ஜீவஜோதி







(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(‘மலைக்கன்னி‘ நாவலின் தொடர்ச்சி)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

சங்கிலி ஊஞ்சலில் சென்ற பாலாஜிக்கு திடீரென்று எங்கிருந்தோ குளுகுளுவென்று குளிர்ந்த காற்று வீசுவதைப் போலிருந்தது. மலையின் உச்சியை நெருங்கி விட்டோமென்பதை இது அவனுக்கு அறிவுறுத்திக் காட்டியது. அவன் நினைத்ததைப் போலவே ஊஞ்சல் சட்டென்று ஒரு இடத்தில் வந்து நின்றது. அந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு ஆட்கள் இருப்பதாகத் தோன்ற வில்லை. அவ்வளவு அமைதியும் நிசப்தமும் அங்கு குடி கொண்டிருந்தன.
சிறிது நேரத்துக்கெல்லாம் பாலாஜி, சித்ரா, முனிசாமி ஆகிய மூவரின் கண்களும் திறந்துவிடப்பட்டன. கண்களைக் கசக்கிக் கொண்டு பாலாஜி சுற்றிப் பார்த்த பொழுது அவன் இருந்த இடமும் சுற்றிலும் தென்பட்ட காட்சியும் அவனுக்குப் பெரிய கண்கட்டு வித்தையைப் போலிருந்தன. அவனைப் போலவே சித்ராவும் முனிசாமியும் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சர்யத்டதுன் பரக்கப் பரக்க விழித்தார்கள்.
அந்த இடம் சுமார் நூறு சதுர அடி விஸ்தீரணமுள்ள ஒரு முற்றவெளியைப் போலிருந்தது. அதன் மூன்று புறங்களிலும் இரண்டு ஆள் உயரத்துக்கு மதில் சுவர்கள் நின்றன. நான்காவது பக்கத்தில் அகலமான படிக்கட்டுகள் மேல் நோக்கிச் சென்றன. மதில் சுவர்களின் ஓரமாகக் கம்பீரத் தோற்றமுடைய வீரர்கள் ஈட்டிகளுடன் ஆடாமல் அசையாமல் பதுமைகளைப்போல நின்றார்கள். ஈட்டிகளைப் பிடித்திருந்த கரங்களின் நரம்பு ஓட்டத்தையும் கண்ணிமைகளின் அசைவையும் கொண்டுதான் அவர்களை உயிருள்ள மனிதர்களென்று தீர்மானிக்கும்படியாயிருந்தது.
பளபளப்பும் வழுவழுப்புமுள்ள பளிங்குக் கற்களினால் தளவரிசை செய்திருந்த தரையில் அவர்கள் உட்கார்ந்து கொண்டு வந்த ஊஞ்சலைக் காணோம். ஊஞ்சல் போன்ற அந்தப் பகுதி முற்றவெளியின் இதர பகுதிகளுடன் கண்டு பிடிக்க முடியாத வண்ணம் அப்படிப் பொருந்தியிருந்தது.
முற்றவெளியின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் பெரிய தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. படிக்கட்டுகளின் மீது ஐந்து படிக்கட்டுகளுக்கு ஒரு தீப்பந்தம் வீதம் வரிசையாக வைக்கப்பட்டிருந்த காட்சி கார்த்தி கைத் தீபங்கள் வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற நேத்தி ராந்தமான காட்சியாயிருந்தது. அரண்மனை வாசிகளுக்கு மின்சாரத்தின் உபயோகம் நன்கு தெரிந்திருக்குமானால் மின்சார விளக்குகள் போடாமல் தீப்பந்தங்களைக் கொளுத்தி வைக்கக் காரணமென்னவென்பதைப் பாலாஜியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் படிக்கட்டுகளின் ஓரமாக நின்ற வீரனிடம் உக்கிரசேனர் ஏதோ பேசிவிட்டு வந்தார். அவர் திரும்பியதும் நான்கு வீரர்கள் வந்து பல்லக்கைத் தூக்கிக் கொண்டார்கள்.
“பின்னால் வாருங்கள்!” என்று சொல்லிவிட்டு ஒரு வீரன் படிகளின்மீது ஏறிச் சென்றான். அவனைத் தொடர்ந்து உக்கிரசேனர், பாலாஜி, முனிசாமி, சித்ரா ஆகிய நால்வரும் சென்றனர். இந்நால்வருக்கும் முன்னால் ஜோதி படுத்திருந்த பல்லக்குச் சென்றது. இரும்புச் சங்கிலிகளில் பிணைத்துக் கொண்டு வரப்பட்டிருந்த கைதிகள் இப்பொழுது பின் தொடரவில்லை. அவர்கள் முற்றத்திலேயே தங்கிவிட்டார்கள்.
உயரே ஏறுகையில் பாலாஜி ஒவ்வொரு படியையும் மனதுக்குள் எண்ணிக் கொண்டே வந்தான். கடைசிப் படியை அடைந்தபொழுது 78 படிகள் ஏறிய அவனுடைய கணைக்கால்கள் வலியெடுத்துப் போய்விட்டன. உயரே இரண்டு பிரமாண்டமான இரும்புக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு நின்ற இரண்டு வீரர்களில் ஒருவன் பாலாஜியையும் அவனுடைய கோஷ்டி யாரையும் ஒரு குறுகலான தாழ்வாரத்தின் வழியாக அழைத்துச் சென்றான். கொஞ்சத் தூரம் சென்றதும் அந் தப் பாதை ஒரு விசாலமான மண்டபத்தில் போய் முடிந்தது. அம்மண்டபத்தின் இடது பக்கத்திலிருந்த மூன்று அறைகளை, அழைத்து வந்த வீரன் சுட்டிக் காட்டி “அவற்றில் நீங்கள் தங்கியிருக்கலாம்” என்று சொல்லுவதைப் போல சமிக்ஞை செய்துவிட்டுத் திரும்பினான்.
பல்லக்கைத் தூக்கி வந்த வீரர்கள் பல்லக்கிலிருந்து ஜோதியை மெதுவாகத் தூக்கி ஒரு அறைக்குள் கொண்டு போனார்கள். அங்கிருந்த ஒரு கட்டிலில் ஜோதியை படுக்க வைத்து விட்டு அவர்களும் திரும்பிப் போய் விட்டனர்.
அந்த மூன்று அறைகளில் ஒன்றிலே உக்கிரசேனரும், இன்னொன்றில் பாலாஜியும், முனிசாமியும், மூன்றாவது அறையில் ஜோதிவர்மனுடன் சித்ராவும் இருப்பதென்று அவர்கள் தங்களுக்குள் ஏற்பாடு செய்து கொண்டார்கள். ஜோதியைவிட்டு இருக்க சித்ரா சம்மதிக்காத காரணத்தால்தான் அவ்விருவரையும் ஒரே அறையிலிருக்கச் செய்வ தென்றும் அவர்கள் தீர்மானித்தனர்.
ஜோதியின் அறையிலிருந்து கொண்டு “அடுத்தபடி என்ன? மகாராணியை எப்பொழுது நாம் பார்ப்பது?” என்று பாலாஜி உக்கிரசேனரிடம் விசாரிக்கையில் அறைக்கு வெளியில் மண்டபத்தின் மறுபுறத்தில் இரண்டு ஆட்கள் தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டுவர அவர்களுக்கு மத்தியில் ஒருவர் வருவதை பாலாஜியும் உக்கிரசேனரும் கவனித்தார்கள்.
தீவட்டிகளை ஏந்திக் கொண்டு வந்த இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் வந்தவர் அரண்மனை வைத்தியர்தான். அவரைக் கண்டவுடன் தளபதி உக்கிரசேனர் பயபக்தியுடன் வணங்கிவிட்டு, “இவர்கள் மகாராணியின் விருந்தாளிகள். கட்டிலில் படுத்திருக்கும் மனிதருக்கு இரண்டு தினங்களாகக் கடுமையான ஜுரமடிக்கிறது பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார்” என்றார்.
அரண்மனை வைத்தியர் கையில் கொண்டு வந்திருந்த மருந்துப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு ஜோதிவர்மனைச் சோதித்துப் பார்த்தார். பிறகு “கடுமையான விஷஜுரம்போல் அல்லவா இருக்கிறது” என்றார்.
“ஆம் அய்யா, விஷஜுரம் மாதிரித்தான் இருக்கிறது. நான் அரண்மனைக்கு வந்திருந்த சமயம் இவர்கள் காட்டில் வேட்டையாடப் போயிருக்கிறார்கள். நச்சுக் காற்றுப் பட்டு ஏற்பட்ட ஜூரமாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது!” என்றார் உக்கிரசேனர்.
வைத்தியர் கொஞ்ச நேரம் மெளனமாக யோசித்தார். பிறகு “நோயாளி மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருக்கிறார். எதற்கும் என்னால் முடிந்தவரையில் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு மருந்துப் பெட்டியிலிருந்து நான்கு குளிசைகளை எடுத்துக் கொடுத்தார். ஐந்து நாளிகைக்கு (அதாவது இரண்டு மணிக்கு) ஒரு குளிகை வீதம் தண்ணீரில் கரைத்து ஜோதியின் வாயில் ஊற்றும்படியும் மறுநாள் காலை மறுபடி வந்து பார்ப்பதாயும் அவர் சொல்லிவிட்டுப் போனார்.
“வைத்தியர் சொல்லுவதைப் பார்த்தால் ஜோதியின் நிலைமை மிக ஆபத்தாயிருப்பதைப் போலல்லவா இருக்கிறது? மகாராணியிடம் சொல்லி ஏதாவது செய்ய முடியாதா?” என்று கவலையுடன் கேட்டான் பாலாஜி.
“மகாராணி சொல்லித்தானே அரண்மனை வைத்தியர் வந்திருக்கிறார்? இல்லாவிட்டால் விருந்தாளிகளில் ஒருவருக்குக் கடுமையான சுகவீனமென்பது அவருக்கு எப்படித் தெரிந்து மருந்துப் பெட்டியுடன் வந்திருக்க முடியும்?” என்றார் உக்கிரசேனர்.
“ஆமாம்! உண்மையில் ஜோதிக்கு உடல் நிலை சரியில்லையென்பது ராணிக்கு எப்படித் தெரிந்தது? ஆச்சர்யமாகவல்லவா இருக்கிறது?” என்று பாலாஜி கேட்ட பொழுது “மலையடிவாரத்தில் அரண்மனை உத்தியோகத்தர்களுக்கு வீரர்கள் தகவல் கொடுத்திருப்பார்கள். அவர்கள் மூலம் மகாராணிக்கு உடனே விஷயம் அறிவிக்கப்பட்டிருக்கும். எதற்கும் ஸ்நானம் செய்து மாற்று உடையணிந்து கொண்டு மகாராணியைப் பார்க்க நாம் ஆயத்தமாவோம்” என்றார் உக்கிரசேனர்.
வரும்பொழுது மாற்று உடைகளும் அத்தியாவசியமான சில சாமான்களும் ஒரு பெட்டியில் போட்டு பல்லக்கில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு வந்திருந்தார்கள். சித்ராவின் சாமான்களை மட்டும் பெட்டியிலிருந்து தனியாக எடுத்து ஜோதியின் அறையில் வைத்துவிட்டு உக்கிரசேனரும் பாலாஜியும் முனிசாமியும் அவர்களுடைய சாமான்களுடன் தங்களுடைய அறைக்குச் சென்றனர்.
பாலாஜியின் அறைக்குள் இன்னொரு அறையிருந்தது. அந்த இரண்டாவது அறையில் பள பளவென்று தேய்த்து சுத்தம் செய்த இரண்டு பெரிய பித்தளைத் தவளைகளில் வெந்நீரும் குளிர்ந்த நீரும் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. எதிரில் சுவரிலே ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய நிலைக் கண்ணாடியும் அதன் பக்கத்தில் சீப்பு, எண்ணெய், துவாய்கள் ஆகியவைகளும் வைக்கப்பட்டிருந்தன. நீண்ட தூரப் பிரயாணத்தின் பின்னர் வெந்நீரில் ஸ்நானம் செய்தது பாலாஜிக்குச் சுகமாக இருந்தது. தேய்த்துக் குளித்து மாற்று உடுப்பு உடுத்திக் கொண்டு அவன் ஸ்நான அறையிலிருந்து பெரிய அறைக்கு வந்தபொழுது அங்கு கிடந்த மேஜையின்மீது சாப்பாடு ஆயத்தமாகக் காத்துக் கொண்டிருந்தது.
“சாப்பாடு யார் கொண்டு வந்தார்கள் முனிசாமி?” என்று கேட்டான் பாலாஜி.
“யாரோ இரண்டு பெண்கள் கொண்டுவந்து வைத்து விட்டுப் போனார்கள்” என்று முனிசாமி சொல்லிக் கொண்டிருக்கையில் சாப்பாட்டைக் கொண்டு வந்த அதே இரண்டு பெண்கள் இரண்டு பித்தளைப் பாத்திரங்களில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் ஜலமும் எடுத்துக் கொண்டு வந்து மேஜையில் வைத்தார்கள்!
“அடுத்த அறையில் சித்ரா இருக்கிறாள். அவளுக்கும் சாப்பாடு கொடுத்தீர்களா?” என்று அவர்களிடம் பாலாஜி கேட்டான். அவன் கேட்டதை அந்தப் பெண்கள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. பதில் பேசாமல் வந்த வழியாகவே அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.
“நான் கேட்கிறேன். பதில் பேசாமலே போகிறீர்களே!” என்று கேட்டுக் கொண்டே அவன் கதவுவரையில் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான். ஆனால் அவர்கள் அவனை திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டார்கள்.
“தேவதேவியின் விவகாரம் எல்லாமே பெரிய மர்மமாக இருக்கிறது. இதெல்லாம் எப்படி எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லையே!” என்று சொல்லிக் கொண்டே பாலாஜி திரும்பிய பொழுது “ஆமாம் எசமான்! சின்ன அய்யா பேச்சைக் கேட்டுக் கொண்டு நாம் கிளம்பி வந்திருக்கவே கூடாது” என்றான் முனிசாமி.
“இனிமேல் பேசிப் பயன் என்ன? கடவுள் விட்டவழி விடட்டும் நீ போய் ஸ்நானம் செய்துவிட்டுவா!” என்று சொல்லி முனிசாமியை அனுப்பிவிட்டு பாலாஜி சாப்பிட உட்கார்ந்தான். வடை, பாயாசம், சகிதமிருந்த விருந்துச் சாப்பாட்டை வளைத்துக் கட்டிவிட்டு அவன் ஜோதியின் அறைக்கு வந்த பொழுது ஜோதியின் கையைத் தூக்கித் தன் மடியில் போட்டுக் கொண்டு சோகமே உருவமாக கட்டிலின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் சித்ரா. அவளுக்காகக் கொண்டு வந்திருந்த சாப்பாடு தொடப்படாமல் வைத்தது வைத்தபடி இருந்தது.
“சித்ரா நீ உபவாசமிருந்தால் ஜோதியின் உடல் நிலை குணமடைந்துவிடுமா? போ அம்மா. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டு வா! எழுந்திரு!” என்று அனுசரணையாகச் சொன்னான் பாலாஜி.
“இல்லை அய்யா! எனக்குப் பசியேயில்லை! ஜோதி குணமடைந்து எழுந்திருக்கும் வரையில் எனக்குப் பசியே இருக்காது” என்றாள் சித்ரா.
“நீ பசியோடு இருக்கும்வரையில் ஜோதி குணமடையவும் மாட்டான். என் பேச்சைக் கேள். மகாராணியை நான் பார்க்கும் பொழுது ஜோதியை விரைவில் குணப்படுத்த எப்படியும் நான் வழி தேடுவேன். தேவதேவி அமானுஷ்யமான சக்தி படைத்தவளென்பது உண்மையா யிருந்தால் சுயநினைவின்றிக் கிடக்கும் ஜோதியைக் குணப்படுத்தும் சக்தியும் அவளிடம் இருக்க வேண்டும்” என்றான் பாலாஜி.
அவன் நிர்ப்பந்தம் செய்ததின் பேரில் சித்ரா சாப்பிடப்போய் சாப்பிட்டதாகப் பாவனை செய்துவிட்டு எழுந்தாள்.
“உங்களை எப்பொழுது அழைத்து வருவதென்பதைக் கேட்டுக் கொண்டுவர அய்யா மகாராணியிடம் சென்றிருக்கிறார். இன்றிரவு மகாராணி தங்களைப் பார்க்கத் தயாராயில்லாவிட்டால் ஜோதியைப் பற்றிச் சொல்லிவிட்டு வருவதாகச் சொன்னார்” என்றாள் சித்ரா.
அவள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஒரு பாரதூரமான செய்தியுடன் வந்திருப்பதைப்போல முக மலர்ச்சியுடனும் மிகுந்த பரபரப்புடனும் அங்கு வந்த உக்கிரசேனர் பாலாஜியைப் பார்த்து “அய்யா! உங்களை உடனே அழைத்து வரும்படி மகாராணி ஆக்ஞாபித்திருக்கிறார். அந்நியர்களுக்கு மகாராணியின் பேட்டி கிடைப்பது மிக மிக துர்லபம். அதுவும் அரண்மனைக்கு வந்த தினத்திலேயே மகாராணியிடமிருந்து அழைப்பு வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நீங்கள் மிகப் பெரிய பாக்கியசாலி!” என்று அறிவித்தார்.
மகாராணி அழைக்கிறாள் என்றவுடன் அந்த அதிமுக்கியமான செய்தி பாலாஜியிடம் விசேஷ பரபரப்பை உண்டு பண்ணுமென்று தளபதி உக்கிரசேனர் எதிர்பார்த்தார். இதற்கு மாறாக சிறிதும் பதட்டப்படாமல் “அப்படியா” என்றான் பாலாஜி. ‘இதோ வந்துவிட்டேன்’ என்று அமைதியாக பாலாஜி சொல்லியது உக்கிரசேனருக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.
உக்கிரசேனர் பாலாஜியை நூதனமாகப் பார்த்துவிட்டுச் சொன்னார்:-
“தேவியின் சந்நிதியில் நீங்கள் பரம ஜாக்கிரதையாக வும் பயபக்தியுடனும் நடந்து கொள்ள வேண்டும். என்னைப் பார்த்துக் கொண்டு நான் செய்கிறபடி செய்தால் போதும். கொஞ்சம் அஜாக்கிரதையாக நடந்து தேவியின் கோபத்துக்குப் பாத்திரமாகிவிட்டீர்களோ, நிற்கும் இடத்திலேயே எரிந்து பிடிசாம்பலாகி விடுவீர்கள். ஏதோ நான் பயமுறுத்துகிறேனென்று எண்ணிவிடாதீர்கள். என் சொந்த அனுபவத்தைக் கொண்டு முன்கூட்டியே உங்களை எச்சரித்து வைக்கிறேன். இன்னொரு விஷயமும் சொல்லுகின்றேன் கேளுங்கள். சென்ற நாற்பது ஆண்டுகளுக்கிடையில் தென்திசை வழியாக இந்நாட்டுக்கு வந்து சுமார் 30 பேர்களை மகாராணியின் ஆக்ஞைப்படி அரண்மனைக்கு அழைத்து வந்திருக்கிறேன். அவர்களை அரண்மனை அதிகாரிகளுடன் பேசச் செய்து மகாராணி மறைந்திருந்து கேட்டிருக்கிறாரே தவிர அவர்களில் ஒருவருக்காவது தேவதேவி பிரத்தியட்சமாகப் பேட்டி கொடுத்துப் பேசியது கிடையாது. உங்கள் அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமே நீங்கள் அரண்மனைக்கு வந்தவுடனேயே சமுகத்துக்கு அழைத்து வரும்படி உத்தரவாகியிருப்பது எனக்கே அதிசயமாயிருக்கிறது” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவர்கள் வெளியே வந்து மண்டபத்தைத் தாண்டி குறுகலான ஒரு தாழ்வாரத்தின் வழியாகச் சென்றார்கள். அந்தத் தாழ்வாரம் இரத்தினக் கம்பளங்கள் விரித்த ஒரு படிக்கட்டில் போய் முடிந்தது. அரண்மனையில் இதுவரை பார்த்த இடங்களுக்கும் இனிப் பார்க்கப்போகும் இடத்துக்குமுள்ள வித்தியாசத்தை அந்தப் படிக்கட்டுகள் பாலாஜிக்கு எடுத்துக் காட்டுவதைப் போலிருந்தது. படிக்கட்டின் இருபுறத்து கைப்பிடிச் சுவர்களிலும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுத் தீவட்டி வெளிச்சத்தில் அவை தேஜோமயமாகப் பிரகாசித்தன. படிக்கட்டின் மேலே ஒரு பட்டுப் படுதா பாதியளவு திறந்தபடி தொங்கியது.
உக்கிரசேனரும் பாலாஜியும் அந்தப் படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறிச் சென்ற பொழுது ஒருவிசாலமான மண்டபத்தை அடைந்தார்கள். கவர்ச்சிகரமாயிருந்த அம்மண்டபத்தில் சரம் சரமாக வெள்ளிக் குத்து விளக்குகள் சர விளக்குகள் போலத் தொங்கிக் கொண்டிருந்தன. நான்கு பக்கத்துச் சுவர்களிலும் விதம் விதமான வர்ண ஓவியங்கள் கண்ணைப் பறித்தன. பட்டு மெத்தைகளில் உட்கார்ந்து திண்டுகளில் சாய்ந்த வண்ணம் அழகான சில பெண்மணிகள் பட்டுத் துணிகளில் வர்ண நூல்களைக் கொண்டு பூவேலை செய்து கொண்டிருந்தார்கள். உக்கிரசேனரும் பாலாஜியும் மண்டபத்தில் நுழைந்த பொழுது அவர்களில் சிலர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடி தலையைக் குனிந்து கொண்டு தங்களுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர். அந்தப் பெண்களில் ஒருவர் கூட பேசவோ அல்லது பாலாஜியைப் பொருட்படுத்தவோ இல்லை. அந்த மண்டபத்தைத் தாண்டி இன்னொரு படிக்கட்டின் வழியாக அவர்கள் மேலே போன பொழுது முன்பு பார்த்ததைப் போலவே வேறொரு மண்டபத்தை அவர்கள் அடைந்தனர். அங்கும் பெண்கள் தான் இருந்தார்கள். இவர்களில் சிலர் மட்டும் படுதாக்களில் வர்ண ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு மூன்று பெண்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணிகளை வைத்துக்கொண்டு வேகமாக எழுதிக் கொண்டிருந்தனர். இவர்களும் உக்கிரசேனரையோ அல்லது பாலாஜியையோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இவ்விருவருடைய வருகையையும் முன்கூட்டியே அறிந்திருந்தவர்களைப்போல அலட்சியமாகத் தங்கள் வேலையிலே கவனமாயிருந்தனர்.
இவ்விதம் நான்கு படிக்கட்டுகளைத் தாண்டி ஐந்தாவது அடுக்கிற்கு அவர்கள் வந்த பொழுது சினிமாக்காட்சிகளில் பார்க்கும் தேவதேவேந்திரன் சபா மண்டபத்தைப் போலொத்த மிக மிக ஆடம்பரமான ஒரு அலங்கார மண்டபத்துக்கு வந்திருப்பதை அவர்கள் அறிந்தார்கள். இது வரை கீழ்த் தளங்களில் பார்த்தவைகளைப் போலல்லாமல் இந்த மணி மண்டபம் மிக மிக விசாலமானதாகவும் தர்பார் மண்டபத்தைப் போலவுமிருந்தது. நான்கு பக்கத்துச் சுவர்களிலும் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கப்பட்டு அவற்றிலே விதவிதமான வேலைப்பாடுகள் தென்பட்டன. இரண்டு ஆட்கள் சேர்ந்து கட்டிப் பிடித்தாலும் அணைக்க முடியாத பிரமாண்டமான பளிங்குக் கல் தூண்களிலே தேவ கன்னிகைகள் போன்ற ஆள் உயர வெண்கலச் சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றின் கைகளில் வள்ளி விளக்குகள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன.
இதே மண்டபத்தில் கால் அடியெடுத்து வைத்தவுட னேயே பாலாஜியை ஒரு விவரம் தெரியாத பீதி பலமாகப் பற்றிக் கொண்டது. தன்னையும் அறியாமல் கால்கள் தளர்ந்துபோய் தள்ளாடுவதைப் போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. இதுதான் மகாராணியின் சபா மண்டபமாக இருக்குமோ! தேவதேவியின் சந்நிதானத்துக்கே வந்து விட்டோமோ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் இவ்வளவு நேரமும் அருகில் வந்து கொண்டிருந்த தளபதி உக்கிரசேனர் திடீரென்று தலை மறைவாகிவிட்டது அவனுடைய குழப்பத்தையும் கலவரத்தையும் அதிகரித்தது. பாவி மனிதர் எங்கே தொலைந்து போய்விட்டாரென்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட வண்ணம் அவன் சுற்று முற்றிலும் பார்த்தான். அதே சமயம் கொடிய விஷப்பாம்பு சீறுவதைப்போல ”உஸ் உஸ்” என்ற ஒருமாதிரியான சப்தம் அவன் காலடியில் இருந்து கேட்டது. மூச்சுவிடும் உஷ்ணமான காற்று காலில் படுவதையும் உணர்ந்தே “அய்யா!’ என்று அலறியவண்ணம் அவன் இரண்டடி முன்னால் தாவிக் குதித்து கீழே பார்த்தான்.
தரையோடு தரையாக உக்கிரசேனர் கீழே விழுந்து வணங்குவதையும் வாய் பேசத் தைரியமில்லாமல் “உஸ்! உஸ்!” என்று லேசாகச் சமிக்ஞை செய்து தன்னை அழைப்பதையும் உணர்ந்தான். அவர் அருகில் போய் “என்ன?” என்று அவனும் மெதுவாகக் கேட்டான்.
“நாம் தேவதேவியின் சந்நிதியிலிருக்கிறோம். கீழே விழுந்து வணங்கும் சீக்கிரம்!” என்று பதட்டத்துடன் உக்கிரசேனர் சொன்னார். கிணற்றுக்கு அடியில் இருந்து பேசுவதைப் போல அவர் அவ்வளவு மெதுவாகவும் பயந்து கொண்டும் பேசினார்.
பாலாஜி ஒரு கணம் தயங்கினான். பிறகு “இறைவனுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை ஒரு பெண்ணுக்குச் செய்வதா? முடியாது. மனிதனுக்கு மனிதன் மண்டியிட்டு வணங்கும் வழக்கம் எங்கள் நாட்டில் இல்லை. தாய் தகப்பனையும் ஆச்சார்யனையும் தவிர வேறு எவருக்கும் தலைகுனிய மாட்டான் தமிழன்!” என்றான் பாலாஜி.
“விவாதிக்க நேரமில்லை. தயவு செய்து சொன்னபடி செய்யுங்கள். இப்பொழுது உங்கள் தேவி பார்த்துக் கொண்டிருந்தால் தலை போய்விடும். சீக்கிரம்!” என்று உக்கிரசேனர் குரல் நடுங்கப் பரபரப்புடன் சொல்லவே “முடியாது! முடியவே முடியாது!” என்று பாலாஜி உறுதியோடு பதிலளித்துவிட்டு சட்டைப்பையில் கைத்துப்பாக்கி இருக்கிறதா என்பதைத் தொட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டான்.
