சிறுவனின் புத்திசாலித்தனம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,623
ஒரு கிராமத்தில் புரோகிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூர்வீகமாக சிறிது நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு வரி செலுத்த வில்லை. அதனால் மாவட்ட ஆட்சியாளர் ஆணையின்படி, புரோகிதரை சிறையில் அடைத்தனர். புரோகிதரின் தந்தை இறந்து ஒருவருடம் ஆயிற்று. அந்த நினைவுக்காக, சமூக வழக்கப்படி, சடங்குகள் செய்வது வழக்கம்.
புரோகிதரோ சிறையில் இருக்கிறாரே எப்படிச் செய்வது?
“ஊராருக்கெல்லாம் நினைவுபடுத்தி, சடங்குகள் செய்வாரே, அவருடைய தந்தைக்குச் சடங்கு செய்ய முடியாமல் அவர் சிறையில் அடைபட்டுக் கிடக்கும்படி ஆயிற்றே” என்று
புரோகிதரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
புரோகிதருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுக்கு வயது பன்னிரண்டு. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.
விடிந்தால் சடங்கு நாள். தாயின் துக்கத்தையும், தந்தையின் நிலையையும் நினைத்து, இரவு முழுதும் தூங்காமலேயே யோசனை செய்தபடி இருந்தான் சிறுவன்.
விடியற்காலையில் எழுந்து, நடந்தே பத்து மைல் தொலைவில் இருந்த மாவட்ட ஆட்சியாளர் பங்களாவை அடைந்தான்.
ஆட்சியாளரின் காலடியில் விழுந்து வணங்கினான்; கண்ணீர் ததும்ப நிலமையைப் பணிவோடு கூறினான் சிறுவன்.
“உன் கோரிக்கையை ஏற்று உன் தந்தையை மூன்று நாள் மட்டும் விடுவிக்கிறேன். அதற்கு யாராவது ஜாமீன் கொடுக்க வேண்டும்” என்றார் ஆட்சியாளர்.
“ஜாமீன் கொடுக்க, எங்களுக்கு எவருமே முன்வர மாட்டார்கள். ஒரே ஒரு வழிதான் உண்டு. என் தந்தை திரும்பி வரும் வரையில் அந்த மூன்று நாட்களுக்கும் நான் சிறையில் இருக்கிறேன்” என்றான் சிறுவன்.
பன்னிரண்டு வயது சிறுவனிடமிருந்து கிடைத்த பதில் ஆட்சியாளரின் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது.
உடனே, ஜாமீன் இல்லாமலேயே, புரோகிதரை மூன்று நாட்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டார் ஆட்சியாளர்.
தந்தையும், மகனும் கிராமத்துக்கு விரைந்து வந்து, நடத்த வேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர்.
கிராம மக்கள் அனைவரும் சிறுவனைப் பாராட்டினார்கள்.
புரோகிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறை சென்றார்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.