கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 4,787 
 
 

(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13. உல்லாச வாழ்க்கை!

அன்று மத்தியானம் மறுபடியும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தாள். இலையைப் போட்டுப் பரிமாறினாள். குமாரலிங்கம் மௌனமாகச் சாப்பிட்டான்.

“காலையில் கலகலப்பாக இருந்தாயே? இப்போது ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று பொன்னம்மாள் கேட்டாள்.

“ஒன்றுமில்லை, பொன்னம்மா! காலையில் நீ சொன்ன விஷயங்களைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றான் குமாரவிங்கம்.

“என்ன யோசித்துக் கொண்டிருந்தாய்?” என்று பொன்னம்மாள் திரும்பவும் கேட்டாள்.

“உன் தகப்பனார் என்னிடம் இவ்வளவு கோபமா யிருக்கும்போது நான் இங்கே இருக்கலாமா என்று தான் யோசனையா யிருக்கிறது. காலையிலே உன்னை ஒன்று கேட்க வேண்டுமென் றிருந்தேன். மறந்து விட்டேன்…”

“உனக்கு மறதி ரொம்ப அதிகம் போலிருக்கிறது!” என்றாள் பொன்னம்மாள்.

“அப்படி ஒன்றும் நான் மறதிக்காரன் அல்ல. உன் முகத்தைப் பார்த்தால்தான் பல விஷயங்கள் மறந்து போகின்றன!..”

“வயிற்றுப் பசியைத் தவிர!” என்று குறுக்கிட்டுச் சொன்னாள் பொன்னம்மாள்.

“ஆமாம்; வயிற்றுப் பசியைத் தவிரத்தான். ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்று பெரியோர் வாக்கு இருக்கிறதே!”

“போகட்டும்! காலையில் என்னை என்ன கேட்க வேண்டும். என்று எண்ணி யிருந்தாய்?”

“சூரியன் உதித்து ஒரு நாழிகைப் பொழுதுக்கு இந்தப் பக்கமாக ஒரு பெரிய மனுஷர் போனார். அவர் முகத்தைப் பார்த்தால் ரொம்ப கோபக்காரர் என்று தோன்றியது. ஒரு வேளை அவர்தான் மணியக்காரரோ என்று கேட்க எண்ணினேன்.”

“இருந்தாலும் இருக்கும். அவர் பின்னோடு ஒரு நாய் வந்ததா?”

“ஆமாம்; பெரிய வேட்டை நாய் ஒன்று வந்தது. இங்கே வந்ததும் அது குலைத்தது. அந்தப் பெரிய மனுஷர் கையிலிருந்த தடியினால் அதன் மண்டையில் ஒரு அடி போட்டார்.”

“அப்படியானால் நிச்சயமாக அப்பாதான்! உன்னை அவர் பார்த்து விட்டாரோ?” என்று பொன்னம்மாள் திகிலுடன் கேட்டாள்.

“இல்லை, பார்க்கவில்லை! அந்த மொட்டைச் சுவருக்குப் பின்னால் நான் மறைந்து கொண்டிருந்தேன். நாய்க்கு மோப்பம் தெரிந்து குலைத்திருக்கிறது. அதற்குப் பலன் தலையில் ஓங்கி அடி விழுந்தது!”

“நல்ல வேளை! கரும்புத் தோட்டத்துக்கு இந்த வழியாகத்தான் அப்பா நிதம் போவார். தப்பித் தவறி அவர் கண்ணிலே மட்டும் நீ பட்டு விடாதே!”

“அவர் கண்ணிலே படாமல் இருப்பதென்ன? இந்த இடத்திலிருந்தே கிளம்பிப் போய்விட உத்தேசிக்கிறேன், பொன்னம்மா!”

“அதுதான் சரி! உடனே போய் விடு! முன்பின் தெரியாத ஒரு ஆண் பிள்ளையை நான் நம்பினேனே! என்னுடைய புத்தியை விறகுக் கட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும்!”


இவ்விதம் பொன்னம்மாள் சொன்னபோது அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதைக் குமாரலிங்கம் கவனித்தான். சற்று முன்னால் அவன் யோசித்து முடிவு செய்திருந்த தீர்மானங்களெல்லாம் காற்றிலே பறந்து போயின. இந்தக் கள்ளங் கபடமற்ற பெண்ணை முதன் முதலில் தான் சந்தித்து இன்னும் இருபத்து நாலு மணி நேரங்கூட ஆகவில்லை யென்பதை அவனால் நம்ப முடியவில்லை.

“உன்னைப் பிரிந்து போவதற்கு எனக்கும் கஷ்டமாய்த்தா னிருக்கிறது. ஆனாலும் வேறு என்ன செய்யட்டும், நீதான் சொல்வேன்!” என்று குமாரலிங்கம் உருக்கமான குரலில் கூறினான்.

“நீ இப்போது சொன்னது நெசமா யிருந்தால் என்னையும் உன்னோடு இட்டுக் கொண்டு போ!” என்று மணியக்காரர் மகள் கூறிய பதில், குமாரலிங்கத்தை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. சற்று நிதானித்து விட்டு அவன் சொன்னான்.

“பொன்னம்மா! உன்னையும் என்னோடு அழைத்துப் போக வல்லவா சொல்லுகிறாய்? அதற்கு எனக்குப் பூரண சம்மதம். உன்னைப் பார்த்த பிறகு, ‘கலியாணம் செய்து கொள்வதில்லை’ என்ற தீர்மானத்தைக் கூடக் கைவிட்டு விட்டேன். ஆனால் சமய சந்தர்ப்பம் தற்போது சரியா யில்லையே? நானே போலீஸ் புலிகளிடம் அகப்படக் கூடா தென்று தப்பி ஓடி வந்தவன். என்னை நான் காப்பாற்றிக் கொள்ளுவதே பெருங் கஷ்டம். உன்னையும் கூட அழைத்துக் கொண்டு எங்கே போக? என்னத்தைச் செய்ய?”

“என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போவது, கல்லைக் கட்டிக் கொண்டு கேணியிலே விழுகிற மாதிரி தான். அது எனக்குத் தெரியாம வில்லை. அதனாலேதான் உன்னை இங்கேயே இருக்கச் சொல்கிறேன்!” என்றாள் பொன்னம்மாள்.

“அது எப்படி முடியும் ? நீதானே சொன்னாய், உன் அப்பா என்னைப் பார்த்து விட்டால் கடித்து விழுங்கி விடுவார் என்று?”.

“அது மெய்தான். ஆனால் இந்தப் பாழுங் கோட்டையிலும் இதைச் சேர்ந்த காடுகளிலும் நீ யார் கண்ணிலும் படாமல் எத்தனை நாள் வேணு மானாலும் இருக்கலாமே! சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதற்கு நான் இருக்கிறேன். உனக்கு என்ன பயம்?”

“எனக்கு ஒரு பயமும் இல்லை, பொன்னம்மா! ஆனால் எத்தனை நாள் உனக்கு நான் இம்மாதிரி சிரமம் கொடுத்துக்கொண்டிருப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தினந்தினம் நீ சாப்பாடு கொண்டு வருவாய்? வேண்டாம். பொன்னம்மா! நான் எங்கேயாவது போய்த் தொலைகிறேன். உனக்குக் கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை.”


பொன்னம்மாள் பரிகாசத்துக்கு அறிகுறியாகக் கழுத்தை வளைத்துத் தலையைத் தோளில் இடித்துக் கொண்டு கூறினாள் :

“பேச்சைப் பார், பேச்சை! எனக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லையாம்! நான்தான் சொன்னேனே, நீ இவ்விடத்தை விட்டுப் போனால்தான் எனக்கு மனக் கஷ்டம் உண்டாகும் என்று. நானோ பெண் ஜன்மம் எடுத்தவள். உயிர் இருக்கும் வரையில் யாருக்காவது சோறு படைத்துத் தானே ஆகவேண்டும்? உனக்குச் சில நாள் சோறு கொண்டு வந்து கொடுப்பதில் எனக்கு என்ன கஷ்டம்? ஒன்றுமில்லை. தோட்டத்தில் கரும்பு வெட்டி வெல்லம் காய்ச்சி முடிவதற்குப் பதினைந்து நாள் ஆகும். அது வரையில் நான் இந்த வழியாக நித நிதம் போசு வேண்டி யிருக்கும். அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போவேன். அப்போது உனக்கும் கொண்டு வருகிறேன்..”

குமாரலிங்கம் குறுக்கிட்டு, “பொன்னம்மா! உன் தகப்பனாரை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பயமாகத் தானிருக்கிறது. அவரைப் பார்க்கும் போதே முன் கோபக்காரர் என்று தோன்றுகிறது. என் பேரில் வேறே அவருக்கு விசேஷமான கோபம். அதற்குக் காரணம் இல்லாமலும் போகவில்லை. தப்பித் தவறி என்றைக்காவது ஒரு நாள் நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அவர் பார்த்து விட்டால் என்ன கதி? என்னைப் பற்றியே நான் சொல்ல வில்லை: உனக்காகத்தான் பயப்படுகிறேன்” என்றான்.

“ஐயா! எங்க அப்பர் பொல்லாத மனிதர் தான். ஆனால் ஊருக்குத்தான் அவர் பொல்லாதவர். எனக் கு நல்லவர். சின்னாயி ஒரு நாள் என்னைப் பாடாய்ப் படுத்தியதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டார். அதற்காக அவளை மொத்து மொத்து என்று மொத்தி விட்டார்!…”

“அதாவது உங்க அப்பாவினால் உனக்கு ஒன்றும் அபாயம் இல்லை, வந்தால் எனக்குத்தான் வரும் என்று சொல்லுகிறாயா?”

அந்தக் கேலியை விரும்பாத பொன்னம்மாள் முகத்தைச் சிணுக்கிக் கொண்டு சொன்னாள்:

“அப்படி ஒன்றும் சொல்ல வில்லை. எங்க அப்பாவுக்கு நான் செல்லப் பெண். சமயம் பார்த்துப் பேசி உன் விஷயத்தில் அவருடைய மனதை மாற்றி விடலாம் என்றிருக்கிறேன்.”


முதல் நாளிரவு சோலைமலை மகாராஜாவும் இளவரசியும் பேசிக் கொண்டிருந்த காட்சியையும், தான் பலகணியின் அருகில் மறைந்திருந்து ஒட்டுக் கேட்ட வார்த்தைகளையும் குமாரவிங்கம் நினைவு கூர்ந்தான்.

“பொன்னம்மா! நீ என்னதான் பிரயத்தனம் செய்தாலும் உன் தகப்பனாரின் மனதை மாற்ற முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை!” என்றான்.

“ஏன் இவ்வளவு அவ நம்பிக்கைப் படுகிறாய்? கொஞ்சம் பொறுத்திருந்து என் சாமார்த்தியத்தைப் பாரேன்!” என்றாள் பொன்னம்மாள்.

“நீ சாமர்த்தியக்காரிதான்: அதைப் பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் என் விஷயத்தில் எதற்காக நீ இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாய்? இன்றைக்கோ, நாளைக்கோ என்னைப் போலீஸார் வேட்டையாடிப் பிடித்து விடலாம். அப்புறம் இந்த ஜன்மத்தில் நாம் ஒருவரை யொருவர் பார்க்கவே முடியாது, என் உடம்பில் இருக்கும் உயிர் ஒரு மெல்லிய கயிற்றின் முனையிலே தொங்கிக் கொண்டிருக்கிறது! எந்த நிமிஷத்தில் இந்தக் கழுத்திலே சுருக்கு விழுமோ, தெரியாது, இப்படிப்பட்ட நிலையில் உள்ள என்னை நீ நம்ப வேண்டாம்: நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்!” என்று குமாரலிங்கம் இரங்கிய குரலில் சொன்னான்.

பொன்னம்மாள் உணர்ச்சி மிகுதியினால் சற்று நேரம் சும்மா இருந்தாள். பின்னர் கூறினாள் :

“ஐயா! விதி அப்படி யிருக்கு மானால் அதை யாராலும் மாற்ற முடி யாது. ஆனால் சோலைமலை முருகன் அருளால் அப்படி ஒரு நாளும் நடக் காது. என் தகப்பனாருடைய மனதை மாற்றுவதற்கு என்னுடைய சாமர்த்தியத்தை மட்டும் நான் நம்பியிருக்க வில்லை. முருகனுடைய அருளையுந்தான் நம்பியிருக்கிறேன். ‘நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார்: ‘இந்த இங்கிலிஷ்காரப் பய மவனுங்களையும் பூராவும் நம்பிவிடத் கூடாது. குனிந்தால் முதுகில் உட்காருவார்கள்: நிமிர்ந்தால் காலில் விழுவார்கள். அவர்களை இந்தப் பாடு படுத்தி வைக்கிற காங்கிரஸ்களின் களின் கையிலேயே மறுபடியும் கவர்ன்மெண்டைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்! இன்றைக்குத் தலைமறைவாய் ஒளிந்து திரிகிற குமாரலிங்கம் நாளைக்கு ஒரு வேளை ஜில்லா கலெக்டராகவோ, மாகாண மந்திரியாகவோ வந்தாலும் வருவான். அப்படி வந்தால் சோலைமலை முருகன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ்காரனுங்க மறுபடியும் அதிகாரத்துக்கு வந்தால், என்னென்ன அக்கிரமம் செய்வான்களோ, தெரியாது!’ என்று அப்பா ரொம்ப ஆத்திரமாய்ப் பேசினார். அதோடு ‘காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் ஏதோ ராஜிப் பேச்சு நடக்கிறதாகக் கேள்வி’ என்றும் சொன்னார். ஐயா! நீ ஒரு வேளை மந்திரியாகவோ ஜில்லா கலெக்டராகவோ வந்தால், அக்கிரமம் ஒன்றும் செய்யமாட்டா யல்லவா? அப்பாவைக் கஷ்டத்துக்கு உள்ளாக்க மாட்டாயல்லவா?” என்று பொன்னம்மாள் கண்ணில் நீர் ததும்பக் கேட்டாள்.

“மாட்டேன், பொன்னம்மா! மாட்டேன்! பிராணன் போய்க் கொண்டிருந்த சமயத்தில் சோறு கொண்டு போட்டு உயிர்ப் பிச்சை வந்து கொடுத்த பொன்னம்மாளின் தகப்பனாரை ஒரு நாளும் கஷ்டப்படுத்த மாட்டேன். அவர் மேல் ஒரு சின்ன ஈ எறும்பு உட்கார்ந்து கடிப்பதற்குக் கூட இடங் கொடுக்க மாட்டேன்” என்றான் குமாரலிங்கம்.


மேலே கண்ட சம்பாவுணை நடந்த பிறகு ஏழெட்டுத் தினங்கள், அந்தப் பாழடைந்த சோலைமலைக் கோட்டையிலேயே குமாரலிங்கத்தின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனந்தமாகவும், குதூகலமாகவும் சென்று கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

மணியக்காரர் மகளிடம் அவனுடைய நட்பு நாளுக்கு நான் வளர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தபோது குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் கூடக் கொண்டு வந்தாள். பிரதி தினமும் அவளுடைய கால் மெட்டியின் சத்தத்தோடு கலகலவென்ற சிரிப்பின் ஒலியும் சேர்ந்து வந்தது. எனவே அந்தப் பாழுங் கோட்டையில் ஒளிந்திருந்து கழித்த ஒவ்வொரு நாளும் ஒரு உற்சவ தினமாகவே குமாரலிங்கத்துக்குச் சென்று வந்தது.

சோலைமலைக் கோட்டைக்கு அவன் வந்து சேர்ந்த அன்று பகலிலும் இரவிலும் கண்ட அதிசயக் காட்சிகளைப் பிற்பாடு அவன் காணவில்லை. அவை யெல்லாம் பல இரவு சேர்ந்தாற் போல் தூக்கமில்லாதிருந்த காரணத்தினால் ஏற்பட்ட உள்ளக் கோளாறுகள் என்று குமாரலிங்கம் தேறித் தெளிந்தான்.

ஆனால் இந்த விஷயத்தில் அவனுக்கு எவ்வளவுக் கெவ்வளவு தெளிவு ஏற்பட்டதோ, அவ்வளவுக்குப் பொன்னம்மாளுக்குப் பிரமை அதிகமாகி வருவதை அவன் கண்டான்.

சோலைமலை இளவரசியைப் பற்றியும் மாறனேந்தல் மகாராஜாவைப் பற்றியும் குமாரலிங்கம் கனவிலே கண்ட காட்சிகளைத் திரும்பத் திரும்ப அவனைச் சொல்ல வைத்துப் பொன்னம்மாள் அடங்காத ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அதோடு, அவன் கண்டதெல்லாம் வெறும் கனவல்ல வென்றும், சுமார் நூறு வருஷத்துக்கு முன்னால் உண்மையாக நடந்தவை யென்றும் பொன்னம்மான் சாதித்து வந்தாள். அவள் கொண்டிருந்த இந்தக் குருட்டு நம்பிக்கை கூடக் குமாரலிங்கத்தின் உல்லாசம் அதிகமாவதற்கே காரணமாயிருந்தது. சில சமயம் அவன், “மாறனேந்தல் மகாராஜாதான் குமாரலிங்கமாகப் பிறந்திருக்கிறேன்! சோலைமலை இளவரசி தான் பொன்னம்மாளாகப் பிறந்திருக்கிறாய்!” என்று தமாஷாகச் சொல்வான். வேறு சில சமயம் பொன்னம்மாளைப் பார்த்ததும், “இளவரசி! வருக!” என்பான்.

“மாணிக்கவல்லி ! அரண்மனையில் எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்பான்.

குமாரலிங்கம் இப்படியெல்லாம் பரிகாசமாகப் பேசிய போதிலும், பொன்னம்மாளின் கபடமற்ற உள் ளத்தில் அவ்வளவும் ஆழ்ந்து பதிந்து கொண்டு வந்தது.

14. ஆனந்த சுதந்திரம்

குமாரலிங்கம் அந்த இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் அவ்வளவு உற்சாகமாகவும் உல்லாசமாகவும் நாட்களைக் கழித்து வந்ததற்கு, பொன்னம்மாளின் நேசம் மட்டுமல்லாமல், வேறொரு காரணமும் இருந்தது. அரசியல் நிலைமையைப் பற்றி மணியக்காரர் சொன்னதாகப் பொன்னம்மாள் அன்று சொன்ன செய்திதான் அது. பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராஜிப் பேச்சு நடந்து வருகிறது என்பதைப் பரிபூரணமாய் அவன் நம்பினான், அதைப் பற்றிச் சந்தேகிக்கவே அவனுக்குத் தோன்றளில்லை. அன்று தளவாய்ப் பட்டணத்தில் நடந்தது போலத்தானே இமயமலையிலிருந்து குமரிமுனை வரையில் எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் சூறாவளிப் புரட்சி நடந்திருக்கும்? அந்தப் புரட்சியைப் பிரிட்டிஷ் சர்க்காரால் எப்படி எதிர்த்து நிற்க முடியும் ?” ஜப்பான்காரனோ பர்மா எல்லைப் புறத்தில் வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறான்! பிரிட்டிஷ் சர்க்கார் காங்கிரஸுக்குச் சரணாகதி அடையாமல் வேறு என்ன செய்ய முடியும்?” என்னும் கேள்வி அடிக்கடி அவன் மனதில் எழுந்து கொண்டிருந்தது. தளவாய்ப்பட்டணம் சரித்திரப் பிரசித்தி அடைந்த அந்த விசேஷ தினத்தில் அவன் காதில் விழுந்த ஒரு சம்பாஷணையும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டிருந்தது.


சப் ஜெயிலின் கதவுகளை உடைத்துக் கைதிகளை விடுதலை செய்துவிட்டு வீர முழக்கத்துடனும் சுதந்திர கோஷங்களுடனும் திரும்பிய ஜனங்களில், கிராம வாசிகள் இருவர் பின் வருமாறு பேசிக் கொண்டார்கள்:

“ஆமாம்; இந்தியா சுதந்திரம் அடைஞ்சு விட்டால்…” என்று ஒருவர் ஏதோ கேட்க ஆரம்பித்தார்.

“அடைஞ்சு விட்டால் என்ன? அதுதான் அடைஞ்சாகி விட்டதே!” என்றார் இன்னொருவர்.

“சரி; இந்தியா சுதந்திரம் அடைஞ்சுட்டுது! இனிமேல் யாரு நமக்கு ராசா என்று கேட்கிறேன். பண்டித சவஹர்லால் நேருவா? நேதாசி சுபாஸ் போசா?” என்றார் முதலில் பேசியவர்.

“இரண்டு பேரிலே யார் ராசாவானால் என்ன? நேருசி ராசா ஆனால் நேநாசி மந்திரி ஆகிறாரு! நேதாசி ராசா ஆனால் நேருசி மந்திரி ஆகிறாரு!” என்றார் இரண்டாவது பேசியவர்.

படிப்பில்லாத பட்டிக்காட் ஆசாமிகளின் மேற்படி பேச்சை அன்றைக்குக் குமாரலிங்கம் கேட்ட போது அவன் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஆனால் இப் போது அதைப் பற்றி எண்ணிய போது அவர்கள் பேச்சு ஏன் உண்மையாகக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. ஜவாஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் இந்தியாவின் ராஜாவாகவும் மந்திரியாகவும் வராவிட்டாலும், குடியரசின் அக்கிராசனராகவும் முதன் மந்திரியாகவும் வரக்கூடுந்தானே? அப்படி வரும் போது மணியக்காரர் சொன்னது போல் இந்தியக் குடியரசு சர்க்காரில் னக்கும் ஒரு பதவி ஏன் கிடைக்கக் கூடாது? கிடைக்காம லிருந்தால் தான் ஆச்சரியமே தவிர, கிடைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இராது!


இப்படிப் பட்ட எண்ணங்கள் குமாரலிங்கத்துக்குக் குதூகலத்தை அளித்ததோடு, ஓரளவு பரபரப்பையும் உண்டாக்கி வந்தன. பொன்னம்மாளைத் தினம் பார்த்த உடனே “இன்றைக்கு எதாவது விசேஷம் உண்டா? காங்கிரஸ் விஷயமாக அப்பா ஏதாவது சொன்னாரா?” என்று அவன் கேட்டுக் கொண்டு வந்தான். ஆனால் முதல் நாள் சொன்ன செய்திக்குப் பிறகு பொன்னம்மான் புதிய செய்தி எதுவும் கொண்டு வரவில்லை.

“உங்கள் ஊருக்குப் பத்திரிகை வருவதில்லையா?” என்று ஒரு நாள் குமாரலிங்கம் கேட்டதற்கு, பொன்னம்மாள், “வராமல் என்ன? எங்கள் வீட்டுக்கே பத்திரிகை வந்து கொண்டு தானிருந்தது. ஆனால் மகாத்மா காந்தி சொல்லி விட்டார் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நிறுத்திப்பிட்டார்களாமே? அதற்கப்புறந்தான் வருகிற தில்லை!” என்றாள்.

“புரட்சித் திட்டத்தில் மற்றதெல்லாம் சரிதான்; ஆனால் பத்திரிகையை நிறுத்துகிற காரியம் மட்டும் சுத்தப் பிசகு!” என்று குமாரலிங்கம் தன் மனத்துக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

15. கைமேலே பலன்

இத்தனை நேரமும் கனவு லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த குமாரலிங்கம், பொன்னம்மாள் “போய் வாரேன்” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டதும், இவ்வுலகத்துக்குத் திடும் என்று வந்தான். “போகிறாயா? எங்கே போகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே பொன்னம்மாளின் கரங்களைப் பிடித்துக் கீழே விழுந்து கிடந்த பழைய அரண்மனைத் தூண் ஒன்றின் பேரில் அவளை உட்கார வைத்தான்.

“நான் சீக்கிரம் போகா விட்டால் சின்னாயி என்னை வெட்டி அடுப்பிலே வைத்து விடுவாள்! அந்த காந்தி குல்லாக்காரர்களும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உன் பெயரைச் சொல்லி ஊரெல்லாம் தமுக்கு அடித்துத் தண்டோராப் போடுவானேன்? நீயே போய் ஆஜராகிவிடு! அதோ கிராமச் சாவடியும் இலுப்ப மரமும் தெரிகிறதல்லவா? அங்கே தான் எங்கள் வீடு இருக்கிறது. நான் ஊருணியில் குளித்து விட்டுச் சற்று நேரம் சென்ற பிறகு வருகிறேன்” என்றாள் பொன்னம்மாள்.

“அதெல்லாம் ரொம்ப சரி; அப்படியே செய்யலாம். ஆனால் என்னுடைய பாட்டை மட்டும் இப்போதே நீ கேட்டுவிட வேண்டும். கேட்டு விட்டு உடனே போய்விடலாம்!”என்றான் குமாரலிங்கம்.

“சரி, படிக்கிற பாட்டைச் சீக்கிரம் படி!” என்றாள் பொன்னம்மாள்.


குமாரலிங்கம் அவ்விதமே தான் கவனம் செய்திருந்த பாட்டைப் பாடிக் காட்ட ஆரம்பித்தான்:-

“பொன்னம்மாள் ரொம்பப்
பொல்லாதவள்—அவள்
பொய் என்ற வார்த்தையே
சொல்லாதவள்
சொன்னத்தைச் சொல்லும்
கிளியினைப்போல்-என்றும்
சொன்னதையே அவள்
சொல்லிடுவாள்!

மன்னர் குலம் தந்த
கன்னியவள்-இந்த
மானிலத்தில் நிகர்
இல்லாதவள்
அன்னம் அவள் நடை
அழகு கண்டால்-அது
அக்கணமே தலை
கவிழ்ந்திடுமே!

பாடும் குயில் அவள்
குரல் கேட்டால்-அது
பாட்டை மறந்து
பறந்திடுமே!
மாடும் மரங்களும்
அவளுடைய-உயர்
மாட்சிமைக்கு வலம்
வந்திடுமே!
கூந்தல் முடிப்பிலே
சொகுசு டையான்-விழிக்
கோணத்திலே குறு
நகை யுடையாள்!-அவள்
மாந்தளிர் மேனியைக்
கண்டவர்கள்—அந்த
மாமரம் போலவே
நின்றீடுவர்!

கற்பக மலர்களோ
அவள் கரங்கள்-அந்தக்
கண்களில் நான்என்ன
மந்திரமோ?
அற்புதமோ ஒரு
சொப்பனமோ?-இங்கு
ஆர்அறிவார்.அவன்
நீர்மை யெல்லாம்!

பொன்னம்மாள் மிகப்
பொல்லாதவன்-அவள்
பொய்சொல்லக் கொஞ்சமும்
அஞ்சாதவள்!
அன்னம் படைக்கவே
வந்திடுவாள்-எனில்
அமுது படைத்து
மகிழ்ந்திடுவாள்!

ஆனதாள் என்அரும்
தோழர்களே-நீங்கள்
அவளை மணந்திட
வந்திடாதீர்!”


இத்தனை நேரம்வரை மேற்படி பாடலை முரண்பட்ட உணர்ச்சிகளோடு கேட்டு வந்தாள் பொன்னம்மாள். பாட்டிலே இருப்பது பாராட்டா, பரிகாசமா என்று அவளுக்கு நன்றாய்த் தெரியவில்லை. ஒரு சமயம் புகழ்வது போலிருந்தது; இன்னொரு சமயம் கேலி செய்வது போலவும் இருந்தது. ஆனால் கடைசி வரிகள் இரண்டையும் கேட்டதும், பாட்டு முழுதும் பரிகாசந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டுக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

“சே! போ! போதும், உன் பாட்டு! எவன் என்னைக் கண்ணாலம் செய்து கொள்ள வரப் போகிறான் என்று நான் காத்துக் கிடக்கிறேனாக்கும்!” என்று சீறினாள் பொன்னம்மாள்.

“பொன்னம்மா! இன்னும் இரண்டே இரண்டு வரிதான் பாட்டில் பாக்கி இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா, வேண்டாமா? அதற்குள் கோபித்துக் கொண்டு விட்டாயே?” என்றான் குமாரலிங்கம்.

“சரி! அதையுந்தான் சொல்லி விடு!” என்று பதில் வந்தது.

குமாரலிங்கம் முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பாட்டைச் சொல்லி முடித்தான்:-

“ஆனதால் என் அரும்
தோழர்களே-நீங்கள்
அவளை மணந்திட
வந்திடாதீர்!
ஏனென்று கேளுங்கள்
இயம்பிடுவேன்- இங்கு
யானே அவளை
மணந்து கொண்டேன்!”

கடைசி இரண்டு வரிகளைக் கேட்டதும் பொன்னம்மாள் தன்னை யறியாமல் கலீர் என்று நகைத்தாள். உடனே வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள். திரும்பவும் குமாரலிங்கத்தை ஏறிட்டு நோக்கி, “மாறனேந்தல் மகாராஜாவா யிருந்தால் இந்த மாதிரி யெல்லாம் கன்னாபின்னா என்று பாடுவாரா? ஒரு நாளும் மாட்டார்!” என்றாள்.


பல தடங்கல்களுக்கும் தயக்கங்களுக்கும் பிறகு பொன்னம்மாள் குமாரலிங்கத்திடம் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றபோது மிக்க குதூகலத்துடனேயே சென்றாள்.

அந்தப் பாழடைந்த கோட்டையில் காலடி வைத்தவுடனே அவளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் பயங்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றபோது அவளை விட்டு நீங்கி யிருந்தன.

குமாரலிங்கத்தின் பாடலில் அவளுடைய ஞாபகத்தில் இருந்த சில வரிகளை வாய்க்குள்ளே முணு முணுத்துக் கொண்டே போனாள்.

ஊருணியில் போய்ச் சாவகாசமாகக் குளித்தாள். பின்னர் வீட்டை கோக்கிக் கிளம்பினாள். போகும் போது, இத்தனை நேரம் குமாரலிங்கத் தேவர் தன் வீட்டுக்குப் போயிருப்பார், அவரை இப்படி உபசரிப்பார்கள் அப்படி வரவேற்பார்கள் என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு சென்றாள். அவரைக் குதிரை சாரட்டில் வைத்து ஊர்வலம் விட்டாலும் விடுவார்கள், ரோஜாப்பூ மாலையும் செவந்திமலர் மாலையும் பச்சை ஏலக்காய் மாலையும் அவருக்குப் போடுவார்கள். இன்று சாயங்காலம் இலுப்ப மரத்தடியில் மீட்டிங்கி நடந்தாலும் நடக்கும் என்று சிந்தனை செய்து கொண்டு உல்லாசமாக நடந்து சென்றாள்.

ஆனால் சிறிது தூரம் நடந்ததும் அவளுடைய உல்லாசம் குறைவதற்கு முகாந்திரம் ஏற்பட்டது.

அவளுடைய தந்தை வேட்டை நாய் சகிதமாகச் சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்குச் சொரேல் என்றது. வீட்டில் விருந்தாளிகளை வைத்து விட்டு இவர் எங்கே கிளம்பிப் போகிறார்? ஒரு வேளை தன்னைத் நேடிக்கொண்டு தானோ? சின்னாயி கோள் சொல்லிக் கொடுத்து விட்டாளோ? – நடையின் வேகத்தைப் பார்த்தால் மிக்க கோபமாய்ப் போகிறதாகத் தென்படுகிறதே! அப்பாவின் கண்ணில் படாமல் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று விட்டு அவர் போனதும் விரைவாக வீட்டை நோக்கிச் சென்றாள். அவர் வீடு வந்து சேர்வதற்குள் தான் போய்ச் சேர்த்து நல்ல பெண்ணைப் போல் சமையல் வேலையில் ஈடுபட வேண்டு மென்று தீர்மானித்துக் கொண்டு நடந்தாள்.


ஊருணியிலிருந்து அவளுடைய வீடு இருந்த வீதிக்குச் சென்ற குறுக்குச் சந்தில் திரும்பியதும், படமெடுத்து ஆடும் பாம்பைத் திடீரென்று எதிரில் கண்டவளைப்போல் பயங்கரமும் திகைப்பும் அடைந்து நின்றாள்.

ஐயோ! இது என்ன? இவ்வளவு போலீஸ் ஜவான்கள் எதற்காக – வந்தார்கள்? அவர்களுக்கு மத்தியிலே இருப்பவர் யார்? குமாரலிங்கம் போலிருக்கிறதே! ஐயோ! இது என்ன? அவர் இரண்டு கையையும் சேர்த்து, – கடவுளே! – விலங்கல்லவா போட்டிருக்கிறது?

இதெல்லாம் உண்மைதானா? நாம் பார்க்கும் காட்சி நிஜமான காட்சிதானா? அல்லது ஒரு கொடூரமான துயரக் கனவு காண்கிறோமா?

அந்த காந்திக் குல்லாக்காரர்கள் எங்கே? ஆஹா! அவர்கள் இப்போது வேறு உருவத்தில், சிவப்புத் தலைப்பாகையுடன் தோன்றுகிறார்களே? ஆம்; அதோ பின்னால் பேசிச் சிரித்துக்கொண்டு வருகிறவர்கள் அவர்கள் தான்! சந்தேகமில்லை.

திகைத்து, ஸ்தம்பித்து, முன்னால் போவதா, பின்னால் போவதா என்று தெரியாமல், கண்ணால் காண்பதை நம்புவதா, இல்லையா என்றும் நிச்சயிக்க முடியாமல், பொன்னம்மாள் அப்படியே நின்றாள்.

போலீஸ் ஜவான்களின் பேச்சில் சில வார்த்தைகள் காதிலே விழுந்தன.

“எவ்வளவு ஜோராய் மாப்பிள்ளை மாதிரி நேரே வந்து சேர்ந்தான்? வந்தது மல்லாமல் ‘நான் தான புரட்சித் தொண்டன் குமாரலிங்கம்! நீங்கள் எங்கே வந்தீர்கள்?’ என்று கேட்டானே ? என்ன தைரியம் பார்த்தீர்களா?” என்றார் ஒரு போலீஸ் சேவகர்.

“அந்த தைரியத்துக்குத்தான் கை மேல் உடனே பலன் கிடைத்து விட்டதே?” என்று சொன்னார் இன்னொரு போலீஸ்காரர்.

குமாரலிங்கத்தின் கையில் பூட்டியிருந்த விலங்கைத்தான் அவர் அப்படிக் ‘கைமேல் பலன்’ என்று சிலேடையாகச் சொல்கிறார் என்று தெரிந்து கொண்டு, மற்றவர்கள் குபீர் என்று சிரித்தார்கள்.

அந்தச் சிரிப்புச் சத்தத்தினிடையே ‘வீல்’ என்ற ஒரு சத்தம், – இதயத்தின் அடிவாரத்திலிருந்து உடம்பின் மேலுள்ள ரோமக் கால்கள் வரையில் குலுங்கச் செய்த சொல்ல முடியாத சோகமும் பீதியும் அடங்கிய சத்தம் – கேட்டது. போலீஸ் ஜவான்களின் பரிகாசப் பேச்சைக் கேட்டுக் கொண்டு தலைகுனிந்த வண்ணம் நடந்துவந்த தொண்டன் குமாரலிங்கத்தின் காதிலும் மேற்படி சத்தம் விழுந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி அவன் ஏறிட்டுப் பார்த்தான்.

பொன்னம்மாளின் முகம்,-ஏமாற்றம், துயரம், பீதி, பச்சாத்தாபம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்றோடொன்று போட்டி யிட்ட முகம், – மின்னல் மின்னுகின்ற நேரத்துக்கு அவன் கண் முன்னால் தெரிந்தது. அடுத்த வினாடி, பொன்னம்மாள் தான் வந்த பக்கமே திரும்பினாள். அந்தக் குறுக்குச் சந்தின் வழியாக அலறிக் கொண்டு ஓடினாள்.

போலீஸ் ஜவான்களில் ஒருவர், “பார்த்தீங்களா, ஐயா? சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்துப் பயப் படுகிறவர்கள் இந்த உலகத்தில் இன்னும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த வீராதி வீரன் இருக்கிறானே, இவன் மட்டும் போலீஸுக்குப் பயப்பட மாட்டான் துப்பாக்கி, தூக்குத் தண்டனை ஒன்றுக்கும் பயப்பட மாட்டான்!” என்று சொல்லிக் கொண்டே, குமாரலிங்கத்தின் கழுத்திலே கையை வைத்து ஒரு தள்ளுத் தள்ளினார்.


பொன்னம்மாள் வீறிட்டுக் கதறிய சத்தம் குமாரலிங்கத்தின் காதில் விழுந்ததோ இல்லையோ, அந்தக் கணத்திலேயே அவன் நூறு வருஷங்களுக்கு முன்னால் சென்று விட்டான்.

இதோ அவன் எதிரில் தெரிவது போன்ற ஒரு பிரம்மாண்டமான இலுப்ப மரத்தான் அது. ஆனால் இன்னும் செழிப்பாக வளர்ந்து நாலாபுறமும் கிளைகள் தழைத்துப் படர்ந் திருந்தன. சோலைமலைக் கோட்டை வாசலுக்கு எதிரே கூப்பிடு தூரத்தில் அந்த மரம் நின்றது. மரத்தின் அடியில் இதுபோலவே மேடையும் இருந்தது. ஆனால், அந்த மரத்தின் கீழேயும், மரத்தின் அடிக்கிளையிலும் தோன்றிய காட்சிகள்!……அம்மம்மா! குமாரலிங்கம் கண்களை மூடிக் கொண்டான். கண்களை மூடிக் கொண் டால் மட்டும் ஆவதென்ன? அவ னுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தக் காட்சிகள் தோன்றத்தான் செய்தன.

இலுப்ப மரத்தின் வயிரம் பாய்ந்த வலுவான அடிக் கிளையில் ஏழெட்டுக் கயிறுகள், ஒவ்வொன்றின் நுனியிலும் ஒரு சுருக்குப் போட்ட வளையத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.

தொங்கிய வளையும். ஒவ்வொன்றின் அடியிலும் ஒவ்வொரு மனிதன் நின்று கொண்டிருந்தான்.

அப்படி நின்றவர்களைச் சூழ்ந்து பல சிப்பாய்கள் வட்டமிட்டு நின்றார்கள்.

மரத்தடி மேடையிலே ஒரு வெள்ளைகார துரை ‘ஜம்’ என்று உட்கார்ந்திருந்தார். அவர் இரண்டு கையிலும் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. அவருடைய வெள்ளை முகம் கோப வெறியினால் சிவப்பாக மாறியிருந்தது.

மேடைக்கு அருகில் சோலைமலை மகாராஜா கீழே நின்று துரையிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்பவும் மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தது போலத்தோன்றியது. “அதெல்லாம் முடியாது; முடியவே முடியாது!” என்று துரை மிக விறைப்பாகப் பதில் சொல்வது போலும் தெரிந்தது.

மரக்கிளையில் தொங்கிய சுருக்குக் கயிற்றின் ஒன்றின் கீழே மாறனேந்தல் உலகநாதத் தேவர் நின்றுகொண்டிருந்தார். துரையிடம் சோலைமலை மகாராஜா ஏதோ கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது அவருக்குக் கொஞ்ச மும் பிடிக்கவில்லை.தம்முடைய உயிரைத் தப்புவிப்பதற்காகத்தான் சோலைமலை மகாராஜா அப்படி மன் முடுகிறாரோ என்ற சந்தேகம் அவர் மனதில் உதித்திருந்தது. அதை எப் படியாவது தடுத்து நிறுத்த வேண்டு மென்ற ஆவல் அவர் மனதில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு, நூறி லும் சாவு!” என்னும் பழமொழியை ஆயிரந்தடவை கேட்டிருந்தும், அன் னிய நாட்டான் ஒருவனிடம் போய் எதற்காக உயிர்ப் பிச்சை கேட்க வேண்டும்? அதிலும், வீர மறவர் குலத்தில் பிறந்தவர்களுக்கு அடுக்கக் கூடிய காரியமா, அது?

சோலைமலை மகாராஜாவைக் கூப்பிட்டுச் சொல்லி விடலாமா என்று உலகநாதத் தேவர் யோசித்துக் கொண்டிருந்த போது, கோட்டைக் குள்ளே அரண்மனை அந்தப்புரத்தின் மேன் மாடம் தற்செயலாக அவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. மேன் மாடம் கவரவில்லை: மேன்மாடத்திலே தோன்றிய ஒரு பெண் உருவத்தான் கவர்ந்தது. வெகு தூரத்திலிருந்தபடியால் உலகநாதத் தேவரின் கூரிய கண்களுக்குக்கூட அந்த உருவம் யாருடையது என்பது நன்றாய்த் தெரியவில்லை. ஆனால் அவருடைய மனதுக்கு அவள் இளவரசி மாணிக்கவல்லிதான் என்று தெரிந்து விட்டது.

முதலில், இந்தக் கோரக் காட்சியைப் பார்ப்பதற்குச் சோலைமலை இளவரசி அந்தப்புரத்து மேன்மாடத்துக்கு வரவேண்டுமா என்று உலகநாதத் தேவர் எண்ணினார். பின்னர், தம்முடைய வாழ்நாளின் கடைசி நேரத்தில் இளவரசியைப் பார்க்க நேர்ந்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அடுத்த கணத்தில், “ஐயோ! இந்த விவரமெல்லாம் அவளுக்குத் தெரியும்போது என்னமாய் மனத் துடிப்பாளோ?” என்று எண்ணி வேதனை யடைந்தார். எனினும், சோலைமலை மகாராஜா தம்மிடம் கொண்டிருந்த விரோதத்தை மாற்றிக் கொண்டது இளவரசிக்கு ஓரளவு ஆறுதல் அளிக்குமல்லவா என்ற எண்ணம் தோன்றியது. தாம் சொல்லி அனுப்பிய செய்தியை மாணிக்கவல்லி யிடம் சோலைமலை மகாராஜா சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற கவலை தொடர்ந்து வந்தது.

ஐயோ! இதென்ன? மாடி முகப்பின் மேல் நின்ற பெண் உருவம் ‘வில்’ என்று அலறும் சத்தத்துடனே கீழே விழுகிறதே?

கடவுளே ! சோலைமலை இளவரசி அல்லவா அந்தப்புரத்தின் மேல்மாடியி லிருந்து கீழே விழுந்து விட்டாள்! ஐயோ! அவள் உயிர் பிழைப்பாளா?

சோலைமலை மகாராஜா துரையிடம் மன்றாடுவதை நிறுத்தி விட்டு, “ஓ!” என்று அலறிக் கொண்டு கோட்டை வாசலை கோக்கி ஓடினார்.

மாறனேந்தல் உலககாதத் தேவரும் தம்முடைய நிலையை மறந்து, இரு புறமும் காவல் புரிந்து நின்ற சிப்பாய்களையும் மறந்து, கோட்டை வாசலை நோக்கித் தாமும் பறந்து ஓடினார்.

‘டும்’ ‘டும் ‘டுடும்’ என்று துப்பாக்கி வேட்டுகள் தீர்ந்தன.


போலீஸ் ஜவானால் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்ட தேசத் தொண்டன் குமாரலிங்கம் தடுமாறித் தரையிலே விழுந்து மூர்ச்சையானான் !

– தொடரும்…

– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *