மணிக்கொடி – சில சிந்தனைகள்

 

மணிக்கொடி, சிறுகதை வளர்ச்சியில் பெறும் இடம் கவனிக்கத்தக்கது. மணிக்கொடி காலம் என்ற நூலில், பி.எஸ்.ராமையா மணிக்கொடியால் சிறுகதை வளர்க்கப்பட்டது என்பதைக் காட்டுவார். கவிதை, விமர்சனம், கட்டுரை, நாடகங்கள் ஆகிய தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடியில் இடம் இருப்பினும், மணிக்கொடி என்றால் தமிழ்ச் சிறுகதை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்ற நீண்ட பட்டியல் தரப்பட்டாலும், அதனை மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். மணிக்கொடி சீனிவாசன், பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், கு.ப.ரா., இவர்கள் ஒரு பிரிவு. க.நா.சு., சி.சு.செல்லப்பா, தி.ஜா., சிட்டி, மெüனி, லா.ச.ரா., நா.சிதம்பர சுப்பிரமணியன் இவர்கள் இரண்டாம் பிரிவினர், றாலி போன்றோர் மூன்றாம் பிரிவினர்.

முதல் பிரிவினர், மணிக்கொடியின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்றவர்கள். இவர்களைத் தமிழ் உலகம் அறிந்துகொண்டபோதுதான், திட்டமிடப்பட்ட தமிழ்ச் சிறுகதையின் வடிவம், இலக்கணம், பாடுபொருள் என்பனவற்றில் தமிழ்நாட்டில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இவர்களை, தமிழ்ச் சிறுகதையின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் எனப் பார்ப்பது சரியாக இருக்குமே தவிர, விமர்சனப் பார்வைகொண்டு, இவர்கள் கலை அல்லது வாழ்க்கை என்ற குறிக்கோளுடன் எழுதியவர்கள் எனக் கூறுவது தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி பற்றி எழுதுவதற்குத் தடையாக இருக்கும்.

இவர்களைப் பார்த்து எழுதியவர்கள் அல்லது மணிக்கொடி எழுத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்போர், சிறுகதை போன்ற படைப்பு இலக்கியங்களை எழுதியதுடன், முந்தைய மணிக்கொடி எழுத்தாளர்கள் கதைகளையும், தங்கள் கதைகளையும், தங்கள் சமகாலத்து மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகளையும், கல்கி போன்ற பிற எழுத்தாளர்களைப் பற்றிப் பேசியும், அந்தப் படைப்புகளைத் திறனாய்ந்தும் வந்தனர்.

இந்த நாள்களில் மேல்நாட்டுத் திறனாய்வுக் கொள்கைகள் படிக்கப்பட்டன. எனவே, விமர்சனமும் அதனுடைய பல்வேறு விமர்சனப் போக்குகளும் வளரத் தொடங்கின. கலை, அழகியல், சமுதாய இயல் போன்ற கோட்பாடுகளும் மற்ற திறனாய்வுப் போக்குகளும் எல்லா படைப்புகளிலும் செலுத்தப்பட்டன. பாரதி பற்றி வ.ரா., கு.ப.ரா., புதுமைப்பித்தன், கல்கி போன்றவர்களின் விமர்சனக் கட்டுரைகள் அக்காலத்தில் பெரிதும் பேசப்பட்ட விமர்சனங்களாகும்.

மணிக்கொடி எழுத்தாளர்களுள் பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், கு.ப.ரா., பற்றி சில கருத்துகள்:

பி.எஸ்.ராமையாவின் படைப்பு – சிறுகதை வடிவம், கதை சொல்லும் வடிவம் எனப்படும். நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டே கதை மாந்தர்களை அதற்கேற்ப வளர்த்துக்கொண்டும் கதையின் நெளிவு சுளிவுகள், ஏற்ற இறக்கங்களோடு கதையைச் சொல்லிக்கொண்டு போவது, கதை சொல்லும் வடிவமாகும். இந்த வடிவத்தை பி.எஸ்.ராமையா போலவே மிக லாவகமாகக் கையாண்டவர் தி.ஜானகிராமன்.

புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கணம், வடிவம், பாடுபொருள் பற்றி சோதனை முயற்சிகள் செய்தவர் இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய சிதம்பர ரகுநாதன், புதுமைப்பித்தன் சென்னை வந்தபோது சாப்பாட்டுக்கு அவரிடம் தரப்பட்ட சிறு பணத்தைக்கொண்டு மேலை நாட்டின் சிறுகதை நூல்கள் வாங்கி, இரவோடு இரவாகப் படித்தார் எனக் கூறுவதை எடுத்துக்காட்டி, மேலை நாட்டின் சிறுகதை படிப்பே புதுமைப்பித்தன் சிறுகதைகளுக்குப் பயிற்சித் தளமாக அமைந்தது எனக் கூறலாம்.

புதுமைப்பித்தன் சிறுகதைகளில் கயிற்றரவு, துன்பக்கேணி, பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என நான்கு வேறுபட்ட கோணங்களைக் காணலாம். இவருடைய ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு தன்மையுடையது. ஒன்றுபோல் பிரிதொன்று இல்லை. புதுமைப்பித்தனிடம் காணப்படும் இந்த ஆற்றல் பின்பு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடம் காணப்படவில்லை.

கு.ப.ரா.வின் சிறுகதைகள் புதுமைப்பித்தன் கதைகள் போலவே சிறுகதை வளர்ச்சிக்குத் துணை புரிந்தன. ஆனால் அவை, கு.ப.ரா.வின் சோதனை முயற்சிகள் எனக் கூறமுடியாது. கு.ப.ரா.வின் கதைகளில் அழகியல் கோட்பாடுகள் எனக் கூறுவதைவிட காதல் உணர்வுகளும் காதல் ஏமாற்றங்களுமே மிகுதி. கலை, அழகு, உணர்ச்சி என்ற எண்ணம் கு.ப.ரா.விடம் உண்டு. கலை பற்றிய அவருடைய விமர்சனக் கருத்துகளும் அக்காலத்தில் மிகுதியாகவே உண்டு. ஆனால், கலையில் சமுதாயப் பார்வை கூடாது என்பன போன்ற சுத்த சுயமான கலை கோட்பாடுகள் அவரிடம் காணப்பட்டன எனக் கொள்வதில் இடர்பாடுகள் மிகுதி.

“கலை கலைக்காகவே; கலை வாழ்க்கைக்காகவே’ என்ற கோட்பாடுகள் 50-களில் தமிழ் விமர்சனத்தில் இடம்பெற்றன. க.நா.சு., சி.சு.செல்லப்பா, லா.ச.ரா. இவர்கள் இந்தப் பிரிவினர். க.நா.சு. தன்னைச் சுற்றி இலக்கிய வட்டமே தோற்றுவித்து வளர்த்தார். லா.ச.ரா., கலை பிறவற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாட்டம் உடையவர். 70-களில் சென்னையில் நடந்த ஓர் இலக்கிய விவாதத்தை இங்கு நினைவுகூரலாம்.

வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்த காலம். எழுத்தாளர்களுள் பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட இலக்கியவாதிகள் பலர் உருவான நேரம். லா.ச.ரா. தம் படைப்புப் பற்றி ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். கார்க்கி என்ற பொதுவுடைமைத் தாக்கம் கொண்ட திறனாய்வாளர் ஒருவர் லா.ச.ரா.விடம், “”உங்கள் கதைகளில் வியட்நாம் போர் பற்றிய தாக்கம் ஏன் இல்லை?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு லா.ச.ரா., “”வியட்நாம் போர் என்னை பாதிக்கவில்லை. ஆனால், எதிர்வீட்டில் வெளியே நின்ற ஓர் அழகான பெண், தலைமுடியைத் தன் கை விரல்களால் அளைந்து கொண்டிருந்த காட்சி என்னை பாதித்தது. அதுவே என்னை ஒரு படைப்பு செய்யத் தூண்டியது. என்னை பாதித்ததைதான் நான் சொல்லமுடியும்” எனக் கூறிமுடித்தார். கலை, அழகுணர்ச்சி, கலைக்குப் பிறப்பிடம், மற்றொரு கலையே தவிர போர் அல்ல என்பது அவர் வாதம்.

மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி என்ற மூன்று இதழ்களைப் பற்றியும் நூல்கள் வெளிவந்துள்ளன. சரஸ்வதி தவிர மற்ற இரண்டு நூல்களைப் பற்றி எழுதியவர்கள் அந்த இதழ்களோடு பெரிதும் தொடர்புடைய பி.எஸ்.ராமையாவும் சி.சு.செல்லப்பாவும் ஆவர். இந்த நூல்களில் அக்கால தமிழ்ப் படைப்புகள், படைப்பாசிரியர்கள் பற்றிய செய்திகளை முதல் தரவாகவே காணலாம்.

எழுத்தாளர்களுள் வெகுஜன இதழ் படைப்பாளிகள் இலக்கியப் படைப்பாளிகள் என இரு பிரிவைக் காணலாம். தொடக்க கால மணிக்கொடி எழுத்தாளர்கள் வெகுஜன படைப்பாளிகள் அல்ல. பலரும் சுந்த சுயமான இலக்கியவாதிகளே ஆவர். இவர்களுள் பலரும் சிறுகதை, நாவல், கவிதை என்ற பிரிவுகளில் சோதனை முயற்சிகள் செய்தவர்கள்.

பிறநாட்டு சாத்திரங்களைப் படித்து அதுபோலவே எழுத முன் வந்தனர். இவர்கள் மீது தேவையில்லாத முறையில் விமர்சனப் பார்வை செலுத்துவதை சற்றுத் தள்ளிவைக்க வேண்டும்.

– இரா.இராமலிங்கம் (ஜூன் 2011)

நன்றி: http://www.dinamani.com/tamilnadu/article771158.ece

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *