சில நிமிடங்கள்




மாலையில் வந்த வெள்ளி நிலவு இரவு முழுவதும் இமைகள் மூடாமல் விழித்திருப்பவர்களுக்கு துணையாக வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. நட்சத்திரங்களும் கை கோர்த்தன.

பகல் இரவு தெரியாமல் ஓடிக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டும் ஒன்று தான். ஒரே வெளிச்சம். எந்த வேறுபாடும் கிடையாது.
விடுமுறை என்றாலே ஒரு புறம் மகிழ்ச்சி மறுபுறம் பதட்டம். அதுவும் பண்டிகை காலங்களில் ஏன் இந்த விடுமுறை என்று கேட்கத் தான் தேன்றுகிறது.
மக்கள் இரயில்களிலும் பேருந்துகளிலும் அடைத்துக் கொண்டு பயணிக்கும் போது வெடிக்க காத்திருக்கும் பலூன்கள் போன்று திணறும் வண்டிகள் சத்தம் கேட்கிறது.
ஒரு நாள் விடுமுறை என்றால் மகிழ்ச்சி இரண்டு நாள் என்றால் அது மூன்று நாள் ஆகும் வாய்ப்பு இல்லையென்றால் மகிழ்ச்சி சில நேரங்களில் அதுவும் தொல்லை தான்.
சனி மற்றும் ஞாயிறுகளை ஒட்டி அரசு விடுமுறை வந்தது. மூன்று நாட்கள் விடுமுறை மகிழ்ச்சி.
கண்மணி கல்யாணம் ஆன புதிதில் அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறையாவது முறை வைத்து அவள் அம்மா தன் மகளை பார்க்க தவறுவதில்லை. ஆனாலும் அவள் அம்மா வீட்டிற்கு மாதா மாதம் சென்று வருவது வழக்கம்.
எனக்கு தான் பெரிய பிரச்சனை. அவளை பேருந்திலோ அல்லது இரயிலிலோ ஏற்றி விட வேண்டும். அதுவும் நான் ஏற்படுத்திய பழக்கம். அவள் அம்மா வீடு இருப்பது பெருநகரத்தில். எங்கள் ஊரில் இருந்து இரு சக்கர வாகனத்திலோ அல்லது பேருந்திலோ இடையில் உள்ள சிறு நகரத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் பேருந்து பிடித்து சரியாக சென்றால் ஒரு மணி நேர பயணம் இல்லையென்றால் ஒன்றரை மணி நேர பயணம்.
அதன் பிறகு நேரத்தை பொருத்து இரயில் அல்லது பேருந்தில் செல்ல வேண்டும்.
பயணம் முடிவானது மூன்று நாட்கள் விடுமுறையை சரி செய்ய. அன்றும் அதே போல் அதிகாலையில் வீட்டின் விளக்குகள் எழுந்து கொண்டன. கண்மணி அம்மா வீட்டிற்கு செல்வ தென்றால் பல வருடங்கள் கழித்து செல்வது போல் ஆர்வத்தில் கிளம்பினாள். நானும் அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் கொஞ்சம் சமாளித்து தான் கிளம்பினேன். எப்போதும் பேருந்து பயணம் தான். ஆனால் என்னுடன் காத்திருப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். கற்பூரவல்லி கனிவதற்கு காத்திருந்து அதன் இனிப்பை பெறுவதற்கு. அதுவும் இரயில் நிலையத்தில் என்றால் நல்ல வசதி.
அவள் முதலில் பேருந்து தான் வசதி நிதானமாக செல்லலாம் என்றாள்.
காலையில் முடிவை மாற்றி விட்டாள். இரயிலில் செல்கிறேன் என்றாள். பயணம் பர பரக்க தொடங்கி விட்டது.
எனக்கும் பதட்டம் தொடங்கி விட்டது. இரயிலுக்கும் எனக்கும் எப்போதும் பொருத்தம் கிடையாது. என்னை பொறுத்தவரை முரண்களை முயல்வதில் தான் சுவாரசியம் மற்றும் இன்பம். வாழ்க்கையின் இயல்பும் கூட.
நானும் அவளும் பேருந்து நிலையத்தை அடைந்தோம்.
நான் விரும்பாத பல இடங்களில் ஒன்று பேருந்து நிலையம். இளமையில் பேருந்தில் அதிகம் பயணம் மேற்கொள்வதில்லை இரயிலில் மட்டும் தான். பேருந்தின் வெப்பம் ஒரு வித நாற்றத்தை பரப்பும் அது எனக்கு ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தி மயக்கம் வரும். காலங்கள் செல்ல செல்ல அது காணாமல் போனது. நாட்கள் நினைவுகளை விழுங்கி விடும்.
இப்போது பேருந்து நிலையமும் துர்நாற்றமும் பிரிக்க முடியாது என்று ஆகிவிட்டது. கடவுளால் கூட முடியாத காரியங்களில் ஒன்று என்றாகி விட்டது.
கண்மணி கூட அடிக்கடி சொல்வாள். நீங்கள் பல அமைப்புகளில் இருக்கிறீர்கள். இதனை ஏதாவது செய்யலாமே என்று. பார்க்கலாம் என்று கூறி அடுத்த விசயத்திற்கு சென்று விடுவேன்.
ஆனால் புது கமிஷனர் வந்துள்ளார். பெரிய நம்பிக்கை இருக்கிறது. பல முயற்சிகள் நடக்க தொடங்கி உள்ளது. அமைப்புகளும் முன்னெடுக்கின்றன. அடுத்த பயணத்திற்குள் இந்த பிரச்சனை காணாமல் போகலாம்.
மக்களும் கொஞ்சம் மனம் வைக்க வேண்டும்.
நல்ல வேலை நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து பறக்க காத்திருந்தது கழுகுகளை போன்று. வேகமாக சென்று ஏறிக்கொண்டோம்.
ஒரு சில இருக்கைகள் மட்டுமே இருந்தது. காலையிலும் இருக்கைகள் இல்லை. நான் அடுத்த பேருந்தில் செல்லலாம் என்றேன். அதற்குள் கண்மணி நடத்துனரிடம். இரண்டு சீட்டு பக்கம் பக்கமாக வேண்டும் என்றாள். நீங்க பார்த்து உட்காந்துகங்க என்றார். இல்லை வேண்டாம் என்று நகர்ந்தாள். அதற்குள் நடத்துனர் இருமா என்று சொல்லி ஏற்பாடு செய்தார்.
பயணத்தை நடத்துனர் விசில் அடித்து தொடங்கி வைத்தார் வெண்சங்கு போன்று.
நகர தொடங்கியவுடன் இளையராஜாவின் இன்னிசை மெல்ல வந்து வருடி சென்றது. பழைய நினைவுகள் மனதிலிருந்து எண்ணத்திற்கு வந்து சென்றது.
இருக்கைகள் புதுசாக இருந்தது ஆனால் பழைய மாடல் பேருந்தில் இருக்கும் வசதி இல்லை என்றேன்.
கண்மணி உடனே நல்ல தள்ளி கிட்ட உட்காருங்க நமக்காக தான் இப்படி நெருக்கமாக போட்டு இருப்பார்கள் போல என்றாள்.
கண்மணி இது போன்ற பயணத்தில் கைளை பிடித்து கொள்வாள். பாட்டு கேட்க முடியாது. கைபேசி பார்க்க முடியாது. எதையும் நினைக்க முடியாது. ஒரு வார கதைகள் அல்லது ஒரு மாத கதைகள் என்று அடுக்குவாள். அவள் அலுவலகம், எங்கள் வீட்டை சுற்றியுள்ள, அவள் வீடு மற்றும் அவள் வீடு சொந்தங்கள் கதைகள் மந்தி கிளைகள் தாவி தாவி மீண்டும் அதே இடத்திற்கு வந்து மீண்டும் செல்வது போல் மிகவும் விருப்பமாக ஒவ்வொரு கதையாக பேசுவாள். குரல் இனிமையாக இருந்தாலும் கேட்பது போல் நடிக்க வேண்டும்.
நடத்துனர் கண்டிப்பாக சில்லறை கேட்டாலும் கிடைத்து விடுமா என்ன ஒருசிலர் கொடுத்தார்கள் பலர் அவர் பொறுமையை சோதித்தார்கள். பயண சீட்டு போட பட்டுவிட்டது. எண்ணி சரிபார்த்து பெரு மூச்சு விட்டார் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு.
யாரோ ஒருத்தர் இந்த டிக்கட்டுகளுக்கு ஜிபே அல்லது கன்னடாவில் உள்ளது போல் கடன் அட்டை இருந்தால் தேவலாம் என்றார்.
ஒரு சில பேருக்கு சில்லறை தரவில்லை. அவர்கள் சில்லறை திரும்ப பெறும் தவிப்பில் பயணத்தை பதட்டத்துடன் மேற்கொண்டார்கள். நான் கூட பல முறை சில்லறை வாங்காமல் சென்று இருக்கிறேன்.
வேர்கள் மீது கருப்பு சாலைகள் நிமிர்ந்து ஓடியது. சூரியனின் பார்வை முழுமையாக பெற்ற மகிழ்ச்சியில் சட்டென்று பார்த்தேன் கண்மணியின் முகம் சிவந்து கண்கள் மின்னியது.
எல்லா மரத்தையும் வெட்டி விட்டு பூச்செடியும் மரக்கன்றும் வைத்திருக்கிறார்கள் பாவிகள் என்று ஒருவர் புலம்பினார். நான் திரும்பி பார்க்க வில்லை.
இன்னும் சில மணி நேரத்தில் சூரியன் உச்சிக்கு வந்தவுடன் அனைத்து உள்ளங்களும் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
கண்மணி பேருந்து சரியான நேரத்திற்கு சென்று விடும். நீங்க கடிகாரத்தை பாத்திட்டே வராதிங்க.
அப்படியே தாமதம் ஆனாலும் பேருந்தில் செல்லலாம். நல்ல மெஸ்சா பார்த்து இரண்டு நாள் சாப்பாட பாத்துகோங்க என்றாள். நான் பார்த்து கொள்கிறேன் என்றேன்.
இருந்தாலும் தவறாது அழைத்து கேட்டு கொண்டே இருப்பாள். தொல்லை அதுவும் அன்பு தொல்லை. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படியே தான் இருப்பாள்.
திரும்ப ஞாயிற்று கிழமை காலைல வருவேன் உங்களுக்கு வேலை இல்லன வாங்க கடைக்கு போய்ட்டு ஊருக்கு போலாம். இல்லையென்றால் நானே வந்து விடுகிறேன் என்றாள்.
இப்படி தான் கூறுவாள். சரி என்றால் நீங்க வாங்க தனியா வந்தா நேரமே போகாது என்பாள்.
நான் தலையாட்டி வைத்தேன்.
ஊர் வந்து விட்டது. புறநகர் பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்தது. சட்டென்று போக்குவரத்து நெரிசல்.
பெரிய கூட்டம் கூடிவிட்டது
பேருந்து நின்று விட்டது. ஒரு பெரிய விபத்து லாரி கவிழ்ந்து கிடந்தது சற்று தள்ளி சொகுசு பேருந்து சாலையை தாண்டி வயலில் கிடந்தது. எதிரே ஒரு பெட்ரோல் பங்ஃகில் சிகப்பு விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தது.
ஒருவர் விடியற்காலை அதனால் ஓட்டுனர் கண் அசந்து விட்டார் என்றார்.
இன்னொருவர் கைபேசி பேசிட்டே வந்துட்டார் என்றார்.
ஒருவர் மட்டும் நம்பும் படியாக கூறினார் அதுவும் இருக்கலாம்.
லாரி பெட்ரோல் பங்ஃகில் பெட்ரோல் போட்டு விட்டு வெளியே பார்க்காமல் வருவதற்கும் சொகுசு பேருந்து எதையும் பார்க்காமல் அதி வேகமாக வருவதற்கும் சரியாக இருந்தது. அந்த நிமிடத்தில் யாரையும் யாரும் இடித்து விட கூடாது என்று எதிர் எதிராக வந்த லாரி ஒரு திசையிலும் பேருந்து மறு திசையிலும் எதிர் எதிராக மோதி கொள்ளாமல் திரும்பியதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்க பட்டது. இருந்தாலும் பலருக்கு பலத்த காயம். அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டு இருக்கிறார்கள் என்றார்.
பங்ஃகை ஒட்டி இன்னொரு சரக்கு லாரி அமைதியாக எந்த பொறுப்பும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தது. அதுவும் ஒரு காரணம் இந்த விபத்திற்கு என்றார் இன்னொருவர்.
பேருந்து மெல்ல மெல்ல மெளன சாட்சியாக அடிபட்டு கிடந்த வண்டிகளை பார்த்து ஆறுதல் கூறிய படியே கடந்து சென்றது.
பேருந்துக்கு முன்பாக இரு குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து கொண்டு ஒரு கையில் வாகனத்தை ஓட்டி கொண்டு இருந்தார்.
இன்னொரு கை யாரிடமோ பேசி கொண்டு இருந்தது.
எனக்கும் பல சிந்தனைகள் ஓடியது. கண்மணி சற்று கலங்கி போனவள் என் கைகளை மேலும் இருக்கி பிடித்து கொண்டாள். அவள் கண்கள் மேலும் சிவந்து இருந்தன.
அவள் என்னிடம் தலைகவசத்த வண்டியில மாட்டாம தலைல போடுங்கணு சொன்னா கேட்க மாட்டிங்க. இனிமேல் நீங்க கேட்கலைனா நீங்க என் வண்டியில உட்காந்து வாங்க.
சரி அதுவும் நல்லது தான்.
எனக்கு இப்போது அவளுடன் அவள் ஊருக்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.
அவளிடம் கேட்கலாம் என்று வாய் எடுத்த போது பேருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து உற்சாகமாக ஓடியது.
நடத்துனர் விசில் அடித்தார். நடை மேடையில் மோதி நின்றது. அனைவரும் விட்டால் போதும் என்று படிகளில் இறங்கியும் இறங்காமலும் ஓடினார்கள்.
இறங்கியவுடன் நேராக ஆவின் பால் நிலையத்திற்கு சென்று காபி குடித்தோம்.
தெற்கில் இருந்து வந்த காலை தென்றல் கண்மணியின் முகத்தில் விழுந்த நொடியில் முகம் முழுவதும் புன்னகை மலர்ந்தது.
இது ஒரு நொடி குழந்தை சிரிப்பது போல் காண கிடைத்தது.
கண்மணி சொன்னாள் எனக்கு மனசு சரி இல்லை நான் ஊருக்கு போகல.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போயி ரொம்ப நாள் ஆயிடுச்சி.
கோயிலுக்கு போகலாம்.