சேராவின் பெருக்கு!
(ஆதிக்கச் சாதிகளால் அவலப்பட்டிறந்த அகிலத்தின் அப்பாவிச் செபஸ்ரியன்களுக்கு இது சமர்ப்பணம். இந்தக் கதை கற்பனையே யாரையும் குறிப்பதல்ல)

தெருவெங்கும் புழுதி. வெண்மை போர்த்திய மரங்கள். அகோர வெயிலில் நிலம் பாளமாய் வெடிக்கிற பூமி. நீரோடுகிற ஆறுகளற்ற தீவு. ஆனாலும் அலையடிக்கும் பெருங்கடலின் வாடைக் காற்றின் குளிர்மை உடலைச்சில்லிட வைத்தது.
வீதியின் இருபுறமும் ஆளை மறைக்கும் பகிர்கள். கல்லால் அடுக்கி வேலியாய் எல்லை பிரித்திருக்கிற அழகியஊர். முல்லைப் பூ வெள்ளைப் பல்லாகிச் சிரிக்கும். பெயர் தெரியா பல மரங்களால் நிறையும் இத் தீவு . பலவண்ணங்களில் ஆவினங்களும், பரியினங்களும் எடுப்பாக வரிசையிடும் தீவு. மூலிகைத் தீவென்று பழையகாலப் புராணங்கள் சொல்வதாக பலரும் சொல்லிக் கொள்வர்.
மாவிலியிருந்து தொட்டாரம் போகின்ற வழியெங்கும் பனைகள். நவீன அளவைகள் இல்லாத அக்காலத்திலும்முற்கால மனிதர்கள் அச்சொட்டாக வரிசைகள் பார்த்து பனை நட்டிருந்தார்கள். நவீனத் துட்டர்களின் தார், அந்தத் தெருவைத் தீண்டாத காலம். புழுதி புரளும் மண் தெருவில் பனை வெளியூடாக செபஸ்ரியன் நடந்துகொண்டிருந்தான்.
பத்துப் பதினைந்து பேர் ஒன்றாக நின்று கட்டிப் பிடித்தாலும் அதையும் தாண்டி வயிறு பிதுக்கிஅகன்றிருந்தது எம்மூரின் அந்த மரம். இலங்கையில் எங்கும் அத்துணை விசாலமான மிகப் பெரிய மரத்தைக்காண்பதரிது.
செபஸ்ரியனுக்கு சிறுவயதிருந்தே அந்த மரமும், அதன் இலை சிறுத்த கொப்புகளும், அந்த மர நிழலும் தான்அவனது விளையாட்டாக இருந்தது. அந்த மரத்தின் கீழ்த் தான் அவனுக்குப் பல ஞானமிக்க கேள்விகள் எழும்.
இந்த மரம் எங்கிருந்து வந்தது? இதை யார் கொண்டு வந்திருப்பார்கள்? இதன் பெயர் என்னவாக இருக்கும்?
எல்லாக் கேள்விகட்கும் நவீனத் தொழில் நுட்பம் பதிலளிக்கும் என்கின்றார்கள். ஆனால் பல கேள்விகளுக்குஅதனிடமும் பதிலில்லை அறிவியலில் அனுமானத்திற்கு இடமில்லைத்தான் ஆனால் அனுமானத்தில் தான் சகலமதங்களும், புனித நூல்களும்,கலாச்சாரமும் இங்கு கட்டப் பட்டிருக்கின்றன.
அதே போன்று தான் எப்போது தோன்றியது இந்தத் தீவு ? இங்கு வாழ்ந்த முதல் மனிதன் பெயர் என்ன? இந்தத்தீவில் முதல்ப் பனையை நாட்டியவன் யார் என்கின்ற கேள்விகட்கு உற்பத்திப் பொருட்களில் உற்பத்தி திகதியும்அதன் முடிவுத் திகதியும் போடும் இன்றைய நவீன மனிதனுக்கு தன் முடிவுத் திகதி எது என்பதே விடையறியாக்கேள்வியாகும்.
அந்த மரத்தின் கீழிருந்த பெரும் கல்லில் உட்கார்ந்தான். தாமளாப்புக் குளத்தின் மீன்கள் வெள்ளி மீன்களாய்த்துள்ளின.
அவ்வப்போது திரும்பி செபஸ்ரியன் தான் வந்த ஒத்தையடிப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோஎதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது. அவன் முகத்தில் கவலை ரேகைகள்பதிந்திருந்தன. நேரமாகிக் கொண்டிருந்தது. குந்தியிருந்த கல்லை வி்ட்டு எழுந்தான். இரண்டு கைகளாலும்காற்சட்டையைத் தட்டி தூசியை உதறினான். தமாளாப்புக் களிக் குளத்தின் வெண்ணிறத் தூசுகள் எங்கும்பறந்தன.
திரும்பி அந்த ஒத்தையடிப் பாதையில் நடக்க எண்ணியவனின் முன்னால் ஆட்காட்டிக் குருவி பெருங்குரலோடுகரணமடித்து ஜாலம் காட்டியது. ஆட்காட்டியின் திசையில் மரத்தின் மறுபுறமிருந்து கலகலவெனச் சிரிப்புச்சத்தம் கேட்டது.
இது சேராவின் சிரிப்புத்தான். அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
அடி கள்ளி …சொல்ல வார்த்தைகள் இல்லை அவனிடம்..
அவள் கைகளைப் பற்றினான்.
என்ன அவசரம் என்று நெளிந்தாள் அவள்.
“நான் எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?”
“தெரியுமே…”
“அப்போ, முதல்லேயே வந்து விட்டாயா நீ”
அவன் கோபத்தோடு கேட்டான்
“ஓமோம் …நீ என்ன செய்கின்றாய் எனப் பார்த்த படியே மரத்தின் பின்புறமிருந்தேன்”.
செபஸ்ரியன் அவளைக் இறுக கட்டிக்கொண்டான்.
“எங்க அண்ணன்கள நினைச்சாதான் எனக்குப் பயமாயிருக்கு”
அவள் அழுதாள் .
“கண்டிப்பா உன் அண்ணன்கள் உன்னை எனக்கு கலியாணம் செய்து தர மாட்டாங்கள்” .அவன் பெரு மூச்சோடுசொன்னான்
அவள் அவன் வாயை அவசரமாகப் பொத்தினாள். அப்படிச்சொல்லாதே நான் செத்திடுவன்.
அவன் அவள் கையை விலக்கியபடியே
“உண்மை அது தானே?” என்றான்
“அப்போ என்னைக் கல்யாணம் செய்ய உனக்கு விருப்பம் இல்லையா?” விசும்பல் ஒலியோடு அவள் கேட்டாள்.
“ஏய் நீ இல்லாமல் நான் எப்படி? ஆனால் இது எப்படிச் சாத்தியம் ?? அவர்கள் தான் எங்களை வாழவிடுவார்களா?”
“அப்படியென்றால் இப்பவே ஊரை விட்டுப் போகலாம்” என்றாள் எதற்கும் துணிந்தவளாக அவள்.
தீவைச் சூழ்ந்த பெருங்கடல். யாரையும் எளிதில் வெளியே போகவும் விடாது. உள்ளே வரவும் விடாது.
அதற்கு படகு தேவை. பயணிகள் பயணிக்கும் லோஞ்சில போனால் முடிந்து போகும் கதை. எல்லோரையும்எல்லோரும் அறிந்த ஊர் அது. அதில போக முடியாது.
படகுக்காரர்கள் யாரை இரகசியமாக கேட்பது ?
இத்தனைக்கும் அவனும் வேதக்காரன் அவளும் வேதக்காரி! மதம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையல்ல. கடவுள்அவர்களுக்கு ஒன்று தான். ஆனால் அவன் புனித அந்தோனியார் கோவில் சமூகம். அவள் புனித சேவியர் கோவில் சமூகம்.
கடவுள்கள் ஒன்றான போதும் கோவில்கள் வேறு வேறாய் நுணுக்கமாய்ச் சாதி பிரிக்கிற ஊர் அது. கோவில்களில் புனிதத்தை எழுதிவிட்டு மனிதர்கள் ஒவ்வொருவருக்கொருவர் மாசு கற்பித்து நிற்கிற ஊர். ஒவ்வோர் கோவிலைச் சொன்னவுடன் அவனவன் சாதியை கன கச்சிதமாய்க் கண்டு பிடிக்கிற யுக்தி இது.
என்ன சாதியில் பிறப்பது என்று பிறக்கும் போது யாரும் தீர்மானிப்பதில்லை. ஆனால், என் பிறப்பு தொட்டேஎன் மீது சாதிய அடக்குமுறைகளை இந்தக் கோவில்களே ஆரம்பித்து வைக்கின்றன என்று முதலில்போர்க்கொடி தூக்கியவன் செபஸ்ரியன். கிறிஸ்தவம் வெளி நாட்டு மதமாக இருக்க அதற்குள் சாதி பிரித்துக் கோவில் எழுப்பியவன் எவன் ?
ஆதியில் சாதியப் பகுப்பின் மூலமான வர்ணாச்சிரமக் கோட்பாட்டைத் தந்தது இந்து மதம். அதிலிருந்துவிடுபடவென எல்லோரும் சம மென்ற கிறிஸ்து மத்த்திற்கு மாறினோம். இன்று அதுவே மிகப் பெருங்கேள்வியாகி நிற்கிறது. மனிதன் அடிப்படையில் தான் மாறாமல் மதங்களை மாறுவதால் சாதியைத் துறந்துவிடுவதில்லை. பெயரை மாற்றினோம், மதத்தை, கலாச்சாரத்தை மாற்றினோம், மாறாத ஒன்று இங்கு சாதி தான். அதை யாரும் இங்கு இற்றைவரை விடுவதாகவில்லை. உன் வீட்டில் தொலைத்த பணத்தை பக்கத்து வீட்டில்தேடுவீர்களா நீங்கள்??
அந்த அபாரத் துணிச்சல் நிறைந்த அவனது புரட்சிக் கேள்விகளும், அவனது கவிதைகளும் தான் சேராவைஅவர்கள் ஒன்றாகப் படித்த வேளை காதல் கொள்ள வைத்தது.
இத்தனை கல்வியும், அறிவும் உள்ள மக்களுக்கு சாதியப் பிரிப்பு என்பது எத்துணை அவமானம்.
எத்தனை தான் இவர்கள் சாதியை ஒழிப்போம் என்று பேசினாலும் செட்டி குளம், ஒட்டன் குளம், சேணியாகுளம், தட்டா தெரு, மறவன்தறை, என்று தங்களுக்குள் இன்னமும் சாதிப் பெயர்சூட்டி அவற்றை அழித்துநீறாக்காமல் சாதி வளர்க்கும் வித்தையை அவன் தன் கவிதைகளில், பேச்சுகளில் வெளிக் கொணர்ந்தான்.
உயர்சாதி ஆணவக்காரருக்கு அவனை சுத்தமாக பிடிக்காது.
அந்தோனியின் அவுட் மோட்டர் பூட்டிய மீன்பிடிக்கிற படகில் இரவோடிரவாகப் போனால் எவர் கண்ணிலும் படமாட்டம் !
அவளுக்கும் அது தான் சரியென்று பட்டது.
அவள் சோர்ந்த குரலில் சரியென்றாள்….
“ஏய்…சேரா…. பயம் வேண்டாம் நீ இல்லாம நான் மட்டும் உயிரோடு இருப்பேனா??
“அப்படியெனில் வெகு விரைவாய் இந்த ஊரை விட்டுப் போய்விடுவோம். தங்கும் ஒவ்வொரு நாளும் ஆபத்து”.
“இன்னும் இரண்டு நாள் தான். அதற்குள் எல்லா ஒழுங்கும் செய்திடுவன். செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இதே இடத்தில் நில். சரியென்றாள் அவள்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கைகாட்டி மறைந்தாள் சேரா. அடர்ந்த பிரண்டை மரங்கள் நெளியும்பற்றை சலசலத்தது. காட்டு முயலாக இருக்குமோ ? அதைக் கிரகிக்க விடாமல் அந்தப் பெருமரத்தை தன்கூரிய சொண்டால் கொத்தித் தீர்க்க கங்கணம் கட்டி நின்றது மரங்கொத்தி. சாதியம் பிரித்து வைக்கிறமனிதர்கள் போல எந்த இலக்குமற்று எத்தனை வேகமாக அந்த மரத்தில் தன் சொண்டால் கொத்தி வதைக்கிறதுஇந்த மரங்கொத்தி.
செபஸ்ரியன் ரோட்டுக்கு நடந்தான்.
கோவில் கிணற்றில மட்டும் தான் அப் பகுதியில் குடிக்க நல்ல தண்ணீர் இருந்தது.
குடத்தில் தண்ணீரை நிரப்பி, இடுப்பில் சுமந்துகொண்டு ஒய்யாரமாக நடைபோட்டார்கள் உயர்சாதி மாதர்கள். உட்கார்ந்து கை கட்டி உயர்சாதிப் பெண்ணோ, ஆணோ வந்து தங்களின் குடங்களில் தண்ணீர் நிறைத்துவிடும் வரை காத்துக் கிடந்தார்கள் உயர்சாதியால் வஞ்சிக்கப் பட்டவர்கள்.
சேரா தண்ணீர் எடுத்து வரும் சாட்டில் தன் குடத்தினுள் அவளின் மாற்றுப்புடவைகள் மற்றும் தேவையானவற்றைஎடுத்து வைத்த வண்ணம் வெளியே வந்தாள் .
யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியினுள் நோய் வாய்ப்பட்ட நிலையில் இந்திய் இராணுவம் குண்டெறிந்துஅழித்தவர்களுள் அவள் தாயும் ஒருத்தி. ஆஸ்பத்திரிகளில் குண்டெறிபவர்கள் தான் இன்றைக்கு உலகஅரசாங்கங்களாய் இருக்கின்றன. தாய் இருந்திருந்தால் இந்த முடிவினைச் சேரா ஒருவேளைஎடுத்திருப்பாளோ என்னவோ??
அப்பா, நான் தண்ணீர் எடுத்து வரப் போகின்றேன்”என்றவள் வாசல் படியின் மேல் நிலையில் தூக்கியிருந்தஅம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி நின்றாள் . கறுப்பும் வெள்ளையுமாக வேதனைச் சிரிப்பொடு தொங்கிக்கொண்டிருந்தாள் அவள். தொட்டுக் கும்பிட்டாள்.
அண்ணன்மார்கள் இருவரும் அர்த்த புஸ்டியுடன் சிரித்துக் கொண்டார்கள்.
“ஓம் பிள்ளை “ என்ற அப்பா ஒன்றும் அறியாதது போல முத்தத்துக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். குடத்தைஇடுப்பில் வைத்துக்கொண்டு பாதி திறந்திருந்த படலையைத் தள்ளித் திறந்து கொண்டு தெருவில் நடந்தாள்.
செபஸ்ரியனே அவள் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தான்.மனம் படபடத்தது.
அந்தப் பெரிய மரத்திற்கு இன்னமும் சிறு தொலைவு தான் போக வேண்டும். எதிர்த் திசையில் இருந்து மூச்சுவாங்க ஓடி வந்தாள் அமுதா?
அமுதா சேராவின் உயிர்த்தோழி.
செபஸ்ரியனும், அந்தோனியும் இரவு கடலுக்க போயிற்று திரும்ப வரேல்லை. தேடிப் போனவர்கள் அவர்களின்படகை கண்டு இழுத்து வந்தார்கள். முரல் நிறைந்திருந்ததாம் அவர்கள் படகில். இருவரையும் முரல் பாய்ந்துகொன்றிருக்குமாம் என்று கதைக்கினம் என்று சேராவைக் கட்டிப் பிடித்து அழுதாள்.
அண்ணன்மாரின் விசமச் சிரிப்பிற்கு இப்போது அர்த்தம் விளங்கியது சேராவிற்கு.
மதுரையை எரித்த கண்ணகிபோல அந்த ஊரை எரித்து விடத் துடித்தாள் சேரா. அவளால் என்ன செய்ய இயலும்??
“ஐயோ” என்றலறியவாறு அந்த மரத்தை நோக்கி ஓடினாள். தாமளாப்புக் கரையெங்கும் சாணகத்தை தீமூட்டியிருந்தார்கள்.
சாணகங்களை தட்டித் தீமூட்டித் திருநீறெடுக்கிற அந்தப் பெரு நெருப்பிற்குள் இறங்கினாள். தன்னைப்பற்றியெரிய வைத்த வண்ணம் செபஸ்ரியன் சந்திக்கும் அந்த மரத்தை வாஞ்சையுடன் கட்டிப் பிடித்தாள். பெரும்வெடிச் சத்தத்தோடு அந்த பெருமரத்தாய் குகை போலப் பிளந்து அவளை உள்ளிழுத்தது. சேராவின் இரத்தப்பெருக்கால் மரமும், அந்த வெளியும் சிவந்திருந்தது. மானிடக் கொடூரர்களின் அவலத்தில் அடி வயிறுபிளந்தபடி இன்றும் வாழ்கிறது அடையாளமாய் அம் மரம்.
மக்கள் இன்று அம் மரத்தை பெருக்க மரம் என்கின்றார்கள்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 267