ஞானம்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பீடமாக அமைந்திருந்த கருங் கல்லின்மீது மோதித் தேங்காய் உடைந்தது…
ஈசனின் விளையாட்டு நேரம். சிலை ஈசனாகியது.
இளநீர் பன்னீர் தெளித்தது. உச்சிக்குடுமிக்குள் ஒரு கண் பிதுங்க, வெடித்து அகன்ற ஓட்டினை ஒட்டிய தேங்காய்த்தசை வணங்கியது. அந்த ஈசனின் பாதங்களுக்குச் சமீபமாக இருந்த மலரொன்று, அந்தக் காட்சியைப் பார்த்துக் குஞ்சிரிப்பினை உதிர்த்தது.
“மலரே, ஏன் சிரிக்கின்றாய்?” என ஈசன் கேட்டார்.
“அஞ்சலிக்கு ஏற்றமிருதுப் பொருளாக நானே தங்களாற் படைக்கப் பட்டிருக்க, இந்தத் தேங்காயைக் கொண்டு வந்து உடைக்கின்றார்களே! அறியாமைப் பார்த்துச் சிரிக்கின்றேன்” என்று மலர் பெருமையுடன் சொல்லிற்று.
‘ஞானம், அஞ்ஞானம்; அஞ்ஞானம், ஞானம்’ என்று உன்மத்தமாக உச்சரித்துக்கொண்டு, ஈசன் சிரிக்கலானார்.
சிரிப்பினை நிறுத்தி, “மலரே! நீ இறை வணக்கத்திற்காகவா படைக்கப்பட்டாய்? அப்படியானால், அதனை விலைமகளின் ஈர்வழியும் அழுக்குக் கூந்தலிலேகூட உன்னைச் சூட்டி ஏன் மனிதன் மகிழவேண்டும்?”
மலரின் கர்வம் பங்கமுற்றது. ஈனக் குரலிலே, “பக்தர்கள் என்னைத் தானே விரும்பி அஞ்சலிக்குக் கொண்டு வருகின்றார்கள்” என்றது.
“உன்னைப் பணங் கொடுக்காமல் எங்கும் மலிவாகப் பெறலாம் என்பதனால் கொண்டு வந்து இங்கே கொட்டுகின்றார்கள்… மனிதன் எதனை வருத்தஞ் சிறிதுமின்றி இழக்கத் தயாராக இருக்கின்றானோ, அதனால் அஞ்சலி செய்து என்னைத் திருப்திப்படுத்த முயலுகின்றான். அவ்வளவுதான்.”
மலர் கண்ணீர் உகுத்துக் கொண்டே “பத்துச் சதப் பெறுமானம் தேங்காயை என்னிலும் பார்க்க உயர்ந்த அஞ்சலிப் பொருளாக்கி விட்டது. ஈசனும் விலையை வைத்துத் தான் அஞ்சலிப் பொருள்களுக்கு மதிப்புக் கொடுக்கின்றாரா?” என்று கேட்டது. அதன் பட்டுக் கன்னங்கள் சோகத்தில் வாடின.
“அப்படியே வைத்துக்கொள்.”
மலர் வாய்விட்டுக் குலுங்கி அழுதது.
மலரின் அழுகுரல் ஈசனுடைய மனதைத் துழாவியது.
“நீ ஏன் என் முன்னால் உடைக்கப்படுகின்றாய்?” என்று தேங்காயைக் கேட்டார்.
“என்னை இங்கு உடைக்காவிட்டால், வீட்டிலே உடைத்து உணவுப் பதார்த்தங்களிலே சேர்ப்பார்கள். இல்லாவிட்டால், செக்கிலே போட்டு நெய் எடுப்பார்கள். எப்படியோ, எங்கேயோ உடைக்கப்படவேண்டியது எனது ஊழ்”.
“அஞ்ஞானம்-ஞானம்; ஞானம்- அஞ்ஞானம்” என்று ஈசன் சிரித்தார்.
தாம் அதிக நேரம் விளையாடி விட்டதை ஈசன் உணரலானார்.
“மனிதன் பைத்தியக்காரத்தனமாக எதையாவது செய்து கொண்டே யிருப்பான். அவற்றிற்கு அர்த்தங் கற்பித்துக்கொள்ளும் பித்தன் நானே. என் முன்னிலையில், மனிதன் தேங்காயை உடைக்கும் பொழுது, அவன் தனது ஆணவத்தை உடைக்கின்றான் என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன்.”
தேங்காய் பெருமிதங் கொண்டது.
“மலரை மானிடன் எனக்குச் சமர்ப்பிக்கும் பொழுது, அவன் தனது உள்ளத்தை என்னிடம் அர்ப்பணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வேன்.”
மலர் மகிழ்வெய்தியது.
“மனிதனுடைய அபிநயங்களுக்குத்தான் நான் அர்த்தம் கற்பிக்கின்றேன். ஆனால், மனிதனோ என்னைப் பற்றிய தத்துவ விசாரத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகளைக் கழித்து விட்டான்.”
தேங்காயும், மலரும் ஈசனை வணங்கின.
ஈசனைக் காணவில்லை.
சிலை சிலையாகவே இருந்தது.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.