சுமை
வைகாசி விசாக விழா. பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நான், என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பழனிமலைப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தோம். ஆளுக்கொரு பொருளாகத் தூக்கி வந்தனர். எனக்குக் கிடைத்தது – காலை வேளை, மதியம் ஆக இரண்டு வேளை உணவு அடங்கிய இரண்டு பெரிய பாத்திரங்களைச் சுமந்து வரும் வேலை!
காலையிலேயே சுள்ளென்று வெயில் தகித்தது. ஆயினும் பழனி ஆண்டவனைத் தரிசிக்கப் போகிறோம் என்கிற சந்தோஷமும் கூட்டம் கூட்டமாகப் படியேறி வரும் பக்தர்களின் பரவச முகங்களும் அங்கே ஆனந்த அலையை வீசிக் கொண்டிருந்தன.
படிகளில் நாங்கள் ஏறிக் கொண்டிருக்கும்போது எங்களுக்குச் சமமாக பதினேழு வயதுப் பெண் ஒருத்தி, தனது தம்பியை இடுப்பில் சுமந்தபடி படிகளில் ஏறிக்கொண்டே வந்தாள். கொஞ்சமேனும் முகவாட்டமோ உடல் அயர்ச்சியோ அவளிடம் இல்லை. வேகம்… அப்படி ஒரு வேகம்.
ஆனால் எனக்கோ அந்த இரண்டு பெரிய பாத்திரங்களைச் சுமந்துகொண்டு படிகளில் ஏறி வருவது மிகவும் சிரமமாக இருந்தது. பத்துப் படிகளுக்கு ஒருமுறை பாத்திரங்களை இறக்கி வைப்பதும் பிறகு தூக்கிச் சுமப்பதுமாகவே இருந்தேன்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை நெருங்கிய நான் வழிமறித்துக் கேட்டேன்.
“”ஏம்மா, இரண்டு பாத்திரங்களைத் தூக்கியபடி படி ஏறுவது எனக்குச் சிரமமாக இருக்கிறது. ஆனால் உன்னால் எப்படிம்மா, உன் தம்பியைத் தூக்கிக் கொண்டு இப்படிச் சிரமமின்றி படியேற முடிகின்றது?”
அந்தப் பெண் சொன்னாள்-
“”பெரியவரே, நீங்கள் சுமையைத் தூக்கிக் கொண்டு வருவதால் சிரமமாக இருக்கிறது. ஆனால் நான் என் தம்பியை அல்லவா தூக்கிக் கொண்டு ஏறுகிறேன்…”
– சரஸ்வதி பஞ்சு, திருச்சி. (ஜனவரி 2013)