சிற்பியின் கனவு
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 673
(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
[ஒரு ஸ்தல புராணத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்த வரலாறொன்று இந்தப் பகற்கனவைக் கிளப்பி விட்டது.]
கையிலே ஒரு சிற்றுளி டையிடையே என்னவோ முணுமுணுப்பு. இந்தக் கோலத்தில் காட்சியளித்தான் சிற்பி. அவனுடைய தேகத்தில் முறுக்கு இல்லை .ஆனால் தளர்ச்சியும் இல்லை. தான் மேற்கொண்ட காரியத்தைக் கண்ணும் கருத்துமாக இருந்து முடித்துவிடும் தைரியம் அவனுக்கு இருந்தது. ஒரு சிறு குடிசையிலே இரவெல்லாம் படுத்துச் சிந்தனை செய்வதும் பகல் முழுவதும் கல்லைக் கொத்திச் செப்பஞ் செய்வதுமாகிய வேலையில் ஈடுபட்டு இருந்தான். அவனுடைய வீட்டுக்குப் பக்கத்திலுள்ள தோப்பிலே இருந்தது அந்தக் குடிசை. புற உலகத்தின் குழப்பம் அணுகாமல் தனியே இருந்து தனது சிற்ப சிருஷ்டியை அவன் செய்து வந்தான்.
அவனது இளமைக் காலத்தில் அவன் கை செய்த வேலைகளுக்குக் கணக்கு இல்லை. சிற்பத் தொழிலில் அவன் கைமட்டுமா வேலை செய்தது? அறிவும் வேலை செய்தது. அவனுக்குச் சம்ஸ்கிருதம் தெரியும். ஆகம சாஸ் திரங்களைப் படித்திருக்கிறான். கோயில் நிர்மாணத்தில் அவன்தான் அக்காலத்தில் உரையாணியாக இருந்தான். விக்கிரக லட்சணங்களின் சம்பந்தமாக உள்ள ஏட்டுச் சுவடிகளெல்லாம் அந்தக் குடிசையிலே அவனுக்குத் துணையாக இருந்தன. ஏதேனும் ஒரு மூர்த்தியைப் பற்றி அவனிடம் யாராவது பேசத் தொடங்கினால், உடனே கடகடவென்று அந்த மூர்த்தியின் தியான சுலோகத்தை ஒப்பிப்பான். தமிழ் நாட்டுக் கோயில்களில் அவன் சிருஷ் டித்த மூர்த்தி கரம் மிக்க விக்கிரகங்கள் பல. அவன் கை ராசியை எல்லோரும் புகழ்ந்தார்கள். பணம் சம்பாதித்தான் புகழும் சம்பாதித்தான்.
இப்பொழுது அவனைத் தேடுவாரில்லை. ‘சிறு பசங்கள்’ கிளம்பி விட்டார்கள்; மந்திரமில்லை; மாயம் இல்லை; கண்ணுக்கு அழகாக இருந்தால் போதும் – இப்படி ஆகிவிட்டது காலம். இவ்வளவு நாள் பணத்துக்காக அந்தச் சிற்பி விக்கிரகங்களை அமைத்தான். இப்போது ஆத்மார்த்தமாக ஒன்றை இயற்ற எண்ணினான்.
அவனுடைய சொந்த ஊரிலே காலையில் எழுந்து இருந்தால் கண்ணுக்கு முன்னே நிற்கும் குன்றின் முகத்திலே விழிக்க வேண்டும். அந்தக் குன்றை அவன் அறிவு வந்தது முதல் தினந்தோறும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அப்பொழுதெல்லாம் அவன் கண்கள் அந்தக் குன்றைப் பார்த்தன, கருத்து. பார்க்கவில்லை,
பணத்துக்கு வேலை செய்யும் காலம் போய் ஓய்வாக இளைப்பாறிக் கொண்டிருந்த அவனது முதுமைப் பருவத்தில் ஒரு நாள் அந்தக் குன்றைப் பார்த்தான். சதா சிற் றுளியால் நுண்ணிய சிற்ப சிருஷ்டியைச் செய்து வந்த தன் கை இப்போது வேலை ஒன்றும் இல்லாமல் துருப்பிடித்துப் போவதை அவன் விரும்பவில்லை. அன்று பார்த்த அந்தக் குன்றின் காட்சியிலே ஒரு குறை அவன் கண்ணுக்குப் புலம் பட்டது. ‘இது எவ்வளவு அழகான குன்று ! இருந்தும் என்ன பயன்? இதை யார் போற்றுகிறார்கள்? திலகம் ல்லாத நெற்றி போலவும் மதியில்லாத வானம் போலவும் இது சூன்யமாக இருக்கிறது. இதன் மேல் ஒரு கோயில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்!’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்றோ இல்லையோ, அவன் தன் முதுமையையும் மறந்து துள்ளிக் குதித்தான். “வேலை இல்லாமல் மரத்துப்போன என் கையின் சூன்யத்தையும் இந்தக் குன்றின் சூன்யத்தையும் போக்க முயல்வேன்” என்று உடனே சங்கற்பம் செய்து கொண்டான். தனிக் குடிசை கட்டினான். சுவடிகளைக் கொண்டு போய் வைத்தான். நல்ல கல்லாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு சென்றான். முருகக் கடவுளின் விக்கிரகம் ஒன்றை அமைக்க ஆரம்பித்து விட்டான்.
லட்சணம் பிசகாமல் ஆற அமர அவன் அந்த விக்கிரகத்தை அமைத்தான். வித விதமாக நூறு உளிகளை வைத்துக்கொண்டு வேலை செய்தான். அந்த உளிகளால் அவன் கொத்தினானென்று சொல்வது பிழை ; உளிகளின் ரூபத்தில் இருந்த எழுதுகோலால் அந்தத் திவ்ய மூர்த்தியை எழுதினான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
துணையில்லாமல் தனியே இந்த வேலையை அவன் செய்து வந்தாலும் ஒவ்வொரு நாளும் மாலைக் காலத்தில் அவனோடு பேசிப் பொழுதுபோக்க ஒரு கிழவர் வருவார். அவர் ஒரு கவிஞர், கலைஞனும் கவிஞரும் முதுமை ஒன்றினால் மட்டும் சமானமானவரென்று சொல்வ தற்கு இல்லை ; அறிவிலும் புகழிலும் தெய்வ பக்தியிலும் கலைத் திறமையிலும் இருவரும் துணைவர்கள். சிற்பி பல கோயிலில் மூர்த்திகளை அமைத்தான் ; கவி பல புராணங் களை இயற்றினார். கண்ணுக்கு இன்பந்தரும் சிற்ப வித்தகத்தால் சிற்பி சிறப்படைந்தான்; கருத்துக்கு இன்பம் தரும் கவிதைத் திறமையால் கவிஞர் சிறப்பெய்தினார்.
இரண்டு பேரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். தெய்வத் லட்சணங்களைச் சிற்பி சொல்வான்; தெய்வத் திருவிளையாடல்களைக் கவிஞர் பேசுவார்.
இரண்டு கிழவர்களும் ஒருவருக்கு ஒருவர் இன்றியமை யாதவராக விளங்னீனார்கள். காலம் இன்பமுடையதாகச் சென்று கொண்டிருந்தது. சிற்பி குடிசையிற் கொணர்ந்த கல் உருப் பெற்று அங்கம் படைத்து வந்தது.
எல்லாம் முடிந்து விட்டது. கிழட்டுச் சிற்பி கூலிக்கு வேலை செய்யாமல் இருதய பூர்வமான ஆர்வத்தினால் செய்தது அந்த விக்கிரகம். ஆதலால் அது மாசுமறுவற்ற மூர்த்தியாக விளங்கியது. பல காலம் ஆராய்ந்து ஆராய்ந்து சிறுகச் சிறுக அமைத்த அதில் அவன் தன் கைத் திறமையையும் கற்பனைத் திறமையையும் ஆகம சாஸ்திர அறிவுத் திறமையையும் காட்டியிருந்தான்.விக்கி ரகம் தத்ரூபமாக எழுந்து பேசுவது போல் இருந்தது. அதன் முகத்திலே என்ன அழகு! கல்லை இரும்பினால் செதுக்கி உயிர் மூடி விட்டான் கலைஞன்.
கண் திறக்க வேண்டியதுதான் பாக்கி. குன்றின் மேல் கோயில் கட்டுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதுதான். அந்தக் கோயில் பெரிதாக இருக்க வேண்டுமென்று அவன் விரும்பவில்லை.
”அப்போது நிலைக்க ஒரு பீடமும் நிழலுக்கு ஒரு கூரையும் இருந்தால் போதும். பிறகு இந்த மூர்த்திக்கு எல்லாம் தானே வந்து விடும். இந்த மாதிரி விக்கிரகத்தை யாரும் எங்கும் பார்த்திருக்க மாட்டார்கள். பாருங்கர் இது என்ன வேலை செய்யப் போகிறதென்து. எவ் வளவு கோலாகலத்தோடு இது விளங்கப் போகிறதென்பதை நாம் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறோமா இல்லையோ!”-இப்படிக் கவிஞரிடம் சொல்லிக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டான் அவன்.
“சிறு குடிசையிலே உண்டான இந்தச் சிருஷ்டி தமிழ் நாட்டையே ஒரு ஆட்டு ஆட்டப் போகிறது. அப்புறம் இந்தக் குன்று இப்படியா இருக்கும்! அடே அப்பா! கோபுரங்களென்ன, மதில்களென்ன, மண்டபங்களென்ன. குளங்களென்ன, தவச்சாலைகளென்ன, தர்ம சத்திரங் களென்ன – எல்லாம் இந்திர ஜாலத்தால் சிருஷ்டிக்கப் பட்டவை போல் இங்கே உண்டாகி விடப் போகின்றன. ஆம்! இந்திர ஜாலத்துக்கு மேற்பட்ட ஜாலம் இந்தச் சிற்பக் கலை -அவன் ஆவேசம் வந்தவனைப் போல் பேசினான்.
“நாளைக்கு இன்னும் இதை ஒரு முறை நன்றாகப் பார்த்து ஏதாவது கை வைக்க வேண்டிய வேலையிருந்தால் கவனித்து வெள்ளிக் கிழமையன்று கண்ணைத் திறக்கப் போகிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று தன் தீர்மானத்தைக் கவிஞரிடம் அவன் சொன்னான்.
“அப்படியே செய்யலாம். முருகக் கடவுளுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் பொருத்தந்தான்” என்று ஆமோதித்தார் கவிஞர்.
மறுநாள் தான் அமைத்த விக்கிரகத்தின் அழகை அணு அணுவாகப் பார்த்துப் பார்த்து உள்ளம் பூரித்துக் கொண்டு இருந்தான் சிற்பி எல்லா அங்கங்களும் தோஷம் சிறிதும் இல்லாமல் பரிபூரணமாக அமைந்திருந்தன. ஆனாலும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். இன்னும் ம் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கவனித்தான், அவன் லேசிலே திருப்தியடையும் சுபாவமுடையவனல்ல. திருப்பித் திருப்பிப் பார்த்து அடிக்கடி இழைத்து இழைத்துச் சிற்பங்களுக்கு. ஒளியூட்டுபவன் அவன். அவனுடைய பொறுமை சகிக்க முடியாத பொறுமை.
பார்த்துக்கொண்டே வந்தபோது விக்கிரகத்தின் மார்பில் இன்னும் சிறிது நகாசு செய்யலாமோ என்ற சந்தேகம் தோன்றிற்று. தடவித் தடவிப் பார்த்தான் நின்று பார்த்தான்; எழுந்திருந்து சிறிது தூரம் சென்று பார்த்தான். அங்கே கொஞ்சம் கை வைக்கத்தான் வேண்டுமென்று தோற்றியது.
வானம் சிறிது சிறிதாக இருண்டு வந்தது. மாலைக் காலமும் நெருங்கியது. பெரிய மழை வருவதற்குரிய அறிகுறிகள் உண்டாயின. ‘நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்’ என்று நினைத்தான். ‘நாளைக்குத்தான் கண் திறக்கப் போகிறோம். இன்றே மற்ற வேலைகளை முடித்துக் கொள்ளலாம்’ என்ற யோசனை பிறகு தோன்றியது. ஒரு விளக்கை ஏற்றிப் பக்கத்தில் வைத்துக் கொண்டான். உளியை எடுத்தான். “கொஞ்சம் பொறுத் திரு என்று ஏதோ ஒன்று அவன் மனத்துள்ளிருந்து சொல்லியது போல் இருந்தது. நெடுந் தூரம் நடந்து வந்தவனுக்குக் குறிப்பிட்ட இடத்தை அணுகும் போது தான் அவசரம் அதிகமாகும். அதைப் போல அவனுக்கும் அவசரம் தாங்க முடியவில்லை. ‘எல்லாவற்றையும் இன்றே முடித்துவிட வேண்டும்’ என்ற எண்ணம் தீவிரமாக எழுந்தது.
அவசரத்தில் ஏதோ ஓர் உளியை எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டான். வலது கையில் கத்தியை எடுத்து ஓங்கினான். “கடபுட தடபுட தடார்! கடகட தடார்! கடகட தடதட புடபுட தடார்'” என்று வானம் இடித்தது. அந்த இடியோசையும் முன்பே உள்ளத்தில் எழுந்த ஒலியும் அவனது நிதானத்தை இழக்கச் செய்தன. சுத்தி வேகமாக உளியின் மேல் விழுந்தது. குறி பார்த்து வைத்தும் இடக்கையில் உண்டான நடுக்கம் உளியை வேறு போக்கிலே திருப்பி விட்டது. “சலக்” என்ற சப்தம்; ஒரு சில் மார்பிலிருந்து பெயர்ந்து சிற்பி யின் முகத்திலே அடித்தது.
இடியோசையால் அவன் உடல் சிறிது நடுங்கியது; ஆனால் அந்தச் சில் பெயர்ந்த மெல்லோசையால் அவன் உயிரே நடுங்கியது. “ஹ!” என்று வீரிட்டுக் கத்திய படியே அவன் மூர்ச்சையாகி விழுந்து விட்டான்.
அதே சமயத்தில் மழையில் நனைந்து கொண்டு கவிஞர் உள்ளே புகுந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கச் செய்தது. படர்ந்து எரியும் விளக்கு, மார்பிலே வ டுப ட் ட விக்கிரகம்; அதன் அருகே சிற்பி மூர்ச்சை போட்டுக்கிடக்கிறான். அவன் நெற்றியில் இருந்து இரத்தம் வழிகிறது!
“இதென்ன!” – அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தம் நண்பன் நெற்றியை ஜலத்தால் துடைத்தார். முகத்தில் குளிர்ந்த ஜலத்தைத் தெளித்தார். அவன் மெல்ல விழித்துப் பார்த்தான்.
“என்ன அப்பா சங்கதி? இப்படி விழுந்து கிடக்கிறாயே!” என்று வினவினார் கவிஞர்.
“எல்லாம் போச்சு!” என்று குரல் அடைக்க விம்மி னான் சிற்பி, எழுந்து உட்கார்ந்தான்; பார்த்தான். தலை சுழன்றது. “இதற்காகவா என் உயிரைக் கொடுத்து இதைச் செய்தேன்! நான் பாவி. என்னை ஏன் பிழைப்பு மூட்டினீர்கள், அப்படியே இறந்து போக விட்டு விடுவது தானே!”
“என்னப்பா உளறுகிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்ன?”
“இங்கே பாருங்கள்: இந்த விக்கிரகத்தின் மார்பிலே பட்ட உளி என் இருதயத்திலும் பட்டு விட்டது. இது இனி மேல் எதற்கும் பிரயோஜனப்படாது; என் வாழ்விலும் உபயோகம் இல்லை. என்னையும் இதனையும் சேர்த்து எங்கேனும் புதைத்துவிடச் செய்யுங்கள்.”
“அட பைத்தியமே! இதற்குத்தானா இவ்வளவு அங்கலாய்க்கிறாய்? இந்த விக்கிரகம் பழுது பட்டதென்று நீ எண்ணாதே. நீ நாளைக்கு இதன் கண்ணைத் திறந்து விடு. உன் உளியால் செய்ய முடியாததை என் எழுத் தாணியால் செய்து விடுகிறேன்.”
“அப்படியென்றால்? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே!”
“இப்போது உன் மனம் குழம்பி யிருக்கிறது. பேசாமல் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு. நாளைக்குத் தெளிவிக்கிறேன்.
அவன் எப்படித் தூங்குவான்? “இனிமேல் மீண்டும் கண் விழிக்காத தூக்கந்தான் எனக்கு” என்று அவன் நொந்து கொண்டான்.
பத்து நாட்களில் சிற்பி அதே ஏக்கமாக இறந்து: விட்டான். அவனுடைய உயிரன்பர் க விஞர் அவனை எரிக்கக் கூடாதென்று தடுத்து விட்டார். அவனையும் அவனால் இயற்றப்பட்ட விக்கிரகத்தையும் ஓரிடத்தில் புதைத்தால் தான் அவனுடைய ஆத்மா சாந்தி அடையும் என்று அவர் சொன்னார். அப்படியே செய்தார்கள்.
புதைக்கும் போது கவிஞர் ஒரு மண் பானைக்குள் ஒரு சுவடியைப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்து,”இதை யும் சேர்த்துப் புதையுங்கள்’ என்று சொல்லி விட்டு, ”உன்னோடு நான் பழகினேன். இணையற்ற உன் கலைத் திறமையை உண்ர்ந்து இன்புற்றேன். உன்னை உலகம் மறந்து விட்டது. நான் மறக்கவில்லை. உன் சிருஷ்டியின் பெருமையை நீ உணரவில்லை. நான் உணர் கிறேன். நீ போய் விட்டாய். இப்போது புதைக்கப்படும் உன் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி விடும். ஆனால் நீ சிருஷ்டித்த இந்த அபூர்வ சிருஷ்டி ஒரு புதையலாகவே பூமி தேவியின் மடியிலே இருக்கும். நானும் மண்ணோடு மண்ணாய் மடிந்து விடுவேன். ஆனால் என்னுடைய சிருஷ்டியாகிய இந்தக் கவிதைத் தொகுதி உன்னுடைய சிருஷ்டியோடு சேர்ந்து புதையலாகவே இருக்கட்டும். நாம் சேர்ந்து வாழ்ந்தது போல் நம் சிருஷ்டிகள் இரண்டும் சேர்ந்து கிடக்கட்டும். ஆண்டவன் அருள் இருந்தால் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உலகத்தார் உள்ளத்தைக் கவரும் காலம் வந்தாலும் வரலாம். அப்போது வானலோகத்தில் இருக்கும் நாம் இருவரும் கண்டு கை கோத்துக் களித்து இன்புறுவோம்!” என்று புலம்பினார். அங்கிருந்த கூட்டத்தினர் அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்று எண்ணினார்கள்.
முந்நூறு வருடங்கள் சென்றன. குன்றுக்கருகில் ஊர் மறைந்து காடாகப் போய் விட்டது. அகஸ்மாத்தாக ஒரு மறவன் பூமியை வெட்டும் போது ஒரு திவ்ய விக்கிரகமும், சுவடியுள்ள
ஒரு பானையும் கிடைத்தன. அவன் இந்த அதிசயத்தை எங்கும் பரப்பினான். அரசன் காது வரைக் கும் அது சென்றது. அவன் தன் ஏவலாளர்களுடன் வந்து விக்கிரகத்தைப் பார்த்து வியப்பும் சந்தோஷமும் அடைந்தான். அந்தச் சுவடியை அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்தான். அந்தக் கிரியின் மகாத்மியத்தை உரைக்கும் புராணம் அது. முருகக் கடவுள் அந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளிப் பல திருவிளையாடல்களைச் செய்ததாகப் புராணம் விரிவாகச் சொல்லியதைக் கண்ட பக்தர்கள் குதூகலித்தனர். அறிஞர்கள் உடனே விக்கிரகத்தைப் பிரிதிஷ்டை செய்ய வேண்டுமென்று அரசனைத் தூண்டி னார்கள். புராணத்தில் “திருமால் சக்கரம் பெற்ற படலம் என்பது ஒரு பாகம். அதில் இருந்த கதை வருமாறு:
நாரத முனிவர் பிரமதேவரிடம் முருகக் கடவுளைத் திருமால் வழிபட்ட வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று விரும்ப அவர் கூறலாயினார்:
முன்பு தாரகாசுரனோடு திருமால் பொருத காலத்தில் அவ்வசுரன் அவரது சக்கராயுதத்தைக் கைக் கொண்டு தன் மார்பில் ஆபரணமாகத் தரித்திருந்தான். முருகக் கடவுள் அவ்வசுரனைச் சங்காரம் செய்த போது அவ் வாயுதத்தை எடுத்துக் கொண்டு தம் மார்பிற் பதக்கமாகத் தரித்தனர். அதனை உணர்ந்த திருமால் இந்த ஸ்தலத்தை அடைந்து முருகக் கடவுளை நோக்கித் தவம் புரியவே அக்கடவுள் எழுந்தருளி, “நீ வேண்டிய வரம் யாது?” என்று வினவினார். திருமால் பலபடியாகத் துதித்துச் சக்கராயுதத்தைப் பெற வேண்டுமென்ற தம் விருப்பத்தை உரைக்க முருகப் பெருமான் அதனைத் தம் மார்பில் இருந்து எடுத்து அளித்தனர். அதனைப் பெற்ற திருமால் அக்கடவுளைப் போற்றி வணங்கித் தம் இருப்பி சென்றனர்.
முருகக்கடவுள் சக்கராயுதத்தைத் தம் மார்பில் இருந்து எடுத்தமையால் அவ்விடத்திற் சிறிது பள்ளம் அன்று முதல் உண்டாயிற்று.
”மார்பகங் குழிந்த திருவடை யாளம்
வயங்கிய திவ்வுல கத்தில்
ஏர்பெற அதனைத் தெரிசனம் செய்தோர்
இடரொழிந் தின்பவீ டடைவார்.”
சிற்பியின் கனவு மெய்யாயிற்று; கவிஞரின் விருப்பம் நிறைவேறியது. இப்போது அந்தக் குன்றத்தில், ‘அடே அப்பா! கோபுரங்களென்ன, மதில்களென்ன, மண்டபங் களென்ன, குளங்களென்ன, தவச்சாலைகளென்ன, தர்ம சத்திரங்களென்ன – எல்லாம் இந்திரஜாலத்தால் சிருஷ்டிக்கப் பட்டவை போல்’ உண்டாகி விட்டன.
– 1932-42, கலைமகள்.
– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.