சூடு
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பள்ளிக் கூடத்தில் மணியொலி ‘கணீர் கணீ ரெனக் கேட்க, மாணவர்கள் கோரஸாக ஸலவாத் ஓதிவிட்டு, வெண்புறாக் கூட்டமாய் பிரதான வாயிலினூடாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். யாரையும் இடிக்காமல், நிதானமாய் வந்து கொண்டிருந்த நிழ்வானின் முகத்தில் இனம் புரியாத பரபரப்பு குடி கொண்டிருந்தது.

ஆண்டு ஆறில் கல்வி கற்கும் கெட்டிக்கார மாணவன் றிழ்வான், கணவனால் கைவிடப்பட்ட கதீஜாவின் ஒரே மகன். வீடுகளில் சமையல் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருவாயில் தன் மகனைப் படிக்க அனுப்புகிறாள். தான் எடுக்கும் கூலிக்கு, வஞ்சனையின்றி உழைப்பவள் என்று ஊரில் அவளுக்கு எப்போதும் நல்லபெயர்.
தன் தாயைப் பற்றிய சிந்தனையில் நடந்த றிழ்வான், அந்தப் புதுக் குடியிருப்புப் பகுதியை அடைந்ததும், நடையைத் துரிதமாக்கிப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டை அண்மித்தான். அவனைக் கண்ட மேஸ்திரி கரீம் நாநா,
“அடடே! கதீஜாட மவனா? வா வா இன்னைக்கும் சரியான நேரத்துக்கு வந்துட்டே, ஏதும் சாப்பிட்டியா?” எனக் கரிசனையோடு விசாரித்தார்.
‘இல்லை’ என்பதாகத் தலையை இருபுறமும் ஆட்டிய றிழ்வானிடம் “இந்தா இந்தப் ‘பார்சல்’ல கொஞ்சம் சோறு இரிக்கி. நீ சீக்கிரமா சாப்பிட்டுட்டு, முடிஞ்சளவு செங்கல்ல ரோட்டுல இருந்து தூக்கிட்டு வா வெள்ள சேட்ட கழட்டி. அந்தக் கொடியில போடு” அடுக்கடுக்காய்க் கட்டளைகளைப் பிறப்பித்த படி, ‘சிமென்ட்’ கலக்கும் பகுதியைப் பார்வையிடப் போனார் கரீம் நாநா.
கையிலே ஐம்பது ரூபாவுடன் நடந்த றிழ்வானின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. மூன்று தினங்கள் தன் பிஞ்சுத்தோள்களால் செங்கல் சுமந்ததால், காய்த்துப்போன தோள்கள் வலித்தாலும், இம்முறை ஸ்கூல்ஃபீஸ் கட்ட உம்மாவைத் தொந்தரவு செய்ய வேண்டியிராது என்ற பெருமித எண்ணம் அவனது தோள்வலியை மறக்கச் செய்தது. உற்சாகத்தோடு, உம்மா வேலை செய்யும் காதர் ஹாஜியாரின் வீட்டையடைந்தான்.
தூரத்திலேயே அவன் வருவதைக் கண்டு கொண்ட ஹாஜியாரின் பேரப்பிள்ளைகள் சலீமும் சல்மாவும் ஓடி வந்தார்கள். “றிழ்வான், நாங்க புதுசா வாங்கிய கார் எவ்வளவு அழகு தெரியுமா? வா காட்டுறோம்” என்றுகூறி றிழ்வானின் கையைப் பற்றி இழுத்தவாறு ஓடினான் சலீம்.
சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது, அங்கே வந்த ஹாஜியாரின் மகள், “மேசை லாச்சியில் வெச்சிருந்த ஐம்பது ரூபாய்த்தாளக் காணல்ல. றிழ்வான் நீயும் அங்கதானே வெளையாடிட்டு இருந்த, எடுத்தியா? எடுத்திருந்தா தந்திரு” என்று அதட்டினாள். றிழ்வான் மிரள மிரள விழிக்கவும், அவனின் தாய் கதீஜா முந்தானைத் தலைப்பில் கைகளைத் துடைத்தவாறு அங்கே வரவும் சரியாயிருந்தது.
“மகள், ஏண்ட மகன் ஒருகாலமும் அப்படி அடுத்தவங்கட பொருள எடுக்கிறவன் இல்லம்மா”
“ஓஹோ! அப்படின்னா, மேசைலாச்சியில இருந்த ஐம்பது ரூபா பறந்து போயிருச்சா? இவன் முழிக்கிற முழியே சரி இல்லையே! டேய், கிட்ட வா. ஒன்ட களிசான் பொக்கற்ற பாக்கணும்.”அவள் அவனையிழுத்துச் சோதனையிட, கையில் ஐம்பது ரூபாய் அகப்பட்டது. ஏளனத்தோடு அவள் கதீஜாவை ஏறிட்டு, “பெரீசா அளந்தீங்களே, ஒங்கட புள்ளையப் பத்தி. செய்யிறதையும் செஞ்சிட்டு, ஊமைக்கோட்டானாய் நிக்கிறதப் பாரு. திருட்டு ராஸ்கல்” என்று கத்தினாள்.
அவமானத்தால் குன்றிப்போன கதீஜா, தரதரவென்று மகனை இழுத்துக்கொண்டு தன் குடிசையை அடைந்தாள். தள்ளிவிட்ட வேகத்தில் முற்றத்தில் போய் விழுந்தான் றிழ்வான். வேகமாகப் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து, எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்துக் கொண்டு வந்த கதீஜா, ஊமைன்னு கூட பாக்காம, “கண்ணுக்குள்ள வெச்சி வளத்து, தகப்பனுமில்லாம நாயா அலைஞ்சு ஒன்னப் படிக்க வெச்சதுக்கா இப்பிடி என் மானத்த வாங்கினே? இன்றைக்கி நான் போடுற சூடு, இனி ஆயுசுக்கும் அடுத்தவங்கட சொத்த தொடாமப் பாத்துக்கும்” என ஆவேசமாகக் கத்தியபடி. அவனது உள்ளங்கையில் சூடு போட்டாள்.
வாய்விட்டு அலறமுடியாமல், அரற்றியபடி, கண்ணீர் வழிந்தோட நிலத்தில் புரண்டு துடிதுடித்தான் ஊமைச் சிறுவன் றிழ்வான். அப்போது… அங்கே ஓடோடி வந்த கரீம் நாநா, “புள்ள கதீஜா, அந்த ஐம்பது ரூபாவ ஹாஜியார்ட மவன் எடுத்தாராம். இந்தா, இத ஒங்கிட்டக் கொடுக்கச் சொன்னாரு” என ஐம்பது ரூபாய்த்தாளை நீட்டவே, “இது எங்கால இவனுக்கு?” என வியப்போடு கேட்ட கதீஜாவிடம், “ஒனக்கு விசயமே தெரியாதா? ஸ்கூல்ஃபீஸ் கட்டக்காசு கேட்டு, ஒனக்குக் கஷ்டம் தரப்படாதுன்னு, புதுக்குடியிருப்புக்கு மூணு நாளா ஸ்கூல் விட்டு வந்து, செங்கல் தூக்கினான்னு, நான்தான் இன்னைக்கு ஐம்பது ரூபா கொடுத்தேன். சேச்சே! என்ன புள்ள இப்படி சூடு போட்டுட்டே! படிக்கிற பொடியன் பாவம், சீக்கிரமா மருந்துபோடு” எனப் பதிலளித்து விட்டுச் சென்றார்.
மகனைக் கட்டிக்கொண்டு கதறியழுதாள் அந்தத் தாய். தலையில் அடித்துக் கொண்டு அழுத கதீஜாவின் கண்களி- லிருந்து, கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஐம்பது சதத்தின் அளவு பொசுங்கிப் போன தனது வலது உள்ளங்கையை அழுத்திக் கொண்டிருந்த இடது கரத்தை நீட்டித், தன் தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டான் அந்தப பாசமிக்க ஊமை மகன். விம்மலோடு அவனை இழுத்து அணைத்தாள் கதீஜா. இருவரது தோள்களும் கண்ணீரால் நனைய, குடிசை மூலையில் அந்த ஐம்பதுரூபாய்த் தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.
– ஜனனி வார இதழ், 28-09-1997.
– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.