உக்கிரசேனர் ஒரு பெருமூச்சு விட்டார். “உங்கள் தலையெழுத்தைப்போல நடக்கட்டும். எனக்கு என்ன?” என்றார் துக்கத்துடன். தேவதேவியிடம் உக்கிரசேனரைப் போலவே பாலாஜிக்கும் கொஞ்சம் பயமிருந்ததென்றாலும் முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு அவளுடைய அடிமைகளிலும் கேவலமான அடிமையைப் போல அந்தப் புரவாசலிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க அவனுடைய சுயமரியாதை இடம்தரவில்லை. “இறைவன் சந்நிதியில் செய்யவேண்டிய மரியாதையை கேவலம் ஒரு மனிதப்பிறவிக்குச் செய்வதா?” என்று அவன் நினைத்தான் ”அய்யா! உங்களைப்போல மண்டியிட்டு வணங்க நான் தயாரில்லை. மலைக்கன்னியை என்னுடைய தெய்வமாகவோ, ராணியாகவோ அங்கீகரிக்கவும் தயாராயில்லை. நீங்களே சொல்லியதைப்போல் நான் உங்கள் ராணியின் விருந்தாளி. தயவுசெய்து அவளிடம் என்னை அழைத்துப் போங்கள்” என்றான்.
பாலாஜி இப்படிச்சொல்லியபொழுது அந்த மண்டபத்தின் மற்றொரு மூலையிலிருந்து யாரோ ஒரு பெண்மணி “யார் அங்கே?” என்று அதிகாரத் தொனியில் கேட்கும் சப்தம் அவர்களுக்குக் கேட்டது.
“சாகப்போகும் விட்டில் பூச்சியே! எப்படியாவது தொலைந்துபோ!” என்று தாழ்ந்த குரலில் பாலாஜியை நோக்கிச் சொல்லிய உக்கிரசேனர், தரையிலிருந்து எழுந்திராமலே “தேவி! நான்தான் உக்கிரசேனன்! தங்கள் விருந்தாளியை அழைத்துவந்திருக்கிறேன்!” என்றார்.
பிறகு பாலாஜியை விழுங்கிவிடுவதைப்போல முறைத்துப் பார்த்து பற்களை நறநறவென்று கடித்துவிட்டு “வா! பலிபீடத்துக்கு வா! திமிரடித்தனத்தினால் சாவைத் தழுவப்போகும் துடுக்குக்காரனே வா!” என்று சொல்லிக் கொண்டே நிலத்திலிருந்து எழுந்திருக்காமல் கால்நடைகள் நான்கு கால்களில் நடப்பதைப்போல கையைத் தரையில் ஊன்றிக்கொண்டே உக்கிரசேனர் முன்னால் நகர்ந்து சென்றார். பாலாஜியும் அவனுக்குப் பின்னால் பிரமை பிடித்தவனைப்போல மெதுவாகச் சென்றான். மண்டபத்தின் நடுமத்தியின் வழியாக தரையில் விரித்திருந்த விலை உயர்ந்த இரத்தினக் கம்பளத்தின் மீது நடந்து செல்லுகையில் கொஞ்சத்தூரத்துக்கு அப்பால் ஒரு உயர்ந்த மேடையிருப்பதையும், மேடையின்மீது ஒரு மெல்லிய வெளிர்நீலப் படுதா தொங்கிக் கொண்டிருப்பதையும் பாலாஜி கண்டான். காற்றில் அசைந்தாடும் அந்தப் படுதா தூரத்துப் பார்வைக்கு அலைமோதும் நீலத் திரைகடலைப்போலக் காட்சியளித்தது. கிட்ட நெருங்க நெருங்க படுதாவுக்குப் பின்னாலிருக்கும் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவாரம்பித்தன. மேடையின் மத்தியில் மயிலாசனம் போன்ற ஒரு சிம்மாசனம் இருப்பதையும் அதன் இரண்டு புறங்களிலும் ஆள் உயரத்துக்கு நான்கு பெரிய குத்து விளக்குகள் சுடர்விட்டு எரிந்துகொண்டிருப்பதையும் பாலாஜி கண்டான். இன்னும் கொஞ்சம் நெருங்கியதும் மயிலாசனத்தின்மீது தலையில் கிரீடம் தரித்து வலது கரத்தில் சூலாயுதம் ஏந்திய ஒரு உருவம் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. இந்தக் காட்சி கோவில்களில் இருக்கும் காளி மாதாவின் சிலையையே பாலாஜிக்கு ஞாபகப்படுத்துவதாயிருந்தது.
மேடையை நெருங்கியதும் உக்கிரசேனர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி “கன்னி மாதா! தங்கள் விருந்தாளி இதோ இருக்கிறார்!” என்றார்.
“நல்லது! எழுந்திரு” என்று கட்டளை பிறந்தது திரைக்குப் பின்னாலிருந்து. வெள்ளி மணியோசையைப் போலிருந்த அந்த இனிமையான குரல், மயிலாசனத்திலிருப்பது ஒரு பெண்மணி யென்பதை அறிவிப்பதைப் போலிருந்தது. பாலாஜி நிமிர்ந்து பார்ப்பதற்குள் மயிலாசனத்தில் உட் கார்ந்திருந்த தேவதேவி கீழே இறங்கி திரையின் ஓரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த சூலாயுதம் குத்துவிளக்கின் வெளிச்சத்தில் பளபள் வென்று பிரகாசிப்பதைக் கண்டதே பாலாஜிக்கு அவனுடைய சரீரத்தில் இரத்த ஓட்டம் நின்று விட்டதைப்போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவனையறியாமலே அவனுடைய பற்கள் குளிரில் தாளம் போடுவதைப் போல தாளம் போட ஆரம்பித்தன. பிதுங்கி விழுந்து விடுவதைப் போல விழிகள் வெளியே வந்து நிற்க, உடல்முழுவதும் மயிர்க்கூச்சிட்டு நடுங்கியது.
திரைக்குப்பின்னால் இருந்த தேவதேவியின் தோற்றத்தில் அப்படி அரண்டு போகும்படியாக என்ன இருந்தது? உண்மையைச் சொல்லப்போனால் தேவியின் தோற்றம் ஒரு நிழற்படத்தைப்போல திரைக்குப்பின்னால் தெரிந்ததே தவிர, அவளுடைய உருவம் கூடத் தெரியவில்லை. சுத்த வெள்ளியில் செய்திருந்த சூலாயுதம் ஒன்று தான் தெளி வாக வெளியே தெரிந்தது. அதுவும் அம் மண்டபத்தின் சூன்யமும் சூழ்நிலையும் பாலாஜியின் மனோதிடத்தையெல்லாம் பறக்கடித்து உளறியடிக்கச் செய்யப் போதுமானதா யிருந்தன.
திரையில் லேசாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது. திரை விலகி கன்னிமாதா காட்சியளிக்கப்போவதாக எண்ணி பாலாஜி இமைகொட்டாமல் மேடையைப் பார்த்துக் காண்டிருக்கையில் அவன் எதிர்பார்த்ததைப்போலவே படுதா இரண்டாகப் பிரிந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.
படுதா விலகியதும் மேடையின்மீதிருந்த மயில் சிம்மாசனத்தினருகில் ஒரு பெண்மணி கம்பீரமாக நிற்பதைப் பாலாஜி கண்டான். பத்தரை மாற்றுப் பசும்பொன்னில் செய்து அதில் வைர வைடூரிய கோமேதகம் முதலான நவரத்தினக் கற்கள் வைத்து இழைத்த அந்த சிம்மாசனம் மங்கலான விளக்குவெளிச்சத்தில் மேடைமீது வர்ண ஜாலங்களைச் செய்து கொண்டிருந்தது. மயிலின் கண்களிலே பதித்திருந்த அந்த இரு நீலநிறக் கற்களிலிருந்து வீசிய ஒளி, வைரக்கற்களிலிருந்து கிளம்பிய பஞ்சவர்ணங்களுடன் போட்டியிட இடையிடையே தோன்றிய மஞ்சள், சிவப்பு, பச்சைக் கிரணங்கள் மாரிகாலத்தில் தோன்றும் வானவில்லின் சோபையை ஒத்திருந்தன.
சிம்மாசனத்தின் கீழே நின்ற பெண்மணி சில விநாடி களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்ததையும், வெள்ளி மணியோசையைப் போல இனிமையாகப் பேசியதையும் கண்டும் கேட்டுமிராவிட்டால் அந்த உருவத்தை ஒரு பதுமையென்றே அவன் தீர்மானித்திருப்பான். ஆடாமல் அசையாமல் நிலைபெயராது நின்ற அவள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரையில் மெல்லிய மஸ்லின் துணியைப் பர்தா அணிவதைப்போல போர்த்திக் கொண்டிருந்தாள். திரிசூலத்தைப் பற்றியிருந்த கரம் மாத்திரம் முழங்கை வரையில் போர்வைக்கு வெளியே தெரிந்தது. கைதேர்ந்த சிற்பிகளைக்கொண்டு தந்தத்தில் கடைந்தெடுத்ததைப் போலிருந்து அந்தக் கரம் அதற்குரியவரின் மோகன வடி வத்தை ஓரளவிற்கு உணர்த்திக்காட்டுவதாயிருந்தது. அந்த மஸ்லின் போர்வையும்கூட அப் பெண்மணியின் காந்த சக்தியை மட்டுப்படுத்திக்காட்ட உதவியதே தவிர, அவளுடைய உருவத்தை மறைக்க உதவியதாகத் தெரிய வில்லை. சிற்பி செதுக்காத சிலை போலவும், பேசும் பொற் சித்திரம்போலவும் சாமுத்திரிகா லட்சணங்களில் ஒரு அணு கூடப் பிசகாமல் பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலுக்கே பெருமையளித்துக்கொண்டிருந்த அம் மாதரசியே கன்னி மாதா என்றும் தேவதேவியென்றும் தெய்வப் பிரதிநிதி யென்றும் செம்பவளத்தீவு மக்கள் பல பெயர்கள் சொல்லிப் போற்றும் தேவதேவியென்பதை பாலாஜி உணர்ந்து கொண்டான்.
தேவதேவியின் முக்காடிட்ட தோற்றத்தில் ஒரு புதுமையை, கலவரப்படுத்தும் ஒரு அதிசயத்தை, கண்டும் கேட்டும் படித்துமிருக்காத அமானுஷ்யமானதொரு அம்சத்தையும் அவன் கண்டான்.
போர்வையைக் கிழித்துக்கொண்டு தன்னையும் உக்கிர சேனரையும் ஊடுருவிப் பார்த்த அவ்விரு கண்களும் ஒரு சாதாரண மனிதக் கண்களைப்போலல்லாமல் அக்கினி ஜுவாலைகளைக் கிளப்பும் இரு சிறு வட்டவடிவமான தீப்பந் தங்களைப் போலிருந்தன. சுடர்விட்டுப் பிரகாசித்த அந்தக் கண்கள் எவ்வளவு திடசித்தம் படைத்தவர்களையும் அரண்டு நடுங்கி ஒடுங்கிப்போகச் செய்யுமென்பதில் சந்தேகமில்லை. அவைகளின் தீட்சண்யத்தைக் கண்டமாத்திரத் தில் பாலாஜி தன்னையறியாமல் இரு கரங்களையும் குவித்துக் கொண்டு நின்றான். கால்களில் திடீரென்று இரத்த ஓட்டம் நின்றுபோய் மரத்துவிட்டதைப் போல் அவனுக்குத் தோன்றியது. எவ்வளவு முயன்றும் கால்களிலும் கைகளிலும் ஏற்பட்ட விவரம்புரியாத நடுக்கத்தை அவனால் மறைத்துக் கொள்ள முடியவில்லை.
“நண்பரே ஏன் இப்படி உடல் நடுங்குகிறது? என்னைப் பார்த்தால் அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறது?” என்று கேட்டாள் தேவதேவி.
“இல்லைத் தாயே? நான் பயப்படவில்லை! தங்களின் விருந்தாளியாக வந்திருக்கும் நான் எதற்காகத் தங்களிடம் பயப்படவேண்டும்?” என்றான் பாலாஜி. இதைச் சொல்ல அவன் வெகுவாகப் பிரயாசைப்படவேண்டியிருந்தது. தொண்டைக்குள் ஏதோ பந்துபோன்ற ஒரு பொருள் வந்து அடைத்துக் கொள்ளுவதைப் போலிருந்ததால் நினைத்த படி சரளமாகப் பேசும் சக்தி தற்காலிகமாக அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு போயிருந்தது.
“பயப்படாமலேயே வெடவெடவென்று நடுங்குகிறதே உங்கள் கைகள்?” என்று கேட்டுவிட்டு அவள் இரண்டு அடி முன்னால் வந்தாள்.
“இல்லை கன்னி மாதா! நான் பயப்படவில்லை. தங்களிடம் எனக்குப் பயமேயில்லை!” என்று சொல்லியதையே திருப்பித் திருப்பிச் சொன்னான் பாலாஜி.
தேவதேவி தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்டதைப்போல பாலாஜிக்குத் தோன்றியது.
பாலாஜியைப் பார்த்துக்கொண்டு நின்ற தேவதேவி பளிச்சென்று உக்கிரசேனரின் பக்கம் திரும்பி “உக்கிரசேனா! என் விருந்தாளிகளில் ஒருவரை உன்னுடைய ஆட்கள் மூர்க்கத்தனமாகப் படுகொலை செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். இது உண்மைதானே?” என்று கேட்டாள்.
“ஆம் கன்னி மாதா! தங்கள் தரிசனத்துக்காக நான் வந்திருந்த சமயம் சில முரடர்கள் இந்தப் பாதகத்தைச் செய்துவிட்டனர். கொலை செய்யப்பட்டவன் ஒரு வெள்ளையன். கொல்வது தவறல்லவென்று நினைத்து முட்டாள்தனமான இக் காரியத்தைச் செய்துவிட்டனர் தாயே!” என்றார் உக்கிரசேனர்.
“முட்டாள் தனமாக நடந்துகொண்டுவிட்டார்கள் என்றா சொன்னாய்? என் விருந்தாளிகளை உன்னுடைய ஆட்கள் கொலை செய்தது முதற் குற்றம். இப்பொழுது அவர்களுக்காக நீ பரிந்து பேசுவது இரண்டாவது குற்றம்! இவ்விரண்டு குற்றங்களுக்கும் நீ தான் ஜவாப்தாரி!” என்று தேவதேவி சொல்லுகையில் அவளுடைய தொனியிலும் தோற்றத்திலுமே ஒரு கொடூரத்தன்மை பிரதி பலித்தது. அதற்கு ஏற்றாற்போல உக்கிரசேனர் வெட வெடத்துப்போய் “கன்னி மாதா! இந்த ஏழையை மன்னிக்கவேண்டும். படுகொலை செய்த கிராதகர்களுக்காக நான் பரிந்துபேசவில்லை தாயே!” என்று நாக்குழற முறையிட்டார்.
“நீ இல்லாத சமயத்தில் உன்னுடைய ஆட்கள் பாசறைக்குள் நுழைந்து என் விருந்தாளியைக் கொலை செய்வதாயின் இதற்கு யார் ஜவாப்தாரியென்பது எனக்குத் தெரிய வேண்டும். இரண்டாயிரம் பேர்களைக் கட்டி மேய்க்க உனக்குத் திறமையில்லை. உன் ஆட்களுக்கு உன்னிடமே பயமில்லை. இது போகட்டும். அரண்மனைக்கு வரும்பொழுது அகதிகளுக்குப் போதிய பாதுகாப்புச் செய்துவிட்டு வர வேண்டியது உன் கடமையல்லவா? உன் ஆட்களின் யோக்கியதை தெரிந்து விருந்தாளிகளை எப்படி நிராதரவாக விட்டு வந்தாய்? உக்கிரசேனா! இந்நாட்டில் என் ஆக்ஞையை மீறுவோருக்கு என்ன தண்டனையென்று உனக்குத் தெரியுமா? ஏன் ஆந்தையைப் போல விழிக்கிறாய்? என் கேள்விக்குப் பதில் சொல்லு. சரியான சமாதானம் சொல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு உயிரோடு நீ தப்பிப் போகமாட்டாய்!” என்று முழங்கிய வண்ணம் கையில் பிடித்திருந்த சூலாயுதத்தைத் தூக்கி மேடையின் மீது ஓங்கி ஒரு தட்டுத் தட்டவே அந்த மண்டபம் முழுவதும் கிடுகிடுத்துப்போகுமளவுக்கு ஒரு அதி பயங்கரமான பேரொலி கிளம்பி சில வினாடிகள் வரை அலைஅலையாக எதிரொலியைக் கிளப்பிக்கொண்டிருந்தது.
உயிரோடு தன்னை விழுங்கவரும் ஒரு வேங்கைப் புலியின் முன்னால் நிராதரவாக நிற்கும் ஒரு மனிதன் எவ்விதம் மரணத்தின் தலைவாசலை மிதித்து விட்டதை உணர்ந்து ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கப் பரிதவிப்பானோ அதேபோன்ற நிலைமையில் தளபதி உக்கிரசேனர் நிற்பதைக் கண்டதே அவனிடம் பாலாஜிக்கு இரக்கமும் அனுதாபமும் ஏற்பட்டது! மேடையின்மீது தேவதேவி சூலாயுதத்தைத் தட்டியபொழுது ஏற்பட்ட பேரொலியில் உக்கிரசேனரைப் போலவே பாலாஜியும் அதிர்ந்து போயிருந்தான். ஆயினும் உயிரைப் பறிகொடுக்கும் தறுவாயிலிருந்த உக்கிரசேனரைக் காட்டிலும் சற்று முன்னதாகவே அவன் அதிர்ச்சி தெளிந்து “தேவி! நானும் ஒரு வார்த்தை சொல்ல அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினான்.
”என்ன? சொல்லுங்கள்! ஆனால், இந்தக் கயவனைக் காப்பாற்றுவதற்கு மட்டும் முயற்சியாதீர்கள். அவன் செய்த குற்றத்திற்கு அவனே சரியான சமாதானம் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அதோ அவன் நிற்கும் இடத்திலேயே அவன் பொசுங்கிப் பிடிசாம்பலாவதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்!” என்றாள் கன்னி மாதா.
“தேவி! ஆத்திரத்தில் தயவுசெய்து நீதி தவறிவிடாதீர்கள். எங்கள் கோஷ்டியைச் சேர்ந்த வில்லியம் உயிரை இழந்ததற்கு பாவம், இந்த மனிதர் கொஞ்சமும் காரணமில்லை. போதிய பாதுகாப்புகளோடு எங்களை அவர் குகைக்குள்ளே வைத்து விட்டுத்தான் போனார். வெள்ளையர்களைக் கண்டால் தன்னுடைய ஜனங்களுக்கு இருக்கும் துவேஷத்தைப் பற்றிச் சொல்லி அரண்மனையிலிருந்து திரும்பும் வரையில் பரம ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று பலமாக எச்சரிக்கையும் செய்தார். அதை அலட்சியம் செய்ததின் பலன்தான் வில்லியம் உயிரை இழக்க நேரிட்டது. இதற்கு தளபதி உக்கிரசேனர் என்ன செய்வார்?” என்றான் பாலாஜி.
தேவதேவி ஒரு கணம் மௌனம் சாதித்தாள். பிறகு “வில்லியத்தைக் கொன்றவர்கள் யார் என்பதையாவது கண்டுபிடித்தாயா?” என்று உக்கிரசேனரைப் பார்த்துக் கேட்டாள்.
“கண்டுபிடித்துக் கட்டி இழுத்துவந்திருக்கிறேன் தாயே!” என்றார் உக்கிரசேனர். புலியின் வாயில் தலையைக் கொடுத்துவிட்டு தெய்வ அருளினால் உயிர் தப்பியதைப் போல உணர்ந்த அவர் பாலாஜியை நன்றி நிறைந்த பார்வையுடன் நோக்கினார்.
அவர்களை நாளை நீதி மண்டபத்துக்குக் கொண்டு வந்து நிறுத்து, அவர்கள் அணு அணுவாகத் துடித்துச் சாவதுடன் உன் ஆட்கள் அவ்வளவு பேர்களுக்கும் இது அவர்களுடைய ஆயுளில் என்றும் மறக்கமுடியாத படிப்பினையாயிருக்கவேண்டும். இனி நீ போகலாம்!” என்றாள் தேவதேவி.
நீ போகலாம் என்று அவள் சொல்லியதுதான் தாமதம் செத்தேன் பிழைத்தேனென்று கணப்பொழுதில் உக்கிரசேனர் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார். அவரைப் பின்பற்றிப் போக பாலாஜி திரும்பிய பொழுது “உங்களைப் போகச் சொல்லவில்லை. அந்தக் கிழவனைத் தான் போகச் சொன்னேன். வயது ஆக ஆக மனிதனுக்கு அனுபவமும், அனுபவத்துடன் அறிவும் திறமையும் வளருமென்பார்கள். உக்கிரசேனன் விஷயத்திலோ இது நேர்மாறாயிருக்கிறது!” என்றாள் தேவதேவி.
இப்படிச் சொல்லிக்கொண்டே தேவதேவி திரிசூலத்துடன் மேடையிலிருந்து அதன் படிகள் வழியாக மெதுவாகக் கீழே இறங்கி மண்டபத்துக்கு நடந்து வந்தாள். உக்கிரசேனரும் போய்விட்ட பின்னர் தன்னையும் தேவதேவியையும் தவிர வேறு யாருமில்லாத பிரமாண்டமான அம்மண்டபத்தில், அதிலும் மங்கலான விளக்கு வெளிச்சத்திலே பார்த்தவிடமெல்லாம் இராட்சத உருவங்கள் நிற்பதைப் போல பெரிய பெரிய தூண்களின் நிழல்கள் படர்ந்திருந்த அந்தச் சூழ்நிலைமையில், தேவதேவியுடன் தனிமையிலிருப்பதும், அவள் மேடையை விட்டு இறங்கி அருகில் நெருங்கி வருவதும் பாலாஜியைக் கலவரத்தின் எல்லையில் கொண் போய் நிறுத்தியிருந்தன. அவள் நெருங்க நெருங்க அவனுடைய நெஞ்சு அதி வேகமாக அடித்துக்கொண்டது. நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் குப்பென்று கிளம்பி நிற்க அடிவயிற்றிலும் அவனுக்கு ஏதோ என்னவோ செய்வதைப்போலிருந்தது.
பாலாஜி நின்ற நிலைமையிலிருந்தே அவனுடைய மனக் குழப்பத்தையும் மரணப்பீதியையும் ஓரளவுக்கு உணர்ந்து கொண்ட தேவதேவி “நண்பரே! உங்களுடைய நண்பருக்குத்தான் உடல் நிலை சரியில்லையென்று உக்கிரசேனன் சொன்னான். உங்களுக்கு ஒன்றுமில்லையே!” என்று கேட்டாள்.
“எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை தேவி” என்றவன் உடனே அதைத் திருத்திக்கொண்டு “இல்லையில்லை எனக்கும் உடம்பு சரியில்லை கன்னி மாதா! இங்கு வந்தது முதல் எனக்கு என்னவோ செய்கிறது! என்னவென்று எனக்கே சொல்லத் தெரியவில்லை!” என்றான் பாலாஜி.
இதைக் கேட்டதும் தேவதேவி ‘களுக்’கென்று சிரித் தாள். சற்று நேரத்துக்கு முன்னால் உக்கிரசேனரைச் சுட்டுப் பொசுக்கி எரித்து விடுவதாக அதிபயங்கரமாக முழங்கிய மலைக்கன்னிக்கு ஒரு சர்வசாதாரணப் பெண்ணைப் போலச் சிரிக்கவும், இன்முகம் காட்டவும் தெரியுமென்பதை பாலாஜி இப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டான். இது அவனுக்குச் சற்று ஆறுதலையும் தைரியத்தையும் அளிப்பதாயிருந்தது.
“இங்கு வந்தது முதல் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை யென்று சொன்னீர்கள்? உண்மை. இங்கு வருகிறவர்கள் எல்லோருக்குமே அப்படித்தான். இதற்கு நீங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காயிருக்க முடியும்? பேய், பிசாசு பதங்களைக் கண்டு பிராணனை விடுவதைப் போல என்னைப் பார்த்துப் பயந்து ஒடுங்குகிறவர்களைக் கண்டால் நான் எவ்வளவு வெறுக்கிறேனென்பது உங்களுக்குத் தெரியுமா? என் கோபத்தைக் கிளப்புகிறவர்கள் கோழைகள்தான். அவர்கள் எனது மனிதப் பண்புகளையெல்லாம் மறக்கடிக்கச் செய்து என்னை மிக மிகக் கொடிய அரக்கியாக்கச் சதி செய்யும் துரோகிகள். நான் கேட்கிறேன், என்னைக் கண்டு காட்டுமிராண்டி ஜனங்களான குகைவாசிகள்தான் அஞ்சுகிறார்களென்றால் பட்டினவாசிகளும் ஏன் பயப்படவேண்டும்? என்னைப் பற்றி ஏதும் தெரியாத முற்றிலும் அந்நியரான நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? பிறர் கண்டுபயந்து நடுங்க அவ்வளவு குரூரமாகவா நான் இருக்கிறேன்? சொல்லுங்கள் நண்பரே! சொல்லுங்கள்! என்னைப் பற்றி எனக்கே தெரியாம லிருக்கும் இம் மர்மத்தை நீங்களாவது சொல்லுங்கள்!” என்றாள் தேவதேவி.
தேவதேவி இவ்விதம் மூச்சுவிடாமல் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் மமதைக்கும் அகங்காரத்துக்கும் அதிகாரத்துக்கும் பதிலாக ஏக்கமும் துயரமும் மனிதப்பண்புகளும் பிரதிபலித்ததைக் கண்டு பாலாஜிக்கு இது கனவா அல்லது நனவா என்பதே புரியவில்லை. நினைத்ததை நினைத்த இடத்திலிருந்தே கண்டுபிடித்துச் சாதிக்கும் அமானுஷ்யமான சக்தி வாய்ந்தவளென்று வர்ணிக்கப்படும் மலைக்கன்னி இவ்விதம் ஒரு சாதாரணப் பெண்ணைப்போல தன்னுடைய நிலைமைக்குத் தானே துக்கப் படும் தொனியில் பேசுகிறாளென்பதை நினைத்தபொழுது பாலாஜிக்கு ‘விர்’ என்று தலை சுற்றுவதைப்போலிருந்தது. மிகவும் நெருங்கிவந்துவிட்ட அவளிடமிருந்து எதையாவது சொல்லித் தப்பிக் கொள்ள வேண்டுமென்ற சுயநலன் நெருக்கடியான இந்தக் கட்டத்தில் அவனுக்குச் சற்றுத் தைரியமளித்தது. அணையும் தறுவாயில் சுடர்விட்டு எரியும் விளக்கைப்போல உயிராபத்தை நன்கு உணர்ந்து கொண்டுவிட்ட சமயத்தில் மனிதர்களுக்கும் அவர்களையறியாமலே ஒரு தெம்பு ஏற்படுவது இயல்பு. அதுமாதிரியான ஒரு துணிச்சலுடன் “உண்மையைச் சொல்லிவிட வேண்டுமா? நான் சொல்வதைக் கேட்டுக் கோபப்பட மாட்டீர்களே!” என்றான் பாலாஜி.
தேவதேவி ஒரு கணம் மௌனமாக அவனை உற்றுப் பார்த்தாள். பிறகு “சொல்லுங்கள் கேட்கிறேன்! என்னைப் பற்றி எனக்கே தெரியாமலிருக்கும் விஷயங்களை பிறர் சொல்லிக் கேட்பதில் நான் ஏன் கோபப்படப் போகிறேன்? தாராளமாகச் சொல்லுங்கள்!” என்றாள் அவள்.
“தலை முதல் கால் வரையில் நீங்கள் அணிந்திருக்கும் போர்வைதான் பார்ப்பவர்களைப் பயமுறுத்துகிறது தாயே! பேய்களும் பிசாசுகளும் இப்படித்தான் உருவம் தெரியாமல் நிழல்போல நடமாடும். திரிசூலத்துடன் நிழல் போல நடமாடும் தங்களின் தோற்றம் எவ்வளவு திடசித்தம் படைத்தவர்களையும் கண்கலங்கச்செய்து விடும் கன்னி மாதா!” என்றான் பாலாஜி.
“ஆம்! உருவமற்ற ஆவிகள் நிழல்போல நடமாடு மென்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னைப் பார்த்தால் அருவமாகவா தோன்றுகிறது? உங்களெல்லோரையும் போல எனக்கும் கை கால்களில்லையா? போர்வையணிந்திருந்த பொழுதிலும் என் உருவம் தெரியாமலா இருக்கிறது?” என்றாள் தேவதேவி.
“தெரிகிறது தேவி தெரிகிறது! இருந்தாலும்…”என்று இழுத்தான் பாலாஜி.
“இருந்தாலும் இந்தப் போர்வை எதற்கு என்று கேட்கிறீர்கள் இல்லையா? அதோ அந்த தீபத்தைப் பாருங்கள்! அது எவ்வளவு உயரமாக ஜுவாலை விட்டு எரிகிறது!” என்று கேட்டாள் தேவதேவி.
“ஆமாம்! ஒரு சாண் உயரத்துக்கு தீபம் எரிகிறது. அதற்கும் தங்கள் போர்வைக்கும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லையே!” என்றான் பாலாஜி.
“இப்பொழுது அந்த தீபத்தை நன்றாகக் கவனியுங்கள்!” என்று சொல்லிய வண்ணம் தன்னுடைய போர்வையின் துணியை தீபத்தின் நடு மத்தியில் நீட்டிப்பிடித்த தேவதேவி “சால்வையைத் தாண்டி அதற்கு மேலே ஜுவாலை போகிறதா? சால்வைக்கு அடியிலேயே அக்கினி ஜுவாலை குன்றிப் போய் விடுவதைக் கவனியுங்கள்!” என்றாள்.
“தேவி! சால்வை பத்திரம்! தீப்பிடித்துவிடப் போகிறது!” என்று பாலாஜி எச்சரிக்கையில் “பயப்படாதீர்கள்! தீப்பிடிக்க இது பருத்தியினாலோ அல்லது பட்டினாலோ செய்ததல்ல. வள்ளிக் கம்பியை மெல்லிய நூலாக இழைத்து செய்த சால்வை. இதை நெருப்பு ஒன்றும் செய்யாது!” என்றாள் தேவி.
தீபத்துக்கு மேலே பந்தல் போட்டமாதிரிப் பிடித்திருந்த சால்வையைத் தாண்டி ஜுவாலை மேலே வராமல் அதற்கு அடியிலேயே அடங்கிப்போவதைக் கவனித்த பாலாஜிக்கு கல்லூரியில் விஞ்ஞானப் பாடத்தில் செய்து பார்த்த ஒரு பரீட்சை பளிச்சென்று ஞாபகத்துக்கு வந்தது.
“இதற்கு லோ ஆப் கண்டக்ஷன் ஆப் ஹீட் என்று சொல்லுரார்கள்” என்றான்.
“என்ன? என்ன?” என்று திகைப்புடன் கேட்டாள் தேவி. ஆங்கிலச் சொற்களே அவளுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டுமென்பதை ஊகித்த பாலாஜி “விஞ்ஞானப் பாடத்தில் படித்த ஒரு பாடத்தை ஆங்கிலப் பாஷையில் சொன்னேன்” என்றான்.
“அப்படி ஒரு பாஷை இருக்கிறதா?” என்றாள் தேவி
”ஆம் அம்மா! இது வெள்ளைக்காரர்களென்னும் ஆங்கிலேயர்கள் பேசும் பாஷை. இன்று உலகத்தில் பெரும்பாலோர் பேசும் பாஷையும் இதுதான்” என்று பாலாஜி சொல்லிய பொழுது “உங்களுக்குத் தேவ பாஷையான சமஸ்கிருதம் தெரியுமென்று உக்கிரசேனர் சொன்னான். இன்னும் என்னென்ன மொழிகள் உங்களுக்குத் தெரியும்?” என்று தேவதேவி வினவினாள்.
“ஹிந்துஸ்தான், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பாஷைகளும் சுமாராகத் தெரியும்” என்றான் பாலாஜி.
“ஓ! பன்மொழிப் புலவரா நீங்கள்?” என்று கேட்ட வண்ணம் தீபத்தின் மீது காட்டிக்கொண்டிருந்த சால்வையை நகர்த்திக்கொண்டு “விஞ்ஞானப்பாடத்தில் படித்ததாக ஏதோ சொன்னீர்களே, என்ன அது?” என்று கேட்டாள்.
“எரியும் ஜுவாலையின் மீது உலோகக் கம்பிகளினால் செய்த ஒரு சல்லடையைப் பிடித்தால் அக்கினி ஜுவாலை அந்த சல்லடைக்கு அடியிலேயே தங்கிவிடும். சல்லடையைத் தாண்டி வெளியே போகாது. அக்கினியை வெளியில் விடாமல் தன்னகத்தே ஏற்று அடக்கிக் கொள்ளும் சக்தி சல்லடைக்கு உண்டு. இது பள்ளிக்கூடப் பாடம்!” என்றான் அவன்.
“ஓ! உங்கள் நாட்டில் விஞ்ஞானம் கூடச் சொல்லிக் கொடுக்கிறார்களா? அப்படியானால் நான் என் உருவத்தை மறைத்துக் கொண்டிருக்கும் காரணமும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே” என்றாள் தேவி.
“அதுதானே தெரியவில்லை” என்று பாலாஜி சொல்லிய பொழுது “என்னைப் பார்த்து உங்கள் கண்கள் பொட்டையாகிவிடக் கூடாதேயென்றுதான் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறேன். என்னை போர்வையின்றிப் பார்த்தால் உங்கள் கண்கள் மட்டுமென்ன, நீங்களே பொசுங்கிவிடுவீர்கள்! ஏன் என்று கேட்காதீர்கள். அது எனக்கே தெரியாது. பிராணனை விடத் தயாராயிருந் தால் பரீட்சித்துப்பாருங்கள்!” என்றாள் தேவதேவி.
“வேண்டாம் தாயே! வேண்டாம்! உங்கள் பேச்சில் நம்பிக்கையில்லாவிட்டால் அல்லவா பரீட்சித்துப் பார்க்க வேண்டும்!” என்றான் பாலாஜி.
”இல்லை! மௌனமாக என் பேச்சை நீங்கள் நம்ப வேண்டாம். இதோ என் முகத்திரையைச் சற்று நீக்குகிறேன். ஒரு வினாடி, ஒரே ஒரு வினாடி பார்த்துவிட்டுக் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள். ஒரு வினாடிக்கு மேல் பார்த்து கண்களைக் குருடாக்கிக் கொண்டால் அதற்கு நான் ஜவாப்தாரியில்லை” என்று சொல்லிவிட்டு லேசாக முகத் திரையை அகற்றினாள் தேவதேவி.
”உங்கள் பேச்சை நம்புகிறேன்” என்று பாலாஜி உதட்டுக்கு மேலே சொல்லிய பொழுதிலும் உண்மையில் தேவதேவியைப் பார்த்தால் கண்கள் பொசுங்கிப் போய் விடுமென்ற கட்டுக்கதையை உள்ளூர அவன் நம்பவில்லை. எக்கச்சக்கமான அந்த நிலைமையில் தேவதேவிக்குத் திருப்தியாகப் பேசித் தப்பிக் கொண்டு விட்டால் போதுமென்ற ஒரே ஒரு எண்ணம்தான் அவன் மனதில் மேலிட்டிருந்தது. இந்த எண்ணத்தினுடனேயே “உங்கள் பேச்சை நம்பா விட்டால் அல்லவா பரீட்சித்துப் பார்க்க வேண்டும்?” என்று அவன் ஒப்புக்குச் சொல்லிவைத்தான். எனவே தேவ தேவி முகத்திரையை லேசாகத் திறக்கவே அந்தமாய மோகினியின் சுந்தர வடிவத்தை அவன் அண்ணாந்து பார்த்தான். ஒரு வினாடியிலும் குறைவாக ஒரு கண்ணிமைப் பொழுதுதான் அந்த முகத்தை அவன் பார்த்திருப்பான். கார்மேகம் சூழ்ந்த இருண்ட வானத்தில் கண்ணைப்பறிக்கும் ஜெகஜோதியுடன் பளிச்சென்ற ஒரு மின்னல் தோன்றினால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. “ஐயோ! போதும்! போதும் கன்னி மாதா! போதும்! தயவு செய்து முகத் திரையை மூடுங்கள்?” என்று வாய் விட்டு அலறிய வண்ணம் இரண்டு கைகளினாலும் கண்களை இறுக்கப் பொத்திக் கொள்ளவே மணியோசையைப் போல கலகலவென்று சிரித்தாள் கன்னிமாதா என்ற தேவதேவி.
முகத்திரையை முன்போல மூடிக்கொண்டு கண்ணைத் திறந்து பார்க்கும்படி தேவதேவி சொல்லிய பொழுது அவனுக்குக் கண்ணைத் திறக்கவே பயமாயிருந்தது. பிறகு அவன் லேசாகக் கண்ணை விழித்துப் பார்த்த பொழுது எதிரில் நின்ற தேவதேவியோ அல்லது பொருள்களோ ஒன்றும் தெரியாமல் ஒரே இருள் மயமாகயிருக்கவும் அவனுக்குப் பகீரென்றது. “அய்யோ கன்னிமாதா! என் கண்கள் போய்விட்டதே கன்னி மாதா! இந்த வயதில் கண் இல்லாமல் நான் என்ன செய்வேன். ஐயோ ஒன்றுமே தெரியவில்லையே. உலகமே இருண்டு போய்விட்டதே. இனி நான் என்ன செய்வேன் கன்னிமாதா ? நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்! பார்த்தவுடன் கண்களைக் குருடாக்கிவிடும் மகா சக்தி வாய்ந்த உனக்கு இழந்த கண்பார்வையைக் கொடுக்கும் சக்தியும் கண்டிப்பாக இருக்க வேண்டும்! என்னைக் காப்பாற்று தாயே!” என்று வாய்விட்டுப் புலம்பினான் பாலாஜி.
பார்வை மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையே அவனுக்கு இருண்டு போய்விட்டதைப் போலிருந்தது. வியர்க்க விறுவிறுக்க கண்ணீர் வடித்துக்கொண்டு அவன் இவ்விதம் புலம்பவே தேவதேவி சிறிது நேரம் மௌனமாயிருந்தாள்.
அந்தச் சில நிமிட நேரத்துக்குள்ளாக ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. முற்றிலும் குருடாகியிருந்த பாலாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக இருள் நீங்கி திரும்பவும் பார்வை ஏற்படவாரம்பித்தது. முதல் இருளில் களம் நீங்கியது. பிறகு எதிரிலிருந்த பொருள்கள் நிழல் போலத் தெரிய வாரம்பித்தன. சிறிது சிறிதாகப் பார்வை திரும்பியதும் பாலாஜி சாஷ்டாங்கமாக தேவதேவியை விழுந்து வணங்கி “கன்னிமாதா உன் பெருமையை அற்பமாக மதித்தேன். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லுவதெல்லாம் கட்டுக் கதைகளென்று இதுவரையில் நினைத்து வந்தேன். இந் நாட்டு மக்களையெல்லாம் நீ ஏமாற்றி அடக்கியாண்டு வருவதாயும் நீ அமானுஷ்யமானவ ளென்பது செப்படி வித்தை யென்றும் எண்ணினேன். நீ தெய்வாம்சம் பொருந்திய வளென்பது இப்பொழுதுதான் தெரிகிறது. இந்தப் பாவியை மன்னிக்க வேண்டும் கன்னிமாதா!” என்று கண்ணீர் பெருக பாலாஜி முறையிட்டான்.
மலைக்கன்னி லேசாகத் சிரித்துக்கொண்டே “நண்பரே! நீங்கள் சொல்லுவது அவ்வளவும் தவறு. நான் அமானுஷ்யமான சக்தி வாய்ந்தவளோ தெய்வாம்சம் உடையவளோ இரண்டுமில்லை. உங்களைப்போன்ற ஒரு சாதாரண மனிதப் பிறவிதான் நானும். என்னையறியாமலே என்னிடம் சில சக்திகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை காலமும் விஞ்ஞானமும் அளித்த வரப்பிரசாதங்கள். உண்மையில் உங்கள் கண்கள் குருடாகப் போயிருந்தால் நிச்சயம் பார்வையை உங்களுக்கு நான் திருப்பிக் கொடுத்திருக்க முடியாது. சர்வசாதாரணமான ஒரு இயற்கை நிகழ்ச்சிக்கு தெய்வாம்சம் கொடுத்து என்னைப் புகழுகிறீர்கள்! எப்பொழுதாவது நீங்கள் சூரியனை உற்றுப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“பார்த்திருக்கிறேன்” என்று பாலாஜி பதில் சொல்லவும், “சூரியனை உற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பினால் கொஞ்ச நேரத்துக்குக் கண்பார்வை சரியாகத் தெரியாமல் ஒரே இருள்மயமாயிருக்கும். பிறகு சிறிது நேரத்துக்கு எல்லாம் இருள் நீங்கி பார்வை முன்போலத் தெரியவாரம்பிக்கும். இப்பொழுது நேரிட்டதும் இதே போன்ற ஒரு இயற்கை நிகழ்ச்சிதான். என்னை உற்றுப் பார்த்ததில் உங்கள் கண்கள் அதிர்ச்சியடைந்துபோய் சிறிது நேரம் பார்வையை இழந்திருந்துவிட்டுப் பிறகு தெளிவடைந்திருக்கின்றன. உங்களுடைய நல்ல காலம் என்னுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தி நீண்டநேரம் என்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உண்மையாகவே உங்கள் கண்கள் பொத்துப் போய் குருடாயிருக்கும். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வெள்ளைக்காரன் என்னை உற்றுப் பார்த்து கண்களை இழந்ததோடல்லாமல் மூளையும் கொதிப்படைந்து இரத்தக் குழாய்கள் வெடித்து விழுந்து இறந்தது எனக்கு நேற்று நடந்த சம்பவத்தைப் போலிருக்கிறது!” என்றாள் தேவதேவி.
“இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்றா சொன்னீர்கள்?” என்று திருப்பிக் கேட்டான் பாலாஜி.
“ஆம்! இருநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தச் சம் பவம் நிகழ்ந்தது! ஏன் ஆச்சரியமாயிருக்கிறதா?” என்று கேட்டாள் தேவதேவி. பிறகு “இங்கு நின்று கொண்டு பேச வேண்டாம். என் அறைக்குப் போய் இருந்துகொண்டு பேசுவோம் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அவள் மேடையின் மீது மறுபடியும் ஏறினாள்.
திரும்பிப் பார்த்தபொழுது பாலாஜி நின்ற இடத்தை விட்டு அசையாமல் நிற்பதைக் கண்டதே “ஏன் தயங்குகிறீர்கள்? என்னுடன் வரப்பயமாயிருக்கிறதா? பயப்படாமல் தைரியமாக வாருங்கள்” என்றாள் தேவதேவி.
தேவியின் அரண்மனைக்கு வந்துசேர்ந்த பிறகு முற்றிலும் அவளுடைய தயவிலேயே இருப்பதையும் நினைத்தால் எதையும் செய்யும் சக்திவாய்ந்த கன்னிமாதாவிடம் சரியாகச் சிக்கிக்கொண்டபிறகு அவள் சொல்லுகிறபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை யென்பதையும் உணர்ந்த பாலாஜி பதில் பேசாமல் மேடையின் மீது ஏறி மலைக்கன்னியைப் பின் தொடர்ந்து சென்றான்.
மேடையின் வலதுபுறத்திலிருந்த ஒரு வராந்தாவின் வழியாக ஒரு விசாலமான அலங்கார அறைக்கு பாலாஜியை மலைக்கன்னி அழைத்துச் சென்றாள். அந்த அறை பார்வைக்கு தேவதேவியின் சயனக்கிரகத்தைப் போலத் தென்பட்டது. அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் சந்த னக்கட்டையில் செய்த ஒரு கட்டிலும் அதன்மீது பல வேலைகள் செய்த பட்டு மெத்தையும் திண்டு தலையணிகளும் கிடப்பதைக் கண்டு அது தேவியின் படுக்கையறையாகத் தான் இருக்க வேண்டுமென்று பாலாஜி தீர்மானித்துக் கொண்டான். அவ்வறையின் நான்கு பக்கச் சுவர்களிலும் அஜந்தா. எல்லோரா, சிகிரியா குகைச் சித்திரங்களைப் பொல அழகான பல ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன அவற்றின் ஒரு மூலையிலே வெள்ளிப் பீடத்தின்மீது நின்ற அலுமாரியில் கட்டுக்கட்டாக அநேகம் ஏட்டுச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மத்தியில் அத்தி பூத்தாற் போல அழகாக “பைண்ட்” செய்த இரண்டு பெரிய புத்தகங்களும் இருந்தன. அந்த அலுமாரியின் மேலும் கட்டிலின் கால்களிலும் அவ்வறையிலிருந்த இதர ஒவ்வொரு சாமான் மீதும் வெள்ளியில் செய்த சர்ப்பச் சின்னங்களும் பதிக்கப்பட்டிருந்தன.
கட்டிலின் அருகில் சற்று உயரமான ஒரு மேஜை மீது கானகத்தை நோக்கியவாறு தூரதர்சினிக் கருவியைப் போன்ற ஒரு பொருளும் ஒலி பெருக்கியைப் போன்ற ஒரு பொருளுமிருந்தன. பக்கத்தில் ஒரு தட்டிலே புதிதாகப் பறித்து வந்த திராட்சைப் பழங்கள் குலை குலையாக வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் ஒரு கிண்ணத்தில் திராட்சை ரசம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.
அறையில் நுழைந்த தேவதேவி கட்டிலில் உட்கார்ந்து ஒரு திண்டில் சாய்ந்தவண்ணம் எதிரில் இருந்த ஒரு ஆசனத்தில் அமருமாறு பாலாஜிக்கு சமிக்ஞை செய்தாள்.
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.