சோலைமலை இளவரசி






(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-20
16. கயிறு தொங்கிற்று!
இரவுக்கும் பகலுக்கும் அதிக வேற்றுமை யில்லாமல் இருள் சூழ்ந்திருந்த எட்டடிச் சதுர அறையில் குமாரலிங்கம் தன்னங் தனியாக அடைக்கப்பட்டிருந்தான்.
இரவிலே இரும்புக் கதவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு கரியடைந்த ஹரிகேன் லாந்தர் மங்கிய சோகமான ஒளியைத் தயக்கத்துடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது.
பகலில், அவன் அடைபட்டிருந்த அறையின் பின்புறச் சுவரில் இரண்டு ஆள் உயரத்தில் இருந்த சிறு ஜன்னல் துவாரம் வழியாக மங்கிய வெளிச்சம் வரலாமோ, வரக்கூடாதோ என்று தயங்கித் தயங்கி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

குமாரலிங்கத்தின் உள்ளத்தின் நிலைமையும் ஏறக்குறைய வெளிப்புற நிலைமையை ஒத்திருந்தது. குழப்ப இருள் சூழ்ந்து எதைப்பற்றியும் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலையை அவன் மனம் அடைந்திருந்தது. பார்த் தவர்கள் அவனுக்குச் ‘சித்தப் பிரமம்’ பிடித்திருக்கிறது என்று சொல்லும் படி தோன்றினான். ஆனாலும் இருள் சூழ்ந்த அவனுடைய உள்ளத்தில் சில சில சமயம் அறிவின் ஒளி இலேசாகத் தோன்றிச் சிந்திக்கும் சக்தியும் ஏற்பட்டது. அத்தகைய சமயங்களில், ஆகா! அவனுடைய மனதில் என்ன வெல்லாம் எண்ணங்கள் குமுறி அலை மோதிக் கொண்டு பாய்ந்தன !
சோலைமலைக் கிராமத்தில் ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் காந்தி குல்லாக் கதர் வேஷம் தரித்த போலீஸாரால் கைதி செய்யப்பட்டதிலிருந்து அவன் கண்டும், கேட்டும், அனுபவித்தும் அறிந்த பயங்கரக் கொடுமை நிறைந்த சம்பவங்கள், அதற்கு முன்னால் சோலைமலைக் கோட்டையில் கழித்த ஆனந்தமான பத்துப் பன்னிரண்டு தினங்கள், அதற்கு முந்தி தளவாய்க் கோட்டையில் ஒருநாள் நடந்த புரட்சிகரமான காரியங்கள், இன்னும் நூறு வருஷத்துக்கு முன்னால் சோலைமலை மாறனேந்தல் இராஜ்யங்களில் நேர்ந்த அபூர்வ நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகவும் சில சமயம் சேர்ந்தாற் போலவும் அவன் மனதில் தோன்றி அல்லோல கல்லோலம் விளைத்தன.
இத்தனைக்கும் மத்தியில், அவன் அறிவு தெளிவடைந்து சிந்தனை செய்து கொண்டிருக்கும் போதும் சரி, தெளிவில்லாத பலப் பல எண்ணங்கள் போட்டியிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் போதும் சரி, சிந்தனா சக்தியையே இழந்து ‘பிரமம்’ பிடித்து அவன் உட்கார்ந்திருக்கும் போதும் சரி, ஒரே ஒரு விஷயம் மட்டும் அவன் மனதிலிருந்து மறையாமல் எப்போதும் குடி கொண்டிருந்தது. அது அவன் தலைக்கு மேலே ஒரு வட்டச் சுருக்கிட்ட கயிறு, – அவனைத் தூக்கிட்டுக் கழுத்தை நெறித்துக் கொல்லப்போகிற கயிறு – எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கிறது என்னும் பீரமைதான்.
அந்தக் கயிற்றி லிருந்து தப்ப வேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. முன்னொரு ஜன்மத்தில் தான் மாறனேந்தல் மகாராஜாவாகப் பிறந்திருந்தபோது, எந்த முறையைப் பின்பற்றி அவன் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பினானோ, அதே முறையையே இப்போதும் பின்பற்றியாக வேண்டும்.
அதாவது சிறைச்சாலையி லிருந்தோ போலீஸ் காவலிலிருந்தோ தப்பித்துக் கொண்டு ஓட முயல் வேண்டும். தப்பி ஓட முயல்வது உயிர் பிழைக்க வேண்டு மென்ற ஆசையினால் அல்ல; உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கை யினாலும் அல்ல. அப்படித் தப்பி ஓட முயலும்போது முன்னொரு ஜன்மத்தில் நடந்தது போலவே சிறைக் காவலர்களோ போலீஸ்காரர்களோ தன்னை நோக்கிச் சுடுவார்கள். குண்டு அவன் முதுகிலே பாய்ந்து மார்பின் வழியாக வெளியே வரும். அதன் பின்னால் குபு குபுவென்று இரத்தம் பெருகும். அந்த க்ஷணமே அவன் உணர்விழந்து கீழே விழுவான். அப்புறம் மரணம்; முடிவில்லாத மறதி; எல்லையற்ற அமைதி.
குமாரலிங்கம் அப்பொது விரும்பிய தெல்லாம் இத்தகைய மரணம் தனக்குக் கிட்டவேண்டும் என்பதுதான். அவன் மரணத்துக்கு அஞ்சவில்லை: சாகாமல் உயிரோடிருக்க வேண்டும் என்று ஆசைப்படவும் இல்லை. ஆனால் தூக்கு மரத்தில் கயிற்றிலே தொங்கிப் பிராணனைவிட மட்டும் அவன் விரும்ப வில்லை. அந்த எண்ணமே அவனுடைய உடம்பையும் உள்ளத்தையும் சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளாக்கிற்று. அவன் தூக்கு மரத்தைப் பார்த்ததில்லை; தூக்குப் போடும் காட்சி எப்படியிருக்கும் என்றும் அவனுக்குத் தெரியாது. எனவே தூக்குத் தண்டனை என்று நினைத்ததும், தாழ்ந்து படர்ந்த மரக்கிளையில் முடிச்சுடன் கூடிய கயிறு தொங்கிய காட்சி தான் அவனுக்கு நினைவு வந்தது. அத்தகைய மரக்கிளை ஒன்றில் அவனுடைய உடம்பு தூக்குப் போட்டுத் தொங்குவது போலவும், உடம்பிலிருந்து வெளியேறிய தன்னுடைய உயிர் அந்த உடம்பைச் சுற்றிச் சுற்றி வருவது போலவும் அடிக்கடி அவனுக்குப் பிரமை உண்டாகும். சில சமயம் விழித்திருக்கும் போதும், சில சமயம் அரைத் தூக்கத்திலும் அவனுக்கு இம்மாதிரி அனுபவம் ஏற்படும். அரைத் தூக்கத்தில் அத்தகைய அனுபவம் ஏற்படும்போது அது முற்றிலும் உண்மை நிகழ்ச்சிபோலவே இருக்கும். அப்போது குமாரலிங்கம், “கடவுளே!” என்று வாய்விட்டுக் கதறுவான். உடனே விழிப்பு உண்டாகும். அவன் உடம்பெல்லாம் சொட்ட வியர்த்து விட்டுச் சிறிது நேரம் வரையில் நடுங்கிக் கொண்டே யிருக்கும்.

இந்த மாதிரி பயங்கரம் நிறைந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கு வாழ வேண்டுமோ என்று எண்ணி எண்ணி அவன் ஏங்கத் தொடங்கினான். இந்தியா தேசத்துக்குச் சுயராஜ்யம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தனக்கும் தன்னுடைய சகோதரக் கைதிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற ஆசையும் அவனுக்கு இப் போதெல்லாம் சிறிதும் இருக்கவில்லை. விசாரணைக்காகக் கோர்ட்டுகளுக்குப் போகும்போதும் திரும்பி வரும்போதும் மற்றப்படி அபூர்வமாக மற்ற சகோதர அரசியல் கைதிகளைச் சந்திக்கும்போதும், “சுயராஜ்யம் சீக்கிரம் வரும்” என்று யாராவது சொல்லக் கேட்டால், அவன் புன் சிரிப்புக் கொள்வான். சிறைப்பட்ட நாளிலிருந்து அவன் புன்னகை புரிவதென்பது இந்த ஒரு சந்தர்ப்பத்திலே தான் என்று சொல்லலாம்.
ஏனெனில், ”சுயராஜ்யம்” என்ற வார்த்தை காதில் விழுந்ததும், அவன் சிறைப்பட்ட புதிதில் அடைந்த அனுபவங்கள் ஞாபகத்துக்கு வரும். தினம் தினம் புதிது புதிதாகத் தொண்டர்களைக் கைது செய்து கொண்டு வருவார்கள். ஒரு போலீஸ்காரர் இன்னொரு போலீஸ்காரரைப் பார்த்து, “இவர் பெரிய தேசபக்தர், அப்பா! இவருக்குக் கொடு, சுயராஜ்யம்!” என்பார். உடனே தப, தபவென்று சத்தம் கேட்கும். அடி விழும் சத்தந் தான்! அடி என்றால் எத்தனை விதமான அடி? – சில தொண்டர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருப்பார்கள். வேறு சிலர் அலறுவார்கள். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு “வந்தேமாதர” கோஷம் செய்து நினைவு இழக்கும் வரையில் அடிபட்டவர்களும் உண்டு. இடையிடையே, “சுயராஜ்யம் போதுமா?” “சுயராஜ்யம் போதுமா?” என்ற கேள்விகளும் கிளம்பும்.
இந்தப் பயங்கர அனுபவங்களைக் குமாரலிங்கம் சொந்தமாக அனுபவிக்க வில்லை. சோலைமலைக் கிராமத்தில் அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும் அவன் மூர்ச்சையடைந்து விழுந்ததிலிருந்து போலீஸார் அவன் விஷயத்தில் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள். அதோடு ஸப் ஜெயிலில் முதன் முதலில் அவனை வந்து பார்த்த டாக்டர் அவனுக்கு இருதயம் பலவீனமா யிருக்கிறதென்றும், நாடி அடிப்பு அதிவிரைவாக இருக்கிற தென்றும் சொல்லி விட்டார். எனவே, குமாரலிங்கம் மேற்படி அனுபவங்களிலிருந்து தப்பிப் பிழைத்தான். ஆனால் மற்றவர்கள் பட்ட அடியெல்லாம் அவன் மனதில் என்றும் மறக்க முடியாதபடி பதிந்திருந்தது.
எனவே. “சுயராஜ்யம் வரப் போகிறது!” என்ற பேச்சைக் கேட்டாலே அவனுடைய முகத்தில் அவ நம்பிக்கையோடு கூடிய துயரப்புன்னகை தோன்றுவது வழக்கமாயிற்று.
மேலும், அப்படி நடவாத காரியம் நடந்து, சுயராஜ்யமே வந்து விட்டால் தான் என்ன? தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? சுயராஜ்ய இந்தியாவில் தான் இருந்து வாழப் போவதில்லை! அது நிச்சயம்! நூறு வருஷத்துக்கு முன்னால் மாறனேந்தல் உலகநாதத் தேவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதுதான் தனக்கு இந்த ஜன்மத்தில் நேரப் போகிறது! அதைப் பற்றிச் சந்தேகமே யில்லை.
சோலைமலை மணியக்காரர் வீட்டு முன்னிலையில் குமாரலிங்கம் கைதி செய்யப்பட்ட திலிருந்து அவனுக்குத் தன்னுடைய மானஸீகக் காட்சியில் பரிபூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சிகளும் அந்த ஜன்மத்தில் நடந்தது போலவே இப்போதும் நடந்து வருகிறதல்லவா?
கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும், சில நாளைக்கு முன்பு சோலைமலை மணியக்காரர் அவனைச் சிறையிலே பார்த்துப் பேசியதிலிருந்து அடியோடு நீங்கிவிட்டது. விதியென்னும் சக்கரம் சுழன்றுவரும் விந்தையே விந்தை! அதைக் காட்டிலும் பெரிய அதிசயம் இந்த உலகத்திலும் இல்லை; உலகத்திலும் இருக்க முடியாது!
17. இரும்பு இளகிற்று!
விதி என்கிற விந்தையான சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழலும்படி செய்வோம்.
மாறனேந்தல் உலகநாதத் தேவர் ஆங்கிலேயரைப் பழி வாங்கும் பொருட்டுத் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணிச் சோலைமலைக் கோட்டைச் சின்ன அரண்மனையில் ஒளிந்து கொண்டிருந்த நாட்களுக்குச் செல்வோம்.

ஒரு மனிதன் சாதாரணமாய்த் தம் வாழ்க்கையில் பதினைந்து வருஷங்களில் அநுபவிக்கக் கூடிய ஆனந்த குதூகலத்தை யெல்லாம் பதினைந்து நாட்களில் அனுபவித்த உலகநாதத் தேவரின் அரண்மனைச் சிறைவாசம் முடியும் நாள் வந்தது.
சோலைமலை மகாராஜா ஒரு நாள் மாலை தம் மகள் மாணிக்கவல்லியிடம் வந்து, “பார்த்தாயா, மாணிக்கம்! கடைசியில் நான் சொன்னதே உண்மையாயிற்று. இந்த வியவஸ்தை கெட்ட இங்கிலீஷ்காரர்கள் மாறனேந்தல் ராஜ்யத்தை உலககாதத் தேவனுக்கே கொடுக்கப் போகிறார்களாம். அந்தப்படி மேலே கும்பெனியாரிட மிருந்து கட்டளை வந்திருக்கிறதாம். உலகநாதத் தேவனுடைய தகப்பன் கடைசிவரை போர் புரிந்து உயிரை விட்டானல்லவா? தகப்பனுடைய வீரத்தை மெச்சி மகனுக்கு இராஜ்யத்தைக்கொடுக்கப் போகிறார்களாம். அப்படித் தண்டோராப் போடும்படி மேஜர் துரை உத்தரவு போட்டிருக்கிறாராம். எப்படியிருக்கிறது கதை?” என்று சொன்னார். இதைக் கேட்டதும் மாணிக்கவல்லியின் முகத்தில் உண்டான குதூகலக் கிளர்ச்சியையும் அவர் கவனித்தார். அதற்குப் பிறகு மாணிக்கவல்லி தான் பேசிய மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஒரே பரபரப்புடன் இருந்ததையும் பார்த்தார். “தூக்கம் வருகிறது. அப்பா!” என்று மாணிக்கவல்லி சொன்னதும், ” சரி, அம்மா ! தூக்கம் உடம்புக்கு ரொம்ப நல்லது; தூங்கு!” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் வெகு தூரம் போய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் எதிர்பார்த்தது வீண் போக வில்லை. மாணிக்கவல்லி சிறிது நேரத்துக் கெல்லாம் அரண்மனையிலிருந்து வெளியேறுவதைக் கவனித்தார். அவள் அறியாமல் அவளைத் தொடர்ந்து சென்றார். பூந்தோட்டத்தின் மத்தியிலிருந்த வஸந்த மண்டபத்தில் தம்முடைய ஜன்மத் துவேஷத்துக்குப் பாத்திரனான உலகநாதத் தேவரை மாணிக்கவல்லி சந்தித்ததைப் பார்த்தார். அந்தச் சந்திப்பில் அவர்கள் அடைந்த ஆனந்தத்தையும் பரஸ்பரம் அவர்கள் காட்டிக் கொண்ட நேசத்தையும் கவனித்தார். சற்று முன் தாம் மகளிடம் சொன்ன செய்தியை அவள் உலகநாதத் தேவரிடம் உற்சாகமாகத் திருப்பிக் கூறியதையும் கேட்டார்.
சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தம் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ஏககாலத்தில் கொன்று விட வேண்டுமென்னும் எண்ணம் முதலில் தோன்றியது. ஆனால் மகள் மேல் அவர் வைத்திருந்த அளவில்லாப் பாசம் வெற்றி கொண்டது. எனவே, மாணிக்கவல்லி திரும்பி அரண்மனைக்குப் போன பிறகு உலகநாதத் தேவரை மட்டும் கொன்று விடுவது என்று உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். “இவனுக்கு ராஜ்யமாம், ராஜ்யம்! இந்தச் சோலைமலைக் கோட்டைக்கு வெளியே இவன் போயல்லவா இராஜ்யம் ஆளவேண்டும்?” என்று மனதிற்குள் கருவிக் கொண்டார். அத்தகைய தீர்மானத்துடன் அவர் மறைந்து நின்ற ஒவ்வொரு நிமிஷமும் அவருக்கு ஒரு யுகமா யிருந்தது. மாணிக்கவல்லியும் உலகநாதத் தேவரும் இலேசில் பிரிந்து போகிற வழியாகவும் இல்லை. நேரமாக ஆகச் சோலைமலை மகாராஜாவின் குரோதமும் வளர்ந்து கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது.

திடீரென்று மாணிக்கவல்லி விம்மும் சத்தத்தைக் கேட்டதும் அவருடைய தந்தையின் இருதயத்தில் வேல் பாய்வதுபோல் இருந்தது. இது என்ன? இவ்வளவு குதூகலமாகவும், ஆசையுடனும் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது ஏன் விம்மி அழுகிறாள்? அந்தப் பாதகன் ஏதாவது செய்து விட்டானா, என்ன? அவருடைய கையானது கத்தியை இன்னும் இறுகப் பிடித்தது; பற்கள் நறநற வென்று கடித்துக் கொண்டன; உதடுகள் துடித்தன: புருவங்கள் நெறிந்தன. மூச்சுக் காற்று திடீரென்று அனலாக வந்தது.
ஆனால் அடுத்தாற்போல் உலகநாதத் தேவர் கூறிய வார்த்தைகளும் அதன் பின் தொடர்ந்த சம்பாஷணையும் அவருடைய கோபத்தைத் தணித்தன. அது மட்டுமல்ல; அவருடைய இரும்பு மனமும் இளகி விட்டது.
“என் கண்ணே! இது என்ன? இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு இப்படி விம்மி அழுகிறாயே? ஏன்? ஏதாவது தெரியாத்தனமாக நான் தவறான வார்த்தைகளைச் சொல்லி விட்டேனா? அப்படியானால் என்னை மன்னித்து விடு. பிரிந்து செல்லும்போது சந்தோஷமாகவும் முகமலர்ச்சியுடனும் விடை கொடு!” என்று பரிவான குரலில் சொன்னார் மாறனேந்தல் மகாராஜா,
“ஐயா! தாங்கள் ஒன்றும் தவறாகப் பேசவில்லை. இந்தப் பேதையிடம் தாங்கள் மன்னிப்புச் கேட்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய தலைவிதியை நினைத்துத்தான் நான் அழுகிறேன். எதனாலோ என் மனதில் ஒரு பயங்கர எண்ணம் நிலைபெற்றிருக்கிறது. தங்களை நான் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்றும் இனிமேல் பார்க்கப் போவதே யில்லை யென்றும் தோன்றுகிறது! ஏதோ ஒரு பெரும் விபத்து – நான் அறியாத விபத்து, எனக்கு வரப்போகிற தென்றும் தோன்றுகிறது!” என்று கூறி விட்டு மறுபடியும் சோலைமலை இளவரசி விம்மத் தொடங்கினாள்.
இதைக் கேட்ட உலகநாதத்தேவர், உறுதியான குரலில், “ஒருநாளும் இல்லை, மாணிக்கவல்லி! உன்னுடைய பயத்துக்கு ஆதாரமே யில்லை. இந்த வாழ்க்கையில் இனி உன்னைப் பார்க்காமல் இருக்க என்னால் முடியவே முடியாது. நீ எதனால் இப்படிப் பயப்படுகிறாய் என்று எனக்குத் தெரியும். உன் தகப்பனாரைக் குறித்துத்தானே? அவருக்கு என்மேலுள்ள துவேஷத்தினால் உன்னை நான் பார்க்க முடியாமல் போகும் என்றுதானே எண்ணுகிறாய்?” என்றார்.
“ஆம், ஐயா! அவருடைய மனதை நான் மாற்றிவிடுவேன் என்று ஜம்பமாகத் தங்களிடம் கூறினேன். ஆனால் அந்தக் காரியம் என்னால் முடியவே யில்லை. என்னுடைய பிரயத்தனங்கள் எல்லாம் வீணாகவே போயின. தங்களைப் பற்றி நல்ல வார்த்தை ஏதாவது சொன்னால் அவருடைய கோபந்தான் அதிகமாகிறது. இப்போதுகூடத் தங்களுக்கு ராஜ்யம் திரும்பி வரப் போவது பற்றி அவர் வெகு கோபமாகப் பேசினார். தங்களைப் பற்றிப் பேசுவதற்கே எனக்குத் தைரியம் வரவில்லை!” என்றாள் மாணிக்கவல்லி.
“கண்ணே! இதைப் பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம். உன் தந்தையிடம் நீ என்னைப் பற்றிப் பேச வேண்டாம். ஏனெனில் நானே பேச உத்தேசித்திருக்கிறேன். மாறனேந்தல் இராஜ்யத்தைத் திரும்ப ஒப்புக் கொண்டதும் முதல் காரியம் நான் என்ன செய்யப் போகிறேன், தெரியுமா? உன் தந்தையிடம் வந்து அவர் காலில் விழுந்து என் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளப் போகிறேன். உன்னை அடையும் பாக்கியத்துக்காக ஆயிரந் தடவை அவர் காலில் விழவேண்டுமானாலும் நான் விழுவேன். ஆனால் அதுமட்டும் அல்ல. என்னுடைய குற்றத்தையும் நான் இப்போது உணர்ந்திருக்கிறேன். அவரை நான் நிந்தனை சொன்னதெல்லாம் பெருந் தவறு என்று இப்போது எனக்குத் தெரிகிறது. உண்மையில் அவர் சொன்னதுதானே சரி என்று ஏற்பட்டிருக்கிறது? இங்கிலீஷ்காரர்களைப் பற்றி நான் என்னவெல்லாமோ கெடுதல்களை நம்பினேன்; அவதூறு பேசினேன். அப்படிப்பட்டவர்கள் தோற்றுப் போன எதிரியின் வீரத்தை மெச்சி அவனுடைய மகனுக்கு இராஜ்யத்தைத் திருப்பிக் கொடுக்கச் சித்தமா யிருக்கிறார்கள். எப்படிப் பட்ட உத்தம புருஷர்கள்? அவர்களை நான் நிந்தனை செய்ததும், அவர்களோடு சேர்த்து உன் தந்தையைக் குறை கூறியதும் குற்றந்தானே? ஆகவே உன் தந்தையிடம் நான் அவசியம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே யாக வேண்டும். மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, உன்னை எனக்கு மணம் செய்து கொடுக்கும்படியும் கேட்பேன். அதற்கு அவர் சம்மதிக்கா விட்டால், அவருடைய கைக் கத்தியால் என்னைக் கொன்று விடும்படி சொல்வேன். அப்படி ஒரு வேளை உன் தகப்பனார் கையினால் நான் மடியும்படி நேர்ந்தால், அதற்காக நான் ஒரு சிறிதும் வருத்தப்பட மாட்டேன். அடுத்த ஜன்மத்திலாவது உன்னைத் தேடிக் கொண்டு வந்து மணம் புரிவேன். இது சத்தியம்! அதோ, வான வெளியில் மினுமினுக்கும் கோடானு கோடி நட்சத்திரங்களின் சாட்சியாக நான் சொல்லுவது சத்தியம்!”
இதை யெல்லாம் கேட்டதும் சோலைமலை மகாராஜாவின் கரையாத கல் மனமும் கரைந்து விட்டது; அவருடைய இரும்பு இருதயமும் உருகி விட்டது: கண்ணிலே கண்ணீரும் துளித்து விட்டது. அதற்கு மேல் அங்கு நிற்கக் கூடாதென்று எண்ணிச் சத்தம் செய்யாமல் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார். அன்றிர வெல்லாம் அவர் தூங்கவே இல்லை. சோலைமலைக் கோட்டையில் இன்னும் இரண்டு ஜீவன்களும் அன்றிரவு கண்ணை இமைக்கவில்லை.
18. உலகம் சுழன்றது!
இரண்டு தினங்களுக்குப் பிறகு மாறநேந்தல் உலகநாதத் தேவரைச் சோலைமலை மகாராஜா சந்தித்த போது, அவர் முற்றும் புது மனிதரா யிருந்தார். அவர்களுடைய சந்திப்பு பிரிட்டிஷ் படையின் மேஜர் துரையின் முன்னிலையில் துரையின் கூடாரத்தில் நடைபெற்றது. உலகநாதத் தேவரின் கைகளை மணிக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. அவரையும் இன்னும் சில இராஜாங்கத் துரோகிகளையும் என்ன செய்வது என்பது பற்றி மேலாவிலிருந்து வரவேண்டிய உத்தரவை மேற்படி மேஜர் துரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சோலைமலை மகாராஜா மேற்படி மேஜரால் தாம் ஏமாற்றப்பட்டதையும், உலகநாதத் தேவர் பிடிபட்டதற்குத் தாமே காரணம் என்பதையும் எண்ணி எண்ணி மனம் புண்ணாகி யிருந்தார். எனவே, உலகநாதத் தேவரைக் கண்டதும் அவருக்கு விம்மலும் கண்ணீரும் பொங்கிக் கொண்டு வந்தது. அந்த வெள்ளைக்காரன் முன்னிலையில் தம்முடைய மனத் தளர்ச்சியைக் காட்டக் கூடாதென்று தீர்மானித்துப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டார். பேச நா எழாமல் மகாராஜா தவிப்பதைப் பார்த்த உலகநாதத் தேவர், “மாமா! தாங்களே இப்படி மனக் தளர்ந்தால் இளவரசிக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்?” என்றார்.
தேவரின் வார்த்தைகள் சோலைமலை அரசரின் மௌனத்தைக் கலைத்தன.
“ஆறுதல் சொல்லுவதா? மாணிக்க வல்லிக்கு நான் என்ன ஆறுதலைச் சொல்லுவேன்? அவள் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியம் இல்லையே! – தம்பி! ஆயிரம் வருஷம் தவம் கிடந்தாலும் உன்னைப் போன்ற ஒரு வீரன் கிடைக்க மாட்டானே? மாறனேந்தல் – சோலைமலை வம்சங்கள் இரண்டையும் நீ விளங்க வைத்திருப்பாயே? அப்படிப்பட்டவனை மூடத் தனத்தினால் இந்தப் பாவி காட்டிக் கொடுத்து விட்டேனே? இந்த வெள்ளைக்காரப் பாதகன் என்னை ஏமாற்றி விட்டானே? அப்பனே! வெள்ளைக்கார சாதியைப் பற்றி நான் எண்ணிய தெல்லாம் பொய்யாய்ப் போயிற்றே? நீ சொன்னது அவ்வளவும் மெய்யாயிற்றே! எந்த வேளையில் இந்தப் படுபாவி என் கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே வந்தானோ, அன்றைக்கே உன்னுடைய குலத்துக்கும் என்னுடைய குலத்துக்கும் சனியன் பீடித்து விட்டது!..”
மேஜர் துரை அந்தப் பக்கங்களில் பழகிப் பழகிக் கொஞ்சம் தமிழ் தெரிந்து கொண்டிருந்தான். எனவே, சோலைமலை ராஜாவின் ஆத்திரமான பேச்சைக் கேட்டுச் சிரித்தான். அவனுடைய சிரிப்பு சோலைமலை மகாராஜாவுக்கு நெருப்பா யிருந்தது.
“பாவி! என் அரண்மனைச் சோற்றைத் தின்றுவிட்டு எனக்கே துரோகம் செய்தாயே? செய்வதையும் செய்துவிட்டு இப்போது ஹீஹீ என்று சிரிக்கிறாயே?” என்றார் சோலைமலை மன்னர்.
“துர்ரோகமா? என்னத் துர்ரோகம்? யாருக்குத் துர்ரோகம்? நீர் தானே இந்த டிரெய்டரை எப்படி யாவது காப்சர் செய்து ஹாங்க் பண்ணியே ஆகவேணும் என்று பிடிவாதம் ஸெய்தீர்?” என்றான் மேஜர் துரை. இதைக் கேட்டதும் சோலைமலை அரசரின் முகம் வெட்கத்தால் சிறுத்துக் கோபத்தால் கறுத்தது. அதைக் கவனித்த மாறனேந்தல் அங்கேயே ஏதாவது விபரீதம் நடந்து விடாமல் தடுக்க எண்ணி, “மாமா! நடந்தது நடந்து விட்டது. இனிமேல் அதைப் பற்றிப் பேசி என்ன பயன்? இந்த வெள்ளைக்காரன் என்னை விடப் போவதில்லை. கட்டாயம் தூக்குப் போட்டுக் கொன்று விடுவான். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை, தங்களுடைய நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றேனே, அதுவே எனக்குப் போதும். மனத் திருப்தியுடன் சாவேன். தங்கள் குமாரியிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள்; விதியை மாற்ற யாராலும் முடியாது, இளவரசி என்னை மறந்து விட்டு வேறு நல்ல குலத்தைச் சேர்ந்த ராஜகுமானை மணந்து கொள்ளட்டும். இது என்னுடைய விருப்பம், வேண்டுகோள் என்று சொல்லுங்கள்!…” என்றார்.
அப்போது சோலைமலை மன்னர் நடுவில் குறுக்கிட்டு, “தம்பி! என்ன வார்த்தை சொல்லுகிறாய்? என் குமாரியை யார் என்று நினைத்தாய்? உன்னை எண்ணிய மனத்தினால் இன்னொருவனை எண்ணுவாளா? ஒரு நாளும் மாட்டாள். இந்தப் படுபாவி உன்னை விடாமற் போனால், என் மகளும் பிழைத்திருக்க மாட்டாள். உங்கள் இருவரையும் பறி கொடுத்து விட்டு நான் ஒருவன் மட்டும் சோலைமலைக் கோட்டையில் பேய் பிசாசைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருக்க நேரிடும். ஆனால், ஒன்று சொல்கிறேன் கேள். சோலைமலை முருகன் அருளால் அப்படி யொன்றும் நேராது. நீ தைரியமாயிரு!” என்றார்.
“ஆகட்டும், மாமா! நான் தைரியமாகவே யிருக்கிறேன். தாங்களும் மனதைத் தளர விடாமல் இருங்கள். இளவரசிக்கும் தைரியம் சொல்லுங்கள்!” என்றார் மாறனேந்தல் உலகநாதத் தேவர்.
மறுநாள் உலகநாதத் தேவருக்குச் சாப்பாடு கொண்டு வந்த ஆள், துரை கவனியாத சமயம் பார்த்து ஒரு இரகசியச் செய்தி கூறினான். சோலைமலை மகாராஜா மேஜர் துரையிடம் கூடியவரையில் மன்றாடிப் பார்க்கப் போவதாக வும், அப்படியும் துரை மனம் மாறாவிட்டால், தூக்குப் போடும் சமயத்தில் உலகநாதத் தேவரை விடுவிக்க வேண்டிய வீரர்களைத் தயார்ப்படுத்தி வைத்திருப்பதாகவும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவரும் தயாரா யிருக்கவேண்டும் என்றும் தெரிவித்தான்.
துரையிடம் மன்றாடுவது என்பது மாறனேந்தலுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது சொன்ன விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது. எனவே, அது முதல் அவர் மிக்க உற்சாகமாகவே இருந்தார்.
சுருக்குக் கயிறுகள் வரிசையாகத் தொங்கிய இலுப்ப மரத்தின் கிளைக்கு அடியில் நின்றபோதுகூட உலகநாதத் தேவரின் உற்சாகம் குன்றவில்லை. சோலைமலை அரசர் மேஜர் துரையிடம் மன்றாடிக் கொண்டிருந்தது மட்டும் அவருக்கு எரிச்சலை அளித்தது. எப்போது அவர்களுடைய பேச்சு முடியும், எப்போது துரை தூக்குப் போட உத்தரவு கொடுப்பான், எப்போது சோமைலை மகாராஜா மறைவான இடத்தில் தயாராக வைத்திருந்த வீரர்கள் தடதடவென்று ஓடி வருவார்கள் என்று அவர் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், அவருடைய எண்ணமும், சோலைமலை மகாராஜாவின் முன் ஏற்பாடும், ஒன்றும் நிறைவேறாத வண்ணம் விதி குறுக்கிட்டது.
உலககாதத் தேவர் சிறைப்பட்ட செய்தி கேட்டதிலிருந்து சோகத்தில் ஆழ்ந்து படுத்த படுக்கையிலிருந்து எழுந்திராமலிருந்த மாணிக்கவல்லி, சரியாக அந்தச் சமயம் பார்த்து அரண்மனை மேல்மச்சில் ஏறி உப்பரிகையின் முகப்புக்கு வந்தாள்.
கோட்டை வாசலுக்குச் சமீபத்தில் இலுப்ப மரத்தின் அடியில் தொங்கிய சுருக்குக் கயிற்றின் கீழே தன் காதலர் நிற்பதைப் பார்த்தாள். ”ஓ’ என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தாள்.
உலகம் சுழன்றது! தினம் ஒரு தடவை சுழன்று, வருஷத்தில் 365 தடவை சுழன்று, இந்த மாதிரி நூறு வருஷ காலம் தன்னைத்தானே சுழன்று தீர்த்தது!
நூறு வருஷத்துக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி நிலை பெற்றிருந்த இந்தியாவில், இருளடைந்த ஒரு ஜில்லா சிறைச்சாலையின் அறையில் குமாரலிங்கம் தனியாக அடைக்கப் பட்டிருந்தபோது மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி அவன் நினைவுக்கு வந்தன, நினைவுக்கு வந்த தோடு இல்லை; அந்த அநுபவங்களை யெல்லாம் அவன் திரும்பத் திரும்ப அநுபவித்துக்கொண்டிருந்தான். இருபதாம் நூற்றாண்டில் கலாசாலையில் ஆங்கிலக் கல்வியும் விஞ்ஞான சாஸ்திரமும் கற்றுத் தேர்ந்த அறிவாளியான அவன் பலமுறையும், ‘இதெல்லாம் வீண் பிரமை; ஆதாரமற்ற மனப்பிராந்தி’ என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு பார்த்தான். ஆயினும் அந்தப் பிரமை நீங்குவதாக இல்லை.
குமாரலிங்கம் சிறைப்பட்டுக் கீழ்க் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வழக்கு நடத்தும் விஷயத்தில் சிறிதும் சிரத்தையே யில்லாமல் இருந்தான். அவனுக்காக இலவசமாக வந்து வழக்காடிய வக்கீல் அவனுடைய அசிரத்தையைப் பற்றி அடிக்கடி கடிந்து கொண்டார். “வழக்கில் நாம் ஜயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நீ இப்படி ஏனோ தானோ என்று இருந்தால் கேஸ் உருப்படாது. தூக்கு மரத்தில் நீ தொங்கியே தீரவேண்டும்” என்று சொல்லிக் கண்டிப்பார். “உன் விஷயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய உற்றார் உறவினர் யாரும் இல்லையா?” என்று கேட்பார். அவர்களைக் கொண்டு குமாரலிங்கத்துக்கு ஊக்கமளித்து உற்சாகப் படுத்தலாம் என்றுதான்! ஆனால் குமாரலிங்கமோ தனக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லை யென்றும், தன் விஷயத்தில் சிரத்தை யுள்ளவர்களே இல்லை என்றும் சாதித்து வந்தான்.
ஒருகாள் வக்கீல் வந்து, “என்னடா, அப்பா? உனக்கு ஒருவருமே உறவில்லை என்று சாதித்து விட்டாயே? சோலைமலை மணியக்காரர் உனக்கு மாமாவாமே?” என்றார்.
“இந்தப் பொய்யை உங்களுக்கு யார் சொன்னது?” என்று குமாரலிங்கம் ஆத்திரத்துடன் கேட்டான்.
“சாக்ஷாத் சோலைமலை மணியக்காரரேதான் சொன்னார். அதோடு இல்லை! உன்னுடைய கேஸை நடத்துவதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயார் என்றும் சொன்னார்.”
இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனோ நிலைமையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. அப்போதைக்கு உயிரில் ஆசையும், வாழ்க்கையில் உற்சாகமுமே ஏற்பட்டு விட்டது. பொன்னம்மாளின் நிலைமையைப்பற்றி மணியக்காரரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அளவில்லாமல் உண்டாயிற்று.
எனவே, வக்கீலிடம், “நான் சொன்னது தவறுதான், ஐயா! ஆனால் சோலைமலை மணியக்காரர் என் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தயவு செய்து அடுத்த தடவை தாங்கள் வரும்போது மணியக்காரரையும் அழைத்து வாருங்கள். அவருக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்!” என்றான் குமாரவிங்கம்.
வக்கீலும் அதையேதான் விரும்பினார். ஆதலால் உடனே “சரி!” என்று சொல்லி விட்டுப் போனார்.
ஒரு நாள் வக்கீல் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். சோலைமலை மணியக்காரரை அழைத்துக் கொண்டு வந்தார். முன்னே பாழடைந்த கோட்டையில் வேட்டை நாய் பின் தொடரச் சென்ற மணியக்காரருக்கும் இப்போது குமாரலிங்கத்தை பார்க்க வந்தவருக்கும் வேற்றுமை நிரம்ப இருந்தது. கொலைக்குற்றவாளிகளுக் கென்று ஏற்பட்ட கடும் சிறையின் இரும்புக் கம்பி களுக்குப் பின்னால் குமாரலிங்கத்தைக் கண்டதும் மணியக்காரரின் கண்களில் கண்ணீர் ததும்பியது. பேச முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டது. அவருடைய நிலையைப் பார்த்த குமாரலிங்கம் தானே பேச்சைத் தொடங்கினான்.
“ஐயா ! என்னுடைய வழக்கு விஷயத்தில் தாங்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக வக்கீல் ஸார், சொன்னார். அதற்காக மிக்க வந்தனம்!” என்றான்.
“ஆமாம், தம்பி! என் வீட்டுத் திண்ணையிலே அல்லவா உன்னைக் கைது செய்து விட்டார்கள்? அதனால் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் அவமானத்தையும் சொல்லி முடியாது!” என்றார் மணியக்காரர்.
“அச் சமயம் அங்கே தாங்கள் இருந்தீர்களா? தங்களை நான் பார்க்க வில்லையே?” என்றான் குமாரலிங்கம்.

“எப்படிப் பார்த்திருக்க முடியும்? உன்னை நான் தேடிக் கொண்டு அந்தப் பாழாய்ப்போன கோட்டைக்குப் போனேன். அதற்குள் நீ அவசரப்பட்டுக் கொண்டு வேறு வழியாக ஊருக்குள் வந்து விட்டாய்! எல்லாம் விதியின் கொடுமைதான்!” என்றார் மணியக்காரர்.
“என்னைத் தேடிக் கொண்டு போனீர்களா? எதற்காக?” என்று அடங்காத அதிசயத்தோடும் ஆவலோடும் குமாரலிங்கம் கேட்டான்.
பிறகு மணியக்காரர் எல்லாம் விவரமாகச் சொன்னார். தளவாய்ப் பட்டணத்தில் குமாரலிங்கம் பிரசங்கம் செய்தபோது மணியக்காரர் தம்முடைய முரட்டு சுபாவங் காரணமாக இரைச்சல் போட்டுப் பேசிக் கலகம் உண்டாக்கினா ரென்றாலும், உண்மையில் அவன்மேல் அப்போதே அவருக்கு மரியாதையும் அபிமானமும் உண்டாகி விட்டன. சோலைமலைக்கு அவர் வந்த பிறகு தன் மகள் அவனுக்குச் சாப்பாடுகொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவது பற்றிச் சீக்கிரத்திலேயே தெரிந்து கொண்டார். தெரிந்தும் தெரியாததுபோல் இருந்தார். போலீஸார் காந்தி குல்லா வேஷம் தரித்து அவனைப் பிடிக்கவந்த போது, அவர் ஏமாந்து விடவில்லை. சோலைமலை மகாராஜா மேஜர் துரையின் பேச்சைக் கேட்டு ஏமாந்த பிறகு நூறு வருஷம் இந்தியாவிலே பிரிட்டிஷ் ஆட்சி நடந்திருக்கிறதல்லவா? பிரிட்டிஷாரின் தந்திர மந்திரங்களையும் குழ்ச்சித் திறன்களையும் இந்திய மக்கள் எல்லாருமே தெரிந்து கொண்டிருந்தார்கள் அல்லவா? அவ்விதமே மணியக்காரரும் தெரிந்து கொண்டிருந்தார். எனவே, அந்த வேஷக்காரர்களின் பேச்சை அவர் நம்புவதுபோல் பாசாங்கு செய்தாரே தவிர, உண்மையில் அவர்களை நம்பவில்லை. அந்த வேஷம் தரித்த போலீஸ்காரர்கள், குமாரலிங்கத்தைப் பிடிப்பதற்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துத் தெரிந்து கொண்டார். எனவே, அவர்களுக்கு வெகு தடபுடலாக விருந்து கொடுப்பதற்கு வீட்டுக்குள் சத்தம் போட்டுப் பேசி ஏற்பாடு செய்தார். அவ்விதம் பேசி அவர்களை ஏமாற்றிவிட்டுப் பாழடைந்த கோட்டைக்குப் போய்க் குமாரலிங்கத்தைத் தேடிப்பிடித்து அவனுக்கு எச்சரிக்கை செய்யப் புறப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் போய்ச் சேர்வதற்கு முன்னாலேயே பொன்னம்மான் போய் விட்டாள். குமாரலிங்கம் தானாகவே வந்து அகப்பட்டுக் கொண்டான்.
இதையெல்லாம் கேட்டபோது குமாரலிங்கத்துக்கு வருத்தத்தோடு கூடஉற்சாகமும் கலந்து ஏற்பட்டது. பொன்னம்மாளின் தந்தை தன் விஷயத்தில் இப்படிப்பட்ட மன மாறுதல் அடைந்ததை நினைத்து அவன் உற்சாகமடைந்தான். பொன்னம்மாள் அவ்வளவு அவசரப் படாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று வருந்தினான். “பொன்னம்மாள் பேரில் என்ன பிசகு? அவள் சொன்னதை உடனே நம்பி அவசரப்பட்டு ஓடிய என் பேரில் அல்லவா பிசகு? ஒரு கிராம மணியக்காரருக்கு உள்ள புத்திக் கூர்மை காலேஜுப் படிப்புப் படித்த எனக்கு இல்லையே?” என்று எண்ணித் தன்னைத் தானே நொந்து கொண்டான்.
மணியக்காரர் சொன்னதை யெல்லாம் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்த பிறகு, தான் ஆரம்பத்திலிருந்தே கேட்பதற்கு விரும்பித் துடி துடித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான்.
“ஐயா? பொன்னம்மாள் எப்படி யிருக்கிறாள்? சௌக்கியமா யிருக்கிறாளா?” என்றான்.
“இது என்ன கேள்வி? என்னமாக சௌக்கியமா யிருப்பாள்? உன்னைப் போலீஸார் கைது செய்து கொண்டு வந்ததிலிருந்து அவளுக்கு அசௌக்யந் தான்!” என்றார் மணியக்காரர்.
“அசௌக்யம் என்றால் உடம்புக்கு என்ன செய்கிறது? வைத்தியம் ஏதாவது பார்த்தீர்களா?” என்று குமாரலிங்கம் கவலையோடு கேட்டான்.
“என்ன வைத்தியம் பார்த்து என்ன பிரயோஜனம்? வைத்தியத்தினாலும் மருந்தினாலும் தீருகிற வியாதி யில்லை. மனக் கவலைக்கு மருந்து எது? அவளாதான்லே நீ போலீஸாரிடம் அகப்பட்டுக் கொண்டாய் என்ற எண்ணம் பொன்னம்மாள் மனதில் ஏற்பட்டு விட்டது. அதனால் அவள் மனதில் ஏற்பட்ட கவலை உடம்பையும் படுத்துகிறது.”
இதைக் கேட்ட குமாரலிங்கத்தின் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது.
“ஐயா! தாங்கள் பொன்னம்மாளுக்கு ஆறுதல் சொல்லக்கூடாதா?” என்று குமாரலிங்கம் கூறிய வார்த்தைகளில் துயரம் ததும்பி யிருந்தது.
“நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? சொன்னால்தான் என்ன உபயோகம்? நீ வந்து ஆறுதல் சொன்னால்தான் உண்டு! ஆனால் நீ ரொம்ப அசிரத்தையா யிருக்கிறாய் என்று வக்கீல் ஐயா சொல்கிறார். அசிரத்தை கூடவே கூடாது, அப்பனே! உனக்காக இல்லா விட்டாலும், பொன்னம்மாளுக்காகச் சிரத்தை எடுத்துக் கேஸை நடத்த வேண்டும். வக்கீல் ஐயா சொல்கிறபடி செய்து எப்படி யாவது விடுதலை அடைய வேண்டும்!” என்றார் மணியக்காரர்,
கதைகளிலே சொல்வதுபோல், அப்போது குமாரலிங்கத்தின் முகத்தில் ஒரு சோகப் புன்னகை தவழ்ந்தது. மனதிற்குள்ளே அவன் “விடுதலை அடைவதா? இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் போதுதான் எனக்கு விடுதலை! ஆனால் இதை இவர்களிடம் சொல்லி என்ன பயன்? வீணா வருத்தப் படுவார்கள்!” என்று எண்ணிக் கொண்டான்.
“ஆகட்டும், ஐயா! என்னால் முடிந்த வரையில் சிரத்தை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பொன்னம்மாளுக்குத் தாங்கள் தைரியம் சொல்லுங்கள். என்னை அடியோடு மறந்து விடச் சொல்லுங்கள். நல்ல அந்தஸ்திலுள்ள வாலிபன் யாருக்காவது அவளைச் சீக்கிரம் கலியாணம் செய்து கொடுங்கள்!” என்று பரிவோடு குமாரலிங்கம் சொன்னான்.
இப்படிச் சொல்லி முடித்ததும், மாறனேந்தல் உலககாதத் தேவர் சோலைமலை அரசருக்குச் சொன்ன வார்த்தைகளையே தானும் ஏறக்குறைய இப்போது சொன்னதை எண்ணித் திடுக்கிட்டான்.
அதற்கு மணியக்காரர் கூறிய பதில் மேலும் அவனைத் திடுக்கிடச் செய்தது. சோகமும் பரிகாசமும் கலந்த தொனியில் மணியக்காரர் சிரித்து விட்டு, “குமாரலிங்கம்! பொன்னம்மாளை யார் என்று நினைத்தாய்? உன்னை எண்ணிய மனதினால் இன்னொருவனை எண்ணுவாளா?” என்றார்.
– தொடரும்…
– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.
– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.