கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 2,998 
 
 

எக்ஸ் கிரகத்திலிருந்து மிஸ்டர் ஏவும், மிஸ் பியும்  பறக்கும் சக்தியைப்பயன்படுத்தி நமது பூமிக்குள் வந்து விட்டார்கள். வந்தவர்கள் முகத்தில் தேடி வந்தது கிடைத்து விட்டதில் அளவில்லா மகிழ்ச்சி. அவர்களது முன்னோர்கள் பலவித பழங்களையும், உணவுகளையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டு வாழ்ந்ததாக கல்வெட்டுக்களில் எழுதி வைத்திருந்ததை பொய்யென நினைத்தவர்கள், இப்போது உண்மையென நம்பினார்கள். இவையெல்லாவற்றையும் விட உயிர் வாழ மிக முக்கியமான ஆக்ஸிஜன் இங்கே எளிதாகக்கிடைப்பதை எண்ணி ஆனந்தப்பட்டனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக உணவின்றி பழங்கள் கொடுக்காத, ஆனால் உயிர் வாழ ஒரு வித பாலைச்சுரக்கும் மரத்திலிருந்து மாத்திரைகளை தயாரித்து வருடத்திற்கு ஒரு மாத்திரை என சாப்பிட்டு மனிதர்கள் வாழும் எக்ஸ் உலகத்தில் வாழ்வதால் அவர்களது முகம் சிறியதாகவும், தோல் பகுதி மரம் போன்றும் இருப்பதைக்கண்டு நமது பூலோகவாசிகள் விந்தையாக அவர்ளை வேடிக்கை பார்த்தனர். ஆனால் சக மனித இனம் என்பதால் அடைக்கலம் கொடுத்தனர்.

மரங்களில் இருந்த பழங்களை சுவைத்தனர். பூக்களிலிருந்து வெளிவரும் நறுமணங்களை நுகர்ந்தனர். காற்றை நன்றாக சுவாசித்தனர். பறவைகளையும், விலங்குகளையும் கண்டு அதிசியத்தனர். “பழங்களில் இத்தனை வகைகளா? அதில் ஒவ்வொன்றிலும் வேறு,வேறு சுவைகளா? பூக்களில் இத்தனை வகைகளா? அதில் பல வித நிறங்களா? பேசும் மொழியிலும் இனிமை. ஆனால் பேசும் மனிதர்கள் தான் பேராசை கொண்டு வாழ்வை ரசிக்காமல் வாழ்கின்றனர்” என சில நாட்களிலேயே மொழியைக்கற்றுக்கொண்டு பூமியில் வாழும் மனிதர்களுடன் பேசத்துவங்கினர்.

“இந்த பூமியில் வாழும் மனிதர்களே… நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்பதே தெரியாமல் வாழுகின்றீர்கள். பிணம் தின்னுகின்ற கழுகுகளைப்போல் காலையில் எழுந்தவுடன் பணம், பணம் என உணவைக்கூட ருசித்து சாப்பிடாமல் ஓடுகிறீர்கள். நோய் வந்து கெமிக்கலால் செய்யப்பட்ட மாத்திரைகளைத்தின்று உடலைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். இதனால் பாதி காலமே உயிர் வாழுகின்றீர்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் எங்கள் பூமியில் பழங்கள் கிடைக்காது, காற்று கிடைக்காது, நறுமணங்களை சுவாசிக்க முடியாது. ஆனால் உங்களுக்கு அனைத்தும் கிடைத்தும் பயன்படுத்தாமல் மிருகங்களை விட அறிவு குறைந்தவர்களாக வாழுகின்றீர்கள்” எனக்கூறியதைக்கேட்டு பணக்காரர்கள் பதற்றமானார்கள். ஏழைகள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

“மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இவர்களை கொன்று விட வேண்டும். இல்லையென்றால் உலகில் தொழிலும், பணமும் மனிதர்களிடம்  மதிப்பிழந்து போய்விடும்” என ஆத்திரத்தில் மதியிழந்து பேசினார்.

“நீண்ட நாட்கள் வாழ வேண்டும். நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மரங்களை வெட்டாதீர்கள். கட்டிடங்களைக் கட்டாதீர்கள். பூமியைத் தோண்டாதீர்கள். பயன் படாத படிப்பை, பிடிக்காத படிப்பை தூக்கத்தைக் கெடுத்து படிக்காதீர்கள். பணம் சேர்க்காதீர்கள். பதவிக்காக ஓடாதீர்கள். சொத்துக்களை உங்களுடையது என கூறி பத்திரம் எழுதி அதைப்பாதுகாக்கவே ஓரிடத்திலேயே முடங்கி விடாதீர்கள். உங்களுடையது சிறு பகுதி மட்டுமல்ல அனைத்துமே உங்களுடையது என நினையுங்கள். ஓரிடத்திலேயே தங்கி வாழ்ந்து வாழ்வை முடித்து விடாதீர்கள். கால்கள் நடப்பதற்காகத்தான். நடந்து கொண்டே இருங்கள். பசி வந்தால் உண்ணுங்கள். ஓய்வுக்காக உறங்குங்கள். யாருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள். யாருடையதையும் எடுக்காதீர்கள். உணவுப்பொருட்களை உங்களுடையதென பசித்தவர் எடுப்பதைத் தடுக்காதீர்கள். எங்களைப்பொறுத்தவரை சொர்க்கம் என்பதே இந்த பூமிதான். இங்கே காட்டிற்கும், காற்றுக்கும் எதற்கு வேலி?” என பேசியதைக் கேட்டவர்கள் தாங்கள் இதுவரை இதைக்கூடத்தெரியாத படித்த முட்டாள்களாக இருந்து விட்டதாக நினைத்து வருந்தினர்.

ஒரு பெரிய தோட்டக்காரர் தனது தோட்டத்து வேலியை உடனே அகற்றி ஊரில் வாழும் அனைவரும் பழங்களை பறித்து சாப்பிட அனுமதித்தார். ‘உள்ளூரில் பசித்தவர்கள் வாடியிருக்க வெளிநாட்டிற்கு எதற்காக பழங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?’ என நினைத்து  ‘என்னை முதலாளி என்று யாரும் அழைக்க வேண்டாம். எனக்கும் உங்களுக்கும் இவையெல்லாம் பொது’ என்றார்.

இச்செய்தி உலகெங்கும் பரவியது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ராணுவத்தினருக்கும், காவல் துறைக்கும், நீதி மன்றங்களுக்கும் வேலையில்லாமல் போயின. யாரும் யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கவில்லை. ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை, ஆதார் இல்லை, எதற்கும் ஆதாரமும் இல்லை. தேவையுமில்லை. மனிதர்கள் மனம்போல் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். எதையும் யாரும் சேமிக்காததால் அனைவருக்கும் அனைத்தும் உடனே கிடைத்தது. பணம் மதிப்பிழந்து போனது. தங்கம் வெள்ளி எதையும் யாரும் வாங்கவில்லை. ஆடம்பத்தையும், ஆசைகளையும் துறந்தார்கள். ஆரோக்யத்தைப்பேணி காத்தார்கள்.

யாருக்கும் நோய் வரவில்லை. சோத்துக்காகவும், சொத்துக்காகவும் சண்டை போடவில்லை. நாடுகளுக்கிடையே போரில்லை. நாடுகளே இல்லை. விசா இல்லை, விசாரணை ஏதுமில்லை. பறவைகளைப்போல எங்கு வேண்டுமானாலும் , யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம். மதமில்லை, ஜாதியில்லை. யாருக்கு யாரும் அடிமையில்லை. உயர்வு தாழ்வு ஏதுமில்லை. வாழ்க்கை முறையே தலைகீழாக மாறியிருந்தது. மிருகங்கள் வாழுமிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கவில்லை, மனிதர்கள் வாழும் பகுதிக்குள் மிருகங்கள் வரவில்லை.

மனிதர்களுக்கு அறிவுக்கண்களைத்திறந்த மிஸ்டர் ஏவும், மிஸ் பியும் கடவுளாக பார்க்கப்பட்டனர். வணங்கப்பட்டனர்!

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *