கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2025
பார்வையிட்டோர்: 2,920 
 
 

(1949ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ கதையை மையமாகக் கொண்டது. புதுமைப்பித்தனின் எத்தனையோ புகழ்பெற்ற கதைகள் இருக்கையில் எப்படி ‘சிற்றன்னை’யைப் படமாக்க வேண்டும் என்று மகேந்திரன் தீர்மானித்தார் என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது. ஒருமுறை மகேந்திரனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இதைப் பற்றிக் கேட்டேன். “நான் தீவிர இலக்கிய வாசகன். புதுமைப்பித்தன் எழுதியது அத்தனையும் வாசித்திருக்கிறேன். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்” எனச் சிரித்தபடியே சொன்னார். ‘சிற்றன்னை’ கதையை வாசித்துப் பார்த்தால், அதிலிருந்து திரைப்படம் எவ்வளவு மாறுபட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். புதுமைப்பித்தனின் கதை மகேந்திரனுக்கு ஒரு விதைபோலவே பயன்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய கௌரவமாகவே இப்படத்தைக் கருகிறேன். – எஸ்.ராமகிருஷ்ணன்

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

1. ‘மார்க்’ பார்க்க வந்த மன்மதன்!

சுந்தரவடிவேலு சர்வகலாசாலை பி. ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பிரதம பரீட்சகர். அவருக்குக் கீழ் பல உதவிப் பரிசோதகர்கள் உண்டு. மாணவர்கள் எழுதிய பதில்களைத் திருத்தி மார்க்கிட்டுப் பட்டியல் அனுப்புவதை எல்லாம் சரிபார்த்துப் பரீட்சை போர்டுக் குச் சமர்ப்பிக்கும் பொறுப்புடன், சில பதில்களைத் தாமே திருத்தி நிர்ணயிக்கும் பொறுப்பையும் இழுத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார். 

தன் மகன் ராஜாவைப் பறிகொடுத்து உன்மத்தனாகி மனம் ஸ்தம்பித்துப் போய், சொல்ல முடியாத மன உளைச் சல் என்ற சிலுவையை ஏற்ற பிறகு, இந்த வருமான முள்ள வேலை வேப்பங்காயாகவே இருந்தது; என்றாலும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கடைசி நேரத்தில் உதறித் தள்ளுவதற்கு சர்வகலாசாலையில் மாற்றுக் கைகள் தயாராக வைத்துக் கொண்டிருக்கிறார்களா? 

அதனால் அசுரகதியில் வேலையில் ஈடுபடுகிறார். இந்த வேலை அவருடைய மனவேதனைக்கு ‘ஒத்தடம் கொடுத்தது. 

சுந்தரவடிவேலு குஞ்சுவையும் மறந்தார் என்று சொல்லும்படி தம்முடைய வாசிக்கும் அறையிலேயே அடைந்து கிடந்து வேலை பார்க்கிறார். என்ஜினுக்குத் தண்ணீர் ஊற்றுவதுபோல் குஞ்சுவோ மரகதமோ காப்பி கொண்டு போவார்கள். 

“அப்பா காப்பி!” என்ற குழந்தையின் மழலை மந்திரம் அவருடைய கைகளை நீட்டச் செய்யும். சமயா சமயங்களில் அவளை இழுத்து முத்தமிடச் சொல்லும். 

மரகதம் அவருடைய வேலைக்குக் குந்தகம் வராமலும் வேலையால் அவரது உடல் க்ஷணிக்காமலும் அவர் அறியா மலே அவரைப் போஷித்துப் பணிவிடை செய்தாள். பணி விடையில் மனம் சிறிது ஆறுதல் கொண்டது. பணிவிடை யில் குஞ்சுவும் மரகதமும் ஒன்றினர். 

மாணவர் – உலகத்தில் சர்வ விவேக அளவுகோல்- கடவுள் தமக்கு அந்தத் தன்மையைப் பெறுவதற்கு எத்தனை மார்க் வாங்கினார் என்றுகூடக் கேட்கும் சர்வ சூன்ய மனத்தெம்பு படைத்தவர்கள். மாணவர்களும் அவர்கள் புத்தியைப் ‘பாலிஷ்’ செய்து தயாரிக்கும் அவர் களுடைய ஆசிரியர்களும் சர்வகலாசாலைகள் வித்வத்தின் விசேஷத் தன்மைபூண்டு, தன் திறமையால் பூத்து மலராமல் சப் மாஜிஸ்திரேட் கோர்ட்டின் எட்டாங்கிளைத் தாயாதியாக சிவப்பு நாடா வித்தையைச் செய்து வருவதால், மார்க்கை நம்பாத ஆசிரியர், பூஜை செய்யும் விக்கிரகத்தின் தெய்வீகச் சக்தியை நம்பாத பூசாரி மாதிரி ஆகிவிடுகிறார். 

அப்படிப்பட்ட பூசாரி சுந்தரவடிவேலு. இந்த சர்வ கலாசாலைக்கு அவர் தகுதியற்றவர். நிர்வாணலோக உபமானம் மாதிரி. இருந்தாலும் செய்கிறதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் அபார ‘உரித்து’ உள்ளவர். 

சுந்தரவடிவேலு தம் வீட்டுக்குள் அடைபட்டுப் பையன்கள், “அதற்கென்ன சந்தேகம்” என்று பேத்தி அழைப்பதை யெல்லாம் சகித்து, அவர்கள் விதியை நிர்ண யிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கையில், தெருவில், அவர் வசம் தன் விதியைச் சிக்கவைத்துத் தவிக்கும் ஒரு மாணவன் நடைபோடுகிறான். மார்க்கை அறிந்து கொள்ளு வதிலும் சாத்தியமானால் அதைத் திருத்துவதிலும் மாணவர் காட்டும் பிரயாசை மஹிராவணன் உயிரைத் தேடிப் போன அநுமாருக்குக்கூட இருக்காது. பணத் தெம்பு சிறிது இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டிய தில்லை. குறிப்பிட்ட ஆசிரியர் இந்த விபசாரித்தனத்தில் ஈடுபடுகிறவராக இல்லாவிட்டால், அவர் வீட்டு வேலைக் காரனின் யோக்கியதாம்சம் அவர்கள் கவனத்திற்கு வரும். 

அப்படி வந்தவனுக்கு சுந்தரவடிவேலுவுடைய வேலைக்காரன் எஜமான் வெளியே போயிருக்கும் சமயத்தில் பையனை அனுமதிப்பதாக வாக்களித்து விட்டான். ஆனால் சுந்தரவடிவேலு வீட்டை விட்டு வெளியேறுகிறவராகத் தென்படவில்லை. 

இந்தப் பையன் தெருவில் நடைபோட்டுக் கொண்டு மார்க்கின்மேல் ஏகாக்கிர சிந்தையுடன் எவ்வளவு நாழி யோகம் செய்ய முடியும்? கண்களை நாலா திசையிலும் திருப்பி விட்டான். 

சுந்தரவடி வேலுவின் படுக்கையறை வீட்டின் மாடியில் இருந்தது. அதில்தான் மரகதம் தன் உடைகளை வைத்துக் கொண்டிருப்பது. அவள் உடை மாற்றுவது என்றாலும் தலை கோதிச் சீவிக் கொள்ளுவது என்றாலும் அங்கே தான். 

மாணவன், பலமுறை பரீட்சை மண்டபத்தில், புத்தி சாலித்தனத்தைச் சூது விளையாடிப் பார்த்தும் ‘சலியாத தனியாண்மைத் தருகண் வீரன்’. Moffussal Graduate மோஸ்தர். ஆயிரக்கால் மண்டபம் அமைக்க ஆரம்பித்து இரண்டு தூண்களை நிறுத்தியபின் காரியத்தையே மறந்து போனதுபோலக் கன்னத்திற்கு ஒரு தூண் கட்டிய கேரா. தண்ணீர் விட்டுத் தளதளப்பாக வளர்க்காதது போன்ற கனத்த மயிரை அரும்பு மீசையாக்கும் முயற்சி. வர்ணம் பூசிய வெள்ளைக்காரச்சி உதடுபோலச் சிவப்பேறிய உதடு. நீளக் கிராப்பு-சீவாமல் பேணாமல் இருந்தால் அகில இந்திய பேன் காங்கிரஸ் கூடுதற்கேற்ற இடவசதி. கழுத்திலே மனத்தின் பெட்டைத் தனத்தைக் காட்டும் மெல்லிய தங்கச் சங்கிலி. இங்கிலீஷ் ட்வில் ஷர்ட்; கழுதை பொதி சுமந்த மாதிரி பாத் டவல் அலங்காரம். இடையில் நிர்வாணமில்லை என்பதை உய்விக்க வேஷ்டி. காலில் பெட்டைமாறி சிலிப்பர். (Second Rate cinema actor cum saloon barber appearance) 

இப்படியான அலங்காராதிகளுடன் ‘ரோந்து வந்து கொண்டிருக்கும் வாலிபன் கண்கள் ; சட்டைக்காரச்சியைக் கணடால் பயத்தில் கண்களைத் திருப்பிக்கொள்வதும், தமிழச்சியைக் கண்டால் Field glass Lens மாதிரிக் கண் களைத் திறப்பதுமாகக் காலங் கழிக்கிறான். கிராமப்புறத் துப் பயம். இவன் கண்களுக்கு மரகதம் தென்பட்டாள். 

வகிடு எடுக்க ஜன்னல் பக்கம் வெளிச்சத்திற்காக நின் றால், தன் பிரத்தியேகக் கண்களுக்கு என்று நினைத்து விட்டான் இந்த மன்மதன். நிர்ப்பயமாக மச்சில் உடைமாற்றிக் கொள்ளுபவளுக்குக் கீழே ஒரு ஜோடிக் கண்கள் தெறிகெட்டு வெறித்துக் கொண்டு ஏறச் சொருகுகின்றன என்பது தெரியாது. இவன் தனக்காகவே இந்த பிரத்தியேகக் காட்சிகள் என்று முடிவு கட்டி ‘சந்தர்ப்பத்திற்காக’க் காத்திருக்கிறான். 

சந்தர்ப்பம் வந்து சேருகிறது. 

சுந்தரவடிவேலு வேலை முடிந்து விட்டதால் பட்டியல் களுடன் பரீட்சை போர்டுக்குப் புறப்படுகிறார். 

வேலைக்காரனுக்குத் தெரியுமா மார்க் பட்டியல் போய் விட்டது என்று ? எஜமானியம்மாள் வீட்டுக்குள்ளிருக்கும் சமயம் பார்த்து முன் வாசல் கதவைத் திறந்து வைத்து விடு வதாகவும் ஓசைப்படாமல் போய் ‘மார்க்’ பார்த்துக் கொண்டு திரும்பிவிடவேண்டும் என்றும் ஏற்பாடு செய்கிறான். 

வேலைக்காரன் மெதுவாகக் கதவைத் திறந்து வைத்து விட்டுப் போய்த் தெருக்கோடியில் நிற்கும் பையனிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். ‘சந்தர்ப்பம்’ வந்து விட்டது. எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளுவது என்ற பிரச்னையாகிவிட்டது. எப்படி இருந்தாலும் மோட்டாரும் கீட்டாரும் வைத்த புரொபஸர் அல்லவா? 

