டைவர்ஸ்






(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-32
அத்தியாயம்-28
ஒ, விஸ்வாவசுவே, எழுந்திரும்: இளம் பருவத்திலிருந்து இதுவரை இவளிடம் வசித்தீர். இப்போது நான் இவளுக்குப் பதியாகிவிட்டேன். நாங்கள் சதிபதியாக இருக்க தயவு செய்து அருள் புரியும். – சேஷ ஓமம் மந்திரம்.
ஜன்னலைச் சாத்துகையில் மழை கோபியின் முகத்தில் அடித்தது. ஒரு வழியாகக் கொக்கியை இழுத்து மாட்டிவிட்டு, அவன் வாசற் கதவையும் பூட்டினான்.
வசு, மௌனமாகப் பக்கத்து நாற்காலியின் மேல் கிடந்த துவாலையை எடுத்து நீட்டினாள்.
“ஷர்ட்டெல்லாம் நனைந்திருக்கிறது.”
“ஆமாம்,” என்ற கோபி, “நீ தூங்கவேண்டாம்?” என்று கேட்டான்.
“தூக்கம் வரும்ணு தோணலை”
“உட்கார்ந்திருந்தே இரவைக் கழிக்கப் போகிறாயா?”
“உங்க சட்டை நனைந்திருக்கிறது.”
“ஆமாம். மாற்று சட்டை இல்லை…நீ படுத்துக்கொள்.”
“முரளியின் சட்டையைப் போட்டுக் கொள்ளுங்கள்.”
அவன் சட்டையைக் கழற்றினான். மார்போடு ஒட்டிக் கொண்டிருந்த பனியனையும் கழற்றினான்.

“சரி, இப்போ கொஞ்சம் எழுந்திரு. நாற்காலிகளை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, உனக்குப் படுக்கை விரித்துத் தருகிறேன்.”
“எனக்குப் படுக்கை ஒன்றும் வேண்டாம்.”
“பின்னே தரையில் படுத்துக்கொள்ளப் போறியா?”
“நீங்க படுத்துக் கொள்ளுங்கள். நான் சேரிலேயே உட்கார்ந்து கொள்கிறேன்.”
“ராத்திரி பூராவுமா?”
“ஆமாம்…பன்னிரண்டு ஆகப் போகிறது. இன்னும் நாலைஞ்சு மணி நேரம்தானே”
“வேண்டாம் வசு, தூக்கம் வரலைன்னாலும், காலை நீட்டிப் படுத்துக் கொள். இல்லாமற்போனால் நாளைக்கு உடம்பெல்லாம் வலிக்கும்.”
“ஒரு ராத்திரிதானே?”
“உன் இஷ்டம்.”
கோபி ஒரு ஜமுக்காளத்தையும் தலையணையையும் எடுத்துக்கொண்டான்.
பிறகு, ஜமுக்காளத்தைக் கீழே போட்டுவிட்டு, முரளி-நித்தியாவின் மெத்தையைப் பெஞ்சிலிருந்து அலாக்காகத் தூக்கித் தரையில் போட்டான். பிறகு, “தேவைப்பட்டால் விரித்துக் கொள்!” என்றான்.
“பாவம், நித்யா,” என்றாள் வசு.
“ஏன்?”.
“அவள் இன்னிக்குப் பூரா தூங்கவே மாட்டாள். முரளியையும் தூங்க விடமாட்டாள்.”
“அது அவள் குணம்.”
“எல்லாத்திலும் ஒரு பரபரப்பு, ஒரு அவசரம்.”
“முரளி அவள்மேல் உசிரையே வைச்சிருக்கான்.”
“அதுக்கு அவள் கொடுத்து வைத்திருக்கிறாள்.”
“எப்படியோ அவன் நன்றாக குணமடைஞ்சு ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வந்தால் போதும்.”
“உங்க நாகராஜனும் சீதாவும் இப்படிச் செய்வார்கள்னு நான் நினைக்கவேயில்லை.”
“சொல்லாமல் கொள்ளாமல் வெளியே போய்விட்டர்கள்! உன்னை அவர்களுடன் அனுப்பியிருப்பேன்.”
“ஆமாம். நானும் அவர்களுடன் திரும்பிப் போகலாம்னுதான் நினைச்சேன்.”
“பாவம், உன் அம்மாவும் அப்பாவும் கவலைப்படுவார்கள்.”
“போன்லே சொல்லக்கூட வழியில்லை.”
கீழே கிடந்த ஜமுக்காளத்தை எடுத்து, ஹாலின் ஓரத்தில் கதவுக்குப் பக்கமாக விரித்தான் கோபி.
“சீதாவுக்கு அடுத்த மாதம் சீமந்தமாம்,” என்றாள் வசு.
“ஆமாம். அவள் பிறந்த வீட்டுக்குப் போகணும் என்கிறாள். நாகராஜனுக்கு இஷ்டமில்லை. அவள் இஷ்டப்படி செய்யறதுதான் நல்லதுன்னேன்.”
“…”
“நீ என்ன சொல்றே வசு?”
“எனக்கு என்ன தெரியும்? ஒவ்வொரு வீடு ஒவ்வொரு விதம். வீட்டுக்கு வீடு வாசற்படின்னு சொல்கிறார்களே தவிர, எத்தனையோ வித்தியாசம்!”
“வாஸ்தவம்தான். என்னைப்போல வீடே இல்லாதவர்களுக்குத் தான் நிம்மதி… வாசற்படியே இல்லை.”
வசுவுக்குச் சுருக்கென்றது. எதைக் குறிப்பிடுகிறான் கோபி? தான் ஒரு ரூமில் இருந்துகொண்டு ஓட்டலில் சாப்பிடும் யதார்த்தத்தையா? அல்லது கல்யாணமாகியும் ஒரு குடும்பம் என்று இல்லை என்கிற வெறுமையையா என்ன பதில் சொல்லுவது என்று யோசித்த அவளுக்கு ஒன்றும் சொல்ல வரவில்லை.
“நீங்கள் என்ன சினிமா பார்த்தீர்கள்?” என்று கேட்டான் கோபி திடீரென்று.
“ஒரு இங்கிலீஷ்-ஸாரி, அமெரிக்கன் பிக்சர்.”
“நன்றாயிருந்ததா?”
“நித்யா முரளிக்குப் பிடிச்சிருந்தது.”
“உனக்குப் பிடிக்க வில்லையாக்கும்?”
“ரசிக்கும்படியான மனநிலையில் நான் இல்லை.”
“உன் மனசுதான் எதையாவது கற்பனை பண்ணி உலுப்பிக் கொண்டே இருக்குமே?”
இப்போது வசுவுக்குக் கோபம் வந்தது. அவள் எதைப் பற்றி, யாரைப்பற்றிக் கற்பனை பண்ணி மனசை உலுப்பினாள்? வெள்ளித் திரையில் இரு இளசுகள் தங்களுடைய காதலில் மெய்மறந்து கிடக்கையில் அவளுடைய மனம் எதைப்பற்றி நினைத்து வேதனையில் புழுங்கிக் கொண்டிருந்தது? அவளுடைய பெண்மையை ஆளுவதற்கு என்று ஒருவன் வாய்த்திருந்தும், அவனுடைய ஆண்மை அவளுக்குக் கிட்டாத நிலையைப் பற்றி அவள் எண்ணியது இந்தக் கோபிக்கு எப்படித் தெரியும்?
“நீங்கள் பார்த்திருந்தால் நீங்களும் ரசிக்க முடியாமல் தவித்திருப்பீர்கள்.”
“ஓ… அப்படிப்பட்ட படமா?”
“ஆமாம்… பெண்ணின் ஆசைகளையெல்லாம் உணர்ந்து அறிந்து புருஷன் திருப்தி செய்கிறான்.”
“அது மாதிரி, அந்தப் பிள்ளைக்கு ஆசை ஏதும் கிடையாதோ?”
“இருக்கு.”
“அதை அந்தப் பெண் எப்படி மதிக்கிறாள்? ஒருவேளை புரிந்து கொள்வதே இல்லையோ?”
“அதுதான் கிடையாது. அவளும் அவனைப் புரிந்து கொள்ளுகிறாள்.'”
“இதுதான் கதைன்னா கண்டிப்பா, நித்யா – முரளிக்குப் பிடித்திருக்க வேண்டும்.”
“அதுதான் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.”
“ஐ ஆம் ரியலி வெரி ஸாரி.”
“நீங்கள் ஏன் வருத்தப்படணும்?”
“நான் தூங்கலாமா?”
”தூங்குங்கள்.”
‘குட்நைட்.”
“குட்நைட். விளக்கை அணைத்து விடட்டுமா?”
“வேண்டாம். நீ உட்கார்ந்திருக்கிறபோது விளக்கை அணைத்து விட்டால் எதையோ பறிகொடுத்த மாதிரி தோணும்.”
“இங்கே படிக்க ஒரு புஸ்தகம்கூட இல்லையே?”
“குட்நைட்”.
ஏதோ ஒரு சவாலில் இரவு பூரா உட்கார்ந்திருக்கப் போகிறேன் என்று வசு சொன்னாளே தவிர, அவளால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆணி அடித்ததைப்போல இருக்க முடியவில்லை. வெளியே இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மாதத்தில் இப்படி மழை பெய்யும் என்று எந்த வானிலைக்காரரும் அறிவிக்க முடிவதில்லை. மழையுடன் குளிரும் வேறு. அவளைக் குத்தின. கால்களைத் தொங்கப் போட்டிருந்தவள், இரு கால்களையும் தூக்கி நாற்காலியில் வைத்துக் கொண்டாள். ஐந்தே நிமிடத்தில் அந்த நிலையும் அசௌகரியமாகப் பட்டது. எழுந்து நின்றாள். கோபி அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வாசற்கதவுப் பக்கமாக முகம் திரும்பியிருக்க, அவனுடைய முதுகு மட்டும் அவள் கண்ணுக்குத் தெரிந்தது.
தலையைத் திருப்பினாள். சமையலறை வெறிச்சோடியது. கோபி கீழே போட்டிருந்த மெத்தையைப் பார்த்தாள். கீழே உட்கார்ந்து அதன் மேல் சாய்ந்து கொண்டாள், முதுகுக்கு இதமாக இருந்தது. கொஞ்சம் காலை நீட்டிக் கொண்டாள். கால் நாற்காலி மேல் இடித்தது. மீண்டும் எழுந்து ஓசைப்படாமல் நாற்காலியை எடுத்து சமையலறையில் வைத்துவிட்டு வந்தாள். மறுபடியும் சாய்ந்தாள். காலை நீட்டிக் கொண்டாள். தலைக்கு மெத்தை வெகு உயரமாக இருப்பதாகத் தோன்ற ஆரம்பித்தது. இன்னும் இப்படியே போனால், கழுத்து சுளுக்கிக் கொள்ளும் என நினைத்தாள். ஹாலினுள்ளே ஒரு ஐந்து நிமிடம் வளைய வளைய வந்தாள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் வெங்கடாசலபதியின் படம் கண்ணில் பட்டது. கண்டிப்பாக நித்யா கொண்டு வந்திருக்கமாட்டாள் என நினைத்தாள்.
கண் கோபி பக்கம் திரும்பியது. இன்னும் அதே கோலத்தில் அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். இந்த டியூப் லைட்டின் வெளிச்சம் அவனுடைய உறக்கத்தைப் பாதிக்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவள் மெத்தை மேல் உட்கார்ந்து கொண்டாள். மனம் வெறிச்சோடியது. எதையாவது நினைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியபோது அன்று பார்த்த சினிமா கண்முன் தோன்றியது. அவளால் ஏன் ரசிக்க முடியவில்லை?படம் முழுக்க முழுக்க ஒரு இளம் ஜோடியைப் பற்றிய கதை, ஆன்மிக வாழ்க்கையைப் பற்றிய படமாக இருந்திருந்தால் ஒருவேளை அவள் முதலிலேயே எழுந்து வெளியே வந்திருப்பாள். ஒரு லௌகிக, யதார்த்த வாழ்க்கையை வெள்ளித் திரையில் பார்த்தபோது ஏன் எரிச்சல் வந்தது? அவளுடைய ஏமாற்றத்தை அது உணர்த்தியதா? அந்த ஏமாற்றத்துக்குக் காரணம் யார், எது என்று தெரியும்போது மனம் குமுறியதா?
அவள் மெத்தையினின்றும் எழுந்தாள். ஒரு கோபம், ஒரு எரிச்சல். ஏன் ஒரு வெறி அவளை மீண்டும் தாக்க ஆரம்பிக்கிறதோ என்ற பயம் அவளைக் கவ்வியது. அடுத்த கணமே, நித்யா-முரளி, சீதா- நாகராஜன் இவர்களெல்லாம் அவள் முன் தோன்றினார்கள். ஒரு தோப்பில் அவள் தனிமரமாக இருக்கும் உண்மைதான் அவளுடைய மனத்தின் வேசாறலுக்குக் காரணம் என்பதை அவளே உணர்ந்தாள்.
அந்தப் பெரிய படுக்கையை விரித்தபோதுதான், அதன் ஒரு விளிம்பு கோபியின் ஜமுக்காளத்தின் மேல் விழுந்து அதை மறைக்கிறது என்பதைப் பார்த்தாள். மெத்தையை இழுத்துவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
விளக்கை அணைத்தாள். படுத்தாள். திடீரென்று தான் மெத்தையிலும் கோபி ஜமுக்காளத்திலும் படுப்பது அசம்பாவிதமாகத் தோன்றியது. இனி இந்த மெத்தையைச் சுருட்டி வைத்து, வேறு ஒரு ஜமுக்காளத்தைப் போட்டுக் கொள்ளுவது இயலாத காரியம்.
என்ன செய்வது?
“தூங்குகிறீர்களா?” கேள்வியே அபத்தமாகப் பட்டது. இதை உணர்ந்ததும் அவள் மீண்டும், “தூங்குகிறீர்களா?” என்று கேட்டாள். குரல் அவளுக்கே பலமாகக் கேட்டது.
கோபி, ”வசு, கூப்பிட்டாயா?” என்றான். “ஏன் விளக்கை அணைச்சுட்டே?”
“உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்தது. நீங்க மட்டும் ஏன் அதிலே படுத்துக்கணும்…”
“பரவாயில்லை.”
“இங்கே நிறைய இடம் இருக்கு. போர்வையும் இருக்கு.”
கோபி திரும்பிப் படுத்துக் கொண்டான். இருட்டில் வசுவின் முகம் தெரியவில்லை.
”’வசு.”
“உம்…”
“நீ நிம்மதியாகத் தூங்கு.”
வசு மெத்தையின் ஒட்டுக்கு வந்தாள். கோபியின் மூச்சு அவளுடைய முகத்தில் பட்டுத் தகித்தது.
“நீங்கள் திரும்பிப் படுத்துக்கொண்டு விட்டீர்களா?”
“ஆமாம்.”
“அதான், நீங்க விடற மூச்சு என்மேலே பட்டது.
“ஸாரி.”
“இன்னும் கொஞ்சம் நகர்ந்து வாருங்கள். நானும் நகர்ந்து கொள்கிறேன். மெத்தை அகலமாக இருக்கு.”
கோபி சற்றே நகர்ந்தான். அவனுடைய கால் வசுவின் கால்மீது பட்டது.
“ஸாரி,” என்றான் அவன்.
“எதுக்கு?” நகராமலே வசு கேட்டாள்.
“உன்னை மிதித்துவிட்டேன்.”
“நீங்க இன்னும் ஜமக்காளத்திலேயே – இருக்கிறீர்கள்,” என்றாள்.
அவன் இன்னும் நகர்ந்தான்.
“வசு, இப்போ உன் மூச்சு என் மேலே படறது.”
“நான் ஸாரி சொல்லப் போறதில்லை”, என்ற அவள், அவனுடைய ஒரு கை தன் கையைப் பிடிப்பதை உணர்ந்தாள்.
“ரொம்ப நாள் ஆச்சு இல்லை?” என்றான்.
“ஆமாம்.” அவள் முனகினாள்.
அத்தியாயம்-29
சந்ததி சம்பத்துக்களுடன் இந்த வீட்டுக்கு நீ எஜமானியாக இருந்து, ஜாக்கிரதையுடன் உடம்பை ரட்சித்து, சுகம் அனுபவி. வயதானபின் அனுஷ்டான முறையை நீயும் மேற்கொண்டிரு. பெரியோர்கள் எல்லா பாக்கியங்களையும் ஆசீர்வதிக்கட்டும். – சம்ஸ்காரம்
மறுநாள் காலையிலேயே நித்யா முரளியை அழைத்துக் கொண்டு தன் தகப்பனாருடைய வீட்டுக்குச் சென்று விட்டதால் வசுவுக்கும் கோபிக்கும் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
வீட்டு வாசலில் டாக்ஸி நின்றதும் கோபி, “வசு, இப்போதே மணி எட்டு ஆகி விட்டது. நான் ரூமுக்குப் போய்க் குளித்து, டிரெஸ் பண்ணிக்கொண்டு ஆபீஸுக்குப் போறதுக்குள்ளே ஒன்பதரை ஆகி விடும்”, என்றான்.
“நோ நோ. உள்ளே வந்து பத்து நிமிஷமாவது இருந்து விட்டுத் தான் போகணும்,” என்றாள் வசு. பிறகு, “டிரைவரைக் கொண்டு ஸ்டெப்னியைப் போடச் சொல்றேன். என் காரிலேயே உங்களைக் கொண்டு போய் விடுகிறேன்,” என்றாள்.
கோபியும் இறங்கினான்.

அவர்கள் இருவரும் படியேறி வருவதைக் கண்ட ராஜலட்சுமி அயர்ந்து போனாள். இரவு வந்த மற்றொரு போனிலிருந்து, முந்தின இரவு அவசர அவசரமாக வெளியேறிய வசு நித்யா வீட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தாள். காலையில் இந்த இருவரும் இப்படிப் பட்ட குதூகலத்தோடு சேர்ந்து வருவதை அவள் பார்த்து மகிழ்ந்து போனாள். தன்னுடைய அவல நிலைக்கு அவள் கண்ட காட்சி அருமருந்தாகப் பட்டது.
வசு மூச்சு விடாமல் விவரத்தைக் கூறிவிட்டு, “எங்களுக்கு முதல்லே காப்பி வேணும் அம்மா!” என்றாள்.
“இதோ!” என்று ஓடினாள் ராஜலட்சுமி. மறுநிமிடம் காப்பி வந்தது.
“காப்பி சாப்பிட்டு விட்டுப் பேப்பரைப் படியுங்கள். அப்புறம் குளித்துச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்,” என்றாள் வசு கோபியிடம்.
“மாற்று உடைக்கு எங்கே போறது? உன் அப்பா பாண்ட்லோ நீயும் ஒளிஞ்சுக்கலாம்,” என்றான் கோபி.
“வேஷ்டி தரேன். உங்க ரூம்லே போய் பாண்டை மாட்டிக் கொள்ளுங்கள். அப்புறம் உங்க ஆபீ சிலே ட்ராப் பண்றேன்.”
“ஓகே, நீ லிஃப்ட் தரப்போ நான் ஏன் அலட்டிக்கணும். ஆமாம், எங்கே உன் அப்பா?”
“வெளியில் போயிருக்கிறாராம். கெய்ஸரைப் போடறேன். குளிக்கத் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்.”
ஒன்பதே கால் மணிக்கு புறப்படுவதற்கு முன் தபால்காரன் கடிதங்களைக் கொடுத்து விட்டுப் போனான். அவற்றில் ஒன்று வசுவின் படி கண்ணை ஈர்த்தது. யாருக்கோ. கல்யாணமாம், இன்விடேஷன் வந்திருக்கிறது என்று எண்ணிப் பிரித்துப் பார்த்தாள்.
லெதர் எக்ஸ்போர்ட் சிவஞானத்தின் கல்யாணம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் முடிகிறதாம். வெள்ளி விழா கொண்டாடுகிறாராம்.
“வெரி குட்!” என்ற வசு, “அம்மா, இந்த மாசம் நம்ம வீட்டிலும் ஒரு பெரிய ஃபங்க்ஷன்!” என்றாள்.
கோபி அருகே நிற்பதையும் பொருட்படுத்தாமல். “என்னடி விசேஷம்?” என்று கேட்டாள் ராஜலட்சுமி.
“இது எந்த வருஷம்? ஸவன்டி ஃபைவ். இந்த மாசம் தான் உன் வெட்டிங் டே. ஸில்வர் ஜூப்ளி வறது. இன்னும் பன்னிரண்டு நாள் இருக்கு!”
“அதுக்கு என்ன செய்யனும் என்கிறே?”
“சினிமாவில் வருகிற உன்னையும் அப்பாவையும் மணையிலே உட்கார்த்தி வேடிக்கை பார்க்கப் போகிறோம். ஆடப் போறோம். பாடப் போறோம்.”
“மொதல்லே மாப்பிள்ளை ஆபீஸ்லே டிராப் பண்ணிட்டு வர்ற வழியைப் பாரு… ஸில்வராம் ஜூபிலியாம்!” என்றாள் ராஜலட்சுமி.
“வசு சொல்றதிலே என்ன தப்பு?” என்ற கோபி, “வசு, இந்த விஷயத்தில் நான் உன் கட்சி. ஜாம் ஜாம்னு நடத்திடுவோம். என்னுடைய இந்த மாசச் சம்பளத்தில் உன் அம்மாவுக்குப் பட்டுப் புடவை, அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி! ஓகே!”
வசு திரும்பி வரும் போது பெரிய அட்டைப் பெட்டியுடன் வந்தாள்.
“அம்மா இதைப் பாரு.”
“என்னடி?”
“பாரேன்!” என்ற வசு தொடர்ந்து, “அவரோடு நானும் ஆபீஸுக்குள்ளே நுழைஞ்சேன். ரெண்டு பேருமாய்ச் சேர்ந்து இன்விடேஷனை எப்படி எழுதறதுன்னு மண்டையை உடைச்சிட்டோம். கடைசியா ஸிம்பிளா அவரே கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து அனுப்பினார். ஒரு மணி நேரத்திலே ப்ரூஃப் வந்தது. கரெக்ட் பண்ணினோம். அனுப்பினோம். ஆயிரம் காப்பி போதும் இல்லியோ?”
ராஜலட்சுமிக்கு என்ன சொல்லுவது என்று புரியவில்லை. ஓர் அழைப்பிதழை எடுத்துப் பார்த்தாள். படித்தாள்.
இதயத்தில் கசிந்த கண்ணீரை அடக்க முயன்று கொண்டே, “நன்றாகத்தான் பிரிண்ட் பண்ணியிருக்கிறாய் வசு. ஆனா அவசியமில்லாத ஒரு காரியம்,” என்றாள்.
“ஏம்மா இதைப் போய்க் காரியம்னு சொல்றே? காரியம்னாலே அர்த்தம் வேறே அம்மா.”
“நாங்க எதுக்கு வெள்ளிவிழா கொண்டாடணும்?”
“அம்மா, எலியும் பூனையுமா தினம் தினம் அடிச்சுட்டு, கடிச்சுட்டு இருக்கிறவர்களெல்லாமே ஸில்வர் ஜூபிளி, அலுமினிய ஜூபிளின்னு பணத்தை வாரிக் கொட்டி ஊராருக்கு வெளிச்சம் போடறாங்க. நீயும் அப்பாவும் அப்படியா அம்மா?”
“நாங்க பின்னே எப்படீன்னு நீ நினைக்கிறே?”
“லட்சிய தம்பதி. அப்பாவின் நிழல்மேலே உன் கால் பட்டுட்டா அவருக்கு வலிக்கும்னு நினைக்கிறவள் நீ. ராத்திரியிலே ஒரு தடவை இருமினாக் கூட டாக்டருக்கு போன் பண்ண ஓடறவர் அவர். அவருடைய பாடலுக்கு நீ சுருதியா இருக்கே… உன்னோட கீதத்துக்கு அவர் ராகமா இருக்கார்…”
ராஜலட்சுமி பொங்கிவரும் நெஞ்சு நீரை வாய் வார்த்தையால் அடக்கப் பார்த்தாள்.
“வசு, இன்னிக்கு நீ நான் பார்க்கிற வசுவாகவே இல்லை. நீ மாறி இருக்கிறாய்.”
“இல்லை அம்மா.”
“எப்படியோ, நீ மாறினால் சரி. மாப்பிள்ளை சாயங்காலம் வருவார். இல்லியா?”
“நாங்க ரெண்டு நாள்லே மேற்கு மாம்பலம் வீட்டுக்குப் போறோம் அம்மா.”
“அப்படியா!”
“ஆமாம். அப்படி ஒண்ணும் போர்ஷன் சின்னதா இல்லை. வேணும்னா கொஞ்ச நாளைக்கு அப்புறம் வேறே தேடிக்கலாம்… அதிருக்கட்டும்… உன் வெடிங் டே விஷயமாய் எல்லா ஏற்பாடுகளையும் நானும் அவரும் செய்யப் போறோம். நீங்க யாரும் குறுக்கே வரப்படாது. உனக்குச் சாய்ஸே இல்லை. இது சிறியோர்களால் நிச்சயிக்கப்படுகிற பெரியோர்களின் கல்யாணம்! என் கல்யாணத்துக்குத் தயார் பண்ணின அட்ரெஸ் லிஸ்ட் இருக்கு. இப்போதே எழுத ஆரம்பிக்கப் போறேன்.”
“வசு, அப்பா முடியாதுன்னா என்ன செய்வே?”
“பயமுறுத்துவேன்…”
“என்னன்னு?”
“மேற்கு மாம்பலம் வீட்டுக்கு உன்னையும் அழைச்சுட்டுப் போயிடுவேன்னு!”
ராஜலட்சுமி வாய் விட்டுச் சிரித்தாள்.
மாலையில் சிவராமன் வந்ததும் ராஜலட்சுமி வேண்டாவெறுப்பாக நடந்ததையெல்லாம் சொன்னாள்.
“நான்சென்ஸ்…” என்றார் அவர்.
“எனக்கும் அப்படித் தான் படறது. ஆனா வசு எல்லா ஏற்பாடுகளையும் ஆரம்பித்து விட்டாள். மாப்பிள்ளை வேறே அவளுக்குப் பக்க பலமாக நிற்கிறார்.”
“எனக்கு இஷ்டமில்லை.”
“எனக்கு மட்டுமென்ன, இன்னொரு தடவை உங்களோட மணையிலே உட்காரணும்னு ஆசையா, இல்லே, வெறியா..?”
“கான்ஸல் பண்ணி விடறேன்.”
“நானே பண்ணத்தான் பார்த்தேன். ஆனா முடியலே..வசு இப்போ சந்தோஷமா இருக்கிறாள். மாப்பிள்ளையுடன் அவள் இன்னிக்குக் கார்த்தாலே படி ஏறி வந்த போது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.”
“நம்ம கல்யாணத்துக்கு ஸில்வர் ஜூபிளியா… வெட்கக் கேடு!”
“நான் சொல்ல வேண்டிய வார்த்தை..ஆனா இப்போ ஊருக்காக நாம் பாலைக் குடிக்க வேண்டியிருக்கு..”
“இல்லாமப் போனா?”
“நாம் இரண்டு பேரும் இப்ப குடிச்சுட்டிருக்கிறது விஷம்னு வெளியே தெரிஞ்சு விடும்.”
“எப்படி?”
“நான் வசுகிட்டே தலை அசைச்சாச்சு…. அவளும் அம்பது அறுபது. இன்விடேஷன் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிச்சாச்சு.. இனிமே நீங்க முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சால் அவமானம் மட்டுமில்லை, அவதூறும்வரும்.”
“நான் கவலைப்பட வில்லை.”
“நான் படறேனே.”
“ஐ டோண்ட் கேர்.”
“நான் நேத்து ராத்திரி உங்ககிட்டே கெஞ்சிக் கேட்டதை யெல்லாம் அதுக்குள்ளே மறந்து போயிட்டீங்களா?”
“வீட்டுக்குள்ளே நாம் லட்சிய தம்பதியா இருக்கணும்னு நீ ஆசைப் படறே!”
“இல்லே, வீட்டுக்கு வெளியேயும் அப்படித்தான் நினைக்கிறார்கள். இப்ப நீங்க உங்க பிடிவாதத்தை விடலேன்னா வெளியே சிரிக்க ஆரம்பிப்பார்கள். வசு உங்ககிட்டே காரணம் கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?”
சிவராமன் கண்ணில் அனல் தெறிக்க. ராஜலட்சுமியைப் பார்த்தார்.
“ஓகே! ஆனால் ஒரு கண்டிஷன்.”
‘‘என்ன!”
“நீ யாரை மனசார வெறுக்கிறியோ அவளும் வருவாள்.”
ராஜலட்சுமி திகைத்துத் திடுக்கிட்டுச் சிலையாகப் போவாள் என்றுதான் சிவராமன் எதிர்பார்த்தார். ஆனால் அவள் சிரித்தாள்.
“நான் அமிர்தம்மாவை வெறுக்கவில்லையே! நான் இப்போ யாரை மனசார வெறுக்கிறேன்னு, உங்களுக்குத் தெரியலையா?”
“அந்த வெறுப்பு மியூச்சுவல். பரஸ்பரம் ரெண்டு வெறுப்புப் பிண்டங்கள் மாலையும் கழுத்துமாக மணையிலே உட்கார்ந்து ஊராருக்காகப் பல்லைக் காட்டிச் சிரிக்கப் போகிறது. இதுக்கு ஒரு விருந்து. ஒரு கும்மாளம். ஓகே! ஆனா அமிர்தம் வருவாள். அவள் இல்லாம இது நடக்காது.”
“அதான் சொல்லிவிட்டீர்களே?”
“உனக்குத் தான் என் புராணம் பூரா தெரிந்தாகி விட்டதே. இனிமே, பிட்டுப் பிட்டு உடைச்சுச் சொல்றதுக்கு என்ன? அன்னிக்கு நீயும் நானும் மணையிலே உட்கார்ந்திருந்தப்போ அவள் ஏதோ வீட்டில் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து விசித்து விசித்து அழுது கொண்டிருந்தாள்… அந்த நாளுக்கும் ஸில்வர் ஜூபிலி வேண்டாம்? அவள் இங்கேயே நம்ம வீட்டு ஹாலிலேயே உட்கார்ந்து…”
ராஜலட்சுமி இடைமறித்தாள். “ஹாலில் ஒரு மூலையை அவளுக்காக ஒதுக்கி வைக்கிறேன். போதுமா?”
சிவராமன் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடினார். தடுமாறினார். கடைசியில் அவை தெறித்தன.
“சே, வாழ்க்கையில் என்ன விபரீதம் பார்! சின்ன இட மாற்றம் எவ்வளவு பயங்கரமாகப் போய் விட்டது. மணையில் இருக்க வேண்டியவள் மூலையில் இருக்கப் போகிறாள்.”
“நீங்கதான் மூலையையே மணையாக்கி விட்டீர்களே!”
“சரிதான், மூடு வாயை.”
“சரி. ஆனா நீங்க ஒரு மணி நேரத்துக்கு வெளியே போகாதீர்கள்.”
“ஏன்?”
“சௌந்தரிய லஹரி பாடப் போகிறேன். அப்புறம் பாயசம் நைவேத்தியம் செய்வேன். அதை வாங்கிக் கொண்ட பிறகு எங்கே வேணும்னாலும் போங்கள்!”
“சீ, என்ன பித்தலாட்டம்!”
“நீங்கள் உங்களையே அலசிப் பார்த்துக்க இதுதானா நேரம்?”
“உன் பூஜையைச் சொன்னேன்.”
“நான் உங்க நெஞ்சிலே நடக்கிற நாடகத்தைப் பத்திக் கேட்டேன்…”
“ராஜி!” அவர் கத்த வாய் எடுத்தார். அதற்குள் போர்ட்டிகோவில் கார்ச் சத்தம் கேட்டது.
“உஸ்…வசுவும் கோபியும்!” என்றாள் ராஜலட்சுமி,
“வா கோபி, வா, நீயும் இந்தப் பொல்லாத பெண் வசுவும் சேர்ந்து செய்கிற கலாட்டாவைப் பத்தித்தான் பேசிக் கொண்டிருந்தோம்,” என்றார் சிவராமன்.
“உன் அப்பா எடுத்த எடுப்பிலேயே சரின்னுட்டார், வசு!” என்றாள் ராஜலட்சுமி.
“என் அப்பாலைப் பத்தி எனக்குத் தெரியாதா. அம்மா! நீ கிழிச்ச கோட்டை அவர் தாண்ட மாட்டாரே! இன்னிக்கு இந்த ஸிட்டியிலே நீங்கதானே ரியல் மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ்!”
கோபி சிரிக்க, வசுவும் கூடவே சிரித்தாள். அது ஒரு போலி வியாதியாகப் பெரியவர்களையும் தழுவிக் கொண்டது.
அத்தியாயம்-30
விவாக அக்னியைத் தம்பதி உயிரோடு இருக்கும்வரை காப்பாற்றி, தினந்தோறும் ஔபாசனம் செய்து வர வேண்டும். இதை எடுத்துச் செல்லும்போது, மனைவிக்கும் அக்னிக்கும் குறுக்கே யாரும், எதுவும் போகக்கூடாது. – சம்ஸ்காரத்தில் ஒரு நிபந்தனை.
வீடே கல்யாண வீடாகத் திமிலோகப்பட்டது. பூத்துச் சிரிக்கும் மலராக வசு எல்லா இடங்களிலும் சுற்றிச் சுற்றி வந்து, எல்லோரையும் ஒரு முறைக்குப் பன்முறையாக உபசரித்தாள். வருவோரை வரவேற்கவும், செல்வோருக்கு விடை கொடுத்து அனுப்பவும் அவள் முரளியையும் நித்யாவையும் நியமித்திருந்தாள். நாகராஜன் ஹாலில் நிரம்பி வழியும் கூட்டத்துக்குச் சிற்றுண்டிகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

தற்செயலாக வசு, ஒரு ஜன்னல் அருகே அமர்ந்திருந்த சீதாவிடம் வந்தாள். தாய்மையின் கனத்தில் சீதா ஓடி ஆடி வேலை செய்ய முடியாமல் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள். வசுவைக் கண்டதும் அவள் எழுந்திருக்க முயன்றாள்.
“நீ பேசாமல் உட்கார்,” என்றாள் வசு.
“என்னால் ஒரு காசுக்கும் உபயோகமில்லை, வசு. நீ எப்படி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாய்? நான் ஒரு பாத்திரத்தைக் கூட எடுத்து வைக்கலை,” என்றாள் சீதா.
“பேசாமல் இரு. இப்போ நீயும் ஓடறதுன்னு ஆரம்பிச்சா, அப்புறம் என்னவாகும்? அதோ பார் நாகராஜனை! அவர் என்னமாய் பம்பரமாகச் சுற்றுகிறார்!” என்றாள் வசு.
“இந்தப் புடவை உனக்கு எவ்வளவு நன்றாயிருக்கு தெரியுமா? உன் நிறத்துக்கு எப்படி அமைஞ்சிருக்கு!”
“பொறாமையா?” வசு சிவந்தாள்.
“பெருமை!”
“ஆமாம், அவர் எங்கே?”
“கொஞ்சம் முன்னே பின் கட்டுக்குப் போவதைப் பார்த்தேன். வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு கோபி ஓடற கோலத்தைப் பார்த்த போது என் மனசு ரொம்பப் பூரிச்சுப் போச்சு வசு. அவர் நெஞ்சு பூராவும் இந்த விழாவில் என்னமா லயிச்சிருக்கு தெரியுமா?”
“தெரியும்,” என்ற வசு பின்கட்டை நோக்கி ஓடினாள். எல்லோரும் நன்றாக ஆடம்பரமாக உடை உடுத்திக்கொண்டு வந்து போகும் இடத்தில் கோபி மட்டும் ஒரு எட்டு முழு வேட்டியைக் கட்டிக்கொண்டு, ஒரு சாதாரண கதர் ஷர்ட்டை அணிந்தவனாய் அலைந்து கொண்டிருந்தான். நாகராஜன் கூட நல்ல பாண்ட்டும், டெரிலின் ஸ்லாக்குமாய் வந்திருக்கிறான். கோபியைப் போலவே ஒரே கம்பெனியில் பணியாற்றும் முரளி, எவ்வளவு நேர்த்தியாக உடை அணிந்து வந்திருக்கிறான்?
எண்ணங்களை மனத்தினுள் சிதறவிட்டுக்கொண்டே, எதிர்ப்படுகிறவர்களுக்குப் புன்முறுவல் செய்து கொண்டு அவள் பின்கட்டை நோக்கிப் புறப்படுகையில் “வசு!” என்ற ஒரு குரல் – அவளுக்குப் பழகிய குரல் – திடீரெனக் கேட்டது.
வசு பார்த்தாள்.
அமிர்தம்மா!
மகிழ்ச்சியோடு அவள் அமிர்தம் இருக்கும் ஹாலின் மூலைக்குப் பறந்தாள். வழியில் ஒருத்தியின் முழங்காலை மிதித்து விட்டதற்கு ‘ஸாரி’ சொல்லக்கூட மறந்து போனாள். இது வரை அமிர்தம் வந்திருப்பதையோ, அவள் ஹாலில், இரு சுவர்களின் சந்திப்பில் சாய்ந்து உட்கார்ந்திருப்பதையோ, கவனிக்கவேயில்லை.
“வாங்க, வாங்க. இப்பத்தான் உங்களைப் பார்க்கிறேன்..”
“நீ ஒரு இடத்தில் நின்று கவனித்தால் தானே? பர பரவென்று பறந்து கொண்டிருக்கியே!”
“டிபன் காப்பி கொண்டு வரேன்.”
“சாப்பிட்டாச்சு.”
“நீங்க வந்திருப்பதை நித்யாகூடச் சொல்லவில்லை. ஆனால் அவ எப்படிச் சொல்லமுடியும்? வாசலை விட்டு உள்ளே வரக் கூடாதுன்னு கட்டளையிட்டிருக்கிறேனே! நீங்க எப்போ மெட்ராசுக்கு வந்தீங்க?”
“இன்னிக்குத்தான்,” என்ற அமிர்தம்மா, “வசு, இன்னும் கொஞ்சம் கிட்ட வா!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தாள்.
வசு நெருங்கினாள்.
“உட்கார்! ஒரு நிமிஷம் தான்.”
வசுவுக்கு ஆயிரம் வேலைகள் இருந்தபோதிலும், அமிர்தம்மாவின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை.
“என்ன?”
“இதிலே என்னுடைய அன்பளிப்பு இருக்கிறது. இதை அப்புறமா கொடுத்துவிடு..”
“ஏன்… நீங்களே, அதோ மணையிலே இருக்கிற அம்மா-அப்பா பக்கத்திலே போய்க் கொடுக்கலாமே. அதுதானே நன்றாயிருக்கும்?”
“நான் ஏன் சொல்றேன்னு உனக்குப் புரியாது வசு. தயவு செய்து நீயே உன் கையால் கொடுத்துவிடு. அதுவும் சாவகாசமாக.”
“சரி,” என்ற வசு அமிர்தம்மா கொடுத்த அந்தச் சிறு நகைப் பெட்டியை வாங்கிக்கொண்டு ஓடினாள். கோபியை அவள் உடனடியாகப் பார்த்தாக வேண்டும்.
பின்கட்டில் கோபியைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இரண்டு மூன்று சமையற்காரர்களுக்கு நடுவே நின்று அவன் எதையோ சுவைத்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் உடம்பில் அந்தச் சாதாரண கதர் சட்டை கூட இல்லை. வேட்டியும் பனியனுமாகச் சிப்பந்திகளின் நடுவே ஒரு சிப்பந்தி போலக் காட்சி அளித்தான்.
வசு அவன் அருகே போனாள்.
“இன்னும் ஒரு நாலு பழம் புழிஞ்சு போடுப்பா… கோஸ் மல்லி சப்னு இருக்கு!” என்று கோபி அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“நன்றாயிருக்கு, நீங்களும், உங்க வேஷமும்!” என்றாள் வசு.
அவளுடைய குரலின் கடுமையை உணர்ந்த கோபி சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீர்கள், அங்கே எவ்வளவு பேர் இருக்கிறார்கள்… நீங்கள் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை… இங்கே சமையற்கூடத்தில் நின்னுட்டு உப்பு போதாது, புளிப்பு போதாதுன்னு லெக்ச்சர் பண்ணிக் கொண்டு நிற்கிறீர்கள்.”
“இங்கே யாரும் பொறுப்பா நிற்கலைன்னா, கலத்தில் சாப்பாடு விழற போது அது சொத்தை, இது சொள்ளைன்னு சாப்பிடறவர்கள் சொல்லுவார்கள் வசு.”
“அதுக்காக? நீங்களும் பரிசாரகனா இங்கே நிற்கணுமா! நீங்கள் என்ன சரக்கு மாஸ்டரா?”
“நான் ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போயிருக்காவிட்டால் ஒரு வேளை இந்த வேலைக்குத்தான் வந்திருப்பேனோ என்னவோ!”
“சரி சரி. மொதல்லே டிரெஸ்ஸை மாற்றுங்கள். உங்கள் ஜான வாச ஸூட் எங்கே போச்சு? கல்யாண ஸூட் என்னாச்சு? அதைப் போட்டுத் தொலைச்சுட்டிருக்கக் கூடாதா?”
வசு ‘சொல்லிவிட்டுத் திரும்பினாள். கையிலிருக்கும் நகைப் பெட்டி ஒரு பெரிய சுமையாகத் தோன்றியது. அதை மாடிக்குச் சென்று அலமாரியில் வைத்துவிட்டு வந்தாள்.
உள்ளுக்குப் பொருமியபடி, சிறிதும் மகிழ்ச்சியில்லாமல் ஹாலில் ஓர் இரட்டை சோபாவில் உட்கார்ந்திருந்த சிவராமனும் ராஜலட்சுமியும் களைத்துப் போனார்கள்.
யாரோ ஒரு நண்பர் தம்பதி சகிதமாக நெருங்கவே, நறநறப்பைப் புன்முறுவலாக மாற்றிக் கொண்டார்.
“நாங்க வறோம், சிவராமன்! சாப்பாடு அற்புதமா இருந்தது.”
“தாங்க் யூ!”
அவர்கள் போனதும், ராஜலட்சுமி கழுத்தில் இருக்கும் ரோஜா மாலையை எடுத்துச் சோபாவிலேயே வைத்துவிட்டு, நித்யாவை அழைத்தாள். நித்யா, வசுவைக் கூப்பிட்டாள். ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த பூத்தட்டுகளை நித்யாவும் வசுவும் சுமந்து வர, ராஜலட்சுமி பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்றாள்.
இருபது அல்லது இருபத்தைந்து பெண்களும் வயது வந்த பெண்களும் ராஜலட்சுமி தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் எழுந்து நின்றார்கள். வசு பூத்தட்டை நீட்ட ராஜலட்சுமி அதை வாங்கி ஒவ்வொருவருக்குமாக வழங்கினாள்.
அமிர்தத்துக்கு வலப்புறமாக இருந்த பெண்ணுக்குக் கொடுத்தாகிவிட்டது. நித்யா கையில் இன்னும் இரண்டே தட்டுகள் எஞ்சியிருந்தன. ஒன்று அமிர்தம்மாவுக்கு. கடைசித் தட்டு, அவளுக்கு இடது பக்கமாக இருக்கும் பெண்ணுக்கு.
ராஜலட்சுமி, வசு கொடுத்த தட்டை அமிர்தம்மாவுக்குக் கொடுக்காமல் இடப்புறமாக இருக்கிறவள் பக்கமாக நீட்டினாள்.
கவனப்பிசகாக அம்மா தவறு செய்துவிட்டாள், அதை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு பதறலாக வசுவின் மனத்துள் எழுந்தது.
ஒன்றையும் கவனிக்காதது போல திரும்பி நடந்த தாயாரிடம் வசு, “அம்மா, அமிர்தம்மாவை மறந்து விட்டாயே?” என்று கிசுகிசுத்தாள்.
“இதோ வரேன், அப்பா கூப்பிடறார்,” என்று ராஜலட்சுமி சிவராமன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.
வசு, நித்யாவிடமிருந்து தட்டை வாங்கி அமிர்தம்மாவிடம் நீட்டினாள். அவளும் புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டு, “நல்ல குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு தீர்க்காயுசாக இருக்க வேண்டும், வசு!” என்றாள்.
ராஜலட்சுமி கணவரைப் பார்த்துச் சிரித்தாள்.
பழிவாங்கிவிட்டோம் என்கிற கர்வம் தெரிந்தது அதில், உதடுகள் அசையாமல் கறுவினார் சிவராமன்.
அமிர்தம்மாவை மூலையில் உட்காரவைத்து அவள் அவமானப் படுத்துவாள் என்று சவால் விட்டு ராஜலட்சுமி அதை நிறைவேற்றியும் விட்டாள்.
கணவனும் மனைவியும் வாய்விட்டு ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் உள்ளங்கள் மோதிக் கொண்டன.
“கவனித்தீர்களா?”
“அதைவிட வேறு என்ன வேலை?”
“எல்லாச் சுமங்கலிகளுக்கும் கொடுத்தேனே…”
“அவளை நீ உதாசீனப்படுத்தினாய். ஆனால் வசு அவளுக்குக் கொடுத்துவிட்டாள்.”
“பாவம் வசு. நெற்றியிலே குங்குமமும், தலையிலே பூவும் வைச்சுட்டிருக்கிறவர்களெல்லாம் சுமங்கலிகள்னு நினைக்கிறா.”
“நீ இவ்வளவு மட்டம்னு நான் நினைக்கலை.”
“நீங்கள் வாழ்வு இல்லாதவர்களுக்காக உயிரையே விடுகிற உயர்ந்த லட்சியவாதிங்கற உண்மை இதுவரை எனக்கும் தெரியாம இருந்தது.”
“எல்லாம் என் தப்பு! முதுகெலும்பு ஓடிஞ்சு போய், ஒரு நாயை மணையில் உட்கார்த்தி வைச்சேன். அதுக்கு இன்னிக்கு அனுபவிக்கிறேன்!”
“மூலை எது மணை எதுங்கிற ஞானமே இல்லாதவர்களுக்கு அனுபவம்னு ஒண்ணு இருக்க முடியுமா?”
கோபி அவர்களிடம் நெருங்கி வந்தான். “மாமா! அத்தை! நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிட வரவில்லை.”
“இதோ வருகிறோம், கோபி,” என்றார் சிவராமன், போலிப் புன்னகையுடன்.
“நீங்கள் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டாள் ராஜலட்சுமி.
– தொடரும்…
– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.
– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.