சிற்றன்னை





(1949ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
3. திருமணம்

ஒரு கலியாண வீடு; அதாவது கலியாண வீட்டின் முன் முகப்பு. சட்டத்தால் வாரிசுகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று சட்டத்தையும் பொதுஜன அபிப் பிராயத்தையும் ஒருங்கே திருப்தி செய்விக்கும் நோக்கத் துடன் நடப்பது போல அவ்வளவு படாடோபமற்ற அலங்காரம்.
வாசலில் தெருவுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பூவரசமரம் நாலைந்து பேர்கள் கலியாண ‘மஜா’வில் கும்மாள மடித்து நிற்கிறார்கள்: அவர்களுள் ஒரு சிறுவன்; ஒற்றை நாடியான சரீரம்! தீட்சண்யமான கண்கள் – எண்ணை கொஞ்சம் பட்டு வழிய விட்டுச் சீவிய கிராப்புத் தலை. இடையில் வேஷ்டி, பட்டு ஷர்ட்; இடுப்பில் பட்டுக் கரை மேல்வேஷ் டியைப் பிரிமணையாகச் சுற்றிக் கட்டியிருக்கிறான். வெற் றிலை அளவுக்கு மிஞ்சிப் போட்டதால், வாயும் ஷர்ட்டும் சிவப்புக் கறையுடன் காணப்படுகிறது. வாய் அசைபோட் டுக் கொண்டிருக்கிறது.
சிறுவர்கள் கும்பல் சும்மா நிற்கவில்லை. ஒருவரை யொருவர் பிடித்துத் தள்ளி விளையாடிக் கொண்டிருக்கின் றனர். ஒரு பையன் வாழைமட்டை ஒன்றை வைத்துக் கொண்டு பக்கத்தில் யாரும் கவனிக்காமல் பராக்காக இருக் என்று கும் சமயத்தில் பின் பக்கமாகப் போய், படார் தரையில் அடித்து அதனால் திடுக்கிடுவதைக்கண்டு சிரித்து மகிழுகிறான்.
உள்ளே நாதசுரக்காரன் குரலெடுக்கிறான். சாதாரணக் கலியாணம் என்பதைக் காட்டும் சாதாரணத்திறமை.
பட்டு வேஷ்டி அலங்காரத்துடன் இருக்கும் பையன், ரொம்பப் பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டு, அப் பொழுதுதான் அங்கு வந்த ஒருவனிடம் “எங்கப்பாவுக்குக் கலியாணம்டா” என்று பெருமையடித்துக்கொண்டான்.
கேட்டவன், சொன்னவனுடைய அறியாமைக்குப் பரிதவிப்பவன் போல “இவங்க அப்பாவுக்காண்டா. எங்க மதினிக்குக் கலியாணண்டா!” என மற்றவர்களுக்கு உண்மையை, நிர்த்தாரணம் செய்து பாராட்டுதலைச் சுற்று முற்றும் எதிர்பார்க்கிறான்.
“எங்கப்பாவுக்குத் தாண்டா!” எனக் கிரீச்சிட்டுக் கொண்டு, ‘கலியாணக் கடுதாசிலே கூட அச்சுப் போட்டிருக்கு’ என்றவாறு இடுப்பில் சுற்றியிருந்த பட்டுலேஞ்சியை அவிழ்த்து கந்தரகோளமாகக் கழுத்தில் போட்டுக் கொண்டு, துருத்திக் கொண்டிருந்த மடிப்பொட்டளத்தை அவிழ்க்கிறான். அதில் ஒரு லட்டு, கசங்கி வெதும்பும் ஒரு கட்டு வெற்றிலை, சாயப்பாக்கு வகையறாக்களுடன் நசுங்கும் கலியாணக் கடுதாசியை வெளியே எடுத்து நிமிர்த்தி விரித்து, எழுத்துக் கூட்டிப் பெயரை வாசிக்க ஆரம்பிக்கிறான்.
“ஏ.எஸ். சு. இந்-தி-ர… வடி.. வடி…வேலுப் பிள்ளை …! எங்க அப்பா.”
அதே சமயத்தில் எதிர்க்கட்சியாடிய பையன், “ம-ர-க- தா-ம்-பா-ள்…எங்க மதினி.”
“அப்படின்னா நாம சொந்தம்.” என்று கழுத்தில் கையைப் போட்டுக் கொண்டு இறுக்குகிறான் மாப்பிள்ளையின் மகன்.
அதே சமயத்தில் கூட்டத்திலிருந்த இன்னொருவனுக்குப் பூவரச மரத்தில் ஏறித் தழை பிடுங்கி ஊதல் செய்ய வேண்டுமென்று தோன்றி விடுகிறது. விருவிருவென்று ஏறிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு ஒரு இலையைச் சுருட்டி வாயில் வைத்துக் கொண்டு ஊதுகிறான். அந்தச் சப்தத்தைக் கேட்ட மற்ற சிறுவர்கள் இலைக்காகக் கெஞ்சுகிறார்கள்.
கிளை கிளையாக ஒடித்துப்போடுகிறான் உயர இருப்பவன். கீழே ரகமயமான ஊதல் சப்தம்.
சுந்தரவடிவேலுப் பிள்ளையின் மகனும் ஒரு இலையை எடுத்துக் கொண்டு யாரும் பிடுங்கிக் கொள்ளாமல் தூரத்தில் ஓடி நின்று கொண்டு சுருட்டி வாயில் வைத்துக் கொண்டு ஊதுகிறான். அவசரத்தில் உருட்டியதால் சத்தம்… பக்-பக்- என திக்கித் திக்கித் தாரை வாசிக்கிறது.
அச்சமயம் கலியாண வீட்டை நோக்கி ஒரு பெரியவர் கையில் மடிசஞ்சி மூட்டையுடன் நடந்து வருகிறார்.
அவரைக் கண்டதுதான் தாமதம். “தாத்தா வந்திட் டாங்க…” என உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டு உள்ளே ஓடுகிறான்.
ஆளில்லாமல் அலங்காரத்துடன் நிற்கும் மணவறை, பந்தலில் ஒரு மூலையில் மேளகாரன். நடுவில் வெற்றிலைத் தட்டு. யாரோ ஒரு பெரியவர் மட்டும் உட்கார்ந்திருக்கிறார். அவரையும் தாண்டி விழுந்து உள்ளே ஓடுகிறான். வீட்டு வெளி ஓர வழியாக உள்ளே பெண்கள் கும்பலைச் சுற்றிக் கொண்டு மச்சுப்படிகளில் வேகமாக ஓடுகிறான்.
ஓடுகிற வேகத்திலும் அவன் வாயில் ஊதல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
மச்சில் ஒரு அறைக்குள் திரும்புகிறான்.
வாசற்படியில் நின்றுகொண்டு விரைக்க வியர்க்க, “அப்பா, அப்பா! தாத்தா வந்திட்டாங்க!” என்று இளைப் பால் கம்மிக் கம்மிச் செய்தியைக் கக்குகிறான்.
அறையில் விரித்த ஜமுக்காளத்தில் வெற்றிலைத் தட்டைச் சுற்றி ஐந்தாறு பேர் உட்கார்த்திருக்கிறார்கள்.
ஒருவர் பக்கத்தில் உள்ள திண்டின்மேல் முழங்கையை மட்டும் சாய வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
மடியில் ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை உட்கார்ந்து கொண்டு அவர் கன்னத்தைத் தொட்டுத் தொட்டு “அப்பா! அப்பா!” என்ற வண்ணம் பெரியவர்கள் பேச்சில் தலையிட்டுப் தன்குதலையால் குழப்புகிறது. அவர் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடி மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மகன் சப்தம் கேட்டதும் ஏறிட்டு அந்தத் திசையைப் பார்க்கிறார்.
“எங்கெடா…”
குழந்தை, சிறுவன் கையிலிருக்கும் ஊதலைப் பார்த்து விட்டு, ‘எனக்கும் ஊதல்’ எனக் கத்துகிறது,
“தரமாட்டேன்….அப்பா, தாத்தாவைக் கூட்டி யாரேன்” என்று கத்தியவண்ணம் கீழே ஓடுகிறான்.
குழந்தை ஊதல் வேண்டும் என்று கத்த ஆரம்பிக்கிறது.
“டே கண்ணு…” எனத் தகப்பனார் பேச்சு எடுக்கு முன் மாடிப்படிகளில் இருவர் மோதிக் கொள்ளும் சப்தம்… சிரிப்பு.
“எங்கடா இந்த ரயில் அவசரம்?” என்ற பெரியவர் குரல்.
“இல்லே தாத்தா; உங்களைக் கூட்டியாரத்தான் ஓடி யாந்தேன்…”
“அட போடா! படுக்காளிப் பயலெ, மாடிப்படியிலே இப்படி ஓடலாமா?.. பல்லு தெறிச்சுப் போகாது, விழுந்தா……?”
“விழ மாட்டேன் தாத்தா!”
பாட்டனும் பேரனும் உள்ளே வருகிறார்கள். “நமஸ்காரம் மாமா! வரவேணும்…”
கிழவனார் தன் பேத்தியைக் கையில் வாங்கிக் கொண்டு முத்தமிடுகிறார். குழந்தை அவர் தோள் வழியாகப் பின் புறத்தில் நிற்கும் அண்ணனிடமிருக்கும் ஊதலைப் பார்த்துக் கொண்டே அது தனக்கு வேண்டும் எனக் கத்துகிறது.
கிழவனாரும் மருமகனும் ஜமுக்காளத்தில் அமருகிறார்கள்.
பக்கத்தில் நின்ற வாலிபன் வந்தவரைப் பன்னீர் தாம்பூலம் பரிமாறி உபசரிக்கிறான்.
பேரன் பன்னீரைத் தெளித்து வழுக்கையில் அது வழி வதைக் கண்டு ரசிக்கிறான்.
கிழவர் பையனைச் செல்லமாகக் கண்டித்துக்கொண்டு, “சீ!படுக்காளிப் பயலே, இங்கே வா; இப்படி உட்காரு, படிக்கியால” என்று கேட்கிறார்.
“இப்போ ரெண்டாங் கிளாஸ்” என்று பெருமை அடித்துக் கொள்ளுகிற மாதிரி ஆரம்பித்து ”பெயிலாப் போச்சு” என்று முடிக்கிறான்.
சிறு குழந்தையின் நச்சுக்காக அவர் எழுந்திருந்து ஜன்னலுக்கு வெளியே நின்ற தென்னையின் மடலிலிருந்து ஒரு ஓலையைப் பிய்த்துக்கொண்டு வந்து, உட்கார்ந்து மடியிலிருந்த சூரிக்கத்தியால் அதைத் திருத்தி, ஊதல் ஒன்று செய்ய ஆரம்பிக்கிறார் கிழவர்.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட மாப்பிள்ளைச் சடங்கு ஆரம்பமாகிறது.
மாப்பிள்ளை மணவறைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்.
புகை மண்டிய ஹோமம் நடக்கிறது. பிறகு பெண் சடங்கு.
இந்த நேரத்தில் கிழவனார் தன் பேரப்பிள்ளைகள் இருவரையும் மடியில் உட்கார வைத்துக் கொண்டு மணப் பந்தலில் வருகிற விருந்தினர்களை உபசரிப்பதில் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்.
மணமேடையில் மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து உட்காருகிறார்கள்.
திருமாங்கல்யதாரண சமயம்… மௌனமும் இரைச்சலும்.
சந்தடியில் பெண் குழந்தை கிழவனார் மடியிலிருந்து நழுவி ஓடித் தகப்பனார் மடியில் உட்கார்ந்து கொண்டு கையிலிருந்த ஊதலை வாசிக்கிறது.
மணப்பெண் கடைக்கண் போட்டுக் குழந்தையைப் பார்க்கிறாள் – முகத்தில் வெட்கம் கவிகிறது.
அவள் பார்வையைக் கண்டுகொண்ட குழந்தை அவள் மூஞ்சிக்கு நேராக ஊதலை நீட்டிக் கொண்டு ஊதுகிறது.
மணவறையில் ஏக ரகளை; எல்லோரும் சிரிக்கிறார்கள்.
மாப்பிள்ளை சிரித்துக்கொண்டு “குஞ்சு, பாட்டா மடியிலே இருந்துக்கோம்மா!” என்று பக்கத்திலிருந்தவர்களிடம் எடுத்துக் கொடுக்கிறார்.
குழந்தை கைமாற்றிப் பாட்டையாவிடம் சேர்ப்பிக்கப் படுகிறது. ஊதல் சப்தத்தை மாத்திரம் விடவில்லை.
அதே சமயத்தில் திருமாங்கல்ய தாரணமும் நிகழ் கிறது… பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுகிறது… மாப்பிள் ளையின் கையில் மட்டும் சிறிது நடுக்கம்….. முகத்தில் மலர்ச்சி யானாலும்…!
கிழவனார் பேரன் கிராப்புத் தலையைத் தடவிக் கொண்டு மணமேடையைப் பார்க்கிறார். என்றாலும் பார்வையுடன் நினைவு லயிக்கவில்லை.
அம்மி மிதித்து அருந்ததி காட்டும் சடங்குகள்…யாவும் நடைபெறுகின்றன.
ஆசீர்வாதம்..
பெரியோர் யாவர் முன்பும் தம்பதிகள் வந்து வணங்கு கின்றனர். ஒவ்வொருவரும் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கின்றனர்.
கடைசியாக முதல் மாமனார் முறை.
அவர் முன் வந்ததும் சுந்தரவடிவேலு சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார்… பெண்ணும் விழுந்துகும்பிடுகி றாள்.
பெரியவர் கண் கலங்குகிறது…திருநீற்றை இருவர் நெற்றியிலும் இடுகையில் அவர் கை நடுங்குகிறது.
சின்னக் குழந்தை?
“அப்பா! நான்தான் நல்லா ஊதியை ஊதினேன்! அந்த அக்கா மூஞ்சிலே கூட ஊதினேனே…” என்கிறது. மணப் பெண்ணின் முகம் சிவக்கிறது. யாவரும் சிரிக்கின்றனர்.
மாப்பிள்ளையும் குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு முத்தமிட்டு “அக்கா இல்லேடி…சித்தி” என்று கொண்டே ஏதோ யோசனை தட்டியது போலப் பிரகாசமான முகத்துடன் குழந்தையைப் புது மனைவி கையில் கொடுக்கிறார்.
சற்று நேரம் தயங்கி நின்ற பெண் தயக்கத்துடன் வாங்கிப் பெண்களுக்குரிய பழக்கப்படி இடுப்பில் உட்கார வைக்கிறாள். பக்கத்தில் நிற்கும் பெண்கள் சிரித்து ரகளை செய்கின்றனர்.
இடுப்பிலிருந்த குழந்தை இறங்கி, “சித்தி! வா நான் கூட்டிக் கொண்டு போகிறேன்” என அவள் நடு விரலைப் பிடித்துக்கொண்டு முன் நடக்கிறது.
“ஒனக்கென்னம்மா கவலெ! மகளே உன்னைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டாள்” என்கிறாள் பெண் தோழி.
மறுபடியும் சிரிப்பும் அட்டகாசமும்.
பெண்கள் கூட்டம் மணப் பெண்ணுடன் வீட்டுக்குள் செல்லுகிறது.
மாப்பிள்ளையும் முதல் மாமனாரும் தனித்து நின்றனர்.
மாப்பிள்ளை “என்ன மாமா, நீங்க மட்டுந்தான் வந்தீர்களா? மதினியைக் காணலியே”
மாமனார்: “அவள் குளத்தூர் கலியாணத்திற்குப் போயிருக்கிறாள்..நான் உங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு போகலாம் என்றுதான் வந்தேன். நாளை சாயங்காலம் வந்திடுவாள்”.
மாப்பிள்ளை சிரித்துகொண்டு, “இரண்டு நாள்தான் லீவு எடுத்து வந்தேன்! நாளைச் சாயங்காலம் ரயில்லே இருப்போம்…”
4. ரயிலில்
நல்ல இருட்டு.ஓடுகிற ரயில் வண்டியில் இரண்டாவது வகுப்பு. நீட்டு போக்கில் சீட்டுகள் அமைந்த விசாலமான வண்டி. முழுதும் ரிஸர்வ் செய்யப்படடிருப்பதால் வண்டி யில் சுந்தரவடிவேலு, அவரது புது மனைவி மரகதம், குழந்தைகள் உட்கார்ந்திருக்கின்றனர்.
சுந்தரவடிவேலு வெறும் ஷர்ட்டும் பைஜாமா கால்ச் சட்டையும் அணிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார் மரகதம் ஜன்னலடியில் உட்கார்ந்து வெளியே பார்ப்பதும் உள்ளே குழந்தைகள் விளையாடுவதைக் கவனிப்பதுமாக இருக்கிறாள்.
குழந்தை குஞ்சு ரயில் வண்டி மாதிரி புஸ்-புஸ்-புஸ் என்ற வண்ணம் கைகளை பிஸ்டனைப்போல் ஆட்டிக் கொண்டு,ரயில் ஊதுகுழலைப்போல் வாயால் ஊதுகிறதும் மறுபடியும் வண்டி பெட்டிக்குள் சுற்றிச் சுற்றி ஒடிவரு கிறதுமாக இருக்கிறாள். வண்டி ஒடுவதனால் சில சமயம் தள்ளாடி விழுவாள். மறுபடியும் எழுந்து நின்றுகொண்டு எஞ்சின் புறப்படும்.
அவளுடைய அண்ணன் ராஜா பத்திரிகையின் சிவப்பு அட்டை ஒன்றையும் சித்தியின் பச்சைக் கைக்குட்டை யையும் வைத்துக்கொண்டு ‘ஸ்டேஷன் மாஸ்டர்’ உத்தி யோகம் பார்க்கிறான். எதிர்ப்புறத்து சீட்டு, (seat) ராஜா வேலை பார்க்கும் ரயில்வே ஸ்டேஷன் பதவி வகிக்கிறது.
“என்ன? சின்ன எஞ்சினுக்கும் பசிக்கலியா?’ என்கிறார் சுந்தரவடிவேலு.
“இஞ்சின் தண்ணி குடிக்கிற டேஷன் வரலியே அப்பா” என்று குழலூதிக்கொண்டு புறப்படுகிறது குஞ்சு.
“மணி எட்டாச்சு, நீங்கள்ளாம் தூங்க வாண்டாம்? டே ராஜா, கையைக் கழுவிக்கடா;-மரகதம் குஞ்சுவுக்கு பாட்டில்லெ பாலை ஊத்திக் குடு’ என்கிறார் சுந்தர வடிவேலு.
மரகதம் கீழே குனிந்து டிபன் பெட்டியை வெளியே இழுத்துக்கொண்டு அதன்எதிரே உட்கார்ந்து பெட்டிையத் திறந்து துணியில் சுற்றி வைத்திருந்த பாட்டில் ரப்பர் இரண்டையும் எடுத்துக் கழுவிக்கொண்டே, “இன்னும் புட்டியிலா பாலைக் குடுப்பா? ரப்பர் வச்சு உறிஞ்சினா உதடுல்லே பெருத்துப் போகும்…” என்று அவரைப் பார்த்துக் கேட்கிறாள்.
“பாட்டில்லெ குடுத்தாத்தான் சிந்தாது; அவ உதட் டுக்கென்ன, அழகாகத்தான் இருக்கிறது” எனக் குஞ்சுவை எடுத்து உதட்டில் முத்தமிடுகிறார்.
‘குத்துது அப்பா’ என்று முகத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே இறங்க முயல்கிறது, குழந்தை.
“இதோ பாரு குஞ்சு, இந்தப் பாலைக் குடிச்சிட்டுப் படுத்துக்கணும். நீ குடிக்கிறத்துக்குள்ளே, மெத்தையைப் போட்டு வைப்பனாம்…”
“ஆகட்டும் அப்பா” என அவர் உட்கார்ந்திருந்த இடத் தில் தலையணை மீது சாய்ந்தபடி பால் பாட்டிலை வாங் கிக் குடித்துக் கொண்டிருக்கிறது.
”டே ராஜா,நீ என்ன சாப்பிடப்போரே? இட்லியா, தயிர்ச்சாதமா…? உனக்கென்ன வேணும்?” என்கிறார் சுந்தரவடிவேலு.
“அப்பா, நான் அந்தப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு விட்டுப் படுத்துக்கறேனே…’
“சீ இதென்ன வழக்கம். தயிர்ச்சாதமா பலகாரமா— எது வேணும்? மரகதம் நமக்கும் எடுத்து வையேன்… “
“பின்ன இட்லியைத்தான் சாப்பிடுகிறேன்” என வந்து உடகாருகிறான்.
மூவரும் சாப்பிட உட்காருகிறார்கள். “நீ என்ன சும்மா இருக்கே,-நீயும் இப்பவே உக்காந்திடேன்…” என்கிறார் சுந்தரவடிவேலு.
“நீங்கள்ளாம் சாப்பிட்டு முடியுங்க…”
“இதுதானே…சாப்பாட்டுக் கடையே ஒண்ணா முடிச் சுப்புட்டா எல்லாத்தையும் உதறிக்கட்டி வச்சுப்பிடலாமே, நீயும் உட்காரு – அந்தக் கூஜாத் தண்ணியை எடு…”
”அதுக்காகத்தான்-அப்புறம் என்றேன்.” குஞ்சு சாப்பிட்டுவிட்டு, “அப்பா இந்தா பாட்டில்…” என்கிறாள்.
“மரகதம் அதை வாங்கி வை.”
எல்லோரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள்.
சுந்தரவடிவேலு குழந்தைகளைப் படுக்கவைத்து விட்டு விளக்கின் மீது கருப்புத் திரையை இழுத்துவிட்டு விட்டு, சீட்டில் வந்து உட்காருகிறார்.
மரகதம் உடைகளை மாற்றிக்கொண்டு மெல்லிய உடையுடன் வந்து உட்காருகிறாள்.
இருவரும் மௌனமாக இருக்கிறார்கள். “என்ன யோசிக்கிறே…?”
“நீங்கதான் சொல்லுங்களே…”
“எனக்கு ஆயிரம் யோசனைகள் இருக்கும்; அதெல்லாம் உனக்குப் புரியாது…நீ என்ன யோசிக்கிறே…”
“குஞ்சுவெப் பார்க்கப்போ இவ்வளவு துடியாக இருக் கிறாளே என்று பயமாக இருக்கு! அக்கா எப்படிப்பட்ட வர்களோ? என்று நினைச்சுக்கொண்டு இருந்தேன். அக்கா ரொம்பப் படிச்சவுகளாமே…எனக்குக் கையெழுத்துக் கூடப் போடத் தெரியாது… எங்கம்மா போனப்புறம் என் னெப் பாத்துக்க யாரிருந்தா-?”
“குஞ்சுவெப் பாத்தா அவுக அம்மாளேப் பாக்க வாண்டாம். வயசுக்கு மிஞ்சின புத்தி…அவளிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவேண்டும், -பளிச் சென்று நம்மைத் தூக்கிவாரிப் போடும்படியாச் சொல்லுவா. செய்வா, – அவுகம்மா.. (கொஞ்சம் யோசனையி லாழ்கிறார்) அவுகம்மா போன அண்ணைக்கி கத்து கத்துன்னு கத்தினா…அவளை வளர்க்கிறதுதான் பெரும்பாடு …அவள் சில சமயம் என்னையே வளர்க்க ஆரம்பித்துவிடுவாள்…”
“நீதான் படிக்காதே போனா என்னா? குழந்தை களைப் பார்த்துக்கொள்ளப் படிப்பெதற்கு? ஆமாம் மாற் றாந்தாய்க் கஷ்டம் என்றால் உனக்கு நல்லாத் தெரியுமே …அதுகள் ரெண்டும் சொந்த அம்மா என்று உணரும்படி நடந்துகொள்ள வேண்டும்…
“என்ன ரொம்ப உபதேசம் பண்ரனேன்னு நினைக்காதே. நீ நல்லதுன்னு நினைச்சு எதையாவது செய்வே; அது தகராறில் கொண்டு வந்து விட்டுவிடும்.. எதற்கும் ஜாக்கிரதை…”
“நிலா வருது பாருங்க…எப்படி அளகா இருக்கு…”
கிருஷ்ணபக்ஷத்துச் சந்திரன். கிரணங்கள் மெதுவாகத் தூங்கும் குஞ்சுவின் முகத்தில் விழுகின்றன.
அவள் தூக்கத்திலேயே ரயில் எஞ்சின் மாதிரி குச்-குச் என்று கொண்டு முகத்தைப் புறங்கையால் தேய்க்கிறாள்.
சுந்தரவடிவேலு எழுந்து அருகில் சென்று குனிந்து பார்த்துவிட்டு மெதுவாகத் தட்டிக்கொடுக்கிறார். குழந்தை தூங்கிவிடுகிறது.
அவர் விளக்கை அணைக்கிறார்.
வண்டியில் சந்திரனொளியுடன் கூடிய அரைகுறை இருட்டு.
மெதுவாக வந்து மனைவியின் பக்கத்தில் உட்கார்ந்து வலது கையால் அவளை அணைக்கிறார். மரகதமும் அவர் மீது சாய அவளை முத்தமிடுகிறார்.
“குஞ்சுவுக்கு மட்டுமா குத்தும்…!” எனச் சிரித்துக் கொண்டு பதில் முத்தம் கொடுக்கிறாள்.
– தொடரும்…
– முதல் வெளியீடு: காதம்பரி, ஏப்ரல்-மே 1949.
– சிற்றன்னை (குறுநாவல்), புதுமைப்பித்தன் படைப்புகள் (2ஆம் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை.
![]() |
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க... |