கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 3,278 
 
 

(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-20

19. விடுதலை வந்தது!

சென்ற அத்தியாயத்தில் கூறிய படி சோலைமலை மணியக்காரர் சிறைச்சாலைக்கு வந்து குமாரலிங்கத்தைப் பார்த்து ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது.

இதற்கிடையில் கீழேயுள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு, அதற்கு மேலே ஸெஷன்ஸ் கோர்ட்டு, அதற்கு மேலே ஹைகோர்ட்டு வரையில் வழக்கு நடந்து முடிந்தது.

கடைசியாக, தளவாய்ப் பட்டணம் கலக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் நாலு பேருக்குத் தூக்குத் தண்டனை என்றும், பதினாறு பேருக்கு ஆயுள் தண்டனை என்றும் தீர்ப்பாயிற்று.

தூக்குத் தண்டனை அடைந்தவர்களில் குமாரலிங்கமும் ஒருவன் என்று சொல்ல வேண்டியதில்லை யல்லவா? அதைப் பற்றி அவன் வியப்படையவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை. மரண தண்டனை அவன எதர்பார்த்த காரியத்தான். மேலும், ஆயுள் முழுதும் சிறையில் இருப்பது என்பதை நினைத்தபோது அதைவிடத் தூக்குத் தண்டனை எவ்வளவோ மேல் என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால் தூக்குத் தண்டனை அடைந்த மற்றவர்கள் யாரும் அவ்விதம் அபிப்பிராயப் படவில்லை. அவர்களுடைய உற்றார் உறவினரும் சிநேகிதர்களும் பொது மக்களுங்கூட அவ்வாறு கருதவில்லை. உயிர் இருந்தால் எப்படியும் ஒருநாள் விடுதலை பெறலாம். ஆயுள் முழுதம் சிறையில் இருக்க வேண்டி வரும் என்பதுதான் என்ன நிச்சயம்? இந்தியா அத்தனை காலமும் விடுதலை பெறாமலா இருக்கும்? இரண்டு மூன்று வருஷத்துக்குள்ளேயே ஏதாவது ஒரு சமரசம் ஏற்படலா மல்லவா? இந்தியா சுயராஜ்ய மடையலா மல்லவா?

எனவே, தூக்குத் தண்டனை அடைந்தவர்களின் சார்பாகப் பிரிவு கவுன்ஸிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது, குமாரலிங்கத்துக்கு இது கட்டோடே பிடிக்கவில்லை. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை என்று அவன் நம்பினான், மற்றவர்களுடைய கதி எப்படி யானாலும் தன்னுடைய தூக்குத் தண்டனை உறுதியாகத்தான் போகிறது என்று அவன் நிச்சயம் கொண்டிருந்தான். ஆயினும் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகப் பிரிவி கவுன்ஸில் அப்பலுக்கு அவன் சம்மதம் கொடுத்தான்.

சம்மதம் கொடுத்து விட்டு, சிறையி லிருந்து தப்பி ஓடுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றிச் சிந்திக்கலானான். அதுவும், உண்மையில் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக அல்ல: தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித் துப்பாக்கிக் குண்டினால் மரணமடையும் உத்தேசத்துடனே தான். அதுவே தன்னுடைய தலைவிதி என்றும் அந்த விதியை மாற்ற ஒருநாளும் ஒருவராலும் முடியாது என்றும் அவன் நம்பினான். எனவே, தப்பி ஓடும் முயற்சிக்குத் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பகலிலும் இரவிலும் கனவிலும் நனவிலும் அந்த எண்ணமே அவனை முழுக்க முழுக்க ஆட்கொண்டிருந்தது. சிறையிலிருந்து தான் தப்பி ஓடுவதுபோலும் தன் முதுகில் குண்டு பாய்ந்து மார்பின் வழியாக இரத்தம் குபுகுபு வென்று பாய்வது போலும் பல தடவை அவன் கனவு கண்டு வீரிட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

ஆனபோதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமா யில்லை. எத்தனையோ நாவல்களில் கதாநாயகர்கள் சிறையிலிருந்து தப்பி ஓடியதாகத் தான் படித்திருந்த சம்பவங்களை யெல்லாம் அவன் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிப் பார்த்தான். ஆனால் அவை ஒன்றும் அவன் இருந்த நிலைமைக்குப் பொருத்தமாயில்லை.

நாளாக ஆக, விடுதலை வெறி அவனுக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. என்னவெல்லாமோ சாத்தியமில்லாத யோசனைகளும் யுக்திகளும் மனதில் தோன்ற ஆரம்பித்தன.

இதற்கிடையில், சிறைச்சாலையின் பெரிய வெளிச் சுவர்களைத் தாண்டிக் கொண்டு, இடையிடையே யுள்ள சின்னச் சுவர்களைத் தாண்டிக் கொண்டு, மரண தண்டனை அடைந்த கைதிகளின் தனிக் காம்பவுண்டு சுவரையும் தாண்டிக் கொண்டு சில செய்திகள் வர ஆரம்பித்தன.

காங்கிரஸ் மாபெருந் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசப் பேச்சு நடந்து வருவது பற்றிய செய்திகள்தான். கூடிய சீக்கிரத்தில் அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை அடையக்கூடும் என்ற வதந்திகளும் வந்தன.

இவற்றை யெல்லாம் மற்ற அரசியல் கைதிகள் நம்பினார்கள். நம்பிய தோடுகூடச் சிறையிலிருந்து வெளியேறியதும் எந்தத் தொகுதிக்குத் தேர்தலுக்கு நிற்கலாம் என்பது போன்ற யோசனைகளிலும் பலர் ஈடுபட ஆரம்பித்தார்கள்!

ஆனால் குமாரலிங்கத்துக்கோ விடுதலைப் பேச்சுகளில் எல்லாம் அணுவளவும் நம்பிக்கை ஏற்படவில்லை. சிறையிலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்னும் ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எதற்கும் அவன் மனதில் இடம் கிடைக்கவில்லை.

கடைசியாக, அவன் அடங்கா ஆவலுடன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிட்டியது. தானே அவனைத் தேடி வந்தது என்று சொல்ல வேண்டும்.

ஹைகோர்ட்டில் கேஸ் முடியும் வரையில் அவனையும் அவனுடைய சகாக்களையும் வைத்திருந்த சிறையிலிருந்து அவர்களை வேறு சிறைக்கு மாற்றிக் கொண்டு போனார்கள். பலமான பந்தோபஸ்துடனே பிரயாணம் ஆரம்பமாயிற்று. எந்த ஊர்ச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்பது அவர்களுக்கு அறிவிக்கப் படவில்லை. ஆயினும் ரயிலில் போகும் போது ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும் என்று குமாரலிங்கம் எண்ணினான். கட்டாயம் கிடைத்தே தீரும் என்று நம்பினான். இத்தனை காலமும் மாறனேந்தல் உலகநாதத் தேவருக்கு நேர்ந்தது போலவே எல்லாச் சம்பவங்களும் தன் விஷயத்திலும் நேர்ந்திருக்கின்றன வல்லவா? எனவே, இறுதிச் சம்பவமும் அவ்விதம் நேர்ந்தே யாகவேண்டு மல்லவா?

அவன் எண்ணியதற்குத் தகுந்தாற் போல் வழியில் ரயில் பிரயாணத்தின் போது சிற்சில சம்பவங்கள் ஏற்பட்டு வந்தன. அவனுடன் சேர்த்துக் கொண்டு வரப்பட்ட மற்றக் கைதிகளை அங்கங்கே யிருந்த ஜங்ஷன்களில் பிரித்து வேறு வண்டிகளுக்குக் கொண்டு போனார்கள்.

கடைசியாகக் குமாரலிங்கமும் அவனுக்குக் காவலாக இரண்டே இரண்டு போலீஸ் சேவகர்களுந்தான் அந்த வண்டியில் மிஞ்சினார்கள்.

இரவு பத்து மணிக்குக் குமாரலிங்கம் சாப்பிடுவதற்காக அவனுடைய கை விலங்கைப் போலீார் எடுத்து விட்டார்கள். சாப்பீட்ட பிறகு விலங்கை மறுபடியும் பூட்டவில்லை. ஏதேதோ கதை பேசிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள் சிறிது நேரத்துக் கெல்லாம் கண்ணசந்தார்கள். உட்கார்ந்தபடியே தூங்கத்தொடங்கினார்கள். ஒருவன் நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கினான்.

