் குத்தி நிற்கின்றன.
‘வானமே! நீ இடிந்து விழுந்து இந்த உலகத்னத அழித்துவிடு!’ என்மனம் ஓலமிடுகிறது.
நான் மெளனமாக நிற்கிறேன். தொடர்ந்து பாபுவை விசாரிக்கின்ற பலத்தை என் நாக்கு இழந்து கொண்டு போகின்றது!
‘பேசாமல் போய்விட்டாலென்ன!’ இப்படிக்கூட எண்ணுகிறேன்.
பாபு இப்படிச் செய்திருந்தால் களவுதானே!
‘இவன் ஏன் இப்படிச் செய்திருப்பான்? விசாரணையின் பெரும்பகுதிக்கு வந்துவிட்ட நான் முடிவையும் பார்த்து விடுவோம்.’
நவாஜி பிரம்போடு வருகின்றான்.
பிரம்பு நவாஜியின் கையிலிருந்து என் கைக்கு மாறுகின்றது.
பிரம்பைக் கண்ட பயத்தில் பாபு தலையை நிமிர்த்த மாட்டாமல் நிமிர்த்தி, என்னைச் சில வினாடிகள் பார்க்கின்றான் கண்கள் கூசி சுருங்கி அந்த நோய்க்கண்ணால் கண்ணீர் வடிகின்றது. தலையைத் தாழ்த்திக் கொள்கிறான்,
“பாபு”
“சேர்…”
“நீ களவெடுத்தது உண்மைதானே?”
அவன் தலையை ஆட்டி, தன் குற்றத்தை ஓப்புக் கொள்கிறான்.
“எங்கை எடு பாப்பம்.”
தனது காற்சட்டைப் பையிலிருந்து ஐந்து பிஸ்கெற்றுக்களை எடுக்கிறான். அவை அவனுக்குக் கொடுக்கப் பட்ட பிஸ்கெற்றுக்கள்.
“களவெடுத்த பிஸ்கெற் எங்கே?”
பயந்து பயந்து, தன் சீலைப்பையுள் கிடந்த மூன்று பிஸ்கெற்றுக்களை எடுக்கிறான்.
“ஏன் எடுத்தனி?”
“விக்கிறதுக்காக”
“விற்கவா!”
“ஓம்”
“ஏன்?”
“….”
“ஏன்ரா விப்பான்?”
“நாலைஞ்சு நாளா என்ரை தங்கச்சிக்குச் சுகமில்லை. அதாலை அம்மா வேலைக்குப் போகயில்லை. தங்கச்சிக்குப் பசி… ஐஞ்சு விசுக்கோத்தை இருவத்தைஞ்சு சதத்துக்குத் தான் விக்கலாம். இந்த எட்டு விசுக்கோத்தையும் நாப்பே சேத்துக்கு வித்தால், அரை றத்தல் டாண் வாங்கிக் கொண்டுபோய் தங்கச்சிக்குக் கொடுக்கலாம். அதுதான் மூண்டு விசுக்கோத்துக் களவெடுத்தனான்”
அவன் கூறிவிட்டு, கூசுகின்ற கண்களில் கண்ணீர் வடிய என்னைப் பார்க்கின்றான்.
நீதி கேட்கிறானா!
நான் அவனைத் தண்டிக்கின்ற பலம் முழுவதையும் இழந்து நிற்கிறேன்!
‘வானமே! நீ இடிந்துவிழுந்து இந்த உலகத்தை அழித்து விடு!…’
திரும்பத் திரும்ப என் மனம் ஓலமிடுகின்றது!
– வீரகேசரி, 1977.
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
கே ஆர்.டேவிட்
ஈழத்துத் தமிழ்ப் புனைகதை வாளிலே வீறுடன் ஒளிர்கின்ற தாரகைகளுள் ஒருவர் கே.ஆர். டேவிட், தமது இருபத்தோராவது வயதில் எழுத்துத் துறையிற் புகுந்த டேவிட் கடந்த 21 ஆண்டுகளாகத் தொடர்ந்து புனைகதை இலக்கியம் படைத்துவருகிறார். இதுவரை அறுபத் தொன்பது சிறுகதைகள் வருடைய சிந்தனைக் கோலங்களாகப் பிரசுரமாகியுள்ளன. இவை தவிர, ஒரு நாவலும், ஐந்து குறுநாவல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.
சமுதாயத்தின் ஒவ்வொரு மூலைமுடுக் கிலும் ருக்கின்ற ஊனங்களும் சீரழிவு களும் இவரது பார்வையை உறுத்த, அதன் விளைவாக எழுந்த சீற்றத்தின் சிறுபொறி களாக, மனக் கொந்தளிப்பின் கலை வடிவங்க ளாகத் தேரன்றியவை, இவரது சிறுகதைகள்! ‘என்னை எழுதத் தூண்டுவன எனது உள் ளத்து வேதனைகள்தாம்” என்று டேவிட் கூறுகிறார்,
டேவிட் ஆனைக்கோட்டையை வசிப் பீடமாகக் கொண்டவர் ஆசிரியர்.