சோம்பலால் நேர்ந்த துன்பம்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குடந்தை என்னும் ஊரிலே செம்மையப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அகவை இருபத்திரண்டுக்குமேல் ஆயிற்று. ஆயினும், அவன் எத்தகைய தொழிலிலும் ஊக்கமற்றவனாக இருந்தான். தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டு வருவான். யாராவது, “வீணாகத் திரிகிறாயே! ஏதேனும் ஒரு தொழிலைச் செய்யக்கூடாதா?” என்று கேட்டால், “செய்யாவிட்டால் என்ன? பட்டினி கிடந்து செத்தா போவேன்?” என்று கேட்பான்.
அவன் பெருஞ் சோம்பேறியாக இருந்ததைக் கண்டு சிலர் அவனுக்கு, ‘முழுச்சோம்பேறி!’ என்று பெயர் வைத்தார்கள். முழுச்சோம்பேறி பலநாள் வேலையற்று உண்டு உடுத்திக் காலங்கழித்துத் திரிந்ததான். நாளடைவில் அவனுக்குப் பிண்டத்துக்கும் திண்டாட்டமாகிவிட்டது. அவனுடைய நண்பர்கள் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனுக்குக் காலணாக் கொடுப்பார் எவருமில்லை. முழுச்சோம்பேறி மூன்று நாட்கள் வரையில் ஒரு பூங்காவிலே பட்டினியாகக் கிடந்தான். பிறகு, இனிமேல் பட்டினி கிடக்க முடியாது என்று முடிவு செய்து பிச்சையெடுக்கக் கிளம்பினான்.
வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்த சோம்பேறிக்கு யாரும் பிச்சை போடவில்லை. ‘சோம்பேறிக் கழுதையை அடித்து விரட்டு’ என்று கூறி வைதார்கள். சோம் பேறி, “அந்தோ சோம்பற் பழக்கத்தை மேற்கோண்ட படியினால், நமக்கு இந்தக் கதி ஏற்பட்டதே!” என்று வருந்தினான். சோம்பேறிப் பழக்கத்தை மேற்கொண்டால், யாரும் இவ்வாறுதான் அல்லற்படும்படியாக நேரிடும்.
ஆகவே, இளமையிலிருந்தே ஒவ்வொருவரும் சோம்பல் நீக்கிச் சுறுசுறுப்பாக இருக்கப் பழக வேண்டும். நாளடைவில் இந்த நல்ல பண்பு வளர்ந்து அவர்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவது உறுதி.
“சோம்பித் திரியேல்” (இ-ள்.) சோம்பி – செய்ய வேண்டுந் தொழில்களிலே ஊக்கமற்றவனாக; திரியேல் – அலையாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,