கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 1,914 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் பதினைந்து நிமிஷங்களில் புகையிரதம் மணிகண்டானை அடைந்துவிடும்.

ஜன்னலுக்கு வெளியே நோக்கினான் இராமலிங்கம். இலைகளையெல்லாம் உதிர்த்து மொட்டையாய் நின்ற மரங்கள் தளிர் தள்ளி நின்றன. இளவேனில் பிறந்துவிட்டது. இயற்கை புதிய வாழ்க்கை தொடங்குகின்றது. புதிய உலகைப் படைக்கின்றது.

இராமலிங்கம் இன்பமாக நெட்டுயிர்த்தான், படியிலிருந்த அட்டைப் பெட்டியை தடவிக் கொண்டான். நேர்மையான உடலுழைப்பில் கிடைத்த வெகுமதியல்லவா அது! சிறையென்ற உலையிலே உருக்கிப் படைத்து விட்ட புதிய பிம்பமல்லவா இன்றைய இராமலிங்கம். அந் தத்தனிமையில் எத்தனை துடிப்பு! சிறை சுவர்களோடு அவன் சொந்தம் கொண்டாடிய நாட்களில் தான் தங்கத்தை எவ்வளவு என்றுணர்ந்தான். அவளுக்காக ஒவ்வொரு வினாடியும் ஏங்கினான். அவனை அவள் வெறுக்காதிருந்தால் போதும்!

தனக்கு அந்தத் திருட்டுக் குணம் இனி என்றுமே வராதென்றுதான் திடமாக நம்பினான். இந்த ஞானோதயம் நீடிக்கும் என்பது என்ன நிச்சயம்? பணத்தோடு விளையாடினால் தானே அந்தச் சோதனை ஏற்படும்? அதற்கு இராமலிங்கம் தான் சந்தர்ப்பமே அளிக்கப் போவதில்லையே!

“ஐயா இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது?” எதிரெயிருந்த மனிதரை நுாறு தரம் மணி கேட்டுவிட்டான். அவரும் எரிச்சலைக் கஷ்டத்தோடு அடக்கிக் கொண்டு பதிலளித்தார். அவனது துடிப்பு அவருக்கென்ன தெரியும்? “இன்னும் மூன்று நிமிஷம்தான். அவசரமாகப் போகவேண்டுமோ?” “ஆமாம்….. ஆமாம் அவசரம் தான்” ஏழு வருஷத்திய அவசரமல்லவா அது? தங்கத்திற்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் பெயரைப்போலவே பத்தரைமாற்றுத் தங்கம் தான்! அவனைப்பற்றிய உண்மையை அறிந்திருந்தால் அவனைத் திரும்பியும் பார்த்திருக்கமாட்டாள். அவன் கைதாகும் காரணத்தை அறிந்ததும் தங்கம் மலைத்துப் போனாள். ஆழ்ந்த துயரம் அவள் முகத்தில் பரந்தது. வாழ்க்கையின் தொடர்பு அறுந்து கற்சுவரும் கம்பிக் கதவும் அவனுக்கு உலகமானபோது, நினைவிலும் கனவிலும் கற்பனையிலும் தங்கத்தின் துயர் படிந்த முகமே அவனை விரட்டி விரட்டி வந்தது. அவளுக்குகந்தவனாகத் தான் ஆகிவிட்டதான பெருமிதம் இப்போது.

உயிரிலும் மேலான அந்த அட்டைப் பெட்டியைத், தன் நேர்மையின் திறத்தைத் தங்கத்திற்கு நிறுவப்போகும் பரிசுகளை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தவாறு ஸ்டேசனுக்கு வெளியே வந்து தெருவில் இறங்கி நடந்தான்.

தெருவின் எதிர்ப்பக்கதில் சிறுவரும் சிறுமியரும் கலகலத்தவாறு சிட்டுக்கள் போல் தாவியும் நடந்தும் வந்து கொண்டிருந்தனர். இராமலிங்கத்தின் சிந்தனை தன் குழந்தையை நோக்கிப் பறந்தது. அவளும் இவர்களைப் போல கவலையின்றி சிட்டுப்போல சிரித்துத் திரிவாளல்லவா? தெருவைக் கடந்து கொண்டிருந்த சிறு பெண் ஒருத்தியின் புத்தகமொன்று நழுவித் தெருவில் திறந்தவாறு விழுந்தது. அதன் ஒற்றைகளிடையே அந்தப் பெண் வைத்திருந்த வர்ணக்காகிதத் துண்டுகளெல்லாம் தெருவில் சிதறின. அவள் பட்டுப் பூச்சி போல அங்கும் இங்கும் பறந்து பறந்து, உட்கார்ந்து எழுந்து, அவற்றைப் பொறுக்கலானாள். தெருவைக் கடந்துவிட்ட சிறுமிகளுள் ஒருத்தி திரும்பிக், “கமலம், சீக்கிரம் வா” என்று கத்தினாள். திடீரென்று ‘ஹாரன்’ அலறல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய சிறுமி நடுத்தெருவில் போட்டுவிட்ட புத்தகக்கட்டை வாரிக்கொண்டு திரும்பித் தெரு ஓரத்தை நோக்கிப் பாய்ந்தாள். இராமலிங்கம் கையைத் துாக்கிக்கொண்டு கத்திய அதே விநாடி கார் அவளை மோதி எறிந்தது.

இராமலிங்கம் சிறிது தயங்கினான். ‘பாவம் யார் குழந்தையோ? இதற்கு அவன் என்ன செய்துவிட முடியும்? அவனுக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்.? ஒரு வம்பில் அகப்பட்டு அனுபவித்தது போதும். குழந்தைகளில் ஒன்று ஓலமிட்டு அழத்தொடங்கிவிட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். இரத்தத்தில் மிதந்த அந்த முகத்தில் மிதந்த அமைதி அவனை உலுக்கிற்று. திரும்பிச் சிறுமி கிடந்த இடத்திற்கு வந்துவிட்டான் “இது யார் குழந்தை?” என்று கேட்டான்.

“எங்கள் பக்கத்து வீட்டுப்பிள்ளை” என்றான் அவர்களுள் பெரியவனான பையன் ஒருவன்.

“சரி தம்பி, நீ இரண்டு எட்டில் ஸ்டேசனுக்கு ஓடி ஒரு ‘டாக்ஸி’ கூட்டிக்கொண்டு வா சீக்கிரம்” என்றவன் மண்டியிட்டு தன் துண்டை அவளுடைய தலையில் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டு அவளைத் துாக்கிக் கொண்டு தெரு ஓரத்திற்குப் போனான். சிறு போதில் டாக்ஸி வந்தது. “தம்பி நீ இவர்கள் வீட்டுக்குப் போய் நடந்ததைச் சொல்லி ஆஸ்பத்திரிக்கு வரச்சொல். டிரைவர் ஆஸ்பத்திரிக்கு சிக்கிரம் ஓடப்பா” என்று உத்தரவிட்டான். வண்டியை வேகமாக ஓட்டிய போதும் இரமலிங்கத்திற்கு திருப்தியாகவில்லை.

கமலத்தின் முகத்தைப் பார்த்தான். மலருமுன் கிள்ளியெறியப்பட்ட அரும்பாகக் கிடந்தாள். இனிய முகம்! அவளுடைய குழந்தை இப்படித்தானே இருப்பாள். தங்கம் என்ன பெயர் வைத்தாளோ பெண் குழந்தை. யாரைக் கொண்டதோ தந்தையைக் கொள்ளும் என்று சொல்வார்கள். இல்லை தங்கத்தின் குழந்தை எதுவும் அவளைப் போலத்தான் இருக்கும். இருக்க வேண்டும். தந்தையைப் போல் இருக்க வேண்டாம். இந்தக் கமலத்தைப் போல் மொட்டு இதழ்களும் பட்டு இமைகளும் தங்கத்தின் சிவந்த நிறமுமாகத்தான் இருப்பாள்.

இனிய கனவில் இராமலிங்கம் மெல்ல மடியைத் தடவினான். அவனுக்குப் பகீரென்றது. அவனுடைய பெட்டி எங்கே? எங்கே? பரபரவென்று மேலும் கீழும் பார்த்தான். கமலத்திற்கு கட்டுப்போட அதை தெருவில் வைத்தவன் பிறகு எடுக்கவேயில்லை! அவனது அன்பு மனைவிக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் கொண்டு வந்த அன்பை அடக்கியதல்லவா அந்தப் பெட்டி. குரோதம் பொங்க கமலத்தைப் பார்த்தான்.! சனியன் இவ்வவு துாரம் வந்தவனுக்கு கடைசி நேரத்தில் சகுனம் தடை போல் முளைத்தது. என் இன்பத்தைச் சூறையாடியுமல்லவா விட்டது. மூதேவி! அதைச் சாவின் வாயிலிலிருந்து மீட்க அழைத்து வேறு செல்கிறான்.

“ஆஸ்பத்திரி வந்துவிட்டது. ஐயா” என்று திரும்பிய ரைவர் இராமலிங்கத்தின் முகத்தில் தெரிந்த கடூரத்தைக் கண்டு திகைத்துப் போனான். ‘மீட்ட’ரைப் பார்த்து வேண்டா வெறுப்பாக இரண்டரை ரூபாவை நீட்டியவன் கமலத்தை துாக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான்….. அவனைக் காத்திருக்கச் சொல்லி கமலத்தை சிகிச்சைக்கு கொண்டு போய் விட்டார்கள். இராமலிங்கம் கமலத்தையும் தன்னையும் மாறி மாறிச் சபித்துக்கொண்டான். ஆத்திர எண்ணங்களோடு எவ்வளவு நேரம் இருந்தானோ தெரியாது.டாக்டரைக் கண்டதும் எழுந்து நின்றான். “இனி நான் போகலாமா டாக்டர்?”

“இருங்கள் சார். அந்தக் குழந்தைக்கு அதிகப்படியான இரத்தம் சேதமாகிவிட்டது. உடனே இரத்தம் செலுத்த வேண்டும். எங்களிடம் இல்லை. அடுத்த நகர் ஆஸ்பத்திரிக்கு டெலிபோன் பேசச் சொல்லியிருக்கிறேன். அவர்களிடம் இந்த இரத்தத் தொகுதி இருந்தாலும் அது இங்கு வருமுன் குழந்தை ஒருவேளை இறந்துவிடும். தாய் அல்லது தந்தையின் இரத்தம் ஒத்துப்போகும் என்று நினைக்கிறேன். அவர்கள் சீக்கிரம் வந்தால்! – யாரென்றே உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாது ! தெரியாது ! அவர்கள் வந்துவிடுவார்கள். அந்தச் சிறுவன் போய்ச் சொல்ல வேண்டாமா? நான் அவசர அலுவலாய் போய்க்கொண்டிருந்தேன். இப்பொழுதே தாமதமாகிவிட்டது. இனியாவது போலாமா?” கடுமையாகச் சொன்னான்.

அவனது வார்த்தைகளைச் செவி சாய்க்காது டாக்டர் உள்ளே போய்விட்டார். தனித்திருந்த இராமலிங்கம் வெளியேறினார்.

ஆஸ்பத்திரி வாசலில் ஒரு ‘போஸ்டர்’ அவன் கண்ணைக் கவர்ந்தது. இரத்த தானம் செய்யும்படி ஒரு ‘நர்ஸ்’ அழைத்துக் கொண்டிருந்தாள். ஒரு யோசனை பளிச்சிட்டது. அவனுடைய இரத்தத்தை கொடுத்து பத்து ரூபாயாவது சம்பாதிக்கலாம். அதில் குழந்தைக்காவது ஏதாவது வாங்கிப் போகலாம். நடந்ததையெல்லாம் அறிந்ததும், தன் பாசத்தின் ஆழத்தை அறிந்து தங்கம் மகிழ்வாளல்லவா? இராமலிங்கம் மீண்டும் உள்ளே திரும்பினான்..

கண்ணாடிக் குழாயில் ஏறிய இரத்தத்தைப் பார்த்தான். இரத்தத்தை கொடுத்த களைப்பில் படுத்திருந்தான். ஆயாசம் நீங்கியதும் அவன் எழுந்திருக்க உதவி அவனுடைய சட்டையை எடுத்துக் கொடுத்தாள் ஒரு ‘நர்ஸ்’ பணத்தை பெற்றுக் கொள்ளச் சென்றான். ‘வார்டுகளைத் தாண்டிச் செல்லும் பொழுது ‘வார்டி’லிருந்து வெளியே வந்த பழைய நர்ஸ் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“நீங்கள் இரத்த தானம் செய்ய வந்த வேளை நல்ல வேளை. ஒரு குழந்தைக்கு உயிரளித்துவிட்டீர்கள்! டாக்டர் கூட கைவிட்டிருந்தார். குழந்தையைப் பார்க்க வருகிறீர்களா? அதன் தாய் உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறாள்” அவசரத்தோடு போய் விட்டான். இன்னொரு குழந்தையாய் இருந்திருந்தால் இதற்காக இராமலிங்கம் பெருமையடைந்திருப்பான். ஆனால் கமலத்தை நினைத்ததும் அவனுடைய குரோதம் பொங்கியெழுந்தது. தன் மகளுக்கு கொண்டு வந்த அன்புப் பரிசை தட்டிக் கொண்ட குட்டிப்பிசாசுதான் கமலம் என்ற வெறுப்பு அவனுக்கு. ‘வார்டு’ வாசலை அடைந்ததும் அவனுடைய கால்கள் சிறிது தயங்கின. கட்டிலருகில் கண்களில் நீர் சோர ஒரு பெண் நின்றாள். எதையோ நினைவு கூர்வது போல் கண்களைக் கூசினான். இராமலிங்கம் அது யார்?

“தங்கம்! தங்கம்!” என்று கூவினான்.

“யார்? நீங்களா? வந்துவிட்டீங்களா?” தாவிச் சென்று அவன் கைகளைப் பற்றினாள் தங்கம்.

“தங்கம் நீ எங்கே இங்கு வந்தாய்?” தங்கம் விம்மினாள்.

“இதோ!….. இதோ!…… உங்கள் பெண் ! கமலம் !……”

“ஐயோ! இராமலிங்கம் அந்தப் பிஞ்சுப் பாதங்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினான். அவன் விருப்புடன் வாங்கிய பரிசுகள் எதற்கு? அவன் பொறுப்புடன் அளித்த உயிர்ப் பரிசு – ஜீவநதியாக மாறி அவள் உடலில் பாய்ந்து கொண்டிருக்கிறதே!…..அதைச் சேர்ந்த உடலுக்கு அதற்கு மேல் பரிசு எதற்கு? பத்து ரூபாய் பணம் அது தன் குழந்தைக்குதவவே இரத்தத்தைக் கொடுத்தான். ஆனால் பெறுமதி மிகுந்த அந்தக் குழந்தைக்கு தன் இரத்தத்துக்கு இரத்தத்தை ஈந்து உயிரைப் பிடித்துவிட்டான். கடந்த ஏழாண்டுகளில் அவன் கொதிப்பேறிய இதயத்துக்கு இந்தத் தியாகம் தருவது எத்துணை இதம் ! இது எது? விதியின் விளையாட்டா? இல்லை உயிரோடு இரண்டறக் கலந்த இணைப்பின் கவர்ச்சி.

பவானி ஆழ்வாப்பிள்ளை

ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் முதன்முதல் பெண்ணிய வாதத்தை முன்வைத்த பெண் படைப்பாளி பவானி ஆவார்.பல்வேறுவகையான மாந்தர்களை தன் சிறுகதைகளில் மரபு மீறிய கருத்துக்களோடு முன் வைத்துள்ளார். சமூகக்கட்டவிழ்ப்புகளை அவரது சிறுகதைகளில் காணலாம். அவரது சிறுகதைகளின் தொகுப்பாக கடவுளரும் மனிதரும் வெளிவந்துள்ளது. மன்னிப்பாரா? மனதில்’ அதிர்வை உண்டாக்கிய சிறுகதையாகும்.

– 20.06.1959, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *