செந்தாமரை






(1948ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
படிப்பவர்க்கு

“சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள். சிலர் காத்திருந்து பெறுகிறார்கள். சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள்.”
“மருதப்பரும் அவருடைய மனைவியும் எப்படியோ காதல் வாழ்வுதான் வாழ்கிறார்கள்.படிப்படியாக முன்னேறியிருக்கிறார்கள்.”
“இப்போது அவனுடைய காதல் வாழ்க்கையும் அப்படித்தான் வீடு தேடி வந்தது. அண்ணி அவனுக்கு ஏற்றவள். அசையாமல் அதிராமல் ஊமை போல் இருந்து அண்ணனுடைய உள்ளத்தை உரிமையாக்கிக்கொண்டாள்.”
“நான் அந்த இளவயதிலும் நினைத்த தற்கெல்லாம் அலைந்தேன். இதிலும் தேடி அலையும் புத்தியைக் காட்டினேன்.”
படித்தவர்க்கு
“அந்த முருங்கை மரத்திலிருந்து இரண்டு கிளிகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து பறந்தன. அவை தென்னை மரத்தில் சென்று ஓலையில் மறைந்திருந்தன. உடனே சிறிது நேரத்தில் வெளிவந்தன.”
“காற்று ஆரவாரம் செய்தபோது இந்தக் கிளிகள் எங்கே இருந்தனவோ தெரியவில்லை. இப்போது பழையபடி வந்துவிட்டன; தென்னைமரத்தைச் சுற்றுகின்றன.”
“ஆறுகிளிகள் இருக்கின்றன. ஆறு கிளிகள் – மூன்று குடும்பம் – மூன்று இணை. எது எதன் துணையோ தெரியவில்லை. பொறுத்துப் பார்ப்போம். எப்படியும் தெரிந்துவிடும்.”
1. திலகம்
பெற்ற தாயைவிடப் பெரிய துணை இல்லை என் கிறார்கள்.எனக்கோ பெற்ற தாயே பெரிய பகையாய் இருக்கிறாள்.
ஆனால், அவள் என்ன செய்வாள்? குடும்ப நிலைமை அப்படி மாறிவிட்டது.
தலையை மெல்ல வாரி,நெற்றியில் சிறு பொட்டு இட்டு, அழகான ஆடைகள் உடுத்து, கண்ணாரப் பார்த்து, பலகையும் புத்தகமும் கொடுத்து, தெரு வரைக்கும் வந்து, “பாதை ஓரமே போ; பார்த்துப் போ; ஓடாதே; போய்விட்டு வா என்று பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினவள் இவள்தான். பள்ளிக் கூடத்திலிருந்து வர நேரமாய்விட்டால் வாசற்படியில் நின்று பார்த்துக்கொண்டே வருவார்போவாரை யெல் லாம். “இன்னும் பள்ளிக்கூடம் விடவில்லையா?” என்று கேட்டு எதிர்பார்த்துக் காத்திருந்தவள் இவள் தான். வந்த உடனே இரண்டு கன்னமும் தடவி, இருகையும் பிடித்துக் கண்ணில் ஒத்தி அணைத்துக் கொண்டே வீட்டினுள் அழைத்துச் சென்று எனக்கு விருப்பமான தின்பண்டமும் பழமும் காட்டியவள் இவள்தான். நிறத்தால் ஓர் உடையும் வகையால் ஒரு நகையும் வாங்கி என்னை அழகுபடுத்திப் பாராட் டியவள் இவள் தான்.
இன்று என் வாழ்க்கைக்கு நஞ்சாய் என்னை அழிப்பவளும் இவள்தான்.
“திலகம் வளர்ந்தது போல் அவ்வளவு செல்வாக்- காக யாரும் வளர்ந்ததில்லை. இது நம் குடும்பத்தில் இல்லாத கதை; ஒரு வேளை நாடாளும் தலைவரின் வீட்டில் நடக்கலாம்” என்று அந்த மாமாவும் வாயாரப் பேசினார். இருக்கலாம்.
வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காமல் வாடும் ஏழை வீட்டிலுங்கூட எந்தப் பெண்ணும் இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளாகியிருக்க மாட்டாள். பிச்சை. எடுத்தே வயிறு வளர்க்கும் நாடோடிக்கு ஒரு மகள் இருந்தால் அவளும் என்னைவிட மேலாக இருப்பாள். இன்று அந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
போன கிருத்திகையின்போது பிச்சைக்காரி ஒருத்தி, கட்டுக் கட்டாகத் திருநீறும் அதன்மேல் அகலமாகக் குங்குமமும் அணிந்துகொண்டு இந்தத் தெரு வழியாகப் பாடிக்கொண்டு வந்தாளே, அவளுடன் ஒரு பெண்ணும் அதே போல் திருநீறும் குங்குமமும் அணிந்துகொண்டு வந்தாள். அவள் மகளாம். அவர்களுடைய வாழ்க்கை பிச்சை எடுப்பதுதானாம். தகப்பனைப் பற்றி அந்தப் பெண்ணுக்குக் கவலையே இருக்காதோ? என்ன இருந்தாலும் சரி, அவள் என்னைவிட மேலான வாழ்க்கையே வாழ்கிறாள்.
என் தந்தையார் உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வராது. ஆனால்,தெரியாமல் சொல்லுகிறார்கள். தாய் இல்லாத பெண் சீர்ப்பட முடியாதென்று. எதிர்வீட்டுக் கனகம் அப்படித்தான் சொல்லி அழுகிறாள். அவள் கதை வேறு. தாய் போனபின் மாற்றாந்தாய் வந்திருக்கிறாள். அப்பனோ, அவள்கையில் குடுமியைக் கொடுத்துவிட்டான். அவளோ ஆட்டிவைக்கிறாள். அவனே ஆடும்போது கனகம் தப்ப முடியுமா ? ஆனால் அவளும் என்னைவிட மேலான நிலைமையில்தான் இருக்கிறாள். ஏன்? அவ ளுக்குத் துணையாக அம்மான் இருக்கிறார்; அத்தை இருக்கிறாள்; பெரியம்மா இருக்கிறாள்.
எனக்கோ அம்மான் இருந்தும் வேடிக்கை பார்க் கிறார். கொடுத்த பணத்தைக் கேட்டதால் அவருக்கு அம்மா பகையாய்விட்டாள். அவர் தம்முடன் பிறந்த தங்கையின் பணத்தைக் கண்டபடி செலவழித்துவிட் டார். கேட்டால் பொல்லாப்பு; தங்கை வாயாடி என் றும், நன்றி கெட்டவள் என்றும் பழிக்கிறார். தங்கை யின் மகளைக் காப்பாற்ற அவருக்கு என்ன அக்கறை?
அவருடைய தம்பியோ, அவருடைய தம்பிதான். அண்ணனுக்கு எண்ணாயிர ரூபாய் கொடுத்தாள். தனக்குத் தம்படியும் கொடுக்கவில்லையே என்று அவருக்கு என் தாய்மேல் வருத்தம். கொடுத்துப் பகையானார் அவர்; கொடுக்காதபடியால் பகை வளர்க்கிறார் இவர். இந்தப்பணத்தால் வந்த வம்பு கொஞ்சம் அல்ல. நான் ஏழையாய்ப் பிறந்திருந்தால் இந்த மாமன்மார் இருவரும் என் குடும்பத்தை இப்படிக் காற்றில் விட்டிருப்பார்களா ? பெரியவரிடம் ஏதாவது சொன்னால், “நான்தான் மோசக்காரன் என்று பெயர் வாங்கிவிட்டேனே. மோசக்காரனிடம் மறுபடியும் ஏன் வருகிறீர்கள்?” என்கிறார். சின்னவரிடம் ஏதாவது சொன்னால், கையில் காசு இருந்தபோது அண்ணன் மேல் நம்பிக்கை; கதி கெட்டபோது தம்பியை நினைக்கிறீர்களா? எல்லாம் அவரே காப்பாற்றுவார். போங்கள், போங்கள்” என்கிறார்.
பட்டணத்துப் பெரியம்மாவோ, “பணம்தான் காடுக்க மனமில்லாமல் போயிற்று. பெண்ணையாவது கொடுத்துத் தாய்வீட்டைக் காப்பாற்றக் கூடாதா?” என்று என் தாயைப் பற்றி வயிற்றெரிச்சல் கொண் டிருக்கிறாள். அந்தப் பெரியம்மாவுக்கு ஒரு பெண் இல்லையாம். இருந்தால் சின்ன மாமனுக்கே கொடுத்து விளக்கேற்றி யிருப்பாளாம். அய்யோ, பாவம் ! அவ் வளவு பெரிய பட்டணத்தில் எத்தனை பெண்கள் இல்லை! விளக்கு எப்படியாவது ஏற்றிவைக்கக் கூடா தா ? நான் ஒருத்திதான் அவளுடைய கண்ணெதிரே படுகிறேன்: மாமன்மாருக்கு என் தாய்மேல் பகை. பெரியம்மாவுக்கு என்மேல் பகை. என் தாய்க்கும்…
பகை என்று சொல்வதா? ஆமாம் – பகையல்லா மல் வேறு என்ன ? கொடுமை! பெற்ற மனம் இப்படியும் துணியுமா ? என்னைக் கிணற்றில் தள்ளிவிடத் துணிந்தாளே ! ஆ!
இல்லை, இல்லை, அந்தத் துணிவு அவளுக்கு இல்லை. ஏதோ கோபம். பெருஞ்சினத்தால் ஆத்திரம் கொண்டாள். வெறி பிடித்தவள் என்று பக்கத்து வீட்டுப் பார்வதி திட்டியது பொருத்தம்தான். பைத்தி யக்காரி என்று மாமி சொன்னாளே, அதுவும் பொருத் தமோ? என்னவோ? ஒன்று மட்டும் உண்மை. அவளுடைய அறிவு முன் போல் இல்லை. அதனால், நான் செல்வமாக வளர்ந்த மகள் என்பதையும் மறந்து விட்டாள்.
என்ன துன்பம் வந்தாலும் என்ன ? இப்படியா அறிவு கெட்டுப் போகும்? குடும்பம் என்றால் துன்பம் வந்துகொண்டும் போய்க்கொண்டும்தான் இருக்கும். உலகமே இப்படித்தான். அதற்காக வருந்தலாம், பெருமூச்சு விடலாம், கண்ணீர் விடலாம், கலங்கலாம், புலம்பலாம். ஆனால் அறிவைப் பறிகொடுப்பதா? மக் களை வருத்துவதா? குடும்பத்தைக் குலைப்பதா?
கணவன் இறந்துபோகலாம், கைப்பொருள் இழந்து போகலாம், உறவினர் உதறிவிடலாம்; ஆனால் உள்ளன்பும் போய்விடுமா? எல்லாவற்றையும் பறி கொடுக்கலாம்; ஆனால் தன் வயிற்றில் பிறந்த மக்களை நினைத்தால் அந்தத் தாய்மனம் திரும்பாதா?
இல்லை, இல்லை; நான் சாக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை. நானும் செத்துப் போனால், அவள் மட்டும் ஏன் உயிர் வாழ வேண்டும்? அந்த ஒரு தங்கைக்காகவா? அவளைப் பற்றித்தான் அம்மா நினைப்பதே இல்லையே!
ஏழு வயதுள்ள குழந்தை அவள். தங்கை பூங் கொடியை நினைத்தால் அழுகை வராத நாள் இல்லை. ஆனால், அவளைப் பெற்ற வயிறு அவளைப்பற்றி நினைக் கவே யில்லையே! காரணம் என்னவோ? குழந்தையா யிருந்தபோதே பெரியம்மா எடுத்துக்கொண்டுபோய் வளர்த்துவந்தாள். வளர்த்த அன்பு இவளுக்கு இல்லையல்லவா? அந்த ஏழு வயதில் நான் இருந்த சீர் என்ன? ஏழு வயதில் என் தங்கை இருக்கும் சிறுமை என்ன? அன்று நான் செல்வக் குழந்தை; இன்று என் தங்கை திக்கற்ற பெண்.
ஆனால், இன்று நான் குழந்தையாகவும் இல்லை ; பெண்ணாகவும் இல்லை; என் தாய்க்கு நெருப்பாக இருக்கிறேன்.
