செய்தொழில் தெய்வம்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

பெரிய பிரித்தானியா தேசத்தைச் சேர்ந்தவர் பொப் கோல். முன்னர் ஈராக்கில் நான் பணியேற்றபோது, அங்கு முதன்மைப் பொறியியலாளராகக் கடமையாற்றியவர். குவைத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய புறஜெக்டிற்கு முகாமையாளராக வந்திருந்தார். ஈராக்கிலிருந்து திரும்ப வந்து சுமார் ஆறு மாதங்களில் இங்கு பணியாற்ற வருமாறு எனக்குத் தகவல் வந்தது.
ஈராக்கிலிருந்து இலங்கைக்குத் திரும்ப வந்த அனைவரும் குவைத்துக்கு அழைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையினருக்குத்தான் முதற்குழுவில் விசா அனுப்பப்பட்டிருந்தது. அதில் என்ஜினியர்களாக என் பெயரும் மகேந்திரனின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. எங்களைவிட கூடிய காலம் வேலை அனுபவமுள்ள சில என்ஜினியர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் கம்பனியுடன் தொடர்பு கொண்டு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். தங்களுக்கே வேலை அனுபவம் கூடிய காலம் உள்ளதாகவும், தாங்கள் வேலைக்கு வர ரெடியாக இருப்பதாகவும், எனவே முதலில் தங்களையே எடுக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்கள். இதன் காரணமாக நாங்கள் தவிர்க்கப்பட்டு விடுவோமோ என எங்களுக்கு சற்றுக் கவலையாயிருந்தது. ஏனெனில் ஏற்கனவே ஆறு மாதங்களளவில் வீட்டில் இருந்ததில் அலுப்படிக்கத் தொடங்கியிருந்தது.
‘குவைத் புறஜெக்டின் முகாமையாளராக உள்ள மிஸ்டர் பொப் கோல் தெரிவு செய்த பெயர்களைத்தான் இப்போது எடுத்திருக்கிறோம். நீங்கள் எங்கள் நிறுவனத்தின் ஏனைய இடங்களுக்கு அல்லது பின்னர் குவைத்துக்கு எடுக்கப்படுவீர்கள்” எனத் தலைமை அலுவலகத்திலிருந்து அவர்களுக்குப் பதில் வந்தது.
எங்கள் குழுவில் இருபது பேர் முதலிற் குவைத்திற்குப் பயணமானோம்.
“நீங்கள் இருவரும் நல்ல சுறுசுறுப்பான இளம் என்ஜினியர்கள்… ஈராக்கில் உங்களைக் கவனித்திருக்கிறேன். அதனாற்தான் உங்களை முதலில் எடுக்க விரும்பினேன். இன்னும் பத்து நாட்களில் புறடக்சன் தொடங்கவேண்டும்… இயந்திரங்கள் பொருத்தும் வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும்” என எங்களைத் தட்டிக் கொடுத்து வரவேற்றார் பொப் கோல்.
இயல்பாகவே நான் எந்த வேலையை எடுத்தாலும் அதை என் சொந்த வேலையைப் போலக் கடமையுணர்வுடன் செய்பவன்தான். என்னோடு சில காலம் கூட இருந்த புண்ணியத்தில் மகேந்திரனுக்கும் இந்த சுபாவம் தொற்றியிருந்தது.
பொப் கோலின் வெளிப்படையான பாராட்டு வார்த்தைகள் உச்சத்தில் ஏற்றிவிட்டது போலிருந்தது எங்களுக்கு – ஓடி ஓடி வேலை செய்தோம்.
இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியில் சீமெந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு கம்பனியாயிருந்தது. சில நாடுகளில் அவர்களுக்குச் சொந்தமான சீமெந்துத் தொழிற்சாலைகள் இருந்தன. வேறு சில நாடுகளுக்கு கப்பல்களில் சீமெந்தைக் கொண்டு சென்று விநியோகம் நடைபெறும்.
சுமார் 75000 தொன்வரை கொள்ளளவுள்ள பாரிய கப்பல்களில், சீமெந்து பையிடக்கூடிய வசதியுள்ள மெசீன்கள் பொருத்தப்பட்ட மிதக்கும் தொழிற்சாலைகள் அவர்களிடமிருந்தது. இம் மிதக்கும் தொழிற்சாலை சீமெந்து விநியோகிக்கப்பட வேண்டிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள துறைமுகத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டு நிறுத்தப்படும். இதிலிருந்து சீமெந்துப் பைகள் லொறிகளில் ஏற்றப்படுவதற்காகத் தரையை நோக்கி, ‘பெல்ட் கொன்வேயர்’கள் பொருத்தப்படும். லொறிகளுக்கு நேரடியாகவே பெல்ட்டில் ஓடிவரும் சீமெந்துப் பைகளை லோட் பண்ணும் ஒழுங்கு முறை இது. தொழிற்சாலைக் கப்பலில் உள்ள இயந்திர அமைப்பு, வேறு கப்பல்களிற் கொண்டுவரப்படும் சீமெந்தை உள்ளெடுக்கும் வசதிகளைக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டு அரசாங்கத்துடன் அல்லது தனியார் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைய, நாளொன்றுக்கு இவ்வளவு தொன் எனும் அடிப்படையில் சீமெந்து விநியோகிக்கப்படும்.
