சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று, காலந்தோறும் அதன் வரையறைகளையும் எல்லைகளையும் விரித்தும் சுருக்கியும் மாற்றியும், பரோட்டா மாவு பிசைகிறாப்போல எதாவது உருட்டிப் புரட்டிக்கொண்டே வருகிறார்கள். ஒரே விஷயத்தை மையமிட்டு அது இயங்க வேண்டும் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. அதிகபட்சம் 30 நிமிடங்களில் வாசித்து முடிக்கக் கூடிய புனைவு வடிவம் அது, என்று கூட ஒரு இலக்கணம் கொண்டுவந்தார்கள். சுமார் 120 பக்க அளவிலான எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ ஒரு சிறுகதையே என்று வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். பக்க அளவு, வாசிக்கிற கால அளவு எல்லாம் தாண்டி, அது ஒரே விஷயத்தை மையமிட்டு மையத்தைவிட்டு விலகாமல் இயங்குகிற ஒரு தளத்தில் கட்டுக்கோப்புடன் அமைய வேண்டும். எனவும் ஒரு கோஷ்டி உண்டு. எதோ ஒரு ஒருமை, கால ஒருமையாகவோ, நினைவு ஒருமையாகவோ, செய்தி ஒன்றினைச் சுற்றியே ஒட்டியும் வெட்டியும் எனவோ அமைவதும் சிறுகதை என்று காலம் அதை மாற்றிச் சொல்ல வைத்திருக்கிறது. ஒரு வடிவம் அதன் வெளிப்பாட்டு முறையில் பழகியதும், தானே புதிய தளங்களுக்கு வடிவங்களுக்கு மாறிக் கொள்வதை அவதானிக்கலாம். செய்யுள், கவிதை சட்டென்று வசனகவிதை என்று புதிய கிளை விட்டாப்போல, அடுத்து புதுக்கவிதை என்று வடிவம் மாற்றிக் கொண்டாப்போல காலம் எதையாவது நிகழ்த்திக் கொண்டேதான் வந்திருக்கிறது. முழுக்கைச்சட்டை, அரைக்கைச்சட்டை, அட கையே இல்லாத ரவிக், ப·ப் வெச்ச பிளவுஸ்… எல்லாம் ஒண்ணுமாத்தி ஒண்ணு வரும். திரும்ப முதல் ஐட்டமே கொடியேத்துவதும் உண்டு.
ஞானக்கூத்தன் எனக்குச் சொன்னது இது. சிறுகதை என்றால் என்ன என்று மாதிரிக்கதை வடமொழியில் இருக்கிறது. ஆங்கிலத்திலும் மாதிரிக்கதை என ஒன்று கேள்விப்பட்டிருக்கிறேன் – தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் ஒளவை நடராசன் சொன்னது. அதை அடுத்துப் பார்க்கலாம். முதலில் வடமொழிக் கதை.
ஒரு ஊரில் ஒரு மோசமான பாடகன் இருந்தான். சகிக்க முடியாத குரலில் அவன் அதிகாலையிலேயே எழுந்து அசுர சாதகம் செய்தான். அவன் வீட்டுக்கு எதிரே முருங்கைமரம் ஒன்று. வேதாளம் ஒன்று அதில் குடியிருந்தது. காலையிலும் மாலையிலும் அந்தப் பாடகனின் தொந்தரவு அதனால் சகிக்க முடியாமல் இருந்தது.
பாடகனுக்கு ஒரு நண்பன் இருந்தான். வேதாளம் அந்த நண்பனிடம் போய், என்னால் இவனைத் தாள முடியவில்லை. எப்படியாவது இவனை இந்த இடத்தை விட்டுக் காலிசெய்யச் சொல், அதற்குப் பிரதியுபகாரமாக, நான் போய் இந்த நாட்டு ராஜகுமாரியைப் பிடித்துக் கொள்கிறேன். எந்த வைத்தியன் வந்து, யார் விரட்டினாலும் நான் போக மாட்டேன். நீ வந்தால் போய்விடுகிறேன். ராஜா உனக்கு நிறைய வெகுமதிகள் தருவார், அதை வைத்துக்கொண்டு நீ சந்தோஷமாக வாழலாம், என்றது.
நண்பன் ஒத்துக்கொண்டான். சொன்னபடி, எதையோ பேசிச் சமாளித்து, அந்தப் பாடகனை வீடுமாற வைத்துவிட்டான். வாக்கு தவறாமல் வேதாளமும் போய் ராஜகுமாரியைப் பிடித்துக் கொண்டது. அந்த வேதாளத்தை ஓட்ட ராஜா அரண்மனை வைத்தியரை அழைத்துப் பார்த்தான். முடியவில்லை. நாடெங்கிலும் தண்டோரா போட்டு வைத்தியர்களையும் மந்திரவாதிகளையும் அழைத்துவந்து பார்த்தான். வேதாளம் ராஜகுமாரியை விட்டு நகர்வதாய் இல்லை. பிறகு இந்த நண்பன் போனான். அவன்போய் நின்றகணம் வேதாளம் இறங்கிப்போய் பக்கத்து நாட்டு இளவரசியைப் பிடித்துக் கொண்டது.
ராஜாவுக்கு ரொம்ப சந்தோஷம். பெரும் வெகுமதிகள் கொடுத்து அவனை கெளரவித்தனுப்பினான். நண்பனின் புகழ் நாடெங்கிலும், நாடுதாண்டியும் பரவிவிட்டது.
பக்கத்து நாட்டு ராஜா இப்போது என்ன செய்ய என்று திகைத்தான். அவன் நாட்டிலும் எந்த விதத்திலும் அவனால் அந்த வேதாளத்தை விரட்ட முடியவில்லை. உடனே அவன் இந்தநாட்டில் வேதாளத்தை விரட்டிய நண்பனை சகல ராஜமரியாதைகளுடனும் அழைத்து வரச்சொன்னான்.
நண்பனுக்கு பயம் வந்துவிட்டது. ஆனாலும் அரசகட்டளை, வேறு வழியில்லை அல்லவா? பக்கத்து நாட்டு அரண்மனைக்குப் போனான். அவனைப் பார்த்ததும் வேதாளம் ரொம்பக் கோபப்பட்டது. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு ஒருமுறை நான் உனக்கு உதவி செய்தேன். நீ எனக்குச் செய்த உதவிக்கு, நான் கைம்மாறு செய்துவிட்டேன்.
நான் உனக்கு இம்முறை உதவப் போவதில்லை, என்றது வேதாளம். இப்படி ஒவ்வொரு இடத்துக்கும் நீ என்பின்னால் வந்தால் நான் எங்குதான் எப்படித்தான் வாழ்வது? நான் உனக்கு உதவ மாட்டேன், என்றது வேதாளம்.
அப்போது நண்பன் சொன்னான் – நீ இப்படியெல்லாம் போகமாட்டேன்னு அடம் பிடிப்பேன்னுதான், நான் தயாரா, என்னோட கூட அந்தப் பாடகனையும் கூட்டி வந்திருக்கிறேன்!…
கதை என்றால் ஒரு ஆரம்பம், பிறகு எடுப்பு, தொடுப்பு, ஒரு இடைச்சரடு, சின்னத் திருப்பத்துடன் ஒரு முடிப்பு இதெல்லாம் வேண்டும், என்கிறது இந்த இலக்கணம். மொத்தத்தில் கதை என்றால் எதிர்பார்ப்புடன் கூடிய சுவாரஸ்யம் அல்லது ஈர்ப்பு அதில் வேண்டும்.
இனி ஆங்கில இலக்கணம். பிற்பாடு சாமர்செட் மாம் எழுதிய சிறுகதை இது, என்று வாசித்தறிந்தேன். இதோ அதையும் சொல்லிறலாம்.
பாக்தாத்தில் ஒரு வியாபாரி. சில சாமான்களை வாங்கி வருவதற்காக அவன் தன் வேலைக்காரனை பஜாருக்கு அனுப்பினான். போனவன் குய்யோ முறையோ என்று பதறியோடி வந்தான்.
ஐயா, பஜார்க்கூட்ட நெரிசலில் நான் ஒரு பெண்ணிடம் இடித்துக் கொண்டேன். கிட்டத்தில் பார்த்தபோதுதான் அது பெண் அல்ல, மரணம் என்று தெரிந்தது. மரணம் என்னை எச்சரித்தது. தயவுசெய்து உங்கள் குதிரையைத் தாருங்கள். நான் என் தலைவிதியில் இருந்து தப்பித்தாக வேண்டும். நான் அதில் ஏறி கண்காணாத தூரத்துக்கு, சாமாரா நகரத்துக்குப் போய் ஒளிந்து கொள்கிறேன். அங்கே மரணம் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.
முதலாளியும் குதிரையைக் கொடுத்தார். அவன் அதன்மீதேறி எவ்வளவு வேகமாகப் போகமுடியுமோ அந்த ஊரைவிட்டே வெளியேறி விட்டான்.
அவனை அனுப்பிவிட்டு அந்த வியாபாரி அவரே கடைத்தெருவுக்குப் போனார். அங்கே அவர் மரணத்தைச் சந்தித்தார். ”நீ ஏன் என் வேலைக்காரனைப் பார்த்து எச்சரிக்கை செய்தாய்?” என்று கேட்டார்.
”அது எச்சரிக்கை சைகை அல்ல. நான் அவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏனெனில் இன்று இரவு நான் அவனை சாமாரா நகரத்தில் சந்தித்தாக வேண்டும். இங்கே இருக்கிறான் அவன்!”
மாம் எழுதிவிட்டார் கதை, சரி. இதில் உள்ள திருப்பம், அதன்ஊடான சேதி, மரணத்தை வென்றவர் யாருமில்லை என்பது, நேரம் வராதபோது அது உன்னை சட்டைபண்ணாது, என்ற அளவில் வியாபாரி அதைச் சந்தித்து சாவகாசமாய் உரையாடுவது… என்றெல்லாம் கிளையாய்க் கற்பனையை வளர்த்துக் கொள்ளலாம் இதில்.
இதென்ன ஐயா விசேஷம். நம்ம உள்ளூர் உதாரணம் ஒண்ணு சொல்லலாம். மகாகவி பாரதியார் ஒரே வரியில் ஒரு கதை எழுதியிருக்கிறார்!
கடவுள் கேட்டார் – பக்தா, இதுதான் பூலோகமா?
எத்தனை யோசனைக்கிளைகள் பிரிகின்றன இதில் பாருங்கள். கடவுள் கேட்டார். அவர் ஏன் கேட்கவேண்டும்? எல்லாம் அறிந்தவர்தானே அவர்? சரி யாரிடம் கேட்டார்? பக்தனிடம்! அவரை நம்பி வந்த பக்தனிடம் அவர் சந்தேகம் கேட்கிறார். அடுத்தது, இவன் அவரை பூலோகத்துக்கு அழைத்து வருகிறான். அவராக வரவில்லை. பிறகு, அவர் சந்தேகமாய்க் கேட்கிறார், இதுதான் பூலோகமா? அதுவே தெரியாத அவர் இவன் பிரச்னைக்கு என்ன தீர்வு முடியும்?
இலக்கணங்களை மறந்து விடலாம் என்று தோணுகிறது… நாவலைவிட சிறுகதைக்கு வடிவ நேர்த்தி முக்கியம். கட்டுக்கோப்பு முக்கியம். தெளிவு முக்கியம். ஒரு கலைத்திகட்டல் அடிநாக்குத் தித்திப்பாக, காட்டில் நாக்கில் விழுந்த தேன்துளியாக நல்முகூர்த்தம் ஒன்றில் வசப்படும். சட்டென புது வெயில் வந்தாப்போல உலகமே புதுவிதமாய்க் காட்சிப்படும் கலைஞனுக்கு. வழக்கத்தில் இருந்து வழக்கமற்ற ஏதோ, புதுசான ஏதோ. அது எப்ப வேணாலும் கிட்டும். தூக்கத்திலும் கூட கிடைக்கலாம். நானே ஒரு கனவை, சட்டெனக் கண்விழித்து எழுந்துகொண்டு கதையாக்கி யிருக்கிறேன்.
கதைக்கு ஒரு உண்மையின் பின்னணி தேவையா? ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வேன். நமக்குக் கற்பனை போன்ற, பிறர் வாழ்வில் உண்மையான பின்னணியைக் கதையில் கையாளுதல் இயல்பான விஷயம். என்னைப் பொறுத்தமட்டில் தெரிந்த நிஜப் பாத்திரங்களை வைத்துக் கதை புனைய எனக்குச் சம்மதம் கிடையாது. காரணம் நான் அவரைப் பற்றிய ஒரு வியூகத்தை, என் அறிவுதர்க்கத்துக்கு உட்பட்டு எழுத வந்தால், நாளை ஒருவேளை என் கருத்து, கணிப்பு தவறாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் உள்ள நிலையில், என் மனது என்னைக் குற்றவாளியாய்க் காணும். என்னால் அதைத் தாள இயலாது.
கவிதை பொங்கும் திறந்த மனசுக்குக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பாத்திரங்கள் வாழ்வனுபவத்தில் தெறிப்பாய்ச் சொல்லும் வசனங்கள் பெரும் வியூகங்களைத் தர வல்லவை. எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு மீனவனோடு படகில் கடலுக்குள் போய் அவனுடனேயே இருந்து பழகி ஒரு நாவல் எழுதினார். எழுத ஆரம்பிக்குமுன் அவனிடம் தன் நாவலுக்கு ஒரு பெயர் வை, என்று கேட்டார். ஐய எனக்கு என்ன சாமி தெரியும்… என்றவன், ஆனாலுங்கூட சாமி எனக்கு ஒரு ஆச்சர்யம் உண்டுங்க. சிலாள் பொறக்கும்போதே பணக்காரனா பொறந்துர்றான். சிலாள் ஏழையாப் பொறந்து கடேசிவரை காசைக் கண்ணால பாக்காமயே மண்ணுக்குள்ள போயிர்றான், ஏன் சாமி அப்டி? – என்றான் இடுங்கிய கண்களுடன். அவன் நினைவாக அந்த நாவலுக்கு To have and have not என்று பெயர் வைத்தார் ஹெமிங்வே.
நான் BSNL அண்ணாநகர் சென்னை தந்தியலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எங்கள் அலுவலகத்துக்கு மேல்மாடியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆளனுப்புகிற ஒரு ஏஜென்சி இருக்கிறது. வருகிற ஆட்கள் எல்லாம் கிடைத்த இடத்திலெல்லாம் கடன் வாங்கிக் காசு தேர்த்தி வேலை என்று துபாய் அரேபியா என்று கிளம்புகிறவர்கள். ஒருநாள் ஒருவன் வாசலில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன் – அன்று இரவு அவனுக்கு ·ப்ளைட். அதுவரை சாப்பிடக் கூட கையில் காசு இல்லை அவனிடம். நல்லாத் தண்ணி குடிச்சிட்டேன். ராத்திரி ·ப்ளைட்ல எப்பிடியும் சாப்பாடு உண்டுல்லா? – என்றான் அவன். அந்தச் சாப்பாட்டை நம்பி, அதுவரை சாப்பிடாமல் கிளம்பும் மகாத்மா.
எங்கள் அலுவலகத்தில் தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த பையன் ஒருவன். அவன் தாய் இறந்து விட்டாள். பத்தாம் நாள் காரியத்துக்கு ஊரில் இருந்து உறவுக்காரர்கள் வந்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சியை நான் காணமுடிந்தது. அவர்களோடு தானும் ஊருக்குப் போகவேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.
கதை சொல்லுவதற்கான முறைமையை இப்படி வாழ்க்கை சட்டென அடியெடுத்துக் கொடுத்து விடும். கமலாதாஸ் ஒரு சிறுமி-விபசாரம் பற்றிய கதையைத் தலைப்பிலேயே அழுத்தமாய் ஆரம்பிக்கிறார். DOLL FOR THE CHILD-PROSTITUTE. இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ரொம்ப நேரம் வேறு வேலை செய்யமுடியாமல் தவித்தேன் நான்.
சமீபத்தில் நான் பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னையின்பால் ஈர்க்கப்பட்டு கவரப்பட்டு வருகிறேன் என்பது புதிய செய்தி அல்ல. எங்கள் வீட்டு வாசலில் அப்போது செம்பருத்திச் செடி ஒன்று இருந்தது. தினசரி காலை என் மனைவிக்காக நான் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தந்து உதவுகிறது உண்டு. அதிகாலையில் மரத்துடன் பழகுவது அருமையான அனுபவம். இலைகளுக்கும், வேருக்கும் நீர் தெளிப்பதும் ஊற்றுவதும், இலை அப்போது தரும் வாசனையும், மண்ணின் நெகிழ்ச்சியும், பூக்கள் சூரியனைக் காணக்காண உடலை விரிப்பதும் அழகு. மூடிய குடைபோல் கிடக்கும் செம்பருத்திப் பூ, சூரியன் வர சட்டென மூக்கை வெளியே நீட்டி, மடல்களை விரியத் திறப்பது, யானையொன்று தும்பிக்கையை நீட்டியாட்டுவதுபோலவும், அதன் இதழ்கள் ஆப்பிரிக்க யானையின் காதுகள் போலவும் தோற்றங் காட்டின. சிவப்பு யானைகள் என ஒரு கதை, பாக்யா தீபாவளி மலரில் நான் பிறகு எழுதினேன்.
லா.ச.ரா. செம்பருத்திப் பூவை அம்பாளின் அருள் வழங்கும் உள்ளங்கை, என எழுதியிருக்கிறார்.
அவசரம், கதை எழுதித் தந்தாக வேண்டும், என்கிற நெருக்கடியில் வாழ்வின் கவிதைக் கணங்களை உருவகித்துக் கொண்டு இயங்குவதும் வழக்கம்தான். லி·ப்டில் தனியே மாட்டிக்கொண்ட நிமிடங்கள் பற்றி இரா. முருகன் எழுதியிருக்கிறார். கவிதைக் கணங்கள் என்பது சட்டென உணர்வெழுச்சி கண்டு அடங்காப் படபடப்பு தந்த கணங்கள். அன்போடு வளர்த்த பூனை கால் தவறிக் கிணற்றில் விழுந்துவிட பெரியவர் படும்பாடு, என தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தனின் ஒரு கதை – மனிதயந்திரம், என்று நினைக்கிறேன். ஒரு அவசரம் என்று முதலாளி அறியாமல் கல்லாவில் காசெடுத்துவிட்டு, மனசு அதிர்வதைத் தாளமுடியாமல் ரயிலில் இருந்து இறங்கி முதலாளியிடம் பணத்தைத் திரும்பிவந்து சேர்த்த ஒரு கடைஊழியனின் கதை ஞாபகம் வருகிறது.
சில சமயம் இப்படிக் கதைகள் ஒரு பெரும் மானுட சமூகத்தின் பங்களிப்பாக உருப்பெருகி நிற்பதும் உண்டு. லா.ச.ரா.வின் குருஷேத்திரம், என்னை அயர்த்திய ஒரு கதைப்பொருள். திருடன் ஒருவன், திருடிவிட்டுத் திரும்ப ரொம்ப நேரங் கழித்து அந்தப் பக்கம் வருகிறான். திருட்டுக்கொடுத்ததைத் தாளமுடியாமல் பறிகொடுத்தவன் அந்தக் கோயில் குளத்தில் பிணமாக மிதந்து கொண்டிருக்கிறான். திருடனின் மன உளைச்சல்தான் கதை. ஜானகிராமன் கதை ஒன்று. சின்னப்பிள்ளை ஒன்று மிட்டாய் வாங்கக் கடைக்கு வரும். கடைக்காரர் மிட்டாய் தந்துவிட்டு மிச்சச் சில்லரை தராமல் குழந்தையை அனுப்பி விடுவார். குழந்தையை அதன் அம்மா கூட்டிவந்து கடைக்காரரிடம் சில்லரை கேட்பாள். அவர் தந்தனுப்பியதாய்ச் சொல்வார். அந்த இடத்திலேயே அந்த அம்மா குழந்தையை ஒரு மொத்து மொத்த, ஐயோ என்று மனம் பதறுவார் கடைக்காரர். அடி அவர் முதுகில் விழுந்தாப் போல!
சில சமயம் இப்படிக் கவிதைக் கணங்களை விடுத்து, உலகளாவிய ஒரு விழுமியத்தைக் கையில் எடுப்பதும் உண்டு. இவையெல்லாம் காலம் அளிக்கிற கொடை அல்ல. அறிவின் வீச்சு. சட்டுச் சட்டென்று மனதில் வந்த உதாரணங்களைச் சொல்லிச் செல்கிறேன். இதேபோன்ற வேறு உதாரணங்கள் உங்கள் மனதில் அலையடிக்கலாம். ஜெயமோகனின் வாரிக்குழி, மறக்க முடியாத கதை. மதம் பிடித்த யானை ஒன்று கட்டறுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடுகிறது. கையில் வெறும் அங்குசத்துடன், ஆனால் யானையின் பயத்தை மெல்ல மெல்லப் பெரிதாக்கி, அதைத் தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து, யானைமேல் அமர்ந்து திரும்ப ஊருக்குள் வரும் பாகனின் கதை. மனிதன் மகத்தானவன் என்கிற விழுமியம் மனசை விம்ம வைக்கிறது. ஒரு சீனக்கதை – எருது, என நான் மொழிபெயர்த்திருக்கிறேன். மகா பலசாலியான எருது, மனிதனைக் கண்டாலே நடுங்கி அவன் பராக்கிரமன், தன்னை அவன் சுண்டுவிரலாலேயே அழித்து விடுவான் என்று பதறும் குணத்தை விவரித்துச் செல்கிறது கதை. அதை ஒரு கொத்தடிமை விவரிப்பதாகவும், அவனுக்கே தன் பலம் தெரியாமல் கொத்தடிமையாய் வாழ்கிறான் என்றும் ஒரு முடிச்சு போடுகிறார் ஆசிரியர் யெ ஷேங்தாவ்.
கதை மனசில் சட்டெனக் கூடு கட்டும் கணங்கள் மகத்தானவை. தற்போது மெகா தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிவரும் நண்பன் பாஸ்கர் சக்தி ஒருமுறை என்னை ஸ்பீல்பர்க்கின் ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்’ படம் வீடியோவில் பார்க்கக் கூப்பிட்டான். அப்போது திரையிடப்படாமல் அரிதாக வீடியோ கிடைத்தது எங்களுக்கு. அவனது உறவினர் வீட்டுக்கு நெற்குன்றத்துக்கு வரச்சொன்னான் பாஸ்கர். வரும் வழி கேட்டேன். ”மேடு இறங்கினால் செங்கச்சூளை, அப்படியே திரும்பினா சித்தப்பா வீடு…” என்று வழி சொன்னான். போகிற இடத்தின் பெயர் நெற்குன்றம். இப்போது அந்தப் பகுதி செங்கற்குன்றமாகி விட்டது. சட்டெனக் கிளம்பிய பொறியில் அன்று நான் திரைப்படம் பார்க்கப் போகவில்லை. கல்கி தீபாவளி மலருக்கு அப்போதே ‘நெற்குன்றம்’ என நகர்மயமாதலை வைத்து ஒரு கதை எழுத முடிந்தது.
சுதாரித்து கவனமாய் இயங்கும் மனம் தானே நல்லநல்ல கருக்களை சுவீகரித்துக் கொள்ளும். ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தேன். யார் அவன், எந்த ஊர் தெரியாது. யாரையும் மதிக்கிறவனாகவும், யாரோடும் பேசுகிறவனாகவும், பிச்சையெடுக்கிறாப் போலவும் அவன் இல்லை. தான் தன்னுலகம் என அலைந்து திரிகிற மனிதன். அவனுக்கும் இப்பவோ முன்போ ஒர் உலகம் இல்லாமல் இருக்குமா, என்று தோணியது. அவன் ஆச்சர்யமான ஒரு காரியம் செய்தான். டவுண்பஸ் ஒன்று அங்கே நின்றிருந்தது. அதன் தோள்ப் பக்கங்களில் சிவப்புப் பட்டையில், அது நின்று செல்லும் இடங்களை வரிசையாய் எழுதியிருந்தார்கள். திடீரென்று அந்தப் பைத்தியக்காரன் தரையில் தேடி ஒரு கரிக்கட்டியைக் கண்டுபிடித்து, அந்த ஊர்களுக்கு ஊடே தன் ஊரையும், எந்த ஊர் நினைவில்லை – சின்னாளப்பட்டி, என்று வையுங்களேன்… கரிக்கட்டியால் சின்னாளப்பட்டி என எழுதியதைப் பார்த்தேன்.
என் கற்பனையில் ஒரு லாரி டிரைவர் அந்த வழியே அடிக்கடி போய்வருகிறவன், இவனைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான். ஒருநாள் இவன் டவுண்பஸ்சில் எழுதியதைப் பார்த்து விட்டு, அவனை அடுத்த முறை அந்த வழியே போகும்போது, சின்னாளப்பட்டியிலேயே இறக்கி விட்டுவிட்டுப் போகிறான், என கதை ஒன்று எழுதினேன். ஒரு மனிதன், இன்னொரு மனிதன் – என்று தலைப்பு. மிகப் புதிய கரு அல்லவா? இவனுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பேச்சுவார்த்தை கூடக் கிடையாது. ஆனாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் சக மனிதர்களாக, பின்னும் பேசிக்கொள்ளாமலேயே அறிமுகமாகி பிரிந்து போகிறார்கள்!
வாழ்வின் இருண்மைகள் சார்ந்து எப்போதாவதுதான் எழுத வாய்க்கிறது.
வாழ்க்கை சொல்லித் தந்துகொண்டேதான் இருக்கிறது. அதன் மொழியை அறியப் பயிற்சி தேவை. விசாலமான வாங்குதிறனுள்ள மனம், கதவைத் திறந்து வைத்த மனம் தேவை. சின்ன விஷயங்களில் கூட கவனமாய்ப் பார்த்தால் பெரிய கருக்கள் கிடைக்கவே செய்யும். துரும்படியில் யானையைக் கண்டுபிடிக்கிறான் படைப்பாளி.
——————————————————————————-
28-10-2007 நவிமும்பை வாஷி தமிழ்ச்சங்கத்தில் உரை
storysankar@gmail.com
நன்றி: திண்ணை.காம்