குஞ்சு தனியாகத் தானே விளையாட்டுக் காட்டிக் கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறது. சிறிது தூரத்தில் பால் நிறைந்த ஒரு பீடிங் பாட்டில்; அந்தக் கயிறு கட்டிய ரயில் என்ஜின் கேட் குத்துக்கல் போல் இருக்கிறது. 

குழந்தை, வட்டு விளையாடுகிறது. “நீ தான் தோத்தே!” என்று யாரையோ சொல்லிக்கொண்டு மறுபடி யும் தன் ஆட்டத்தை ஆடுகிறது. 

குழந்தைக்கு நொண்டியடிக்க வரவில்லை; நொண்டி யடிப்பது போலக் காலை உயர்த்திவிட்டுக் கடகடவென்று ஓடி நின்று காலைத் தூக்கிக் கொள்கிறது. 

இப்படியாகக் கிட்டு… சர சரவென்று வெளிக் கேட்டைத் தாண்டிக் கொண்டு உள்ளே பிரவேசிக்கிறான். மரகதம் வியவகார அறிவு ஜாஸ்தியாக இருந்தாலும் குழந்தைதான். படம் பார்ப்பதில் ரொம்பப் பிரியம். 

குஞ்சுவுக்கென்று சுந்தரவடிவேலு வாங்கிக் குவித்த படப் புத்தகங்களை எல்லாம், யாரும் இல்லாத சமயத்தில் தனியாக இருந்துகொண்டு ரசிப்பாள், 

குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறது. அவர்களோ வெளியே போயிருக்கிறார்கள் என்று நடு ஹாலில் நாற்காலியில் கூட உட்காராமல் தரையில் குப் புறப் படுத்த வண்ணம், மிருகங்கள், பட்சி ஜாதிகள் முதலி யவை உள்ள படப் புத்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டி ருக்கிறாள். உடை குலைந்து முன்தானை சற்று விலகிக் கிடக்கிறது. 

வேலைக்காரன் வந்து சொல்லிவிட்டுப் போகும்முன் வழியில் வந்து படுத்துக் கிடந்தால் நிச்சயம் ‘காதல்’ தான் என்று காகதாளி நியாயமாக நிச்சயப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீமான் மாணவர்! சிறிது நேரம் ஜன்னல் அருகிலேயே நின்று கொண்டிருக்கிறான் மாணவன்; அழைப்பு வரும் என்று. பாவம் அப்படி ஒன்றும் வரவில்லை. 

மரகதத்தைக் கவர்ச்சித்த படம் பஞ்சவர்ணக் கிளி. முட்டையுடன் கூடிய கூண்டு. பட்சி பறந்துவந்து கூண்டரு கில் உட்காரும் பாவனையில் இருக்கிறது. தாய் வீட்டில் இருக்கும்பொழுதே அவளுக்குக் கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பிறந்த வீட்டில் அதற்கு இருந்த நிரந்தரத் தடை புருஷனிடமும் அதைச் சொல்ல மனத் தெம்பு கொடுக்கவில்லை. 

அதற்கு அப்புறம் அடுத்த படத்தைத் திருப்புகிறாள்.

பையன் கதவைத் திறக்கிறான். 

அடுத்த படம் குரங்குப் படம், ஊராங்-ஊடாங் ஜாதி. பெரிசும் சிறிசுமாகக் கிளையில் உட்கார்ந்திருக்கின்றன. அதன் கிழடுதட்டிய முகத்தைக் கண்டால் அவளுக்கு எப் பொழுதும் சிரிப்பு வரும். ஆகையினால் ‘களுக்’ என்ற சிரிப்பு அத்துடன் நின்றது. 

பையனுக்கு ‘லவ்வே’ என்று ஊர்ஜிதமாகிவிட்டது. 

அவள் நிறுத்திய காரணம் சோக அலைகளே. 

ராஜா இருக்கும்போது, ராஜாவும் குஞ்சுவும் அதைப் பார்த்து ரசிப்பதும் சிரிப்பதும், “உன்னைப்போல் இருக் குடா” என்று குஞ்சு சொல்வதும், அவன் அதற்கப்புறம் அவளைப் போலத்தான் இருக்கு என அழுத்திக் கத்து வதும், அப்பாவின் தீர்ப்புக்குப் போவதும், அப்பா இரண்டு பேரையும் நையாண்டி செய்வதும் எல்லாம் நினைக்கிறாள்.

கண்களிலிருந்து நீர் சொட்டுகிறது;குரங்குப் படத்தை நனைக்கிறது. 

தவிக்கும் யுவதிகளை எல்லாம் ஆற்றவேண்டும் என்று காதல் துறைகள் பறைசாற்றுகின்றனவே. 

பயல் சுரணாவுகிற’ தொழிலில் ஆரம்பிக்கிறான். கண்கள் ஏற ஏறச் சொருகுகிறது. பல் தன்னையறியாமல் இளிக்கிறது. இந்த அலங்கோலக் காட்சியில், மனிதனுடைய அசம்பாவிதமான அசட்டுத்தன அலங்கோலத்தைப் பரிபூரணமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்த அவளுடைய தேங்கிய துக்கம், வந்த சிரிப்பையும் அடக்கிக் கோபாவேச மாக மாறுகிறது. தன் வீட்டுக்குள் தன் கௌரவத்தைக் கெடுக்க யாருக்குத் தைரியம் என்ற சீற்றம். 

“யாருடா நீ களவாணிப் பயலே? எங்கே வந்தே?  யாரைக் கேட்டுக்கிட்டு உள்ளே நொளஞ்சே? எடு செருப்பை!” என்று புத்தகத்தால் மண்டையில் போடுகிறாள். 

அவன் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு “மார்க்குப் பார்க்க வந்தேன்” என ஊளையிடுகிறான். எதிர்ப்பை எதிர்பாராததால் அவ்வளவு பீதி. 

“உன்னை லவ் பண்ணினேன்; தூரத்திலிருந்தே லவ் பண்ணினேன்” எனப் பேத்துகிறான். 

“போடா வெளியே! மொதல்லெ வெளியே போ!” என்று அதட்டிக் கைகளை ஓங்குகிறாள். 

அவன் அவசர அவசரமாக ஓடுகிறான். சுற்றும்முற்றும் பார்க்கிறாள். கைக்கு வசமாக ஒன்றும் அகப்படவில்லை. ஒரு ஜதை செருப்புத் தென்படுகிறது. இரண்டையும் விரல் களில் இறுக்கிக் கொண்டு, வராந்தாவிலிருந்து இறங்குகிற வன் மீது விட்டெறிந்து, “போடா கரப்பான் பூச்சி!” என்று கதவைப் படால் என்று சாத்தித் தாழிட்டு விடு கிறாள். அதற்குள் வசைமொழி அவ்வளவும் அவளுக்குக் காலியாகி விட்டது. 

ஆவேசம் ஒடுங்க, பயம் தலைவிரித்தாடுகிறது. தான் தப்பித்த ஆபத்தின் பூரணத் தன்மையைப் புரிந்துகொள்ள அவகாசம் ஏற்படுகிறது. 

நாற்காலியில் உட்காருகிறாள். மேல் மூச்சு வாங்க, உடல் நடுங்க, வியர்வை முகத்தில் அரும்புகிறது. அவன் போய் விட்டானா என்று பார்க்கவும் பயம். கூச்சலிடவும் வாய் எழவில்லை. 

சிறிது நேரத்தில் மனம் கொஞ்சம் நிலைகொள்ளுகிறது. 

வெளியில் போய் பூட்ஸை எடுக்கக் கூடப் பயம். 

ஜன்னல் பக்கத்தில் நின்றுகொண்டு, வெளியே விளை யாடும் குழந்தையை, “குஞ்சம்மா! குஞ்சம்மா!” என்று கூப்பிடுகிறாள். 

குழந்தை தன் பொக்கிஷங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, பயிற்சியற்ற குழந்தை ஓட்டத்துடன் “என்னாச் சித்தீ” என்று சொல்லிக்கொண்டு ஒடிவருகிறது. 

“அந்த பூடுசெ எடுத்துகிட்டு உள்ளே வாடி” என்று கதவைத் திறந்து குழந்தை உள்ளே வந்ததும் கதவைச் சாத்தித் தாழிட்டுக்கொள்ளுகிறாள். 

குழந்தையை அருகில் அணைத்து இறுகப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் உட்காருகிறாள். 

அவள் உடல் நடுங்குகிறது. 

”ஏஞ்சித்தி ஆடுறே!” என்று அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது குழந்தை. 

“இப்பக் கள்ளன் வத்தானே நீ பார்க்கலியா?” 

“கள்ளன்னா?” 

“திருடன்!” 

“அப்படின்னா?” 

“இப்பச் சட்டையுங்கிட்டையும் போட்டுக்கிட்டு ஒருத்தன் வரலே?…” 

“ஆமாம், இப்பிடி இப்பிடி நடந்து வந்தானே!” எனப் பையனுடைய அந்தஸ்து நடையைக் காப்பி அடித்துக் காண்பிக்கிறது. 

குழந்தையின் நடையைக் கண்டு சிரித்துக்கொண்டு, “ஆமாண்டி கண்ணு” என முத்தமிடுகிறாள். 

“படம் பார்க்கலாம் வாரியா?” என்கிறாள் மரகதம்.

“ஆகட்டும்…” என்கிறது குழந்தை. 

குரங்குப் படத்தைக் காட்டிக்கொண்டு “இது யாரு மாதிரி இருக்கு?” என்கிறாள். 

”ஒம்மாதிரித்தான் இருக்குது சித்தி—” எனத் தீர்ப்புக் கூறுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு சிரிக்கிறது குழந்தை. 

“உன்னைப்போலதான்” என்று முகத்தில் செல்லமாக இடிக்கிறாள் மரகதம். 

குழந்தை “வவ்-வவ்” என வலித்துக் காட்டுகிறது. ”வவ்- வவ்” எனப் பதிலுக்கு வலித்துக் காட்டுகிறாள் மரகதம். 

”வவ் – வவ்” என்கிறது மற்றொரு குரல். திரும்பிப் பார்க்கிறார்கள். 

ஜன்னலருகில் சுந்தரவடிவேலு. 

கதவைத் திறந்தார். “ரிப்பேராப் போச்சு!” என்றபடி உள்ளே நுழைந்து, “ஏதேது அம்மையும் மகளும் ரொம்பக் குழையிறீகளே” எனக் குழந்தையைத் தோளில் நிறுத்தி மரகதத்தையும் இழுத்துக்கொண்டு தான் வாசிக்கும் அறைக் குப் போகிறார். 

2. பூனை வாண்டாம், அப்பா! 

இப்படியாக ரஜாக் காலமும் ஏறக்குறைய முடிந்து விட்டது. 

அறுவடையாகி விட்டதால் மறு சாகுபடிக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் ‘குழந்தைகளை’ என ஆரம்பித்து அடித்து, ‘குழந்தையை எனத்திருத்தி – பார்த்துவிட்டுப் போக வருவதாகத் தாத்தா விடமிருந்து கடிதம் வந்தது. 

“குஞ்சு, ஒன்னைப் பார்க்கத் தாத்தா வரப் போறாங்க” குழந்தையின் குதூகலத்தில் பங்கு போட்டுக் கொள்ளுகிறவர் பொலக் கூறுகிறார். சாப்பிட்டுவிட்டுப் புறப்படும்போது, ”சாயங்காலம் காப்பிக்குத்தான் வருவேன்” என அறிவித்த சுந்தரவடிவேலு காரில் ஏ றிக் கொண்டு நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்று விடுகிறார். 

மரகதமும் குஞ்சுவும் கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே வருகிறார்கள். 

“ஏட்டி வெய்யிலா இருக்கு, இப்படி எங்கூடப் படுத்துத் தூங்கிறியா?” என்கிறாள் மரகதம். 

“ஆகட்டும் அம்மா!” என்று மச்சிலுக்கு ஏறுகிறது. 

“அங்கெ வாண்டாம். இந்த நடேலெ தலையெச் சாய்ப் போம்’ என்று வெற்றிலைச் செல்லத்தைத் தலைக்கு வைத்துக் கொண்டு முந்தானையை விரித்துப் படுக்கிறாள் மரகதம். குழந்தையும் முந்தானை விளிம்பில் மல்லாக்காகப் படுத்துக் கொண்டு கண்ணை ஒரு கையால் மூடிக் கொள்ளுகிறது. 

வேலைக்காரர்களை, அடுக்களையில் ஏற்றும் சாதி கெட்ட வழக்கத்திற்கு இணங்காமல் உழைத்ததின் பயனோ என்னவோ அயர்ந்து விடுகிறாள். 

குழந்தைக்குத் தூக்கம் வரவில்லை. 

எழுந்து உட்காருகிறது. 

‘தாத்தா வருவாங்களே’ எனத் தனக்குத்தானே அறிவித்துக் கொள்ளுகிறது. 

தூரத்தில் கிடந்த என்ஜின் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து புரட்டுகிறது. என்ஜின்களின் ஓட்டம் கூட ரசிக்கவில்லை. இப்படியும் அப்படியுமாக விருவிரு என்று புரட்டிவிட்டு, ‘டபார்’ என்ற சத்தத்துடன் மூடுகிறது. 

மரகதம் சிறிது விழிக்கிறாள். 

“என்ன, தூங்கு” என இழுத்துப் படுக்க வைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்த வண்ணம் தூங்கிப் போகிறாள். 

குழந்தை மறுபடியும் எழுந்து உட்கார்ந்து கொள்ளுகிறது. 

ஹாலில் உள்ள பெரிய கடிகாரம் அரை மணியைக் குறிக்க டணார் என்று ஒரு அடி அடிக்கிறது. 

குழந்தை ஓடிப்போய்க் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வந்து நேரம் தெரிந்ததுபோல “மணியடிச்சாச்சு அம்மா?” என எழுப்புகிறது. 

“நீ தூங்குடி. நேரமாகலே?” என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்கிறாள் மரகதம். 

குழந்தை ஓசைப்படாமல் புழக்கடைப் பக்கம் போகிறது. 

ஒரு டம்ளரை எடுத்து அண்டாவில் இருக்கும் தண்ணீரை மொண்டுவந்து புழக்கடை வெராண்டா ஓரத்தில் நின்று கொண்டு ஊற்றி, தாரையாகத் தரையில் சுர் என்ற சப்தத்துடன் விழுவதை ரசித்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு டம்ளர் ஆனதும் மறு டம்ளர், மறு டம்ளர், மறு டம்ளர்… 

இந்த விவகாரத்தில் குழந்தையின் உடம்பும் பாவாடை யும் நனைந்து விடுகிறது. 

பால்காரன் அந்தச் சமயம் பார்த்துப் புழக்கடை வெராண்டாவில் ‘அம்மா’ என்று பால் கொண்டு வந்து நிற்கிறான். 

“அம்மா தூங்கறாங்க” என்று தண்ணீர் விடுவதை ரசித்துக் கொண்டே பதிலளிக்கிறது குழந்தை. 

“ஏம்மா இப்படித் தண்ணியைக் கொட்றெ?” என்கிறான் பால்காரன். 

“இங்கே வந்து பாரு, சுர்ர் என்னுகிட்டு விழுது” என்று அவனையும் ரசிக்கும்படி அழைக்கிறது குழந்தை. 

”ஊத்தாதே அம்மா, ராஜால்லெ” என்கிறான் பால்காரன். 

“அப்படித்தான் ஊத்துவேன்’ என்று மறுபடியும் டம்ளரை அண்டாவில் முக்குகிறது. 

“நான் பால் குடுக்கணுமே, முருவன் எங்கெம்மா?” என்கிறான் பால்காரன். 

குழந்தை டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி விரித்துக்கொண்டு ‘”அவன் போக்களிஞ்சே போனானே!” என மரகதத்தைக் காப்பியடித்துக் காண்பிக்கிறது. 

இந்த நடிப்பைக் கண்டு ரசித்து ஒரு “பாட்டம்” சிரித்து ஓய்ந்த பால்காரன், “நீ அந்தச் சொம்பை எடுத்தாம்மா, நான் பாலை ஊத்தித்தாரேன், ஊட்லே கொண்டி வச்சி, அந்த ஜோடுதாலையைப் போட்டு மூடிப்போடு” என்கிறான். 

குழந்தை பாலை வாங்கிக்கொண்டு உள்ளே வைத்து மூடி விட்டுத் தாயாரை எழுப்ப ஓடுகிறது. 

அது தாயாரை அணுகும் சமயம்,ஹால் கெடிகாரம் மணி மூன்று அடிக்கிறது, 

“அம்மா அம்மா” என்று தோளைப் பிடித்து உலுப்புகிறது. 

“இன்னும் என்னடி?” என்கிறாள் மரகதம். “அம்புட்டு மணியும் அடிச்சாச்சு” என்கிறது. “போடி போ” என்கிறாள் மரகதம். 

“இல்லெம்மா நெசமா அம்புட்டு மணியும் இப்பத் தாம்மா அடிச்சிது; நான் கேட்டேனே” என்று துடிக்கிறது குழந்தை. 

”அப்பா வர்ரத்துக்கு நேரமாகும், நீ போ” என்று சொல்லிவிட்டு மறுபுறம் புரண்டுகொள்ளுகிறாள். 

”நேரமாகும்” என வாயைக் குவிய வைத்துக்கொண்டு வலிப்புக் காட்டிவிட்டு, கடிகாரத்தைப் போய்ப் பார்க்கிறது. 

மெதுவாக அடுக்களைக்குப் போகிறது. 

பாலை எடுத்துக் கொண்டு வந்து அடுப்பு முன் வைக் கிறது. அலமாரி எட்டவில்லை. ஒரு முக்காலியை எடுத்துப் போட்டு அதன் மேல் ஏறி நின்றுகொண்டு, காப்பிப்பொடி டப்பியை எடுக்கிறது. கஷ்டப்பட்டுத் திறந்து காப்பிப் பொடி உடம்பில் சிதறியதைக் கூடச் சட்டை பண்ணாமல் கைகொண்ட மட்டும் குத்துக் குத்தாக மூன்றுபிடி அள்ளிப் பாலுக்குள் போட்டுக் கையைவிட்டுக் கலக்குகிறது. பிறகு ருசி பார்க்கிறது. கசப்பு வாயைப் பிடுங்க, ‘தூ தூ ‘ எனத் துப்பி விட்டு, சர்க்கரை டின்னை எடுக்க ஏறுகிறது. நல்ல காலமாக அது திறக்க அவ்வளவு கஷ்டமில்லை. ஏனென் றால் அதை முன்பே யாரோ திறந்து வைத்து மூட மறந்து விட்டிருந்தார்கள். முக்காலியில் நின்றபடியே ஒரு குத்துச் சர்க்கரையை எடுத்துக் கொண்டு ஒரு கையில் டின்னும் மறு கையில் சர்க்கரையும் வைத்துக் கொண்டு இறங்கியதின் விளைவாக, அலமாரியின் கீழ்த்தட்டில் உள்ள டின்கள் கடபடா சத்தத்துடன் கீழே சரிந்து சிதறுகின்றன. ஆனால் குழந்தை சர்க்கரையை அள்ளி அள்ளிப் போட்டுக் கலக்கி ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது. கசப்பைப் போக்குவதற்காக மனம் கொண்ட மட்டும் சர்க்கரையை அள்ளி அள்ளிப் போடுகிறது. 

இந்த டின்கள் விழுந்த சப்தத்தைக் கேட்டு என்னவோ ஏதோ என்று எழுந்து ஓடிவந்த மரகதம், இவள் வேலையைப் பார்த்துப் பிரமித்து வாசற்படியில் நிற்கிறாள். 

அதே சமயத்தில் புழக்கடை வாசற்படியாக ஒரு கருப்புப் பூனை “மியாவ்” என்ற சப்தத்துடன் வாலைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைகிறது. 

குழந்தை அவள் வந்ததைக் கண்டு கொண்டு, “அம்மா காப்பி போட்டாச்சு, வென்னி இல்லே, பாலுலியே காப்பிப் பொடியெ போட்டு காப்பி போட்டாச்சு” என்று தன் வேலையை விவரிக்கிறது. 

“தேடீதேடீ பார்த்தேம்மா, வென்னியே இல்லியே” என மீண்டும் விவரிக்கிறது. 

“பாலெத் தொலச்சு குட்டிச் செவராக்கி யாச்சில்லே ஏண்டி இண்ணைக்கிப் பூரா இப்பிடி படுத்திக்கிட்டிருக்கே? பொண்ணாப் பொறந்தவளுக்கு இது ஆகாது! பாரு ஒன்னே, ஒன்னே என்ன செய்யுறேன்னு பாரு, பாரு, அப்பா வரட்டும்!” எனக் கடுகடுக்கிறாள் மரகதம். 

குழந்தை சீற்றத்தை எதிர்பார்க்கவில்லை. முகம் ‘புஸ்’ என்று மாறுகிறது. 

“அக்கா!” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லுகிறது.  

“நீ தான் அக்கா! யாரெப் பார்த்து அக்காங்கறே!’

“அக்கா!” என்கிறது மறுபடியும். 

”சொல்லாதே! சொல்லமாட்டேன்னுசொல்லு! இல் லாட்டா அந்தப் பூனையைப் புடிச்சு மேலே போடுவேன்.” 

பூனை என்றதும் வெருவி விடுகிறது குழந்தை. கண்கள் பயத்தைக் கக்க, “எங்கம்மாகிட்ட சொல்றேன் பாரு” என அவள் காலுக்கிடை வழியாக மச்சு நோக்கி ஓடுகிறது. 

“என்ன அடம்!” என கோபாவேசம் கொண்டவ ளாகப் பூனையை மறித்துப் பிடிக்கிறாள், குழந்தைக்குப் புத்தி கற்பிக்க. 

அவள் அதை மறித்துப் பிடித்துத் தொடர்வதற்குள் குழந்தை பறந்து பறந்து மச்சுக்கு ஓடுகிறது. 

தன் ரூமுக்குள் நுழைகிறது. தாயின் படத்தைப் பார்த்துப் புகார் செய்ய ஆரம்பித்து விடுகிறாள். 

“அம்மா அம்மா! இந்த அக்காவெப்பாரு, பூனெயெ மேலே போடவர்றா அம்மா” என்று சொல்லிக் கொண் டிருக்கையில் மரகதமும் கறுப்புப் பூனை சகிதம் உள்ளே நுழைந்து விடுகிறாள். 

குழந்தை பயந்து போய் சுற்று முற்றும் ஓடி, பிறகு படத்தின் அடியில் வந்து நின்று கொள்ளுகிறது. 

“சொல்ல மாட்டேன்னு சொல்லு” எனப் பூனையை நீட்டுகிறாள் மரகதம். 

“அக்கா” என்கிறது குழந்தை. 

பூனையை வீசப் போவது போல் பாவனை செய்கிறாள் மரகதம். 

“அம்மா! பாரேம்மா! பூனையைப் போடறாளே!- ஐயோடி பூனெயெப் போடறாளே!” எனக் கத்திக் கீச்சிடுகிறது குழந்தை. 

மரகதம் பூனையைக் குழந்தையின் முகத்தினிடம் கொண்டு வருகிறாள். 

குழந்தை சுவருடன் அமுங்க முயற்சிப்பது போல் தன் னைப் பதிய வைத்துக்கொண்டு, ‘ஐயோ பூனே! பூனை வருதே! பூனை வேண்டாம்மா! அம்மா பூனை வேண்டாம்” எனக் கிரீச்சிடுகிறது. 

மாடிப் படியில் தடதடவென்று ஏறிவரும் சப்தம். மரகதம் மறுபடியும் முகத்தருகில் கொண்டு போகிறாள். 

“பூனை வேண்டாம்மா!…” எனப் பயத்தில் கிரீச்சிடுகிறது குழந்தை. 

சுந்தரவடிவேலு பரக்கப் பரக்க உள்ளே நுழைந்து மரகதத்தைத் தள்ளிவிட்டுக் குழந்தையை எடுத்து அணைத் துக்கொள்கிறார். 

குழந்தை ஒரே கத்தாகக் கத்துகிறது; அழ முடியாமல் விக்குகிறது; அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுகிறது… 

ஜன்னி கண்டமாதிரி கிரீச்சிடுகிறது. 

நெஞ்சைத் தடவுகிறார்…… என்னென்னமோ செய் கிறார்… சிறிது மயங்குகிறது. 

படுக்க வைத்து நெற்றியில் கைக்குட்டையை எடுத்துப் போடுகிறார். விக்கிக்கொண்டே கிடந்த குழந்தை, ‘பூனை வேண்டாம்மா!’ எனக் கத்துகிறது. 

“குஞ்சம்மா பூனெ ஓடியே போச்சே, அதெ அடி அடின்னு அடிச்சுப்போட்டென். வரவே வராது” என்கிறார். 

குழந்தை மனத்தில் அவர் வார்த்தை பதியவில்லை.

படுக்க வைத்துக்கொண்டு நெற்றியில் ஜலத்தை நனைத்துப் போடுகிறார்; நெஞ்சைத் தடவுகிறார்—பயம் ஓயவில்லை. 

“பூனெ வேண்டாம்மா!” என்ற ஒரே வார்த்தையைக் கத்துகிறது. 

மரகதம் கையைப் பிசைந்துகொண்டு கண்கலங்க வாசலடியில் நிற்கிறாள். அவளை அவர் ஏறிட்டுக்கூடப் பார்க்க வில்லை. 

குழந்தையைக் கொஞ்சம் அமர வைத்துவிட்டு டெலி போனுக்குச் செல்லுகிறார். 

எண்களைத் திருப்புகிறார். “ஹல்லோ-கிருஷ்ணசாமி தானேபேசறது? நான்தான் சுந்தரம்.. குஞ்சத்துக்கு…ஹிஸ் டீரியா மாதிரி கத்துறா; பயந்திருக்கா, Intense terror…… ஏதும் Sleeping dose கொண்டாந்தாத் தேவலே – இப் பொவெ வா – ‘சில்றனெப்’ பாத்துக் கொள்ள ஆள் வேணும்னு கலியாணம் பண்ணிக்கப் போய் மூணு கொழந்தைகளாச்சு, அப்றம் ரெண்டாச்சு…” என்று கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைக்கிறார்……. 

…. இப்படியாகக் குழந்தை குஞ்சுவுக்கு அதிர்ச்சியால் ஏற்பட்ட ஜுரம் தெளிய மூன்று நாட்களாகின்றன. 

மூன்று நாட்களும் குழந்தையின் பணிவிடையிலேயே செலவிடுகிறார் சுந்தரவடிவேலு. 

மூன்று நாட்களும் மரகதத்துடன் சிரித்துப் பேசுவது, ஏன் சாதாரணமாகப் பேசுவதே நின்று விட்டது. அவள் இல்லாதது போலவே நடக்க ஆரம்பித்துவிட்டார். 

கண்ணீருடன் கைகளைப் பிசைந்து கொண்டு தலைவிரி கோலமாய் நின்றது தான் மரகதத்திற்கு மிச்சம். காப்பிகொண்டுவந்தால் வாங்குவார்; சாப்பிடுவார். உணவு கொண்டு வந்தால் உண்பார். ‘போதும்,’ ‘வேண்டாம்’ என் பதுடன் அச்சமயங்களில் பேச்சு நின்று விடும். அவரது இந்த நிலையையும் உறுதியையும் கண்டு பயந்துவிட்டாள் மரகதம். மன்னிப்புக் கேட்டுக் காலில் விழுவதற்குக் கூட அஞ்சினாள். 

அச்சம் சீற்றமாக மாறியது. சமரச முயற்சி நின்றது. வருவதும் பணிவிடை செய்வதும் நின்றது. 

வீட்டில் மறுபடியும் சமையல்காரன் சமையல் செய்யத் தொடங்கினான். அவன் காப்பி கொண்டு வருவான், குழந் தைக்குப் பால்கொண்டு வருவான். வேலைக்காரனும் இருந்தான். 

மரகதம் தனக்கு மட்டும் தன் கையால் சமைப்பது சாப்பிடுவது, உக்கிராணப் பிறையில் தலைவிரி கோலமாக மன நிம்மதி இல்லாமல் படுத்துக்கிடப்பது…மனத்துடன் போராடுவது. 

யார் குற்றம்? குழந்தையின் பிடிவாதத்தைத் தீர்க்க வேண்டாமா,நான் என்ன அடித்தேனா, வைதேனா?…… லேசாய் பயங்காட்டினால் என்ன பிரமாதம்!…… 

இவ்வாறாக மனம் சித்தாந்தம் செய்ய ஆரம்பித்து விட்டது. 

இருவரும் பேசவில்லை. 

இந்தப் புதிருக்கு-இரு- ‘குழந்தைகளை’யும் இவ்வாறு பிரிந்து விலகும்படி செய்யாதிருக்க என்ன வழி என்பது அவருக்குப் புரியவில்லை. 

குழந்தைக்கு ‘நர்ஸ்’ அமர்த்தி விடுவோமா…அல்லது Orphanage-இல் சேர்த்து விடுவோமா என்றெல்லாம் மனம் ஓடியது…புதிருக்கு விடைஇல்லை. 

குழந்தை எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டது, முன் போல ஓடி ஆட ஆரம்பித்து விட்டது. ஆனால் ‘மியாவ்’ என்ற சப்தம் கேட்டால் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். குழந்தை உறுதிகொண்ட குழந்தை. பயத்தை வெளியில் காட்டுவதில்லை. 

இப்பொழுது முன்போல, ‘அம்மாகிட்ட சொல்லு வேன்’ என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வருவதில்லை. 

சுந்தரவடிவேலுக்குக் கலாசாலையும் திறந்துவிட்டது. 

அன்று விடியற்காலம். குழந்தை தன் சின்னக் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறது. குலைந்து கிடந்த சிறுபாவாடையை நன்றாகக் கட்டிக் கொள்ளுகிறது. 

ஜன்னல் விளிம்பில் உள்ள கடுதாசிப் பொட்டலத்தி லிருந்து இரண்டு திராட்சைப் பழங்களை எடுத்துக் கொண்டு வருகிறது. 

தாயார் படத்தின்முன் நின்று சிறிது நேரம் அதையே கவனிக்கிறது. 

அப்புறம் இரண்டு பழங்களையும் படத்திற்கு நேராகத் தரையில் வைக்கிறது. தன் சித்தி குத்துவிளக்கின் முன்பு மண்டியிட்டு, தலை தரையில் படும்படி கும்பிடுவது போலப் படுத்து வணங்குகிறது. யாரையும் காப்டாற்றும் படி கேட்டுக் கொள்ளவில்லை. 

பிறகு திராட்சைப் பழங்கள் இரண்டையும் எடுத்து வாயில் போட்டுத் தின்று கொண்டு, தன்னுடைய ஓட்டை எஞ்சின் சகிதம் புழக்கடைப் பக்கம் சென்று பல்விளக்குகிறது. நேராகத் திரும்பி வந்து தெரு வாசல்படியில் உட்கார்ந்து குனிந்து கொண்டு எஞ்சினைக் கைகளால் உருட்டி உருட்டி விளையாடுகிறது. 

சில சமயம் ‘குச்குச்’ என்ற சப்தம் அதன் வாயிலிருந்து வரும். 

இந்த நிலையில், ‘குஞ்சு! குஞ்சு! குஞ்சம்மா!’ என்று தகப்பனாரின் குரல். 

“என்னாப்பா!” என்று நிமிராமலே சத்தம் கொடுக்கிறது குழந்தை. 

“உன்னை எங்கெல்லாமடி தேட, என் கண்ணு! என்ன செய்யறே?” என்று கூறிக்கொண்டு வெளியில் வந்து குழந்தையை வாரி அணைத்துக் கொள்ளுகிறார். 

“காப்பி சாப்பிட வேண்டாமா?” 

”ஊம்” என நீட்டுகிறது குழந்தை. 

மணி பத்து. 

கார் வாசலில் நிற்கிறது…

குழந்தை சட்டை போட்டுக்கொண்டு கையில் ரயில் – படப் புத்தகமும் எஞ்சினுமாக வாசல் படியில் வந்து நிற்கிறது. 

தகப்பனார் வெள்ளைக்கார மோஸ்தரில் உடையணிந்து கொண்டு, கையில் ஐந்தாறு கனமான புஸ்தகங்களுடன் வெளியே வருகிறார். 

அப்பாவைக் கண்டதும் குழந்தை தன்கையில் உள்ள ரயில் பட புஸ்தகத்தையும் எஞ்சினையும் காருக்குள் வைக்க முயலுகிறது. 

“எங்கடியம்மா குஞ்சு இந்த அவசரம்?” என்கிறார் சுந்தரவடிவேலு. 

“அப்பா! அப்பா,நானும் ஒங்கூடவாறேன் அப்பா” எனக் கெஞ்சுகிறது குழந்தை. 

இதுவரை குழந்தையிடம் இந்தக் கெஞ்சல் வியாபாரமே கிடையாது; எல்லாம் அதிகார மயம்தான். அதிசயித்துச் சிரித்துக்கொண்டு, ”நான் இன்னக்கிப் பள்ளிக் கூடமில்லர் போகிறேன். நீ வரலாமா, போய் விளையாடிக் கொண்டிரு, சாயங்காலம் வந்து ஒன்னைப் பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்” என்கிறார். 

“பீச்சுக்கில்லே அப்பா, நான் ஒண்ணுமே செய்ய மாட்டேன்; கார்லியே உட்கார்ந்திருக்கேன். ஒண்ணுமே செய்ய மாட்டேன்… நானும் வரேன் அப்பா” என்று மறுபடியும் கெஞ்சுகிறது. 

குழந்தையின் பிடிவாதத்தையும் கெஞ்சலையும் கண்டு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என ஊகித்து, அவளை வாரி எடுத்து முகத்தைத் தடவிக் கொடுத்து “ஏண்டி யம்மா நீ கெட்டிக்காரியில்லியா…” என ஆரம்பிக்கிறார். 

குழந்தை ரகசியமாகக் காதோடு காதாக, “சித்தி – பூனே” என்று சொல்லுகிறது. 

 பிள்ளையின் முகம் மாறுகிறது. சொல்ல முடியாத மன வேதனை, புத்தியில்லாமல் குழந்தையை எப்படிப் பயமூட்டி விட்டாள்…பயம் எப்படி வேரூன்றி விட்டது… இதை எப்படிப் போக்குவது… என மனசு நிலை கொள்ளாது தத்தளித்தது. 

என்ன செய்யலாம்? குழந்தையை எப்படிப் பள்ளிக் கூடத்திற்கு எடுத்துக்கொண்டு போவது? வேலைக்காரர்களிடம் நிற்காதே! தானே ஓடியாடித் திரிகிற குழந்தைக்கு பயம் பிறந்து விட்டதே என நினைக்கிறார். 

”கண்ணு நீ சும்மா வெளையாடிக்கிட்டிரு….. சித்தி ஒண்ணுமே செய்யமாட்டா…பூனெ வரவே வராது.. அண்ணெக்கே அடிச்சு வெரட்டியாச்சே… நான் சீக்கிரமா வந்திடறேன்…அப்பரம் நாம் ரெண்டு பேருமா வெளையாடுவோமாம்…பிஸ்கோத்து தரட்டா?”… 

“தா……” எனச் சோர்ந்தாற் போல் நீட்டுகிறது குழந்தை.

“அப்பொ……”என மறுபடியும் ஆரம்பிக்கிறது… 

”அப்பொ……என்ன?” என்கிறார் சுந்தரவடிவேலு. 

‘பாலும்……எடுத்துத் தந்திரேன்……’ என்கிறது குழந்தை. 

“ஏம்மா…சித்தி தருவாளே……” 

“மாட்டேன், நீ தான்-” என்கிறது மறுபடியும். 

குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று இரண்டுபை நிறையவும் பிஸ்கோத்து போட்டுத் தருகிறார். அடுக்களைக்கு அழைத்துக் கொண்டு போய் பாட்டிலில் பாலை ஊற்றி ரப்பரைப் போட்டு அதன் கையில் கொடுக்கிறார். இருவரும் வெளியே வருகின்றனர். 

”சரிதானா?” என்று சொல்லிக் கீழே இறக்கி விடுகிறார். 

“சரிதான்-” என நீட்டுகிறது குழந்தை. 

ஸ்ரீமான் சுந்தரவடிவேலு காரில் உட்கார்ந்து கொண்டு வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார். 

“அப்பா அப்பா!” என்கிறது குழந்தை. 

“இப்பொ என்ன?” என்கிறார். 

“எம் பொஸ்தகத்தையும் எஞ்சினையும் குடு” என்கிறது குழந்தை. 

”ஓஹோ!” என்றுகொண்டு எடுத்துக் கொடுக்கிறார். “நான் புறப்படட்டா?” என்று கொண்டு வண்டியை ஓட்டுகிறார். 

”ஊம்” என்று கொண்டு நீட்டுகிறது. 

வண்டி புறப்பட்டுப் போகிறது. அது வெளிகேட்வரை சென்று திரும்பும்வரை அதையே பார்த்துக்கொண்டிருக் கிறது குழந்தை. 

பிறகு மெதுவாக அக்குளில் புத்தகத்தை இடுக்கிக் கொள்ளுகிறது.ஒரு கையில் என்ஜின் கயிற்றைப் பிடித் துக்கொண்டு இழுக்கிறது. மற்றொரு கையில் பாட்டில், -இந்த சன்னத்தங்களுடன் குழந்தை வெளியே புறப்படு கிறது… மெதுவாக நடந்து செல்லுகிறது… 

இவ்வளவு கூத்தையும் மரகதம் ஒரு ஜன்னலில் நின்று பார்த்துக்கொண்டு நிற்கிறாள். கண் கலங்குகிறது. வாயில் சிரிப்பு வருகிறது… குழந்தையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்… 

குழந்தை வெளி கேட்டு அருகில் நிற்கும் வாதமுடக்கி மரநிழலுக்குப் போகிறது. பாட்டிலை வாசல் கேட் காறைக்கு அருகில் உள்ள குத்துக்கல் மீது வைக்கிறது. நிழலில் வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பொம்மை பார்க்கிறது…அது அவ்வளவாக ரசிக்கவில்லை. 

வட்டு விளையாட முயலுகிறது. அதற்குக் கட்டம் போடத் தெரியவில்லை. இஷ்டம்போல் கோணல் மாணலாக இரண்டு மூன்று கோடுகள் கீச்சிவிட்டு தூரத்தில் வந்து நின்று கொள்ளுகிறது. 

கையிலிருக்கும் ஒட்டாஞ்சில்லியைக்கோட்டுக்குள் வீசுகிறது. 

நொண்டியடிப்பது போல ஒற்றைக்காலைத் தூக்கிக் கொள்ளுகிறது. வராததனால் படபடவென்று இரண்டு காலையும் வைத்து ஓடி, விழுந்து கிடந்த சில்லியின்மேல் ‘பட்’ என்று காலை வைத்துக்கொண்டு, நொண்டியடித்து வந்தது போல ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு சிறிது நிற்கிறது. அதற்கு இந்த ‘சில்லாட்டம்’ தெரியாது. எப்பவோ ஒரு தடவை ராஜாவுடன் விளையாடியிருக்கிறது. 

இப்படி நின்றுவிட்டால் ஒரு ஆட்டம் ஜயித்தாச்சு என்பது அதன் சித்தாந்தம். சில சமயம் வேறு யாரையோ ஆடச் சொல்வதுபோல் பாவனை செய்து அந்தக் கற்பனை நபராகத் தன்னை ஆக்கிக்கொண்டு விளையாடும். 

இப்படி இது விளையாடிக் கொண்டிருக்கையிலே, கருத்த தாடியும் மீசையும், கையிலே திருவோடுமாக ஒரு ஆண்டி அந்தப்பக்கமாக வருகிறான். அவன் கட்டியிருக்கும் உடை தூய வெள்ளையாக இருக்கிறது. பரதேசிக் கோலத்தில் காணப்பட்டாலும் பிச்சைக்காரன் அல்ல என்று தெரிகிறது. நல்லவன் என்று சொல்லும்படியாகக் கண்ணிலே ஒரு ‘குளுமை’ தேங்கி நிற்கிறது. சிறிது எடுத்த மூக்கு, எடுத்த நெற்றி, சிறிது தடித்த உதடு, மீசைக்குப்பின், மேகப்படலத்திற்குப் பின்னால் பாறை தோன்றுவது போல வெளுத்த ஆனால் சிறிது எடுப்பான பல். ஒரு கையில் இலையால் மூடிய திருவோடு…மறு கையில் சிறு மூட்டை. நிழலுக்காக உள்ளே நுழைகிறான். குழந்தை நின்ற இடத்திற்குப் பின்புறமாக மரத்தடியில் வந்து உட்கார்ந்து திருவோட்டிலிருந்த ஜலம் விட்ட சாதத்தை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறான். துணைக் கறியாக ஒரு துண்டு இலையில் இரண்டு மிளகாய் வற்றல் களும் கொஞ்சம் உப்புக்கல்லும் வைத்துக்கொண்டிருக் கிறான். குழந்தை அவன் வந்ததைக் கவனிக்கவில்லை. 

விளையாடிக்கொண்டிருக்கிறது… 

வட்டை எடுத்துப் போடுகிறது. குழந்தைக்கு ஒரு பொருளை வாட்டமாக முன் பக்கம் விட்டு எறிவதில் பழக்கம் கிடையாது. உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழிருந்து மேல் வாட்டமாக எறியும்; அல்லது தலைக்கு மேல் ரொம்ப உயர்த்திக்கொண்டு வேகமாகக் கையை வீசிப் பின்புறமாகக் கொண்டு வரும். இந்த முயற்சி களால் சில சமயங்களில் வட்டு பின்புறமாகப் பார்த்துப் பறந்துவிடும். 

அப்படிச் சம்பவிக்கவே, குழந்தை பின்பக்கம் திரும்புகிறது. நாடோடியைப் பார்த்து விடுகிறது. 

“ஐயோ! பூச்சாண்டி…!” என்று உச்சஸ்தாயியில் கிரீச்சிட்டுவிட்டு பிரமித்து நின்றுவிடுகிறது. குழந்தையின் கண்கள் பயத்தில் வெளியே தள்ளுகிறது. 

ஒரு கவளத்தை வாயில் போடுவதற்குத் தலையை அண்ணாந்த நாடோடி குழந்தையின் பீதியை உணர்ந்து விட்டான. கவளத்தைத் திருவோட்டில் கரைத்துவிட்டு, “இல்லேம்மா பாப்பா. நான் பூச்சாண்டியில்லே! பயப் படாதே…!” எனச் சிரிக்கிறான். 

குழந்தை அப்படியே நிற்கிறது. 

“இதோ பாரு, இது தாடி வெறும் மசிரு . பயப்படா தேம்மா, இங்கே வாம்மா, கண்ணுல்லெ…” 

குழந்தைக்குப் பயம் இவனது பரிவால் சிறிது தெளி கிறது. ஆனால் இடம் பெயர, கால்கள் சுவாதீனப்படவில்லை. 

“அப்பொ நீ பூச்சாண்டியில்லே…?” எனச் சந்தேகத்தோடு வினாவுகிறது. 

“இல்லேம்மா! நீ தான் இப்படி வந்து தொட்டுப் பாரேன்” 

“நெசமா.சத்தியமா சத்தியமா, சத்தியமா!” 

“நீ இங்கே வாடி…கண்ணு…” என மறுபடியும் அழைக்கிறான். 

குழந்தை மெதுவாக அவன் கிட்டப்போய், நின்று கொண்டு அவன் தாடியை இழுத்துப் பார்க்கிறது. 

”பாத்தியா, வெறும் மசிரு; ஓந்தலைலே இருக்குபாரு, அது மாதிரி” என்று அதன் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே பக்கத்தில் உட்காரவைத்துக் கொள்ளுகிறான் 

”கண்ணு பயந்தே பூட்டாளே!’ என்று குழந்தையின். நெஞ்சைத் தடவிக் கொடுக்கிறான்: “கண்ணு பயப்படா தம்மா, இந்தா இங்க பாரு, நான் சாப்பிடட்டா!” என்று குழந்தையை ஒரு கையால் அரவணைத்தபடி ஒரு கவளத்தை எடுத்து அண்ணாந்து வாயில் போட்டுக் கொள்ளுகிறான். குழந்தையின் கண்கள் கவளங்களுடன் அவன் வாய்க்கும் திருவோட்டுக்குமாக யாத்திரை செய்கின் றன. தலையை நீட்டி, நீட்டிப் பார்க்கிறது. 

ஒரு மிளகாய் வற்றலை எடுத்துக் கடித்துக் கொள்ளு கிறான். குழந்தை அதைக் கவனிக்கிறது. 

“எரிக்கலே!” என ஆச்சரியத்துடன் கேட்கிறது. 

“இந்தக் கட்டைக்கு இதெல்லாம் எரிக்காது அம்மா” எனச் சிரிக்கிறான். 

“எனக்கும் பசிக்கிறது” என்கிறது குழந்தை. 

”பாப்பா, இன்னுமா சாப்பிடலே, ரொம்ப நேர மாச்சே!’ என அவன் கூறுவதற்குள், ஓடிப்போய்க் கதவருகில் வைத்திருந்த பாட்டில், புத்தகம், எஞ்சின் வகையராக்களை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறது. அவன் எதிரில் உட்கார்ந்து கொண்டு, பாலைக் குடிக்கிறது. 

குழந்தையின் செயல்களைக் கவனித்துக் கொண்ட நாடோடி ஒரு விதமாக, ஆனால் சிறிது தவறுதலாக ஊகித்துக் கொள்ளுகிறான். வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் கிடையாது, ஆண் போஷணையில் மட்டும் வளரும் குழந்தை என நினைக்கிறான். 

“சம்போ மஹாதேவா! இதுவும் ஒரு திருவிளையாட்டா!” என்று சொல்லுகிறான். 

“விளையாடலே, பாலு சாப்பிடறேன் புட்டிலே பாலு இருக்கு பாரு” என வாயிலிருந்து எடுத்துவிட்டுக் காண்பிக்கிறது. 

நாடோடி சிரித்துக்கொண்டே “உன்பேரு என்னம்மா?” என்கிறான். 

“குஞ்சு…மீனாச்சின்னும் அப்பா சொல்லுவாங்க” என்கிறது. 

குழந்தைக்குப் பைக்குள் இருக்கும் பிஸ்கட் ஞாபகம் வந்துவிடுகிறது. பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுச் சட்டைப் பைக்குள் கையை வீட்டு இரண்டு ஜம் பிஸ்கட்டை எடுத்துக் காண்பித்துவிட்டு, “நீ சாப்பிடு, சாப்டப்பிறவு தாறேன்” எனப் பையில் வைத்துக் கொள்ளுகிறது. 

மறுபடியும் பாட்டிலை எடுத்து வாயில் வைத்துக் குடிக்கிறது. 

இடையில் நிறுத்திக்கொண்டு, ஒரு கண்ணைச் சிறிது மூடியவாக்கில், “இனூச்சுக் கெடக்கும்!” 

பிஸ்கட்டின் உயர்வை ரசித்துச் சிபாரிசு செய்கிறது. இருவரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள். 

நாடோடி, திருவோட்டைக் கழுவ எதிரே ரஸ்தாவுக்கு மறுபுறத்தில் இருக்கும் குழாயடிக்குப் போகிறான். குழந்தை பாட்டிலை எடுத்துக்கொண்டு தொடருகிறது. 

“இதையும் கழுவிக் குடு” என்கிறது. 

குழந்தையின் பாட்டிலைப் பத்திரமாக வாங்கிக் கழுவிக் கொடுத்துவிட்டு அதற்கும் முகம், கைகால்களைக்கழுவிவிடுகிறான். 

இருவரும் திரும்புகிறார்கள். 

அவனது ஒரு எட்டுக்கு மூன்று எட்டாக, குழந்தை ஓடி-நடந்து வருகிறது. 

”அப்பா, சாப்பிட்டாச்சு” என்று பெரிய மனுஷி மாதிரி சொல்லிக்கொண்டு, “வெளையாடலாம் வாரியா” என்று ரொம்ப சரசமாக நாடோடியிடம் கேட்கிறது.

நாடோடியின் கண்கள் ஜொலிக்கின்றன. குழந்தையின் குதூகலத்தைப் பெற்றுவிடுகிறான். “என்ன வெளையாட்டு வெளையாடுவோம்?” என்று கேட்கிறான். 

“ரயில் வெளையாட்டு ஆடுவமா? நாந்தான் ரயிலாம், நீ டேசன், கைகாட்டி” என்கிறது குழந்தை. 

கையை அவனை ஒற்றைக் குழந்தை ‘ஸிக்னல் போஸ்ட்’ மாதிரி நிற்கச் சொல்லி விட்டு, தூரத்தில் ஓடிப் போய் அங்கிருந்து ‘குச்-குச்’ என்று சத்தமிட்டுக் கொண்டு கைகளைப் பிஸ்டலாக அசைத்தபடி நாடோடியை நோக்கி வேகமாக வருகிறது. அது போடுகிற ‘குச்-குச்’சும் கை சுழற்றலும் வண்டி மெயில் மாதிரி வருவதாகப் பாவனை. குழந்தையின் முகம், மனசு விளையாட்டில் ரசித்திருப்பதைப் படமெடுத்துக் காட்டுகிறது. 

‘வண்டி’ வந்துவிட்டது. கைகாட்டியை நெருங்கி விட்டது. கைகாட்டி கிட்ட வந்து விட்டது. எஞ்சின் ஊதுகிறது. இரண்டு முறை, மூன்று முறை… 

கைகாட்டி தன் வேலையை மறந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது… 

எஞ்சின் குழந்தையாகி விட்டது. ”போடிம்மா… உனக்கு வெளையாடவே தெரியலியே… கைகாட்டி சாயாமே ரயிலு வருமா?… வாண்டாம் போ…” என்று தரையில் காலை உதைத்துவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டபடி மரத்தடியில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது. 

தனக்கு விளையாடத் தெரியவில்லை என்பதையும் ரசித்துக் கொண்டு குழந்தையிடம் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு “குஞ்சம்மா, குஞ்சம்மா வேறே வெளையாட்டுச் சொல்லேன். விளையாடுவோம்.. வட்டாடுவோமா?” என்று தனக்கு ஞாபகமுள்ள விளையாட்டைக் குறிப்பிடுகிறான். 

மனதில் அது ரசிக்காததினால் “வாண்டாமா, ஒனக் குத்தான் ராசா மாதிரி வெளையாடவே தெரியலியே” என்கிறது. 

”ராசா யாரும்மா?” என்று கேட்கிறான் நாடோடி. 

“எங்கண்ணன்!” என்று நெஞ்சைத் தட்டிக் கொள்கிறது. 

“பள்ளிக்கூடம் போயிருக்கானாம்மா?” என்கிறான் நாடோடி. 

“செத்துப் போயிட்டான்” என்கிறாள் இரண்டு கை களையும் விரியத் திறந்து காட்டிவிட்டு. “எங்கப்பாதான் பள்ளிக் கொடத்துக்குப் போயிருக்காங்க’ என்கிறது. 

மரணத்தின் பரிபூரண அர்த்தத்தையும் கிரகியாமல், இரண்டு பிரிவின் தன்மையையும் ஒரே அளவில் வைக்கும் குழந்தையின் மனப்பான்மை அவனை அதிசயத்தில் ஆழ்த்துகிறது. 

அவன் வேறு ஏதோ கேட்கிறதற்கு வாயெடுக்கையில், குழந்தை ‘பூச்சிக் கண்’ மாதிரி வைத்துக்கொண்டு, “எங்க தாத்தா வரப்போ றாங்களே எனக்கு!” – அவனுக்குத் தலையை ஆட்டிக் கொண்டு அறிவிக்கிறது. 

“உங்கப்பா பேரு என்னம்மா?’ என்கிறான். 

“சுந்தலவடி வேரு” எனக் குழந்தை லகர, ரகரத்தைக் குழப்பியடிக்கிறது. 

“பெரிய பள்ளிக்கூடம் அங்கே இருக்கு பாரு, அதுலெ வாத்தியாரு” என்று வியாக்கியானம் செய்கிறது. 

குழந்தையின் மரண – ஞானத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நாடோடிக்கு ஆவல் “உங்க அண்ணெ, -ராசா எப்பிடியம்மா செத்துப் போனான்?” என்று கேட்டான். 

“அண்ணெக்கி மெளெபேயலே பெரியமௌ, – அப்பொ இந்த சித்தி இருக்காள்ள,…அவென கொடையப்புடிச்சுக்கிட்டு போகச் சென்னா, – அவென் வந்ததும், அப்பா வந் தாங்க, – கோவிச்சிக்கிட்டாங்க. அவுங்க போனம்பரவு எப்பவோ செத்துப் போயிட்டான்; நானுங் கூடவேதான் இருந்தேன்” என்று உணர்ச்சியுடன் சொல்கிறது. 

நாடோடி, அவன் ஓரளவு ஊகித்தது சரியாகி விட்டது என்ற நினைப்புடன், சுந்தரவடிவேலுவைப் பற்றி வெகுவாகத் தப்பபிப்பிராயம் கொண்டு விட்டான். 

“நீ என்கூட வந்துடிறியா?” என்று கேட்டுவிட்டான். 

“நான் வந்தா யாரு அவுங்க கூட வெளையாடுறது?” என சாவதானமாகப் பதில் கொடுக்கிறது குழந்தை. 

அதன் வாயைக் கிண்டி விட்டுப் பார்க்கும் தன் அசட்டுத் தனத்தையே நொந்து கொண்டு பராக்காகக் குழந்தையின் நினைப்பை வேறுபுறம் திருப்ப, “அதென்னம்மா புத்தகம்?” என்கிறான். 

“அதா, ரயில் பொத்தகம்” என்று அதை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறது. 

“படம் பாப்பமா?” என்று புஸ்தகத்தை விரித்துப் போடுகிறது. 

“உனக்குப் படிக்கத் தெரியுமாம்மா?” என நாடோடி கேட்கிறான். 

“ஒனக்குத் தெரியுமா” எனக் குழந்தை திருப்பிக் கேட்கிறது. 

“தெரியாதே…!” என்கிறான். 

“எனக்கும் தெரியாது” என்று கொண்டு படத்தைப் புரட்டிக் கொண்டே பையிலிருந்து பிஸ்கட்டுகளை எடுக்கிறது. தான் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு மற்றொன்றை நாடோடியிடம் கொடுக்கிறது. “எனக்கு வேண்டாம். நீ சாப்பிடு” என்று சொல்லியும் கேட்காமல், எழுந்து நின்று அவன் வாயில் திணிக்க முயல்கிறது. 

அவன் அதை வாங்கிக் கொண்டு, “பாப்பா நான் ஒரு வித்தை செய்கிறேன் பாக்கிறியா?” என்று கையில் உள்ள பிஸ்கட்டைக் காண்பித்து விட்டு, ”சூ! மந்திரக்காளி என்று கையைத் தட்டி விட்டுக் காண்பிக்கிறான். பிஸ்கட்டைக் காணவில்லை. 

குழந்தைக்கு ஆச்சரியம் சகிக்க முடியவில்லை. 

“எப்பிடி! எப்படி- இன்னொரு தரம் காட்டு” என்கிறது. 

“இதோ பாரு, இப்பொ எந்தக் கையிலிருக்கிறது காட்டு!” என்கிறான். 

குழந்தை முதலில் ஒரு கையை விரித்துப் பார்க்கிறது. பிறகு மறு கையை விரித்துப் பார்க்கிறது. இரண்டிலும் இல்லை. 

“தின்னுப்புட்டியா?’ எனக் கேட்கிறது. 

“வரச்சொல்லட்டா?” எனக் கையை மூடித் திறந்து காட்டுகிறான். 

பிஸ்கோத்து உட்கார்ந்திருக்கிறது! . 

“அது எப்படி?” 

“மந்திரம்!” 

“நான் செய்யட்டுமா?” 

”ஊம்” 

”நீ கொஞ்சம் கண்ணெ மூடிக்கோ” 

நாடோடி சரியென்று கண்ணை மூடிக்கொள்கிறான். 

“நல்லா மூடிக்கணும்’ என்று சொல்லிக்கொண்டே ஒரு பிஸ்கட்டை வாயில் போட்டுக்கொண்டு “உம்” என்கிறது. 

அவன் கண்ணைத் திறக்கிறான். 

குழந்தை இரு கைகளையும் மூடிக்கொண்டு நீட்டு கிறது. அவன் ஒவ்வொன்றாக விரித்துப் பார்த்து விட்டு, ‘வரச் சொல்லு பார்க்கலாம்” என்கிறான்.குழைந்தை அவசர அவசரமாக வாயிலிருந்ததைக் கையில் போட்டுத் துடைத்து விட்டுக் காட்டிச் சிரிக்கிறது. 

“அப்படியில்லேம்மா!” என்று அவளுக்கு விரல்களுக் கிடையில்பிஸ்கட்டை மறைத்து மறுபடியும் கொண்டுவரும் சாகசத்தைக் கற்பித்துக் கொடுக்கிறான். 

இப்படியே விளையாடிக்கொண்டிருந்தவன், பற்றற்று இருப்பதற்காக ஓடிவந்த தன்னைப் பாசம் மீண்டும் தன்னை அறியாமலே பிணிப்பதைக் கண்டு திடுக்கிட்டு உணர்ந்து கொணடவன் போலக் காரணமற்ற சிறிது கடுகடுப்போடு குழந்தையின் நெற்றியிலே திருநீற்றை அள்ளி அப்பிவிட் டுத் திருவோடு மூட்டையுடன் வெளியே விரைந்து விடுகிறான். 

விபூதிப் பொடி கண்ணில் விழும் என்று கண்ணை மூடிக் கொண்டு சாம்பல் பொடி வாயில் கிடைக்கும் என வாயைத் திறந்து ஒன்றும் கிடைக்காததால் ஏமாந்த குழந்தை கண்களைத் திறந்து கொண்டு அவன் போகும் திசையைப் பார்த்து ‘வவ் வவ்’ என வலித்துக்காட்டுகிறது 

பிறகு தன் ‘மூட்டைகள்’ எல்லாவற்றையும் சுருட்டி வாரிக் கட்டிக்கொண்டு வெளிக் கேட்டுக்கருகில் உட்கார்ந்து கைப்பிடிச் சுவரில் சாய்கிறது. தகப்பனார் வரும் திசையை நோக்கியபடியே தூங்கிவிடுகிறது. 

மணி நான்கு இருக்கும். 

சுந்தரவடிவேலு காரில் திரும்பி வருகிறார். மனசு நிலை கொள்ளாதிருக்கிறது. குழந்தையின் நினைவு பகல் முழுவதும் மனத்தை வாட்டியது, அவரது முகத்தில் பிரதி பலிக்கிறது. 

தூரத்திலிருந்தே குழந்தை வாசலில் சாய்ந்திருப்பதைக் கண்டு, காரைத் துரிதப்படுத்துகிறார். அருகே வரவரக் குழந்தை தூங்குவது தெரிகிறது. தானும் சிறு குழந்தை மாதிரி மரகதத்திடம் நடந்துகொண்டதின் விளைவே இம்மாதிரி வீட்டில் பிளவு ஏற்படவும், குழந் தைக்கு இந்தத் தனிமை லபிக்கவும் காரணம் என அவர் தீர்மானித்து, அதை உடனே நிவர்த்திக்கவேண்டும் என நினைக்கிறார். 

பலமாக ‘ஹார்ண்’ அடித்துக்கொண்டு வெளிவாசலை நெருங்குகிறார். குழந்தை விழித்துக்கொண்டு, கொட்டாவி விட்டபடி கண்ணைத் துடைத்துக் கொண்டு நிற்கிறது. 

சுந்தரவடிவேலு காரை நிறுத்தி இறங்கி குழந்தை, ‘குழந்தையின் பரிவாரம்’ சகலத்தையும் காரில் ஏற்றிக் கொண்டு வண்டியை உள்ளே திருப்பிக்கொண்டு வீட்டுக்குச் செல்லுகிறார். 

வீண் முரண்டால் மனக்கசப்பைத் தவிர ஆகிற காரியம் ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்த மரகதம், அன்று தலையை ஒழுங்காகச் சீவி முடித்துக் கொண்டு, சாயங்காலக் காப்பி எல்லாம் தயாரித்து வைத்து விட்டு, வெளியே கார் வரும் சப்தத்தைக்கேட்டு நடுக்கூடத்திற்கு வரும்போது வெளியிலிருந்து, “சித்தியைக் கூப்பிட்டு காப்பியை இங்கே கொண்டாரச் சொல்லுவோம், மரகதம்! மரகதம்’ எனக் கூப்பிடும் குரல் கேட்கிறது. 

“வாண்டாம் அப்பா, நாம்போயி வெளையாடுவோம்” என்கிற குழந்தையின் குரலும் கேட்கிறது. 

சுந்தரவடிவேலு விழுந்து சிரிக்கும் சப்தம்… “சித்தி நல்லவள்ளா,-அண்ணெக்கேதான் பூனெய அடிச்சு வெரட்டியாச்சே” என்கிறார். 

“பூனெக்கில்லெப்பா…” என்கிறது குழந்தை.

இவ்வளவையும் கேட்டுகொண்டே காப்பி பலகாரங்களுடன் வெளியே வருகிறாள் மரகதம். அவள் முகத்தில் நாணம், வருத்தம் இரண்டும் கலந்திருந்தும் ஒரு மலர்ச்சியும் புன்சிரிப்பும் இருக்கிறது. 

“ஏதேது” எனத் தமது ‘வேலையில்’ பாதி முடிந்து விட்டதை உணர்ந்து கொண்ட சுந்தரவடிவேலு, “இந்தா நான் நாக்காலியே எடுத்துப் போடுறேன்; இந்தச் சட்டை யெல்லாம் போட்டுவிட்டு வா’ எனத் தன் கோட்டைக் கழற்றிக் கொடுக்கிறார். 

பக்ஷணத் தட்டை ஒரு மேஜை மேல் வைத்து விட்டு கோட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுகிறாள் மரகதம். 

தகப்பனாரும் குழந்தையுமாக நாற்காலிகளை இழுத்துப் போடுகிறார்கள். 

“குஞ்சு, குஞ்சு. நீ கொஞ்சம் சும்மா இரு. நானே போடுகிறேன்.” 

“ஒனக்குத்தெரியாதப்பா…” என்று, ஒரு நாற்காலியை முக்கி முனகி இழுக்கிறது. 

மரகதம் திரும்பி வருகிறாள். 

மத்தியில் மேஜையை வைத்து அதில் பலகாரங்களை வைக்கிறாள். ஒரு புறம் குழந்தையும், மறுபுறம் மரகதமுமாக உட்காருகிறார்கள்… 

“என்ன மரகதம், நீயும் என்ன சிறு பிள்ளைத்தனமா அண்ணக்கி நடந்துகிட்டே…அவ ‘அக்கா’ என்று சொல்லிட்டா குத்தமென்ன; அதிலெ என்ன வசெ…?” என்று ஒரு டீ பிஸ்கட்டை முறிக்கிறார் சுந்தரவடிவேலு… 

“இது ஓங்கிளுக்குத் தெரியாதாக்கும். அக்கான்னா மூதேவி; நல்ல ஆம்பிளை தான்” என்கிறாள். 

“குஞ்சம்மா நீ ஏண்டியம்மா அண்ணெக்கி சித்தியை அக்காண்ணே?” 

“அண்ணெக்கி, ஊருலே, மோளம் அடிச்சுதே அண்ணெக்கி நீ சொல்லலே, அக்கா என்று சொல்லப்படா துன்னு!’ என அந்த வார்த்தை தனக்கு வசவாக மாறிய விதத்தை விளக்குகிறது குழந்தை. இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்… 

”குஞ்சு நீ இண்ணைக்கி எங்கெல்லாம் வெளையாட்டு வெளையாடினே சொல்லு பார்ப்போம்” என்று கொண்டு நாற்காலியில் சாய்ந்து கொள்ளுகிறார். 

“இண்ணெக்கா, வட்டாடுனேன்; அப்புறம் பூச்சாண்டி வந்தான்…” 

“பூச்சாண்டியா?’ எனக் குழந்தை பயந்து விட்டதோ என்ற கவலையும் கொள்ளுகிறார்; மரகதத்தின் முகத்தி லும் கவலை தேங்குகிறது. 

“ஆமாம்ப்பா! நல்ல பூச்சாண்டி; அவன் கூட விளை யாடினேன்…” 

“பாத்தியளா, குழந்தை கண்ட பிச்சைக்காரனோட எல்லாம் போய்ச் சேர்ந்து உழப்புது” என்கிறாள் மரகதம். 

“அப்பா அவன் பிச்சைக்காரன் இல்லை, பூச்சாண்டி. சாப்பிட்டுப்புட்டுக் கையைக் கொளாயிலே களுவினான்; பிச்சைக்காரன் மாதிரி, துணியில தொடச்சுக்கலெ” என்றது. 

இருவரும் குழந்தையின் வியாக்கியானத்தைக் கண்டு சிரிக்கிறார்கள். 

“அவன் கூட என்ன வெளையாடினே?” 

“மந்திரம்!” என்கிறது. 

“என்ன மந்திரம்?” என்கிறார் சுந்தரவடிவேலு ஆச்சரியத்துடன். 

“ஒரு பிசுக்கோத்துக் குடு. செஞ்சு காட்டுறேன்’-என் கிறது. அவர் ஒரு பிஸ்கட் துண்டை எடுத்துக் கொடுக்கிறார். 

குழந்தை கை மாற்று வித்தையைத் தனக்குத் தெரிந்த படி செய்து செய்து சிரிக்க வைக்கையில், வாசலில் ஒரு ரிக்ஷா வந்து நிற்கிறது. 

அதிலிருந்து ஒரு பெரியவர் மடிசஞ்சியுடன் இறங்குகிறார். 

குழந்தை அவரைக் கண்டு கொண்டு “தாத்தா” எனக் கத்தியபடி நாற்காலியை விட்டு அவரை நோக்கி  ஓடுகிறது. 

மரகதமும் சுந்தரவடிவேலுவும் எழுந்து நிற்கிறார்கள். 

“மாமா!வாருங்க!” எனக் கும்பிடுகிறார். 

“அப்பா சேவிக்கிறேன்” என்று விழுந்து வணங்குகிறாள் மரகதம். 

“மங்களமா இருக்கணும்…” எனக் கிழவனார் ஆசீர்வதிக்கிறார். 

“மரகதம், நீ போய் முருகனைப் பார்த்து மாமாவுக்கு வென்னி போடப்பாரு; சீக்கிரம் -அவசரமா ரயில்லே ஏறி உக்காந்தாங்கண்ணா பல்லுலே தண்ணி பட்டிருக்காது என்று அர்த்தம்” என்கிறார் சுந்தரவடிவேலு. 

“நான்தான்,ஏ முருவா தாத்தாவுக்கு வென்னிப் போடு” என்று கீச்சிட்டுக் கொண்டு உள்ளே ஓடுகிறது குழந்தை. 

“ஏட்டி பைய, பைய,- எதமாப் போ!” என்று எச்சரிக்கிறார் பாட்டனார். குழந்தையின் கீச்சுக் குரல் “முருவா முருவா!” என உள் வீட்டில் முழங்குகிறது. 

மரகதம் பின்தொடருகிறாள். 

”ராசாவுக்கு என்ன சீக்கு! அப்படித் திடீருன்னு…” என்கிறார் மாமனார். 

“எம் முட்டாத்தனம்; அவன் எண்ணெக்கிமே பெல கீனம்; நான் வெளியிலே போனப்போ மழையிலே சுத்தி யிருக்காப் போலிருக்கு; திடீருன்னு ஜன்னியும் வலிப்பும் கண்டுது…அவனுக்கு அடிக்கடி ஒரு வலிப்பு வந்து கொண்டிருந்தது……” என்கிறார் சுந்தரவடிவேலு குரல் கம்மலுடன். 

இருவர் கண்களும் கலங்குகின்றன. 

“அவ்வளவுதான் நமக்கு அதிஷ்டம். குடுத்து வைக் கலே, வருத்தப்படாதே போ……” என்கிறார் கிழவர். 

இருவரும் மௌனமாக இருக்கின்றனர். சுந்தர வடிவேலு மனம் அவரையே சுடுகிறது. 

“நம்மூரிலே ஒரு பிள்ளையார் கோயில் கட்டணும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. வாய்க்கால் பக்கம் இருக்கே முக்கோணமாக ஒரு நெலம், நந்தவனத்துக்குப் பக்கத்திலே, அதே நீ குடுத்தா நல்லாருக்கும்” என்று பேச்சை வேறு திசையில் திருப்புகிறார் கிழவர். 

பிராயச்சித்தம் போல இவ்வார்த்தைகள் சுந்தரவடி வேலுக்கு ஒரு மனக்குளுமையை ஏற்படுத்துகிறது. 

“அப்படியே செய்து விடுவோம்……அதற்கென்ன” என்கிறார். 

மனக்கண் முன் பிள்ளையார் சிலை ஒன்று பூதாகரமாக ஆனால் மனசுக்குக் குளுமை ஏற்படுத்தும் தன்மையோடு கூடி நிலைக்கிறது. 

மறுநாள் விடியற்காலம்…… 

“தும்பிக்கை யொன்றே துணை” என்ற கிழவனார் குரல்….

“தும்பிக்கை யொன்றே தொணை” என்கிறது குஞ்சுவின்குரல்… 

கி: காட்டு வழியானாலும். 

கு: காட்டு வழியானாலும்… 

கி: கள்ளர் பயமானாலும்…

கு: கள்ளர் பயமானாலும்…

கி: ஏட்டு வழிக்காரருக்கே… 

கு: ஏட்டு வழிக்காரருக்கே… 

கி: இதமுண்டு… 

கு: இதமுண்டு… 

இவ்வாறு கிழவர் குழந்தையை எழுப்பி வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முகம் தெரியாத இருட்டு. குஞ்சு போர்வைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது; சின்னக் கட்டிலில். 

”மகா தேவா – சொல்லு” 

”மகா தேவா…” 

குழந்தை எழுந்து ஒரு கால் சட்டையை முடிந்து விடும்படி, தாத்தாவிடம் கொண்டு வருகிறது. 

தாத்தா: ஏட்டி! பாவாடெ எங்கே? 

கு: இருட்லெ தெரியலே தாத்தா! இதைத்தான் கட்டி வுடு. 

கி. இதெ எப்போ எடுத்தாந்தெ? 

கு: கட்டில்லே கெடந்தது 

கி நல்லாத்தான் இருக்கு; நீ என்ன ஆம்பளப் புள்ளெயா…? 

நாடாவை முடித்து விடுகிறார். 

கு: ரொம்ப இறுக்கபதே …..ஷ… வயித்தெ வலிக்குமாம். 

“இங்கே வா! திரு நீறு பூசட்டும்’ எனத் தானும் இட் டுக் கொண்டு, குழந்தைக்கும் பூசுகிறார். சிறிது வாயில் போடுகிறார். 

”இன்னும் கொஞ்சூண்டு தாத்தா” என்கிறது குழந்தை. 

“உம்! அதெல்லாம் சோகெ புடிக்கும். ஒண்ணு ரெண்டு, மூணு சொல்லு… ஒனக்குத் தெரியுமா?” 

“நீ சொல்லு, நான் கேட்டுகிட்டிருக்கேன்.” 

”அடி போடி சொல்லுடின்னா!” 

“தாத்தா! நீ இங்கியே உக்காந்துகிட்டு இரு, நான் உள்ளே போயிட்டு வாரேன்” எனப் புறப்படுகிறது. 

“எங்கடி இருட்லே, இப்படி உட்காரு” 

“நீ இரேன் இதோ வாரேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் மச்சிலுக்கு ஏறுகிறது. 

இருட்டில் கஷ்டப்படக் கூடாதே எனக் கிழவரும் தொடர்கிறார். அதன் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை. 

அது மச்சிலில் நேராக ஒரு அறைக்குள் நுழைவதைக் கண்டு பின் தொடர்கிறார். 

வாசலை நெருங்கியதும் திக்பிரமையடைந்து நின்று விடுகிறார். 

குழந்தை தாயாரின் படத்தின் முன் கும்பிட்டுக் கொண்டு நிற்பதையும் பார்த்துவிடுகிறார். 

குமுறிக்கொண்டுவரும் அழுகையை வாயில் துணியை வைத்து அமுக்கிக்கொண்டு இறங்கி வந்து படுக்கையில் உட்கார்ந்து விடுகிறார். 

சிறிது நேரம் கழித்துக் குழந்தை திரும்பி வருகிறது. 

“தாத்தா பல்லு வௌக்கலே; அப்பா ஏந்திரிச்சாச்சு!” என்று அவரை அசைக்கிறது. 

மெதுவாக எழுந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு தொடருகிறார். 


பகல். மத்தியானம் இரண்டு மணி இருக்கும். 

குழந்தை சிவப்பழமாக வாசலில் நின்று கொண்டிருக் கிறது. நெற்றியில் விபூதி, சந்தனப்பொட்டு, உடம்பிலும் மூன்று மூன்று வரைகள்-புலிவேஷம் போட்ட மாதிரி. குழந்தை அதைப் பார்த்துப் பார்த்து ரசித்துக்கொண்டு நிற் கிறது. 

வீட்டு உள்கூடத்தில் தாத்தா நாற்காலியில் உட்கார்ந் திருக்கிறார். எதிரில் கலங்கிய கண்களுடன் தன் குறைகளை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கிறாள் மரகதம். 

ஆற அமர அவர் கேட்டுக் கொண்டிருக்கையில் குழந்தையின் குரல் கேட்கிறது. 

“தாத்தா, கள்ளன் வந்திருக்கிறான்’ என்று அறிவிக்தறது. 

“என்னட்டி .” 

“கள்ளன் தாத்தா,-திருடன், களவாணி” என விளக்குகிறது. 

இருவரும் பதறிப்போய் என்னவென்று ஓடுகிறார்கள் வாசலில் நீளக் கிராப்புத் தலையும் ஷர்ட்டும், டாக்கி டவலும் அணிந்த ஒருவன் சிரித்துக்கொண்டு நிற்கிறான். 

“சார் இருக்கிறாங்களா” எனக்கேட்டுவிட்டு “ஏது குழந்தை ரொம்ப ஜாக்கிரதை போலிருக்கிறதே!” எனச் சிரிக்கிறான். 

“அது உளருகிறது. அவாள் இல்லை” என்று சொல்லி யனுப்பி விடுகிறார் கிழவர். 

“பாத்தியளா கூத்தை; இந்த மாதிரிதான்; அண்ணைக்கி ஒருத்தென் இவன்மாதிரிதான் சட்டையும் கிட்டையும் போட்டுகிட்டு வந்தான்,- இவர் இல்லெ. புள்ளே வெளியே தனியா வெளையாடிக்கிட்டிருந்தது. உள்ள கூப்பிடுறதுக்கு இப்படிச் சொல்லி வச்சேன்,-நம்மையே பரிசி கெடுத்து விட்டது” என்கிறாள் மரகதம். 

“அப்பொ நான் சொல்லுகிறதைக் கேளு. உன் மாப் பிளைக்கி மொறைக்கு ஒரு அக்கா இருக்கா.வயசானவ. ரொம்ப ஏழை. ஏழெட்டு வயசுப் பையனும் அவளுந்தான், அவளை இங்கே கூட்டி வச்சுக்கோ. வீட்டையும் பார்த் துக்குவா,- புள்ளையெயும் பார்த்துக்குவா,-என்னசொல்லுறே, – சம்மதமா?” 

‘நீங்க சொன்னாச் சரிதான், இல்லேங்கப் போறனா நான் ” என்கிறாள். 

“நான் இண்ணெக்கே புறப்படுறேன். புள்ளையும் கூட்டிக்கிட்டுப் போறேன்; அங்கெல்லாரும் பார்க்க ஆசைப் படுறாக” என்கிறார் கிழவர். 

இரவு ரயில்வே ஸ்டேஷன். 

இரண்டாவது வகுப்பு வண்டியில் கிழவனாரும் குஞ்சு வும் உட்கார்ந்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் சுந்தரவடி வேலுவும் மரகதமும் நிற்கிறார்கள். 

ரயில் ஊதிவிட்டது; புறப்படப் போகிறது. 

“ஊருக்குப் போறியாக்கும்” எனக் குழந்தையை ஜன்னல் வழியாக முத்தமிடுகிறார். 

ரயில் நகருகிறது. 

“ஏட்டி, போயிட்டு வாறியா?” என்கிறாள் மரகதம். 

“ஒன் கூட டூ.ஆனமேலே, அம்பாரி மேலே டூ” என ஜன்னல் வழியாகக் கையை நீட்டிக் கொண்டு கத்துகிறது குழந்தை. கிழவனார் அதன் இடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.

– தொடரும்…

– முதல் வெளியீடு: காதம்பரி, ஏப்ரல்-மே 1949.

– சிற்றன்னை (குறுநாவல்), புதுமைப்பித்தன் படைப்புகள் (2ஆம் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை.

புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *