சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா

 

சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A short fictional narrative in prose.  வேறு எந்த வரைமுறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது. சிறுகதைகளில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதை அல்ல; பஸ் டிக்கெட். ஒரு வாரம் அல்லது ஒரு வருஷம் கழிந்தோ அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறு கதைகளில் உள்ள பொதுவான அம்சம்

சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.

சிறுகதையின் இலக்கணம் இப்படி இருக்கலாம்:

  1. சிறுகதை என்றால் அளவில் சிறியதாய்  முழுமை பெற்று இருக்க வேண்டும்
  2. தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.
  3. சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.
  4. அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.
  5. விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.
  6. குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
  7. பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.
  8. சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.
  9. நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை.

ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி – இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

மற்றவர்கள் சொல்லுவது:

வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனைப் பொறி தான் சிறுகதை. அது 10000 வார்த்தைகளுக்குள் அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம்  என்கிறார். எச் ஜி வெல்ஸ்.

ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச் சொல்லும் கற்பனை சிறுகதை என்கிறார். சாமர்ஸெட் மாம்.  அது துடிப்போடு மின்னலைப் போல் மனதோடு இணையவேண்டும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சீராக  கோடு போட்டது போல்  செல்ல வேண்டும் என்கிறார்.

ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவது சிறுகதையாகும்.

தி.ஜானகிராமன் சிறுகதை எழுதுவது பற்றி இப்படிக் கூறுகிறார்:

ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக் கொண்ட விஷயம் உணர்வோ சிரிப்போ புன்சிரிப்போ நகையாடலோ முறுக்கேறிய துடிப்பான ஒரு கட்டத்தில் தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும் ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ளவேண்டும். தெறித்து விழுவது பட்டுக் கயிராக இருக்கலாம் அல்லது  எஃகு   வடமாகவோ பஞ்சின் தெறிப்பாகவோ குண்டு மருந்தின் வெடிப்பாகவோ இருக்கலாம்.

தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத் துணை நின்றவை, தமிழில் வெளிவரும் வார, மாத இதழ்களே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தப் படைப்பிலக்கியம் இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சுஜாதா பக்கம் – கல்கி – 23–6-1996

சாகித்திய அகாதமிக்காக சி.ஆர்.ரவீந்திரனும் அகிலன் கண்ணனும் தம் சிறுகதைகளை வாசித்த கூட்டத்தில், சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி தலைமை உரைக்க அவகாசம் கிடைத்தது.

எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட | கதை- A short fictional narrative in prose. வேறு எந்த வரையறைக்குள்ளும் தவீன சிறுகதை அடங்காது. நல்ல சிறுகதை என்பது சிறிதாக, சிறப்பாக உரை நடையில் விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால் சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லப்பட வேண்டும் என்று குத்துமதிப்பாக வைக்கலாம். நூறு பக்கம் இருந்தால் அதை சிறுகதை என்று ஒப்பு கொள்ள தயக்கமாக இருக்கும். அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதையல்ல, கதைச்சுருக்கம். நான்கு வரிகளுக்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லிவிடலாம். இந்த அளவு வரையறை கூட தேவையில்லை என்று நவீன விமர்சகர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக ஜாய்ஸின் ‘யுலிரிஸ்’ஸை ஒரு சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். கதை தேவையா என்பதையும் சந்தேகிக்கிறார்கள். ஆர்வெல்லின் A Hanging என்னும் கட்டுரையை ஒரு சிறுகதையாகப் பார்க்கிறவர்களும் உண்டு.

கதை சிறப்பாக இல்லை என்றால் அதை மறப்பார்கள். ஒரு சிறுகதை ஜீவித்திருக்க, அது சிறப்பாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம். நூற்றாண்டு காலத்தையோ, சில நிமிஷங்களையோ சொல்லலாம். கறுப்போ, சிவப்போ ஏழையோ, பணக்காரனோ வயசானவர்களோ, இளைஞர்களோ வியாதியஸ்தர்களோ, தர்மகாத்தாக்களோ மீசைக்காரர்களோ, மீன் பிடிப்பவர்களோ பஸ் பிடிப்பவர்களோ, சினிமா பார்க்கிறவர்களோ, நாய் வளர்ப்பவர்களோ, பாய் முடைபவர்களோ விஞ்ஞானிகளோ, வேதாந்திகளோ எந்த கதாபாத்திரமும் தடையில்லை. மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம். அப்படி ஒரு விஞ்ஞானக்கதை இருக்கிறது. கண்ணீர் வர சொல்லலாம் சிரிக்கச் சிரிக்க, சொல்லலாம். கோபம், ஆர்வம் வர வெறுப்புவர…ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதையில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பொது அம்சம்தான் உண்டு. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது கதையல்ல, பஸ் டிக்கெட். ஒரு வாரம் கழித்தோ ஒரு வருஷம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ, மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை

நாள் 1970களில் எழுதிய சிறுகதைகளை இப்போது யாராவது நினைவுவைத்துக் கொண்டு சொல்லும் போது எனக்கு வேறு எந்த சான்றிதழும் அவார்டும் தேவையில்லை. நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவசரங்களையும் கடக்கின்றன.

ஒரு கதை உங்களை பாதித்திருந்தால் ஒரு மாதம் ஏன், ஒரு வருஷம் விட்டுக் கூட அதை நீங்கள் திருப்பிச் சொல்ல முடியும். இது உங்கள் ஞாபகப் பிரச்னை அல்ல. கதையின் பெயர்கள், இடம், பொருள், ஏற்பாடெல்லாம் ஞாபகம் இராது. ஆனால் கதையின் அடிநாதம் அதில் பாதித்த ஒரு கருத்தோ, வரியோ நிச்சயம் நினைவிருக்கும். அப்படி இல்லையென்றால் அந்தக் கதை உங்களைப் பொறுத்தவரையில் தோல்விதான்.

இதே விதிதான் கவிதைக்கும். இதேதான் நாவலுக்கும், ஒரு வாசகன் தனக்குப் பிடித்தமான எழுத்தாளனை ஒரு நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அவன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது. கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகனால் தன் மனத்தில் மீண்டும் வாழ முடிகிறது. அந்த எழுத்தாளன் அந்த வாசகனின் வாழ்வின் குறையை எதோ ஒரு விதத்தில் நிரப்புகிறான்.

நல்ல கதைகளை அலசிய ஹெல்மட் பான் ஹைம் என்பவர் அவற்றுக்குச் சில அடையாளங்கள் சொல்லியிருக்கிறார். சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்துக்கு முன் கதையின் தொண்ணூறு சதவிகிதம் நடந்து முடித்திருக்கும். இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதாவது சிறுகதை, முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் கதை, பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன, வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி முடிகின்றன; அல்லது கேள்விக் குறியில்…

ஃப்ராங் ஓ கானர், சிறுகதை, ‘சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் தனிமையைப் பற்றிய கதை’ என்கிறார். சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது என்றும் அன்றாட அலுப்பு வாழ்க்கையில், உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும் என்றும் அந்தக் கணத்தை ஒரு ரெவலேஷன் வெளிப்பாடு அல்லது Epiphany அவதாரம் அல்லது அற்புதத் தோற்றம் என்றும் பலவாறு சொல்கிறார்கள்.

அன்று சிறுகதை படித்த சி.ஆர்.ரவீந்திரன், சிட்டி ஒரு முன்னுரையில் ‘சிறுகதை ஒரு அற்புதக் கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்’ என்று சொன்னதைக் குறிப்பிட்டார். அதுவும் சரியே.

3 thoughts on “சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா

  1. லாண்டரி பில்லே கூட கதைக் கருவாகலாம் என்பது சுஜாதா அவர்களின் கருத்து. அவர் அப்போது கூறிய சில அட்வைஸ் இப்போதும் பொக்கிஷம் எனலாம்.
    1. எழுத்தாளர் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்
    2. காதில் விழும் ஒரு சில செய்திகளும் கதைக் கருவாக்கிக் கொள்ள முடியும்
    3. கதைக்கான கருவை மனசில் பதித்துக் கொள்ள வேண்டும்
    4. அசை போட வேண்டும்.
    5. கற்பனை, யதார்த்தத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
    6. கதையின் பாதிப்பை சுயமாக உணர வேண்டும்

  2. மிக சிறந்த முயற்சி. அருமையாக இருக்கிறது. வாழ்க, வெல்க, தொடர்க உமது அரும்பணி. அறந்தை மணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *