சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் பற்றியது ஒரு சிறு சம்பவம் ஒரு மனோநிலை ஆகிய இவற்றை எடுத்து எழுதுவது, சிறுகதையில் முக்கிய சம்பவமோ நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ, அது ஒன்றாக இருக்க வேண்டும்.
சில சமயங்களில் ஒரோர் சிறுகதை நூறு பக்கங்களுக்கு மேல் போகலாம், உதாரணமாக மேனாட்டில் ஆங்கில சிறுகதைகள் பிரெஞ்சு கதைகளிலும், ருஷ்ய கதைகளிலும் சுருக்கமாக விஷயத்தை புதிய மாதிரியில் எழுதப்படுகிறது. ஆங்கில நாட்டு கால்ஸ் வொர்த்தி, ஹார்டி, பிரெஞ்சு மொப்பஸான், அன்தோலி பிரான்ஸீ முதலிய சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதை என்ற இலக்கியப் பகுதியை மிகவும் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்கள்.
சிறுகதை என்பது வாழ்க்கையில் சிறிய சாரளங்கள் .இதற்கும் நாவலுக்கும் வித்தியாசம் நாவல் வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன் கொந்தளிப்புகளுடன் அப்படியே சித்தரிக்க முயலுகிறது. சிறுகதை ஒரு சிறு சம்பவத்தை தனித்த விஷயத்தை எடுத்து ஆளுகிறது என்பது தான்.
என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்தவிதத்தை சொல்வது என்றால் ரிஷி மூலம் நதி மூலம் காணுகிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம் வேறு சில அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு காரியம் கை கூடாது போது எழுதப்பட்டிருக்கலாம்.
இதனால் சுயமாகக் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறவனுக்கு இன்னதான் இந்த கதையை எழுதத் தூண்டியது என்று சொல்வது எளிதல்ல. கேட்டதால் தோணித்து எழுதினேன் என்று தான் சொல்ல வேண்டும்.
நான் கதை எழுதுவதற்கு நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. இதை நான் ஸ்பஷ்டமாகச் சொல்ல வேண்டியதில்லை. நான் முன் விவரித்த உதாரணங்களே போதும் என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணுறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும்.
அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்போழுதும் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள் நான் அப்படியல்ல ஞாபக மறதிக்கு அரிய வசதி அளிப்பேன். அதையும் தப்பி வந்தவைதாம் புதுமைப் பித்தன் கதைகள் என்ற கோவையும் பிறவும் ஆனால் ஒன்று எடுத்து ரூபத்தில் அமையும் வரை மனசில் உறுத்திக் கொண்டு கிடக்கும் நிலையில் இந்தக் கதைகள் யாவும் இவற்றைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை எழுதி முடித்த பிறகு அவைசற்று ஏமாற்றத்தையே அளித்து வந்திருக்கின்றன. ஆனால் ஏமாற்றம் வெகுநேரம் நீடிப்பதில்லை.
இதுவரை நீங்கள் வாசித்தது அமரர் எழுத்தாளர் சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன், ‘ ஊழியன் ‘ எனும் சஞ்சிகையில் கட்டுரையாக எழுதியது.
– நன்றி (http://gururadhakrishnan.blogspot.com/2011_06_01_archive.html)
Very useful information about shortstories in Tamil language.