ஜனனியிலிருந்து சிந்தா நதி வரை





(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தாய்மார்களே, பெரியோர்களே, நமஸ்காரம். சகோதர சகோதரிகளே ஆசிர்வாதம். நெடுநாட்களுக்குப் பின், இந்தப் பக்கங்களில் உங்களைச் சந்திக்கிறேன். நான் பிறந்தகம் வந்திருக்கிறேன்.

எழுத்தாளனுக்கு இருந்தாலும் இருக்கலாம், எழுச் துக்குப் பிறந்தகம் கிடையாது. அது ஒரு எடுப்பார் கைப் பிள்ளை. ப்ளாட்பாரத்திலிருந்து, ஐந்தடுக்கு மாடிவரை, அங்கிருந்து பரண்சாலை வரை – அது திரியும் ரோந்து அப்படி.
விருதைப் பெற நான் டில்லிக்குச் சென்றிருந்தபோது, டில்லி வானொலியில் என்னைப் பேட்டி கண்டார்கள். பேட்டி கண்டவர் பேட்டி வாக்கில், ‘ஜனனியிலிருந்து சிந்தா நதி வரை” என்ற சொற்றொடரை உபயோகித்தபோது. என்னில் நேர்ந்த கிளர்ச்சியை அவர் அறியமாட்டார். ஏனெனில் 1948 இல் கலைமகளில் ஜனனி வெளிவந்தபோது. அதன் மூலம் தான், நான் என் எழுத்துக்களில் சாதாரண மாகக் கையாளும் விஷயம், நான் கதை சொல்லும் போக்கு என் உரைநடை இத்யாதி அம்சங்கள் வாசகர் கவனத்தைப் பற்றி இழுத்தன.
அந்தக் கதையை எழுதினபோது எனக்கு வயது 32. அதை எழுதியதன் அடிப்படை நோக்கம் எழுத்து மூலமேனும் அவளைப் பழிவாங்க வேண்டும். அவளை மனித ஜன்மம் எடுக்கச் செய்து அதில் அவளை உழலவைத்து, அவள் என்னைப் படுத்துவதுபோல், அவளும் படவேண்டும் என் வாழ்க்கையில் அப்போது பலவிதங்களிலும் மிக்கச் சோதனையான கட்டம். வேதனை பொறுக்க முடியாமல் ஓரிரவு உயிரை மாய்த்துக்கொள்வதென்று சமுத்திரத்துக்குப் போய்விட்டேன் என்றால் பாருங்களேன்.
கரையோரம் ஒரு ஓடத்தின்மேல் சாய்ந்து நின்றபடி, அலைகளுள் புக ஏற்ற சமயத்துக்குக் காத்துக்கொண்டிருக்கையில்.
யுகாந்தரமாய்ச் சிகரங்களில் வெண்ணுரையைக் கக்கிக் கொண்டு திரண்டுவந்து வியர்த்தமான கோபத்தில், கரையை அறைந்துவிட்டு ஓயாத மறுமுயற்சியில் மீளும் அலைகளில்,
நுண் உணர்வின் உட்செவியில் ஒரு சேதி கேட்டது.
“இதோ நீ பார்த்துக் கொண்டிருக்கிறாயே, உனக்கு முன்னாலிருந்து, உன் மூதாதையர் முன் அவர்கள் மூதாதை யர்க்குமுன், காலம் கடந்த காலத்திலிருந்து ஓயாத இந்தக் கடலியக்கம், இதுவே சிருஷ்டியின் ஒரு சாயல்தான். இதில் நீ உத்தேசித்திருக்கும் உன் சாவு எம்மாத்திரம். ஒரு திவலை காணுமா? இந்த அலைகளுக்கு இன்னும் அலுக்கவில்லை. ஆனால் அதற்குள் உன் வாழ்க்கை உனக்கு அலுத்து விட்டதா? காத்திருப்பதைத் தவிர என்ன வேலை? பிறவியின் நோக்கமே காத்திருப்பதுதானே! ஆகையால் காத்திரு.”
எண்ணத்திலிருந்து மீட்சி எண்ணத்தினால்தான்.
சமூத்திரத்திலிருந்து மீண்டேன் ஆனால் சோதனைகள் குறையவில்லை.
அன்று நான் சீற்றம் கொண்ட வாலிபனாக இருந்தேன். was an angry young man இன்று-இத்தனை நீண்ட பிரயாணமும் வந்துவிட்டேன். புருவங்கள்கூட நரைத்து விட்டன. இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறேன். எதற்கு?
என் எண்ணங்களை, எரிந்துபோன கனவுகளை அசை போடுகிறேன்.
இப்படி மீண்டும். எண்ணங்களை, எரிந்துபோன கனவுகளை நினைவில் வரவழைப்பதில் காகிதக் கப்பல் பிரயாணத்தில் ஒரு புதுப் பரபரப்பை உணர்கிறேன்.
ஜன்னலுக்கு வெளியே, கைக்கு எட்டாத உயரத்தில் ஆடும் செம்பருத்திப் பூவின் சிரிப்பில்,
இருளில், படுக்கையில் என் முகத்தை எரிக்கும் யாருடையதோ பெருமூச்சில், அழுத கண்ணீர் காயுமுன், வானவில் போல், குழந்தை முகத்தில் வெடிக்கும் சிரிப்பில்,
இன்றோ, என்றோ, இனி எப்போ வேணுமானாலும் என் மரத்திலேயே பழுத்துக் கனத்துத் தக்கவன் பறிக்கக் காத்திருக்கும் கனியில், நள்ளிரவில் திடீரென, ஆணோ பெண்ணோ இருளை வெட்டும் வீறலில், தென்னையில் அவளுடைய கொண்டைபோல் முண்டிய இளநீர் முடிச்சில், அஸ்தமித்தபின் கூட்டுக்கு வழி தப்பி, பறக்கும் உயரத்தில் பறவை தெரியாது, பேடுக்குக் கொடுக்கும் குரலின் கூவலில்
நள்ளிரவில் மொட்டை மாடியில் யாரோ ஓடுவது போன்ற திடும் திடுமில் (திருடனா?)
ஒரு ராகத்திலிருந்து ராகத்துக்கு இடையே அதை மாற்றத் துளிர்த்து நிற்கும் அனுஸ்வரத்தின் துடிப்பில்…
கர்ப்பக்ருஹத்தின் இருளில் கர்ப்பூர ஹாரத்தி முகத்தை ஏற்றுகையில் திடீரென அவள் விழி மலர்ச்சியில், கன்னங் களை குழித்த புன்னகையின் மர்மத்தில், மரத்திலிருந்து கழன்று உதிரும் இலையில் வெளிப்படும் ஸஹிக்கொணா துக்கத்தில், வாசலில் கொட்டிய ஆரத்தியின் வாரியிரைத்த ரத்தச் சிவப்பில், அவள் மூக்குத்தியின் ஜ்வலிப்பை நினைவு மூட்டும் கோடை மின்னலின் கொடியில் அவள் தான் அப்படித் தோன்றி கண்ணாமூச்சி காட்டித் திரிகின்றாள்.
‘என்னைப் பார்! என் அழகைப் பார்! காத்திருக்கச் சொன்ன மர்மமும் பொருளும் இதுதானோ என்றுகூடத் தோன்றுகிறது.
என் நெஞ்சத்தின்மேல் அவள் ‘திமி திமி’யில் அவள் உள்ளங்கால்களில் பற்றிக்கொண்ட என் நெஞ்சத்தின் ரத்தக் கசிவுதான் அவள் இட்டிருக்கும் மருதாணி.
விருது விழாவில் நான் நிகழ்த்திய உரையில் சிந்தா நதி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறேன்.
சிந்தாநதி:
நினைவுப்ரவாஹம்
மக்கள், சம்பவங்கள், புழுக்கங்கள், ஏக்கங்கள், உருவங்கள்
உருவகங்கள், ஸ்தூலங்கள், அரூபங்கள்,
நினைவுக்குப் பிடிவழுக்கி, அதீத அனுமானங்கள்,
சொல்லப்படும் சம்பவங்கள், மேம்பாடுக்குக் சொல்பமாய்,
நலுங்கலாய்,ஏன் கட்டடங்கள் கூட இலாது படினும் அவைகளின்
மர்மக் கோடி காட்டலில்
அடித்வனிகளில்
எட்டத்தில் ஏதோ தரிசன சாத்யத்தின் சாயை காட்டிக்கொண்டு
சமயங்களில் மந்த்ரோச்சடனங்கள் போன்ற சப்த நயங்களுடன்
ஸாஹஸம் புரிந்துகொண்டு
வாசகனுள் உறங்கிக்கிடக்கும் சுயப்ரக்ஞையை (அதாவது உயிரின்
ஒருமையை, தேடலில் ஆத்மாவின் தனிமையை)த்
தட்டி எழுப்பி,
கட்டங்களில் சொல்வேகம் கவிதாநயத்தையும் உபநிஷத்தைத்
தன்மையையும் அடைந்து –
இத்தனையும் சேர்ந்துதான் சிந்தா நதி.
நிகழ்ச்சி நினைவில் ஊறி ஊறிச் சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிக் சொல்லி, சொல், பிசிர்விட்டு, சொல்லின் உருவேற்றத்தில் விஷயம் மெருகேறி, ரத்தத்திலேயே தோய்ந்து, நம் மனத் தையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் கவிதையாகி விடுகிறது.
நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஓய்ந்து பின்னோக்கில், வாழ்க்கையைக் காவியமாய்ப் பார்க்கக் கொடுத்து வைக்கும் போது அமைதியின் சிறகுகள் ஆசியின் மெத்தில், மேல் இறங்கும்போது, காத்திருக்கச் சொன்னதன் காரணத்தை அனுபவமாகச் சில சமயங்களில் உணர்கிறோம்.
என் வாழ்க்கையின் அந்திம வேளையில், என் நக்ஷத்ரத் தின் வெளிச்சத்தில் சிந்தா நதிக் கரையோரம், தன்னந் தனிமையில் உட்கார்ந்து எண்ணங்களை அசைபோடுகிறேன்.
1984 கடைசி ஒரு நாள் தினமணிக் கதிர் காரியால யத்துக்குச் சென்றிருந்தபோது, ஆசிரியர்,வாரம் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக ஒதுக்குகிறேன், எழுதுங்களேன் என்றார்.
நான்: “எதைப்பற்றி?”
ஆசிரியர்: “பூமிமேல் எதுபற்றி வேணுமானாலும் உங்களுக்குத் தோன்றியபடி.”
நான்: “சரிதான். இப்பத்தான் உங்கள் சிப்பந்தி, கதிருக்கு வந்த கடிதம் ஒன்றைக் காண்பித்தார். ‘லாசரா என்னத்தை எழுதுகிறார்? ஒன்றுமே புரியவில்லை. மண்டையைப் பிய்த்து கொள்ளலாம்போல் இருக்கிறது. அப்படியுமா என்னை எழுதச் சொல்கிறீர்கள்?’
ஆசிரியர்: பிய்த்துக் கொள்ளட்டுமே! இரண்டு பக்கங்கள்தானே?’
ஒரு சிறுகதை எழுதவே சாதாரணமாக மூன்று மாதங் கள் எடுத்துக்கொள்ளும் எனக்குக் கதிரின் அச்சுயந்திரங் களுக்கு வாரா வாரம் என் பங்குத் தீனியைத் தவறாமல் போட இயலுமா? நான் ஓயாமல் எழுதுபவன்; ஆனால் வேகமாக எழுதப் பழக்கப்பட்டவன் அல்லன்; இனிமேலும் வராது, எனக்குத் தெரியும்.
தவிர, வாரா வாரம் என்னத்தை எழுதுவது?
பிடி கொடுக்காமல் ஏதோ முனகிவிட்டு நழுவிவிட்டேன் னாலும் வெட்டென விட்டொழிக்க முடியவில்லை.
விண் விண்’ பொறுக்காமல், ஒருநாள் எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்ததன் விளைவாய்…
*திரு கஸ்தூரி ரங்கன் நெஞ்சில் நட்ட எண்ணத்தின் முகூர்த்தவேளை கிண்டி மூக்கிலிருந்து சொட்டிய நீர், நதி யாகப் பெருக்கெடுத்துவிட்டது.
*கதிர் ஆசிரியர்
எழுத – எழுத, எழுதுவதற்கு விஷயம் விடாது வளர்ந்து கொண்டிருந்தது. எனக்கே பெரும் வியப்பு. இந்தத் தொடர் 1986இல் புத்தக அந்தஸ்து பெற்று வெளிவந்தது.
சிந்தா நதியில் யார் இல்லை? நான் இருக்கிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். நம் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் மூலம் நாளைப் பெருகப் போகும் மானுடத்தின் சந்ததிகள் இருக்கின்றன. ஜீவனின் பரம்பரையே இருக்கிறது.
ஓடும் தண்ணீரில், நேற்றையத் தண்ணீர், இன்றையத் தண்ணீர், நாளையத் தண்ணீர் என்று கராமும், பாகுபாடும் பிரிக்க முடியாது; என்றுமே இன்றுதான். நதியின் ஓட்டமே தான் அதன் உயிர், உயிர்ஸ்தானம்.
சிந்தாநதி ஜீவநதி
ஆண்டவன் தன் உருவையே அதில்தான் உணர்ந்தான். தன் இடம் தெரியாமல் அதில் மூழ்கிக் கிடக்கிறான்.
தாய்மார்களே, பெரியோர்களே, என் நமஸ்காரங்கள். சகோதர சகோதரிகளே, என் ஆசிகள்.
சிந்தா நதி தீரே
சிந்தா விஹாரே…
– கலைமகள்
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.
Arumaiyaana kathaikal.nanri.
Dr.umesh
Melbourne