தனிப்பட்ட விடயங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 1,683 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

“இங்கு அழகான பெண்கள் இருக்கிறார்கள்… உங்கள் பொழுதை இனிமையாகக் கழிக்கலாம்…” 

இப்படித்தான் சமீர் சாலே கூறினார். அவருடன் ஏற்பட்ட முதல் அறிமுகச் சந்திப்பில் உரையாடிக் கொண்டிருந்த போது தான் இவ்வாறு கூறினார். 

இந்தோனேசியாவிற் தொடங்கப்படவிருக்கும் புதிய வேலைத் திட்டத்திற்கு அவர் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நான் இங்கு வந்து சேர்வதற்கு முன்னரே அவர் வந்திருந்தார். அதனால் இந்த நாட்டிலுள்ள விஷேட அம்சங்களைப்பற்றி (அல்லது அம்சமான விஷயங்களைப் பற்றி) எனக்குத் தெரியப்படுத்துவதில் மிக உற்சாகம் காட்டினார். 

சமீர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கிரீஸிற்கு இடம் பெயர்ந்து குடியுரிமை பெற்றவர். பிறவியால் அரபியரானாலும் ஐரோப்பிய கலாசாரம் அவரில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. எங்கள் கம்பனியில் சுமார் பத்து வருட காலம் பணிபுரிந்திருட்பதாக அறிந்தேன். இதுவரை தலைமைக் கந்தோரில் இருந்தவர். இப்போதுதான் வெளிநாடு ஒன்றில் முதன்மைப் பதவியேற்று வந்திருக்கிறார். 

இனிமையாகப் பொழுதைக் கழிப்பது எப்படி என்பதுபற்றி சமீர் கூறும் கதைகளை ஓர் அசட்டுப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். (அதாவது அவர் கூறுவது எதுவுமே எனக்குப் பரியவில்லையாம்) 

“என்ன யோசிக்கிறீர்கள்… அதிக செலவாகாது… இங்கு ‘ரேட்’ எல்லாம் மிகக் குறைவு… 

அதற்கும் என்னிடமிருந்து அதே அப்பாவித்தனமான புன்னகைதான். 

“இன்னொரு வசதியும் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்வதற்கு அழகிய இளம் பெண்கள் இங்கு இருக்கிறார்கள்…” 

நான் மௌனம் கலைந்தேன். பேச்சின் திசையை மாற்றுவது அவசியமாகப் பட்டது. 

“எனக்கு மனைவி இருக்கிறாள்…” 

“மனைவி இங்கு இல்லையே…?” – இப்போது அவர் அப்பாவித்தனமாகச் சிரித்தார். நான் சிரிக்கவில்லை. 

இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள புதிய புறஜெக்டிற்கான வசதி வாய்ப்புக்களைக் கண்டறிவதற்காகவே சமீரை முன்கூட்டியே கம்பனி அனுப்பியிருந்தது. ஆனால் அவர் கண்டறிந்த வசதி வாய்ப்புக்கள் வேறு துறை சார்ந்ததாயிருந்தது. 

இந்த வேலைத் திட்டத்திற்கு தொழில் முகாமையாளராக வந்தவன் நான். கம்பனி எங்களை இங்கு அனுப்பிய டியூட்டி சம்பந்தமாகப் பேசலாம் என அவரிடம் தெரிவித்தேன். 

அவரது சிவந்த முகம் மங்கியது. இதுபோலவே நாளாந்தக் கடமைகளிலும் அவருடன் ஒத்துப் போகமுடியாத தன்மையை உணர்ந்தேன். எனினும் சேர்ந்து வேலை செய்யவேண்டியிருந்தது. 

சில நாட்களில் அவரது மனைவியும் இந்தோனேசியாவிற்கு வந்து சேர்ந்தார். அதுவரை வீட்டு வேலைகள் உதவிகளுக்கு என ஓர் இந்தோனேசியப் பெண்ணை ‘ஒப்பந்தம்’ செய்து தனது குவார்ட்டேசில் வைத்திருந்தார் சமீர். மனைவி வந்து சேர்ந்த பின்னரும் ஒப்பந்தப் பெண்ணை விலக்கவில்லை. சீக்கிரமாகவே சொந்த மனைவியுடன் தகராறு படத் தொடங்கினார். குடிபோதையில் மனைவியின் கைகளில் வெட்டிப் பயமுறுத்தி அடக்கிவைக்கவும் பார்த்திருக்கிறார். அவரது மனைவி கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவள். சமீரைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவளாம். அவளுக்கு இங்கு தெரிந்தவர்கள் யாரும் அண்டை அயலில் இல்லை. 

கணவனின் கொடுமையைப் பொறுக்காது ஒருநாள் அவள் அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். மார்பின் மேலும் கைகளிலும் கணவன் ஏற்படுத்திய கத்திக் கீறல் காயங்களை (கணவனின் முன்னிலையிலேயே) திறந்து காட்டி அழுதாள். எனக்குச் சங்கடமாயிருந்தது. இது அவர்களது தனிப்பட்ட விடயம் என்று பேசாமல் இருப்பதா? அவர்களுக்கிடையில் விலக்குப் பிடிப்பதா? அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் சொல்வதா? அல்லது சமீருக்கு அட்வைஸ் கூறுவதா? 

“மிஸ்டர் சமீர் நீங்கள் அந்த இந்தோனேசியப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கவேண்டாம்” எனக் கூறினேன். 

சமீர் தலையைக் குனிந்துகொண்டிருந்தார். 

அவரது மனைவி கோபாவேசம் கொண்டு நின்றாள். “நான் அதற்கு வரவில்லை… இப்போது கம்பனி ஓனருடன் பேசவேண்டும்… இவருடைய கூத்துக்களைப் பற்றி அவருக்குக் கூறவேண்டும்… எனக்கு அவருடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தித் தாருங்கள்.” 

இதைக் கேட்டதும் சமீர் இருக்கையை விட்டு எழுந்து வந்தார். மனைவியின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டார், “அவருக்குக் கூறவேண்டாம்… எனது வேலை போய்விடும்…” 

மனைவி அவரை உதறி விலத்தினாள். “உன்னை நம்பமுடியாது…” 

“இல்லை நான் திருந்திவிடுவேன்… அவளை வெளியேற்றிவிடலாம்… என்னை நம்பு!” 

ஆனால்… 

அந்தப் பெண்ணை வெளியேற்றிவிட்டாலும் அவளுடனான தொடர்பு அவருக்குத் தொடர்ந்திருந்தது. இதனால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் காரணமாகப் போலும், சமீர் வேலையில் ஆர்வமற்றவராயிருந்தார். மிகத் தாமதமாக வேலைக்கு வருவார். தனது கடமைகளையும் சரியாகச் செய்யமாட்டார். புரிந்துணர்வற்ற மனவேற்றுமையுடன் என்னோடு செயற்பட்டார். சில சமயங்களில் வாக்குவாதப்பட நேர்ந்தது. நாளாக ஆக, முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுக்கொண்டிருந்தது. 

இந்தோனேசியாவில் அரசியல் நிலை மாற்றங்களும், சடுதியான நாணயப் பெறுமதிச் சரிவும் பொருளாதார ரீதியான குழப்பங்களை ஏற்படுத்தியது. வெளிநாட்டுக் கம்பனிகள் தங்கள் கடைகளை மூடிக்கொண்டு வெளியேறவேண்டிய கட்டம் வந்தது. நாங்களும் சரியாக ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் வேலைகளை இடைநிறுத்தினோம். தொழிற்சாலையில் மெசின்களைக் கழற்றி ஒதுக்கும் வேலைகளில் ஈடுபட்டோம். 

அப்போதுதான் இது நடந்தது. 

கோபாலனைக் காணவில்லை. (கோபாலன் என்பது கற்பனைப் பெயர்.) வேலைத்தலத்திலிருந்து போய்விட்டான். விசித்திரம் என்னவென்றால், தனது அறை நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான். தனது காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக வேலைத்தலத்தை விட்டுப் போவதாகவும் தன்னைத் தேடவேண்டாம் எனவும் குறிப்படப் பட்டிருந்தது. 

கோபாலன் ஏற்கனவே திருமணமானவன். முன்று வளர்ந்த பிள்ளைகளுக்குத் தந்தை. இங்கு மெக்கானிக் ஆகத் தொழிலேற்றிருந்தான். அவனது காதலி யாராக இருக்கும் என விசாரணையில் இறங்கினேன். 

அவனது அறை நண்பன், சக தொழிலாளர்கள், இந்தோனேசியத் தொழிலாளர்கள் போன்ற சிலரை விசாரித்ததிலிருந்து தெரியவந்தது… வேலைத் தலத்துக்குக் கிட்ட உள்ள விலைமாதர் விடுதி ஒன்றிற்குச் சென்று வந்திருக்கிறான் கோபாலன். அங்குதான் அவன் குறிப்பிட்ட காதலியைப் பிடித்திருக்கவேண்டும். (அல்லது அந்தக் காதலி அவனைப் பிடித்திருப்பாள்.) 

இந்த விடயத்தை சமீருக்குத் தெரியப்படுத்தினேன். இதுதான் சமீருக்கும் கோபாலனின் கதைக்கும் உள்ள தொடர்பு. பொது முகாமையாளர் என்ற ரீதியில் இதற்குரிய நடவடிக்கையை அவர்தான் எடுக்கவேண்டும். கோபாலனைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஏஜன்டிற்கு அவர்தான் அறிவுறுத்தவேண்டும். 

ஆனால் சமீர் இதுபற்றி ஏதும் நடவடிக்கை எடுக்காமலிருந்தார். ‘கையிலிருக்கும் காசு முடிந்ததும் திரும்ப வந்துவிடுவான்… நீங்கள் உங்களது பாட்டைப் பாருங்கள்’ எனக் கூறிவிட்டு அவர், தனது பாட்டைப் பார்த்துக்கொண்டு திரிந்தார். 

கோபாலனின் கையில் காசு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியாயிருந்தது. சம்பள முற்பணமாக தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் தொகை மிகக் குறைவு. கையில் பணமிருந்தாற்தான் தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதால் அட்வான்ஸ் தொகையைக் கட்டுப்படுத்தியிருந்தேன். அவர்களது சம்பளப் பணம் இலங்கையில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். இவன் பணத்திற்கு என்ன செய்திருப்பான்? 

அவனது பெட்டியைச் சோதனை செய்ததில் சில கடிதங்கள் அகப்பட்டன. அவனது மனைவி எழுதியவை சில. இன்னும் சில பாங்க் கடிதங்கள். இந்தோனேனசியப் பாசையிலும் சில கடிதங்கள். இவை அவனது காதலி அவ்வப்போது எழுதியவை. (வேலை மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் இந்தோனேசியரான ஒயோங் என்பவனை அழைத்து கடிதங்களை மொழிபெயர்ப்பித்துப் பார்த்தேன்.) பெரும்பாலும் பணம் கேட்டு அன்புடனும் காதலுடனும் எழுதப்பட்ட கடிதங்கள். 

கோபாலன் இலங்கையில் தனது வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பெருந்தொகைப் பணத்தை இங்கு தன் காதலியின் பெயருக்கு மாற்றி எடுத்திருக்கிறான்! தனது கல்யாண மோதிரத்தை இங்கு காதலிக்குப் பரிசளித்திருக்கிறான். (கல்யாண மோதிரம் தொலைந்து விட்டது என மனைவிக்குக் கதை விட்டுக் கடிதமும் எழுதியிருக்கிறான். ‘அதற்காகக் கவலைப்படவேண்டாம்..’ என மனைவி கவலைப்பட்டு எழுதிய கடிதமும் பார்க்கக் கிடைத்தது.) 

எரிச்சல் ஏற்பட்டது. எனினும் கோபாலனைக் கண்டுபிடிக்கத்தான்வேண்டும். இன்னும் நான்கு நாட்களில் நாங்கள் இந்த நாட்டிலிருந்து போய்விடுவோம். கோபாலனை இங்கேயே விட்டுப்போவதா? சமீர் நம்பிக்கொண்டிருப்பதுபோல கோபாலன் தானாகவே வந்துவிடுவானா? 

‘கண்ணே ராசா கவலை வேண்டாம், அப்பா வருவார் தூங்கு…’ என மனைவி அங்கே கடைக்குட்டிக்கு ஓராட்டுப் பாடுகிறாளாம்! (-ஒரு கடிதத்தில் மனைவி எழுதியிருந்தாள்…’எப்போது வருவீங்கள்?’ எனக் கேட்டிருந்தாள்.) 

ஓயோங்கை அழைத்துக் கேட்டேன். “கோபாலனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்… நீதான் அதற்கு உதவி செய்யவேண்டும்….” 

ஓயோங் தயங்கினான். “அதற்காக இவ்வளவு தொகை பணம் தருவேன்…” நான் குறிப்பிட்ட தொகையைக் கேட்டதும் முகம் மலர்ந்தான். அந்த ஒளிர்வு எனக்கு நம்பிக்கையயூட்டியது. 

ஓயோங்…! நீ முதலில் அந்த விலைமாதர் விடுதிக்குப் போ…!” எனது பேச்சைக் கேட்டு ஓயோங் நாணமடைந்தான். “என்னால் முடியாது சேர்… எனக்கு அந்தப் பழக்கம் இல்லை… மனைவி அறிந்தால் கொன்றுபோடுவாள்…!” 

“அட…! நீ அங்கு வேறு எந்த அலுவலுக்கும் போகவேண்டாம்… கோபாலனுடன் கூடப் போன பெண்ணின் இருப்பிடம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு வா…!” 

“எந்த அலுவலுக்குப் போனாலும் அந்த அலுவலுக்கு என்றுதான் நினைப்பார்கள்….” 

“சரி… நீ போகவேண்டாம்… யாராவது தெரிந்தவர்களை அனுப்பி, அந்தத் தகவல்களை எடுத்து வா…! – அவன் சந்தோஷப்படக்கூடிய அளவுக்குப் பெரிய தாள் ஒன்றை நீட்டினேன். அன்று மாலையே அந்தப் பெண்ணின் (மேதா)விலாசத்துடன் வந்தான். 

“நாங்கள் இருவரும் நாளைக் காலையில் அங்கு போவோம்…” என ஒயோங்கிடம் கூறினேன். 

“அங்கு எங்களை உதைப்பார்களோ தெரியாது…” 

“உதைப்பவர்களை நாங்கள் உதைப்போம்…’ (அப்படிக் கூறியது அவனுக்குத் தைரியமூட்டுவதற்காகத் தான். உண்மையில்… எனக்கும் அந்தப் பயம் இருந்தது.) 

தடியனாசாமி மாதிரி இருந்த இன்னுமொருவனையும் சேர்த்துக்கொண்டு, அடுத்தநாள் விடியற்காலையிலேயே எங்கள் பயணம் ஆரம்பமாகியது. முன்னூறு கிலோ மீட்டர்கள் வரை பஸ்சில் சென்று, பின்னர் சைக்கிள் ரிக்ஷாவில் அந்தக் கிராமத்தைப் போய்ச் சேர்ந்து, அங்கேயும் ஒருவரைப் (பணம் கொடுத்து) பழக்கம் பிடித்து, குச்சு ரோட்டுக்கள்… குறும் சதுப்புப் பாதைகளுக்கு ஊடாக நடந்து, அந்தக் குடிசையை அடைந்தோம். 

வந்த வேகத்திலேயே ஓயோங், கூட வந்தவர்களையும் கூட்டிக்கொண்டு குடிசைக்குள் நுழைந்தான். உள்ளே நின்றபடி என்னை அழைத்தான். போனேன். 

ஒரு சாக்குக் கட்டிலில் கோபாலன் நோய்வாய்ப்பட்டவன் போலப் படுத்துக் கிடந்தான். 

நான் உறுக்கலாகப் பேசினேன். “எழும்பு… வா..! போகலாம்..!” 

அவன் வருவதற்கு விரும்பவில்லை. 

“நீங்கள்… போங்கோ… நான் பிறகு வாறன்..!” 

“எழும்படா..! நாங்கள் இங்க உன்னைப் பார்த்திட்டுப் போக வரவில்லை… உதைச்சுத் தூக்கிக்கொண்டு போக வந்திருக்கறம்… ஓயோங்..! கொண்டு வா அந்தக் கயித்தை… ஆளைக் கட்டுப்போட்டுத் துாக்குங்கோ…” 

வெளியே நாய் பூனைகளெல்லாம் கத்தின. கோழிகள் இடத்தை விட்டுப் பறந்து கொக்கரித்தன. உடைகள் அற்ற அல்லது அரை உடைகளுடனான சிறுவர்கள் வீட்டைச் சூழ்ந்துகொண்டிருந்தார்கள். 

ஓயோங் கயிற்று முடிச்சை எடுத்துக்கொண்டு வந்தான். கோபாலன் எழுந்து வந்து உடையை மாற்றினான். நான் வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே கதவு மறைவுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் (மனைவியுடன் கதைப்பது போன்ற அன்னியோன்னியத்துடன்) மிக நெருங்கி நின்று ஏதோ ‘கிஸ்’கிசுத்துப் பேசினான். (‘கவலைப்படவேண்டாம்.. எப்படியும் திரும்ப வந்துவிடுவேன்’ என ஆறுதல் கூறுகிறானோ?) பின்னர் எங்களோடு வந்தான். 

வாசலில் நின்ற சிறுவர்கள் ஏதோ இந்தோனேசியப் பாஷையில் (மாமா… திரும்ப வருவீர்களா..?) கேட்டார்கள். இவன் அவர்களைப் பிரிந்து வரமுடியாத சோகத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்தான். 

ஆளைக் கொண்டுவந்து சேர்த்து, இரவு பகலாக அவனது அறைக்குக் காவல் போட்டேன். காவலுக்கு நிற்கும் சக தொழிலாளர்களுடன் முரண்டு பிடிப்பதாகக் கூறினார்கள். – கத்தியால் குத்துவானாம். 

எனக்கு வெறுத்துப்போய்விட்டது. அவனை அழைத்துப் பேசினேன். “உனக்கு என்ன நடந்தது..? மனைவி பிள்ளைகள் ஊரில் இருப்பதை மறந்துவிட்டாயா..?” 

“என்னை நம்புங்கள் சேர்… அந்த இடத்திலிருந்து வெளியே வரமுடியாமற்தான் அங்கே இருந்தேன்… உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்… என்னைக் காப்பாற்றிக் கொண்டுவந்திட்டியள்… ஆனால் இப்பிடிக் காவல் போடவேண்டாம்… கேவலமாயிருக்கு..! நான் என் மனைவி பிள்ளைகளிடம் போய்ச் சேரவேண்டும்…” கோபாலன் விக்கி விக்கி அழுதான். 

“சரி… நீ போ..!” காவல்களை எடுத்துவிட்டேன். நான் போகச் சொன்னது அவனது அறைக்கு. ஆனால் அவன் தன் காதலிக்குச் சொல்லிவிட்டு வந்ததுதான் சரி. இந்தோனேசியாவை விட்டு நாங்கள் புறப்படப்போகும் நாளின் அதிகாலையில் வேதாளம் மீண்டும் முரங்கைமரத்தில் ஏறிவிட்டது. கோபாலன் போய்விட்டான். அவனைத் தேடிப் பிடிப்பதற்கு இனி எங்களுக்கு அவகாசமும் இல்லை. அவன் இல்லாமலே நாங்கள் புறப்பட்டு வந்துவிட்டோம். 

(வாசகர்கள் சற்று நிற்கவேண்டும். கதை இன்னும் முடியவில்லை… அடுத்த பகுதி இனி வருகிறது…) 

மூன்று மாதங்களின் பின் நாங்கள் திரும்பவும் இந்தோனேசியாவிற்குப் போனோம். அங்கு இன்னொரு கம்பனியுடன் எங்கள் கம்பனி செய்துகொண்ட ஒப்பந்தப்படி, மீண்டும் வேலைகள் ஆரம்பித்தன. 

அதே இடம்… அதே தொழிலாளர்கள்… அதே சமீர்.. என எல்லாமே அதே… அதே… 

எங்கள் அலுவல்களைக் கவனிக்கும் ஏஜன்ட்காரன் ஒரு தகவலைக் கொண்டு வந்தான் – கோபாலன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறானாம். அவனை மீட்டு இலங்கைக்கு அனுப்புவதானால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு தண்டப் பணம் கட்டவேண்டும் – விசா இன்றி நாட்டில் நின்ற குற்றத்திற்காக. 

தண்டப் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. மூன்று மாதமளவில் விசா இன்றி நின்றிருக்கிறான். ஒரு நாளைக்கு இவ்வளவு என்ற வீதத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் டொலர் கட்டவேண்டும். 

கம்பனி இந்தப் பணத்கைச் செலுத்துமா? சமீரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர் கையை விரித்தார். 

“கம்பனியைப் பொறுத்தவரை அவனோடு எந்தச் சம்பந்தமும் இல்லை… அவனது ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. இங்கேயே வராது நின்றது அவனது தனிப்பட்ட விடயம். அவனே பார்த்துக்கொள்ளட்டும். நீ ஏன் கவலைப்படுகிறாய்?” 

என்னால் கவலைப்படாமல் இருக்கமுடியவில்லை. ஏஜன்ட்காரனுடன் சென்று சிறைக்கூட்டில் கோபாலனைப் பார்த்தேன். மூலையில் சுருண்டு கிடந்தான். பெயர் சொல்லி அழைத்தபோதும், நிமிர்ந்து என்னை முகம் பார்க்காது கிடந்தான். 

திரும்ப வந்துவிட்டேன். மனம் கேட்கவில்லை. திரும்பவும் திரும்பவும் சமீரிடம் பேசினேன். வேறு வழி தெரியவில்லை. வேறு வேறு கோணங்களில் கோபாலனின் நிலைமையை, அவனது குடும்பத்தின் கதியை எல்லாம் சமீருக்கு எடுத்துக் கூறினேன். 

சமீர் மனம் இளகினார். 

“இதுபற்றி வேண்டுகோள் விடுத்து கம்பனிக்கு ஒரு கடிதம் எழுது… நானும் சிபார்சு செய்து எப்படியாவது அந்தப் பணத்தைப் பெற்றுத் தருகிறேன்.’ 

ஓரு சுயநலக்காரராயிருந்த சமீர் மனம் மாறியது எனக்குப் புதுமையாயிருந்தது. அந்தக் கல்லுக்குள் உண்மையாகவே ஈரமும் இருந்தது. நாட்களைக் கடத்தாமல் இந்த முயற்சியில் ஊக்கமாக ஈடுபட்டார். 

பிறகென்ன? அவ்வளவுதான் கதை, கம்பனியிலிருந்து பணம் கிடைத்தது. கோபாலனை மீட்டு இலங்கைக்கு அனுப்பிவைத்தோம்.

– மல்லிகை, 2002.

– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *