சுத்தம்




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டேவிட்டிற்குத் தாங்க முடியவில்லை. இருபது வருடங்களாக வேலை பார்த்து வரும் முதலாளிதான். ஆனாலும் அவர் ஏசுதலில் அவன் மனம் கூசிக் குறுகியது. சிறுவனாகக் கார் கழுவித் துடைத்து, கிரீஸ் வைத்து ஆயில் பார்க்க, குட்டு வாங்கி சரியான சைஸ் ஸ்பானர் நீட்ட… அவன் வேலை பழகியதே இங்கு தான். இருந்தாலும்…
“பண்டிகைக் கொண்டாடுதானாங் போக்கத்த எழுத, ஊருல தெருவெல்லாம் பட்டறையில் எவன் வாராங் இங்க? வேலயக் கூறாப் பாரு முதி. கடனு கேக்குநாங் ரசஸ்…க்கலு. எங் புதுசு கட்டாட்டி துரைக்கு கிறிஸ்மஸு கழிஞ்சு புது வருசம் வராதோ? தானு என்னத்தப் புதுசு கட்டப் போறேன்? எவங்கிட்ட காசிருக்கு? போடா… போயி திருடு. அதையாச்சும் ஒழுங்காச் செய்யி போ….”
பேசி முடித்துக் காறித் துப்பினார் முதலாளி. யதார்த்தமாய்த் துப்பினாரா இல்லை ‘துப்புக் கெட்டவனே’ என்ற வெறுப்பில் விளைந்த செய்கையா என்று குழம்பி, தன் முகத்திலே அவர் உமிழ்ந்தது போலவே எண்ணிக் குறுகினான் டேவிட்.
திருமணமான கையோடு அவன் தனியாகப் பட்டறை ஒன்றை ஆரம்பித்தான். அவன் மனைவியின் மொத்த மூணு பவுன் நகையை விழுங்கியதோடு அது அவன் இடுப்பில் எட்டி உதைத்து விட்டது. மறுபடி முதலாளியே கதி என்று திரும்பியவன், அவருக்கும் வரும்படி அதிகமில்லை என்று புரிந்து கொண்டான்.
“அங்கன காலு பாவாம கருத்தா இங்கன கிடத்திருந்தா வாடிக்கைக்காரங்க இருந்திருப்பாங்க. நிறைய பேரு கலஞ்சு போயாச்சு”.
அவனுக்கு அன்றைய வேலையைத் தொடர மனமில்லை. வெறியாய்ப் பணத்தாசை உள்ளே புகுந்து உலுக்கியது. ‘திருடத்தானே சொன்னீரு? சுளுவான வழி. யார்கிட்டேயும் போயி குழைய வேணாமுல்ல’ மனத்துள் முனகியபடி ஒரு மைல் தூரம் நடந்தான். பஸ் ஸ்டாண்டில் நுழைந்தவனின் கண்கள் சுற்றிலும் ஒரு புது சுவாரஸ்யத்துடன் நோட்டமிட்டன.
திருடிறலாம் போலிருக்கே
மனமும் கையும் பரபரத்தன.
‘எப்படி, ஏது… அப்புறம் என்ன?’ என்று அறிவு கேட்கக் கூடாதபடி மனம் மழுங்கிக் கிடந்தது.
சளசளக்கும் கூட்டத்தில் அவன் தைரியம் கூடியது. மனம் ‘தப்பு, தப்பு’ எனக்கூவி கடைசியாய்ப் படபடவெனத் துடித்தது.
புத்தி பல சால்ஜாப்புகளை அள்ளி வீசி ஆசுவாசப்படுத்தியது.
‘என்னாத் தப்பு? சப்ஜாடா டிரஸ் பண்ணியிருக்காங்க. பூவு இல்லாத கொண்டை ஒண்ணில்லை. இதுங்கிட்ட எடுத்தா என்ன? அங்க குழந்தைகளுக்குத் துவைச்சு மாத்திக் கட்டத் துணியில்ல. தலையில் வைக்கப் பொட்டு எண்ணெய்க்கு வக்கில்ல. முடி செம்பட்டை பாஞ்சு, கண்ணு பொங்கி அலையுதுங்க. நாளு கிழமை கூட வக்கணையா கறி சோறுதிங்கறது அபூர்வம். ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்கறதிலேயே மூச்சு முட்டிறுது. கட்டிக்கிட்டவளுக்கு ஆசையா ஒரு வளவி, ஸ்வீட்டு…? ம்ஹூம். கலியாணங் கழிஞ்ச புதுசுல அவ ஆசையாக் கேட்டது. ரவிக்கைக்குள்ளார போடுற வெள்ளை பாடிதான். அதுகூட வாங்கித் தர முடியாமத் தட்டிப் போச்சு. இன்னிய வரை அவ சீட்டித் துணியில் ரவிக்கத் தச்சுக் கீழே இறுக்கி முடிஞ்சுக்கிறா. அம்புட்டுதாங்.
‘யப்பா வீட்டுல கலர் பேப்பரு ஒட்டிரணும்பா. உச்சியில் ஸ்டாரு கட்டிரணும்பா’ன்னு செம்பாக்குட்டி விரல் ஆட்டி ஆட்டிக் கேக்குது. பண்டிகையன்னிக்குக் கோயிலுக்குக் கூட போயிர முடியுமான்னு தெரியலை. துவச்சு சுத்தமா போவணுமில்ல? ச்சை… கொடுமை..’
உள்ளே வெறி கூடியது.
மனிதக்காடு ஒன்றைத்தன்னுள் அடைத்துக்கொண்டு கிளம்பிய டவுன் பஸ் ஒன்றில் தொத்திக் கொண்டான். குடைந்து உள்ளே பிறர் வளைந்து ஒதுங்கினர். “திரும்ப பெனாசிர் வந்தாச்சு பாத்தீரா? பொம்பளைங்க ஊரையும் ஆட்சி பண்ணுதுங்க உலக முழுசும் இதே கூத்துதான்”. உட்கார்ந்து காலாட்டியபடி பேசினார் ஒருவர். கால் தாளத்திற்கேற்ப ஜிப்பாவில் கனத்த அவரது பர்ஸும் குலுங்கியது. கழுத்தில் சங்கிலி மின்னியது. ஆனால், அதை ‘அடிக்கு’மளவிற்கு அவனுக்குத் தேர்ச்சி கிடையாது. அது ‘கில்ட்டு அல்டாப்’பாகக் கூட இருக்கலாம். அவன் முண்டியவர்களுக்கு வழிவிட்டு அவரருகே ஒண்டினான். வாகாக நின்றபின், இடது கையால் பர்ஸை நிமிண்டி விட்டான். புதுப்பட பேனர்களை அவர் எம்பி எட்டிப் பார்க்கையில், நிமிண்டிய பர்ஸும் எம்பி அவனது வலது கைக்குள் வந்தது. நெளிந்து சட்டைக்குள் பதுக்கினான்.
முதல் திருட்டில் வியர்த்து, உடல் சில்லிட்டு விட்டது. ஒரு மணி நேரம் வெல்டிங் வைத்திருந்தால் கூட இவ்வளவு ஊற்றாது. டிக்கெட் எடுத்து மறு ஸ்டாப்பில் இறங்குகையில் அவன் மனமும் உடலும் பாரமாய்க் கனத்தன.
சந்து ஒன்றினுள் புகுந்து மறுபக்க பெரிய வீதியை அடைந்தபின் மெள்ள பர்ஸை உருவினான். பிரிக்கையில் விரல்கள் நடுங்கின.
டீ மட்டுமே குடித்து அவன் வேலை செய்த போதும்கூட ஸ்பானர் பிடித்த அவன் விரல்கள் நங்கியதில்லை.
உள்ளே மூன்று பெரிய நோட்டுக்களோடு சில்லரை நோட்டுக்களும் முறுமுறுத்தன.
அவன் மூச்சு வேகமாய் வெளியேறியது.
மூடி பாண்ட் பாக்கெட்டினுள் செருகியவன். அருகிலிருந்த ஓட்டலுக்குள் நுழைந்தான்.
நெஞ்சு உலர்ந்து கிடந்தது. தண்ணீர் மட்டும் கேட்கப் பயந்து, “நாலு இட்லி, ஒரு காப்பி. முதல்ல தண்ணி வேணுங்க” என்றான்.
காரச்சட்னியும், இட்லியும் சாப்பிட்டான். உறைப்பும், சூடான காப்பியுமாய் மாறி மாறிச் சாப்பிட, நாவு எரிவு கண்டு ஊறியது.
கண்ணாடிக்குள் சதுரமும் உருண்டையுமாய் இனிப்புகள் வரிசையிட்டிருந்தன.
“பில்லா?”
“பார்சலும் வேணும்.”
“என்ன?” வினாவுடன் அலட்சியமாய் சர்வரின் புருவங்களும் உயர்ந்தன,
”உருண்டையா, சக்கரத் தண்ணில மிதக்குதே?”
“ரசகுல்லா.”
“ம்… அதுல பத்து”
“ஒண்ணு மூணு ரூவா.”
“இருக்கட்டும். பத்து ரூவாக்குக் காரம்… பக்கோடா வையி.” பணம் இருந்தால் தெம்புதான்!
பார்சலுடன் வெளியேறிய டேவிட்டிற்கு இன்னும் தன் ‘அதிர்ஷ்டத்தை’ நம்ப முடியவில்லை.
“ஐயா.”
அந்த மெல்லிய குரல் அவனைப் பலமுறை அழைத்த பின்னரே குனிந்து பார்த்தான்.
ஒரு சிறுமி சரம் சரமாய் கண்ணாடித் தாளில் பாச்சை உருண்டைகள், கிளிப்புகள், சின்னத்தோனில் ஒரு நீண்ட துணிப்பையுடன் நின்றிருந்தாள்.
”சோப்பு, சீப்பு, பின்னு, பொட்டு… எதுனாச்சும் வாங்கிக்குங்கய்யா” கண்களும் கெஞ்சின.
“வேணாம்மா.”
“எதுனாச்சுமய்யா. என் தம்பிக்குப் பாலு வாங்க ஆயா காத்திட்டுருக்குய்யா. 2 ரூவாக்கு வாங்கிக்கோங்களேன்”. கூட நடந்து கொண்டே இளைஞ்சினாள்.
நிறமிழந்த சட்டை அவளது மெலிந்த தோள்களிலிருந்து தழுவ, அதை மேலே தூக்கிவிட்டுக் கொண்டபடி அவள் சுட்டிக் காட்டிய திக்கில் அவள் ஜாதிப் பெண் ஒருத்தி கையில் குழந்தையோடு உட்கார்ந்திருந்தாள்.
ஏழை ஜாதி!
“அதா ஒங்கம்மா?”
“ஆமா.”
“என்ன பண்ணுது?”
“இது விக்கிறதுதாங்!”
“நீதான விக்குற?”
“தம்பிய பாத்துக்கணுமில்ல?”
‘பாலுக்கும் வக்கில்லாதவளுக்கு எதற்கு இன்னுமொரு குழந்தை?’ அம்மாவை முறைத்தவன், சிறுமியிடம் கேட்டான்.
“ம்… என்ன தர்றே?”
“எதுனா கேளுங்கய்யா” உற்சாகமானாள்.
வார்த்தைக்கு வார்த்தை அவனை அவள் ‘ஐயா’ போட்டு அழைத்தது அவனுக்கு வேடிக்கையாயிருத்தது.
தீயிட்டாலும் எரிக்க முடியாத பிசுக்கில் நிற்கும் தரித்திரன் அவனை, ‘ஐயா’ என்றழைக்கும் தந்திரக்காரக் குட்டி!
“தொவைக்கிற சோப்பு இருக்குதா?”
“இருக்குய்யா. ரெண்டர ரூவாத்தான். நல்லா வெளுக்கும்.”
“ரெண்டு குடு.”
பர்ஸை ஜாக்கிரதையாய்க் கொஞ்சமாய்ப் பிரித்து ஐந்து ரூபாய்த்தாளை உருவி நீட்டினான்.
அவள் பையுள்ளிருந்து சோப்பைப் பரபரப்பாய் எடுக்கையில் பாச்சை உருண்டைச் சரம் கீழே சரிந்தது. அலைந்தவளுக்கு ஆதரவாக அவனும் பொறுக்கி உதவினான்.
‘அம்மாக்காரி இருக்கிற இடத்தை விட்டு நவுருதாளா பாரு’ மனசுக்குள் கறுவினான்.
ஸ்வீட், காரம், சோப்புப் பொட்டலங்களோடு நடக்க, மனம் பலவாறு கணக்குப் போட்டது.
போனதும் துணி துவைச்சுக் காய வைக்கணும். காஞ்சிருமா? ஏங்காயாம? வெயிலு ‘சுளீரு’ங்குது. எண்ணெய் பூசி, வெத்தியில் குளிச்சு, சாப்பிட்டுப் புள்ளைங்களோடு வெளிய கிளம்பிறணும். எங்ஙன போவ?
‘அட எங்கனாச்சும் ஜேபியில காசிருக்குல்ல, பிறவென்ன, கடைக்குப் போய்ப் புதுசு எடுக்கணும்’.
”ஐயா”.
“ஐயா, கூப்பிடக் கூப்பிட விரசலா நடக்குறீங்களே?”
”என்ன பாப்பா?”
“இதை வுட்டுட்டுப் போறீங்களே”
திகைத்தான். அந்தப் பருத்த கறுப்பு பர்ஸ் அவளது பிஞ்சு விரல்களில் விகாரமாய்த் தெரித்தது.
”நீங்க குனியறச்சே கீழே வுழுந்துருச்சாம். அம்மா பாத்துட்டு சொன்னாங்க.”
சிறுமிக்கு ஓடி வந்ததில் மூச்சிரைத்தது.
“நீங்க பஸ்ஸுல ஏறிடுவீங்களோன்னு பயந்து ஓடியாந்தேங்.”
“ஆங்” – அவனுக்குப் பேச்செழவில்லை.
“பிடிங்கய்யா. தம்பிக்குப் பாலு வாங்கணும். நீங்க தந்த அஞ்சு ரூவாயைக் கூட அம்மாக்கிட்ட இன்னுந்தரல”.
“தாங்க்ஸு பாப்பா.”
“எம்மாம் பணம் – சாக்ரதையா இருங்க”.
சிறு வயதிலேயே சம்பாதிப்பதில் காசு அருமை புரிந்தவள், பெரிய மனுஷ தோரணையில் அறிவுறுத்தினாள்!
“சரி” புன்னகைத்தான்.
“ஒனக்குக் காசு தரேன் – மிட்டாய் வாங்கிக்கோ” பர்சைத் திறந்தான்.
“ஐயோ, வேணாம். அம்மா திட்டும்” என்றவள், தோளிலிருந்து நழுவும் சட்டையைத் தூக்கி விட்டுக் கொண்டு பறந்தாள்.
அவனுக்குத் தாங்கவில்லை.
அவள் தாயின் நினைவு வந்தது.
சிறு வயதில் அவன் தவறுகளை, “டேய், களவாணிப் பயலே… திருட்டு ராஸ்கோலு… செய்வியாலே… செய்வியா?” என்று விளக்குமாறோடு கூவியபடி அவனைப் பாய்ந்து அடித்துத் திருந்தியதெல்லாம் இன்னும் மறக்கவில்லை.
கர்த்தரின் பத்துக் கட்டளைகளில் ஒன்றான ‘களவு செய்யாதிருப்பாயாக’ என்பதை ஞாயிறு வேத வகுப்புகளில் இரைந்து இரைந்து சொன்னது மனத்துள் உறுத்தியது.
அந்த ஏழைத் தாய் பிள்ளைகளுக்குக் கல்வி, சுகவாழ்வு தரக் கூடாவிட்டாலும், ஒழுக்கத்தை, நேர்மையைத் தந்திருக்கிறாள் என்ற நினைப்பில் அவன் கண்களும் மனமும் நிறைந்தன.
‘வயிறு காய்ந்து, வற்றலாயிருந்த இரு பெண்களுக்கிருந்த நேர்மை தடி ஆண்பிள்ளை தனக்கு ஏன் இல்லாது போனது?’
டேவிட் இப்போது நிஜமாகவே குறுகினான். ஆனால் மனம் மெல்ல நிமிர்ந்தது.
‘சே… என்ன காரியஞ் செஞ்சு போட்டேன்? பர்ஸுல ஜிப்பாக்காரரு விலாசம் கிடக்குது. பெருமாளுபுரத்தானே? அஞ்சாம் நம்பருல ஏறுனா பத்தே நிமிசம். வீட்டுக்குள்ளார பர்ஸ வீசிரலாம். எத்தனைக் காசு? பாவம் பதச்சுப் போயிருப்பாரு மனுஷன். என்ன ஐம்பது ரூவா எடுத்துச் செலவழிச்சிருப்பேனா? மறு மாசம் ரூவாயோட ஒரு மன்னிப்புக் கடுதாசி எழுதிப் போட்டுருவோம் – புத்தி கெட்டுல்லப் போச்சு? திருட்டுக் காசுல மினுக்கிக்கிட்டு பண்டிகை கொண்டாடிர முடியுமா? கோயிலுக்குள்ளார போயி முழங்காலு போட்டு ஜெபிச்சிர மனசு வருமா? வேணாம்பா வேணாம்’.
ஆவேசத்துடன் கால்களை வீசிப் போட்டு நடந்தான்.
வெயிலுக்கு மேலும் வியர்த்து வழிந்தது. துணிகள் மேலும் கசங்கி நாறின.
ஆனாலும் உள்ளே மிகச் சுத்தமாக உணர்ந்தான் டேவிட்!
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.