தண்ணீர் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,043
ரஞ்சித் தனது மனைவியோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தான்.
பக்கத்தில் நின்றிருந்த ஒருவன், அவன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவன் அருகில் வந்தான்.
“குடிக்க கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?’ ரஞ்சித் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பாட்டிலை தந்தான். அவன் மிச்சமிருந்த தண்ணீரில் பாதியைக் குடித்துவிட்டு “தேங்ஸ்’ சொல்லி திருப்பித் தந்தான்.
“தண்ணி குடிக்க விரும்பினீங்கன்னா கடையில் தண்ணி பாட்டில் விக்கறாங்க, வாங்கிக் குடியுங்க. இல்லேன்னா வீட்டுலயிருந்து வரும்போது கொண்டு வாங்க. இப்படி மத்தவங்க தேவைக்கு வாங்கி வெச்சிருக்கிறத கேட்காதீங்க… சரியா’ ரஞ்சித் அமைதியாக சொன்னான்.
“ஏங்க கொஞ்சமா தண்ணி குடிச்சிருப்பான், அதுக்கு இவ்வளவு அட்வைஸா… உங்களுக்கு விருப்பம் இல்லையின்னா குடுக்காம இருந்திருக்கணும், குடுத்திட்டு எதுக்கு அட்வைஸ்?’ கேட்டாள் அவனது மனைவி.
“அவன் தாகமா இருந்து வந்து கேட்டான், குடுத்தேன். எதுவும் சொல்லாம விட்டிருந்தா, நாளைக்கு இதே மாதிரி வேற யார்கிட்டயாவது தண்ணி கேட்பான். ஒரு பாட்டில் தண்ணீர் பதினைஞ்சு ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் விக்கிற இந்தக் காலத்துல எல்லோரும் குடுத்திடுவாங்களா…? யாராவது குடுக்காம விட்டா அவன் மனசு சங்கடப்படுமில்லையா… அத அவன் புரிஞ்சுக்கனும்னுதான் அப்படி சொன்னேன்.’
– திசெம்பர் 2013