ஜீவஜோதி






(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

பாலாஜியை தேவதேவி உட்காரச் சொல்லி ஆச னத்துக்கு நேரே திறந்த சாளரத்துக்கு அப்பால் உப்பரிசை போன்ற ஒரு விசாலமான திறந்தவெளி முற்றமிருந்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில் விஜயகேசரியை தேவ தேவி படுகொலை செய்த இடமென்று சந்திரிகா தனது வர லாற்றில் குறிப்பிட்டிருந்த நிலாவெளி முற்றம் அதுதானோ என்று பாலாஜி நினைத்தான். அதற்குத் தகுந்தாற்போல அப்பொழுது அந்த முற்றத்தில் நிலவும் பட்டப் பகல் போலக் காய்ந்து கொண்டிருந்தது. முற்றத்தின் மத்தி யிலே முந்திய நாளிரவு வானவெளியில் பார்த்த அதே கருட வாகனம் இருப்பதை பாலாஜி கண்டான். கருடன் மூக்கிலிருந்து தொங்கிய பந்துபோன்ற பொருளைக் கண்ட மாத்திரத்தில் வானவீதியில் ஒளிமயமாகப் பறந்து வந்த வினோதமான விமானம் அதுதானென்பதைச் சந்தேகத் துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்திக் கொண்டான்.
கருடவாகனத்தையே இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் பாலாஜி நிற்பதைக் கண்டதே “சங்கோசப் படாமல் தைரியமாக உட்காருங்கள்!” என்று மறுபடியும் தேவதேவி சொன்னாள்.
அவன் உட்கார்ந்த பிறகு “கருட விமானத்தை ஏன் இவ்வளவு அதிசயமாகப் பார்க்கிறீர்கள்? உங்கள் நாட்டில் இதைப் பார்த்ததில்லையா? பாரதத்திலிருந்து வந்தது தான் இதுவும்” என்றாள்.
“பாரத நாட்டிலிருந்து வந்த விமானமா இது? என்னைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும் தேவி! இது மாதிரி விமானம் எங்கள் நாட்டிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ கிடையாது. நேற்றிரவு தாங்கள் இந்த விமானத்திலே வானமண்டலத்தில் பவனியந்த பொழுதே இதைப் பார்த்துவிட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்!” என்றான் பாலாஜி.
“பாரத நாட்டில் இந்தமாதிரி விமானம் இல்லை என்று சொன்னீர்கள்? அந்தப் புண்ணிய பூமியைவிட்டு நான் வரநேரிட்ட காலத்தில் சிசுநாகன் பாசறையிலேயே இது போன்ற இருபது விமானங்களிருந்தன. சிசுநாகன் ராஜ்யத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டு செம்பவளத்தீவிற்கு வந்த சித்தர்கள் சிருஷ்டித்த விமானம்தான் அதோ நிலா முற்றத்திலிருக்கும் கருடவிமானம்” என்றாள் அவள்.
“இது மாதிரியான விமானம் ஏதோ மகாபாரத காலத்தில் அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், விஞ்ஞான அறிவு உச்ச நிலையை அடைந்திருக்கும் இக்காலத்தில் கூட இதுமாதிரியானதொரு லிமானத்தை எங்களுடைய உலகத்தில் காணமுடியவில்லை” என்றான் பாலாஜி.
“ஆச்சரியமாயிருக்கிறது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன?” என்றாள் தேவதேவி.
“தாயே உங்களிடம் நான் ஒன்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே!” என்று பூர்வ பீடிகை போட்டான் பாலாஜி.
“தாராளமாகக் கேளுங்கள். உங்களிடம் எனக்குக் கோபமே வராதென்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். உங்களைப் போன்ற அறிஞர்களை நான் சந்தித்து எத்தனையோ நூற்றாண்டுகளாகி விட்டன” என்றாள் தேவி.
“தேவி? நீங்கள் பேசுவதைக் கேட்டால் நீங்கள் 2500 ஆண்டுகளாக இதே சரீரத்துடன் இதே இடத்தில் இப்படியே இருப்பதைப் போலிருக்கிறது. ஆனால், இதை என்னால் நம்பமுடியவில்லை. மனிதரின் சராசரி ஆயுள் சுமார் 60 வயது. 100 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தவர்கள் மிக மிகச் சொற்பம். அற்பாயுளில் முடிந்து போகிறவர்கள் தான் அதிகம். இயற்கையின் நியதிகளையெல்லாம் புறக்கணித்துக் காலனை ஏமாற்றிக் கடவுளைப்போல சிரஞ்சீவியாக மனிதர் இருப்பது எப்படிச் சாத்தியம்?” என்றான் பாலாஜி.
தேவதேவி லேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு பாலாஜியின் அஞ்ஞானத்தைப் பார்த்து அனுதாபப்படுவதைப் போலிருந்தது. அவள் கேட்டாள்: “இதோ இந்த மலையைப் பாருங்கள். இது எவ்வளவு நூற்றாண்டுகளாக இதே இடத்தில் இப்படியேயிருக்கிறது தெரியுமா? இத்தீவிலுள்ள சில விருக்ஷங்கள் எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கின்றன. அது ஏன்? சொல்லுங்கள் பார்க்கலாம்?” என்றாள்.
“மகான் புத்தர் ஞானோதயம் பெற்ற போதி விருக்ஷம் சென்ற 2500 ஆண்டுகளாக இன்னமும் பசுமையோடு இருக்கிறது. இந்த விருக்ஷத்திலிருந்து ஈழநாட்டுக்கு அசோகர் காலத்தில் கொண்டுபோன கன்று அந்நாட்டில் இன்னமும் அருளொளி பரப்பிக் கொண்டிருக்கிறது. மலையும் மரங்களும் காலம் கடந்து இருப்பதைக் கண்டும் கேட்டு மிருக்கிறேன். ஆனால், எலும்பும் தோலுமுள்ள மனிதர்கள் மரணத்தை வென்றதாகப் புராணக் கதைகளில் தவிர வரலாற்று நூல்கள் எதிலுமே நான் பார்த்ததுகூட இல்லை தேவி” என்றான் பாலாஜி.
“நீங்கள் படிக்காததும் பார்க்காததும் கேட்காததும் உலகத்தில் இருக்கக் கூடாதா? இதோ இந்தக் கருட விமானம் உங்களுடைய அஞ்ஞானத்துக்கு ஒரு அத்தாட்சி. இதைப்போன்ற விமானத்தை நீங்கள் இதற்குமுன் பார்த்ததில்லை. உங்களுக்குத் தெரியாத பொருளும் உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றன!” என்றாள் தேவதேவி.
பாலாஜிக்கு என்ன பதில் சொல்லுவதென்றே புரியவில்லை. தன்னைத் தேவதேவி சரியாக மடக்கிவிட்டா ளென்பதைஉணர்ந்து மௌனம் சர்வார்த்த சாதனமென்று எண்ணி அவன் சும்மாயிருந்தான்.
“ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று அவள் கேட்கவே “எனக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை தேவி. கற்றது கைம் மண் அளவு. கல்லாதது உலகளவு என்பார்கள். அதைப்போல இயற்கையின் ரகசியங்களில் மனிதனுக்குத் தெரிந்தது அற்பமென்பதை நான் அறியாமலில்லை. ஆனால், இந்த மனித சமுதாயத்துக்கே நீங்கள் விதிவிலக்காயிருப்பது எப்படியென்பதுதான் எனக்கு வியப்பாயிருக்கிறது” என்றான் பாலாஜி.
“இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை நண்பரே! இந்த உலகில் சர்வமும் மாறும் தன்மையுடையவை. மலைகளும் மாநதிகளும் பட்டினங்களும் கூட மாறுகின்றன. மன்னர்கள் மாறுகிறார்கள். நாடு காடாகிறது. காடு நாடாகிறது. கடல் மேடாகிறது. மேடு காடாகிறது. இப்படியான மாற்றங்கள் உலகத்தில் கல்பகோடி ஆண்டுகளாகச் சதா சர்வதா ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின் றன. மனிதன் இறந்து பிறந்து மறுபடி இறந்து பிறப்பதும் இம்மாதிரியான மாற்றங்களில் ஒன்றுதான். இந்த மாற்றங்கள் சில பொருள்களின் விஷயத்தில், சில மனிதர்களின் விஷயத்தில் துரிதமாக ஏற்படுகின்றன. வேறு சில சமயங்களில் தாமதித்து ஏற்படுகின்றன. அவ்வளவுதான் மாற்றத்தின் வேகத்தை, தன்மையை, அதை விளைவிக்கும் சூட்சும சக்தியை அறிந்தால் அதை ஒத்திவைக்கவும் ஏன் முடியாது?
“இயற்கையின் லீலா வினோதங்கள், பஞ்சபூதங்களின் பரமரகசிய மாற்றங்களைப் புரிந்து கொண்டவன் தான் மெய்ஞ்ஞானி. மண்ணிலிருந்து பிறக்கும் மனிதன் மண்ணுக்கு அர்ப்பணமாகிறான். அத்துடன் அவனுடைய பிறவிச் சூழல் முடிந்து போய்விடுகிறதா? கிடையவே கிடையாது. மண்ணில் புதையுண்ட மனிதன் எங்கே எப்படித் தப்பிப் போக முடியும்? இயற்கையின் கர்ப்பத்தில் அர்ப்பணமாகும் மனிதன் திரும்பவும் பிறக்கவே செய்கிறான். மனிதன் முதற் கொண்டு ஜீவ ஜந்துக்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே தோன்றுகின்றன. தோன்றி மறைகின்றவை மண்ணுக்கு அர்ப்பணமாகித் திரும்பவும் தோன்றுகின்றன. இப்படி இடைவிடாமல் கல்ப கோடி ஆண்டுகளாகத் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து கொண்டே யிருக்கின்றன. இதற்கு முடிவேயில்லை.
உயிர் கொடுக்கும் பொருள்கள், கொடுத்த உயிர்களைச் சம்ரட்சிக்கும்பொருள்கள், வாழ்வை வளப்படுத்தும் பொருள்கள், இறுதியில் வாழ்வை முடித்து வைக்கும் பொருள்கள் முதலான சர்வமும் பூமியிலிருந்து வருகின்றன. சர்வத்துக்கும் தாய் பூமாதா. உயிர் கொடுக்கும் தாய்க்கு, கொடுத்த உயிரைக் காக்க வழியளிக்கும் தாய்க்கு, உருமாற்றத்தை ஓரளவுக்கு ஒத்தி வைக்கும் சக்தி மாத்திரம் இல்லாமற் போகுமென்று எதிர்பார்ப்பது அறிவீனமில்லையா? ஜீவன்களுக்கெல்லாம் ஜீவாத்மா பூமாதா. அந்த மாதாவின் அருளினால், அவளிடம் மறைந்திருக்கும் அத்யாச்சர்யமான ஒரு சக்தியினால் ஒரு மனிதன் தனது மரணத்தை, உருமாற்றத்தை, மரித்து மறுபிறவியெடுக்கும் நேரத்தை ஏன் ஒத்தி வைக்க முடியாது? இதில் தர்க்க சாஸ்திரங்களுக்கும் விஞ்ஞானத்துக்கும் பகுத்தறிவிற்கும் முரண்பட்ட அம்சம் என்ன இருக்கிறது? சொல்லுங்கள் கேட்கிறேன்.”
தேவதேவி இப்படிப் பேசிய பொழுது திறந்தவாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தான் பாலாஜி. தர்க்க சாஸ்திரிகள் பலரின் மேடைப் பிரசங்கங்களைக் கேட்டுள்ள அவனுக்கு தேவதேவியின் தர்க்க ரீதியான பிரசங்கம் ஆச்சர்யத்தையும் அவளிடம் அபரிமிதமான மதிப்பையும் அவனுக்கு உண்டு பண்ணியது. “நீங்கள் சொல்லுவது அவ்வளவும் உண்மை. உயிர் கொடுக்கும் பிரத்தியட்ச தெய்வமான பூதேவிக்குக் கொடுத்த உயிரை நீடித்து வைக்கும் சக்தி இல்லாமல் போய் விடாதென்பதை யாரும் ஒப்புக் கொண்டே தீரவேண்டும். ஆனால், பூதேவியின் அந்த மர்மமான ஆச்சர்ய சக்தியை உணர்ந்து ஒரு மனிதன் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்பதை ஜனசமுதாயம் நம்பவே நம்பாது. ஏனெனில் மனித வரலாறு நூலில் இதற்கு முன்மாதிரியே கிடையாது” என்றான்.
தேவதேவி ஒரு நெடுமூச்செறிந்தாள். ஒரு கணம் அவளுடைய முக மண்டலத்தில் ஒரு கவலையும் துயரமும் பிரதிபலிப்பதைப்போல பாலாஜிக்குத் தோன்றியது. கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டோமோ, சகஜமாகப் பேசுகிறாளேயென்று ஏமாந்து அத்துமீறிக் குறுக்கு விசாரணை செய்து விட்டோமோ என்று அஞ்சிய பாலாஜி “கன்னி மாதா! நான் கேட்டது தவறானால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்” என்றான்.
“இல்லை நண்பரே! இல்லை! நீங்கள் கேட்டதில் தவறொன்றுமில்லை. நூற்றாண்டுகள் எவ்வளவு கழிந்த போதிலும் மனித வர்க்கம் இன்னும் பழையபடி மாறாமலேயிருக் கிறதென்பதைத் தான் உங்களுடைய கேள்வி சுட்டிக் காட்டுகிறது. உங்களைப் போலொத்த சமஸ்கிருத விற்பன்னரைச் சந்தித்து எவ்வளவோ நூற்றாண்டுகளாயிற் றென்று நான் சொன்னேன் அல்லவா? சுமார் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பும் இப்படித்தான் ஒருவர் என்னோடு வாதாடினார். மரணத்தை ஒத்தி வைக்கும் சக்தி மனிதர்களுக்கு இருக்கவே முடியாதென்று அவர் ஒரேயடியாகச் சாதித்தார். என்னைப் போலவே அழியாவரம் பெற்றிருக்கும் ரகசியத்தை அவருக்கும் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லி ஒரு நிபந்தனை விதித்தேன். அந்த நிபந்தனைக்கு உட்பட மறுத்ததோடல்லாமல் என்னையும் அவமதித்து அதோ அந்த நிலா முற்றத்தில் அவர் உயிரை விட்டார்” என்றாள் தேவதேவி. இதைச் சொல்லுகையில் அவளுடைய குரல் தழுதழுத்தது.
“தேவி! அந்த மனிதரின் மரணத்துக்கு உண்மையில் நீங்கள் இவ்வளவு மனம் வருந்துவது எனக்குப் புரியவில்லை. அவமதித்த மனிதரிடம் இவ்வளவு பச்சாத்தாபமும் இரக்கமும் காட்டுவதை இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன்”, என்றான் பாலாஜி. இதைச் சொல்லும் பொழுது வாழ்க்கையில் வேறு என்றும் அடைந்திராத அளவுக்கு அவன் பரபரப்படைந்திருந்தான். தேவதேவி சொல்லியதிலிருந்து சந்திரிகாவின் வரலாறு அவ்வளவும் எழுத்துக்கு எழுத்து உண்மையென்பதை இப்பொழுது அவனால் நம்பாமலிருக்க முடியவில்லை.
தேவதேவி இன்னொரு பெருமூச்சு விட்டாள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குள்ளாக இதயத்தின் அடி வாரத்திலே பதுங்கியிருந்த ஒரு நிரந்தரமான துக்கம் அந்தப் பெருமூச்சில் பிரதிபலிப்பதைப் போல பாலாஜிக்குத் தோன்றியது. அவள் சொன்னாள்:
‘‘நண்பரே! என்னுடைய மனவேதனையை எவரிடமாவது வாய்விட்டுச் சொன்னால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்குமென்று அநேகம் சந்தர்ப்பங்களில் நான் எண்ணியதுண்டு. ஆனால், என்னுடன் சரிசமதையாக அமர்ந்து உரையாடும் யோக்கியதையுடைய ஒரு அறிவாளியை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இப்பொழுதுதான் நான் சந்திக்கிறேன். இவ்வளவு காலமும் இந்த உயிரை நான் சுமந்து கொண்டிருக்கும் ரகசியம் யாருக்குத் தெரியும்? இறவாவரம் பெற்றுப் பெருமையுடன் நான் வாழ்வதாக அறிவற்றவர்கள் நினைப்பார்கள். உண்மையைச் சொல்லப் போனால் இந்தக் காட்டுமிராண்டி ஜனங்களுக்கு மத்தியில் பிசாசைப்போல, ஒரு பயமூட்டும் பெண் பூதத்தைப் போல வாழும் வாழ்க்கையை நான் விரும்பவேயில்லை, ஏன், யாருக்காக நான் வாழ வேண்டும் என்று எவ்வளவோ தடவை என்னை நானே கேட்டுக் கொண்டதுண்டு. அப்பொழுது எல்லாம் என் அந்தராத்மா எனக்கு என்ன சொல்லி வந்தது தெரியுமா? வாழ்க்கையில் ஒரே ஒரு மனிதரைத்தான் இதயபூர்வமாக நான் காதலித்தேன். எப்படியும் அவரைப் பதியாக அடையாமலிருப்பதில்லை என்று விரதம் கொண்டேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த ஆசை நிராசையாகி விட்டது. எவருக்குச் சர்வத்தையும் நான் அர்ப்பணம் செய்ய விரும்பினேனோ அவரை என் கரத்தினாலேயே மிலேச்சத்தனமாகப் படுகொலையும் செய்ய நேரிட்டு விட்டது. அந்தப் பாபத்தைக் கழுவ அன்று தொட்டு இன்றுவரை நான் அனுஷ்டித்துவரும் கடும் விரதத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அது போகட்டும். விஜயகேசரி என்ற அவர் எப்படியும் திரும்பி வருவாரென்று என் அந்தராத்மா இடைவிடாமல் எனக்கு அறிவுறுத்தி வருகிறது. அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே உயிரை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். என் வைராக்கியமே என் வாழ்வை நீடிக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கொலை செய்யப் பட்ட ஒருவர் மறுபடி இந்நாட்டுக்கு வருவதாவது, என்னைப் பார்ப்பதாவது என்று எண்ணி நீங்கள் கேலி செய்யலாம். ஆனால், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கையே வாழ்வின் வழிகாட்டி” என்றாள் தேவதேவி.
“உங்கள் வரலாறு ஆச்சரியமாயிருக்கிறது அம்மா! இது மாதிரியான தத்துவார்த்த வாதங்களில் மிகவும் பிரியமுடையவன் என் மகன் ஜோதிவர்மன். அவன் சகல சாஸ்திர விற்பன்னன் என்பது மட்டுமல்ல, பன் மொழிப் புலவர். ஆஹா, அவன் பேச்சைக் கேட்டாலே ஒரு ஆனந்தமாயிருக்கும் தாயே! அந்த மகா பண்டிதன் தங்கள் அரண் மனையிலே பேச்சு மூச்சு இல்லாமல் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறான். கிருபை செய்து அவனை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவன் உங்கள் அடைக்கலம்!” என்றான் பாலாஜி.
தேவதேவி எதிரில் மேஜைமீது தூரதர்சினியைப் போலிருந்த ஒரு கருவியைப் பல கோணங்களிலும் திருப்பினாள்.
ஜோதி படுத்திருக்கும் அறையின் திசையில் அக் கருவியை அவள் திருப்பி வைக்க முயற்சிப்பதைப் போல பாலாஜிக்குத் தோன்றியது. விரும்பிய கோணத்தில் கருவியைத் திருப்பி வைத்தபின் அதன் அடியிலிருந்த ஒரு பித்தானை அவள் சுழற்றவும் சுவற்றில் ஒரு நிழல் படம் தெரிந்தது. அதை பாலாஜி கவனித்துப் பார்த்தான். கட்டிலில் மீ து ஒருவர் படுத்திருப்பதைப் போலவும் அவன் அருகில் ஒரு பெண் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல வும் தெரிந்த அந்த நிழல் படத்தைக் கவனித்தவுடன் “அதுதான் என் மகன் ஜோதி அம்மா! எப்படி நினைவு நீச்சு இல்லாமல் சுருண்டு கிடக்கிறான் பாருங்கள்” என்றான்.
“அவன் பக்கத்திலிருக்கும் அந்தப் பெண் யார்?” என்று கேட்டாள் தேவதேவி.
“அவள் பெயர் சித்ரா. உக்கிரசேனரின் மகள்” என்றான் பாலாஜி.
“அவள் உங்களுடன் வரக் காரணம்? சித்ராவை அரண்மனைக்கு அழைத்துவர எவ்வளவு துணிச்சல் அந்தக் கிழவனுக்கு?” என்று கேட்டாள் தேவதேவி.
ஜோதிக்கு சித்ரா மாலையிட்ட விவரத்தைப் பாலாஜி எடுத்துச் சொல்லிய பொழுது “ஓ! அப்படியா? இருந்தாலும் சித்ரா வந்திருப்பதைப் பற்றி உக்கிரசேனன் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமலிருந்தது மன்னிக்க முடியாத பெரும் குற்றம்” என்றாள் தேவதேவி.
“உக்கிரசேனர் தங்களிடம் மிகுந்த விசுவாசம் உடையவர் தாயே! அவரைப் போலொத்த ராஜவிசுவாசியை எங்கள் நாட்டில்கூட நான் பார்த்ததில்லை. அறியாமல் செய்த குற்றத்துக்கு எங்களை உத்தேசித்தாவது அவரை மன்னிக்க வேண்டும்!” என்று கூறிய பாலாஜி “கற்குகைக்குள் இருக்கும் ஜோதியை இந்தக் கருவி எப்படித் திரைப்படம் போலக் காட்டுகிறது? ஆச்சர்யமாயிருக்கிறதே!” என்றான்.
“இதில் மாயமோ மந்திரமோ ஒன்றுமில்லை நண்பரே! இந்த விஞ்ஞானக் கருவிக்கு மலைகளைக் குடைந்து கொண்டு போய் உள்ளேயிருக்கும் பொருட்களைக் காட்டும் சக்தி உண்டு” என்றாள் அவள்.
“மனித சரீரத்தைத் துளைத்துக் கொண்டு போய் உடலுக்குள் இருக்கும் எலும்புக் கூடுகளை மாத்திரம் படம் பிடிக்கும் கருவியை நான் பார்த்திருக்கிறேன். எக்ஸ்ரே கருவி என்று எங்கள் நாட்டில் அதைச் சொல்லுவது வழக்கம். ஆனால், இது மாதிரியான ஒரு அதிசயக் கருவியை நான் எங்கும் கண்டதில்லை. இதைக் கொண்டுதான் நாங்கள் இந்நாட்டில் வந்து இறங்கியதையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான் பாலாஜி.
“ஆம்! உங்கள் ஊகம் சரியானதுதான். தன் உதவியைக் கொண்டு தினசரி இரண்டு மூன்று தடவை நான் தீவைச் சுற்றிப் பார்ப்பதுண்டு. நீங்கள் தென்திசைக் கரையில் இறங்கிக் காட்டைத் தாண்டிப் பொட்டல் வெளி வழியாக வந்து கொண்டிருந்த பொழுது உங்களைத் தற்செயலாகக் கண்டேன்! உடனே உக்கிரசேனருக்கு ஒலி பெருக்கியின் மூலம் தகவல் கொடுத்து உங்களை அழைத்து வர ஏற்பாடு செய்தேன். இதோ நீங்கள் கடந்து வந்த பொட்டல் வெளிப் பிரதேசத்தை நீங்களே பாருங்கள்!” என்று சொல்லிய தேவதேவி அந்தக் கருவியை ஜன்னல் பக்கமாகத் திருப்பி அதன் மற்றொரு முனையிலிருந்த சிறு துவாரத்தின் வழியாகப் பாலாஜியைப் பார்க்கச் சொன்னாள்.
தூரதர்சினிக் கருவியை இரண்டு கைகளினாலும் பிடித்துக் கொண்டு பாலாஜி பார்க்கையில் அவனிடம் எதையோ பார்த்துவிட்டு மகா ஆக்ரோஷமடைந்த தேவதேவி “அந்நியனே! நில்! எட்டி நில்! அசையாமல் நில்! என் கேள்வி களுக்குச் சரியான பதில் சொல்லாவிட்டால் உன்னை அரைக் கணத்தில் எரித்துச் சாம்பலாக்கிவிடுவேன்!” என்று உச்சஸ்தாயியில் முழங்கிய வண்ணம் திரிசூலத்தை எடுத்துக் கொண்டு கட்டிலை விட்டுப் பளிச்சென்று எழுந்தாள்.
முற்றிலும் எதிர்பாராத விதமாகத் தேவதேவி மகா ஆக்ரோஷத்துடன் திரிசூலத்தை எடுத்துக் கொண்டு கட்டிலை விட்டு வேகமாக எழுந்திருக்கவே பாலாஜி பதை பதைத்துப் போனான். தூரதர்சினியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பளிச்சென்று பின்னால் நகர்ந்து கை கட்டி வாய் பொத்திக் கொண்டு “கன்னி மாதா! இந்த ஏழையிடம் திடீரென்று இத்தனை கோபம் ஏன்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே? தங்கள் கோபத்துக்குப் பாத்திரமாக நான் என்ன அபசாரம் செய்தேன் தேவி?” என்று புலம்பினான்.
சில வினாடிகளுக்கு முன்புவரை சரளமாகவும், சுமுக மாகவும் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று நரசிம்ம மூர்த்தியைப்போல உக்கிரமடைந்தது அவனுக்கு ஆச்சர்ய மாயிருந்தது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தீப்பொறி பறக்கும் தீட்சண்யமான பார்வையுடன் நெருங்கிய தேவதேவி அன்று தன்னைப் பழிவாங்கிவிடப் போவது நிச்சயமென்று அவன் தீர்மானித்துக் கொண்டான். அதே சமயம் அவ்வளவு கோபத்துடனிருந்த மலைக்கன்னியின் சரீரத்திலும், திரிசூலத்தைப் பற்றியிருந்த கரத்திலும் ஒரு நடுக்கத்தையும், பதட்டத்தையும் அவன் கண்டான்.
சிறிது நேரம் வரையில் பேச்சு மூச்சு இல்லாமல் பாலாஜியின் கையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தேவ தேவி, “அந்த விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தைக் கழற்றிக் கீழே வை!” என்று உத்தரவிட்டாள். அவள் இப்படிச் சொல்லிய மாத்திரத்தில் தேவியின் திடீர் கோபத்துக்கும். அவள் உணர்ச்சிப் பரவசம் அடைந்ததற்கும் உண்மையான காரணமென்ன என்பது பாலாஜிக்கு மின்னலைப் போல உதயமாயிற்று. ஜோதிவர்மனின் தகப்பனார் விஜயவர்மன் வீட்டுச் சென்ற இரும்புப் பெட்டியில் சந்திரிகா எழுதி வைத்திருந்த வரலாறுகளுடன் கூடிய சர்ப்பச் சின்னம் பதித்த ஒரு மோதிரமும் தங்கச் சங்கிலியும் இருந்ததையும், மோதிரத்தையும் சங்கிலியையும் மட்டும் ஜோதிவர்மன் எடுத்து அணிந்து கொண்டதையும் வாசக நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள். செம் பவளத் தீவுக்குப் புறப்பட்டு வருகையிலும் அவற்றை ஜோதிவர்மன் அணிந்து கொண்டு தான் வந்தான். ஜோதியின் விரலுக்குப் பெரிதாயிருந்த மோதிரம் அவன் பிரக்ஞையற்ற நிலைமையில் புரண்ட பொழுது நழுவிக் கீழே விழுந்துவிட்டது. கீழே விழுந்த மோதிரத்தைப் பாலாஜி தன்னுடைய விரலில் அணிந்து கொண்டிருந்தான்.
தேவதேவி பார்க்கச் சொல்லிய தூரதர்சினிக் கருவியை இரண்டு கைகளினாலும் பிடித்துக் கொண்டு பாலாஜி பார்த்த பொழுதுதான் அவன் விரலில் இருந்த சர்ப்ப மோதிரத்தைத் தேவதேவி கவனித்திருக்க வேண்டும். அந்த மோதிரத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவள் உணர்ச்சி பரவசமடைந்தது. “சந்திரிகா எழுதிவைத்திருக்கும் வரலாறு முழுவதும் எழுத்துக்கு எழுத்து உண்மைதான். சந்திரிகா எழுதியிருப்பதைப் போல இந்த மோதிரம் சந்திரிகாவின் கணவன் விஜயகேசரிக்கு தேவதேவி கொடுத்த அதே மோதிரம்தான். 2600 ஆண்டுகளாக தேவதேவி சிரஞ்சீவியாயிருப்பது சாத்தியமா என்பதைச் சந்தேகிக்கிறாயே! 2600 வருடங்களுக்கு முன் சந்திரிகா எழுதிவைத்த வரலாறும் சர்ப்ப மோதிரமும் தேவதேவிக்கு எப்படித் தெரியும்? சர்ப்ப மோதிரத்தைப் பார்த்ததும் தேவதேவி பரபரப் படைந்திருப்பது அந்த வரலாறு முற்றிலும் உண்மையென்பதை ருசுப்படுத்தவில்லையா?” என்று பாலாஜியைக் கேட்டதைப் போலிருந்தது.
பதில் பேசாமல் தேவதேவி சொல்லியபடி சர்ப்ப மோதிரத்தைக் கழட்டி மேஜையின்மீது வைத்து விட்டு பாலாஜி ஒதுங்கி நின்றான். அந்த மோதிரத்தைக் கையிலெடுத்து பல தடவை அதைத் திருப்பி திருப்பிப் பார்த்த மலைக்கன்னி “இந்த மோதிரம் உனக்கு ஏது? உண்மையைச் சொல்லு!” என்றாள்.
அவ்வளவு நேரமும் நீங்கள், உங்கள் என்று பன்மையில் மரியாதையாகப் பேசி வந்தவள் பரபரப்பில் மரியாதை களையெல்லாம் மறந்து ஒருமையில் பேசியதைக் கண்ட பாலாஜி, அந்த மோதிரம் தேவிக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொண்டான். “உங்களுடைய கேள்வி எனக்குப் புரியவில்லை தேவி! இது ஜோதியின் மோதிரம். அவனுடைய தாயார் செய்துபோட்டது!” என்று அமைதியாகச் சொன்னான்.
ஒருகணம் மோதிரத்தைப் பார்த்துக் கொண்டே மௌன மாயிருந்தாள். பிறகு மோதிரத்துக்குப் பின்னால் இருக்கும் “ம” என்ற எழுத்தின் அர்த்தமென்ன? என்று கேட்டாள்.
“ஜோதியின் தாயார் பெயர் மரகதம். அந்த அம்மாளின் பெயரைக் குறிக்கிறது அந்த எழுத்து” என்று ஒரு பெரிய பொய் சொல்லிவைத்தான் பாலாஜி.
சற்று நேரம் வரையில் அந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பாலாஜி சொல்லிய சமாதானத்தில் திருப்தியடைந்தவளைப் போல மோதிரத்தை அவனி டமே திருப்பிக் கொடுத்தாள் தேவதேவி, மீண்டும் பழையபடி கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டு “நண்பரே! உங்களை ரொம்பப் பயமுறுத்திவிட்டேனா” என்றாள். சற்று முன்னால் பேசிய அதே மலைக்கன்னியா இப்பொழுது பேசுகிறாளென்று நினைக்கும்படி யாயிருந்தது அவளுடைய குழைவான குரல்.
“பயமுறுத்தவா? என் உயிர் நூவிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தது தேவி! பெரிய இடத்து சிநேகம் உயிராபத்து என்று முதியவர்கள் சொல்லுவது எவ்வளவு உண்மையென்பதை இப்பொழுதுதான் அனுபவரீதியில் தெரிந்து கொண்டேன்!” என்றான் பாலாஜி.
“அந்த மோதிரம் என் மூளையையே குழப்பிவிட்டது அய்யா? இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நான் காதலித்த விஜயகேசரிக்கு இதே போன்ற ஒரு மோதிரமும் சர்ப்பச் சின்னம் பதித்த ஒரு தங்கச் சங்கிலியும் கொடுத்தேன். அவ்விரண்டையும் அவன் மனைவி சந்திரிகா அணிந்து கொண்டிருந்தாள். மோதிரத்திலும் சங்கிலியிலும் என் பெயரைக் குறிக்க “ம” என்ற எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அதே மாதிரி மோதிரத்தை உங்களிடம் பார்த்தவுடன் எனக்குப் பயித்தியம் பிடித்த மாதிரியாகி விட்டது!” என்றாள் அவள்.
“தேவி! தங்களிடம் எனக்கு ஒரே ஒரு வரம் வேண்டும்!” என்றான் பாலாஜி.
”வரமா? வரம் கொடுக்க நான் கடவுளோ அல்லது தேவனோ இல்லை! ஆயினும் உங்களுக்கு என்ன வேண்டும். கேளுங்கள் பார்க்கலாம்” என்றாள் மலைக்கீன்னி.
“பிரமாதமாக ஒன்றுமில்லை தேவி. நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் ஒளியாமல் மறைக்காமல் உண்மையைச் சொல்லுகிறேன். ஆனால், தயவு செய்து மறுபடியும் என்னை இப்படிப் பயமுறுத்தாதீர்கள். வயதான இந்தச் சரீரம் அதிர்ச்சியைத் தாங்காது. திடீரென்று இதயம் நின்று போய்விடும்” என்று பாலாஜி சொல்லுகையில் தேவதேவி மணியோசையைப்போல கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தாள்: நெருப்பைக் கக்கிய சில நிமிடங்களுக்குள் வாய் விட்டுச் சிரிக்கும் அந்தப் பெண்மணியின் விசித்திரமான போக்கைப் பார்த்து வியந்து கொண்டு நின்றான் பாலாஜி. அதே சமயம் ஜோதியைத் தேவதேவி பார்க்க வருவதற்குள் ஜோதியின் கழுத்திலிருக்கும் சர்ப்பச் சின்னம் பதித்த தங்கச் சங்கிலியைக் கழட்டி வைத்துவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பெரிய விபரீதம் ஏற்பட்டுவிடுமென்றும் அவன் தனக்குள் யோசனை செய்து கொண்டுமிருந்தான்.
தேவதேவியைச் சந்திக்க பாலாஜி சபாமண்டபத்துக்கு வந்தபொழுது இரவு சுமார் எட்டு மணியிருக்கும். அவளுடன் பேசிக்கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடமாகப் போய்விட்டது. ஜோதியின் அபாயகரமான நிலைமையைப் பற்றிச் சொல்லி அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று மறுபடியும் தேவதேவியிடம் அவன் கேட்டுக்கொண்ட பொழுது “அரண்மனை வைத் தியர் கொடுத்த மருந்தில் நாளை சூரியாஸ்தமனத்துக்குள் குணம் தெரிய வேண்டும். அதன் பிறகும் குணம் தெரியா விட்டால் நான் வந்து பார்க்கிறேன். நான் கொடுக்கக் கூடிய மருந்து மிகவும் கடுமையானது. உயிரையே ஒரு உலுக்கு உலுக்கும், அவ்வளவு உக்கிரமானது கடைசியாகவே அந்த மருந்தைப் பரீட்சிக்க வேண்டும். இனி நீங்கள் போகலாம். கவலையும் பயமும் இல்லாமல் படுத்துத் தூங்குங்கள்!” என்று தேவதேவி சொல்லியனுப்பினாள்.
பரபரப்பானதும் விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது மான இந்தப் பேட்டி முடிந்ததும் வந்த வழியாகவே திரும்பிய பாலாஜிக்கு வழியில் ஒருவர் கூட இல்லாமல் பார்த்தவிடமெல்லாம் ஒரே சூன்யமாயிருந்தது உள்ளூர பயத்தைக் கொடுத்தது. கீழ் அடுக்கு களில் இருந்த பெண்கள் எல்லோரும் அவரவர்களுடைய வேலை முடிந்து படுக்கப் போய் விட்டார்கள். கதவு ஓரங்களில் ஈட்டியுடன் நின்ற காவலாளிகளைக்கூட அந்த நேரத்தில் காணோம். கடைசிப் படிக்கட்டைத் தாண்டி அவன் கீழே கால் அடி எடுத்துவைத்த பொழுது பின்னால் ஏதோ கிரீச்சென்று சப்தம் செய்வதைப் போல அவனுக்குத் தோன்றியது. திரும்பிப் பார்க்கலாமா கூடாதா என்று யோசித்துக் கொண்டே கொஞ்சத் தூரம் சென்ற பிறகு அவன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். படிக்கட்டுகளின் மேலேயிருந்த இரும்புக் கதவுகள் மூடிக்கொண்டிருப்பதைக் கண்டதும் கதவு மூடப்பட்ட சப்தமே தனக்குக் கேட்டிருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்துக் கொண்டான். ஆள் இல்லாத சமயத்தில் அந்தக் கதவுகள் எப்படி மூடிக்கொண்டன? பின்னால் யாரேனும் மறைந்திருந்து. கதவைத் தாழிட்டார்களா? அல்லது இயந்திர விசையினால் தான் வெளியே வந்தவுடன் கதவு தானாக மூடிக்கொண்டதா? என்பதை பாலாஜியினால் நிரணயம் செய்து கொண்டிருக்க முடியவில்லை. அந்த மாய மாளிசையில் எல்லாமே ஒரு மந்திரசக்தியினால் இயங்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது.
சுத்தசூனியமாயிருந்தவராந்தாவையும் வெளி மண்டபத்தையும் தாண்டி ஜோதிவர்மன் படுத்திருந்த அறைக்கு வந்தபொழுது அந்த அறையின் வாசலில் உக்கிரசேனர் பாலாஜியின் வரவிற்காகக் காத்திருந்தார். பாலாஜியைக் கண்டவுடன் பரபரப்போடு ஓடிவந்த அம்மனிதர் பாலாஜியின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு “நண்பரே! உங்களால் இன்று என் உயிர் தப்பியது. கன்னிமாதா இருந்த கோபத்தில் அவள் என்னைச் சுட்டுப்பொசுக்கிச் சாம்பலாக்கியிருப்பாள். நீங்கள் என்மீது கருணை வைத்து எனக்காகப் பரிந்து பேசியிராவிட்டால் என் கதி அதோகதியாயிருக்கும். இன்று நீங்கள் செய்த பேருதவியை என் உயிர் உள்ளவரையில் மறக்கமாட்டேன். இதற்குப் பதில் உதவி செய்யும் சந்தர்ப்பம் எப்பொழுதாவது ஒரு சமயம் எனக்கு வரும்பொழுது இந்தச் சரீரத்தை உங்களுக்குச் செருப்பாகத் தைத்துப் போடுவேன்!” என்று உருக்கமாகவும் இதய பூர்வமாகவும் சொன்னார்.
“நீங்கள் இவ்வளவு தூரம் நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. வில்லியம் இறந்தது அவனுடைய விதி வசத்தினால். அதற்கு, பாவம், நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்னொரு விஷயமும் உங்களுக்குச் சொல்லி வைக்க வேண்டும். சித்ரா இங்கு வந்திருப்பதைப் பற்றி நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே யென்று தேவதேவி பிரமாதமாகக் கோபித்தாள்! அதற்கும் சமாதானம் சொல்லி தேவதேவியைச் சாந்தப்படுத்தினேன்” என்றான் பாலாஜி.
“தேவதேவி சுமுகமாகப் பேசினாளா?” என்று உக்கிரசேனர் விசாரித்தார். அவர் இதைக் கேட்டமுறை தேவியுடன் என்ன பேசினீர்களென்று கேட்பதைப் போலிருந்தது. உக்கிரசேனருக்கு எந்த அளவிற்குச் சொல்லுவது உசிதமோ அந்த அளவிற்குச் சொல்லிவிட்டு, “தேவி மகத்தான சக்தி வாய்ந்தவள் என்பதில் சந்தேகமில்லை. அவள் அமானுஷ்யமானவள். நாளை மாலைக்குள் ஜோதியின் ஜூரம் குறையாவிட்டால் தானே நேரில் வந்து பார்ப்பதாகக் கன்னிமாதா சொல்லியிருக்கிறாள்!” என்றான்.
இதை உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த சித்ரா. “அப்படியா? தேவி மனது வைத்தால் ஜோதி நிச்சயம் பிழைத்துவிடுவான்!” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தாள்.
“நீ இன்னும் தூங்கவில்லையா சித்ரா! தூங்கியிருப்பாய் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றான் பாலாஜி.
“ஜோதி குணமடைந்து எழுந்திருக்கும் வரையில் சித்ரா கண்ணுறங்கமாட்டாள். அவள் படும் வேதனையை உத்தேசித்தாவது ஜோதிவர்மன் பிழைத்து எழுந்திருக்க மாட்டானா என்றிருக்கிறது?” என்றார் உக்கிரசேனர்.
பாலாஜி ஜோதியைப் பார்த்துவிட்டு தன்னுடைய அறைக்குத் திரும்பிய பொழுது அங்கு முனிசாமி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான். அறையின் மத்தியில் ஒரு பெரிய குத்துவிளக்கு நான்கு முகங்கள் வைத்து எரிந்து கொண்டிருந்தது. மேஜையின் மேல் கொஞ்சப் பழமும் பாலும் வைக்கப்பட்டிருந்தன. தேவியைப் பேட்டி கண்டு விட்டு வியர்த்து விறுவிறுக்க வந்தவனுக்கு அந்தப் பாலும் பழமும் தேவாமிர்தம் போலிருந்ததென்று கூறவேண்டும்.
பாலாஜிக்கு அன்றிரவு தூக்கம் வரும்போல் இல்லை. உடல் சோர்ந்திருந்த பொழுதிலும் பரபரப்படைந்திருந்த மனம் தூக்கத்தை நெருங்க முடியாதபடி தடுத்து வைத்துக் கொண்டிருந்தது.
முகத்தைக் கழுவிக்கொண்டு படுக்கலாமென்று நினைத்து தீவட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு ஸ்நான அறைக்குள் நுழைந்தான். முகத்தைக் கழுவிக்கொண்டு அவன் தலை நிமிர்ந்த பொழுது அந்த அறையில் அதற்கு முன் காணாத ஒரு காட்சியைக் கண்டு அவன் ஒரு கணம் அப்படியே மலைத்துப்போய் நின்றான்.
மகாராணி தேவதேவியைப் பேட்டி காணப் போவதின் முன்னால், பாலாஜி அதே அறையில் தான் ஸ்நானம் செய்தான். அப்பொழுது இடுப்பளவு உயரத்துக்கு இரண்டு பெரிய பித்தளைத் தவலைகள் ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக சுவற்றோடு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவ்விரண்டு தவலைகளையும் அங்கு காணோம். அவற்றுக்குப் பதிலாக ஒரு சிறிய பாத்திரத்தில் ஜலம் பிடித்து வைக்கப் பட்டிருந்தது. தவலைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சாதாரணமாக இரண்டு ஆட்கள் நுழையும் அளவு அகலத்துக்கு ஒரு நிலப்படியிருப்பதையும் அதில் ஒரு கதவு இருப்பதையும் பாலாஜி கண்டான். அதே இடத்தில் முன்பு தவலைகள் இருந்தபடியினால் தான் அந்தக் கதவு தன்னுடைய கவனத்தில் படாமல் தப்பியிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது.
தீவட்டியை அருகில் கொண்டுபோய்ப் பார்த்த பொழுது அந்தக் கதவுக்கு பூட்டு ஏதுமில்லையென்பது தெரிந்தது. அழுத்தித் தள்ளியவுடன் உட்புறமாகக் கதவு திறந்து கொண்டது. கீழ்நோக்கிப் படிக்கட்டுகள் இருப்பதைக் கண்டவுடன் அது ஒரு சுரங்கப்பாதை யாயிருக்க வேண்டுமென்று பாலாஜிக்குத் தோன்றியது.
தூக்கம்தான் வருவதாயில்லை. இப்பாதை வழியாகப் போய்ச் சுரங்கம் எங்கே முடிகிறதென்பதைப் பார்த்தால் என்ன என்று அவன் நினைத்தான். அரண்மனைக்குள் அந்தரங்கங்களை உளவு பார்ப்பதாக தேவதேவிக்குத் தெரிந்து போய் விட்டால் என்ன கதியாகுமென்பதை நினைவுபடுத்திக் கொண்டபொழுது “நமக்கு ஏன் வீண் வம்பு. பேசாமல் போய்ப் படுத்துக் கொள்வோம்!” என்று தோன்றியது.
தீவட்டியுடன் சுரங்கத்துக்கு ஏழெட்டுப்படி இறங்கி நின்றுகொண்டு அவன் மறுபடியும் யோசித்தான். வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. புதிதாக ஒரு ஆபத்தும் வரப் போவதில்லை. சாவதற்கு முன்னால் தேவதேவியின் அந்தரங்கம் முழுவதையும் தெரிந்து கொண்டாவது செத்தால் ஆத்மாவிற்குச் சற்று திருப்தியேற்படும்.
இப்படித் தனக்குள் பேசிக்கொண்டு பாலாஜி சுரங்கத்தைச் சோதித்துப் பார்த்துவிடுவதென்ற முடிவுக்கு வந்ததும் மளமளவென்று கீழே இறங்கினான். அப்பொழுது தேவதேவியின் அரண்மனையிலிருக்கும் வானளாவிய மலைச் சிகரத்தின் நடுவயிற்றுக்குள் இறங்கிப் போவதைப் போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. மலையைக் குடைந்து அதில் ஒரு அழகான அரண்மனையைச் சிருஷ்டித்திருப்பதுடன் பல சுரங்கங்களையும் வெட்டியிருப்பதை அவன் வியந்துகொண்டே இறங்கினான்.
மொத்தம் 25 படிகள் இறங்கியவுடன் படிகள் அதோடு முடிந்துவிட்டன. படிகளின் கீழே இடதுபுறமாக சமநிலத்தில் ஒரு அகலமான பாதை சென்றது. இருபது அடி உயரமும் பத்து அடி அகலமும் உள்ள அந்தப் பாதை தோற்றத்திலே ரயில் வண்டித் தொடர்கள் செல்ல மலையைக் குடைந்து அமைத்த கணவாயைப்போலிருந்தது. அதன் வழியாகப் பாலாஜி தொடர்ந்து சென்றான், சுமார் ஐம்பது கெஜதூரம் சென்றவுடன் கையிலிருந்த தீவட்டியில் எண்ணெய்ப்பசை முடிந்து போய் தீவட்டி அணைந்துவிட்டது. கும்மிருட்டு அந்தக் குகைப் பாதையை மண்டிக்கொண்டது. இதன் பிறகும் தொடர்ந்து போய் சுரங்கத்தின் முடிவைப் பார்ப்பதா அல்லது போகாமல் வந்த வழியாகவே திரும்பி விடுவதா என்று பாலாஜி ஒரு கணம் நின்று யோசித்தான். இவ்வளவு தூரம் வந்த பிறகு சுரங்கத்தின் முடிவைத் தெரிந்து கொள்ளாமல் திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை. முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடிவுவரை போய்ப் பார்த்துவிடுவதென்ற தீர்மானத்துடன் சுரங்கத்தின் ஓரமாகப் பக்கவாட்டுச் சுவற்றைத் தடவிக் கொண்டே அவன் கவனமாக நடந்தான்.
படிகளின் மேலேயிருந்து யாரோ பேசும் குரல் வந்தது. பாலாஜி ஒருகணம் தயங்கி நின்றான். மீண்டும் அதே குரலைக் கேட்டதும் அது தேவதேவியின் குரல்தானென்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவன் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அவன் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் நின்றான்.
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.