ஆமாம்; போன தை மாதத்திலும் சொன்னாள்: “மடியில் கட்டிய நெருப்பு. இவள் ஒருத்திதான் இப் போது எனக்குக் கவலை. கடவுள் எப்படி விடுவாரோ?” என்று என்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
என் திருமணத்தைப் பற்றிக் கேட்டவர்க்கெல்லாம். “என்ன செய்யலாம்? வேளை வரவில்லை ; அவர் இருந்தால் எல்லாம் சீராக முடிந்திருக்கும்” என்று கண் ணீர் விட்டாள். இப்போது இந்தப் பேச்சே காணோம். அறிவுதான் கெட்டிருக்க வேண்டும். நான் என்ன செய்வேன்? இதை வெளியிலும் சொல்லக் கூடாது. என்னைக் கிணற்றில் தள்ள முயன்றாள் என்பதைச் சொன்னால் எல்லாரும் தாயைப் பழிப்பார்கள்.
ஒரு வேளை அந்தச் சாமியார் பார்த்திருப்பாரோ? அவர் அங்கே பூசை செய்துகொண்டிருந்தார் அல்லவா?
அவர் பார்த்திருப்பார். அவருடைய பூசையா? பூனை எலிவளை எதிரே செய்யும் பூசை தான். ஆனால் ஒரு நன்மை, அவர் நோக்கம் என் தாய்மேல் இராமல் என்மேல் இருப்பதுதான். இது ஏன் என் தாய்க்குத். தெரியாமல் இருக்கிறது? எதைச் சொல்லவும் பயமாக இருக்கிறதே! வாயைத் திறப்பதற்கு முன் கை நீளுகிறதே! நான் ஆயிரம் அடி உதை படத் தகும். அன்பான கை அடிக்கத் தகும். ஆனால் நான் சொல்வதைக் கேட்கும் அறிவு தாய்க்கு இல்லையே! என்ன செய்வேன்?
இந்தச் சாமியார் வீட்டை விட்டுப் போக வேண்டும். அதற்கு நான் என்ன செய்வேன்? இவனோ குடும்பச் சாமியார்; அந்த மாமன் மாமி ஆகியவர்களுக்குக் குலதெய்வம். எப்படியோ என் தாயின் மனத்தையும் மாற்றிவிட்டான்! மந்திரம் என்கிறான்; தந்திரம் என்கிறான்; நாள் என்கிறான்; நட்சததிரம் என்கிறான்; பூசை செய்கிறான்; பித்துப் பிடித்தவனாய் எனனைப் பார்க்கிறான்; உடனே பார்வையை மாற்றுகிறான்.
இப்படி ஒருமுறை என் தாயைப் பார்த்திருந்தால் அவன் கதி என்ன ஆகியிருக்கும்? அவனுடைய உயிரைப் போக்கிவிட்டிருப்பாள்; அல்லது மானத்தைப் பறக்கடித்திருப்பாள். இவளுடைய வாழ்வு இவளுடைய வீரம் எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கும். அதனால்தான் அவன் அங்கே வாலாட்ட வில்லை. கன்றின் காலைக் கடிக்க நாய்க்கு வாய் ஊறலாம். பசுவின் முன்னே அந்த நாய் என்ன செய்ய முடியும்? அதன் கொம்புகளைக் கண்டால் குடல் நடுங்காதா?
ஆனால் நான் மட்டும். எளியவளா? என்னிடம் வாலாட்டுகிறானே! அந்த வாலைக் கத்தரிக்க எனக்கு வழி இல்லையா?
இல்லை, உண்மைதான். அம்மா உரிமையுடன் வாழ்கிறாள். அவள் யாருக்கும் அடங்காத கண்ணகியாக மாறிவிட்டாள். அந்தக் கோவலன் மாண்ட பிறகு. நானோ, தாய்க்கு அடங்கின மகளாக வாழ்கிறேன். என் அடக்கம் ஒரு பாவமா? தாய்க்கு அடங்கியிருக்க வேண்டுமா?
இருக்கட்டும் என்று இருந்தேன். இனி ஒரு வழி தான். ஒன்று, அந்தச் சாமியார் வீட்டை விட்டுப் போக வேண்டும். அல்லது, நான் வீட்டை விட்டுப் போய் உண்மையை விளங்கச் செய்ய வேண்டும்.
சென்ற செவ்வாய்க்கிழமை அவன் பூசை செய்த போது என்னை அங்கே உட்காரச் சொன்னானே, அட் பொழுதே மறுத்திருக்க வேண்டும். ஆனால், மறுத்து என்ன பயன்? உடனே அம்மா என்னைக் கடுகடுத் திருப்பாள். சில நிமிசங்களுக் கெல்லாம் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே என் கையைப் பற்றி இழுத்தானே! என்ன வஞ்சம்! அதையும் அம்மாவுக்குச் சொல்ல முடியவில்லை. சொல்லியிருந்தால் ஒரு வேளை நன்மையாய் இருந்திருக்கும். அடுத்த பூசைக்கு நான் போகவில்லை. அது அம்மாவுக்குக் கோபம். இப்போதும் அதே பிடிவாதம் செய்தேன். அதனால் கிணற்றில் விழ இருந்தேன்.
பாவிப்பயல், இவனே அம்மாவின் அறிவு கெடும் படியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், அறிவு அவ்வளவு எளிதாகப் போலி மந்திரங்களால் மாறி விடுமா? ஏமாற்றப் பூசைகளால் கெட்டுவிடுமா?
அதெல்லாம் உண்மை அல்ல; என் தாய்க்கு இயற்கையாகவே அறிவு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப் பட்டுக் குடும்பத்தை நடத்திவந்தாள். இன்பம் உள்ள வரையில் எல்லாம் நன்றாக நடந்தன. துன்பம் வந்து கலைத்தபோது உள்ள அறிவும் குழம்பி மயங்கியிருக்கிறாள். ஆனாலும் அவளுடைய அன்புக்கு எல்லை இல்லை.
அந்த அன்பு அறிவற்ற அன்பு; அதனால் என்ன பயன்? பித்தனுடைய கையில் அகப்பட்ட கத்தி போல் நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். தாயைப் பழிக்கக் கூடாது. போகட்டும். இப்போது அவளைக் காக்கவும் வகை இல்லையே! அன்புருவாக இருந்த அவ்வளவு உணர்வும் இப்போது வெறுப்பாக மாறி விட்டதே! சினமாக என்மேல் பாய்கின்றதே.
நான் கண் எதிரே இல்லாமல் மறைவேனானால் அந்த வெறுப்பு யார்மேல் பாயும்? பார்க்கலாம். ஒன்று, அந்தச் சாமியார் மேல்; அல்லது அந்த மாமன்மேல்; அல்லது தன்மேலேயே. பித்தன் கத்தியால் தன் கழுத்தையும் அறுத்துக்கொள்வான் அல்லவா?
சமையல் அறையில் குழம்பு தாளித்துக்கொண்டிருந்த என்னை அம்மா கூப்பிட்ட காரணம் என்னவாக இருக்கும்? “ஏன் அம்மா” என்று எதிரில் சென்ற. பொழுது, “போடி கழுதை போ” என்று வெறுப்பாய்ப் பார்த்தாளே! நான் என்ன செய்தேன்? அங்கே நின்றதும் ஒரு குற்றமாக முடிந்தது. “இன்னுமா என் கண் எதிரில் நிற்கிறாய்? அழிகாலி! உன்னைப் பிடித்த சனியன்தான் குடும்பத்தையே ஆட்டி வைக்கிறதே!” என்றாள். என்ன காரணமோ, அம்மாவின் மனத்தில் ஏதாவது பழைய துயரம் தோன்றியிருக்கும் என்று கண்ணீர் சொரிந்துகொண்டே வந்துவிட்டேன்.
அந்தச் சாமியார் ஏதாவது சொல்லியிருப்பானோ என்று ஐயப்படுகிறேன். அவனுக்கு வயதைப் பற்றிய ஒரு மதிப்பு இருக்கிறது. நான் குற்றம் சொன்னாலும் ஊரார் நம்ப மாட்டார்கள். கழுதைக்கும் குறிப்பிட்ட வயது நிரம்பிவிட்டால் இந்த ஊரார் கும்பிட்டு வணங்குவார்கள் போல் தெரிகிறது.அம்மம்மா! அவன் பேசும்போது தெய்வமே எதிரே வந்து காட்சி கொடுத்து உபதேசம் செய்வதாக அல்லவா நடிக்கிறான்? அந்த நடிப்பை அவன் நடித்து ஏமாற்றுவது பெரிதல்ல. ஆனால் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்களே, அவர்களை என்ன என்று சொல்வது? அய்யோ உலகமே! காவி உடுத்தவர்கள் எல்லாரும் விவேகாநந்தர்கள் என்று உலகம் எண்ணுகிறதே! கறுப்பாய்த் தோன்றிக் கத்தும் பறவை எல்லாம் குயில் ஆகிவிடுமா?
இதே சாமியாரை அம்மா வெறுத்துப் பேசிய காலமும் உண்டு. இந்த ஆள்மட்டுமா? வேறு எவரையுமே வாசற்படிக்கு உள்ளே வரவிட்டதில்லையே. துன்பம் மிகுந்து கலங்கிய பிறகுதான், பிச்சை எடுக்கிற போலிகளுக் கெல்லாம் இந்த வீட்டில் வரவேற்புக் கிடைக்கிறது. ஒரு கவளச் சோறு கேட்டால் கால்படி அரிசி கிடைக்கிறது. இதை யெல்லாம் பார்க்கும்போது, கையில் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்ட மாமன், நிலத்தில் விளையும் நெல்லுக்கும் உலை வைக்காமல் விட்டுவிட்டாரே என்ற எண்ணமும் எழுகிறது.
இந்தச் சாமியார் பூசை எதற்காக? எனக்கும் தங்கைக்கும் நல்வழி தேடுவதற்காகவா? தங்கையைப் பற்றித்தான் நினைப்பதே இல்லையே. என்னைப் பற்றியா? “என்றைக்கு வீட்டை விட்டுத் தொலையப் போகிறாய்?” என்ற வாழ்த்துத்தானே ஒரு நாளைக்கு முந்நூறுமுறை எனக்குக் கிடைக்கிறது! போன பணம் கிடைக்குமா என்ற ஏக்கம் காரணமா? அய்யோ, பணமே! அதற்கு இந்த ஏழைச் சாமியார் என்ன செய்வார்? இவரே பொன்னும் பெண்ணும் கிடைக்குமா எனறு கள்ளத் தவம் செய்கிறாரே! இவரை வழிபடு வதை விட்டுவிட்டுத் தன அண்ணனையும் அண்ணியையும் வழிபட்டால் ஏதாவது நன்மை ஏற்படுமே! வியாபாரத்தில் எண்ணாயிரமும் இழந்துபோய்ச் சீர் கெட்டிருந்தாலும், தம்முடைய வருவாயில் ஒரு பங்கு தங்கைக்குக் கொடுக்க முன்வருவாரே! இவ்வளவு பகை இருந்திருக்காதே! என்னையும் பயிற்சிப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து உதவி செய்திருப்பாரே!
அந்தப் பள்ளிக்கூடத்தி லிருந்து இன்னும் பதில் வரவில்லையே! என்ன காரணம்? மங்கையர்க்கரசி அப்படிப் பதில் எழுதாமலிருக்க மாட்டாளே! எழுதியிருப்பாள். என்னுடன் உயிருக்குயிராய்ப் பழகிய அவள், கட்டாயம் எழுதியிருப்பாள். கடிதம் தவறியிருக்குமா? ஒருவேளை அந்தச் சாமியாரின் கையில் அகப்பட்டிருக்குமா?
இருக்கலாம். அன்று மாலையில் சாமியார் என்னை அழைத்து ஏதோ உபதேசம் செய்யத் தொடங்கினாரே! இதுதான் காரணமாக இருக்கலாம். கடிதம் அவர் கையில் கிடைத்திருக்கும். பிரித்துப் பார்த்திருப்பார். மங்கையர்க்கரசி என்னை வருமாறு அழைத்திருப்பாள். செய்தி எல்லாம் சாமியார் தெரிந்துகொண்டிருப்பார். அதனால்தான், ‘பெரியவர்களைப் பார்த்து நடந்து கொள்’ என்றும், “இந்தக் காலத்துப் பெண்களோடு பழக்கம் வைத்துக்கொள்ளாதே, அவர்களை நம்பாதே” என்றும் அறிவுரை சொல்லத் தொடங்கினார். ஆமாம், அதுதான் காரணம். இப்போது தெரிகிறது. இன்னும் சிறிது நேரம் அவர் சொல்வதைக் கேட்டிருந்தால், உண்மை வெளிப்பட்டிருக்கும். தெரியாமற் போயிற்றே ! நான் பழைய வெறுப்போடு வந்துவிட்டேன். தந்திரமாகவும் அந்த வஞ்சகனோடு பழக மனமில்லை. வந்துவிட்டது ஒரு வகையில் நல்லது.மற்றொரு வகையில், அவன் திருட்டைக் காணமுடியாமல் போயிற்றே என்று இப்போது வருந்துகிறேன்.
அவன் பேச்சைக் கேட்காமல் நான் வந்துவிட்ட படியால், அதை அம்மாவிடம் கொடுத்திருப்பான். குறையாயிருந்த உபதேசத்தை அம்மாவிடம் நிறையாகச் செய்திருப்பான். இவ்வளவு காரணமும் இருக்க, நான் அம்மாவை நோவதால் பயன் என்ன? எறும்பூரக் கல்லும் தேயும் என்று அவன் எண்ணியிருக்கலாம். ஐம்பது வயது என்ற மதிப்பும், சாமியார் என்ற போர்வையும் ஊரை ஏமாற்றலாம். கள்ளம் கரவு அற்ற என் தாயின் மனத்தை ஏமாற்றலாம். இரும்பை எடை போட்டு விற்பதும், கணக்கெழுதுவதும், பணம் எண்ணுவதும், பிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போடுவதும் தவிர வேறு உலகம் தெரியாத என் மாமனை ஏய்க்கலாம். வெள்ளிக்கிழமைப் பூசையும், ஆடம்பர விரதங்களும், பட்டுப்புடைவையும், பொன் நகையும் தவிர வேறு வாழ்வு அறியாத என் மாமியை மயக்கலாம். இவர்களுக் கெல்லாம் இவன் தெய்வமாக விளங்கலாம். ஆனால், ஒருவாறு உலகமும் வரலாறும் வாழ்க்கையும் தெரிந்த எனக்கு இவனா தெய்வம்? இவன் எனக்கு ஒரு பேய்! அந்தப் பேயைத் துரத்த முயன்றேன். தோற்றேன். இனி அதுதான் என்னைத் துரத்திவிடும்; நான்தான் ஓடுவேன்.
இனிமேல் கடிதத்தை எதிர்பார்த்துப் பயனில்லை. அறிவு மயங்கித் துயரமே உருவாக இருக்கின்ற அன்னையை நான் இங்கிருந்து காப்பாற்ற முடியாது. வெளியே செல்வேன். பிறர் காப்பாற்றுகிறார்களா என்று பார்ப்பேன். சிறிது காலம் பொறுத்து நானே காப்பாற்றுவேன். இங்கு இருந்தால் முடியாது. நான் ஆற்றில் விழுந்து மூச்சுக்குத் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும்போது, இன்னொருவரை – நீந்தத் தெரியாத. வரை – மூழ்காமல் காப்பது எப்படி? நான் முன்னே நீந்திக் கரையோரம் சென்று, ஒரு மூச்சு விட்டுப் பிறகு தான் விழுந்தவரை எடுக்க முடியும்.
ஆம்; நீந்தத் தெரியாதவள்தான். நல்ல படகு அவளைக் கவலையில்லாமல் செலுத்திக்கொண்டிருந்தது. அவளும் அன்பு நிறைந்த வாழ்க்கை நடத்தினாள். பெரும் புயல் ஒன்று அந்தப் படகைக் கவிழ்த்தது. அவளுடைய அன்புவாழ்க்கையும் கவிழ்ந்தது. காப்பாற்றுவார் இல்லாமல் தவிக்கிறாள். இந்தத் துரும்பை – சாமியாரை-நம்புகிறாள். துரும்பு கரை யேற்றுமா?
எனக்கு நீந்தத் தெரியும்; ஒருவாறு தெரியும். பிறருடைய முகத்தைப் பார்த்து வெளித்தோற்றத்தால் ஏமாந்து போகமாட்டேன். அந்த முகத்தில் உள்ள குறிப்பையும் பார்ப்பேன். உள்ளக்கருத்தும் அறிவேன். இது ஒன்றே போதுமே! என் வாழ்க்கைக்கு உண்மையாகத் துணை செய்ய விரும்பும் நல்லெண்ணம் சிலருடைய முகத்தில் தெரிகிறது. என் சின்ன மாமனுடைய முகத்தில் தன்னலம் அல்லவா ஒளி வீசுகிறது? இந்தச் சாமியாரின் முகத்தில் அதுவும் இல்லையே! இவனுடைய கண் வஞ்சக ஒளி வீசுகிறதே!
என் தாயின் முகத்தில் அன்பு ஒளி திகழ்ந்தது. ஆனால் கவலையிருள் அதைப் போக்கிவிட்டது. இனி எங்கே காண்பேன், அந்த ஒளியை!
இது பரந்த உலகம். நல்லவரும் வாழும் உலகம். நாற்புறமும் உயர்ந்த சுவர்கள் எழுப்பிய இந்த வீட்டில் சில சன்னல்களும் உண்டு. இந்தப் பெரிய சிறைக் கூடத்தில் கிடக்கிறேன். இந்தச் சன்னல்வழியாக வேனும் பரந்த உலகைப் பார்த்து அன்பு ஒளி வீசும் முகத்தை – தன்னலமும் வஞ்சமும் இல்லாத முகத்தைக் கண்டுபிடிக்க முயல்வேன். ஆனால், அதற்கும் தடையுத்தரவு வலுத்துவிட்டது. “திலகம்! சன்னல் வைத்தது எதற்காக, தெரியுமா? காற்று உள்ளே வருவதற்கு; இளம் பெண்களின் கண் வெளியே போவதற்கல்ல” என்றான் அந்தப் பற்றற்ற துறவி. அந்தச் சொற்களைக் கேட்ட போது என் தாயின் மனம் குளிர்ந்திருக்கும்.
2. இளங்கோ
என் அன்னை நல்லவள் தான்; ஆனால் மிக நல்லவள்; அதனால் தன்னை அறியாமல் பிறர்க்குத் தீமை செய்கிறாள்.
தன் தங்கையின் மகளை வலிய அழைத்துவந்து தானே வளர்க்கிறாள். வந்து சிலநாள் இருந்துமகிழ்ந்து போவது உறவினர் வழக்கம். ஒரு வீட்டுக்குழந்தையை மற்றொரு வீட்டார் வளர்ப்பதில் பயன் என்ன? தீமை அல்லவா விளையும்? இயற்கையான வளர்ச்சி இல்லாமல் போய்விடுமே. பத்து வயது வரைக்குமாவது பெற்றோரிடம் வளர வேண்டாவா? முளைக்கும்போதே எடுத்து வயலில் நடுவதால் முற்றிலும் கெடாதா? நாற்று, வளர வேண்டிய அளவு வளர வேண்டுமே!
இப்போது முறைப்படி பார்த்தால், சின்னவள் பூங்கொடி ஆர்க்காட்டில் இருக்க வேண்டும். அவள் இங்கே பெரியம்மாவோடு பழகும் வயது இது அல்ல. இதற்குப் பதில் ஆர்க்காட்டில் அம்மாவின் மடியில் தவழ்ந்து விளையாட வேண்டும். ஏழு வயது ஆனாலும் இன்னும் தாயின் மடியில் குழந்தைதானே! அது போலவே, பெரியவள் திலகம் இங்கே இருக்க வேண்டும். அவள் ஆட வேண்டிய வயது கடந்து விட் டது. அம்மாவிடம் கொஞ்சும் பருவம் கடந்துவிட்டது. பரந்த உலகத்தில் தனக்குத் தகுந்த துணையைப் பார்த்துக்கொண்டு பிறந்த வீட்டை விட்டுத் தனி வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். அவளோ பத்தாவது படித்தவள்; இளங்குழந்தை அல்ல. அவளுக்கு இப்போது ஒரு தாயின்மடி தேவையில்லை. ஆனால் ஒரு தோழியின் கை வேண்டும். அல்லது, குறைந்தது ஒரு பெரியம்மாவின் பேச்சுத் துணை வேண்டும். பட்டணம் போன்ற பரந்த உலகம் வேண்டும். ஆர்க்காட்டில் என்ன இருக்கிறது? காலையில் எழுந்தவுடன் வீசம் வீசங்காணி என்று கணக்குப் போட்டுக்கொண்டு குல்லாயோ தலைப்பாகையோ அணிந்துகொண்டு மண்டியில் போய் உட்காரும் வாழ்வுதானே அங்கு மிகுதியாக இருக்கிறது.
ஆனால், அம்மாவிடம் இதெல்லாம் சொன்னால் ஏற்பதில்லை. “திலகம் நல்லவள்தான்; ஆனாலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படித்தவள்” என்கிறாள். ஆங்கிலப் பள்ளிக்கூடத்துக்கும் திலகத்தின் வாழ்க்கைக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. தொடர்ந்து கேட்டால், அவள் நம் குலத்துப் பெண்களைப் போல் நடக்கத் தெரியாதவள். வெள்ளைக்காரி போல் ஆகிவிட்டாள். வயதான பிறகும் தெருவில் வந்து நிற்கிறாள். தலை நிமிர்ந்து பேசுகிறாள். கேட்டதற்கெல்லாம் உடன் உடன் முழு முழுச் சொல்லாகப் பேசுகிறாள்” என்று குறை கூறுகிறாள்.
நம் குலத்துப் பெண்களைப் போல் நடக்க வேண்டுமாம். வயதான பிறகு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாதாம். கதவை இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டு முன்தானையும் தெரியாதபடி ஒதுங்கி ஒளிந்து, முகத்தின் ஒரு பகுதி மட்டும் தெரியுமாறு வெளியே எட்டிப் பார்க்க வேண்டும். இதுதான் நம் – குல ஒழுக்கமாம். தலை நிமிர்ந்து பேசுகிறாளாம். என்ன தவறு? தலைகுனிந்து அரைப் பார்வை பார்த்து அரை குறைச் சொல்லாகச் சொல்லி வினைமுற்று இல்லாமல் வாக்கியங்களை முடிக்க வேண்டும் என்று எந்தத் தொல்காப்பியனாரும் எழுதிவிட்டுப் போகவில்லையே! தமிழ் நாட்டில் அவ்வளவு கெட்டவர்கள் பிறக்கவில்லை. நானும் படித்திருக்கிறேன். ஆனால் இன்னும் சாஸ்திரம் என்ற ஒன்று நம் நாட்டுப் பெண்களின் ஒழுக்கத்தை இப்படிக் கண்மூடித்தனமாக வரையறுத்துக் கூறுவதைப் பார்க்கவில்லை. என் தாயின் வாயில் வருவதெல்லாம் சாஸ்திரம்! அவள் நினைப்பதெல்லாம் சாஸ்திரம்! சாஸ்திரம் தவிர வேறு ஒன்றுமே இல்லை!
எதை எடுத்தாலும், “ஏன்? அப்படியானால் சாஸ்திரம் பொய்யா ?” என்று ஒரே கேள்வி கேட்டு என்னை மடக்குகிறாள். சில வேளைகளில் நான் கேலி செய்வதும் உண்டு. அந்த அன்னையின் வயிற்றில் பிறந்துவிட்டு அவளையே எள்ளி நகையாடுவதா என்று உடனே தோன்றும். இதனால் என் அன்பு குறைந்துவிட வில்லை.
சில வாரங்களாகத் திலகத்தைப்பற்றி அடியோடு மறந்துவிட்டிருந்தேன். நேற்று ஊரிலிருந்து சோமசுந்தரம் வந்து சொன்னது முதல் கவலையாக இருக்கிறது. இந்த வயதில் ஓர் இளம் பெண் இவ்வளவு துன்பமும் பட வேண்டுமா? வாழ்க்கை என்பது என்ன ? தண்டனையா? விளையாட்டா? இது தண்டனை தான் என்றால், எல்லாருக்கும் தற்கொலையல்லவா உபதேசம் செய்வேன்?
திலகத்திற்கு விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வது நல்லது, ஆனால், நல்ல கணவன் கிடைக்க வேண்டுமே. சிற்றப்பா மாதம் முந்நூறு ரூபாய் சம்பாதித்து விருப்பம் போல் செலவழித்து நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்வக் குழந்தையாக இருந்தாள் திலகம். தாசில்தாரின் மகள் என்று எல்லோரும் பெருமையாகப் பாராட்டினார்கள். தை மாதம் பிறந்தால் ஆவணி மாதம் வரையில் பெண் கேட்பதற்கு என்று எல்லோரும் வந்துகொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர் என்று சிலர் வந்தார்கள். தொலைவான உறவு என்று சிலர் வந்து கேட்டார்கள். “இன்ன ஊரில் கேட்டால் உங்களுக்கும் எங்களுக்கும் பழைய உறவு இருப்பது தெரியும்” என்று பேரேடும் சிற்றேடுமாகக் கொடிவழி எடுத்துக்காட்டிச் சிலர் பெண் கேட்டார்கள்.
சிற்றப்பா திடீரென்று மாரடைப்பால் மறைந்தார். உயர்ந்த கற்பரசியாக இருந்த சின்னம்மா வெறிபிடித்துக் கலங்கினாள். அன்று கெட்ட அறிவு இன்று வரையில் திருந்தவில்லை. முன்னே பெற்றிருந்த ஐயாயிர ரூபாயுடன் அப்போதிருந்த மூவாயிரமும் அந்த மாமன் எடுத்துக்கொண்டு போய்விட்டார். இப்போது எல்லாருக்கும் சொல்கிறாராம்: “செல்வாக்காக வளர்ந்த குழந்தைகள். எண்ணாயிரம்தான் சொத்து வைத்துப் போனார் என் தங்கை கணவர். அதைக் கொண்டு அந்தக் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது? என்ன வட்டி வரும்? எங்காவது பாங்கியில் போட்டால் மாதம் முப்பது ரூபாய்தான் வரும். முந்நூறு செலவழித்தும் போதாது என்று இருந்த குடும்பத்திற்கு முப்பது ரூபாய் எந்த மூலைக்கு? என் தங்கைக்கே ஒன்றும் தெரியாது. எல்லாம் என்மேல் விழுந்துவிட்டது. வேறு வழி இல்லை. என்ன செய்வது?” என்று மண்டித் தெருவெல்லாம் சொல்லிச் சொல்லி, மாமன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.மூன்றாம் மாதமே வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் என்று சொல்லிக் கடையைச் சிலநாள் மூடியும்விட்டார். கணவனை இழந்து கலங்கிய சிற்றன்னை, கைப்பொருளும் இழந்த கதை தெரிந்து அறிவு கெட்டாள். மக்களைக் காப்பாற்றும் நம்பிக்கையும் இழந்தாள். அந்தத் திலகத்தைப் பார்த்துப் பார்த்து அழுதாள். இப்போது அழுவது நின்று வெறுப்புத்தான் வருகிறதாம். இயற்கைதானே! அன்பு முறிந்துபோனால், அதன் இடம் வெறுப்புக்குத்தானே!
திலகத்திற்கு நல்ல கணவன் கிடைத்துத் திருமணம் முடிந்துவிட்டால், சிற்றன்னையின் கவலை குறையும்! ஆனால், இன்று அவள் ஏழை என்பதை எல்லாரும் தெரிந்துகொண்டார்கள். நெருங்கிய உறவினர், தொலைவான உறவினர், உறவில்லாத இனத்தார், பழைய ஊரார் எல்லாரும் தெரிந்துகொண்டார்கள். வீட்டில் பெண் கேட்க நுழைவார் இல்லை; அடி. வைத்து வருவார் இல்லை.
அந்தக் காலத்தில் திலகத்தின் திருமணத்திற்குச் சிற்றப்பா தடையாக இருந்தார். “என் மகள் குழந்தை. அவள் இப்போது பத்தாவது படிக்கிறாள். பிறகு பி.ஏ. படிக்க விரும்பினால் கல்லூரியில் சேர்ப்பேன். படிப்பை நிறுத்திவிட்டுக் கல்யாணம் செய்ய எண்ணமில்லை. படிக்கிற வரைக்கும் படிக்கட்டும், பிறகு பார்க்கலாம்” என்று எல்லோருக்கும் சொல்லி மறுத்துவிட்டார். இன்று பத்தாவது படித்து முடித்துவிட்டாள்; கல்லூரி யில்படிக்க வழி இல்லை. பயிற்சி படிக்க விரும்புகிறாள், பணம் இல்லை; பணம் இருந்தாலும் யாருக்கும் மனம் இல்லை. முந்நூறு ரூபாய் சம்பளம் வாங்கிய தாசில்தார் மறைந்தார்; இப்போது அந்த வீட்டில் மூன்று காசுக்கும் வழி இல்லை; முற்போக்கான மனமும் இல்லை.
இனி ஒரே வழிதான்; திருமணம்தான். அதற்கு எல்லோரும் உடன்பாடாக இருக்கிறார்கள். சின்னம்மா முதல் அன்னை வரையில் எல்லாருக்கும் உடன்பாடு தான். அதுமட்டும் அல்ல; மூடநம்பிக்கை அவர்களை இப்போது அலைக்கின்றது. அவளுக்குத் திருமண மான பிறகு எல்லாம் சீர்ப்பட்டுவிடுமாம். அவள் வீட்டை விட்டு வெளியே போய்விட்டால், குடும்பத்தைப் பிடித்த சனியன் விடுதலையாகுமாம். இப்படி ஒரு சோதிடக்காரன் சொன்னானாம். என்ன பைத்தியம் என்பது?
பெற்று வளர்த்துப் பாராட்டிச் செல்வ மகள் என்று போற்றிய அதே பெண்ணை எவனோ ஒருவன் ஒரு பழம் பஞ்சாங்கத்தைப் புரட்டிச் சொன்னதைக் கேட்டு, அன்று முதல் சனியன் என்றும் தரித்திரம் என்றும் பேசுவதா? அவ்வாறு சொன்னவன் சனியன்; அதைக் கேட்டவர் சனியன்: அந்த நம்பிக்கை சனியன்; இந்தச் சனியன் தொலைந்தால்தான் வீடு சீர்ப்படும், குடும்பம் சீர்ப்படும்! இந்தச் சோதிடத்தை எல்லாப் பைத்தியக்காரிகளும் நம்புகிறார்கள். அருமைத் தங்கை திலகம் பூப்படைந்த நாள் கெட்ட நாளாம். அய்யோ இறைவனே! இப்படியும் மக்களைப் படைத்துவிட்டாயே! இதைப் பெற்ற தாயும் பெரிய தாயும் நம்புகிறார்கள்; விளம்பரப் படுத்துகிறார்கள். இதை இவர்களே சொல்லிக்கொண்டிருந்தால், பெண் கேட்க வருகிறவர்கள் எவரேனும் உள்ளே நுழைவார்களா? ‘அந்தச் சனியன் நமக்கு வேண்டா’ என்று அவர்கள் அஞ்சி ஓடுவார்களே.
நண்பன் குமரப்பன் எட்டாவது பிள்ளையாம். எட்டிப்பார்த்த இடம் குட்டிச்சுவராய்ப் போய்விடுமாம். அவனுக்குப் பெண் கொடுப்பவர்கள் அஞ்சுகிறார்களாம். என்ன நம்பிக்கை! என்ன அறியாமை! எந்தக் குடும்பமும் அப்படித்தான் இருக்கிறது!
தங்கை திலகத்தைப் பட்டணத்திற்கு அழைத்துக்கொண்டுவர எவ்வளவோ முயன்று பார்த்தேன். என் அன்னையே தடுத்துவிட்டாள். கெட்ட கிரகமாம்; வீட்டுக்கு வந்தால் எனக்கே ஆகாதாம்; குடும்பத்துக்குத் தீங்கு வருமாம்; அதனால் திருமணமான பிறகு, கணவனும் மனைவியுமாக அழைத்துக் கொண்டு வருவதுதான் நல்லது என்று சொல்கிறாள். அதை மீறி நடப்பதற்கும் பயமாக இருக்கிறது.
என்ன பயம்! எனக்கோ என் குடும்பத்திற்கோ கெடுதல் வரும் என்று நான் அஞ்சவில்லை. என் அருமைத் தாயின் மனத்திற்குத் தீங்கு வருமே என்று தான் அஞ்சுகிறேன். உடல்கொலையைவிட மனக் கொலை பொல்லாதது என்றுதான் நடுங்குகிறேன்.
இதைத்தான் ஆர்க்காட்டில் கண்ணாரக் காண்கின்றேனே! சின்னம்மா எவ்வளவு அன்பாகத் திலகத்தை வளர்த்துவந்தாள்! இப்போது எவ்வளவு சிறுமை செய்கிறாள்! மனம் கெட்ட பிறகு மருந்து தேடிப் பயன் என்ன?
நல்ல வழியாகவே இந்தத் தாய்மாரின் மனத்தை மாற்றிவிடலாம் என்றாலோ, அது வெறுங் கனவு தான். இமயமலையைவேரோடு எடுத்து வேறிடத்தில் வைத்து விடலாம். ஆனால், இவர்களுடைய மனத்தில் உள்ள மூடநம்பிக்கையைச் சிறிதும் குறைக்க முடியவில்லையே. ஒழுங்காகக் குடும்பம் நடக்கும்போது சொல்வதற் கெல்லாம் தலை அசைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆமாம் என்றும், மெய்தான் என்றுங்கூட ஒவ்வொரு வேளை வாய்திறந்து சொல்கிறார்கள். ஆனால் யாருக்காவது உடம்பு கெட்டபோதோ, ஏதாவது பொன்னோ பொருளோ இழந்தபோதோ, தலை அசைத்ததும் வீணாகிறது; ‘ஆமாம்’ பாட்டும் பொய்யாகிறது; பழைய மூடநம்பிக்கை தலைகாட்டுகிறது. மந்திரக்காரன் வேண்டும், தந்திரக்காரன் வேண்டும், சோதிடம் பார்க்க வேண்டும், சாமியாரை அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்கள். அன்பு மிகுந்தவர்கள்; அதனால் நல்லவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் வல்லவர்களாக இல்லை.
போன மாதத்தில் பூங்கொடிக்குக் காய்ச்சல் வந்து மூன்று நாள் விடாதிருந்தபோது அன்னை பட்டபாடு! முதலில் கை வைத்தியம்; இரண்டாம் நாள் காலையில் சித்த வைத்தியம்; அன்றுமாலையில் ஆங்கில வைத்தியம்; மூன்றாம் நாள் காலையில் மறுபடியும் ஆங்கில வைத்தியமே; ஆனால் புதிய வைத்தியர் அன்று மாலையில் எனக்கும் சொல்லாமல் எங்கிருந்தோ ஒரு மந்திரக்காரனை வருவித்துவிட்டாள். அவன் என்னவோ சொல்லிப் பச்சை வைக்க வேண்டும் என்று ஏமாற்றிவிட்டுப் போனான். மறுநாள் காலையில் காய்ச்சல் இல்லாததைக் கண்டு பூரித்தாள்; என்னிடம் ஓடிவந்து, “அப்பா, இளங்கோ! அந்த மந்திரக்காரன் கெட்டிக்காரன். கொண்டித்தோப்பில் பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்து வீடாம். நீ எப்படியாவது போய்க் கையோடு அழைத்துக்கொண்டு வா. ஒரு பூசை போட்டுவிட்டால் மறுபடியும் குழந்தைக்கு ஒன்றும் வராது” என்று கெஞ்சினாள்.
மூட நம்பிக்கையை வளர்த்து மக்களை ஏமாற்றுவதில் ஆங்கில வைத்தியன் தோற்றுவிடுகிறான்; எவ்வளவோ புதுப்புதுப் பெயர்களை வைத்து, நோய்களின் முகவரி எல்லாம் சொல்லி, அவற்றின் தாய்மார்களான பூச்சிகளுக்கெல்லாம் பெயர், வடிவம், தொழில், குணம் எல்லாம் கற்பித்து மருட்டிப் பார்த்தும், ஆங்கில வைத்தியன் ஏமாந்து ஏமாந்து போகிறான்; பூசாரி வைத்தியனே மூடநம்பிக்கை ஊட்டுவதில் கெட்டிக்காரன். இவ்வாறு எண்ணித் தலையசைத்துக்கொண்டே நாற்காலியில் இருந்தேன். நான் இடத்தை விட்டு எழாததைக் கண்ட அன்னை மறுபடியும் வந்து, “அப்பா! அந்த மந்திரக்காரன் மிகக் கெட்டிக்காரன். பக்கத்துத் தெருவில் ஊமையாக இருந்த ஒரு பையன், ‘அப்பா, அத்தை’ என்று பேசுகிறானாம். இருபத்தைந்து வருசமாகக் குழந்தை யில்லாமல் இருந்த கீழ்ப்பாக்கத்தம்மா இப்போது, தலைமுழுகாமல் இருக்கிறாள். திருப்பள்ளித் தெருவில் ஒருவன் ‘டைபாய்ட்’ காய்ச்சல் வந்து மூன்று வாரம் எமனோடு வாதாடினானாம். நம்பிக்கை இல்லாமல் போய், கஞ்சித்தொட்டி ஆசுபத்திரியிலிருந்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்களாம். இந்த அய்யா கைப்பட்டதும் எழுந்து உட்கார்ந்துகொண்டானாம் ” என்று எத்தனையோ உதாரணங்களை எடுத்துரைத்தாள்.
பல ஆண்டுகளாய்ப் பழகி அன்னையின் மனத்தை. அறிந்திருந்த நான், மெல்ல எழுந்தேன். சித்த வைத்தியர் சொன்னது நினைவுக்கு வந்தது. “மூன்று நாள் காய்ச்சல், ஒன்றும் கவலைப்பட வேண்டா, தானே போய்விடும்” என்று சொன்னார். அதன்படியே நான்காம் நாள் நின்றுவிட்டது. அவர் கொடுத்த மருந்தின் பயன் என்றோ, ஆங்கில மருந்தின் குணம் என்றோ சொன்னால் நம்பிக்கை வராது என்பது தெரியும். கண்ணால் கண்டதை நம்புகிறவள் அன்னை. கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர எண்ணித் தெளிந்ததே மெய் என்னும் பழமொழி அவளிடம் செல்லாது. காரண காரியங்களை எண்ணிப் பகுத்து உணரும் வல்லமை, படித்துப் பட்டம் பெற்றவர்களில் கூடப் பலருக்கு இல்லையே. குடும்ப இன்பதுன்பம் என்ற பாடம் தவிர வேறு படிப்பு அறியாத தாய்க்கு விளக்கம் எங்கிருந்து வரும்? “முன்னே கொடுத்த மருந்தின் பயன் அம்மா இது; அந்த மருந்து பொறுத்துத்தானே வேலை செய்யும்” என்று சொன்னேன். “ஒரு வேளை இப்படியும் இருக்கலாம். எல்லாவற்றையும் விட இயற்கைதான் ஆற்றல் மிகுந்தது. நோயை உண்டாக்கியது இயற்கை. நோயைத் தீர்க்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. நல்ல காற்று, நல்ல வெளிச்சம் தட்ப வெப்ப மாறுதல் இவைகளுக்கு இருக்கும் வல்லமை எந்த டாக்டருக்கும் இல்லை என்று ஆங்கிலப் புத்தகங்களில் எழுதியிருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், காற்று, ஒளி இவற்றையெல்லாம் தெய்வம் என்று பூசை செய்தார்கள். நாமும் அவர்கள் போன வழியில்தானே போக வேண்டும்? மந்திரக்காரன் இப்போது வேண்டா அம்மா” என்று அன்னைக்குச் சொன்னேன்.
அன்னை வருத்தத்தோடு சமையலறையை நோக்கி நடந்தாள். என் மனம் புண்பட்டது. “அம்மா” என்றேன். “பெரியவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். வீண் கதையெல்லாம் ஏன்?” என்று நின்றாள். “நான் எவ்வளவோ பட்டிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். மந்திரக்காரன் வராமல் இருந்தால் தெரிந்திருக்கும். வந்தபிறகு இப்படிப் பேசுகிறாய். மந்திரத்தை அடுத்து ஒரு பூசையும் போடாமல் விட்டுவிட்டால், நாளைக்கு என்ன ஆகுமோ? உனக்கு என்ன தெரியும்? இருபத்தெட்டு நாளைக்குள் குடும்பத்தில் அந்தக் கேடு காட்டுமே. மந்திரம் என்றால் என்ன, மாங்காயா, புளியங்காயா? இப்போது உங்கள் சின்னம்மா ஆர்க்காட்டில் அனுபவிக்கிறாளே, போதாதா?” என்று நடுக்கமான குரலில் சொன்னாள்.
இன்னும் வாய்திறந்து பேசினால் அந்தக் களங்க மற்ற மனம் ஆறாப் புண்ணாய்விடும் என்று அஞ்சினேன். உடனே சொக்காய் அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். காரணம் இன்னது, அதனால் விளையும் காரியம் இன்னது என்று அந்த வைத்தியன் காட்ட முயல்கிறான். அதனால் தான் தோல்வி அடைகிறான். மந்திரக்காரன் காரணத்தையும் காரியத்தையும் இருண்ட திரை விட்டுப் பிரிக்கிறான்; அதனால் மக்களின் மனத்தில் வெற்றிக்கொடி நாட்டுகிறான். அந்த வைத்தியனால் பொதுமக்களைப் பயமுறுத்த முடியவில்லை; இதனால் இத்தனை நாளுக்குள் இன்ன கேடு வரும்; குடும்பத்தைச் சனியன் பிடிக்கும் என்று சொல்ல அவனால் முடியவில்லை; இது அவனுடைய குறை என்று இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டே கொண்டித்தோப்பை நோக்கி விறு விறு என நடந்தேன்.
கொண்டித்தோப்புக்குள் என் கால்கள் நுழைய மறுத்தன. காரணம், திருப்பள்ளித்தெருவைக் கண்ட பிறகு என் மனம் மாறிவிட்டது; வந்த வேலை பெரிதல்ல என்று என்னுடன் போராடத் தொடங்கிவிட்டது. கால்களை வேகமாக அடி எடுத்து வைக்குமாறு ஏவினேன். அவற்றைக் குறை கூறிப் பயன் என்ன? என் மனம் பின்னே இருந்து இழுத்துப் பிடித்தால் எப்படித்தான் நடக்க முடியும்?
வேறு வழி இல்லாமல் காலைத் திருப்பித் திருப்பள்ளித்தெரு வழியாகவே நடந்து அந்தத் தெருவைக் கடந்து வேறு வழியாகக் கொண்டித்தோப்பை அடையலாமெனத் துணிந்தேன். திருப்பள்ளித்தெரு – திருப்பள்ளித்தெரு – திருப்பள்ளித்தெரு – என் மனத்தை நடுங்கவைத்த தெரு. கால்கள் இப்போதும் விரைந்து நடக்கவில்லை. அந்த வீட்டை நெருங்க நெருங்க என்னை அறியாமல் ஒரு வகை நடுக்கம் மனத்தில் வளர்ந்தது; உடலிலும் தெரிந்தது. அது அச்சத்தின் விளைவா? அல்ல, அல்ல. ஏமாற்றத்தின் விளைவா? அதுவும் அல்ல. வேறு காரணம் என்ன சொல்வது? கனவா? அதுவும் அல்லவே. நடுத்தெருவில் காலை ஒன்பது மணிக்கு நடந்து செல்வது குற்றமா? என்ன நடுக்கம்? அதை அறிவார் யார்? சூடளக்கும் கருவி இருந்தால் என் உள்ளக்கொதிப்பை அளந்திருக்க முடியுமா? அல்லது, இரத்த அழுத்தத்தையோ இரத்த ஓட்டத்தையோ அளக்கும் மற்றக் கருவிகளால் அதை அளந்திருக்க முடியுமா?
அந்த வீடும் வந்துவிட்டது. மெல்ல நடந்தேன். மரவட்டை போல் வடிவம் சிறுத்து ஊர்ந்து செல்லும் வரம் பெற்றிருந்தால் மகிழ்ந்திருப்பேன். அப்போது அவள் திடீரென வெளியே வந்து மரவட்டையான என்னை மிதித்திருந்தாலும் சாகத் துணிந்திருப்பேன். சன்னலை நோக்கினேன். ஒரு முகமும் காணவில்லை.
வந்த வழியே திரும்புவது போல் திரும்பினேன். மறுபடியும் மெல்ல நடந்துகொண்டே வந்து சன்னல்களைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அவளுடைய அண்ணன்தான் தென்பட்டான். என்னைப் பார்த்ததும் ஒரு கனைப்புக் கனைத்தான்.
எங்கிருந்தோ என் ஆண்மை என்னிடமே வந்து உண்மையாகவே அன்புகொண்டிருந்தாளோ? இருந்தாலும் இருக்கும். எதிர் வீட்டுச் சகுந்தலை போல் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட இளம்பெண் அல்ல இவள். உரிமை உடையவள், அறிவு உடையவள். திறமையும் உடையவள். பணம் பாதாளம் மட்டும் பாயும் என் கிறார்களே! சகுந்தலையின் மனத்தை என்னிடமிருந்து பிரித்தவர்கள் அவர்களுடைய பெற்றோர். இவளுடைய மனத்தை என்னிடமிருந்து பிரித்தது பணமாக இருக்கலாம். காதல் வல்லமை பெறாதபோது, பெற்றோரின் கட்டுப்பாடும் பணத்தின் செல்வாக்கும் வெற்றி பெறுகின்றன. இவள் என்னை மணந்திருந்தால் மாதம் எண்பது ரூபாயில் வாழ்க்கை நடத்த வேண்டும்; வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டும்; நூல் புடவை உடுத்த வேண்டும். இதை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் அவனை மணந்துகொண்டாள், கலெக்டர் ஆபீஸ் கிளர்க்கின் மனைவி என்பதை விட்டுக் கள்ளுக்கடைக்காரன் மனைவி என்று பெயர் எடுக்க விரும்பினாளே! மாதம் அறுநூறு அல்லது ஆயிர ரூபாய், தனி பங்களா, பட்டுப்புடவை இவற்றைவிடக் காதல் பெரிதாகத் தோன்றவில்லை. அவளும் ஏமாந்தாள், ஒருவன் பணத்தை நம்பி. நானும் ஏமாந்தேன், அவளுடைய மனத்தை நம்பி.
இவ்வாறு எண்ணிக்கொண்டே கொண்டித் தோப்பில் பள்ளிக்கூடம் இருக்கும் தெருவை அடைந்தேன். அங்கே மறுமணம் என்ற சினிமா விளம்பரம் கண்டேன். போய்ப் பார்க்க விரும்பினேன். அதைத் தொடர்ந்து என் நண்பன் மருதப்பன் சொன்ன சொல்லை நினைத்தேன்: “பி.ஏ. படித்தும் உளநூல் தெரியாமல் ஏமாந்தாயே! இரண்டுமுறை ஏமாந்தது போதும். இனிமேல் எனக்குச் சொல்லாமல் சேர்ந்தது. அவனைப் பார்த்து நானும் ஒரு சிறு கனைப்புக் கனைக்க முயன்றேன். அடக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். தலை நிமிர்ந்தேன். நான் விட்ட பெருமூச்சில் என் நடுக்கம் அழிந்தது. கிழவனும் கிழவியுமாய் இருவர் வெற்றிலை பாக்கு மென்றுகொண்டே அசைந்து என் எதிரே வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் கிழவனின் கண்ணொளி மங்கியிருந்தபோதிலும் எனக்கு அறிவூட்டும் ஆற்றலை இழக்கவில்லை. என்னைப் போல் அவன் ஏமாற்றம் அடையவில்லை. நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை காணப்பட்டது அவனு டைய கண்ணொளியில்.
நான் செய்த தவறுதலை உணர்ந்தேன். விருந்துக்கு அழைத்த வீட்டினுள் நுழையும் தருவாயில் “உனக்கா உணவு?” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளினால், அந்த வீட்டை எட்டியும் பார்க்கத் தகுமோ? சீ! சீ! அவளுடைய அழகும் அறிவும் நடையும் நடிப்பும் யாரை ஏமாற்றும்? இனியும் அவற்றிற்கு நான் அடிமையாக இருக்க முடியாது. அன்புக்கு அடிமையாகலாம் என்று எண்ணினேன். என் இனிய குரல் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாம். என் பேச்சுத் திறமை அவள்அறிவை மயக்கிவிட்ட தாம். என் ஆண்மை எழில் அவள்நெஞ்சை அள்ளிக் கொண்டதாம். இப்படி யெல்லாம் என்னிடம் வஞ்சகமாக நடித்தாள். கடிதத்தில் கண்டவை எல்லாம் எழுத்துக்கள்; கருத்துக்கள் அல்ல. இதைத் தெரிந்து கொள்ள மூன்று மாதம் ஆயின. கையில் இருந்த காசைப் பறிப்பதற்கும், இரண்டு பவுண்டன் பேனாவைப் பெறுவதற்கும் காதற்பேச்சையும் கண்பார்வையையும் பயன்படுத்திக்கொண்டாள். அது வியாபாரம்! காதல், விலையாகும் சரக்கா? இல்லை. ஒருவேளை “காதல் உலகில் இறங்கிவிடாதே. என் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்” என்று அவன் சொல்லியிருந்தான். அவனுடைய வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. கல்லூரி மாணவனையும் அரிச்சுவடிப் பையனையும் ஒன்றாகப் படிக்கவிட்டது போன்றதுதான் அவனும் அவன் மனைவியும் நடத்தும் வாழ்க்கை.
அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்து வீடு என்று சொன்னாள் அன்னை.ஒரு தாழ்ந்த ஓட்டு வீடு இருந்தது. அதுவாக இருக்கும் என்று உள்ளே பார்த்தேன். கக்குவான் இருமலால் ஒரு குழந்தை இருமி இருமித்தான் தின்ற தோசையை வாசற்படி யில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தது. அதைவிடம் பெரிய குழந்தை மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டு மஞ்சள் காமாலைக் கண்ணோடு உட்புறத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தது. “பாடையில் வைக்க, கூடையில் வார” என்ற பல்லவியோடு ஓர் அம்மையார் இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருந்தார்.
“மந்திரக்கார அய்யா இங்கே இருக்கிறாரா அம்மா” என்று கேட்டேன். “இருக்கிறார், இருக்கிறார்; அதற்கு என்ன குறைச்சல்?” என்ற பதில் வந்தது. “யார் அய்யா!” என்ற மற்றொரு குரல் கேட்டது. “நான், வேப்பேரி” என்றேன். பீடிப் புகை முன்னே வர அவர் பின்னே வந்தார். கண்கள் சிவந்திருந்தன. அய்யா நெருங்கி வந்ததும் என் ஐயம் தீர்ந்தது. காலை எட்டு மணிக்குக் காப்பி குடிப்பதற்குப் பதில் சாராயமே குடிக்கும் குடிவளம் உடையவர் என்று தெரிந்துகொண்டேன். வந்த செய்தியைச் சொல்லிவிட்டு நிற்கவும் மனம் கூசி வெளியே வந்தேன்.
இரண்டு வீடு கடந்து வந்ததும் மறுபடியும் அவனிடம் போய், “கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்” என்றேன். “எல்லாம் தெரியும். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். எல்லாம் இங்கிருந்தபடியே செய்யத் தெரியும். கையில் ஏதாவது பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றான். பணப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து நீட்டினேன். “ஒன்றும் கவலை வேண்டா என்று உங்கள் அம்மாவுக்குச் சொல்லுங்கள். சாயுங்காலம் வருவேன். ஒரு கோழி வாங்கிவைக்கச் சொல்லுங்கள். அங்கே கிடைக்குமல்லவா?” என்றான். ‘ஊம்’ கூட்டித் தலையசைத்து விட்டு வெளியே நடந்தேன்.
வாசற்படியை மெல்லக் கடந்தேன். அப்போது, “அடீ! இந்தாடி, என்ன மருந்து கொடுக்கிறார் அந்தச் செவிட்டு வைத்தியர்?” என்ற குரல் கேட்டது. மந்திரக்காரனுடைய குரல்தான் என்று தெரிந்து, கேட்டுக்கொண்டே நின்றேன். “ஆறு நாளாக மருந்து கொடுத்தும் காய்ச்சல் தீரவில்லையே. ஆசுபத்திரிக்காவது எடுத்துக்கொண்டு போகலாமா?” என்று தொடர்ந்து பேசியது கேட்டேன். “அந்த ரூபாயைக் கொடுங்கள், வைத்தியருக்குக் கொடுக்கலாம். பணம் நீட்டாமல் யார்தான் நல்ல மருந்தாகக் கொடுப்பார்கள்?” என்று அவன் மனைவி பேசியதும் கேட்டது. மேலும் நிற்பது அழகல்ல என்று நகர்ந்து சிவமே என்று எண்ணிக்கொண்டே வந்தேன்.
3. மருதப்பன்
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை…
என்ன அழகான ஓவியம் ! ஓர் அழகான காதலியின் ஓவியம்! அல்ல, அல்ல, சிறந்த நுட்பமான காதலின் ஓவியம்! வாழ்க அகநானூறு என்று வாழ்த்தினேன்.
புத்தகத்தை மூடிவிட்டு, கால்களை மேசையின் மேல் நீட்டி நாற்காலியில் நன்றாகச் சாய்ந்துகொண்டேன். பக்கத்துத் தெருவில் இருந்த தென்னை மரங்களின் ஒழுங்கு, கண்ணுக்கு இனிய காட்சியாக இருந்தது. ஒரு முருங்கை மரம், பாவம், உரிமையற்று வளர்ந்து நின்றது. புதிய கிளைகள் விடுவதும் ஒடிப்பதுமாக இருந்தால் அது தடையின்றி வளர்வது எங்கே? தப்பித் தவறி ஒடிக்க மறந்து விட்டுவிட்டாலும் பாழாய்ப்போன ஆடி மாதம் பிறந்ததும் இயற்கையன்னை அதன் செருக்கை அடக்கப் பெருங் காற்றை அனுப்பிப் பெரிய கிளைகளையும் முறிய வைக்கிறாள். அதைவிட மக்களே சிறு கிளைகளை ஒடித்து விடுவது நல்லதல்லவா? இப்படி ஒடிப்பும் முறிப்பும் இருந்து அந்த முருங்கை மரம் தென்னை மரத்தின் பாதி உயரத்தை எட்டிப் பிடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
எங்கள் வாழ்க்கையும் இப்படித்தான். காவியத்தில் காணும் காதலர்கள் எல்லோரும் இந்தத் தென்னை மரங்களைப் போல் உயர்ந்த வாழ்வு பெற்று ஒழுங்காக விளங்குகிறார்கள். ஆனால் நானே முருங்கை மரம்! உடலோடு கூடி வாழ்கின்றவன். உடல் பலருக்குக் கட்டுப்பட்டு வயிறு வளர்ப்பது. குடும்பத்தில் சுற்றத்தார், தொழிற்சாலையில் அதிகாரிகள் – இவர்கள் எங்கள் வாழ்க்கையில் ஒடிப்பும் முறிப்பும் செய்கிறார்கள். எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவர்களின் விருப்பத்திற்கு இணங்காவிட்டால் உலக வாழ்க்கை இல்லை; இணங்கினாலோ காதல்வாழ்க்கை இல்லை. இப்படிப்பட்ட போராட்டத்தில் சிக்குண்டும் எப்படியோ இருக்கின்றோம், வாழ்கின்றோம். நாங்களும் காதலர்கள் வரிசையில் நிற்கின்றோம். நண்பர்கள் எங்கள் வாழ்க்கையையும் பாராட்டுகின்றார்கள்.
ஆனால் இந்த அகநானூற்றுப் பாட்டில் உள்ள தலைவியோடு என் துணைவியை ஒப்பிட முடியுமா?
அந்தத் தலைவியும் அஞ்சுகின்றாளாம். இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லச் சொல்லுகிறாளாம். இதை என் துணைவியிடம் எப்படிக் காண முடியும்? நான் ஊருக்குப் போனால் அப்போது அவளுடைய மனம் அந்நிலையில் இருக்கும். அந்த மனநிலையைப் படிப்பவர் யார்?
அந்த முருங்கை மரத்திலிருந்து இரண்டு கிளிகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து பறந்தன. அவை தென்னை மரத்தில் சென்று ஓலையில் மறைந்திருந்தன. உடனே சிறிது நேரத்தில் வெளிவந்தன.தென்னை மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்து மறுபடியும் முருங்கைக் கிளையில் உட்கார்ந்து கொஞ்சின.
அதுதான் வாழ்வு, காதல் வாழ்வு.காவியமாக இருந்தால் என்ன? அல்லது, உலகமாக இருந்தால் என்ன ? பாட்டாக இருந்தால் என்ன ? அல்லது உடம்பாக இருந்தால் என்ன? அவற்றில் இரண்டு உள்ளம் வேண்டும். ஒன்று அமைதி உள்ளம்; ஒன்று ஆற்றல் உள்ளம். அமைதி, ஆற்றல் பெற வேண்டும். ஆற்றல், அமைதி பெற வேண்டும். உயர உயரப் பறக்கலாம். தாழத் தாழ வரலாம். ஏற்றத் தாழ்வு அவற்றில் இல்லை. இரண்டு உள்ளம் ஒன்று பட்டு உணர்தல்தான் வேண்டியது. அதுதான் அந்தக் கிளிகளின் வாழ்வு.
உள்ளம் இரண்டும் ஒன்றுபட வேண்டும். அவ்வளவு தான் காதல் வாழ்க்கை. மற்றவை பொருளல்ல.
உண்மைதான். என் உள்ளம் அன்பு நிறைந்தது. துணைவியின் உள்ளமும் அப்படித்தான்.பிறகு என்ன குறை? ஏதோ குறைபோலத் தோன்றுகிறதே! “இவளை ஏன் திருமணம் செய்துகொண்டேன்? நல்ல துணையாகத் தேடாமல் தவறிவிட்டேனே” என்ற எண்ணம் ஒவ்வொரு வேளை வருகின்றதே. அவளும் ஒவ்வொரு நாள் என்னை வெறுத்துப் பெருமூச்சு விடுகின்றாளே!
அந்தக் கிளிகளுக்குக் கவலை இல்லை. வெளியுலகத்தைப் பற்றிய கட்டுப்பாடு இல்லை. இந்தத் தெரு. பிடிக்காவிட்டால் வேறிடத்துக்குப் பறக்கும். ஒரு மரம் வெறுத்தால் வேறு மரம் தேடும். ஆனால் அவைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரிவது மட்டும் இல்லை.
அவள் அப்படி அல்ல. சுற்றத்தாரிடம் தான் எடுத்த நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாடுபடுகிறாள். வாழ்க்கையில் எந்த மாறுதலும் செய்துகொள்ள மறுக்கிறாள். நான் மட்டும் – இல்லை, இல்லை. நானும் வெளியுலக மதிப்பை நாடுகின்றேன். நண்பர்களிடத்தில் நல்ல பெயர் எடுக்கப் பாடு படுகின்றேன். உலகத்தார் இகழாதபடி பார்த்துக் கொள்கின்றேன். இதோ அணிந்து கொண்டுள்ள இந்தச் சொக்காய்முதல் நான் பெற்றுள்ள பி. ஏ. பட்டம் வரையில் எல்லாம் உலக மதிப்புக்குத்தானே! இந்த வாசற்படியில் வீணுக்குச் செலவாகியுள்ள குங்குமம் முதல் அங்கே உலர்ந்துகொண்டிருக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடைவை வரையில் எல்லாம் அவளுக்குச் சுற்றுப்புறத்தார் தரும் மதிப்புக்காக இருப்பவை.
கிளிகளுக்கு இவை இல்லை; அதனால் காதல் வாழ்க்கைக்குத் தடையும் இல்லை.
ஆனால் எங்களுக்கு இவை வேண்டுமே. இல்லை யானால் இந்த வீட்டில் வாழும் உரிமை போய்விடும். அறுசுவை உண்டி அகப்படாது. நொடிக்கு நொடி வாழ்க்கையில் நிலையாமையும் துன்பமுமாக முடியுமே! ஊரார் எங்கள்மேல் கல்லெடுத்து எறிவார்களே!
கிளிகள்மேல் கல் எறிவார் இல்லை. கிளிகள் இப்படித்தான் பறப்பது வழக்கம் என்று விடுவார்கள். ஆனால், நாங்கள் உலக வழக்கங்களை மீறினால் சுற்றுப் புறத்தார் சும்மா விடமாட்டார்களே. நான் பட்டம் பெறாமல் பெற்றவர்களைப் போல் நாகரிகமாக நடக்காமல் தவறினால் வயிற்றுக்குக் கஞ்சி இல்லாமல் போய்விடும். அவள் வெளிப்படையாகக் கொஞ்சிக் குலவத் தொடங்கினால், “சினிமாவைவிட இதைப் பார்க்கலாம்” என்று சினிமாவுக்குப் போகிறவர்கள் எல்லாரும் இங்கே வந்துவிடுவார்களே. நான் சொக்காய் இல்லாமல் சென்னையில் திரிந்தால் என்னைக் கீழ்ப்பாக்கத்துக்கு இழுத்துக்கொண்டு போய் உடம்பைப் புண்படுத்துவார்கள். அவள் வாசற்படிக்குக் குங்குமம் வைக்காவிட்டால், தெருவில் உள்ள பெண்கள் அவளைத் தலைகாட்ட வொட்டாமல் பேசி மனத்தைப் புண்படுத்துவார்கள்.
ஆகையால், கிளிகள் வேறு; மக்கள் வேறுதான்.. கிளிகளில் அடிமைக் கிளி இல்லை. மக்கள் எல்லாரும் அடிமைகளே. கிளியின் உடம்பைக் கூட்டில் அடைத்தாலும் அதன் மனம் பறந்துகொண்டேயிருக்கும். மனிதனை மலைமேல் திரியவிட்டாலும் அவனுடைய மனம மண்வீடு கட்டி அடைபட்டுக் கிடக்கும்.
ஒரு கிளி மற்றொரு கிளிக்கு அஞ்சி அடங்குவதும் இல்லை. அதனிடம் மதிப்பைத் தேடித் திரிவதும் இல்லை. ஆனால் மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தான் அஞ்சுகிறான். மற்றொருவன் மதிக்க வேண்டும் என்றுதான் பாடுபட்டு அலைகிறான். மற்றவனுக்கும் பயந்துதான் வீடு கட்டினான்; தாழ்ப்பாளும் பூட்டும். அமைத்தான்; ஆயுதங்கள் செய்தான்; யானை குதிரை முதலிய படைகளைத் துணையாகக் கொண்டான்; அணிவகுத்துப் போர் செய்யக் கற்றான்; சட்டங்கள் இயற்றினான்; மன்றங்கள் நிறுவினான்; விஞ்ஞானக் கருவிகளும் கண்டான். சிங்கம் புலி கரடிக்குப் பயந்தா பூட்டு அமைத்தான்? தேள் பாம்புக்கு அஞ்சியா சட்டங்கள் இயற்றினான்? பிளோக், காலரா கிருமிகளுக்குப் பயந்தா வெடிகுண்டும் நச்சுப்புகையும் கண்டான்? மனிதன் தன் இனத்தைக் கண்டே அஞ்சுகின்றான்; கிளியைப் போல் இவன் வாழ முடியாது. அகநானூற்றுத் தலைவியும் அஞ்சினாள்; “இல்லவங் அறிதல் அஞ்சி” மெல்லச் சொன்னாள்.
இவ்வாறு எண்ண உலகத்தில் பறந்துகொண்டிருந்தபோது, “அப்பா, ஏடியா ஏடியா” என்று என் மகன் என்னை இழுத்து நிறுத்திவிட்டான். அவன் கையிலே ஒரு வடை கண்டேன்; வாயைச் சுற்றி இட்டளித் துணுக்குகள் ஒட்டியிருக்கக் கண்டேன்; “போ, அம்மாகிட்டே போ. வாயைத் துடைத்துக் கொண்டு வா. ஆய் மாதிரி இருக்கிறது. நல்லா இல்லை, போ” என்றேன்.
அவன் போக மறுத்துப் பிடிவாதமாய் “ஏடியா, ஏடியா” என்றான். வேறு வழி இல்லை என்று ரேடியோவைத் திருப்பிப் பாட்டில் வைத்துவிட்டு நேரே சமையலறைக்குப் போனேன்.
“ஏன் வந்துவிட்டீர்கள்? கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு, பூசை பண்ணிவிட்டு வந்து விடுவேன். வெள்ளிக்கிழமை ஒருநாள் பார்த்துக் கொள்ளக் கூடாதா?” என்றாள் அவள்.
“நல்ல வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. ஊரார் மெச்சுவதற்கே உழைக்கச் சரியாக இருக்கிறது உனக்கு. குழந்தையின் வாய் அப்படியே இருக்கிறது. இப்போது என் நண்பர் யாராவது வந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இட்டளி ஊட்டத் தெரிகிறது, துடைக்கத் தெரியலையா! வெள்ளிக்கிழமைக்குக் குறைச்சல் இல்லை” என்றேன்.
“வெளியார் மெச்ச வேண்டும் என்றுதானே குழந்தை வாயைத் துடைக்கச் சொல்கிறீர்கள்? நானும் ஊரார் மெச்சத்தான்…..” என்று குறையாகவே நிறுத்தினாள்.
பேசாமல் வந்துவிட்டேன். வந்து பார்க்கும்போது அந்த வடையைத் துண்டு துண்டாக்கி, ரேடியோவைச் சுற்றிப் படைத்துவிட்டு, அதைக் கைக்கு வந்தபடியெல்லாம் திருப்பிக்கொண்டிருந்தான் என் அருந்தவப் புதல்வன். அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் வெறுப்போடு அவனை நோக்கி நின்றேன். அவன், “அப்பா! ஏடியோ.கீ – உர்-டா-டீ-கீ-கீர்;” என்று இரண்டு கைகளையும் தட்டித் தட்டிச் சிரித்தான். பணச் செலவுக்கு வழி வைத்தான் என்று எண்ணிக்கொண்டு வருத்தத்தோடு அதை ஒழுங்கு படுத்த முயன்றேன்.
”மருத்! மருத்!” என்ற குரல் கேட்டது. இளங்கோ நான் எதிர்பார்த்தபடி வந்தான். “என்ன ஒருவகையாக இருக்கிறாயே?” என்று கேட்டான். “இந்த மார்க்கோனி இப்படிப் பாழ்படுத்துகிறான்” என்றேன்.
”போனால் போகட்டும் அப்பா! இந்தப் பொருள் உடைந்தாலும் கவலையில்லை. உன் மனம் உடைந்து வருந்தாமல் பார்த்துக்கொள். அங்கங்கே குழந்தைகள் உடைப்பதற்கென்றே எவ்வளவோ பொம்மைகளும் கருவிகளும் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஒரு பையன். ஆகட்டுமே செலவு” என்றான்.
“உனக்கு இப்போது பொருள் உடைவது பற்றிக் கவலை இல்லை. உடைந்துபோன உன் மனம்தான் சீர்ப் பட வேண்டும். அதனால் இப்படிப் பேசுகிறாய்” என்றேன்.
இளங்கோ என்னென்னவோ பேசிக்கொண்டிருந்து நேராக ஆபீசுக்குப் போய்விட்டான். நானும் ‘தென்றல்’ நிலையத்துக்குப் புறப்படலானேன். அவசரமாக உணவு உண்டு புறப்பட்டேன். வெள்ளிக் கிழமை,நிலையத்தில் வேலை குறைந்த நாள். பேனா எடுத்து ஆங்கிலச் செய்தித்தாள் பார்த்து “ஊர்வம்பு” என்ற தலைப்புக்கு வேண்டிய குறிப்புக்களைத் திரட்ட லானேன்.
மணி பன்னிரண்டு ஆகியும் என் பேனா ஓடவில்லை. பேனாவை மேசைமேல் வைத்துவிட்டேன். துணையாசிரியர் என்ற நினைவே அற்றுப்போய் மறுபடியும் காதல் உலகத்தில் பறக்கத் தொடங்கினேன்.
இளங்கோவின் கவலையை நினைத்தேன். இரண்டு முறை ஏமாற்றம் அடைந்தான். நான் அவ்வப்போது தடுத்தே வந்தேன். ஆனால் என் பேச்சை அந்த வேளையில் ஏற்பதில்லை. பிறகு நினைந்து வருந்தத் தொடங்குகிறான். அந்த எதிர்வீட்டுப் பெண் சகுந்தலை உண்மையான அன்பு வைத்திருந்தாள். பார்த்தால் மிக நல்ல குணம் உடையவள் என்றும் தெரிந்தது. பத்தாவது படித்ததே போதும். ஆனால் அவளால் தன் பெற்றோரை மீறி நடக்க முடியவில்லை. அங்கும் உலகம்தான் காதல்வாழ்க்கையை முறித்தது. ஆனால் திருப்பள்ளித் தெருக் கதையை நான் நம்பவே இல்லை. அந்தப்பெண் எனக்குத் தெரியாத பெண்ணா? அவள் வெளிப்படையாகப் பேசும் பேச்சைக்கேட்டு இவன் மயங்கிவிட்டான். கலெக்டர் ஆபீஸ் கிளர்க் என்றால் உலக அறிவு வளர்வதற்கு இடம் ஏது? அவன் இதுபோன்ற பத்திரிகை நிலையத்திற்கு வந்திருந்தால் பலரோடு நட்பு முறையில் பழகி உலகத்தைக் கற்றிருக்கலாம்.கலெக்டர் ஆபீசில் சிலரிடம் அடங்க வேண்டும், சிலரை அடக்க வேண்டும். இவ்வளவு தெரிந்தால் போதும்; முன்னுக்கு வரலாம். அடிமைப்புத்தி அல்லது ஆளும் புத்தி இவை தவிர உரிமையறிவு அங்கே ஏது?
அந்தப் பெண் இவனோடு ஒரு வகுப்பில் படித்தவள் அல்லவா? அஞ்சாமல் பேசுவாள். கல்லூரிப் படிப்பின் துணையால் ஆங்கிலேயர்களைப் போல் பேசி நடிக்கக் கற்றுக்கொண்டாள். ஆனால் ஆங்கில நாட்டுக் காதலர்கள் இப்படி வெளிப்படையாகக் காதலைப் பேசியா தீர்த்துக்கொள்கிறார்கள்? அந்த நாடகங்களிலும் காணோமே! தமிழ்ச் சினிமாக்களில் தான், “நாதா!” “பிராணநாதா” என்றும், “பத்தினீ!” “கண்மணீ!” என்றும் பேசிப் பேசிக் காதலை ஒழித்து விடுகிறார்கள். உள்ளத்தில் உணர்வே நிரம்பிய காதல் நிலையில், இப்படிச் சொற்கள் பொழியுமா? “உன்னை மறந்தால் உயிர் வாழ்வேனோ” என்று கண்டவிட மெல்லாம் பாட்டுக்கள் பிறக்குமா? என்னவோ நாகரிகத்தின் பெயரால் நடக்கும் அநாகரிகம்!
அவள் ஏறக்குறைய சினிமாவில் நடிப்பது போல் தான் காதல் நாடகம் நடித்தாள்; காதல் பேச்சும் பேசினாள். ஆனால் சினிமாப் பாட்டுத்தான் பாடவில்லை. அதற்குப் பதில் இளங்கோ தன் இசைத் திறமை காட்டிப் பாடியே தீர்த்தான். அப்போதே நினைத்தேன். அவளுடைய உள்ளத்தில் காதலின் ஆழம் இல்லை என்று சந்தேகப்பட்டேன். நண்பர்களின் நட்புக்கே சொற்களால் புனைதல் பகை என்கிறார் திருவள்ளுவர். காதலைப் பற்றி என்ன சொல்வது?
என்ன வியப்பு! கல்லூரியில் படித்த ஒருத்தி ஒரு கள்ளுக்கடைக்காரனை மணந்தாள். அவனுக்குக் கல்லூரியும் தெரியாது, கலையும் தெரியாது. ஆனால் அவன் ஒரு மாவட்டக் கழக உறுப்பினன். அதனால் பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நிலைமை உண்டு. ஆனாலும், காதல் உள்ளம் இருந்தால், ஆழ்ந்த உணர்வு இருந்தால், இப்படியும் செய்ய மனம் வருமா?
இரண்டு இடத்திலும் ஏமாந்த பிறகு, “மருதப்பன்! இனிமேல் உன் அனுபவம் வேண்டியது தான்” என்கிறான். நல்ல நண்பன்; உண்மையானவன். இவனும் வெளிப்படையாகக் காதல்பேச்சுப் பேசுகிறானே. இவன் உள்ளத்திலும் ஆழ்ந்த உணர்வு இல்லையோ?
தவறு, தவறு. அவள் உணர்வே அற்றவள்; அறிவு மட்டும் பெற்றவள். அதனால் அவளால் நடிக்க முடிந்தது. ஆனால், இவன் உணர்வு மிக்கவன்; அறிவாளி. இவனால் நடிக்க முடியாது. இவன் காட்டிய காதல் முற்றிலும் உண்மை, உண்மை, உணர்வு மிகுந்தவர்கள் பொய்யாகக் காதல் நாடகம் நடிக்க முடியாதல்லவா?
இனிமேல், இவ்வாறு ஏமாற்றம் அடைய மாட்டான். அறிவு மட்டும் பெற்று மனச்சான்றைக் கொன்ற ஆணையும் பெண்ணையும் இனிமேல் பிரித்துத் தெரிந்துகொள்வான்; ஆகையால் ஏமாறமாட்டான்.
இன்று இளங்கோ வந்து சொன்னது முக்கியமானதுதான். அவனுடைய சிற்றப்பாவின் மகளாம்; தங்கை யாம்; அவளுக்காக எவ்வளவு கவலைப்படுகின்றான்!? உண்மையான கவலை: இதுதான் உணர்வுடையவர்களுக்கு வாழ்வு. அந்தத் தங்கையைப் பற்றி இனிமேல் கவலைப் பட்டு ஆவது என்ன? வீட்டை விட்டுப் பயிற்சிப் பள்ளிக்கூடம் சேர்வதற்காகப் போனவள் அங்கே இருக்கிறாள். அவளுடைய உறவினர் குற்றம் சொல்லித் தள்ளிவிட்டார்களாம். ஒரு பெண் அயலார் வீட்டில் இரண்டு மூன்று நாள் தங்கியிருந்தது குற்றமா? ஆண் ஆயிரம் நாள் தங்கித் தவறும் செய்கிறானே! என்ன கொடுமை!
இவன் பிடிவாதம் செய்கிறான். நேரே போய் அழைத்துக்கொண்டு வந்து தன் வீட்டில் வைத்திருந்து யாருக்காவது திருமணம் செய்துகொடுக்கப் போகிறானாம். அதனால் எவ்வளவு தொல்லை வந்து சேரும்? மாமன் பகையாவான். பெற்ற தாய் வருந்துவாள். இவனுடைய வாழ்க்கைக்கு எல்லாரும் இடையூறு செய்வார்கள். தவிர, இவன் அந்தப் பெண்ணுக்கு என்ன உதவி செய்ய முடியும்? பணம் நிறையக் கொடுப்பதாகச் சொன்னால் இனத்தான் எவனாவது மணம் செய்துகொள்வான். அதுதான் முடியாதே. பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்கவைக்கலாம்; பிறகு ஆசிரியர் தொழிலில் விடலாம். அதுவும் இயற்கையான வாழ்க்கை அல்ல. இத்தனைக்கும் பெற்ற தாய் இடங் கொடுக்கப் போவதில்லை. எப்படியும் போய்ப் பார்த்து விட்டு வர வேண்டும்; கூடுமானால் அழைத்துவர வேண்டும் எனறு பிடிவாதம் செய்கிறான். இந்த ஞாயிற்றுக்கிழமை போனால் போவான். போய் வரட்டும். பார்க்கலாம்.
அந்தப் பெண் நல்ல அறிவுடையவளாம். சீர் திருத்தமானவாழ்க்கை தெரிந்தவளாம். இயற்கையாக நல்ல அறிவு பெற்றிருப்பது பெரிய நன்மைதான். குணத்திலும் உயர்ந்தவள் ; அழகிலும் சிறந்தவள் என்று சொல்கிறான். அவ்வளவு நல்ல பெண்ணுக்கு ஒரு நல்ல துணை கிடைக்கவில்லையே. எனக்கு அப்படிப் பட்டவள் கிடைத்திருந்தால்-
மறுபடியும் எப்படியோ இந்த எண்ணம் வந்து விட்டதே. என் துணைவியும் நல்லவள், அழகுடையவள், அறிவுடையவள். அப்படி இருக்க, மனம் ஏன் இப்படி நாடியது? வாழ்க்கையில் ஒரு மூலையில் அடங்கிக் கிடக்கும் சலிப்பு, ஒவ்வொரு வேளையில் மேலெழுந்து ஆட்சி புரிகிறது.
இளங்கோவின் தங்கை எனக்கு மனைவியாக வாய்த்திருந்தால், வாழ்க்கை இதைவிடச் சீராக இருக்குமோ? குறையாக இருக்குமோ? எப்படிச் சொல்ல முடியும்?
இளங்கோ என்னை எள்ளினான்; எங்கள் குடும்ப வாழ்க்கை, கல்லூரி மாணவனும் அரிச்சுவடிப் பையனும் சேர்ந்து படிப்பது போல என்று எள்ளினான். அவனையே இன்றைக்குக் கேட்டால் அப்படிச் சொல்லமாட்டான் அல்லவா? இப்போது எங்கள் அனுபவம் வேண்டும் என்றுதானே கேட்கிறான்?
துணைவி அப்படி ஒன்றும் காதல் இல்லாதவள் அல்ல; உணர்வு மிகுந்தவள்.மூன்று வயது மகனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கொஞ்சிக் குலாவுகிறாளே, அது போதாதா? அந்த உணர்வு, காதலுருவம் பெற்று என்னிடம் வாழாதா? குழந்தையிடம் வெளிப்படையாகத் தன் அன்பு முழுதும் பொழிகிறாள். இது சினிமாவா, நானும் அப்படி எதிர்பார்ப்பதற்கு? அந்த உள்ளம் மட்டும் என்னிடம் இருந்தால் போதும். தவிர, குழந்தையால், அவளுடைய உலக வாழ்க்கைக்கும் தடையில்லை; வீட்டு வாழ்க்கைக்கும் தடை இல்லை. ஆனால் என்னால் தடைதானே!
நான் செய்ததும் குற்றம்தான். ஆர்மோனியத்தை எடுத்துக்கொண்டு வரவே கூடாது என்று தடை செய்தேன். அதற்காக அழுதாள். என் பிடிவாதத்தில் வென்றேன். அவளுடைய மனம் புண்பட்டிருக்காதா? அதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருந்து, ரேடியோ வாங்கினபோது கேட்டாள். அதில் ஆர்மோனியமும் கேட்கிறதே என்று சூடு கொடுத்தாள். பாரதியார் புதுவையில் இருந்த போது ஏதோ ஆர்மோனியத்தைப் பழித்து எழுதினார். அதைப் படித்துப் பைத்தியக்காரன் போல் நானும் பிடிவாதம் செய்தேன். இப்படி நூறு இருக்கும், ஆயிரம் இருக்கும். ஆகையால் உள்ளம் கலந்து வாழ்வது எப்படி?
குழந்தையோ அப்படி அல்ல. குழந்தைக்காக அவள் ஏதாவது விட்டுக்கொடுத்தாலும் மனமார அன்பாக விட்டுக்கொடுக்கிறாள். அல்லது, தன் விருப்பம் போல் குழந்தையின் மனத்தை மாற்றிவிடுகிறாள். குழந்தையிடம் பழகும்போது அவளுக்கு உரிமை குறையவே இல்லை. ஆனால் என்னிடம் அவள் வாழும் வாழ்வில் உரிமைக்கு முழு இடம் இல்லையே.
முழு உரிமை என்பது மக்களின் வாழ்வில் எப்படி முடியும்? கிளிகளின் வாழ்வில்தான் அது முடியும். அவற்றின் வாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வகையான உலக வாழ்க்கை. ஆணுக்கும் முருங்கை மரம் விருப்பம். பெண்ணுக்கும் அப்படியே. தென்னை மரத்தைச் சுற்றி அதுவும் பறக்கும், இதுவும் பறக்கும். அதுவும் பச்சை கண்ட இடத்தை நாடிப் பறக்கும்; இதுவும் அதை நாடிப் பறக்கும். அதற்குத் தெரிந்ததெல்லாம் இதற்கும் தெரியும். அதற்கு வேண்டாத தெல்லாம் இதற்கும் வேண்டா.
ஆனால், என் மனைவி வளர்ந்த சுற்றுப்புறம் வேறு; நான் வளர்ந்த சுற்றுப்புறம் வேறு. அவள் பழகுமிடம் வீடு ; நான் பழகுமிடம் இந்தத் தென்றல். அவள் நண்பர் வேறு; என் நண்பர் வேறு. அவள் கோயிலுக்குப் போக விரும்புகிறாள்; நான் சினிமாவுக்கும் போக முந்துகிறேன். அவள் மதிப்பவை மஞ்சளும் சோமவார விரதமும்; நான் மதிப்பவை திருக்குறளும் தாயுமானவரும். அவள் அணிய விரும்புவது பட்டும் பொன்னும்; என் உடம்பில் பொன்னே இல்லை; அணிவதெல்லாம் பருத்தியே. அவள் பேசும் பேச்செல்லாம் சமையல் பாகம், புடைவைக்கரை, கலியாணச் சடங்கு முதலானவை; நான் விரும்பும் பேச்செல்லாம் சட்ட அமைப்புகள், நாட்டு உரிமை, காதல் வாழ்வு முதலானவை.
இவ்வளவு வேறுபட்ட வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்தே பழகுகிறோம். கிளியைப் போல வாழ்வது எப்படி முடியும்? ஒன்று அவளுடைய பழக்க வழக்கங்களுக்கு நான் அடிமையாக வேண்டும். அல்லது, என் கொள்கைகளுக்கு அவள் அடங்க வேண்டும். ஆனால் இருவர் மனத்திலும் அன்பு இருக்கின்றது. அன்பு இருக்கும் இடத்தில் அடிமையாகவும் முடியாது; அடக்கி வாழவும் முடியாது. அன்பு இல்லாத குடும்பங்களில் – காதல் இல்லாத வாழ்க்கையில் – ஆண் பெண்ணுக்கு அடங்குகிறான்; அல்லது, பெண் ஆணுக்கு அடிமையாகிறாள். வாழ்க்கை எளிதாக முடிகிறது. இப்படிப்பட்ட முறையில்தான் பல குடும்பங்கள் நடக்கின்றன. அந்தக் குடும்பங்களில் சண்டை சச்சரவு போராட்டம் பூசல் வழக்கு ஒன்றும் இல்லை; அமைதி உண்டு; ஆனால் காதல் இருக்கவே முடியாது. நாங்களும் காதலைக் கொன்றுவிட்டால், யாரேனும் ஒருவர் மற்றொருவருக்கு அடங்கிவிட்டால், ஒற்றுமையாக வாழ்வோம். இப்போது ஒற்றுமை இல்லையா, என்ன? இருக்கிறது. அதற்குக் காரணம் உண்டு. உலக வாழ்க்கையில் எங்களுக்குப் பொதுவான பொருள் ஒன்று உண்டு. அங்கே நாங்கள் கிளிகளைப் போல்தான் வாழ்கிறோம். வேற்றுமை என்பதே இல்லை. அந்தப் பொதுப் பொருள் தான் எங்கள் குழந்தை, அருள். அருளுக்கு மூன்று வயது ஆகிறது. அருள் பிறந்த பிறகுதான் நாங்கள் நீண்ட நேரம் பேசிப் பழகுகிறோம்.
அந்தக் கிளிகள் தென்னைமரத்தைச் சுற்றிச் சுற்றி ஒற்றுமையாகப் பறக்கவில்லையா? அது போல் நாங்களும் குழந்தையைப் பற்றி எண்ணும்போதும் பேசும்போதும் கொஞ்சும்போதும் குலாவும் போதும் எல்லா வேறுபாடும் மறந்துவிடுகிறோம். ‘நம்முடைய செல்வன்’ என்கிறேன் நானும்; அவளும் ‘நம்முடைய கண்ணன்’ என்கிறாள். அவன் வாழ வேண்டும், வளர வேண்டும், படிக்க வேண்டும், பேச வேண்டும், சிறந்த நிலை பெற வேண்டும் என்பதில் எங்களுக்கு ஒரே மனம் தான். அதனால்தான் எங்கள் முருங்கை மரம் ஒடிப்புக்கும் முறிப்புக்கும் தப்பி எப்படியோ வளர்ந்திருக்கிறது. எங்களுக்கும் காதலர் என்ற பேர் கிட்டியிருக்கிறது. குழந்தை இல்லாத வீட்டில் விருந்தாளி நுழையக் கூடாது என்று கதை சொல்கிறதே அது உண்மைதான்.
இவ்வாறு எண்ணிக்கொண்டே இருந்தபோது ”ஊர்வம்பு எவ்வளவு ஆயிற்று?” என்று பக்கத்து அறையிலிருப்பவர் வந்து கேட்டார். மேசைமேல் இருந்த கால்களை எடுத்துக் கீழே வைத்துக் கைகளை நீட்டித் திமிர் விட்டபடியே, “ஊர் மட்டுமா? வீடும் வம்பாகத்தான் இருக்கிறது. மெல்ல நடக்கிறது” என்றேன். அப்படியே கைநீட்டிப் பேனாவை எடுத்துக் காகிதத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். அவர் கொட்டாவி விட்டுக்கொண்டே திரும்பினார்.
இளங்கோவின் கவலைமுகமே மறுபடியும் என் எதிரே நின்றது. உடன் பிறவாத ஒரு தங்கைக்காக அவன் கவலைப்படுகிறான். ஒரு குற்றமும் செய்யாத பெண் எல்லோராலும் கைவிடப்பட்டாள். அந்த முருங்கை மரத்தில் ஒரு கிளியை மற்றக் கிளிகள் கூடி.. இப்படிச் சிதறடிக்குமா?
– தொடரும்…
– செந்தாமரை, முதற் பதிப்பு: 1948, பாரி நிலையம், சென்னை.