ஞானி சூஸ்திரவான் சூரன் கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 413
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
3. மூன்று ரசிகர்கள் கதை | 4. ஞானி சூஸ்திரவான் சூரன் கதை | 5. மதன சுந்தரி கதை
விக்கிரமாதித்தன் மறுபடியும் வேதாளத்தைப் பிடித்துக்கொண்டு வரும்போது அது பின்வரும் கதையைச் சொல்லியது:
உஜ்ஜயினி நகரத்தில் ஹரிஸ்வாமி என்ற அந்தண சிரேஷ்டர் ஒருவர் இருந்தார். அவர் புண்ணியசேனன் என்னும் அரசனை அண்டிப் பிழைத்து வந்தார். ஹரிஸ்வாமிக்கு ஒரு மனைவியும், அவரைப் போலவே உயர்ந்த குணங் களுடைய தேவஸ்வாமி என்ற ஒரு மகனும் இருந்தார்கள். ஈடு இணையற்ற சோமப்பிரபை என்ற மகள் ஒருத்தியும் அவருக்குண்டு. அவளுக்கு கல்யாண வயது வந்தது. தன் அழகில் பெருமிதம் கொண்ட அவள், தன் தாயார் மூலமாக, “வீரம், ஞானம், விஞ் ஞானம் ஆகிய மூன்றிலே ஏதாவது ஒன்றில் வல்லவனுக்கே என்னை மணம் செய்து கொடுக்க வேண்டும். என் வாழ்க்கையிலே உங்களுக்கு அக்கறையிருந்தால் என்னை வேறு யாருக்கும் மணம் செய்து கொடுக்கக் கூடாது” என்ற செய்தியைத் தன் தந்தைக்கு அறிவித்தாள்.
இதைக் கேட்ட ஹரிஸ்வாமிக்கு ஒரே கவலையாகப் போய் விட்டது. இம்மூன்று துறைகளில் ஏதாவது ஒன்றில் சமர்த்தனான மாப்பிள்ளையை எப்படித் தேடிப்பிடிப்பது என்ற கவலை அவரை வாட்டியது. அவர் இவ்விதம் இருக்கும் சமயம், புண்ணியசேன மன்னன் தன் நாட்டின் மீது படையெடுத்து வந்திருந்த தக்ஷிண தேசத்து அரசனிடம் ஹரிஸ்வாமியைத் தூதுவராக அனுப்பி வைத்தான். அவரும் அவ்விடம் சென்று தாம் வந்த காரியத்தை முடித்துக் கொண்டார். அப்போது அவர் குமாரியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த சூஸ்திரவான் என்கிற பிராமண இளைஞன் ஒருவன் ஹரிஸ்வாமியை அணுகி அவர் மகளைத் தனக்கு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டான். உடனே அவர் அந்த இளைஞனை நோக்கி, “வீரம், ஞானம், விஞ்ஞானம் ஆகிய மூன்றிலே ஏதாவது ஒன்றைப் பூர்ணமாக அறிந்தவனையே என் மகள் மணந்து கொள்வாள். உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்.
சூஸ்திரவான் தனக்கு விஞ்ஞானத்தில் நல்ல பயிற்சி இருப்பதாகத் தெரிவி த்தவுடன் ஹரிஸ்வாமியும், “அப்படியானால் அதை எனக்குக் காண்பி” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் சாமர்த்தியத்தால் ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஒரு விமானத்தை தயார் செய்தான். அந்த மாய விமானத்தில் ஹரிஸ்வாமியை ஏற்றிக் கொண்டு உயரக் கிளம்பி ஒரு கணத்தில் அவருக்கு இந்திரலோகம் முதலிய எல்லா உலகங்களையும் காட்டி விட்டுத் திரும்பவும் தக்ஷிண தேசத்து அரசன் பாசறைக்கே கொணர்ந்து விட்டான். இதனால் திருப்தி அடைந்த ஹரிஸ்வாமியும் அந்த இளைஞனுக்குத் தம் மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பதாக வாக்களித்து கல்யாணத்துக்கு அன்றைத் தினத்தி லிருந்து ஏழாம் நாள் என்று முகூர்த்தமும் நிச்சயித்து விட்டார்.
இங்கே இவ்விதம் இருக்க உஜ்ஜயினியிலே ஹரிஸ்வாமியின் மகனான தேவஸ்வாமியைச் சூரன் என்கிற மற்றொருவன் அணுகி அவன் சகோதரியைத் தனக்கு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். தேவஸ்வாமியும் அதே போல, ‘அவளையடைய விரும்புகிறவன் வீரம், ஞானம், விஞ்ஞானம் ஆகிய மூன்றிலே ஒன்றில் சமர்த்தனாக இருக்க வேண்டும்” என்பதைத் தெரிவித்தான். உடனே அந்தப் பிராமணன் தான் ஒரு வீரன் என்று சொல்லி, வில்வித்தை, வாள் வித்தை, கத்திச் சண்டை, குத்துச் சண்டை முதலிய பலவற்றிலும் தனக்கு உள்ள திறமையை எடுத்துக் காட்டினான். இதைக் கண்ட தேவஸ்வாமியும் தங்கையை அவனுக்கு மணம் முடிக்க ஒப்புக் கொண்டான். ஜோஸ்யர்களைக் கொண்டு பார்த்த போது, அவன் தகப்பன் விஞ்ஞானிக்காக வாக்களித்திருந்த அதே ஏழாம் நாள் முகூர்த்தம்தான் கிடைத்தது.
அதே சமயத்தில் ஞானி என்கிற மூன்றாமவன் ஒருவன் பெண்ணின் தாயாரைத் தனிமையில் சந்தித்து பெண்ணைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டான். அவளும் தன் குமாரத்தி, வீரம், ஞானம், விஞ்ஞானம் ஆகியவற்றுள் ஒன்றில் தேர்ந்தவனையே மணந்து கொள்ளுவாள் என்பதை எடுத்துக் கூறினாள். அவனும் “அம்மா, எனக்கு ஞானம் இருக்கிறது” என்றான். அன்றி, அவன் நடந்தது. நடப்பது. நடக்கப்போவது ஆகியவற்றைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்குத் தக்க விடையளித்தான். அதனால் திருப்தி அடைந்த தாயாரும் அதே ஏழாம் நாள் தன் குமாரியை அவனுக்குப் பாணிக்கிரஹணம் செய்து கொடுப்பதாக உறுதி கூறினாள்.
மறுநாள் ஹரிஸ்வாமி வீடு திரும்பினார். தம் மனைவியிடத்திலும், மகனிடத்திலும் குமாரத்தியின் விவாக விஷயமாகத் தாம் செய்திருந்த ஏற்பாட்டை ஹரிஸ்வாமி எடுத்துச் சொன்னார். உடனே அவர்களும் தாங்கள் இருவரும் தனித்தனியே கொடுத்திருக்கும் வாக்கைப் பற்றித் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட அவருக்கு முன்னிலும் அதிகமான கவலை வந்து விட்டது. மூன்று பேரை அழைத்திருக்கிறதே அவர்களில் யாருக்குப் பெண்ணை மணம் செய்து கொடுப்பது என்பதை அவரால் முடிவு செய்ய முடியவில்லை.
முகூர்த்த நாள் வந்தது. வரனாக வரிக்கப்பட்டிருந்த வீரன். ஞானி, விஞ்ஞானி ஆகிய மூவரும் ஹரிஸ்வாமியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மணப்பெண்ணான சோமப்பிரபையைக் காணவில்லை. வீட்டிலிருந்து, அவள் திடீரென்று மாயமாக மறைந்து விட்டாள். எங்கெங்கோ தேடியும் அவள் கிடைக்கவில்லை.
உடனே ஹரிஸ்வாமி ஞானியை அழைத்து, “ஐயா, என் மகள் இப்போது எங்கிருக்கிறாள் என்பதைத் தயவு செய்து சீக்கிரமாக அறிந்து சொல்ல வேண்டும்” என்று ஆவலுடன் வேண்டிக் கொண்டார். ஞானியும் உடனே “தூம்ரசிகன் என்னும் ராக்ஷஸன் விந்திய மலைக் காட்டில் உள்ள தன் இருப்பிடத்திற்கு அவளைத் தூக்கிப் போயிருக்கிறான்” என்று அறிந்து சொன்னான்.
இதைக் கேட்ட ஹரிஸ்வாமி, பெரிதும் கலவரமடைந்து “ஐயோ, அவளை எப்படித் திரும்ப அடைவது? அவளை எவ்வி தம் மணம் செய்து கொடுப்பது?” என்று அழுது புலம்பினான். இதைக் கண்ட விஞ்ஞானி, “கவலைப்படாதீர்கள். அவள் இருக்குமிட மென்று ஞானி குறிப்பிட்ட பிரதேசத்துக்கு உங்களை ஒரு கணத்திலே அழைத்துச் செல்லுகிறேன்” என்று கூறித் தைரியம் ஊட்டினான்.
உடனே, அவன் ஆகாயத்தில் பறந்து செல்லக்கூடிய மாய விமானம் ஒன்றைத் தயாரித்து அதிலே ஏராளமான ஆயுதங்களையும் நிரப்பினான். பிறகு ஹரிஸ்வாமி, வீரன், ஞானி ஆகியவர்களையும் ஏற்றிக் கொண்டு விமானத்தைச் செலுத்தி ராக்ஷஸன் வசித்து வந்த விந்திய மலைக் காட்டை அடைந்தான்.
இவர்களைக் கண்ட பயங்கரமான கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வந்தான். ராக்ஷஸன் கோபம் கொண்டு அவ்விதம் வரும் ராக்ஷஸனை எதிர்த்து வீரன் சண்டை போட்டான். இருவரும் பலவிதமான ஆயுதங்களாலும் போர் புரிந்தார்கள். சிறிது நேரத்தில் நிரம்பவும் சாகஸமாக அர்த்த சஸ்திர பாணத்தை வீரன் எய்து ராக்ஷஸன் தலையைக் கொய்து விட்டான். சோமப்பிரபையை மீட்டுக்கொண்டு எல்லோருமாக அதே மாய விமானத்தில் உஜ்ஜயினி திரும்பினார்கள்.
எல்லோரும் ஹரிஸ்வாமியின் வீடு வந்து சேர்ந்த பிறகும் விவாகம் நடை பெறவில்லை. முகூர்த்த வேளையும் கடந்து விட்டது. வீரன், ஞானி, விஞ்ஞானி ஆகிய மூவருக்கும் இடையே பெருத்த விவாதம் ஏற்பட்டு விட்டது. “ராக்ஷஸன் அவளை மறைத்து வைத்திருந்த இடத்தை நான் கண்டுபிடித்து சொல்லாவிட்டால் அவளை எப்படித் திரும்ப அழைத்து வந்திருக்க முடியும்? ஆகவே அவளை எனக்கே மணம் செய்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டான் ஞானி.
“நான் இந்த மாய விமானத்தைத் தயாரித்து வான வீதியில் பறந்து உங்களை அழைத்துப் போய் திரும்ப அழைத்து வரவில்லையா? இந்த விமானம் இல்லாவிட்டால் உங்களால் எப்படி விந்தியமலைக்காட்டை அடைந்து சுப முகூர்த்தத்துக்குள்ளே திரும்பி வந்திருக்க முடியும்? ஆகவே அவளை எனக்குத்தான் மணம் செய்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டான் விஞ்ஞானியான சூஸ்திரவான்.
“நீங்கள் பலபேர் காரியங்கள் செய்தும், நான் ராக்ஷஸனுடன் சண்டை போட்டு அவனை கொன்றிருக்காவிட்டால் உங்களால் எப்படி அவளை திரும்ப அடைந்திருக்க முடியும்? ஆகவே அவள் எனக்கே உரியவள்” என்றான் வீரனான சூரன்.
இப்படி அவர்களுக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்த போது ஹரிஸ்வாமி என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்று விட்டான்.
இவ்விதம் கதையைக் கூறிய வேதாளம், “சொல்லுமையா ராஜனே! இப்போது நீரே சொல்லும்! அந்தப் பெண்ணை யாருக்கு மணம் செய்விக்க வேண்டுமென்பதைத் தெரிந்து கொண்டு சொல்லாமல் இருந்தால் உம் தலை வெடித்து விடும்!” என்றது.
இதைக் கேட்ட விக்கிரமாதித்தனும் தன் மௌனத்தைக் கலைத்துப் பதில் சொன்னான்.
“தன் உயிரையும் பொருட்படுத்தாமல், ராக்ஷஸனுடன் சண்டை போட்டுத் தோள் வலிமையால் அவளையடைந்த வீரனுக்கே அவளை மணம் செய்வித்தல் வேண்டும்! வீரத்திற்கே காதல் உரியது! ஞானியும், விஞ்ஞானியும் வீரனுக்கு உதவி புரிய வேண்டியவர்கள் என்றே கடவுளால் படைக்கப்பட்டவர்கள். கணக்கர்களும், வினைஞர்களும் பிறருக்கு அடங்கி உதவியாளர்களாகத்தானே இருக்கிறார்கள்?”
அதைக் கேட்ட வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக் கொண்டது.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.