தாய்க் கப்பலுக்குள் இருப்பு முடிவடைவதற்கு முன் வேறு கப்பல்கள் வரிசைக்கிரமமாக சீமெந்தை ஏற்றி வரும். பக்கவாட்டில் வந்து இதனுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு நிற்கும். அதனுள்ளிருக்கும் சீமெந்தை எடுத்துக் கொண்டதும், அது போக, இன்னொரு கப்பல் பக்கத்தில் வரும். இங்கு பையிடப்படும் சீமெந்து இரவு பகலாக லொறிகளில் ஏற்றப்படும்.
முன்னர் ஈராக்கில் யுத்த காரணமாக அந்த புறஜெக்ட் மூடப்பட்டாலும், அங்கிருந்து மிதக்கும் கப்பலை நகர்த்த முடியவில்லை. இங்கு வேறொரு புதிய கப்பல் கொண்டுவரப்பட்டிருந்தது. குவைத்தினூடாக ஈராக்கிற்கு சீமெந்து விநியோகிக்கும் திட்டம் இது. (விசித்திரம் என்னவென்றால் ஒரு பக்கத்தில் யுத்தம் கட்டடங்களை உடைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தால் கட்டுமானத்துக்காக சீமெந்து விநியோகிக்கப்படப்போகிறது.) ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு ஏழாயிரம் முதல் எண்ணாயிரம் தொன் சீமெந்து விநியோகிக்கப்பட வேண்டும்.
இந்த புறஜெக்ட்டில் தொழில்நுட்பத் தரத்திலுள்ள தொழிலாளர்களும் ஒப்பரேட்டர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். ஆங்கிலேய என்ஜினியர்கள் மூவர் இருந்தனர். லொறிகளுக்கு சீமெந்தை லோட் பண்ணும் தொழிலாளர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள். (இது இன்னொரு வேடிக்கை… ஈரான் ஈராக்குடன் யுத்தம் புரிகிறது… இங்கு ஈராக்கிற்கு அனுப்பப்படும் சீமெந்து ஈரானியர்களால் ஏற்றப்படுகிறது.)
இன்னும் பத்து நாட்களுக்குள் சீமெந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஓடி ஓடி வேலை செய்தோம். (விழுந்திட வேண்டாம்…..’ என நானும் மகேந்திரனும் இடையிடையே விளையாட்டாக ஒருவர்க்கொருவர் கூறிக் கொள்வோம். அவ்வளவு உற்சாகமாக விளையாட்டுப் போல் வேலைகள் போய்க் கொண்டிருந்தது.) புதிதாக சில இயந்திரங்கள் வந்திருந்தன. அந்த மெசீன்கள் பொருத்தப்படுவதற்காக, அவற்றை வழங்கிய நிறுவனத்திலிருந்து இரு ஜேர்மனிய என்ஜினியர்களும் வழிநடத்தல் விளக்கங்களைத் தருவதற்கு வந்திருந்தனர். இயந்திர அமைப்புக்கள், பொருத்தப்பட வேண்டிய முறை போன்றவை பற்றிய வரைபடங்களுக்கான விளக்கங்கள் ஜேர்மன் மொழியிற் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைப் புரியவைப்பதும் அவர்களது வேலை. ஓரிரு நாட்களில் அவர்களது உதவி இல்லாமலே வரைபடத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை நாங்கள் பெற்றுவிட்டோம். இது இன்னும் விரைவாக வேலைகளைச் செய்ய உதவியது.
“நீங்கள் ஏற்கனவே ஜேர்மனிய மொழி படித்திருக்கிறீர்களா…? அல்லது இதற்குமுன்னர் ஜேர்மனியில் வேலை செய்திருக்கிறீர்களா…?” என அந்த என்ஜினியர் எங்களிடம் கேட்டார்.
மகேந்திரன் சட்டெனப் பதிலளித்தான்… “யா… யா…!” எனக்குள் சிரிப்பு. அவர்களும் உற்சாகத்துடன், “வெரி..குட்…!” எனப் பாராட்டினார்கள்.
‘ஜேர்மனிய மொழி படித்ததாக ஏன் அவர்களிடம் பொய் சொன்னாய்…?” என மகேந்திரனிடம் கேட்டேன்.
“இல்லை என்று சொன்னால்… அந்தக் கிழவன் எங்கள் பாட்டுக்கு வரைபடத்தைப் பார்த்துச் செய்ய விடமாட்டான்… ஒவ்வொரு அலுவலிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பான்… அது தேவையில்லாத சுணக்கத்தை ஏற்படுத்தும்…”
அது எனக்கும் சரியாகவே பட்டது. எப்படியோ தெரியவில்லை. மகேந்திரனுக்கு இப்படித் தக்க தருணங்களில் சற்றும் கூசாமல் ஏதாவது பொய்யைக் கூறிக் கருமங்களைச் சாதிக்கும் தந்திரம் வாய்த்திருந்தது.
எல்லாம் சரி. குறிப்பிட்ட நாட்களுக்கு இரு நாட்கள் முன்னதாகவே நிர்மாண வேலைகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இது பொப் கோலுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதை அவரது முகமே காட்டியது. கடந்த சில நாட்களாக அவரது முகத்தில் ஓர் இறுக்க நிலையே தென்பட்டது. குறுகிய கால அவகாசத்தில் சீமெந்து விநியோகிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் தலைமை அலுவலகத்திலிருந்து அவருக்குச் சுமத்தப்பட்டிருந்தது. நாங்கள் வேலை செய்துகொண்டிருந்த போதெல்லாம் அடிக்கடி வந்து பார்ப்பார். ‘இன்ன திகதிக்கு முதல் முடிக்க முடியுமா…? என ஒரு அப்பாவியைப் போலக் கேட்பார். நாங்கள் அவரது இக்கட்டை உணர்ந்து இரவு பகலாக வேலை செய்தோம். இப்போது நெருக்கடியிலிருந்து விடுபட்டவர் போல சந்தோஷமாகக் காணப்பட்டார். அது எங்களையும் மகிழ்வித்தது..(மகன் தந்தைக்காற்றும் உதவி போன்ற உணர்வு.)
குறிப்பிட்ட தினத்தில் சீமெந்து விநியோகம் தொடங்கப்பட்டது. எவ்வித இடைத் தடங்கலுமின்றி மெசீன்கள் இயங்கின. பணிகள் ஆரம்பிக்கப்பட்டதைப் பார்வையிடும் நோக்கில் கம்பனி உரிமையாளர் பூரி அவர்கள் வருகை தர இருப்பதாக செய்திகள் அடிபட்டன.
எங்கள் நாட்டு மந்திரிமார் பாவிப்பது போன்ற சொகுசான காரில் ஜோர்ஜ் பூரி வந்து இறங்கினார். தூர நின்று நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். ஈராக்கிலிருந்து திரும்பியபோது அவருடன் கிடைத்த அறிமுகத்தில், அவர் எங்கள் மதிப்புக்குரியவராயிருந்தார். எனினும் நாங்கள் தெரியாதவர்கள் போல ஒதுங்கி நின்றோம். அதுதான் அந்தப் பெரிய மனிதனுக்குக் கொடுக்கும் மரியாதை எனக் கருதினோம்.
வாகனத்திலிருந்து இறங்கி வந்த பூரியை பொப் கோல் எதிர்கொண்டு வரவேற்றார். இருவரும் சேர்ந்து வந்தபோது பொப் கோல் சற்று அப்பால் நிற்கும் எங்களைக் காட்டி ஏதோ சொல்வது போலிருந்தது. பூரி எங்களைப் பார்த்துக் கையசைத்தார் – என்ன மறந்துவிட்டீர்களா.. எப்படி சுகமாயிருக்கிறீர்களா..?” நாங்கள் அதற்குப் பதிலாகப் புன்முறுவல் செய்துகொண்டு அவருக்கு அண்மையில் வந்து கை கொடுத்தோம்.
“நீண்ட நாட்கள் வீட்டில் நின்றிருக்கிறீர்கள்… என்ன செய்தீர்கள்…? திருமணம் முடித்தீர்களா…?” என ஜோக்காகக் கேட்டார்.
திருமணம் என்ற சொல்லைக் கேட்டதுமே எங்களுக்கு நாணம் வந்துவிட்டது. மேற்கொண்டு எதுவும் பேசவும் முடியவில்லை. “இல்லை…” என்றவாறு ஒருவாறு சிரித்துச் சமாளித்தோம்.
“அதுதான் நல்லது… மணமுடிக்க வேண்டாம்… அப்படியானாற்தான் இப்படி எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கலாம்…” என நகைச்சுவைத்துக் கொண்டு பொப் கோலுடன் அலுவலகத்திற்குள் போனார்.
மாலை நேரம் அலுவலகத்துக்கு வருமாறு எனக்கும் மகேந்திரனுக்கும் பொப் கோலிடமிருந்து தகவல் வந்தது. போனபோது அங்கே பூரியும் அமர்ந்திருந்தார். அங்கிருந்த கதிரைகளைக் காட்டி அமருமாறு பொப் கோல் கூறினார். அமர்ந்தோம் (சற்று நடுக்கத்துடன்). அவர்கள் மிக இயல்பாகவே பழகினாலும், எதற்காக அழைக்கமாட்டோம் என்று புரியாத ஒரு பயம் சற்று நடுக்கத்தைத் தரவே செய்தது.
“உங்களைப் பற்றி நிறைய நல்ல விடயங்கள் கேள்விப்பட்டேன்” பூரிதான் இப்படிக் கூறினார். எங்களால் அதை நம்ப முடியவில்லை. இதுவும் அவரது வழமையான ஜோக்குகளில் ஒருவகைதானோ என்று தோன்றியது. கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தோம்.
“மிஸ்டர் பொப் கோல் உங்களைப்பற்றிக் கூறினார். நீங்கள் இவ்வளவு கெட்டித்தனமாக வேலை செய்வது எனக்குச் சந்தோஷம் தருகிற செய்தியாயுள்ளது. அவர் உங்களுக்கு உடனடியான சம்பள உயர்வு சிபார்சு செய்திருக்கிறார்… உங்கள் சம்பளத்தின் 25 வீதம் இம் மாதத்திலிருந்தே அதிகரிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்படும்…”
நாங்கள் இப்போது பொப் கோலை வியப்புடன் நோக்கினோம். இலங்கையில் பல வருடங்கள வேலை செய்த அனுபவத்தில், மேலதிகாரிகள் என்பவர்கள் ஏதோ கோபுரத்தில் தாங்கள் இருப்பதாகக் கருதிக் கொள்பவர்கள் என்றுதான் கருதக்கூடியதாயிருந்திருக்கிறது. தன்கீழ் வேலை செய்பவர்களுடன் சிநேகபூர்வமாகப் பழகுவது தப்பான செயல் என எண்ணுபவர்கள் அவர்கள். வேலை செய்யும் இடத்தில் தங்களுக்குப் பந்தக்காரர்களாகச் சில தகமையில்லாத பரிவாரங்களை வைத்துக்கொண்டு அவர்களுடைய சொல் கேட்டு, கேடுகெட்ட நிர்வாகம் செய்பவர்கள். அதற்கும் மேலாக, தங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களின் சாதனைகளையெல்லாம் தாங்களே சாதித்தது போலப் பெயர் போட்டுக் கொண்டு உயர் நிலைக்குப் போய்விடுபவர்கள்.
இப்படியான தலைகீழ் நிலைமைகளையே இயல்புநிலை எனப் பழக்கப்பட்டுப் போயிருந்த எங்களுக்கு பொப் கோலின் செய்கைகள் ஆச்சரியத்தை அளித்தது. வேலையிற் சேர்ந்து ஓரிரு கிழமைகளுக்குள்ளேயே இப்படியொரு சம்பள உயர்வு கிடைத்திருக்கிறதே என நன்றிகூடச் சொல்ல முடியாத அதிர்ச்சி நிலைக்குள்ளாகிவிட்டோம் நாங்கள்.
“உங்களுக்கு இன்னொரு சலுகையும் பொப் கோல் சிபார்சு செய்திருக்கிறார். ஏற்கனவே செய்துகொண்ட வேலை ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை என்றில்லாமல்… ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாத லீவில் வீட்டுக்குப் போய் வரலாம்…” பூரி மேற்கொண்டு இவ்வாறு கூறினார். “இன்னும் உங்கள் நண்பர்கள் யாராவது வர விரும்பினால், அவர்களது பெயர்களை மிஸ்டர் பொப் கோலிடம் கொடுங்கள்… எனக்குத் தேவையான என்ஜினியர்களை இலங்கையிலிருந்து எடுக்க விருப்பமாயுள்ளது.”
பூரி சென்றபின்னர் பொப் கோலிடம் சென்று நன்றி கூறினோம்.
“எதற்கு…?” எனக் கேட்டார், தனக்கு இதிலெல்லாம் சம்பந்தம் இல்லை என்பதுபோல.
“எங்களுக்கு சம்பள உயர்வுக்காக சிபார்சு செய்திருக்கிறீர்கள்…”
“அது சம்பள உயர்வல்ல… உங்களுடைய தகுதிக்கு உரிய நிலையில் வைத்திருக்கிறோம். அவ்வளவுதான்..” என மிகச் சாதாரணமாகக் கூறினார் பொப் கோல்.
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |