சொட்டு ரத்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 5,300 
 
 

(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. வேடிக்கை பார்க்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணி! 

போலீஸாரின் கண்களில் படாதபடி நாதமுனியை பத்திரமாகப் போய் வீரமணியின் வீட்டில் தங்கி இருக்கும்படிக் கூறிவிட்டு ராஜா ஒரு டாக்சிக் காரிலேறி சேதுபதியின் வீட்டின் முன்னால் வந்திறங்கினான். 

அந்த வீட்டின் முன்னாலுள்ள சாலையின் ஓரமாக இரு போலீஸ்கார்களும், ஒரு சாதாரணக் காரும் நின்று கொண்டு இருந்தன. அவற்றைப் பார்த்ததும் வீட்டின் நம்பரைப் பார்க்காமலேயே வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்று ராஜா எண்ணிக் கொண்டான். 

அந்தச் சாதாரணக் கார் டாக்டர் சாமுவேலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். அவர் தன்னுடைய ‘பேஷன்டான’ நித்தியகலாவைக் கவனித்துக் கொள்வதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது. 

டாக்சிக் காரை அனுப்பிவிட்டு வந்த ராஜாவை, “மிஸ்டர்! உங்களைத் தானே!” என்று ஆவலோடு அழைக்கும் ஒரு பெண் மணியின் குரல் தடுத்து நிறுத்தியது. 

அவனைக் கூவி அழைத்தாள். 

கீழ்வானம் வெளுத்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்து விடும்! 

பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இருந்து பயனுள்ள விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிய ராஜா பக்கத்து வீட்டுக்குச் சென்று காம்பவுண்டு ஓரமாக அதன் சுவரில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நின்ற அந்தப் பெண்மணியைப் பார்த்தான். 

அந்த அம்மையாருக்கு குறைந்த பட்சம் நாற்பது வயதாவது இருக்கும். நாகரிகத்தின் வாரிசு என்று விளம்பரம் செய்வதைப் போல் அந்த அம்மையாரின் உடை இருந்தது. அரைக்கை ஜாக்கட்டும், உடலோடு ஓட்டும் மெல்லியப் புடவையும் அணிந்து இருந்தாள். 

“ஏன் அப்படிப் பார்க்கிறாய்? நான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரியான அகிலாண்டம் அம்மாள் தான்! கல்யாணமான சில மாதங்களிலேயே கணவனை இழந்து விதவையாகி விட்டேன்” என்று தன் கதையைச் சொன்ன அகிலாண்டம் அம்மாள். “பக்கத்து வீட்டில் என்ன விசேஷம் என்று தெரியவில்லையே! முதலில் டாக்டர் சாமுவேல் காரில் வந்திறங்கி பரபரப்போடு வீட்டினுள் போனார் அதன் பிறகு இரண்டு போலீஸ் வண்டிகள் வந்தன. அவற்றில் இருந்து போலீஸ்காரர்களும் இறங்கிச் சென்றார்கள். அந்த வீட்டில் என்ன நடக்கிறது” நீயும் இரகசியப் போலீஸ் பிரிவைச் சார்ந்த ஆளா?” என்று விசாரித்தான். 

அடுத்த வீட்டு விவகாரங்களை மோப்பம் பிடித்துத் தெரிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம் உடையவள் தான் என்பது அவளுடைய பேச்சிலிருந்தே விளங்கியது. பக்கத்து வீட்டுக் கதைகளை அவள் ஏராளமாகச் சேகரித்து வைத்து இருப்பாள் என்றும் தோன்றியது! 

“நான் சாதாரண ஆள் தான்!” என்றான் ராஜா. 

“அப்படியானால் ரொம்பவும் நல்லதாகப் போய்விட்டது. நாம் இரண்டு பேர்களும் மனம் விட்டுப் பேசலாம்” என்று சொன்ன அகிலாண்டம் அம்மாள். அடிக்கொருதரம் குளுமையாகச் சிரித்துவிட்டு, 

“பக்கத்து வீட்டில் ஏதோ ஒன்று நடைபெறும் என்பது நான் பல நாட்களாக எகிர்பார்த்தது தான். இந்தக் காலத்தில் ஆசைக்காகத் திருமணம் என்று ஒன்றைச் செய்து கொள்வதும். ஆசை முடிந்து விட்டால் விவாகரத்து செய்து கொள்வதும் சாதாரணமானது ஆயிற்றே!” என்று சொன்னவள்” சம்பந்தம் இல்லாமல் நான் எதை எதையோ உளறுகிறேன். பக்கத்து வீட்டுக்கு டாக்டர் ஏன் வந்தார்? யாருக்காவது உடம்பு சுகம் இல்லையா? போலீஸ்காரர்கள் அங்கே வந்து என்ன செய்கிறார்கள்? நானும் தூங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் ஒன்றுமே புரியவில்லை” என்று கூறினாள். 

“உங்களுக்கு நித்தியகலாவையும், அவள் கணவன் சேதுபதியையும் நன்றாகத் தெரியும் என்று சொல்லுங்கள். 

“ஆஹா! அருமையாகத் தெரியும்! என் வீட்டிலுள்ள ஜன்னலைத் திறந்து போட்டுக் கொண்டு அதன் வழியாகப் பக்கத்து வீட்டில் என்னென்ன நடக்கின்றன என்று சதாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பேன். நித்தியகலாவின் வீட்டு ஜன்னல்களும் சதாவும் திறந்தே கிடக்கும். அதனால் உள்ளே நடப்பவை எல்லாம் சினிமா போல் என் கண்களுக்குத் தெரியும். நான் சாப்பிடாமல் கூட வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன் பிறகு நித்தியகலாவைத் தனியாக அழைத்து நான் பார்த்த காட்சிகளைக் கூறி கிண்டல் செய்து மகிழுவேன். அவளுக்கும் நான் சொல்லுவது குஷியாக இருக்கும் என் கன்னத்தில் தட்டி நாணத்துடன் குழைந்து சிரிப்பாள்! நித்தியகலாவின் கணவன் தன் பத்திரிகை ஆபீசுக்குப் போனதும், அவளுடன் அரட்டையடிக்க இன்னொரு வாலிபன் வந்து விடுவான். அவன் வந்து விட்டால் அந்த வீடு படும்பாடு! ஒரே அமர்க்களம் தான்! ஜன்னல்கள் திறந்து கிடக்கிறதே என்று கூடப் பார்க்காமல் ஆடித் தீர்த்து விடுவார்கள். என் கண்களுக்கு அது அருமையான விருந்தாக இருக்கும்.” 

தன் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லி விட்ட அகிலாண்டம் அம்மாள், “நான் எப்பொழுதுமே இப்படித்தான்! இன்னதுதான் பேசவேண்டும் என்று தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் உளறி விடுவேன்” என்று கூறிவிட்டு, “பக்கத்து வீட்டில் என்ன நடந்தது? நித்தியகலாவுக்கோ அவளுடைய அப்பாவிக் கணவனுக்கோ ஆபத்து ஒன்றும் இல்லையே?” என்று அக்கறையோடு கேட்டாள். 

தங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் பிறரைப் பற்றியே விசாரிப்பவர்கள் பலர் இருப்பதால் அகிலாண்டம் அம்மாளின் குணாதிசயம் ராஜாவுக்கு வெறுப்பைத் தரவில்லை! 

அடுத்த வீட்டில் நடப்பதை உற்றுப்பார்ப்பதும், ரசித்து மகிழுவதும் அவளுடைய பிறவிக்குணம்! கணவனை இழந்த கைம்பெண்ணான அவளுக்கு அதில் ஒரு அலாதியான சுவை இருக்கக்கூடும். 

“எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லத்தான் போகிறேன்” என்று சொன்ன ராஜா “நீங்கள் பக்கத்து வீட்டையே சதாவும் பார்த்துக் கொண்டு இருப்பதால் நேற்று என்னென்ன நடந்தது என்பதையும் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் அல்லவா?” என்று கேட்டான். 

“ஓரளவு எனக்குத் தெரியும். ஆனால் நேற்றைக்கு அவ்வளவு சுவாரசியமாக இல்லை!” என்றாள் அகிலாண்டம் அம்மாள். 

“நேற்றைக்கு நீங்கள் என்னென்ன காட்சிகளைப் பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள். அதன் பிறகு நான் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிவிக்கிறேன்.” 

அகிலாண்டம் அம்மாள் மிகுந்த உற்சாகம் அடைந்தவளாய் “நேற்றைக்கு நல்ல தமாஷ்” நடக்கும் என்று ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது. நித்திய கலாவின் நண்பன் சரியாக பிற்பகல் மூன்று மணி ஆறு நிமிடம் ஆகி இருந்த போது வந்தான். உடனே நித்தியகலாவுக்குக் கொண்டாட்டமாகப் போய்விட்டது. அவனைப் பிடித்துக் கொண்டு கும்மாளம் போட்டுக் கொண்டு நடனம் ஆடினாள். மனைவியின் உற்சாகமான இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு சேதுபதி வந்து விடுவான் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அவன் மாலை ஆறு மணி ஆகிய பிறகும் கூட வரவில்லை அவன் மட்டும் வீட்டுக்கு வந்து மனைவியையும் அவள் நண்பனையும் பார்த்திருந்தால் எவ்வளவோ சுவாரசியமாக இருந்திருக்கும். நான் இரண்டு பிளேட் பாதாம் அல்வாவை ருசித்துச் சாப்பிட்டதைப் போல் மகிழ்ந்திருப்பேன்” என்று சொன்னபோது ரசனையற்ற ஒருவித ஏமாற்றம் அவளுடைய பேச்சில் தொனித்தது! 

அகிலாண்டம் அம்மாள் அடுத்த வீட்டு விஷயங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து இருக்கிறாள் என்பது அவளுடைய பேச்சில் இருந்து விளங்கியது. 

“அதன் பிறகு நித்தியகலாவின் நண்பன் எத்தனை மணிக்கு வெளியே போனான்?” 

“நித்தியகலாவின் நண்பன் மட்டும் தனியாகப் போகவில்லை. கணவன்-மனைவி போல் அவளும் நண்பனும் தான் ஜோடியாக வெளியே போனார்கள். அப்பொழுது ஆறு மணி அடிப்பதற்கு இருபத்தி ஐந்து நிமிடம் இருந்தது.” 

அகிலாண்டம் அம்மாள், பிறருடைய வாழ்க்கை ரகசியங்களைத் துருவித் துருவி ஆராயக் கூடியவள் என்பதற்கு இதை விடவும் வேறென்ன ஆதாரம் வேண்டும்? 

“நீங்கள் மணி நேரத்தைக் கூட சரியாகக் குறித்து வைத்து இருக்கிறீர்களே!’ என்று ஆச்சரியத்தோடு சொன்னான் ராஜா. 

“அவர்கள் இரண்டு பேரும் வானம்பாடிகளைப் போல் வீட்டில் கும்மாளம் போட்டுக் கொண்டு இருந்த போது நித்தியகலாவின் அப்பாவிக் கணவன் வந்துவிட மாட்டானா என்று அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் மட்டும் அவன் வந்திருந்தால் எவ்வளவு ருசிகரமாக இருந்திருக்கும் தெரியுமா? ஒரு மாதத்திற்கு முன்னால் இப்படித்தான் நடந்தது. நித்தியகலாவும் அவளுடைய சினேகிதனும் ஆனந்தமாக கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தபோது அவளுடைய கணவன் சேதுபதி ‘திடுமென்று’ வந்து விட்டான். அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் யுத்தம் தான்! நள்ளிரவு பன்னிரண்டு மணி வரையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை! நான் இடையில் புகுந்து ‘தர் ஷ்கண்ட்” மாநாடு நடத்தி அமைதி உண்டு பண்ணினேன்” என்று சொன்னபோது அகிலாண்டம் அம்மாளின் எல்லாப் பற்களும் வெளியே தெரிந்தன. 

“நேற்று இரவு அப்புறம் என்ன நடந்தது? வெளியே போன நித்தியகலாவின் கணவன் மறுபடியும் வரவில்லையா? நீங்கள் தான் உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இருந்து இருப்பீர்களே!” 

“நன்றாகக் குடித்து தள்ளாடிக் கொண்டே சேதுபதி வந்தான். அவன் வீட்டுக்கு வரும்போது இரவு பத்துமணி ஒன்பது நிமிடம் ஆகியிருந்தது.” 

“அப்படியானால் அவன் வீட்டுக்கு வந்ததும் யுத்தம் ஆரம்பித்து இருக்கும்.” 

“என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் உள்ளே நடக்கும் காட்சிகளைக் காண முடியாதபடி நித்தியகலா ஜன்னல்களைச் சாத்திவிட்டாள். டாக்டர் தான் காற்றோட்டமாக இருப்பதற்காக எல்லா ஜன்னல்களையும் மறுபடியும் இப்பொழுது திறந்து வைத்தார்.” 

“கணவன் சேதுபதி வீட்டுக்கு வரும்போது மனைவி நித்தியகலா வீட்டில் தான் இருந்தாளா?” 

“ஆமாம்! அவளுடைய நண்பனுடன் வெளியே போன சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டுக்கு அவள் திரும்பி வந்துவிட்டாள்.” 

“தனியாகவா” 

“ஆமாம். ஒரு டாக்சிக்காரில் நித்தியகலா வந்தாள். அப்பொழுது மணி என்ன தெரியுமா? அதையும் டைரியில் குறித்து வைத்து இருக்கிறேன். ஆறுமணி பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பின்னர் டாக்சிக் காரை வெளியே நிற்க வைத்துவிட்டு வீட்டினுள் போய்விட்டு ஏழு மணி பத்து நிமிடத்துக்கு வெளியே வந்தாள். டாக்சி டிரைவர் பணத்தை வாங்கிக் கொண்டு காரை ஓட்டிச் சென்றார். ஆனால் நித்தியகலா போகவில்லை. மறுபடியும் வீட்டுக்குள்ளேயே திரும்பிப் போய் விட்டாள்.” 

“நித்தியகலா மறுபடியும் வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்று அவ்வளவு துல்லியமாக எப்படிச் சொல்லுகிறீர்கள்?” 

“நான் வாசலில் நின்று தூங்காமல் கவனித்துக் கொண்டு இருந்தேன். அவள் வெளியே போகவில்லை.” 

“பின் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு பின்புறத்து வாசல் வழியாகவும் வெளியே போய் இருக்கலாமே!” 

“பின்புறத்தில் வாசல் இருந்தால் தானே….? எது நடந்தாலும் அந்த வீட்டில் மட்டும் முன் புறத்திலுள்ள வாசல் வழியாகத்தான் நடைபெற வேண்டும்!” என்று சொன்ன அகிலாண்டம் அம்மாள், “அங்கே என்ன நடந்தது என்பதை இன்னும் நீ சொல்லவில்லையே! போலீஸும் டாக்டரும் ஒரு வீட்டுக்கு வருவது என்றால் அபாயகரமான நிகழ்ச்சி ஏதாவது நடைபெற்று இருக்க வேண்டுமே!” என்று கேட்டாள். 

“அபாயகரமான நிகழ்ச்சி தான் அது! நித்தியகலாவின் அப்பாவி கணவனான சேதுபதி நேற்றிரவு கொலை செய்யப்பட்டான்.” 

ராஜா இப்படிச் சொன்னதும் அகிலாண்டம் அம்மாள் வாயைப் பிளந்து விட்டு, அட கடவுளே!” என்று புலம்பினாள். 

“அதுமட்டுமல்ல; நித்தியகலா ஏராளமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு மயங்கிய நிலையிலேயே கிடக்கிறான்!” 

அவளுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற படபடப்பு ராஜாவுக்கு உள்ளூர இருந்தது. நித்தியகலா துர்பாக்கிய வசமாக இறந்து விட்டால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க மிகுந்த சிரமம் ஏற்படலாம். 

ஒரு சுவர் தான் குறுக்கே இருக்கிறது. இருந்தும் எல்லா விஷயங்களையும் நிமிடக்கணக்கு சகிதம் தெரிந்து வைத்து இருக்கும் நான் நேற்றிரவு ஏமாந்துவிட்டேன். சேதுபதி நல்ல பையன்” என்று சொன்ன அகிலாண்டம் அம்மாள், ‘த்சோ…..த்சோ’ என்று வருத்தம் தெரிவித்து விட்டு, “சேதுபதியின் பிணத்தை அறுத்து வீட்டினுள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்களா” என்று ஆவலோடு கேட்டாள். 

“இல்லை! சேதுபதியின் பிணம் நேற்றிரவு நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் அனாதையாகக் கிடந்தது. போலீஸார் தான் அந்தப் பிணத்தைக் கைப்பற்றி எடுத்துச் சென்றார்கள்!” என்றான் ராஜா. 

“பிணம் ஏரிக்கரையில் கிடந்ததா? வீட்டிலிருந்த அவன் எனக்குத் தெரியாமல் எப்படி அங்கு போய்ச் செத்தான்?” 

“அது தான் எனக்கும் தெரியவில்லை. சேதுபதியின் தலையின் பின்புறத்தில் குண்டு பாய்ந்து இருக்கிறது. அவன் யாராலோ சுட்டுக் கொல்லப்பட்டு இருக்க வேண்டும்.” 

“பரிதாபமாக இருக்கிறது அந்த அப்பாவிக் கணவனின் முடிவைக் கேட்கும் போது! நேற்றிரவு நன்றாகக் குடித்துவிட்டு தள்ளாடியே நடந்து வந்தான் சேதுபதி. அதனால் அவன் குடிபோதையிலே வீட்டினுள் புரண்டு கொண்டு இருந்தான் என்று நினைத்தேன். டெலிபோன் மணி சதாவும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை யாருமே எடுக்கவும் இல்லை.” 

“எத்தனை மணிக்கு டெலிபோன் மணி விடாமல் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தையும் நீங்கள் கவனித்து வைத்து இருப்பீர்களே!” 

“கரெக்ட்! சுமார் பத்தரை மணி அளவில் முதலில் டெலிபோன் மணி அலறியது. அதன் பிறகு சிறிது நேர ஓய்வுக்குப் பின் மறுபடியும் பதினொரு மணி இரண்டு நிமிடம் சரியாக இருக்கும் போது டெலிபோன் மணி சத்தம் வந்தது. அப்பொழுதும் யாருமே டெலிபோனை எடுத்துப் பேசியதாகத் தெரியவில்லை. சேதுபதி குடிபோதையில் எழுந்திருக்க முடியாமல் கிடக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்.” 

“நித்தியகலா டெலிபோனில் பேசி இருக்கலாம் அல்லவா?” 

“அவள் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு தினசரியும் தூங்கி விடுவாள் என்று எனக்குத் தெரியும். எனவே அவள் சம்பந்தமான பிரச்சனை எழவில்லை”. 

“இரவில் எப்பொழுதாவது சேதுபதி தன் வீட்டிலிருந்து வெளியே போனானா?” 

“நான் இரவு பன்னிரண்டு மணி வாக்கில் தான் தூங்குவதற்காகச் சென்றேன். அதன் பிறகு அவன் வெளியே போனானோ, என்னவோ…! ஆனால் நான் வெளியே நின்று கொண்டு இருக்கும் போது மட்டும் அவன் போகவில்லை.” 

அகிலாண்டம் அம்மாளிடம் பேசிய விபரங்கள் அதிக பயன் உள்ளவையாக ராஜாவுக்குத் தோன்றின. மந்தமாக இயங்கிக் கொண்டு இருந்த அவனுடைய மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. 

சேதுபதி வெளியே போய் விட்டு பத்து மணிக்கு எல்லாம் குடி போதையுடன் வீட்டுக்கு வந்து விட்டான் என்பது அகிலாண்டம் அம்மாளின் பேச்சிலிருந்து வெளிப்பட்டது. 

ஆனால் நாதமுனி என்ன சொன்னான் தெரியுமா? இரவு பன்னிரண்டு மணிக்கு அவன் நித்தியகலாவோடு டெலிபோனில் பேசியதாகவும் அப்பொழுது அவளுடைய கணவன் சேதுபதி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று சொன்னதாகவும், கணவனைப் பார்க்கவே இல்லை என்று அவள் கூறியதாகவும் தெரியப் படுத்தினான். 

பக்கத்து வீட்டுப் பெண்மணியான அகிலாண்டம் அம்மாளின் பேச்சுப்படி நித்தியகலா பத்து மணிக்கு வீட்டிலேயே இருந்து இருக்கிறாள். அப்பொழுது அவள் தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டுத் தூக்கத்திலும் ஆழ்ந்திருக்கலாம்! 

ராஜாவின் சிந்தனையோட்டம் நீண்டது. அகிலாண்டம் அம்மாள் தன்னைப் பற்றிய வீர தீரப் பராக்கிரமங்களைப் பற்றி அளந்தது கூட அவனுடைய காதுகளில் விழவில்லை. 

நித்தியகலாவோடு நாதமுனி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு டெலிபோனில் பேசியதாகச் சொன்னான். திரும்பவும் அவன் இரண்டு மணிக்கு டெலிபோனில் அவளைக் கூப்பிட்டு கணவன் வீட்டுக்கு வந்து விட்டானா என்று விசாரித்ததாகவும், தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு தூங்கும்படிக் கூறியதாகவும் தெரியப்படுத்தினான். 

இதெல்லாம் என்ன? நாதமுனி சொன்னவை எல்லாம் பொய்யா? உயிருக்குயிராகப் பழகிய தன்னிடமே பித்தலாட்டம் செய்து விட்டானா? 

இப்படிப்பட்ட மோசமான குணம் கொண்ட ஒருவன் தனக்கு நண்பனாகக் கிடைத்தானே என்று ராஜா பெரிதும் வருத்தப்பட்டான். 

“என்ன தம்பி நான் சொல்லுவது காதுகளில் விழுகிறதா? நித்தியகலாவின் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையே! சதாவும் மகிழ்ச்சியுடனேயே வாழ வேண்டும் என்று எண்ணும் அவள் ஒருபோதும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்துக் கொள்ளமாட்டாள்!” என்று அகிலாண்டம் அம்மாள் சொன்னதும் திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல் ராஜா விழித்து, “ஆமாம். ஆமாம்! அவள் தற்கொலை செய்து கொள்ளமாட்டாள்” என்று சொல்லிவிட்டு, “எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். அதாவது போலீஸார் உங்களிடம் என்ன கேட்டாலும், “தெரியாது” என்று சொல்லி விடவேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான். 

“ஏன்? எல்லாவற்றையும் நான் கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தேனே” 

ராஜா வற்புறுத்தவே அகிலாண்டம் அம்மாள் கடைசியில் சரி என்று தலையை ஆட்டினான். 

“சேதுபதி தன் வீட்டுக்கு வந்த பிறகு வேறு யாராவது அங்கே வந்தார்களா?” 

“நான் யாரையும் பார்க்கவில்லை” என்று அகிலாண்டம் அம்மாள் சொல்லிவிட்டு, நித்தியகலாவுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிந்து வந்து சொல்லும்படி வேண்டினாள். 

சேதுபதியின் வீட்டினுள் ராஜா சென்றதும், “யார்? துப்பறியும் கதை எழுத்தாளர் ராஜாவா? இங்கேயும் உம்முடைய திருவாயைத் திறக்கலாம் என்று வந்தீரோ? நித்தியகலாவிடம் நீர் எதுவுமே பேசக்கூடாது. பேசினால் உடனே உம்முடைய கைகளில் விலங்கு ஏறிவிடும்” என்று கூடத்தினுள் நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சொன்னார். 

“நான் எதற்காக நித்தியகலாவுடன் பேசப் போகிறேன். என்னுடைய ஆபீஸ் சோதனை இடப்பட்டு இருப்பதாலும், வாட்ச்மேன் ஜம்புலிங்கம் கொலை செய்யப்பட்டு இருப்பதாலும் மனம் சரியில்லாமல் அலைந்து கொண்டே இருக்கிறேன்” என்று சொன்ன ராஜா எதைப் பற்றியும் கவலைப்படாதவனைப்போல் படுக்கையறையை நோக்கி நடக்கலானான். 

11. துயில் நீங்காத நித்திய கலா! 

பெரிய மேதை என்று மனத்திற்குள்ளாக நினைத்துக் கொண்டு இருக்கிறீர் போல் இருக்கிறது. நான் சொல்லுவது காதுகளில் விழவில்லையா?’ என்று சொல்லிவிட்டு ராஜாவின் பின்னால் வேகமாக வந்தார் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி. 

“இது என் நண்பரின் வீடு. ஒரு சக எழுத்தாளரின் மனைவி அபாய நிலையில் இருக்கிறாள். எனவே எங்கே வேண்டுமானாலும் போய் விட்டு வருவதற்கு உரிமை இருக்கிறது” என்று தன் உரிமையை நிலைநாட்டிய ராஜா, “நித்தியகலாவிடம் பேசினால் தானே என் கைகளில் விலங்கேறும்! பார்க்கக்கூடாது என்று நீங்கள் சொல்ல வில்லையே!” என்று சிரித்தான். 

சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி முகத்தைச் சுழித்துக் கொண்டார். 

“நீர் பார்க்கக்கூடாது” என்றார் அவர். 

“காரணம்? நானும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் குடிமகனில் ஒருவன் தான்.” 

“எனக்கும் தெரியும். ஆனால்..?” என்று சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சற்று சுருதியைக் குறைத்து கொண்டு, “நான் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால் அருளானந்தம் சார் டாக்டர் சாமுவேலிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்” என்று சொன்னார். 

“சண்டையா? அப்படியானால் சமாதானத் தூதனாக அங்கே போகிறேன்.” 

“மிஸ்டர்! நான் சொல்லுவதைக் கேளுங்கள்.”

“ஸாரி சார்! நித்தியகலாவின் முகத்தைப் பார்த்து விட்டு நொடிப் பொழுதில் வந்து விடுகிறேன்.” 

ராஜா வேகமாக நடந்து சென்று படுக்கை அறையின் பக்கமாகத் திரும்பினான். இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தின் கனத்தக் குரல் மிகவும் தெளிவாகக் காதுகளில் ஒலித்தது. 

“டாக்டர் சார் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள். இந்தப் பெண்ணின் வாக்குமூலம் மிகவும் முக்கியமானது. அவளுடைய கணவன் செத்துவிட்டான்! கொலையுண்டு விட்டான். 

”அப்படியா? ஐ ஆம் வெரி ஸாரி! ஆனாலும் இப்பொழுது நித்தியகலா கிடக்கும் சூழ்நிலையிலும் உடல் நிலையிலும் தன் கணவன் இறந்து போன அதிர்ச்சியான செய்தியை நித்தியகலாவால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் அவளுடைய குடும்ப டாக்டர் என்ற முறையில் சொல்லுகிறேன். அந்த நோயாளியின் உயிரைக் காக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது. இது என்னுடைய கடமை!” என்று சொன்ன டாக்டர் சாமுவேல், ஒருமுறை தன் வழுக்கைத் தலையை 

இடது கையினால் தடவிவிட்டு வலது கையிலிருந்த ‘சிரிஞ்சி’யினால் ‘இஞ்சக்ஷன்’ போடுவதற்கு நித்தியகலாவின் புஜத்தைப் பிடித்தார். 

இன்னும் சில மணி நேரத்துக்கு அவளைத் தூங்க வைக்கக் கூடிய இஞ்சக்ஷன் மருந்து அது! எனவே, பல மணி நேரம் அவளுக்காகக் காத்துக் கொண்டு இருக்க நேரிடுமே என்று எண்ணி இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கடுமையான ஆத்திரத்தோடு துள்ளினார். 

“இந்த இஞ்சக்ஷனை நீங்கள் போடவே கூடாது!” 

“இஞ்சக்ஷன் போட வேண்டுமா; வேண்டாமா என்பது எனக்குத் தெரியும். நோயாளியின் உடல் நிலையை மனத்தில் கொண்டு இஞ்சக்ஷன் போட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அறையில் கூட உங்களை அனுமதிக்க முடியாது.” 

டாக்டர் சாமுவேல் மிகவும் கண்டிப்பாகச் சொன்னார். அவர் யாரைக்கண்டும் பயப்படக் கூடியவராகத் தெரியவில்லை. வயது ஐம்பதைத் தாண்டிய போதிலும் தலை வழுக்கை விழுந்த ஆண் சிங்கம் போலவே காட்சி அளித்தார். 

“டாக்டர் சார்” 

“எக்ஸ் கியூஸ் மீ?” 

“எங்கள் விவகாரத்தில் தலையிட்டால் உங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நேரிடும்.” 

“தலையிடுவது யார் என்பது உங்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. ஐ……ஆம்…… ஸோ…. ஸாரி! என்னுடைய பேஷன்ட் நித்தியகலா! நீங்கள் வருவதற்கு முன்னாலேயே அவளுக்கு நான் ‘டிரீட்மென்ட்’ செய்து கொண்டு இருக்கிறேன்!” என்று சொன்ன டாக்டர் சாமுவேல், சிறியதொரு பஞ்சை எடுத்து நித்தியகலாவின் இடது புஜத்தின் கீழ் சுத்தம் செய்து விட்டு ஊசியை அந்தப் பகுதியில் ‘சுருக்’ என்று குத்தி ‘இஞ்சக்ஷன்’ செய்துவிட்டு சிரிஞ்சியை எடுத்தார் பின் ஊசி குத்திய இடத்தை கையினால் பிதுக்கிவிட்டார். 

துணிச்சல் நிறைந்த டாக்டர் சாமுவேலை வாய் விட்டுப் பாராட்ட வேண்டும் போல் இருந்தது ராஜாவுக்கு! ஆயினும் இன்ஸ்பெக்டர் அருளானந்தத்தின் ஆத்திரம் தன் மீது திரும்பி விடுமே என்பதால் மௌனமாக வேடிக்கை பார்த்தபடி கதவுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தான். 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கைகளைப் பிசைந்து கொண்டார். நோயாளியின் உடல் நிலையை அனுசரித்து சிகிச்சை செய்வது டாக்டரின் உரிமை என்பதால் அவரால் நேரடியாக அதில் குறுக்கிட இயலவில்லை. 

இந்த நேரத்தில் அவர் ராஜாவைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய ஆத்திரம் பொங்கியது. 

“இங்கேயும் வந்து விட்டீர்களா? ராஜா! உங்களை இங்கே வரச் சொன்னது யார்?” 

“இறந்துபோன சேதுபதி என்னிடம் உதவி தேடி வந்த புதிய நண்பன். ஆனால் நான் இங்கே வந்ததில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் எதுவும் இல்லையே!” என்று சொன்ன ராஜா, டாக்டர் சாமுவேலின் முகத்துக்கு நேராகத் திரும்பி, ”டாக்டர் சார்! நித்தியகலாவின் உடம்பு எப்படி இருக்கிறது? பயப்படும்படியாக ஒன்றும் இல்லையே!” என்று அதிகப்படியான அக்கறை உள்ளவனைப் போல் விசாரித்தான். 

“இல்லை இன்னும் ஆறு மணி நேரம் கழிந்தால் அவள் கண் விழிப்பாள். ஆனால் அவளுடைய உடல் நிலையை அனுசரித்துத்தான் கணவன் இறந்து போன அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல முடியும். அவள் உடல் நிலை இடம் கொடுக்காவிட்டால் எதுவுமே பேசாமல் இருந்து விடுவது தான் நல்லது” 

டாக்டர் சாமுவேல் இப்படிச் சொன்னதும், இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கை முஷ்டியை மடக்கி சுவரில் குத்திக் கொண்டார். ஆ னால் ராஜாவுக்கு அது கொண்டாட்டமாக இருந்தது. 

நித்தியகலா கண் விழித்து விட்டால் போலீஸார் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளைத் துளைத்து எடுத்து விடுவார்கள். அவள் எதையாவது உளறி விட்டால் அது தன் நண்பன் நாதமுனிக்கு ஆபத்தாக முடிந்துவிடும். நாதமுனி கொலையாளியா: இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையில் அதி தீவிரமான வழிகளை எல்லாம் கையாண்டே தான் ஆக வேண்டும். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின் தங்கக்கூடாது. இவ்வாறு ராஜா தீர்மானித்துக் கொண்டான். 

“டாக்டர் சார்! சேதுபதியின் நண்பன் என்ற முறையில் பேசுகிறேன். நித்தியகலாவுக்கு சுய உணர்வு வந்ததும் போலீஸார் கேள்விமேல் கேள்விகள் கேட்டுத் திணறடித்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்கேயே நீங்களும் இருக்கிறீர்களா?” 

“அது தேவை இல்லை என்று நினைக்கிறேன். எனக்குப் பதிலாக வேலையில் கண்டிப்பு நிறைந்த என்னுடைய நர்ஸ் அருகில் இருந்து நோயாளியைக் கவனித்துக் கொள்வாள்.” 

டாக்டர் சாமுவேல் சொன்னதைக் கேட்டதும், தனக்கு வெற்றி கிடைத்து விட்டதைப் போல் ராஜா அகமகிழ்ந்தான். 

தங்கள் வேலை பாதிக்கப்படுவதற்கு ராஜா தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்ட இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவன்மீது சீறி, “துப்பறியும் எழுத்தாளரே! டாக்டர் உம்மிடம் யோசனை கேட்கவில்லை. அனாவசியமாக நீர் எங்கள் விஷயத்தில் தலையிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? கைவிலங்கு இன்னும் எங்களிடத்தில் பத்திரமாகத்தான் இருக்கிறது” என்று மிகவும் கடுமையாக எச்சரித்தார். 

“கைவிலங்கு உங்களிடம் பத்திரமாக இருக்கலாம். அதே நேரத்தில் நீதிமன்றம் என்று ஒன்று இருப்பதையும் மறந்து விட வேண்டாம்.” 

ராஜாவும் போலீஸாரின் மிரட்டலைக் கண்டு தளர்ந்து விடவில்லை. 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் அவனை மிகவும் கடுமையாக முறைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து. ‘டாக்டர் சார்! இந்தக் கொலையில் நித்திய கலாவின் வாக்குமூலம் தான் அவசரமாகத் தேவைப்படுகிறது. அவள் வாய் திறந்து பேசிவிட்டால் உடனே கொலையாளியைக் கைது செய்து விடுவோம்” என்றார். 

“உங்கள் நிலைமையை நான் உணர்ந்து இருக்கிறேன். அதே நேரத்தில் என் நோயாளியின் உடல் நிலையையும் கவனிக்க வேண்டும்.” 

“ஏதோ சார்! சீக்கிரமாக எங்களுடன் ஒத்துழைத்தால் நல்லது” 

“என்னால் முடிந்த வரையில் கவனிக்கிறேன்” என்று சொன்ன டாக்டர் சாமுவேல், தன்னுடைய சிறிய தோல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டதும், ராஜாவும் அவரைப் பின் தொடர்ந்து போனான். 

தன்னுடைய சிறிய கார் வரையில் பின்னால் திரும்பிப் பார்க்காமலேயே நடந்து சென்ற டாக்டர் சாமுவேல், சார்” என்று அழைக்கும் குரலைக் கேட்டுத் திரும்பினார். 

ராஜா எதிரில் வந்து, “மன்னிக்கணும் சார்! நித்தியகலாவின் உடல் நிலை உண்மையிலேயே அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?” என்று கேட்டான். 

“அவள் தூக்க மாத்திரைகளை வழக்கத்திற்கு அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறாள். ஆனாலும் அது பயப்படும்படியாக எதுவும் இல்லை. நான் இஞ்சக்ஷன் மட்டும் போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் படுக்கையில் இருந்து எழுந்திருந்து இருப்பாள். நீங்கள் டெலிபோனில் கேட்டுக் கொண்டதை அனுசரித்துத்தான் இஞ்சக்ஷன் போட்டு மறுபடியும் தூங்க வைத்தேன். இனி சில மணி நேரம் வரையில் சம்பந்தப்பட்ட எல்லோருமே அமைதியாக இருக்கலாம்.” 

“தேங்க்யூ சார்! நிரபராதியான ஒருவன் தண்டனையை அனுபவித்து விடக் கூடாதே என்பதற்காகத் தான் உங்களிடம் அப்படிக் கேட்டுக் கொண்டேன்.” 

காரின் டிரைவர் ஆசனத்தில் டாக்டர் சாமுவேல் ஏறி உட்கார்ந்து கொண்டார். 

அவருடன் பேசுவதற்காக எதிரில் இருந்த கதவு ஜன்னலில் முகத்தை நீட்டியவாறு இரண்டு கைகளையும் நாடிக்குத் தாங்கலாக வைத்தபடி ராஜா தயாராக நின்று கொண்டு இருந்தான். எப்படியாவது தன்னுடைய ரகசியத் திட்டத்தை விளக்கியாக வேண்டுமே. 

“சேதுபதியின் மரணம் எப்படித்தான் நடந்தது?” என்று அவனுடைய குடும்ப டாக்டரான சாமுவேல் விசாரித்தார். 

“நீங்கள் அது தற்கொலையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா டாக்டர் சார்!” 

“என்னால் அப்படிக் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. அவன் மற்றவர்களை மிரட்டிப் பயமுறுத்துவானே தவிர தன்னுடைய உயிரை மட்டும் ஒரு போதும் மாய்த்துக் கொள்ளமாட்டான்.” 

“நித்தியகலா அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டதாகச் சொன்னீர்களே; அவள் அவ்விதம் செய்யக் காரணம் என்ன? வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருப்பாளா?” 

“சேதுபதியை அவள் என்றைக்குத் திருமணம் செய்து கொண்டாளோ, அன்று முதலே அவளுடைய வாழ்க்கையில் சுவாரசியம் இல்லாமல் தான் இருந்தது. கணவன் மனைவிக்கிடையே ஒருநாள் கூட நிம்மதி இருந்தது இல்லை. ஆனாலும் நித்தியகலா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவள் அல்ல. 

“வாழ வேண்டும் என்ற ஆசைத் துடிப்புகள் அவளுக்கு ஏராளம் உண்டு” 

“நேற்றைக்கு அவள் உத்தேசமாக எத்தனை தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு இருப்பான்?” 

“உத்தேசமாக ஆறு மாத்திரைகள் இருக்கலாம். இரண்டு மாத்திரைகள் மட்டுமே சாப்பிடலாம் என்பது என்னுடைய ஏற்பாடு,” 

“அளவுக்கு மீறிய மாத்திரைகளை அவள் சாப்பிட வேண்டிய அவசியம் என்ன?” 

“கவலை நெஞ்சை அழுத்தி இருக்கும். அதனால் அவள் படுத்தவுடன் தூங்க நினைத்து இருப்பாள்.” 

“நல்ல வேளையாக நித்தியகலா உயிர் பிழைத்துக் கொண்டாள். இன்னும் சற்று அதிகமாகச் சாப்பிட்டு இருந்தால் விடிந்தவுடன் அவளுடைய பிணத்தைத் தான் நம்மால் பார்த்திருக்க முடியும்” என்று சொன்ன ராஜா, “மாத்திரைகளை அளவோடு கொடுப்பதற்கு நீங்கள் நம்பிக்கை உள்ள யாரையாவது நியமித்தால் என்ன?” என்று கேட்டான். 

“ஒரு நர்ஸை இங்கே அனுப்பப் போவதாகச் சொன்னேனே. அதன் உட்கருத்து இதே தான். நித்தியகலா உயிர் வாழ வேண்டுமானால் உடனடியாக ஓர் ஆள் தேவை. அந்த ஆள் ஒரு பெண்ணாக இருந்தால் மிகவும் நல்லது.” 

“நர்ஸை வைத்துச் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு நித்திய கலாவுக்கு வசதியுண்டா?” 

“அவள் ஏற்கனவே பணத்தை உல்லாசமாகச் செலவழிக்கக் கூடியவள் என்பது உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது. அவளால் பணக்காரனாகலாம் என்று ஆசைப்பட்டுத்தானே சேதுபதி அவளைக் கல்யாணம் செய்து கொண்டான்!” என்றார் டாக்டர் சாமுவேல். 

தன்னைப்பற்றி அவர் வித்தியாசமாக நினைத்துக் கொள்வாரோ என்று எண்ணிய ராஜா, “ஆமாம்…..ஆமாம் நான் ஏதோ ஒரு நினைவில் அப்படிக் கேட்டுவிட்டேன். நித்தியகலா பணத்தை தண்ணீராக மதிப்பவள் தான்!” என்று சொன்னவன், “நர்ஸுக்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா?” என்று நிறுத்தினான். 

“என்னுடைய ‘டிஸ்பென்சரி’யில் ஒரே ஒரு நர்ஸ் மட்டும் தான் இருக்கிறாள். அவளுக்கு அங்கேயே வேலை சரியாக இருக்கும் இருந்தாலும் வேறு நர்ஸுக்கு முயற்சி செய்கிறேன். நித்தியகலாவைக் கவனிப்பதற்கும், போலீஸாரால் அவள் தொந்தரவு செய்யப்படாமல் பார்த்துக் கொள்வதற்கும் ஒரு பெண் தேவை. அந்தப் பெண் முதலுதவி பரீட்சையில் தேறியவளாகவும் இருக்க வேண்டும்.” 

டாக்டர் சாமுவேல் இப்படிச் சொன்னதும், ராஜாவுக்கு ஒரு யோசனை சட்டென்று உதயமாகியது. 

”சார். நான் ஒரு பெண்ணை அனுப்பினாலும் ஏற்றுக் கொண்டு நித்தியகலாவுக்கு உதவியாக இருக்க ஏற்பாடு செய்வீர்கள் அல்லவா?” 

உடனே டாக்டர் சாமுவேலின் முகம் மலர்ந்தது. 

“நீங்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்தப் பெண் போலீஸாரைக் கண்டதும் மிரண்டுவிடாமல் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.” 

“அவள் ரொம்பவும் கெட்டிக்காரியாக இருப்பாள். கடமையை நிறைவேற்றுவதில் எவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்தாலும் சோர்ந்துவிட மாட்டாள்.” 

“வெரி குட்! அவளையே நாம் ஏற்பாடு செய்வோம்” என்று சொன்ன டாக்டர் சாமுவேல், “நாதமுனியும் இந்தக் கொலை விவகாரத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறானா?” என்று மெதுவாகக் கேட்டார். 

“ஏறத்தாழ சிக்கிக் கொண்டதைப் போல் தான். அதனால் தான் நான் இரவு முழுதும் தூங்காமல் சேதுபதியைக் கொலை செய்தது யாராக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறேன்” என்றான் ராஜா. 

“நாதமுனி தான் இவ்வளவு அசம்பா விதங்களுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். அவன் அடிக்கடி நித்தியகலாவைப் பார்க்க வந்தது கடைசியில் பெரும் குழப்பத்தையே உண்டு பண்ணிவிட்டது!’ என்றார் டாக்டர் சாமுவேல். 

“உங்கள் டிஸ்பென்சரிக்குக் கூட நாதமுனியும் நித்தியகலாவும் ஜோடியாக வந்து இருக்கிறார்களா?” 

“டிஸ்பென்சரிக்கு மட்டுமல்ல, அவர்கள் ஜோடியாகப் போகாத இடம் சென்னையில் என்ன இருக்கிறது? சினிமாவுக்கும் இரண்டு பேர்களும் தான் போவார்கள்! பீச்சுக்கும் இரண்டு பேர்களும் தான் போவார்கள்!” என்று சொன்ன டாக்டர் சாமுவேல், விரும்பத் தகாத ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டதைப் போல் முகத்தைச் சுழித்துக் கொண்டார். 

“சேதுபதி-நித்தியகலா ஆகியோரின் தாம்பத்திய வாழ்க்கை சீர்குலைவதற்கு இந்த நாதமுனி தான் காரணம் என்று சொல்லுங்கள்.” 

“நிச்சயமாக! அவன் நல்லதையே நினைக்கும் ஒழுக்கம் உள்ள வாலிபனாக இருந்தால் நித்தியகலாவுக்கு அவன் புத்தி சொல்ல வேண்டும். கணவனுடன் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அவனை அவள் பின்னால் சுற்றினான் என்றால் அதைவிடவும் வெட்கக்கேடு வேறென்ன இருக்கிறது?” 

சற்று எரிச்சலுடன் இவ்விதம் சொன்ன டாக்டர் சாமுவேல், காரை ‘ஸ்டார்ட்’ செய்து கொண்டு, “நீங்கள் சொன்ன பெண்ணைச் சீக்கிரமாக அனுப்பி வையுங்கள். நாம் மறுபடியும் சந்திக்கலாம்” என்று கூறிவிட்டுக் காரைக் கிளப்பிச் சென்றார். 

அடுத்தவன் மனைவியுடன்-அதுவும் நண்பன் மனைவியுடன் அதுவும் சக எழுத்தாளன் மனைவியுடன் நாதமுனி காதல் லீலைகள் நடத்தி இருக்கிறானே என்பதை நினைத்த போது ராஜாவுக்குத் தாங்க முடியாத வேதனையாக இருந்தது. 

தன் மனைவி மோசமாக நடக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும் அவளுடைய கணவன் சேதுபதி அவ்வளவையும் சகித்துக் கொண்டு இதுவரையிலும் வாழ்ந்து வந்தான் என்றால் அவனுடைய பொறுமையை என்னவென்பது? 

ராஜா தன் நண்பன் நாதமுனியின் கெட்ட நடத்தையை நினைத்து வருந்தியவனாய் பக்கத்து வீட்டைப் பார்த்தான். 

அங்கே அகிலாண்டம் அம்மாளை இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கேள்வி மேல் கேள்விகள் கேட்டுத் திக்குமுக்காட வைத்துக் கொண்டு இருந்தார். 

அவள் ஏதேதோ பதில் சொன்னாள். எல்லாம் நித்தியகலாவையும் சேதுபதியையும் இணைத்துப் பேசுவதைப் போலவே இருந்தன. ஆனால் வார்த்தைகள் மட்டும் தெளிவாக வந்து ராஜாவின் காதுகளில் ஒலிக்க வில்லை! 

12. சூழ்ச்சி வலை! 

ஒரே ஒரு இரவு தான் கழிந்தது. அதற்குள் எத்தனையோ இரவுகளையும், பகல்களையும் கழித்து விட்டதைப் போன்றதொரு பிரமை ராஜாவுக்கு ஏற்பட்டது. 

முன் தினம் மாலையில் தான் தன் காரியதரிசினியும் காதலியுமான பானுவை அவன் பார்த்து இருந்தான். அவள் கோபித்துக் கொண்டு வீட்டுக்குப் போகவும் செய்தாள். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டதைப் போன்ற உணர்வு தான் இப்பொழுது அவன் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. 

டாக்சிக் கார் ராஜாவைச் சுமந்த வண்ணம் அவன் சுட்டிக் காட்டிய தெருக்கள் வழியாக ஓடிக் கொண்டு இருந்தது. அவன் நெஞ்சில் பானுவைப் பற்றிய பசுமையான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருந்தன. 

பானு இளமை சொட்ட-பருவம் எழில் கோலம்போட பூவிரி இதழ் சிறக்க என்னமாய்ச் சிரிப்பாள்! மேனி குலுங்க-இடுப்பு அசைய கைகளை வீசியவாறு எவ்வளவு லாவகமாக நடந்து வருவாள்! முன்னழகும் பின்னழகும் ஒன்றோடொன்று எவ்விதமாகப் போட்டி போடும்! மையுண்டு நிற்கும் அகலமான விழிகளை எவ்வளவு கவர்ச்சியாகச் சுழற்றுவாள்! 

அப்படிப்பட்ட அழகுச் சிலையான பானுவை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கப் போகிறோமே என்பதை நினைத்த போது ராஜாவின் உள்ளம் ஊஞ்சல் கட்டி ஆடியது. அந்த ஊஞ்சலில் பானுவும் அவனும் உட்கார்ந்து தெம்மாங்கு பாட்டுப் பாடிக் கொண்டே ஆடுவதைப் போன்ற ஒரு பிரமை. 

“டிரைவர்! காரைக் கொஞ்சம் பின்னால் ஓட்டு. இரண்டு மூன்று வீடுகளைக் கடந்து வந்து விட்டோம்!” என்றான் ராஜா. காதல் மயக்கத்திலேயே இருந்த அவனுக்கு பானுவின் வீடு கூடச் சரியாகத் தெரியவில்லை. 

டாக்சிக் கார் தனியாக இருந்த சிறியதொரு வீட்டின் எதிரில் வந்து நின்றது. 

ராஜா பணத்தைக் கொடுத்து காரை அனுப்பிவிட்டு வீட்டை நோக்கி ஓடினான். 

வழக்கமாக பானு ஆபீஸ் நேரமாகிய பத்து மணிக்குத்தான் வருவாள். இன்றைக்கு அந்தக் குளிர் நிலவின் முக தரிசனத்தை அதிகாலையிலேயே பெறப் போகும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. 

ராஜா உற்சாக வெள்ளத்தில் மிதந்தவனாய் கதவைத் தட்டி, “பானு…பானு…” என்று கனிவாகக் கூப்பிட்டான். 

அடுத்த வினாடியே கதவு திறந்து கொண்டது. வதங்கிப் போன ரோஜா மலர் போல் பானு நின்று கொண்டு இருந்தாள்! 

தன்னுடைய குரலைக் கேட்டதுமே படுக்கையில் இருந்து பானு துள்ளி எழுந்து வந்து கதவைத் திறந்து இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட ராஜா, “காலை வணக்கம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 

பதிலுக்கு பானு சிரிக்கவில்லை. வணக்கம் சொல்லவும் இல்லை. செல்லமாகக் கோபித்துக் கொள்ளும் குழந்தையைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு மயில் போல் நடந்து போனாள். 

ராஜாவுக்கும் புரிந்துவிட்டது! முன் தினம் மாலையில் நித்தியகலாவும் தானும் இருந்த காட்சியை அவள் பார்த்து விட்டதால் இன்னும் கோபத்துடனேயே இருக்கிறாள். இரவு முழுவதும் தனக்குரிய பொருள் பறிபோய் விட்டதைப் போன்ற நிலையில் தூக்கம் வராமல் புரண்டு இருக்கிறாள் என்பதை, வீங்கிப் போயிருந்த பானுவின் கண்களும் விளறிப்போன முகமும், தள்ளாடும் நடையும் பளிச்சென்று எடுத்துக் காண்பித்தன. 

பொதுவாக எழுத்தாளர்கள் மற்றவர்களை விடவும் காதல் ரசனையில் உளறிப்போனவர்கள் ஓர் இளம் பெண்ணின் அழகையும், கவர்ச்சியையும் எத்தனையோ கோணங்களில் நின்று பார்த்து ரசித்து மகிழுவார்கள். 

அதே ரசனை உணர்வு தான் இப்பொழுதும் ராஜாவுக்கு ஏற்பட்டது. பானு குழைந்து போன மலரைப் போல் இருந்தபோதிலும் தனிக் கவர்ச்சியுடன் காட்சி அளித்தாள். 

உடனே அவள் முன்னால் ஓடி வந்து இரண்டு புஜத்தையும் ஆசையோடு பிடித்துக்கொண்ட ராஜா, “ஏன் பானு இப்படி நடந்து கொள்ளுகிறாய்? அதிகாலையில் வந்து உன் தூக்கத்தைக் கலைத்து விட்டேனே என்ற கோபமா?” என்று கைகளைச் சற்று அழுத்திக் கொண்டே கேட்டான். 

அவனுக்கா தெரியாது: பானு ஏன் இப்படிப் போகிறாள் என்று! எல்லாமே நடிப்பு பானுவைச் சிணுங்க வைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதில் ராஜாவுக்கு ஓர் இன்பம் இருக்கத்தான் செய்தது! 

அவனுடைய கைகள் பட்டதும், அந்தக் கைககளைக் கொஞ்சமும் விரும்பாதவளைப் போல் பானு நெளிந்து குழைந்து விடுவித்துக் கொண்டாள். 

“தொட்டு விளையாடுவதற்கு ஒரே ஒரு பானு தானா இருக்கிறாள்? எத்தனையோ பானுகள்!” என்று நாத்தழுதழுக்கச் சொன்ன பானு, தன் தலையைக் குனிந்து கொண்டே போய் தூணைப் பிடித்துக் கொண்டாள். 

அவள் நின்ற காட்சி இன்னும் அமோகக் கவர்ச்சியைத் தரவே, குடிபோதையில் இருப்பவனைப் போல் காதல் போதையில் ராஜா தள்ளாடிச் சென்று அவளுடைய தோள்ப்பட்டைப் பற்றி தன் முகத்துக்கு நேராகத் திருப்பினாள். 

“காலையிலேயே ஏன் இங்கே வந்து நாடகம் ஆடுகிறீர்கள்! உங்களுக்காக நித்தியகலா இல்லையா?” என்று பானு படபடத்தாள். 

பானுவுக்கும் கோபித்துக் கொள்ளத் தெரிந்தது. கத்திப் பேசவும் தெரிந்தது. அப்பொழுது அவள் முகத்தில் குவிந்து விளையாடிய இளமையின் செழிப்புத்தான் என்ன! 

கன்னத்தை கனிந்த மாம்பழமாக நினைத்து கடித்துத் தின்றுவிடலாமா என்று கூட ராஜா ஆசைப்பட்டான். 

“நித்தியகலா மட்டும் தானா? அல்லது இன்னும்…” என்று ராஜா கிண்டலாக ஆரம்பித்தான். 

பானுவை பேச வைத்து, கோபத்துடன் துடிக்கும் அவளது சிவந்த உதடுகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் உள்ளத்தில் பொங்கியது. எதற்காக இவ்வளவு காலையில் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டான். 

“நான் கண்ணால் பார்த்த வரையில் நித்தியகலா! இன்னும் எத்தனை எத்தனை ‘கலாக்கள்’ இருக்கிறார்களோ? இரவில் நான் உங்கள் பக்கத்திலா இருக்கிறேன்?” 

“அப்புறம் என்ன…?” 

பானு அவனுடைய கைகளுக்குள்ளே இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, “இன்னும் எத்தனை பெண்கள் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று என்னால் கணக்கெடுக்க முடியாது” என்று சொன்னவள், “காலையில் எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டாள். 

“எதற்காக வந்தேன் என்று சொல்லுவது இருக்கட்டும். முதலில் என்னைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய் என்பதைச் சொல்.” 

ராஜா அவளைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான், அவள் கொடிபோல் துவண்டு திமிறிய போதிலும் விடவில்லை. 

“இந்த நடிப்பை எல்லாம் நித்தியகலாவுடன் வைத்துக் கொள்ளுங்கள். புதிய காதலி என்பதால் உங்கள் போலி நடிப்பை நிஜம் என்று நம்பிவிடுவாள்.” என்ற பானு மெல்ல நழுவ எத்தனித்தாள். ஆனால்  ராஜா விடவில்லை! மல்லிகைப் பூவின் மென்மையான மணத்தைத் தரும் பூவுடல் அவனுடைய பலம் பொருந்திய கைகளுக்கு நடுவே சிறையுண்டு கிடந்தது. வலையில் பிடிபட்ட மீனைப்போல் துள்ளினாளே தவிர அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. 

என்ன இருந்தாலும் வெள்ளரிப் பிஞ்சைப் போன்ற உடம்பைக் கொண்ட பெண், பெண் தானே! 

“நான் நடிப்பது இருக்கட்டும், பானு! என்னைப்பற்றி நீ என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?” 

“அதை நேற்று மாலையிலேயே நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்களே!” 

“பானு! நீ என்னோடு இவ்வளவு பழகியும் என் குணத்தை இன்னுமா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? நான் பெண்களின் அழகை ரசிக்கும் கலைஞன் என்பது உண்மை தான். எவனுக்கு ரசனை உணர்வு அதிகமாக இல்லையோ: அவனால் வளமான எழுத்துக்களை எழுத முடியாது” என்று சொன்ன ராஜா, குலைந்து கிடந்த அவளுடைய கூந்தலோடு அணைத்து முகத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு. “என்னை நம்பியிருக்கும் உனக்கு எக்காரணத்தைக் கொண்டும் துரோகம் நினைக்கமாட்டேன். இந்த உலகத்திலேயே எனக்குச் சொந்தமாக நீ ஒருத்தி இருந்தாலே போதும்!” என்று உணர்ச்சி பொங்கும்படி கூறினான். தன்னிடம் நித்தியகலா வந்து தன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளுக்கு உதவி செய்வதாகக் கூறினால் தான் கைகளை விட முடியுமென்று பிடிவாதம் செய்ததையும் ராஜா விளக்கினான். 

பானு பெருமூச்சுவிட்டாள். இவ்வளவு சொன்ன பிறகும் அவனை நம்பாமல் இருக்க முடியுமா என்ன? 

கதவைத் திறந்து வைத்திருப்பது அதன் பிறகு தான் பானுவுக்கு நினைவு வந்தது. உடனே நாணம் மேலிட்டவளாய் உடம்பை நெளித்துக் கொண்டு, “கதவு திறந்து கிடக்கிறது” என்று சொன்னாள். 

உடனே பானுவின் உதடுகள் மூடிக்கொண்டன. 

“இங்கே யாருமே வரமாட்டார்கள்” என்று சொன்ன ராஜா அவளை அணைத்தபடியே அழைத்துச் சென்று கட்டிலின் மீது உட்கார வைத்தான். அவனும் பக்கத்திலேயே உட்கார்ந்தான். 

மிருக உணர்வினால் அவன் தூண்டப்பட்டு விட்டானோ என்று எண்ணிய பானு துணுக்குற்றவளாய், “என்ன சார் இதெல்லாம்? நாம் வெளியே போய் பேசலாம்” என்று சொன்னாள். 

“ஏன் இங்கே பேசினால் என்னவாம்? நீ அழகாய் இருக்கிறாய் என்பதால் உன்னை அப்படியே தூக்கி விழுங்கி விட மாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்த ராஜா, “நான் தன்னடக்கம் உள்ளவன். நீ நினைத்துக் கொண்டு இருக்கிறப்படி மிருகம் அல்ல!” என்றான். 

அவன் மிருகமாக இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி அவளுக்குத் தானே சொந்தம்! 

“நீங்கள் நல்லவராகத்தான் இருக்க வேண்டும். பானு கொடுத்து வைத்தவள் என்று ஊர் சொல்லுவதைத் தான் விரும்புகிறேன்,” என்று சொன்ன பானு சுய உணர்வு அடைந்தவளைப் போல், “உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கிறேன். நேற்றிரவு இன்ஸ்பெக்டர் அருளானந்தம் எனக்கு டெலிபோன் செய்தார்” என்றாள். 

ராஜா அவளை அணைத்தபடியே உட்கார்ந்து கூந்தலை வருடியபடியே, “அவர் என்ன சொன்னார்” என்று கேட்டான். 

“உங்களைப் பார்க்க யார் யார் அடிக்கடி வருவார்கள் என்று கேட்டார். விலை உயர்ந்த பொருட்களாவது, முக்கியமான ‘டாக்குமென்டு’களாவது. பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டிய ரகசியச் செய்திகளாவது நம் ஆபீஸில் இருக்கிறதா என்றும் விசாரித்தார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எதற்காக அவர் இப்படி எல்லாம் கேட்க வேண்டும்?” 

இன்ஸ்பெக்டர் அருளானந்தம் தன்னுடைய காரியதரிசினியான பானுவையும் விட்டு வைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட ராஜா “அவர் வேறு ஏதாவது உன்னிடம் சொன்னாரா?” என்று கேட்டான். 

“இல்லை” என்றாள் பானு. 

“அப்படியானால் மிகவும் அதிர்ச்சியான செய்தியை நான் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். நம்முடைய ஆபீஸில் உள்ள பொருட்கள் எல்லாம் சோதனை இடப்பட்டு இருக்கின்றன. அதுவுமல்லாமல் நம்முடைய ‘வாட்ச்மேன்’ ஜம்புலிங்கம் நேற்றிரவு கொலை செய்யப்பட்டு விட்டான்.” 

“என்னது கொலையா?” என்று அலறிய பானு, பயந்துபோய் அவனுடைய கழுத்தோடு சேர்த்துக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். 

“கொலை தான்! நம்முடைய ஆபீஸைச் சோதனையிட்ட அதே மர்ம மனிதனால் அவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.” 

சிறிது நேரம் வரையில் அவனுடைய நெஞ்சோடு கிடந்து மூச்சுத் திணறுவதைப்போல் தத்தளித்த பானு “உங்களைத் தேடிக்கொண்டு அந்த சாகஸக்காரி நித்தியகலா வந்தபோதே நினைத்தேன். நான் நினைத்தது சரியாகிவிட்டது” என்று விம்மினாள். 

“அவளுடைய வருகைக்கும் நம்முடைய ஆபீஸ் காவற்காரன் ஜம்புலிங்கத்தின் மரணத்துக்கும் சம்பந்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை!” 

“நமக்கு எதற்கு இந்த வீண் வம்பெல்லாம்? நம்முடைய வேலையை மட்டும் ஒழுங்காகக் கவனித்து வந்தால் நிம்மதியாகக் காலத்தைக் கடத்தலாம். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பரோபகார சிந்தனையால் தானே இந்த வீண் விவகாரம் எல்லாம்” என்று பானு பதறினாள். 

உன் சொற்படியே நான் சுயநலவாதியாக இருந்து இருப்பேன். ஆனால் என் நண்பன் நாதமுனிக்காக எண்ணத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.” 

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” 

“நித்தியகலா தன் கணவனின் பிரச்சனையில் வெறுப்படைந்து விட்டாள். அந்தக் கவலையினால் தான் நேற்றைக்கு அவள் அலை பாய்ந்து கொண்டு இருந்தாள். அதே நேரத்தில் அவன் நாதமுனியைக் காதலிக்கிறாள் என்று தெரிகிறது!” 

ராஜா இப்படிச் சொன்னதும். சலங்கை மணி குலுங்கியதைப்போல் பானு சிரித்துவிட்டாள்! கணவனை வைத்துக் கொண்டே இன்னொருவனைக் காதலிப்பதற்கு எந்த நல்ல மனைவிக்கு மனம் வரும்? 

“நாதமுனியும் அவளை…” என்று அதற்குமேல் கேட்பதற்கு பானுவுக்கு வெட்கமாக இருந்தது. 

“இருக்கலாம்! யார் கண்டது? காதலுக்குத்தான் கண் மூக்கு தெரியாதாமே!” என்று சொன்ன ராஜா, “இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் சொல்லுகிறேன் கேள்! நித்தியகலாவின் கணவன் சேதுபதியும் நேற்றிரவு கொலை செய்யப்பட்டான்” என்றான். 

அந்த கோரச் செய்தியைக் கேட்டு மறுபடியும் அவனுடைய கழுத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள் பானு. 

உண்மையிலேயே எனக்குப் பயமாக இருக்கிறது. நம்முடைய துப்பறியும் கதைகளில் வரும் கொலைகளைப் போல் இந்தக் கொலைகளும் பயங்கரமாக இருக்கின்றன. 

“நித்தியகலாவின் கணவனும், ஜம்புலிங்கமும் ஒரே இரவில் கொலை செய்யப்பட்டு இருப்பதால் நாம் அதை அலட்சியமாக நினைத்து விட்டுக்கொண்டு இருக்க முடியாது. இந்தக் கொலைகள் விவகாரத்தில் நாதமுனியும் சிக்கி இருக்கிறான். அவன் தான் கொலை செய்திருப்பானோ என்று சந்தேகிப்பதற்குச் சில ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.” 

அதைக் கேட்டதும் பானுவின் மிருதுவான மேனி புல்லரித்தது. நல்லவன் என்று கருதப்படும் ஒருவன் கொலை செய்யக் கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான் என்றால்…? 

“நீங்கள் சொல்லுகிறபடி நித்தியகலாவின் மீது நாதமுனி ஆசை வைத்து இருப்பவராக இருக்கலாம். ஆனால் அவளுடைய கணவனைக் கொலை செய்திருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்றாள் பானு. 

“நாதமுனியின் நிலை தர்ம சங்கடமாகவே இருக்கிறது. போலீஸாரின் சந்தேகம் முழுக்க முழுக்க அவன் மீதே திரும்பி இருக்கிறது.” 

“நல்ல வேளை! நேற்று மாலையில் நீங்களும் நித்தியகலாவும் நடந்து கொண்ட விதத்தைப் போலீஸார் பார்த்திருந்தால் அவர்களது சந்தேகம் உங்கள் மீதும் திரும்பி இருக்கும்.” 

பானு இவ்விதம் குத்தலாகச் சொல்லிவிட்டு “உங்கள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் இல்லையே!” என்று கேட்டாள். 

அவன் முன் தினம் இரவில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் அவளிடம் சொன்னான். சேதுபதி தன்னுடைய வீட்டுக்கு வந்தது முதல், அகிலாண்டம் அம்மாளிடம் பேசியது வரையிலுள்ள எந்த விபரத்தையுமே அவன் மறைக்கவில்லை. 

எல்லாவற்றையும் நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக் கொள்ளப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு இருந்த பானு “உண்மையிலேயே நிலவரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த ஆபத்தான கண்டத்தில் இருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்ளப் போகிறோமோ என்று தெரியவில்லை!” என்று சன்னமான குரலில் நடுங்கும் தொனியோடு சொன்னாள். 

“இப்போது நித்தியகலா தன் வீட்டில் மயக்க மூர்ச்சையில் கிடக்கிறாள். அவள் கண் விழித்துக் கொண்டதும் போலீஸாரிடம் என்ன சொல்லப் போகிறாளோ, அதைப் பொறுத்துதான் எல்லாமே இருக்கின்றன. அகிலாண்டம் அம்மாள் சொன்னது போல் சேதுபதி, ராஜாத்தியின் வீட்டிலிருந்து நேராகத் தன்னுடைய வீட்டுக்கு வந்திருப்பதால் யார் பொய் சொல்லுகிறார்கள் என்பது பெரும் சிக்கலாகிவிடும்.” 

“ஒருவேளை நித்தியகலா, நாதமுனியிடம் வேண்டும் என்றே பொய் பேசி இருக்கலாம். நாதமுனியும் உங்களிடம் கட்டுக்கதையைக் கட்டிவிட்டு இருக்கலாம்” என்றாள் பானு. 

அவள் சொன்னது குழம்பிப் போயிருந்த ராஜாவின் சிந்தனையைத் தூண்டிவிட்டது. 

“நீ சொல்லுவது உண்மையைப்போல் தோன்றினாலும் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒருவேளை நித்தியகலா வீட்டில் இல்லாமல் இருந்து தன் கணவன் வீட்டுக்கு வந்தது அவளுக்குத் தெரியாமல் இருந்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவள் தன் கள்ளக்காதலன் நாதமுனியோடு எங்கேயாவது போய் உற்சாகத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டு இருக்கலாம் கணவன் வீட்டினுள் இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருக்கும்போது மனைவி கள்ளக் காதலனுடன் குதூகலமாக விளையாடிக் கொண்டு இருந்தாள், எவ்வளவு மோசமான மனிதர்கள் என்று பார்த்தாயா? சை! நாதமுனியை என் நண்பன் என்று சொல்லிக் கொள்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது!” என்றான் ராஜா. 

“நீங்கள் இதை நாதமுனியிடம் நேரடியாகவே கேட்டு இருக்கலாமே! உங்களிடம் அவர் எல்லாவற்றையும் ஒளிக்காமல் சொல்லிவிடுவார். நீங்களும் அவரும் சாதாரண நண்பர்களைப் போலவா பழகி இருக்கிறீர்கள்? இரண்டு பேர்களும் ‘அடா புடா’ என்று அதிக உரிமையுடன் பேசிக் கொள்வீர்களே” 

ராஜா சலித்துக் கொண்டவனாய், “அந்தத் தடியனிடம் பல முறை கேட்டுப் பார்த்துவிட்டேன் நித்திய கலாவை காதலி என்று சொல்ல மறுக்கிறான். அவனும் அவளும் அண்ணன் தங்கை போன்றவர்களாம்” என்று உள்ளப் பொருமலோடு சொன்னான். 

“அவர் சொல்லுவதிலும் விஷயம் இருக்கும். ராஜா! ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுகிறார்கள் என்றால் உடனே நாம் அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் கூடாது. நாதமுனி அவளைத் தங்கையாக நினைத்துப் பாவித்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று நாதமுனிக்காகப் பரிந்து பேசினாள் பானு. 

“என்னால் எந்தவிதமான முடிவுக்குமே வர முடியவில்லை. நித்தியகலா மீது அவன் செலுத்துகிற அன்பு சகோதர வாஞ்சையைப்போல் எனக்குத் தோன்றவில்லை.” 

“உங்களுக்கு எப்பொழுதுமே சந்தேகம் தான்! நம்மைப் போல் எல்லோருமே இருந்து விடுவார்கள் என்று நினைத்து வீட்டீர்கள் போலிருக்கிறது” என்று சொல்லி அவனுடைய வாயை அடைத்த பானு, “சேதுபதி யாரோ ஒரு பெரிய பணக்காரரை ‘பிளாக் மெயில்’ பண்ணிப் பணம் சம்பாதிக்கப் போவதாகவும், அவரைப் பற்றிய அந்தரங்கச் செய்திகள் சேகரித்து வைத்து இருப்பதாகவும் சொன்னீர்களே! அது என்னவாயிற்று? தன்னுடைய செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் தலைகுனிய வைத்துவிடுவார் என்பதால் சேதுபதியை அந்த பெரிய மனிதரே கொலை செய்து இருப்பாரோ?” என்று கேட்டாள். 

அவள் சொன்னது ராஜாவைச் சிந்திக்க வைத்தது. சேதுபதியின் கொலைக்கு இந்த பெரிய மனிதனும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றே தோன்றியது. 

“நம் காவற்காரனான ஜம்புலிங்கத்தைக் கொலை செய்ததும், நம் ஆபீஸ் அறைகளைச் சோதனையிட்டதும் அந்த பெரிய மனிதனின் வேலையாக இருக்கலாம். ரகசியச் செய்தியைக் கொண்ட குறிப்புகள் ஏதாவது நம்முடைய ஆபீஸில் இருக்கலாமோ என்று நினைத்து பெரிய மனிதரின் ஆட்கள் அந்த வேலை செய்து இருப்பார்கள்” என்றாள் பானு. 

“நீ சொல்லக்கூடிய எதையுமே என்னால் புறக்கணிக்க முடியவில்லை பானு.” 

“கடைசியாக நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? எல்லாவற்றையும் போலீஸ் பொறுப்பிலேயே விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டால் என்ன? நீங்கள் போய்க் கொண்டு இருக்கிற வேகம் கடைசியில் உங்களுக்கே ஆபத்தாக வந்து முடியலாம்.” 

“அதை நான் உணருகிறேன். இருந்தாலும் நாதமுனி நல்லவனா, கெட்டவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையில் கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்றே நினைக்கிறேன்.’ 

“இவ்வளவு சிக்கல்களை வைத்துக் கொண்டு உங்களால் எப்படி வெற்றி தேட முடியும் என்று எனக்குப் புரியவில்லை. சேதுபதி விவாகரத்து சம்பந்தமாக வந்து உங்களைப் பார்த்து விட்டுப் போனதாக போலீஸ் அதிகாரியிடம் பொய் வேறு சொல்லி இருக்கிறீர்கள்.” 

உண்மை தான்! போலீஸாரிடம் ‘பிளாக் மெயில்’ விவகாரத்தை அப்படியே மறைத்து விட்டேன். சேதுபதி தன் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகச் சொன்னேன்.” 

“நித்தியகலா சுய உணர்வு அடைந்ததும் எல்லாவற்றையும் போலீஸ் அதிகாரியிடத்தில் சொல்லி விடப் போகிறாள். அதன் பிறகு நீங்கள் போலீஸாரை ஏமாற்றினீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.” 

“அதற்கு இப்பொழுது என்னால் என்ன செய்ய முடியும்? சேதுபதி ‘பிளாக் மெயில்’ சம்பந்தமாக ஆலோசனை கேட்பதற்காக வந்தான் என்பதை ஒளிக்காமல் சொல்லியிருந்தால், நானும் அந்த ‘பிளாக் மெயில்’ விவகாரத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டி போலீஸார் என்னைக் கைது செய்து சிறையில் தள்ளி இருப்பார்கள். 

“அப்படியே அவர்கள் உங்களைச் சிறையில் தள்ளி இருந்தாலும் பரவாயில்லையே. உயிருக்கு உத்திரவாதம் இருக்கும்” என்ற திருப்தியுடனாவது நிம்மதியுடன் இருந்திருப்பேன். ஆனால் “இப்பொழுது நீங்கள் கொலைகாரனுடன் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்! போலீஸ்காரர்களாலும் உங்களுக்கு ஆபத்து இருக்கிறது” 

“மனிதன் எப்பொழுது இந்த உலகத்தில் பிறந்தானோ அப்பொழுதே ஆபத்தும் அவனுடன் சேர்ந்தே பிறந்துவிட்டது. எனவே ஆபத்தை நினைத்துக் குழம்புவது அறிவீனம்.” 

“நித்தியகலா சுய உணர்வு அடைந்து தன் கணவனுடைய திட்டத்தையும் அதில் நீங்கள் சம்பந்தப்பட்டு இருக்கும் விஷயத்தையும் சொல்லி விட்டால் என்ன செய்வீர்கள்” 

“அதைப் பற்றித் தான் சிந்தித்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். என் பானுவின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைத்து விட்டால் என்னை யாராலுமே அசைக்க முடியாது” என்று பெருவிரலை அசைத்துக் காட்டிய ராஜா அவளது கன்னத்தில் தன் கன்னத்தை இடித்தான். 

”நான் தான் உங்களுடையவள் ஆயிற்றே! உதவிக்கும் ஒத்துழைப்புக்கும் தடையா இருக்கும்?” 

பானு கண்களால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு அவனுடைய தோள்பட்டையின் மீது தன் நாடியை ஊன்றிக் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

உல்லாசக் கிறு கிறுப்பும் உவகையும் கொண்ட ராஜா: அவள் முகத்துக்கு நேராகத் திரும்பி, அவளுடைய கனிந்த உதடுகளுக்கு நேராகத் தன்னுடைய உதடுகளைக் கொண்டு போய், “உன்னை ஒரு நர்ஸாக்கிப் பார்க்க விரும்புகிறேன். நீ நர்ஸ் வேடம் போட்டுக் கொண்டால் சுலபமாக எல்லாவற்றையும் கண்டு பிடித்துவிடலாம்!” என்று சொன்னான். 

“எப்படி?” 

“இன்னும் சிறிது நேரத்தில் கடைகள் திறந்துவிடும். நீ உடனேயே நர்ஸ் உடைகளை வாங்கிக் கொண்டு வந்து அணிந்து கொள். பின்னர் ஒரு நர்ஸைப்போல் நடித்து நேராக நித்தியகலாவின் வீட்டுக்குப் போ” என்று சொன்ன ராஜா, டாக்டர் சாமுவேலுடன் கலந்து செய்த தன்னுடைய திட்டத்தை விளக்கிவிட்டு “நீ அங்கே நர்ஸாக நித்தியகலாவுக்கு சிகிச்சை செய்யும் போது மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். போலீஸாரை நித்தியகலாவோடு பேச அனுமதிக்கக் கூடாது. அதுவும் அல்லாமல் அவளும் எதையும் போலீஸாரிடம் சொல்லி விடக் கூடாது. அதுவும் அல்லாமல் நேற்றிரவு என்ன நடந்தது என்பதை அப்படியே அவளிடம் நீ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கணவன் கொலையுண்ட விபரங்களை அவளிடம் போலீஸார் சொல்லி விசாரிக்கும் முறையிலேயே விபரங்களை அவளிடமிருந்து தெரிந்து கொண்டு விடவேண்டும்! வேலைகள் எல்லாம் வேகமாக நடைபெற வேண்டும். எவ்வளவு, சிரமம் எடுத்தாவது வெற்றியுடன் செய்து முடிப்பாயா கண்ணே” என்று கேட்டான். 

அதற்குள் அன்பு முத்திரைகள் அவளது முகமெங்கும் பதிந்தன. 

“உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வதற்குக் காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்ன பானு, “நர்ஸைப் போல் நடிப்பது சட்டப்படி குற்றம் அல்லவா?” என்று கேட்டாள். 

“குற்றம் தான்-ஒரு வருடமோ, அதற்கு மேலோ, சிறைத் தண்டனை கூட கிடைக்கலாம்.” 

“ஆயுள் தண்டனையே கிடைப்பதாக இருந்தாலும் சரி; நான் உங்களுக்காகச் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று அவள் சொன்ன போது கண்கள் கலங்கின. 

ராஜா அவளை வாரியணைத்து நெஞ்சில் போட்டுக் கொண்டான். 

“பானு! கவனமாகக் கேள். நேற்றிரவு பத்து மணிக்கு சேதுபதி தன் வீட்டுக்கு வந்தபோது நித்தியகலா அந்த வீட்டில் இருந்தாளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வது உன்னுடைய முக்கியமான வேலை.” 

“எல்லா வேலைகளையும் சரியாகச் செய்து முடிப்பேன்” என்று வாக்களித்த பானு “மறுபடியும் உங்களை நான் எங்கே சந்திப்பது உங்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது? நான் என்னென்ன விஷயங்களைத் தெரிந்து கொண்டு இருக்கிறேன் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று கேட்டாள். 

“எப்படியாவது உன்னுடன் தொடர்பு கொள்கிறேன்” என்று ராஜா சொன்னதும், அவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். 

“ஏன் பானு?” 

“நேற்றிரவு முழுவதும் நீங்கள் தூங்கவில்லை போலிருக்கிறது. நான் காப்பி போடுவது வரையிலாவது தூங்குங்கள்.” 

“தூக்கமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும் எனக்கு எப்படித் தூக்கம் வரும் கண்ணே” 

பானுவின் இரண்டு கன்னங்களையும் ராஜா தன் கைகளுக்குள் போட்டுக் கொண்டான். 

“போதும் இந்தக் குறும்புத்தனம்! எப்பொழுது பார்த்தாலும் சிறு பிள்ளை போல விளையாட்டுத்தான்!’ என்று செல்லமாகச் சிணுங்கிய பானு, “இன்னும் ஏன் முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? உங்களுக்காக நான் எதையும் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறேனே! நாதமுனியைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அவர் நித்தியகலாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலும், அவளுடைய கணவனைக் கொலை செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாகப் போகமாட்டார்” என்று உறுதி தொனிக்கும் தொனியில் சொன்னாள். 

“என் மனமும் அப்படித்தான் சொல்லுகிறது. ஆனாலும் மனிதர்களின் நெஞ்சாழத்தை அளந்து கொள்ள முடியுமா, என்ன?” என்று ராஜா சொன்ன போது டெலிபோன் மணியடித்தது. 

“இன்ஸ்பெக்டர் போன் செய்கிறார் போல் இருக்கிறதே!” என்று சொல்லி அவனிடமிருந்து விடுவித்துக் கொண்ட பானு ரசீவரை எடுத்ததும், ராஜா அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டு “ஹலோ…..நான் ராஜா பேசுகிறேன்” என்று சொன்னான். 

பானு அவன் பின்னால் பீதியுற்று விழித்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள். டெலிபோனின் மறு முனையில் இருந்து ஒரு மர்ம மனிதன் தான் பேசினான். 

“ராஜா! சிறிது நேரத்துக்கு முன்னால் உன்னுடைய வீட்டுக்குப் போன் செய்தேன். பதில் இல்லை ஆபீஸுக்குப் போன் செய்தேன். அங்கேயும் மணி தான் அடித்ததே தவிர பதில் இல்லை. பிறகு உன் காதலியாகிய பானுவின் வீட்டுக்கு வந்திருப்பாயோ என்ற சந்தேகம் வந்தது. இங்கேயும் போன் செய்தேன்!” என்று மிகவும் கனமான தொண்டையில் பேசிய அந்த மர்ம மனிதன் “உன்னுடைய உதவியை உடனே எதிர்பார்க்கிறேன்.” என்றான். 

“என்ன உதவி? நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?” 

“இன்னுமா அதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? சேதுபதி உன்னிடம் கொடுத்து விட்டுப் போனான் அல்லவா, இரகசியச் செய்திகளைக் கொண்ட காகிதக் கத்தை! அது உடனடியாக எனக்கு வேண்டும். சிறிது நேரத்திற்கு முன்னால் உன்னுடைய வீட்டைக்கூடச் சோதனை போட்டுப் பார்த்து விட்டோம் அங்கேயும் கிடைக்கவில்லை; ஆபீஸிலும் கிடைக்கவில்லை.” 

கொலைகார மனிதன் ஒருவனுடன் டெலிபோனில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்த போது ராஜாவின் மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டுக் கொண்டு நின்றன. அவன் தான் இரண்டு பேர்களையுமே கொலை செய்து விட்டானா…? 

ராஜாவுக்குச் சட்டென்று ஒரு யோசனை உதயமாகியது. 

“நீங்கள் எதிர்பார்த்துத் தேடிக் கொண்டு இருக்கும் காகிதக் கத்தை என்னிடம் தான் பத்திரமாக இருக்கிறது. வேறோர் இடத்தில் வைத்து இருக்கிறேன்” என்று ராஜா புளுகினான். 

அந்த காகிதக் கத்தைகள் சம்பந்தமான உண்மையை போலீஸ் அதிகாரிகளிடத்தில் சொல்லிவிட்டாயா?” 

“அப்படிச் செய்வதற்கு நான் ஒன்றும் பிழைக்கத் தெரியாதவன் அல்ல! அந்தக் காகிதக் கத்தைகளில் அடங்கி இருக்கும் செய்திகளின் விலை மதிப்பு எவ்வளவு பெறும் என்று எனக்குத் தான் தெரியும். ஆனால் அவற்றை நான் படித்துப் பார்க்கவே இல்லை! ஏனென்றால் அந்த இரகசியக் காகிதங்களெல்லாம் கட்டப்பட்டு அரக்கினால் முத்திரை ஸீலும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதை நான் உடைத்துப் பார்க்கவில்லை ஆதலால், அதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதன் யார் என்பது கூட எனக்குத் தெரியாது! தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் நான் ஆசைப்படவில்லை அந்த இரகசியக் காகிதங்களின் கட்டை சீல் உடைக்காமலே தேவையானவர்களுக்கு நான் விற்றுவிட முடியும்! 

“அது சம்பந்தமாக என்னிடம் பேரம் பேசப் போகிறாயா?” என்று தந்திரமாகப் புளுகியவாறு துணிவை வரவழைத்துக் கொண்டு எதிர் நீச்சலடிப்பதைப் போலவே பேசினான். 

ஒரு கண நேர அமைதிக்குப் பின் டெலிபோனில் மீண்டும் அந்த மர்ம மனிதன் பேசினான் அவன் அந்த இடைவெளியில் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வேறு யாரிடமாவது யோசனை கேட்டிருக்க வேண்டும்! 

“எனக்குச் சொந்தமான செய்தி தான் அது! இருந்தாலும் அது உன்னிடம் சிக்கிவிட்டதே என்பதால் பார்க்கிறேன் இந்தச் செய்திகளுக்காக என்னிடமிருந்து நீ எவ்வளவு பணம் எதிர் பார்க்கிறாய்?” 

“ஐம்பதாயிரம் ரூபாய்!” என்று ஒரு போடு போட்டான் ராஜா. 

அதைக் கேட்டதும் பானு வெலவெலத்துப் போனாள். பயங்கர மனிதன் ஒருவனுடன் ராஜா விளையாடிக் கொண்டு இருக்கிறானே என்பதை நினைத்த போது வேதனை நெஞ்சைத் தாக்கியது. 

“ராஜா…நான் சொல்லுவதைக் கேளுங்கள். எதைப் பற்றியுமே தெரியாது என்று உண்மையைச் சொல்லி விடுங்கள்!” என்று பானு பதறினாள். 

ராஜா அவளைப் பார்த்து முறுவலித்து விட்டு, டெலிபோனில் தொடர்ந்து பேச முனைந்து “ஐம்பதாயிரம் ரூபாய் என்று சொன்னவுடன் என்ன பேசுவது என்றே தெரியவில்லையா மிஸ்டர்?” என்று கேட்டான். 

இவ்வளவு மூர்க்கத்தனமான தைரியம் அவனுக்கு எங்கேயிருந்து தான் வந்ததோ…? 

“சரி, இருபத்தி ஐயாயிரம் ரூபாய் தருகிறேன். அந்தச் செய்திக் கத்தையை ஸீல் உடைக்காமலே நான் சொல்லுகிற இடத்தில் கொண்டு வந்து கொடுத்து விடு.” என்றான் டெலிபோனில் அந்த மர்ம மனிதன். 

“நீ எந்த இடத்தைக் குறிப்பிடுகிறாய்” 

“நேராக எண்ணூர் கடற்கரைக்கு யாரிடமும் எதையும் சொல்லாமல் அந்தச் செய்திக் கத்தையுடன் தனியாக வா. அங்கே என்னுடைய இரண்டு ஆட்கள் பணத்துடன் உனக்காகக் காத்துக் கொண்டு இருப்பார்கள் நீ பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு செய்திக் கத்தையைக் கொடுத்தால் போதும்.” 

“இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே புறப்பட்டு வருகிறேன்.” 

“ஆனால் ஒன்று! இந்த விஷயத்தை நீ போலீஸாரிடமோ, மற்றவர்களிடமோ தெரியப் படுத்தினால் உன்னுடைய நிலைமை என்ன ஆகும் தெரியுமா? அடுத்த வினாடியில் நீ எங்கிருந்தாலும் கொலை செய்யப்படுவாய். கடவுள் நினைத்தால் கூட உன்னைக் காப்பாற்ற முடியாது.” என்று டெலிபோனில் அந்த முரட்டுத் தடியன் சொன்னதைக் கேட்டு ராஜா சிரித்தான். 

”ராஜா! நான் சொல்லுவது உனக்கு விளையாட்டாக இருக்கிறதா?” 

“அப்படி நான் நினைக்கவில்லை. இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்னைத் தேடிக் கொண்டு வரும்போது விளையாடுவேனோ என்ன?” 

அப்படியானால் சரி! இன்னும் ஒரு மணி நேரத்தில் உன்னை எண்ணூர் கடற்கரையில் எதிர்பார்க்கிறேன். சேதுபதி கொடுத்த அதே காகிதங்களை மறக்காமல் முத்திரையை உடைத்துப் பார்க்காமலும் எடுத்து வரவேண்டும்.” 

“நிச்சயமாகக் கொண்டு வருகிறேன். பணத்துடன் என்னை எதிர்பார்த்துக் கொண்டே நில்லுங்கள். 

டெலிபோனின் மறு முனையில் ரிசீவரை வைத்துவிட்டு பானுவைப் பார்த்துச் சிரித்தான். 

“மரண விளையாட்டு கூட உங்களுக்குச் சிரிப்பாக இருக்கிறதா ராஜா?” 

பானு அழவில்லையே தவிர-ஆனால் அழுது விடுவதைப் போல் கேட்டாள். 

“நான் இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்துக் கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன்.” 

“எப்பொழுதுமே இந்தக் குறும்புத்தனம் தான்! இப்பொழுது உங்களுடன் ஒருவன் பேசினானே; அவன் யார்!” 

“அவன் யார்? யாருக்குத் தெரியும்? ஆனால் ஒன்று! இருபத்தி ஐயாயிரம் ரூபாய் தருவதற்குக் காத்துக் கொண்டு இருக்கிற முதலாளி என்பது மட்டும் எனக்குத் தெரியும்,” 

ராஜா சிரித்துக் கொண்டே விளையாட்டாகச் சொன்னதும் பானு அழுதே விட்டாள். 

“அவன் பணம் தருவதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிற முதலாளி இல்லை ராஜா. உங்களை பயங்கரமான அபாயத்தில் சிக்க வைக்கச் சூழ்ச்சி செய்கிறான். உங்களைத் தந்திரமாக அழைத்துச் சென்று கொலை செய்வதற்காக சதி நடக்கலாம் ராஜா. 

“எந்த சதி நடந்தால் என்ன? எல்லாவற்றையும் தன்னந்தனியாக எதிர்த்து நின்று ஒரு கை பார்த்து விடுவது என்றே முடிவு கட்டிவிட்டேன்.” 

“தனியாக என்று சொல்லாதீர்கள், ராஜா! இருபத்தி ஐயாயிரம் ரூபாயை அனாயாசமாக அள்ளி வீசும் பெரிய மனிதனை நீங்கள் அவசியம் சந்திக்க வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்குத் துணையாக சில போலீஸ்காரர்களையும் சாதாரண உடையில் அழைத்துக் கொண்டு போங்கள். இன்ஸ்பெக்டர் அருளானந்தத்துக்கு இந்தச் செய்தி கொஞ்சமாவது தெரிந்தால் உடனே பறந்தோடி வருவார்.” 

பானு பயந்து நடுங்கியதும், ராஜா அவளுடைய இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு, “என் திறமையின் மீது உனக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். எப்படியும் என் முயற்சியில் பிறர் துணையின்றி வெற்றி பெற்றே தீருவேன்.” என்று உறுதியாகச் சொன்னான். 

என்ன தான் அவன் சொன்ன போதிலும், அதைக் கேட்டுத் திருப்தியடையும் நிலையில் பானு இல்லை. 

“என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு எனக்குப் பயமாக இருக்கிறது. என்னையும் அறியாமல் குழம்புகிறேன்.”

“இதில் குழப்பத்துக்கு எதுவுமே இல்லை.” என்று சொன்ன ராஜா, “என்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா” என்றான். 

பிரியம் இல்லாமலேயே பிரிந்து சென்று மேஜை டிராயரைத் திறந்து உள்ளேயிருந்த ரிவால்வர் துப்பாக்கியை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள் பானு. 

“நான் சொன்னது நினைவு இருக்கட்டும். நீ நர்ஸைப் போல் நித்தியகலாவின் வீட்டுக்குப் போய் அங்கே தந்திரமாக நடந்து கொண்டு எனக்கு வெற்றிச் செய்திகளைத் தெரியப்படுத்து.” 

“நீங்களும் எனக்கு வெற்றிச் செய்தியையே கொடுங்கள். உங்களுக்காகவே நான் வாழுகிறேன் என்பதால் உங்கள் உயிரின் மீது எப்பொழுதும் கவனம் இருக்கட்டும்.” 

பானு சொல்லி விட்டு ‘பொல பொல’வென்று கண்ணீர் வடித்ததும், ராஜா அவளை இறுக அணைத்துக் கொண்டு அந்தக் கண்ணீரை மெகவாக தன் கையினால் துடைத்து எடுத்து, கூந்தலையும் கோதி விட்டான். 

இரு உணர்ச்சித் துருவங்களும் கண்ணீர் பொங்க பாசப் பிணைப்பினால் இணைந்தன. 

– தொடரும்…

– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *