சிறுகதையின் கூறுகளைப் பார்ப்போமா? உரிப்பொருள், கதைப் பின்னல், பாத்திரப் படைப்பு, நோக்கு நிலை பின்னணி, குறியீடு (symbol) ஆகியன சிறுகதையின் இன்றியமையாக் கூறுகள் எனலாம். இவை அனைத்தும் சேர்ந்ததே சிறுகதை வடிவம் (Form) ஆகும். கருப்பொருளில் சோதனை செய்து பார்த்தவர்களுள் சிறந்தவர்களாகப் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் எடுத்துக்காட்டலாம். மனத்தில் நிற்கும் கதை மாந்தர்களைப் படைப்பதில் வல்லவர்கள் என்று கல்கியையும், தி. ஜானகிராமனையும் எடுத்துக்காட்டலாம்.
சிறுகதை யாருடைய விழிவழியே நோக்கப்பட்டுக் கூறப்படுகிறது என்பது நோக்கு நிலையாகும். அரச மரமே கதை சொல்வது போல வ.வெ.சு அய்யரின் குளத்தங்கரை அரச மரம் அமைந்திருக்கிறதல்லவா? சிறுகதையில் வாசகர் உணரும் வண்ணம் சிலவற்றைக் குறிப்பாகப் புலப்படுத்துவர். குறிப்பாக ஒன்றைப் புலப்படுவதற்குக் கையாளப்படும் கூறு குறியீடு எனப்படும். சிறுகதைகள் எல்லாவற்றிலும் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. கனகாம்பரம், திரை ஆகிய இருகதைகளிலும் தலைப்பிலேயே குறியீட்டைக் கையாண்டுள்ளார் கு.ப.ரா. இனி, சூடாமணி கதைகளில் இந்தச் சிறுகதைக் கூறுகளைக் காண்போமா?
கருப்பொருள் அல்லது கதைப்பொருள்
கூறப்படும் கதை எதைப் பற்றியது என்பது கதைப்பொருள். இதை அடிப்படையாகக் கொண்டே சிறுகதைகளைச் சமூகச் சிறுகதைகள், வரலாற்றுச் சிறுகதைகள், புராண இதிகாசச் சிறுகதைகள், அறிவியல் சிறுகதைகள் என்று வகைப்படுத்துவர். சூடாமணி பெரும்பாலும் சமூகச் சிறுகதைகளையே படைத்துள்ளார். தன் படைப்புகள் பற்றி “என் கதைகள் பெரும்பாலும் ஒரு சிறு வட்டத்தினுள் நிகழ்வதால் மனித உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை மையமாக வைத்துப் புனையப்பட்டவை” என்று கூறுகிறார். சமுதாய ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத் தாழ்வு அடிப்படையில் அமைக்கப்படும் இவரது கதைகளிலும் மனிதாபிமானமே அடிநாதமாய் ஒலிக்கக் காணலாம்.
கூட்டுக் குடும்பம்
கூட்டுக் குடும்ப வாழ்வு அரிதாகின்ற இக்காலத்திலும் அன்பும் மனிதாபிமானமும் இருந்தால் அது சாத்தியமே என்பதை உறுதிப்படுத்தும் சிறுகதை நண்பர் திருமலை. இனிக்கும் இல்லறத்தை மேலும் இனிக்கச் செய்வன குழந்தைச் செல்வங்கள் அல்லவா? ஆனால் கமலாவும் ராஜுவும் புதிய உயிரின் வருகையால் தங்களுக்கு ஏற்படப் போகும் செலவினத்தை நினைத்து அஞ்சுகின்றனர். நம் திருமணம் காதல் திருமணம் என்பதால் நமக்கு நம் பெற்றோரின் உதவி கிடைக்கவில்லை. நாம் அதுபோல் இல்லாமல் நம் குழந்தை விருப்பப்படி வாழ நாம் குறுக்கே நிற்கக் கூடாது என்று முடிவு செய்கின்றனர். நம்ம குழந்தை என்று சொல்லும்போது ஏற்படும் அதிசய உணர்வில் பரிச்சய உலகத்தை மறந்து மகிழ்ச்சியில் ஆழ்வதை விளக்குவது கமல ராஜு (புதிய பார்வை – 1997).
பின்னணி (இடம் – காலம்)
கதை நிகழ் இடங்களை இடப் பின்னணி என்றும் கதை நிகழ் காலங்களைக் காலப் பின்னணி என்றும் சொல்லலாம். புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி ஆகியோர் திருநெல்வேலியை இடப் பின்னணியாகக் கொண்டு கதை எழுதுவர். தி.ஜா. எனப்படும் தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தை இடப்பின்னணியாகக் கொண்டு கதை எழுதுவார். சூடாமணி குறிப்பிட்ட இடப்பின்னணியில் கதை எழுதுவதில்லை. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. மனிதர்களின் மன உணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பனவாக இவர் கதைகள் அமைகின்றன. கிராமப் பின்னணியில் சில கதைகள் அமைகின்றன எடுத்துக்காட்டாக, எனக்குத் தெரியாது என்ற கதையைச் சுட்டலாம் . (இந்தியா டுடே – பெண்கள் சிறப்பு மலர், 1996) சில கதைகள் நகரப் பின்னணியில் அமைகின்றன. பெரும்பாலும் சென்னை நகரமே பின்னணியாக அமைவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, விட்டுட்டு விட்டுட்டு, பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவை, விசாலம், அமெரிக்க விருந்தாளி முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
– நன்றி: http://www.tamilvu.org