ஜொள்ளு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 9,833 
 
 

சாம்பசிவத்திற்கு வயது ஐம்பது.

மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு திருமண வயதில் சொக்க வைக்கும் அழகில் இரண்டு பெண்கள். இரட்டையர்கள் என்பதால் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள்.

மயிலாப்பூரில் மனைவி, மகள்களுடன் அமைதியாக நேர்கோட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர். எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தாலும், கல்லூரியில் படிக்கும் அவரது அழகிய மகள்களை இளைஞர்கள் பலர் சுற்றி சுற்றி வரத் தொடங்கினார்கள். வயசு!

பெண்களைக் காபந்து பண்ணி ஒரு நல்ல இடத்தில் அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கும்வரை அவருக்கு மிகப்பெரிய சவால்தான். அதனால் சாம்பசிவம் தன் பெண்களை மிகவும் பொறுப்புடன் கவனித்துக் கொண்டார். பெரும்பாலான வாலிபர்களின் மோட்டார் பைக்குகளும்; ஸ்கூட்டர்களும் அவர் வீட்டின் முன்புதான் ரிப்பேராகும் அல்லது டயர் பங்ஞ்சராகும். அப்பாவியாக அவ்விதம் ‘பாவ்லா’ காட்டுவார்கள். அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வாலிபர்கள் அவர் வீட்டையே ஏக்கத்துடன் பார்த்தபடி கண் விடுவார்கள். இரட்டையர்களில் ஒருத்தி கிடைத்தாலும் சந்தோஷம்தான் என்று எண்ணினார்கள்.

சாம்பசிவத்திற்கு இது புரியாதா என்ன?

அதனால் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வீட்டுச் சுவர்களையும், மெயின் கேட்டையும் எட்டு அடி உயரத்திற்கு நன்றாக எழுப்பிவிட்டார். அதன் பிறகுதான் கொஞ்சம் நிம்மதியடைந்தார். அப்படி இருப்பினும் அவர் வீட்டுக்கு வெளியே வாலிபர்கள் தவம் கிடந்தார்கள்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை…

காலை பத்துமணி வாக்கில் சாம்பசிவம் ஒரு கூடையை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் வெஜிடபிள் மார்க்கெட்டுக்கு சென்றார்.

ஒரு இளம் வாலிபன் அவரைப் பின் தொடர்ந்து வந்து ஒட்டியபடி நின்றான். சாம்பசிவத்திற்கு அவனைப் பார்த்தவுடனே புரிந்துவிட்டது. பலமுறை அவன் தன் மோட்டார் பைக்கை அவர் வீட்டின்முன் நிறுத்தி அவரின் பெண்களுக்காக வீட்டின் உள்ளே திருட்டுத்தனமாக நோட்டம் விட்டவன்தான்.

அவன் சாம்பசிவத்தைப் பார்த்து புன்னகைத்தான். ஆனால் அவர் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

எனினும் அவன் மனம் தளராமல் அவரை நெருங்கி நின்றுகொண்டு,

“குட் மார்னிங் அங்கிள்… “ என்றான்.

சாம்பசிவம் கடுப்புடன், “ஐம் நாட் யுவர் அங்கிள்” என்றார்.

“ஓ அப்படியா சரி. சார் டைம் என்னாச்சு?”

“உனக்கு நான் சொல்ல முடியாது.”

“ஏன் சார், டைம் சொல்றதுனால உங்களுக்கு என்ன நஷ்டமாகப் போகுது?”

“ஆமா உனக்கு டைம் சொன்னா எனக்கு நஷ்டம்தான் ஆகும்”

“புரியல… அது எப்படி நஷ்டம் ஆகும், சொல்லுங்க..”

“இதப்பாரு நான் உனக்கு டைம் சொன்னா, நீ எனக்கு நன்றி சொல்லுவ… ஒருவேளை நாளைக்கும் நீ என்னிடம் டைம் கேட்கலாம்.”

“ஆமா அதுக்கு வாய்ப்பிருக்கு.”

“இரண்டு மூணு தடவையோ அல்லது அதற்கு மேலேயோ நாம் சந்திக்கலாம்… அப்புறம் நீ என்னோட ஊரு, பேரு அட்ரஸ் எல்லாம் கேட்கலாம்.”

“ஆமா அதுக்கும் வாய்ப்பிருக்கு சார்.”

“ஒருநாள் திடீர்ன்னு நீ என் வீட்டுக்கு வரலாம்… சும்மா இந்தப் பக்கம் வந்தேன், அப்படியே உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு நினைச்சேன்னு சொல்லலாம்…”

“…………………”

“நான் உன்னை உபசரிக்க காபியோ, டீயோ தரலாம். என்னோட உபசரிப்பைப் பாத்துட்டு நீ மறுபடியும் என் வீட்டுக்கு வர முயற்சி பண்ணலாம். இந்தமுறை காபியை பாராட்டி யார் இதைப் போட்டதுன்னு நீ கேட்பே!”

“ஆமா சார்… நான் கேட்கலாம்.”

“அப்புறம் நான் அது என் பொண்ணு போட்ட காபின்னு சொல்வேன். தொடர்ந்து நான் என் அழகான பெண்ணை உனக்கு அறிமுகப் படுத்துவேன். நீ அவளைப் பார்த்து உடனே ஜொள்ளு விடுவே…”

இளைஞன் அகலமாகப் புன்னகைத்தான்.

“அப்ப இருந்து நீ என் பெண்ணை அடிக்கடி பார்க்க முயற்சிப்ப. அவ மொபைல் நம்பரை கேட்டு வாங்கிப்ப. அப்புறம் ஒருநாள் எங்க எல்லாரையும் ஒரு நல்ல தமிழ் படத்துக்கு கூட்டிட்டுப் போவ. இன்டர்வெல்ல பாப்கார்ன் வாங்கிக் கொடுப்ப, கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கச் சொல்லுவ. ரொம்ப நல்ல பையன்னு என் பொண்டாட்டி உனக்கு அப்பாவியா சர்டிபிகேட் கொடுப்பா…”

இளைஞன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“அம்மாவே சர்டிபிகேட் கொடுத்துட்டாளேன்னு என் பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிக்கலாம். நீ அடிக்கடி வீட்டுக்கு வருவே. அவள் உனக்காகக் காத்திருக்கத் தொடங்கலாம். தொடர்ந்து அவளைச் சந்தித்த பிறகு நீ அவளை லவ் பண்ணி உன் காதலை அவகிட்ட சொல்லுவ. அப்புறம் ரெண்டு பேரும் டீப்பா லவ் பண்ணுவீங்க. ரெண்டு பேரும் அடிக்கடி வாட்ஸ் ஆப்ல கொஞ்சுவீங்க. அதைத் தொடர்ந்து என் வயத்ல புளியைக் கரைப்பீங்க…”

இளைஞன் மீண்டும் புன்னகைத்தான்.

“ஒருநாள் நீயும் அவளும் என்கிட்ட வந்து உங்க காதலைப் பத்தி சொல்லி கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதம் கேப்பீங்க…”

“ஆமா சார், அது நேர்மையான அப்ரோச்தானே? ஆனா இதுக்கும் நான் டைம் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?”

சாம்பசிவம் கோபமடைந்தார்.

“ங்கொய்யால ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கு எல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாதுடா…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *