உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன.
இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து, கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில், ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில், எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான்.
நாவல், நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான்.
சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன? எப்படியிருக்க வேண்டும்?
ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு, ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப்பாற்பட்டதாக செகாவின் சிறுகதைகள் நுண்ணிய விவரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வந்து விழ, முடிவுறாத கோர்வையாக, நடக்காத ஒரு காரியமாக நின்றுவிடும். முடிவுறாத கோர்வையும், நடக்காத காரியமும், செயல்படாத செய்கையும் சிறுகதைதான்; சம்பவக் கோவையும் திருப்பமும் சிறுகதைதான்; உருட்டித் திரட்டி வைத்த மெருகேற்றிய அந்த முத்து உருவமும் சிறுகதைதான்.
மூன்றும் சிறுகதைதான் என்று சொல்கிறபோது, மூன்று சிறுகதைப் பாணிக்கும் பொதுவான ஒரு அம்சம் தெரிகிறது. அதுதான் மூன்று பேருடைய கதைகளிலும் ஓடுகிற ஒற்றைச்சரடு. அது ஒரு பாவமோ, ஒரு கோபமோ, ஒரு ஆத்திரமோ, ஒரு செயலோ, ஒரு குணாதிசயமோ ஒன்றாகப் பரவி ஓடிக் கடைசிவரை நீடித்திருக்கிறது சிறுகதையிலே என்று சொல்லலாம். அந்த ஒரு சரடுதான் மையக் கரு சிறுகதைக்கு.
அப்படியானால் மையக் கருத்து, சரடு ஒன்று காவியத்துக்குக் கிடையாதா, நாடகத்துக்குக் கிடையாதா, நாவலுக்குக் கிடையாதா என்று கேட்கலாம். உண்டு. ஆனால் நாவலாசிரியனும், காவியாசிரியனும் அந்தச் சரடைவிட்டு வெகு தூரம் நகர்ந்து உல்லாஸமாகப் போய்த் திரிந்து வரலாம். சிறுகதாசிரியன் அப்படிச் செய்யமுடியாது. பாவ ஒருமைப்பாடும், ஆழமும் போய்விடும் அந்த மையக் கருத்தைவிட்டு அவன் நகர்ந்துவிட்டால்.
கதையில் ஒன்று – ஒரே ஒன்று – ஒரு கருத்து, ஒரு பாவம் அல்லது ஒரு குணசித்திரம்தான் – மையக்கருத்தாக இருக்கவேண்டும். அதைவிட்டுச் சிறுகதாசிரியன் அதிகம் விலகக்கூடாது என்று சொன்னேன்.
அத்தோடு சேர்த்துக்கொள்ளவேண்டியது இதையும் – கதை என்பது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு மனோபாவமாக இருக்கலாம். ஒரு உள்ளப்போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வரையில், சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது – வேறு என்ன பிறந்தாலும்.
இலக்கியத்தில் எந்தத் துறையிலானாலும் சரி, ஒரு உருவம் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி நகருகிறது என்பது வெளிப்படை.
அந்த முடிவு சாதாரணமாக நாவலில், காவியத்தில், நாடகத்தில் முதலில் வெளியாகாமல் இருக்கலாம். ஆனால் சிறுகதையில் முதல் வாக்கியத்திலேயே, சில சமயம் முதல் வார்த்தையிலேயே வெளியாகிவிடும். பின்னர் வருகிற ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தையும் இந்த முடிவு நோக்கி நகரும் காரியத்தைத் தெள்ளத் தெளியச் செய்யவேண்டும். அப்போதுதான் நல்ல சிறுகதை தோன்றுகிறது.
ஆரம்பம், நடுவு, முடிவு முதலியனவும், இடைப்பாகங்களும் சரியாகப் பொருந்தியுள்ள சிறுகதைகளை நல்ல உருவம் பெற்றவையாக நாம் போற்றுகிறோம். ஆனால் சில ஆசிரியர்களின் சிறுகதைகளிலே, முக்கியமாக செகாவ், ஸரோயன் போன்றவர்களின் கதைகளிலே – ஆரம்பம், நடு, முடிவு தெரியாதபடி செய்திருக்கிறார்கள். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறவர்கள் மாதிரிச் செய்து சட்டென்று முடித்துவிடுவார்கள். செகாவின் கதைகள் முடிந்துவிட்ட பிறகும்கூட முடிவு கண்டுவிட்ட மாதிரித் தோன்றாதபடி, தொடர்ந்து நடக்கிற மாதிரிச் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஒரு விஷயத்திலேனும் ரவீந்திரநாத் தாகுர் இந்தியச் சிறுகதைக்கு ஒரு இந்திய உருவம் தந்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். ஆதிமத்யாந்தரகிதமான சர்வேசுவரனை நினைவூட்டும் – அற்புதமாக நினைவூட்டும் பல சிறுகதைகளைத் தாகுர் எழுதியிருக்கிறார்.
இந்த ஆரம்ப – நடு – முடிவற்ற தன்மை ஏதோ அநாயாசமாகப் பிரக்ஞையில்லாமல் வந்துவிடுகிற விஷயம் அல்ல. செகாவிலும் சரி, தாகுரிலும் சரி – கலையை மறைக்கும் அந்தக் கலை எளிமையுடன், முழுப் பிரக்ஞையுடன் வருவதுதான்.
மனிதனுடைய நடத்தையும் லக்ஷியமும் ஏணியின் கால்கள்போல என்றும் ஒன்று சேராத இரட்டைக் காலில்தான் நடக்கிறது என்பதை அறிவுறுத்துகிற புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ தமிழுக்குத் தனியாக வந்து வாய்த்த ஒரு சிறுகதை உருவம். ராமனானால் என்ன? அகல்யையானால் என்ன? இருவரும் மனிதர்கள்தானே! இதே அளவில் ‘அன்றிரவு’ம் சிறப்பாக வெற்றி கண்ட கதை புதுமைப்பித்தன் இலக்கியத்திலே. ஆனால் அது பழசை ஒட்டி எழுந்தது. ‘சாப விமோசனம்’ புதுமையை ஒட்டி எழுந்தது.
உருவம் என்று காணமுடியாத உருவத்தை மெளனி, தமிழ்ச் சிறுகதையில் சிறப்பாகவே செய்திருக்கிறார். ந. பிச்சமூர்த்தி அவர்களும், லேசாகப் பல விஷயங்களைச் சொல்லி, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை எட்டி விந்தை புரிபவர். மற்றப்படி கு. ப. ராஜகோபாலன், சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்கள் சாதாரணமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய உருவங்களையே கையாண்டவர்கள். சி.சு. செல்லப்பா கதைக்கு உருவத்தைவிடச் சூழ்நிலையே முக்கியமென்று எண்ணுவது அவர் சிறுகதைகளிலிருந்து தெரியும்.
சிறுகதையில் மற்றொரு அம்சமான நீளம் என்பதும் உருவத்தில் ஒரு பகுதியாகவே, இவ்வளவுக்கும் பிறகு, தோன்றிவிடும். எடுத்துக்கொண்ட ஒருமையைக் கலைக்காமல், எவ்வளவு தூரம் ஓடிக் கதை தானாக நிற்கிறதோ அதுவே அதன் நீளம். ஒரு பக்கத்திலிருந்து இருநூறு பக்கங்கள் வரையிலும் சிறுகதைகள் இருக்கலாம்; மேலும் இருக்கலாம்தான். ஆழ்ந்து ஒருமைப்பட்ட சூழ்நிலையும் விவரணங்களும், பகைப்புலமும் சிலவிதக் கதைகளுக்குத் தேவைப்படுகின்றன. ஹெமிங்வே பல சம்பவங்களைச் சொல்லி ஒரு நிகழ்ச்சியில், கதையின் ஒருமைப்பாடு கெடாமல் முடிப்பார். இதெல்லாம் ஆசிரியருடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்று சொல்லவேண்டுமே ஒழிய தனியாகச் சொல்லித் தெரியாது.
எல்லா இலக்கியத் துறைகளுக்கும் போலவே, சிறுகதைக்கும் தனி இலக்கணம் சொல்ல முடியாது. எந்த இலக்கிய சிருஷ்டியுமே இலக்கணத்தை மீறிய ஒரு செய்கை.
ஒவ்வொரு சிறுகதையும் ஒரு தனி உலகம் – அது ஒரு தனி கலை உலகம். அதிலே சாதிகள் என்றோ, கட்டுப்பாடு என்றோ ஒன்றும் கிடையாது. ஒன்று. ஒன்று ஒன்றுதான் முக்கியம் என்று செய்யப்படுவதுதான் சிறுகதை.
(சிறு குறிப்புகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
சிறப்பான விளக்கம். சிறுகதை எழுத விரும்புவோர் படிக்க வேண்டிய ஒன்று.
இதை வெளியிட்ட
சிறுகதைகள். காம்க்கு நன்றி.
ஜூனியர் தேஜ்