சிறைச்சாலை!





முன்னொரு காலத்தில் ஒரு குரு தன் சீடர்களுடன் வசித்து வந்தார். ஒருநாள் குரு அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டார் என்றறிந்தபோது, அவரது சீடர்கள் அதிர்ந்து போயினர். எப்பேர்ப்பட்ட ஞானி! அவரா இப்படி? ஒருக்காலும் இருக்காது. இது ஏதோ வீண்பழி! என்று தான் அவர்கள் நினைத்தனர். ஆனால், விசாரணையில், அந்தக் குரு தானே முன் வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
வேறு வழியின்றி நீதிபதியும் அவருக்கு சிறைத் தண்டனை விதித்துவிட்டார்.
வெளியே வந்த கொஞ்ச நாட்களில், வேறு ஒரு குற்றத்திற்காக மீண்டும் சிறை புகுந்தார் அந்தக் குரு. இப்படி அடிக்கடி சிறு சிறு குற்றங்கள் புரிவதும், சிறைச்சாலைக்கு அடிக்கடி செல்வதும் அவரது வழக்கமாகி விடவே, அவரைச் “சிறைச்சாலைக் குரு’ என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
“”குருவே! உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள். கொண்டு வந்து குவிக்கிறோம். ஏன் இப்படித் திருட வேண்டும்? அதுவும் சிறிய சிறிய பொருட்களை? போர்வையும், குடையும், பாதுகைகளும் நீங்கள் திருடக்கூடிய பொருட்களா?” என்று மனம் நொந்து கேட்பர். அந்தச் சமயங்களிளெல்லாம் குரு, சிரித்துவிட்டுச் சும்மா இருப்பார். சரி. இது ஒரு வகை மனோவியாதி போலும் என்று முடிவு கட்டினர் சீடர்கள்.
குருவுக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. உடல் தளர்ந்து படுத்த படுக்கையானார். ஒருநாள், அவரைச் சுற்றிச் சீடர்கள் கூடினர். “”இப்போதாவது உண்மையை சொல்லுங்கள். எதற்காக அப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டனர்.
“”அப்பா! நீங்களெல்லாம் நாகரிக உலகில் வாழ்பவர்கள். உங்களுக்கு நல்லவழிகாட்ட என்னைப் போல் ஏராளமான பேர் உண்டு. ஆனால், சிறையிலிருப்பவர்களுக்கு யாரிடமிருந்தாவது உபதேசம் பெறவோ, அதன் மூலம், நற்கதி அடையவோ வழியே இல்லையே! அதனாலதான் அடிக்கடி சிறை சென்றேன்.
“”இப்போது போய் பாருங்கள். அங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் திருந்தி நல்வழிப்பட்டு விட்டனர். என்னை விசாரித்த நீதிபதி நல்லவர். ஒவ்வொரு முறையும் எனக்கு ஆறு மாதத்திற்குக் குறையாமல் தண்டனை கொடுத்தார். அதனால் தான் என் பணியைச் சிறப்பாக என்னால் செய்ய முடிந்தது.”
ஞானிக்குச் சிறையும் குருகுலம்தான். தங்களது குருவின் இந்தச் செயல் சீடர்கள் மனதை மிகவும் உருக்கியது. குருவுக்குப் பிறகு உண்மையான அன்போடு தொண்டு செய்தனர்.
– ஜூன் 18,2010