குமாரலிங்கம் தன்னுடைய விதியின் விசித்திர கதிதான் இது என்பதை உணர்ந்தான். விதி அத்துடன் நிற்கவில்லை. அடுத்து வந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சற்றுத் தூரத்தில் கை காட்டிக்குப் பக்கத்தில் ரயில் நிற்கும்படி செய்தது. குமாரலிங்கம் வண்டியின் கதவைத் தொட்டான். தொட்டவுடனே அக் கதவு திறந்து கொள்ளும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தும், அது திறந்தபோது ஆச்சரியமாய்த்தானிருந்தது. போலீஸார் இருவரையும் மறுபடி ஒரு தடவை கவனமாகப் பார்த்தான். அவர்கள் தூங்கிக் கொண்டுதா னிருந்தார்கள். ஒருவன் அரைக் கண்ணைத் திறந்து “இது என்ன டேஷன் அண்ணே!” என்று கேட்டுவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டான்.

அவ்வளவுதான்; திறந்த ரயில் கதவு வழியாகக் குமாரலிங்கம் வெளியில் இறங்கினான். ரயில் பாதையின் கிராதியைத் தாண்டிக் குதித்தான். இதெல்லாம் இவ்வளவு சுலபமாக நடந்து விட்டது என்பதை நம்ப முடியாமல் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றான்.

ரயில் என்ஜின் ‘வீல்’ என்று கத்திற்று. உடனே ரயில் நகர்ந்தது. ரயில் நகர்ந்தபோது சற்று முன்னால் திறந்த வண்டிக் கதவு மறுபடியும் தானே சாத்திக்கொண்டது.

அடுத்த கணத்தில் ஒரு பெரிய தடபுடலைக் குமாரலிங்கம் எதிர் பார்த்தான். போலீஸ் சேவகர் இருவரும் வீழித்தெழுந்து கூச்சல் போடுவார்கள் என்றும், பளிச் சென்று அடித்த நிலா வெளிச்சத்தில் தன்னைப் பார்ப்பார்கள் என்றும். உடனே அவர்களும் ரயிலிலிருந்து கீழே குதிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தான். தான் ஒரே ஓட்டமாய் ஓட, அவர்கள் தன் முதுகை நோக்கிச் சுடுவார்கள் என்றும் நினைத்தான். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த உடனே கொஞ்சமும் வலிக்காது என்றும், குண்டு பாய்ந்ததே தெரியாது என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். எனவே கொஞ்ச தூரம் ஓடிய பிறகு தான் ஸ்மரணை இழந்து கீழே விழுவது வரையில் கற்பனை செய்து கொண்டான்.

ஆனால் அவ்வளவும் கற்பனையோடு நின்றது. நகர்ந்த ரயில் நகர்ந்தது தான். மூடிய கதவு மூடியதுதான். ஆர்ப்பாட்டம், சத்தம், துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றுமே யில்லை.

அந்தக் காலத்தில் சோலைமலையில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பொன்னம்மாளின் நினைவு குமாரலிங்கத்துக்கு வந்தது.

சோலைமலை இது ஏதோ கடவுளின் செயல்! முருகனின் அருள்! பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்திர் கொள்ளா விட்டால் தன்னைவிட நிர்மூடன் உலகில் யாருமே இருக்க முடியாது.

அவ்வளவுதான்; குமாரலிங்கம் நடக்கத் தொடங்கினான். வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துத் திசையைத் தெரிந்து கொண்டு விரைவாக நடக்கத் தொடங்கினான். தன் உள்ளங் கவர்ந்த பொன்னர்மாளைக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுடைய கால்களுக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு சக்தியையும் விரைவையும் அளித்தது.

20. கதை முடிந்தது!

குமாரலிங்கம் ரயிலிலிருந்து தப்பிய ஏழாம் நாள், சுமார் 250 மைலுக்கு மேல் கால் நடையாக நடந்து சோலைமலை மணியக்காரர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மணியக்காரர் அவனைப் பார்த்ததம் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஊர் சுற்றும் பிச்சைக்காரன் என்று நினைத்தார். “ஐயா! என்னை அடையாளம் தெரியவில்லையா?” என்று கேட்ட தும், உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டார். “ஐயோ! குமாரலிங்கமா? இது என்ன கோலம்? அடாடா! இப்படி உருமாறிப் போய் விட்டாயே?” என்று அலறினார். குமாரலிங்கம் அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்துவிட்டு, மெல்லிய குரலில், “ஐயா! மெதுவாகப் பேசுங்கள். என் பெயரை உரத்துச் சொல்லாதீர்கள்!” என்று சொன்னான்.

