கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 4,677 
 
 

(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. ஆண்டவன் சித்தம்

கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்கவல்லியிட மிருந்து முன் அத்தியாயத்தில் கூறிய விவரங்களை யெல்லாம் மகாராஜா உலகநாதத் தேவர் கேட்டுத்தெரிந்து கொண்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து சும்மா இருந்த பிறகு இளவரசியை ஏறிட்டுப் பார்த்து, “உன் தந்தை என்னைப் பற்றி என்ன எண்ணி யிருக்கிறார், என் பேரில் எவ்வளவு வன்மம் வைத்திருக்கிறார் என்று தெரிந்திருந்தும் என்னை இங்கே இருக்க வேண்டு மென்று சொல்லுகிறாயா?” என்று கேட்டார்.

“முக்கியமாக அதனாலேதான் உங்களை இருக்கச் சொல்லுகிறேன். இந்தக் கோட்டையில் இருந்தால்தான் நீங்கள் உயிர் தப்பிப் பிழைக்கலாம்” என்றாள் இளவரசி மாணிக்கவல்லி.

“எப்படியாவது உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என்று ஆசைப் படுகிறவன் என்பதாக என்னை நீ நினைக்கிறாயா? மறவர் குலத்தில் இதற்கு முன் எத்தனையோ வீராதி வீரர்கள் இருந்திருக்கிறார்கள். மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இமயமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் போன்ற மகா வீரன் என்பதாக என்னை நான் சொல்லிக் கொள்ள வில்லை. ஆயினும் உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ளக்கூடிய அவ்வளவு கேவலமான கோழை அல்ல நான். வீர மறவர் குலத்துக்கும், புராதன மாறனேந்தல் வம்சத்துக்கும் அப்படிப்பட்ட களங்கத்தை நான் உண்டாக்கக் கூடியவன் அல்ல…

உலககாதத் தேவர் மேலே பேசிக் கொண்டு போவதற்கு முன்னால் சோலைமலை இளவரசி குறுக்கிட்டு, ”ஐயா! அதோ குன்றின் மேல் தெரியும் சந்திரன் சாட்சியாகச் சொல்லுகிறேன். தங்களை உயிருக்குப் பயந்தவர் என்றே, வீரமில்லாத கோழை என்றோ நான் ஒரு கணமும் நினைக்க வில்லை. எனக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்றுதான் தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கு ஏதாவது அபாயம் நேர்ந்தது என்று தெரிந்தால் அதற்குப் பிறகு என்னால் ஒரு நிமிஷமும் உயிர் வைத்துக்கொண்டிருக்க முடியாது. அப்படி இன்றைக்கே நீங்கள் கட்டாயம் போகத்தான் வேண்டு மென்றால் என்னையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு போங்கள். தங்களுக்கு ஆகிறது எனக்கும் ஆகட்டும்!” என்றாள்.

அப்போது உலககாதத் தேவருக்குப் பூமி தம்முடைய காலின் கீழிருந்து நழுவிச் சென்று விட்டது போலவும் தாம் அந்தரத்தில் மிதப்பது போலவும் தோன்றியது.

தம்முடைய காதில் விழுந்த வார்த்தைகள் தாம் உண்மையாகக் கேட்டவைதானா, அவற்றைச் சொன்னது இதோ தம் எதிரில் இருக்கும். திவ்ய சௌந்தரியவதியின் செவ்விதழ் வாய்தானா என்ற சந்தேகத்தினால் அவருடைய தலை சுழன்றது.


சற்றுப் பொறுத்து, “நீ சொன்னதை இன்னொரு தடவை சொல்லு. என் செவிகள் கேட்டதை என்னால் நம்ப முடியவில்லை !” என்றார் மாறனேந்தல் மன்னர்.

“ஏன் நம்ப முடியவில்லை?–நிஜந்தான்; நம்ப முடியாதுதான். என் தகப்பனாரைப் பற்றி நானே அவ்வளவு சொன்ன பிறகு, அவருடைய மகளை நம்புங்கள் என்றால் எப்படி நம்ப முடியும்? என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகாதுதான். எந்தச் சமயத்தில் என்ன துரோகம் செய்து விடுவேனோ என்று சந்தேகப் படுவதும் இயல்புதான். அப்படி யானால், உங்கள் இடுப்பில் செருகி யிருக்கும் கத்தியை எடுத்து என் நெஞ்சில் செலுத்தி ஒரேயடியாக என்னைக் கொன்றுவிட்டுப் போய் விடுங்கள். அதன் பிறகாவது என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை பிறக்கு மல்லவா ? அதுவே எனக்குப் போதும்”

அடிக்கடி தேம்பிக் கொண்டே மேற்கண்டவாறு பேசி வந்த மாணிக்கவல்வியை இடையில் தடுத்து நிறுத்த உலகநாதத் தேவரால் முடியவில்லை. அவளாகப் பேச்சை நிறுத்தி விட்டுக் கண்ணீரை மறைப்பதற்காக வேறு பக்கம் பார்த்த பிறகுதான் அவரால் பேச முடிந்தது.

“இளவரசி! என்ன வார்த்தை பேசுகிறாய்? உன்னிடம் எனக்கு நம்பிக்கை யில்லையென்று நான் சொல்லவே யில்லையே? நீ . கூறிய விஷயம் அவ்வளவு அதிசயமாக இருந்தபடியால், ‘என்னுடைய காதை என்னால் நம்ப முடியவில்லை’ என்று தானே சொன்னேன்? என் கண்ணே! இதோ பார்!’ என்று கூறியவண்ணம், பூஜைக்குரிய புஷ்பத்தை ஒரு பக்தன் பூச்செடியிலிருந்து எவ்வளவு மென்மையாகத் தொட்டுப் பறிப்பானோ அவ்வளவு மென்மையாக உலககாதத் தேவர் இளவரசியின் முகவாயைப் பற்றி, அவள் முகத்தைத் தம் பக்கம் திருப்பிக் கொண்டார். “இன்னொரு தடவை சொல் உன்னைப் பெற்று வளர்த்து எவ்வளவோ அருமையாகக் காப்பாற்றி வரும் தகப்பனாரையும், இந்தப் பெரிய அரண்மனையையும் இதிலுள்ள சகல யும் விட்டுவிட்டு, இன்று காலையிலே சம்பத்துக்களையும் சுக போகங்களை நான் முதன் முதலாகப் பார்த்த ஒரு அநாதையோடு புறப்பட்டு வருகிறேன் என்ற சொல்கிறாய்?” என்றார்.

“ஆமாம்; அப்படித்தான் சொல்கிறேன். ஒருவேளை எனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டதோ என்னமோ? இன்று காலையிலேதான் உங்களை முதன் முதலாகப் பார்த்திருந்தாலும், எத்தனையோ காலமாக உங்களைப் பார்த்துப் பேசிப் பழகியது போலிருக்கிறது. உங்களை விட்டு ஒரு நிமிஷமும் என்னால் பிரித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. உங்களுக்கு வேண்டியவர்கள் எல்லாரும் எனக்கும் வேண்டியவர்கள், உங்களுடைய விரோதிகள் எல்லாரும் எனக்கும் விரோதிகள் என்பதாகவும் தோன்றுகிறது. இன்று சாயங் காலத்திலிருந்து என்னுடைய தகப்பனாரின் மேலேயே எனக்குக் கோபமா யிருக்கிறது!”

“இளவரசி! ‘வேண்டாம்! இந்த மாதிரி தெய்விகமான அன்பைப்பெறுவதற்கு நான் எந்த விதத்திலும் தகுதி யுடையவனல்ல. எவ்வளவோ கஷ்டப் பட வேண்டியவன் நான்; துன்பமும் துயரமும் அநுபவிப்பதற்காகவே பிறந்திருக்கும் துரதிர்ஷ்டசாலி, கட்டத் துணியில்லாத ஆண்டிப் பரதேசியைப் பார்த்து, ‘உனக்கும் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்’ என்று சொன்னால் அது தகுதியா யிருக்குமா? கடவுளுக்குத்தான் பொறுக்குமா?”

“கடவுளுக்குப் பொறுக்காது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? ஆண்டவ னுடைய சித்தம் நம் இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று இருந்திரா விட்டால் இந்த மாதிரி யெல்லாம் கடந்திருக்குமா? உங்களுக்கு ஏன் எதிரியின் கோட்டைக் குள்ளே ஒளிந்து கொள்ள வேண்டு மென்று தோன்றுகிறது? நான் எதற்காக இராத்திரி யெல்லாம் தூக்கம் பிடியாமல் புரண்டு கொண்டிருந்து விட்டு அதிகாலை நேரத்தில் தோட்டத்தில் பூப்பறிப் பதற்காக வருகிறேன்? சோலைமலை முருகனுடைய சித்தத்தினாலேயே இவ் விதமெல்லாம் நடந்திருக்க வேண்டும். ஆண்டவனுடைய சித்தத்துக்கு விரோதமாகத் தாங்கள்தான் பேசுகிறீர்கள்!”

”இளவரசி! நீ என்னதான் சொன்னாலும் சரி; எப்படித்தான் வாதாடினாலும் சரி! பயங்கரமான அபாயங்கள் நிறைந்த மகா சமுத்திரத்தில் குதிக்கப் போகும் நான், கள்ளங் கபடமற்ற ஒரு பெண்ணையும் என்னோடு இழுத்துக் கொண்டு குதிக்க மாட்டேன். அத்தகைய கல் நெஞ்சமுடைய கிராதகன் அல்ல நான்!”

“அப்படியானால் நான் சொல்வதைக் கேளுங்கள். இங்கேயே இன்னும் சில நாள் தங்கியிருங்கள். உங்களுக்கும் அபாயம் ஏற்படாது; எனக்கும் கஷ்டம் இல்லை.”

“அது எப்படி, மாணிக்கவல்லி! உன் தகப்பனார் என்னை அவ்வளவு கொடுமையாகத் தண்டிக்க எண்ணி யிருக்கும்போது இந்தக் கோட்டைக் குள்ளே நான் தங்கி யிருப்பது எப்படிப் பத்திரமாகும்? இங்கே இருப்பதுதான் எனக்கு ரொம்பவும் அபாயம் என்பது உனக்குத் தெரியவில்லையா?”


இதைக் கேட்ட மாணிக்கவல்லி, உலகநாதத் தேவரைக் கம்பீரமாக ஏறிட்டுப் பார்த்துக் கூறினாள்:- “ஐயா! என் தகப்பனார் மிகவும் பொல்லாதவர்தான்; மூர்க்கக் குணம் உள்ளவர்தான். உங்களிடம் அவர் அளவில்லாத கோபம் கொண்டிருப்பதும் உண்மையே. ஆனாலும் அவருக்கு என்னிடம் மிக்க அன்பு உண்டு. அவருடைய ஏக புதல்வி நான்; தாயில்லாப் பெண். என்னை அவருடைய கண்ணுக்குள் இருக்கும் மணி என்று கருதிக் காப்பாற்றி வருகிறார். அவர் கோப வெறியில் இருக்கும் போது அவருடன் பேசுவதில் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. ஆனால் கொஞ்சம் சாந்தம் அடைந்திருக்கும் சமயம் பார்த்துப் பேசி அவருடைய மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்தனை காலமும் நான் ஒன்று கேட்டு அவர் ‘இல்லை’ என்று சொன்னதில்லை. உங்கள் விஷயத்திலும் அவருடைய மனதை மாற்ற என்னால் முடியும். நிச்சயமாக முடியும் என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் மட்டும் உதவி செய்யவேண்டும். நான் சொல்லுகிற வரையில் இங்கேயே இருக்க வேண்டும்!”

“நீ சொல்லுகிறபடி இங்கேயே இருப்பதற்கு நான் இஷ்டப்பட்டாலும் அது எப்படிச் சாத்தியம்? இந்த அரண்மனைத் தோட்டத்தில் நான் ஒருவர் கண்ணிலும் படாமல் காலங் கழிக்க முடியுமா? தோட்டக்காரர்கள், வேலைக்காரர்கள் வரமாட்டார்களா? வேளைக்கு வேளை நீ எனக்குச் சாப்பாடு கொண்டு வந்து போட்டுக் கொண்டிருக்க முடியுமா? திடீரென்று என்றாவது ஒரு நாள் உன் தகப்பனார் இங்கே வந்து என்னைப் பார்த்து விட்டால், அல்லது நீயும் நானும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டால், எவ்வளவு விபரீதமாக முடியும்? இளவரசி! கொஞ்சம் யோசித்துப் பார்! உனக்கும் கஷ்டத்தை உண்டாக்கிக் கொண்டு என்னையும் வீணாக ஆபத்துக்கு உள்ளாக்காதே!..” என்று உலககாத தேவர் சொல்லி வந்தபோது, இளவரசி குறுக்கிட்டுப் பேசினாள்.

“நான் எல்லாவற்றையும் நன்றாக யோசித்து விட்டுத்தான் சொல்லுகிறேன். தங்களுடைய பத்திரத்தைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தப் பெரிய அரண்மனைக்குப் பின்னால் ‘சின்ன நாச்சியார் அரண்மனை’ என்று ஒரு கட்டிடம் இருக்கிறது. அது வெகு காலமாகப் பூட்டிக் கிடக்கிறது. எங்கள் வம்சத்தில் நூறு வருஷத்துக்கு முன்னால் அரசாண்ட மகாராஜா, — என் பாட்டனாருக்குப் பாட்டனார், – தம்முடைய ராணியின் பேரில் ஏதோ சந்தேகபட்டு அந்த அரண்மனையில் அவளைத் தனியாகப் பூட்டி வைத்திருந்தாராம். அதற்குப் பிறகு அங்கே யாரும் வசித்தது கிடையாதாம். அந்த அரண்மனையின் சாவி என்னிடம் இருக்கிறது. தாங்கள் அங்கே பத்திரமாக இருக்கலாம். அப்பா கோட்டையில் இல்லாத நாட்களில் இருட்டிய பிறகு நாம் இங்கே சந்திக்கலாம். என்னுடைய செவிலித் தாய் வீரம்மா எனக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவள். உங்களிடமும் அவளுக்கு ரொம்ப மரியாதை உண்டு. உங்களைப் பற்றி இந்திரன், சந்திரன் என்றெல்லாம் என்னிடம் அவள் புகழ்ந்து பேசியிருக்கிறான். அவன் மூலமாகத் தங்களுக்குச் சாப்பாடு அனுப்புகிறேன். அந்த ஏற்பாட்டை யெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். நான் சொல்லுகிறபடி, கொஞ்ச காலம் இங்கே இருப்பதாக மட்டும் தாங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்..!”


இப்படி இளவரசி சொல்லிக் கொண்டிருந்தபோது, கோட்டை மதிளுக்கு அப்பால் வேட்டை நாய்கள் உறுமுகிற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.

இளவரசி சட்டென்று உலகநாதத் தேவரின் இரண்டு கரங்களையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். அவளுடைய உடம்பெல்லாம் அப்போது நடுங்கியதை உலககாதத்தேவர் உணர்ந்தார். அவளுடைய மார்பு பட படவென்று அடித்துக் கொண்ட சத்தம் கூடத் தேவரின் காதில் இலேசாகக் கேட்டது.

“அதோ, நாய் குரைக்கிறதே! அந்த இடத்துக்குச் சமீபமாகத்தானே தாங்கள் கோட்டை, மதிளைத் தாண்டி குதித்தீர்கள்?” என்று மாணிக்கவல்லி நடுக்கத்துடன் கேட்டதற்கு, உலகநாதத் தேவர் “ஆமாம்” என்று கம்மிய குரலில் விடையளித்தார்.

வேட்டை நாய்கள் மேலும் குரைத்தன. அவற்றை யாரோ அதட்டி உசுப்பிய சத்தமும் கேட்டது.

மாணிக்கவல்வி முன்னை விடக்கெட்டியாக உலககாதத் தேவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் ததும்பிய கண்களால் அவரைப் பார்த்து, “ஐயா! தங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தங்களுடைய ஜன்ம விரோதியின் மகளாயிருந்தாலும் இன்றைக்கு ஒரு நாள் மட்டுமாவது என்னை நம்புங்கள். இன்று இராத்திரி நீங்கள் வெளியே போக வேண்டாம்!” என்று கல்லும் கரையும் குரலில் கேட்டு கொண்டாள்.

ஏற்கெனவே, உள்ளம் கனிந்து ஊனும் உருகிப் போயிருந்த மாறனேந்தல் மகாராஜா மேற்படி வேண்டுகோளைக் கேட்டதும், “இன்று ஒரு நாள் மட்டுமல்ல; இனி என்றைக்குமே உன் விருப்பந்தான் எனக்குக் கட்டளை. நீ என் ஜன்ம விரோதியின் மகள் அல்ல; அன்பினால் என்னை அடிமை கொண்ட அரசி! போகலாம் என்று நீ சொல்லுகிற வரையில் நான் இங்கிருந்து போகவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட மாணிக்கவல்லி உணர்ச்சி மிகுதியால் நினைவை இழந்து மாறனேந்தல் அரசரின் மடியில் சாய்ந்தாள்!

11. அரண்மனைச் சிறை

மறு நாள் காலையில் குமாரலிங்கம் உறக்கம் நீங்கிக் கண்விழித்து எழுந்த போது, சூரியன் உதயமாகி மலைக்கு மேலே வெகு தூரம் வந்திருப்பதைப் பார்த்தான். “அப்பா! இவ்வளவு நேரமா தூங்கி விட்டோம்! பல தினங்கள் தூக்க மில்லாமல் அலைந்த தற்குப் பதிலாக இப்போது வட்டி சேர்த்துத் தூங்குகிறோம் போலிருக்கிறது?” என்று எண்ணித் தனக்குத் தானே நகைத்துக்கொண்டான். சுற்று முற்றும் பார்த்துத் தான் படுத்திருந்த இடத்தைக் கவனித்ததும் அவனுடைய நகைப்புத் தடைப்பட்டது. முதல் நாள் காலையில் தான் படுத்துத் தூங்கிய வஸந்த மண்டபம் அல்ல அது என்பதையும், அந்தப் பழைய கோட்டைக்குள்ளே இடிந்து கிடந்த பல பாழுங் கட்டிடங்களில் ஒன்றின் மேல் மச்சுத் தளம் அது என்று தெரிந்து கொண்டதும் அவனுக்கு ஒரே வியப்பும் திகைப்புமாய்ப் போய் விட்டது. நேற்றிரவு அவன் இந்தக் கட்டிடத்துக்கு வந்து மேல் தளத்தில் ஏறிப் படுத்துக் கொண்டதாகவே அவனுக்கு ஞாபகம் வரவில்லை. உறக்கக் கலக்கத்தோடு அங்கு மிங்கும் அலைந்து கொண்டிருக்கையில் தற்செயலாக இங்கே வந்ததும் படுத்துத் தூங்கிப் போயிருக்க வேண்டும்!

இது என்ன கட்டிடமா யிருக்கும்? ஒருவேளை…? ஆகா! சந்தேகம் என்ன? ‘சின்ன நாச்சியார் அரண்மனை’ என்பது இதுதான்!


பிறகு ஒவ்வொன்றாக இரவில் கனவிலே கண்ட நிகழ்ச்சிகள், கேட்ட சம்பாஷனைகள் எல்லாம் குமுறிக் கொண்டு ஞாபகம் வந்தன. உண்மையில் அவ்வளவும் கனவுதானா? கனவு என்றால், அநுபவங்கள் எல்லாம் அவ்வளவு உண்மை போலத் தோன்றுமா? ஒரே நாள் இரவில் பத்துப் பதினைந்து தினங்களின் நிகழ்ச்சிகளை உண்மைபோல் உணர்ந்து அநுபவிக்க முடியுமா? அந்த அநுபவங்களும் பத்துப் பதினைந்து வருஷங்களின் நீடித்த அநுபவங்களைப் போல் உள்ளத்தில் பதிய முடியுமா?

இந்தப் பாழுங் கோட்டையில் ஏதோ மாய மந்திரம் இருக்கிறது! பொன்னம்மாள் சொன்னபடி மோகினிப் பிசாசு இல்லாவிட்டால், வேறு ஏதோ ஒரு மாயப் பிசாசோ, பில்லி சூனியமோ கட்டாயம் இங்கே இருக்கிறது. சேர்ந்தாற்போல் சில நாள் இங்கே இருந்தால் மனுஷனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடலாம்! உடனே இங்கிருந்து நடையைக் கட்ட வேண்டியதுதான்!…. பொன்னம்மாளை மறுபடியும் பார்க்காமலே போய் விடுகிறதா? அழகு தான்! பொன்னம்மாளாவது, கண்ணம்மாளாவது? ஐந்தாம் வகுப்புக்கூடப் பூர்த்தியாகப் படியாத பட்டிக்காட்டுப் பெண்ணுக்கும் காலேஜுப் படிப்பை யெல்லாம் கரைத்துக் குடித்த தேசபக்த வீரனுக்கும் என்ன சிநேகம், என்ன உறவு ஏற்படக் கூடும்? இந்தப் பாழுங் கோட்டையிலுள்ள ஏதோ ஒரு மாய சக்தியினால் தான் பொன்னம்மாளைப் பற்றிய நினைவே தன் மனதில் உண்டாகிறது. உடனே இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான் வேறு எங்கே போனாலும் பாதகமில்லை. இங்கே ஒரு நிமிஷங் கூட இருக்கக் கூடாது!

இவ்வாறு தீர்மானித்துக்கொண்டு, அந்தப் பழைய மாளிகை மச்சிலிருந்து கீழே குதித்து இறங்கி, ஒற்றையடிப் பாதையை நோக்கிக் குமாரலிங்கம் நடந்தான்.


திடீரென்று நாய் குரைக்கும், சத்தம் கேட்டது! குமாரலிங்கத்தின் நாவும் தொண்டையும் ஒரு நொடியில் வறண்டு விட்டன. அப்படிப்பட்ட பயங்கர பீதி அவனைப் பற்றிக் கொண்டது. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், நம்ப முடியாத அசட்டுக் காரணந்தான்! இரவில் கனவிலே கேட்ட வேட்டை நாயின் குரைப்புச் சத்தத்தை அது நினைவூட்டியதுதான்.

காரணம் எதுவா யிருந்தாலும் மனதில் தோன்றிய பீதி என்னமோ உண்மையா யிருந்தது. சட்டென்று பக்கத்திலிருந்த இடிந்த பாழுஞ் சுவர் ஒன்றுக்குப் பின்னால் மறைந்து நின்று, ஒற்றையடிப் பாதையில் யார் வருகிறார்கள் என்று கவனித்தான்.

அவன் மறைந்து நின்றதும் கவனித்ததும் வீண் போகவில்லை. சில நிமிஷத்துக்கெல்லாம் கையில் தடியுடன் ஒரு மனிதன் முன்னால் வர அவனைத் தொடர்ந்து ஒரு நாய் வந்தது. நாய் என்றால் தெருவில் திரியும் சாமான்ய நாய் அல்ல; பிரம்மாண்டமான வேட்டை நாய். முன் காலைத் தூக்கிக் கொண்டு அது நின்றால் சரியாக ஓர் ஆள் உயரம் இருக்கும்! எருமை மாட்டை ஒரே அறையில் கொன்று தோளிலே தூக்கிப் போட்டுக்கொண்டு அநாயாசமாகப் போகக்கூடிய வேங்கைப் புலியுடன் சரிசமமாகச் சண்டையிடக் கூடிய நாய் அது!

குமாரலிங்கம் மறைந்து நின்ற பாழுஞ் சுவருக்கு அருகில் வந்தபோது அந்த நாய் மேற்படி சுவரை நோக்கிக் குரைத்தது. முன்னால் வந்த மனிதன் திரும்பிப் பார்த்து, “சீ! கழுதை! சும்மா இரு !” என்று சொல்லிவிட்டுக் கைத்தடியால் நாயின் தலையில் ‘பட்’ என்று ஒரு அடி போட்டான். நாய் ஒரு தடவை உறுமிவிட்டுப் பிறகு பேசாமல் சென்றது. மனிதன் நாயை அடித்த சம்பவத்தைக் குமாரலிங்கம் சரியாகக் கவனிக்கவில்லை. கவனிக்க முடியாதபடி அவனுடைய மனதில் வேறொன்று ஆழமாகப் பதிந்து விட்டது. அப்படிப் பதிந்தது, நாயை அடிக்கத் திரும்பியபோது, நன்றாகத் தெரிந்த அந்த மனிதனுடைய முகந்தான். முறுக்கி விட்ட மீசையோடு கூடிய அந்த முரட்டு முகம், மாணிக்கவல்லியின் தந்தை சாக்ஷாத் சோலை மலை மகாராஜாவின் முகத்தைப் போலவே தத்ரூபமாக இருந்தது.

சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த படியினால் குமாரலிங்கத்துக்குத் தலை சுற்றிய போதிலும் கீழே விழாமல் தப்பிக்க முடிந்தது.


மனிதனும் நாயும் மறைந்த பிறகு, குமாரலிங்கம் கோட்டை மதிலின் ஓரமாக ஓடிய சிறு கால்வாய்க்குச் சென்று முகத்தையும் சிரஸையும் குளிர்ந்த தண்ணீரினால் அளம்பிக் கொள்ள விரும்பினான். அதனால் தன் மனது தெளிவடையும் என்றும், மேலே யோசனை செய்து எங்கே போவ தென்று தீர்மானிக்கலாம் என்றும் எண்ணினான். அவ்விதமே கால்வாயை நோக்கிச் சென்றான்.

போகும்போது, சோலைமலை மகாராஜாவை எந்தச் சந்தர்ப்பத்திலே அவன் பார்த்தான் என்பதும், இளவரசி மாணிக்கவல்லிக்கும் அவருக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளும் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தன.


மாறனேந்தல் மகாராஜா உலகநாதத் தேவர், சோலைமலைக் கோட்டையில் வெகு காலமாகப் பூட்டிக் கிடந்த ‘சின்ன நாச்சியார் அரண்மனை’யில் சுமார் பதனைந்து தினங்கள் வசித்தார். அந்த அரண்மனை வாசம் ஒரு விதத்தில் அவருக்குச் சிறைவாசமாகத்தான் இருந்தது. சிறைவாசத்திலும் தனிச் சிறைவாசந்தான். ஆனாலும் சொர்க்க வாசத்தின் ஆனந்தத்தை அவர் அந்த நாட்களில் அநுபவித்துக் கொண்டிருந்தார். பகலெல்லாம் அந்த அரண்மனைச் சிறையின் மேன் மாடத்தில் அவர் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருப்பார். அவருடைய கால்கள் நடந்து கொண்டிருக்கையில் உள்ளம் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட பலகணியின் அருகே அவர் அடிக்கடி வந்து நின்று எதிரே தோன்றிய பெரிய அரண்மனையை நோக்குவார். அந்த அரண்மனையின் மேல் மாடி முகப்பில் சில சமயம் ஒரு பெண் உருவம் உலாவிக் பொண்டிருக்கும். இளவரசி மாணிக்கவல்லி தமக்காகவே அங்கு வந்து நிற்கிறாள், உலாவுகிறாள் என்பதை எண்ணும் போதெல்லாம் அவருடைய உள்ளம் துள்ளிக் குதிக்கும்.

தினம் மூன்று வேளையும் வீரம்மா அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு புறப்படுவாள்; சின்ன அரண்மனைக்கு ஒழுங்காகச் சாப்பாடு கொண்டுவந்து வைத்து விட்டுப் போவாள்.


சூரியன் அஸ்தமித்து இரவு ஆரம்பித்ததோ இல்லையோ, சிறைக் கதவு திறக்கப்படும். உடனே உலகநாதத் தேவர், கோதண்டத்தலிருந்து கிளம்பிய இராமபாணத்தைப் போல் நேரே வஸந்த மண்டபத்துக்குப் போய்ச் சேருவார். சீக்கிரத்திலேயே மாணிக்கவல்லியும் அங்கு வந்து விடுவாள். அப்புறம் நேரம் போவதே அவர்ளுக்குக் தெரியாது. வருங்காலத்தைப் பற்றி எத்தனையோ மனோராஜ்ய இன்பக் கனவுகளைக் கண்டார்கள், இடையிடையே ஒருவரை யொருவர் ‘நேரமாகி விட்டது’ பற்றி எச்சரித்துக் கொள்வார்கள். எனினும், வெகு நேரம் சென்ற பிறகுதான் இருவரும் தத்தம் ஜாகைக்குச் செல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு தினமும் புதிய புதிய ஆனந்த அநுபவங்களை அவர்களுக்குத் தந்துவிட்டுப் போய்க் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் பகல் வேளை முழுவதும் இளவரசியை அரண்மனை மேல் மாடி முகப்பில் காணாதபடி யால் உலகநாதத் தேவர் ஏமாற்றமும் கவலையும் அடைந்தார். அஸ்தமித்த பிறகு வழக்கம்போல் வஸந்த மண்டபத்துக்குப் போய் அவர் காத்திருந்ததும் விணாயிற்று. ஏதேதோ விவரமில்லாத பயங்களும் கவலைகளும் மனதில் தோன்றி அவரை வதைத்தன. மனதைத் துணிவு படுத்திக் கொண்டு பெரிய அரண்மனைக்குச் சமீபமாகச் சென்ற தீபவெளிச்சம் தெரிந்த ஒரு பலகணியின் அருகே மறைந்து நின்றார். இருவர் பேசும் குரல்கள் கேட்டன. ஒரு குரல் மாணிக்கவல்லியின் இனிமை மிக்க குரல்தான். இன்னொரு ஆண் குரல் அவளுடைய தகப்பனாரின் குரலாகத்தான் இருக்க வேண்டும். அடர்த்தியான செடிகளின் மறைவிலே நன்றாக ஒளிந்து நின்றுகொண்டு பலகணியின் வழியாக உலகநாதத் தேவர் உள்ளே பார்த்தார். அவர் எதிர்பார்த்தபடியே தந்தையும் மகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆஹா! அவ்வளவு அழகும் சாந்த குணமும் பொருந்திய இனிய மகளைப் பெற்ற தகப்பனாரின் முகம் எவ்வளவு கடுகடுப்பாகவும் குரோதம் கொதித்துக் கொண்டும் இருக்கிறது?


இதைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்குள்ளே, அவர்களுடைய சம்பாஷணையில் சில வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. உடனே, பேச்சைக் காது கொடுத்துக் கவனித்துக் கேட்க ஆரம்பித்தார். சோலைமலை மகாராஜாவுக்கும் அவருடைய அருமை மகளுக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது:

தந்தை:- ஏது ஏது! உலகநாதத் தேவனுக்காக நீ பரிந்து உருகிப் பேசுகிறதைப் பார்த்தால், கொஞ்ச நாளில் அவனைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று கூடச் சொல்லுவாய் போலிருக்கிறதே!

மகள்:- நீங்களுந்தான் அடிக்கடி எனக்கு மாப்பிள்ளை தேட வேண்டிய கஷ்டத்தைப் பற்றிச் சொல்லுகிறீர்கள் அல்லவா? உங்களுக்கு அந்தக் கஷ்டம் இல்லாமற் போனால் நல்லதுதானே, அப்பா!

தந்தை:- என் கண்ணே! உன் தாயார் காலமான பிறகு உன்னை வளர்ப்பதற்கு நான் எவ்வளவோ கஷ்டப்பட்டேன், அதைப் போல் இந்தக் கஷ்டத்தையும் நானே சுமந்து கொள்கிறேன். உனக்கு அந்தக் கவலை வேண்டாம்.

மகள்:- எனக்குக் கவலையில்லாமல் எப்படி இருக்கும், அப்பா! நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை என் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டாமா? நான்தானே கலியாணம் செய்து கொள்ள வேண்டும்? அதற்குப் பிறகு ஆயுள் முழுவதும் அவரோடு நான் தானே இருந்தாக வேண்டும்?

நந்தை:– என் செல்வக் கண்மணி! உன்னைக் கலியாணம் செய்து கொள்கிற கழுதை உன்னைச் சரிவர வைத்துக் கொள்ளா விட்டால், அவன் தவடையில் நாலு அறை கொடுத்து விட்டு உன்னைத் திரும்ப இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன். இப்போது இருப்பதுபோல் எப் போதும் நீ இந்தச் சோலைமலைக் கோட்டையின் மகாராணியாக இருக்கலாம்.

மகள்:-அது எப்படி, அப்பா ! ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட பிற்பாடு, நான் திரும்பவும் இங்கே வந்து சந்தோஷமாக இருக்க முடியுமா?

தந்தை:– இந்த அரண்மனையில் உன்னுடைய சந்தோஷத்துக்கு என்ன குறைவு, மாணிக்கம்?

மகள்:- பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷன் வீட்டுக்குப் போவதுதானே முறைமை, அப்பா!

தந்தை:- அது முறைமை தான் கண்ணே! ஆனால் தகப்பனார் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கிற போது, அப்படிக் கொடுக்கிற புருஷனுடைய வீட்டுக்கு மகள் போக வேண்டும். நாமெல்லாம் மானம் ஈனம் அற்ற வெள்ளைக் காரச் சாதியல்ல. வெள்ளைக்காரச் சாதியில் பெண்கள் தாங்களே புருஷர்களை தேடிக் கொள்வார்களாம். மோதிரம் மாற்றிக் கொண்டால் அவர்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டது போலவாம்!


இப்படிச் சொல்லிவிட்டுச் சோலைமலை மகாராஜா ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தார். அவருடைய சிரிப்பு ஒருவாறு அடங்கிய பிறகு மறுபடியும் சம்பாஷணை தொடர்ந்தது.

மகள்:- அப்பா! வெள்ளைக்காரச் சாதியைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பெருமைப்படுத்தப் பேசுவீர்களே? இன்றைக்கு என இந்தமாதிரி பேசுகிறீர்கள்?

தந்தை :- நானா வெள்ளைக்காரர்களைப் புகழ்ந்து பேசினேன்?…அதற்கென்ன? அவர்கள் சண்டையில் கெட்டிக்காரர்கள், துப்பாக்கியும் பீரங்கியும் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பேன், மற்றப்படி, அவர்களைப்போல் கலியாணம் முதலிய காரியங்களில் வியவஸ்தை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லையே?

மகள்:- அப்பா! கலியாண விஷயத்தில் வெள்ளைக்காரர்கள் வியவஸ்தை இல்லாதவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்? நம்முடைய தேசத்திலும் பழைய காலத்தில் அவ்விதந் தானே நடந்தது? இராஜகுமாரிகள் சுயம்வரத்தில் தங்கள் மனதுக்கு உகந்த புருஷனைத் தேர்ந்தெடுத்து மாலையிட வில்லையா? தமயந்தியும், சாவித்ரியும் வியவஸ்தை இல்லாதவர்களா?


இதைக் கேட்ட சோலைமலை மகாராஜா சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றர், பிறகு, “மாணிக்கம்! வெளி உலகம் இன்னதென்று தெரியாமல் இந்த அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கும்போதே நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருக்கிறாயே? உனக்குத் தகுந்த புருஷனை நான் எங்கிருந்து பிடிக்கப் போகிறேன்? பழைய நாட்களிலே போல, மதுரைப் பட்டணத்தில் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபித்து விட்டு எந்த மறவர் குலத்து வீரன் உன்னைப் பட்டத்து ராணியாக்குகிறேன் என்று வருகிறானோ, அவனுக்குத்தான் உன்னைக் கட்டிக் கொடுப்பேன். வேறு எந்தக் கழுதையாவது வந்தால் அடித்துத் துரத்துவேன்!” என்று சொல்லி விட்டு இடி இடி. யென்று சிரித்தார்.

மறுபடியும் “அதெல்லாம் கிடக்கட்டும், மாணிக்கம் ! நீ உன் உடம்பைச் சரியாகப் பார்த்துக் கொள். இராத்திரியில் வெகு நேரம் வரையில் தோட்டத்தில் சுற்றி விட்டு வருகிறாயாமே? அது நல்லதல்ல. இளம் பெண்கள் இராத்திரியில் சீக்கிரம் படுத்துத் தூங்க வேண்டும். இன்றைக்காவது சீக்கிரமாகப் போய்ப் படுத்துக் கொள்!” என்றார்.

“இராத்திரியில் எனக்குச் சீக்கிரமாகத் தூக்கம் வருகிறதில்லை. அப்பா! அதனால்தான் நிலா நாட்களில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் தோட்டத்தில் உலாவி வீட்டு வருகிறேன்”. என்றாள் மாணிக்கவல்லி,

“அடாடா! அதுதான் கூடாது! சிறு பெண்கள் நிலாவில் இருக்கவே கூடாது; சந்திரனையே பார்க்கக் கூடாது. அப்படிச் சந்திரனையே பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்குச் சித்தப் பிரமை பிடித்திருக்கிறது!” என்று சொல்லி வந்த மகாராஜா, திடீரென்று பேச்சை நிறுத்தி, “அது என்ன சத்தம்?” என்று கேட்டுக் கொண்டு பலகணியின் வழியாக வெளியே பார்த்தார்.

மாணிக்கவல்லி முகத்தில் பெருங் கிளர்ச்சியுடன். ” ஒன்றுமில்லையே, அப்பா! வெளியில் ஒரு சத்தமும் கேட்கவில்லையே?” என்றாள்.

உண்மை யென்னவென்றால், சற்று முன்னால் மகாராஜா அங்கிருந்து போவதற்காக எழுந்ததைப் பார்த்தவுடனே, தோட்டத்தில் செடிகளின் மறைவில் நின்று கொண்டிருந்த உலகநாதத் தேவர் இன்னும் சிறிது பின்னால் நகர்ந்தார். அப்போது செடிகளின் இலைகள் அசைந்ததினால் உண்டான சலசலப்பைக் கேட்டு விட்டுத் தான், ”அது என்ன சந்தம்?” என்று சோலைமலை மகாராஜா கேட்டார்.

மேற்படி கேள்வி உலகநாதத் தேவரின் காதில் விழுந்தபோது, அவருடைய குடலும் நெஞ்சும் நுரை ஈரலும் மேலே கிளம்பித் தொண்டைக்குள் வந்து அடைத்துக் கொண்டது போலே யிருந்தது.


இப்போது நினைத்துப் பார்த்தாலும் குமாரலிங்கத்துக்கு மேலே சொன்னது போன்ற தொண்டையை யடைக்கும் உணர்ச்சி ஏற்பட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு, தட்டுத் தடுமாறி நடந்து, சலசல வென்ற சத்தத்துடன் ஓடிய தெளிந்த நீரையுடைய சின்னஞ் சிறு கால்வாயின் கரையை அடைந்தான். குளிர்ந்த தண்ணீரினால் முகத்தை நன்றாய் அலம்பிக் கொண்ட பிறகு, தலையிலும் தண்ணீரை வாரி வாரி ஊற்றிக்கொண்டான்.

“ஓகோ! இங்கேயா வந்திருக்கிறீர்கள்?” என்ற இனிய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தான்.

கையில் ஒரு சிறு சட்டியுடன் பொன்னம்மாள் கரை மீது நின்று கொண்டிருந்தாள்.

குமாரலிங்கத்தின் வாயிலிருந்து அவனை அறியாமல், “மாணிக்கவல்லி! வந்துவிட்டாயா?” என்ற வார்த்தைகள் வெளிவந்தன.

12. அப்பாவின் கோபம்

பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

குமாரலிங்கம் தன்னுடைய தவறை உணர்த்தவனாய்க் கரை மீது ஏறிப் பொன்னம்மாளின் அருகில் வந்தான். “பொன்னம்மா! சட்டியில் என்ன? சோறு கொண்டு வக்திருக்கிறாயா? அப்படியானால் கொடு! நீ நன்றாயிருப்பாய்! பசி பிராணன் போகிறது!” என்றான்.

பொன்னம்மாள் அதற்குப் பதில் சொல்லாமல், “சற்று முன்னால் ஒரு பெண் பிள்ளையின் பெயர் சொன்னாயே? அது யார்?” என்றாள்.

“என்னமோ பைத்தியக்காரத்தனமாய்த்தான் சொன்னேன். அது யாரா யிருந்தால் இப்போது என்ன? அந்தச் சட்டியை இப்படிக் கொடு!”

“முடியாது! நீ நிஜத்தைச் சொன்னால்தான் கொடுப்பேன்; இல்லா விட்டால் திரும்பக் கொண்டுபோய் விடுவேன்.”

“என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்?”

“ஏதோ ஒரு பெயர் சொன்னாயே, அதுதான்!”

“மாணிக்கவல்லி என்று சொன்னேன்.”

“அவள் யார்? அப்படி ஒருத்தியை ஊரிலே விட்டுவிட்டு வந்திருக்கிறாயா? உனக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?”

“இல்லை பொன்னம்மா, இல்லை! கலியாணம் என்ற பேச்சையே நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. சுவாமி விவேகானந்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘இந்த நாட்டில் ஒவ்வொரு மூடனும் கலியாணம் செய்து கொண்டிருக்கிறான்!’ என்றார். நம்முடைய தேசம் சுதந்திரம் அடையும் வரையில் நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை.”

“தேசம், தேசம், தேசம்! உனக்குத்தேசம் நன்றாயிருந்தால் போதும்; வேறு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை!”

“ஆமாம், பொன்னம்மா! நிஜம். தேசம் நன்றாயிருந்தால்தானே நாமெல்லாரும் நன்றாயிருக்கலாம்?”

“தேசமும் ஆச்சு! நாசமத்துப் போனதும் ஆச்சு!”

“சரி; அந்தச் சட்டியை இப்படிக் கொடு!”

“அதெல்லாம் முடியாது. நான் கேட்டதற்குப் பதில் சொன்னால்தான் தருவேன்.”

“எதற்குப் பதில் சொல்ல வேண்டும்?”

“யாரோ ஒருத்தியின் பெயர் சொன்னாயே, அவள் யார்?”

”பொன்னம்மாள்
சொம்பப் பொல்லாதவள்
பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்
அன்னம் படைக்க
மறுத்திடுவாள்
சொன்னதைச் சொன்
னதைச் சொல்லிடுவாள்!”

என்று கேலிக் குரலில் பாடினான் குமாரலிங்கம்.


பொன்னம்மாள் கடுமையான கோபம் கொண்டவள் போல் நடித்து. “அப்படியானால் நான் போகிறேன்” என்று சொல்லித் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

“பொன்னம்மா! உனக்குப் புண்ணியம் உண்டு. கொண்டு வந்த சோற்றைக் கொடு! சாப்பிட்ட பிறகு, நீ கேட்டதற்குப் பதில் நிச்சயமாகச் சொல்லுகிறேன்.”

“முன்னாலேயே அப்படிச் சொல்லுவதுதானே? விண் பொழுது போக்க எனக்கு நேரம் இல்லை. அப்பா வேறு ஊரிலேயிருந்து வந்து விட்டார்!”

இதைக் கேட்டதும் குமாரலிங்கத்தின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது.

“பொன்னம்மா! உன் தகப்பனார் வந்து விட்டாரா? அவர் எப்படி யிருப்பார்?” என்று கேட்டான்.

“எப்படி யிருப்பார்? இரண்டு கால், இரண்டு கையோடுதான் இருப்பார்” என்று சொல்லிக் கொண்டே பொன்னம்மாள் கால்வாய்க் கரையில் உட்கார்ந்து சட்டியைக் குமாரலிங்கத்தினிடம் நீட்டினாள்.

“இது சோறு இல்லை; பலகாரம். இலை கொண்டுவர மறந்து போனேன், சட்டியோடுதான் சாப்பிட வேண்டும்!” என்றாள்.

“ஆகட்டும்; இந்த மட்டும் ஏதோ கொண்டு வந்தாயே? அதுவே பெரிய காரியம்!” என்று சொல்லிக் குமாரலிங்கம் சட்டியைக் கையில் வாங்கிக் கொண்டு அதிலே யிருந்த பலகாரத்தைச் சாப்பிட ஆரம்பித்தான்.

“எங்க அப்பாவுக்கு உன் பேரில் ரொம்பக் கோபம்!” என்று பொன்னம்மாள் திடீரென்று சொன்னதும், குமாரலிங்கத்துக்குப் பலகாரம் தொண்டையில் அடைத்துக் கொண்டு புரையேறி விட்டது.

பொன்னம்மாள் புன் சிரிப்புடன் அவனுடைய தலையிலும் முதுகிலும் தடவிக் கொடுத்தாள். இருமல் நின்றதும், “நல்ல வேளை! பிழைத்தாய்! உன்னைத்தான் நான் நம்பி யிருக்கிறேன்!” என்றாள்.

“என்னை எதற்காக நம்பியிருக்கிறாய்?”

“எல்லாவற்றுக்குந்தான். வீட்டிலே எனக்குக் கஷ்டம் தாங்க முடிய வில்லை. அப்பாவோ ரொம்பக் கோபக்காரர். சின்னாயி என்னைத் தினம் தினம் வதைத்து எடுத்து விடுகிறாள்!”

“ஐயோ! பாவம்! ஆனால் உன் அப்பாவுக்கு என் பேரில் கோபம் என்கிறாயே, அது ஏன்? என்னை அவருக்குத் தெரியவே தெரியாதே?”

“எப்படியோ அவருக்கு உன்னை தெரிந்திருக்கிறது. நேற்று ராத்திரி உன் பெயரைச் சொல்லித் திட்டினார்!”

“இது என்ன கூத்து? என்னை எதற்காகத் திட்டினார்?”

“ஏற்கனவே அவருக்குக் காங்கிரஸ்காரன் என்றாலே ஆகாது. ‘கதர் கட்டிய காவாலிப் பயல்கள்’ என்று அடிக்கடி திட்டுவார். நேற்று ராத்திரி பேச்சு வாக்கில் அதன் காரணத்தை விசாரித்தேன். எங்க அப்பா நில ஒத்தியின் பேரில் நிறையப் பணம் கடன் கொடுத்திருந்தார். காங்கிரஸ் கவருமெண்டு நடந்தபோது, கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் செய்து விட்டார்களாமே? அதனால் அப்பாவுக்கு ரொம்பப் பணம் நஷ்டம்.”

“ஆமாம், விவசாயக் கடன் சட்டம் என்று ஒரு சட்டம் வந்திருக்கிறது. அதனால் கடன் வாங்கி யிருந்த எத்தனையோ விவசாயிகளுக்கு நன்மை ஏற்பட்டது. உன் தகப்பனாருக்கு மட்டும் நஷ்டம் போலிருக்கிறது.”

“அது மட்டுமில்லை. காங்கிரஸ் காரனுங்க, கள்ளு சாராயக் கடைகளை யெல்லாம் மூடணும் என்கிறார் களாமே!”

“ஆமாம்; அது ஜனங்களுக்கு நல்லதுதானே! உங்க அப்பா தண்ணி போடுகிறவராக்கும்!”

”இந்தக் காலத்திலே தண்ணி போடாதவங்க யார் இருக்கிறாங்க? ஊர்லே முக்காலே மூணு வீசம் பேர் பொழுது சாய்ந்ததும் கள்ளுக் கடை, சாராயக் கடை போறவங்கதான். அதோடு இல்லை. எங்க அப்பா ஒரு சாராயக் கடையைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.'”

“ஓஹோ! அப்படியானால் சரி தான்! கோபத்துக்குக் காரணம் இருக்கிறது. ஆனால் என் பேரில் அவருக்குத் தனிப்பட எதற்காகக் கோபம்? நான் என்ன செய்தேன்?”

“கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்து கொண்டது போல் ஆகியிருக்கிறது. கோர்ட்டிலே அவர் ஒரு தாவாப் போட்டிருந்தாராம். சனங்கள் கோர்ட்டைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டார்களாம். அதனாலே அவருடைய பத்திரம் ஏதோ எரித்து போய் விட்டதாம்! உன்னாலே, உன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டதனாலேதான், சனங்கள் அப்படி வெறி பிடித்துக் கோர்ட்டைக் கொளுத்தினாங்க என்று சொல்லி விட்டு, உன்னைத் திட்டு திட்டு என்று திட்டினார். ஆனால் நீ இங்கே இருக்கிறது அவருக்குத் தெரியாது. அவர் கையிலே மட்டும் அகப்பட்டால் உன் முதுகுத் தோலை உரிச்சுடுவேன், அப்படி இப்படி என்று அவர் கத்தின போது எனக்கு ரொம்பப் பயமா யிருந்தது. அதனாலேதான். காலங் காத்தாலே உன்னைப் பார்ப்பதற்கு வந்தேன்.”


குமாரலிங்கத்துக்குப் பளிச் சென்று ஒரு காட்சி ஞாபகத்தக்கு வந்தது. அன்று காலையில் அக்கப் பச்கம் போன கடுகடுப்பான முகத்தைக் கனவிலே சோலைமலை அரண்மனையிலே மட்டுமல்ல. வேறொரு இடத்திலும் அவன் பார்த்ததுண்டு. அவனுடைய வீராவேசப் பிரசங்கத்தைக் கேட்டு ஜனங்கள் சிறைக் கதவை உடைத்துத் தேச பக்தர்களை விடுதலை செய்த அன்று பொதுக் கூட்டம் ஒன்று நடந்ததல்லவா? கூட்டம் ஆரம்பமாகும் சமயத்தில் ஒரு சின்ன கலாட்டா நடந்தது. அதற்குக் காரணம், அன்று காலையில் அந்தப் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் போன மனிதன் தான். அவன் அன்றைக்குப் போதை மயக்கத்தில் இருந்தான். இங்கிலீஷ்காரனுங்களிடத்தில் துப்பாக்கி, பீரங்கி, ஏரோப்ளேன், வெடி குண்டு எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ்காரனுங்களிடத்தில் துருப்பிடித்த கத்தி கபடா கூடக் கிடையாது. சவரம் பண்ணுகிற கத்தி கூட ஒரு பயல் கிட்டேயும் இல்லை! இந்தச் சூரன்கள்தான் இங்கிலீஷ்காரனை விரட்டியடிச்சுடப் போறான் களாம்! போங்கடா. போங்கடாப் பயல்களா!” என்று இந்த மாதிரி அவன் இரைந்து கத்தினான். பக்கத்தி லிருந்தவர்கள் அவனிடம் சண்டைக்குப் போனார்கள். தொண்டர்கள் சண்டையை விலக்கிச் சமாதானம் செய்து அவனைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்கள். இவ்வளவும் ஒரு நிமிஷத்துக்குள் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது.

– தொடரும்…

– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *