சூழ்ச்சி வீழ்ச்சியடைந்தது
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மணிபுரம் என்னும் ஊரிலே மாசாத்தன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அந்த மாசாத்தனுடைய வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரனுடைய பெயர் ஆனையப்பன். ஆனையப்பனுக்கும் மாசாத்தனுக்கும் எப்பொழுது பார்த்தாலும் பகைமை மூண்டுகொண்டேயிருக்கும்.
ஆனையப்பன் வஞ்சக மனத்தினன். தன் பக்கத்து வீட்டுக்காரனாகிய மாசாத்தனை வஞ்சித்துக் கெடுக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டிருந் தான். மாசாத்தனிடம் ஒரு பலசரக்குக் கடை இருந்தது. அந்தப் பலசரக்குக் கடையில் மிகுதியாகக் கடன் பெற்றுக்கொண்டு ஏய்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அந்தக் கெட்ட எண்ணத்துடனே மாசாத்தனுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான். மாசாத்தனைப் பார்த்து, ‘நாம் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருப்பதால், இனிமேல் பகையில் லாமல் நண்புடன் நடந்து கொள்வோம்’ என்றான். மாசாத்தனும் அதற்கு இணங்கினான்.
நாட்கள் பல சென்றன. ஆனையப்பனும் மாசாத் தனும் சில நாட்கள் பகையில்லாமல் நடந்து கொண்டார்கள். ஒருநாள் ஆனையப்பன் மாசாத்தனைப் பார்த்து, ‘நான் உன்னுடைய கடையில் பற்றுவரவு வைத்துக்கொள்கிறேன்; வீட்டிற்கு வேண்டிய சரக்கு களை இன்றைக்கு இருபது வெண்பொற் காசுகளுக்குக் கொடு, ஆடு விற்றுப் பணங் கொடுக்கிறேன்,’ என்று இனிமையாகப் பேசினான். ஆனையப்பனுடைய மொழிகளைக் கேட்ட மாசாத்தன், ‘நண்பா ! கடன் என்னும் பேச்சை மட்டும் விட்டுவிடு. அதனால் நமக்கு ஏற்பட்டுள்ள நட்புக் கெட்டுப்போகும்’ என்று சூழ்ச்சியாகப் பதிலளித்தான். ஆனையப்பன் பழம் பகைவன் என்பதை மாசாத்தன் மனதில் வைத்துக்கொண்டு இடங் கொடுக்காமலும் கடன் கொடுக்காமலும் இருந்தபடியால் ஏமாறாமல் தப்பினான்.
“மாற்றானுக் கிடங்கொடேல்” (இ – ள்.) மாற்றானுக்கு – பகைவனுக்கு, இடங்கொடேல் – இடங்கொடாதே .
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955