“அப்பனே! ஏன் இப்படிப் பயப் படுகிறாய்? ஏன் உன் பெயரை உரத்துச் சொல்லக் கூடாது என்கிறாய்?” என்று கேட்ட மணியக்காரர் மறு கணம் பெருந் திகிலுடன், “விடுதலைக்குப் பிறகு இன்னும் ஏதாவது செய்துவிட்டாயா, என்ன?” என்றார்.

“விடுதலையா? என்ன விடுதலை?” என்று ஒன்றும் புரியாத திகைப்புடன் குமாரலிங்கம் கேட்டான்.

“என்ன விடுதலையா? உனக்குத் தெரியாதா, என்ன? பின் எப்படி இங்கே வந்தாய்?” என்று மணியக்காரர் கேட்டது குமாரலிங்கத்தின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று.

“ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லையே? என்னைச் சென்னைச் சிறையிலிருந்து கண்ணனூர் சிறைக்கு ரயிலில் கொண்டு போனபோது வழியில் தப்பித்து ஓடி வந்தேன். இதை விடுதலை என்று சொல்ல முடியுமா? விடுதலை எப்படி நான் அடைந்திருக்க முடியும்? பிரிவி கவுன்ஸில் அப்பீல் இன்னும் தாக்கல்கூட ஆகவில்லையே? அப்படி அப்பீல் தாக்கல் ஆன போதிலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. எந்தக் கோர்ட்டிலே எவ்வளவு தடவை அப்பீல் செய்தால்தான் என்ன பிரயோஜனம்? தலைவிதியை மாற்ற முடியுமா?” என்றான் குமார லிங்கம்.

“தலை விதியாவது, ஒன்றாவது? அட அசட்டுப் பிள்ளை! இப்படி யாராவது செய்வார்களா? சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் சமரசம் ஏற்பட்டு அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்து விட்டார்களே? தேசமெல்லாம் ஒரே கொண்டாட்டமா யிருக்கிறதே? உனக்கு ஒன்றுமே தெரியாதா? ரயிலி லிருந்து நீ என்றைக்குத் தப்பித்துக் கொண்டாய்?” என்று பரபரப்புடன் பேசினார் மணியக்காரர்.

குமாரலிங்கத்தின் மனநிலை அச்சமயம் எப்படி யிருந்தது என்று அவனாலேயே சொல்ல முடியாது. அதை நாம் எப்படிச் சொல்ல முடியும்? அதிசயமும் ஆனந்தமும், அவமானமும் அவநம்பிக்கையும் ஒன்றே டொன்று போட்டியிட்டுக் கொண்டு அவன் உள்ளத்தில் கொந்தளித்தன.

“ஐயா! தாங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா? அல்லது இந்த துரதிர்ஷ்டம் பிடித்தவனைத் தாங்களும் சேர்த்து பரிகாசம் செய்கிறீர்களா?” என்று கேட்டான்.


மணியக்காரர் அவனுடைய கேள்விக்குத் தாமே பதில் சொல்வதற்குப் பதிலாகப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பத்திரிகைகளை எடுத்துக் காட்டினார்.

அந்தப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த விவரங்கள் மணியக்காரரின் கூற்றை உறுதிப்படுத்தின.

அதாவது காங்கிரஸுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டதென்றும், அதன் காரணமாக அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் ஒரு பத்திரிகையில் இருந்தது. மறுநாள் பத்திரிகையில் இன்னின்ன கேஸைச் சேர்ந்தவர்கள் விடுதலை யாவார்கள் என்று கொடுக்கப்பட்டிருந்த விவரமான ஜாபிதாவில் தளவாய்ப் பட்டணம் கலகக் கேஸ் கைதிகள் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதைப் பார்த்து வீட்டுக் குமாரலிங்கம் சிறிது நேரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். ரயிலிலிருந்து தப்பியது முதல் அவனுடைய கால் நடைப் பிரயாணத்தின்போது கண்டு கேட்டு அநுபவித்த பல சம்பவங்களுக்கு அப்போதுதான் அவனுக்குப் பொருள் விளங்கிற்று.

உதாரணமாக, வழியில் பல இடங் களில் தேசியக் கொடிகளைக் கம்பீரமாகப் பிடித்துக் கொண்டு “வந்தே மாதரம்” ”’ஜே ஹிந்த்!” முதலிய கோஷங்களைப் போட்டுக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலம் வந்த காட்சிகளை அவன் தூரத்திலிருந்து பார்த்தான். அம்மாதிரி காட்சிகளைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம், “ஏது? இவ்வளவு அடக்கு முறைக்குப் பிறகும் நாட்டில் சுதந்திர இயக்கம் பலமாக நடக்கிறதே? இந்தியா தேசத்துக்குக்கூட விடுதலை உண்டு போலிருக்கிறதே!” என்று அவன் எண்ணினான். உண்மையில் அந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம் என்னவென்பது இப்போது அவனுக்கு நன்றாய்த் தெரிந்தது.

இன்னும் பல இடங்களில் போலீஸாரைக் கண்டு அவன் அவசரமாக மறைந்து ஒளிந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டான். ஆயினும் அவன் பேரில் அவர்கள் சந்தேகப்படவும் இல்லை: சந்தேகப்பட்டு அவனைப் பிடிக்க முயலவும் இல்லை.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் மிகவும் களைத்துப் போய்ச் சாலை ஓரத்துச் சாவடி ஒன்றின் தாழ்வாரத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரென்று இரண்டு போலீஸ்காரர்கள் சமீபத்தில் வருவதைப் பார்த்து விட்டு, சட்டென்று திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்தான்.

போலீஸ் ஜவான்கள் இருவரும் அவன் அருகில் நெருங்கியதும், அவர்களில் ஒருவன், “இவனைப் பார்த்தாயா? குமாரலிங்கத்தின் சாயலாகத் தோன்றுகிற தல்லவா?” என்றான். அதற்கு இன்னொருவன், “குமாரலிங்கம் இங்கே எதற்காக வந்து திக்கற்ற அநாதையைப்போல் சாவடியில் படுத்திருக்கிறான்? மேளமும் தாளமும் தடபுடல் படாதா இத்தனை நேரம் அவனுக்கு?” என்றான்.

இவர்களுடைய பேச்சு குமாரலிங்கத்துக்கு ஒரு மர்மப் பிதிராயிருந்தது. வேறு எந்தக் குமாரலிங்கத்தைப் பற்றியோ பேசுகிறார்கள் என்று எண்ணினான். தன்னைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது உறுதிப் பட்டது.

“ஐயா! இந்தச் செய்தி ஒன்றும் எனக்கு உண்மையில் தெரியாதுதான்! சாவதற்கு முன்னால் சோலைமலைக்கு ஒரு தடவை எப்படியும் வரவேண்டும், தங்களையும் தங்கள் குமாரியையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் ரயிலிலிருந்து தப்பித்து வந்தேன். போலிஸார் என்னுடைய சொந்த ஊரிலே கொண்டு போய் என்னை விட்டு விடுதலைச் செய்தியைச் சொல்ல எண்ணியிருந்தார்கள் போலிருக்கிறது. இந்த ஒரு வாரமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அவ்வளவும் விண் என்று இப்போது தெரிகிறது. என்னைப்போல் மூடன் வேறு யாரும் இருக்க முடியாது!” என்றான் குமாரலிங்கம்.

“அப்பனே! போனதைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்? எப்படியோ நீ இங்கு வந்து சேர்ந்தாயே? அதுவே பெரிய காரியம்!” என்றார் மணியக்காரர்.

“ஐயா! பொன்னம்மாள் எங்கே? அவளைப் பார்த்து விட்டு நான் போக வேண்டும்” என்றான் குமாரலிங்கம்,

“அவ்வளவு அவ சரம் வேண்டாம், தம்பி! பொன்னம்மாள் அந்தப் பாழடைந்த கோட்டையிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். சதா சர்வ காலமும் அங்கே தான் அவளுக்கு வாசம். குளித்துச் சாப்பிட்டு விட்டு அவளைப் போய்ப் பார்க்கலாம்!” என்று மணியக்காரர் சொன்னார். உடனே ஊர் நாவிதரையும் அழைத்து வரும்படி செய்தார்.

அவர் விருப்பத்தின் படியே குமாரலிங்கம் க்ஷவரம் செய்து கொண்டு ஸ்கானம் செய்து புதிய உடை உடுத்திக் கொண்டான். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டுக் கோட்டைக்குப் புறப்பட்டான். மணியக்காரரும் அவனோடு கிளம்பிச் சென்றார். போகும்போது, “அப்பா! குமாரலிங்கம்! உன்னைப் பிரிந்த துயரம் பொன்னம்மாளை ரொம்பவும் பிடித்திருக்கிறது. திடுதிப்பென்று அவன் முன்னால் தோன்றிப் பயப்படுத்தி விடாதே! பட படப்பாகப் பேசாதே! கொஞ்சம் ஜாக்கிரதை யாகவே நடந்து கொள்!” என்று மணியக்காரர் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கை யெல்லாம் எதற்காக என்று அப்போது குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக விளங்க வில்லை. பொன்னம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு தான் விளங்கிற்று.


மணியக்காரரும் குமாரலிங்கமும் வந்ததைப் பொன்னம்மாள் பொருட்படுத்தியதாகவே தெரிய வில்லை. அவர்களைப் பார்த்தும் பாராதது போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இதைப் பொருட்படுத்தாமல் குமாரலிங்கம் அவள் அருகில் சென்று உட்கார்ந்து, “ஏன் இவ்வளவு பராமுகம்? இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறேனே, பிரியமாக வரவேற்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? ஒருவேளை என்னை மறந்து விட்டாயா? அல்லது அடையாளம் தெரியவில்லையா?” என்று மிக்க பரிவோடு கேட்டான்.

அவ்வளவு நேரமும் சும்மாயிருந்த பொன்னம் மாள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, “நீங்கள் யார்? அடையாளம் எனக்குத் தெரியத்தான் இல்லை!” என்றாள்.

“நான்தான் குமாரலிங்கம்; உனக்குக் கூட அடையாளத் தெரியாதபடி அவ்வளவு மாறிப்போய் விட்டேனா? அல்லது உன் மனத்தான் மாறிவிட்டதா?” என்றான் பொன்னம்மாளின் காதலன்.

“குமாரலிங்கமா? அது யார்? நான் கேட்டதில்லையே?” என்று பொன்னம்மாள் சொன்ன போது குமாரலிங்கத்துக்குத் திக் என்றது.

“பொன்னம்மா! உண்மையாகத் தான் பேசுகிறாயா? அல்லது விளையாட்டா? குமாரலிங்கத்தை அவ்வளவு சீக்கிரமா மறந்து விட்டாய்!”

“ஐயா! குமாரலிங்கம் என்று நான் கேட்டது மில்லை; என் பெயர் பொன்னம்மாளும் இல்லை! வீணாக என்னைத் தொந்தரவு செய்யாதீர்.”

குமாரலிங்கத்தின் குழம்பிய உள்ளத்தில் பளிச்சென்று ஒரு ஒளிக் கிரணம் தோன்றியது.

“பொன்னம்மாள் இல்லா விட்டால், பின்னே நீ யார்?” என்று கேட்டான்.

“என்னைப் பார்த்தால் தெரியவில்லையா? சோலைமலை இளவரசி நான்; என் பெயர் மாணிக்கவல்லி!”

இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு பெரும் வேதனை உதித்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, தயக்கம் தொனித்த குரலில், “மாணிக்கவல்லி! நான்தான் மாறநேந்தல் இளவரசன். என்னைத் தெரியவில்லையா?” என்றான்.

“ஆ! ஏன் பொய் சொல்கிறீர்? மாறநேந்தல் இளவரசர் இப்படியா இருப்பார்?” என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பின் ஒலி குமாரலிங்கத்துக்கு உண்மையைத் தெளிவாக உணர்த்தியது. பொன்னம்மாளின் அறிவு பேதலித்து விட்ட தென்றும், இனித் தன்னை ஒரு நாளும் அவள் அறிந்து கொள்ளப் போவதில்லை யென்றும் உணர்ந்தான். அதே சமயத்தில் அவனுடைய இருதய வீணையின் ஜீவநரம்பு படீரென்று வெடித்து அறுந்தது.


தமிழ் நாட்டில் உள்ள முருகனுடைய கோயில்களில் களைபொருந்திய முகத்துடன் கூடிய இளம் வயதுச் சாமியார் ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர் யார் என்று விசாரித்துப் பாருங்கள்.

‘சோலைமலைச் சாமியார்’ என்று பதில் சொல்வார்கள். அதோடு அவர் உலகப் பற்றை அடியோடு ஒழித்த பால சக்நியாசி என்றும், பரம பக்த சிகாமணி என்றும், பூர்வாசிரமத்தில் அவர் ‘தேசத் தொண்டர் குமாரலிங்கம்’ என்றும் கூடத் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(முற்றிற்று)

– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *