சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!
அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் – ஜூன்:28
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த அமர்நீதி என்பவர் துணி வியாபாரம் செய்து வந்தார்.
சிவபக்தியில் சிறந்த இந்த அடியவர், தனது வருமானத்தின் பெரும்பகுதியை இந்தத் தலத்தில் இருக்கும் கல்யாண சுந்தரேஸ் வரர் ஆலயத்துக்காக செலவிட்டார். மேலும், தர்மசாலை ஒன்றும் நிறுவி, சிவனடி யார்களுக்கு உணவும் உடையும் அளித்து மகிழ்ந்தார். கூடவே, கோவணமும் தருவார்! சிவத்தொண்டில் சிறந்த அமர்நீதியின் பக்தியை உலகறியச் செய்ய சித்தம் கொண் டார் சிவனார்.
ஒரு நாள்… அமர்நீதியாரைத் தேடி அந்த ணர் வடிவில் வந்து சேர்ந்தார் சிவனார். கட்டுக்குடுமி; மேனியெங்கும் திருநீறு; கையில் ஒரு கோல்; அதன் உச்சியில் விபூதிப் பை, சிறிய தர்ப்பைப்புல் கட்டு மற்றும் கௌபீனம் (கோவணம்).
அந்தணரை சிறப்பாக வரவேற்று உபசரித்தார் அமர்நீதி. ”இன்று தாங்கள் இங்கு அவசியம் உணவருந்தி செல்ல வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டார்.
‘அப்படியே ஆகட்டும்’ என்று சம்மதித்த அந்தணர், கோலின் உச்சியில் இருந்த கௌபீனத்தை எடுத்து அமர்நீதியாரிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார். அத்துடன், ”இதை, சாதாரணமாக நினைக்காதே; மதிப்பு மிக்கது. நான் காவிரியில் நீராடி விட்டு வந்ததும் திரும்பக் கொடு” என்று கூறிச் சென்றார்.
அந்தணராக வந்த சிவனார் காவிரியில் நீராடினாரோ… அல்லது தலையிலேயே முடிந்து வைத்திருக்கும் கங்கையில் நீராடினாரோ… தெரிய வில்லை! ஆனால், அமர்நீதியாரது ஒப்பற்ற பக்தியில் திளைக்க விரும்பினார்.
சற்று நேரத்தில் திரும்பி வந்தவர், ”அமர்நீதி! கௌபீனத்தை கொடு!” என்றார்.
அமர்நீதியார் கௌபீனத்தை எடுக்க உள்ளே ஓடினார். அங்கு, கௌபீனத்தைக் காணோம். தூக்கிவாரிப் போட்டது அமர்நீதியாருக்கு! எங்கு தேடியும் கௌபீ னம் கிடைக்கவே இல்லை.
அமர்நீதியாருக்கு அழுகையே வந்து விட்டது. தலை கவிழ்ந்தபடி அந்தணரிடம் வந்தவர், ”கௌபீனத்தைத் தொலைத்து விட்டேன் ஸ்வாமி! என்னை மன்னியுங்கள். அந்த கௌபீனத்துக்கு பதிலாக, புதிய கௌபீனத்தை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சினார்.
அந்தணர், கடும் கோபம் கொண்டார். ”என்னிடம் இருந்த விலைமதிப்பற்ற கௌபீனத்தை அபகரிக்கும் எண்ணத்தில் தான் கௌபீனத்தைப் பலருக்கும் தானமாக வழங்கி வந்தாயா?” என்று ஆவேசத்துடன் கத்தினார்.
நடுங்கிப் போன அமர்நீதியார், ”கோபம் வேண்டாம் ஸ்வாமி! தங்களுக்கு நேர்ந்த நஷ்டத்தை ஈடுகட்ட என்னிடம் உள்ள பட்டு வஸ்திரங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன். மறுக்காமல் பெற்றுக் கொள் ளுங்கள்” என்று மன்றாடினார்.
சட்டென்று அமைதியானார் அந்தணர். அமர்நீதி நாயனாரை உற்றுப் பார்த்தபடி… ”எனக்கு எதுக்கப்பா பட்டு வஸ்திரங்கள்? ஒன்று செய்யலாம்… இதோ, என்னிடம் இருக்கும் இன்னொரு கௌபீனத்தின் எடைக்குச் சமமான கௌபீனத்தைக் கொடு போதும்!” என்றார்.
உடனடியாக தராசு ஒன்று வரவழைக்கப்பட்டது. அந்தணரின் மற்றொரு கௌபீனத்தை ஒரு தட்டில் வைத்து, மற்றொரு தட்டில் புதியதொரு கௌபீனத்தை வைத்தார் அமர்நீதியார். ஆனால் தராசுத் தட்டுகள் சமமாக வில்லை. அடுத்தடுத்து நிறைய கௌபீனங்களை வைத்தும் அந்தணரின் கௌபீனம் இருக்கும் தட்டு அசையவில்லை!
பதறினார் அமர்நீதி நாயனார். தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த புத்தாடைகள், வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நகைகள் அனைத்தையும் வைத்தும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லை.
கலங்கிய விழிகளுடன் அந்தணரை ஏறிட்ட அமர்நீதி நாயனார், கடைசியாக தன் மனைவி- மகனுடன் தராசுத் தட்டில் ஏறி அமர்வதற்கு முடிவு செய்தார். அதன்படி மனைவி- மகனை அருகில் அழைத்தவர், ”எங்களின் சிவபக்தி உண்மையெனில்… நாங்கள் தரிக்கும் விபூதியின் மீது நாங்கள் கொண்டிருக்கும் பக்தியும் அதன் காரணத்தால் நாங்கள் செய்யும் தர்மங்களில் குறையேதும் இல்லை என்பது சத்தியம் எனில் தராசுத் தட்டுகள் சமமாகட்டும்!” என்றபடி குடும்ப சமேதராக தராசுத் தட்டில் ஏறி அமர்ந்தார்.
அவ்வளவுதான்! தராசின் தட்டுகள் சமநிலையில் நின்றன. மகிழ்ந்து போன அமர்நீதியார், அந்தணரைத் தேடினார். அவரைக் காணோம். மறுகணம்… உமையவளுடன் அங்கு காட்சி தந்தருளினார் கல்யாணசுந்தரேஸ்வரர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். பிறகு, அமர்நீதி நாயனாரையும் அவரின் குடும்பத்தாரையும் சிவலோகத்துக்கு அழைத்துக் கொண்டார் ஈசன்!
-வி. சுந்தரம், கடலூர்-3, (ஜூன் 2009)