(2020ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அ.நா. : காபூலிவாலா என்னும் சிறுகதையும் இது போலவே. வீட்டிற்கு தினந்தோறும் உலர் பழங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வரும் காபூலிவாலாவுடன் ஒரு சிறுமிக்கு ஏற்படும் பந்தம் பற்றியும் அதன் பிரிவு பற்றியும் அந்தச் சிறுகதையில் விவரிக்கப்படும். இதுவும் தாகூர்ஜி எழுதிய சிறுகதை.
திருமகள் : மிக்க நன்றி மேம்..
ராஜேஸ்வரி : நான் தமிழில்தான் இச்சிறுகதையை வாசித்தேன். த.நா. குமாரசுவாமி அவர்கள் மொழிபெயர்த்த தாகூர் சிறுகதைகளை சாகித்ய அகாடெமி வெளியிட்டுள்ளது. நன்றி. மீண்டும் பேசுவோம்.
அ.நா. : தங்கள் தகவலுக்கு நன்றி. பல்வேறு இந்திய மொழிச் சிறுகதைகளை சாகித்ய அகாடெமி தமிழில் வெளியிட்டுள்ளது.
திருமகள் : பெண்களின் நுண்ணுணர்வுகளை நோபெல் பரிசு பெற்ற தாகூர்ஜி பதிவு செய்துள்ளார் என்பதை ராஜேஸ்வரி மேம் கூறிய கதையிலிருந்து அறிந்து கொண்டோம்.
தமிழில் பல பெண் எழுத்தாளர்கள் பெண்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதி இருக்காங்க இல்லையா சார்?
அ.நா. : ஆமாம். அம்பை எழுதிய சிறுகதைகளுள் ஒன்று அம்மா ஒரு கொலை செய்தாள் என்னும் சிறுகதை, அப்படிப்பட்ட ஓர் வளர் இளம்பெண், தான் பெரியவள் ஆனதும் அம்மாவின் அணுகுமுறை மாறி இருப்பதை உணர்ந்து ஏமாற்றம் அடைவது பற்றி அம்பை சித்தரித்திருப்பார் இச்சிறுகதையில். இச்சிறுகதையை மூத்த எழுத்தாளரும் இலக்கிய விமர்சனருமாகிய வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமகள் : இப்பொழுது ஓர் அழைப்பு…
குரல் : வணக்கம் அரங்கநாதன், வணக்கம்மா..
திருமகள் : வணக்கம். யார் சார் உங்களை அன்போட பெயர் சொல்லி கூப்பிடறாரு.
குரல் : நான் அவருடைய நண்பன் பொன்னுசாமி.
அ.நா. : வணக்கம் பொன்னுசாமி. திருமகள் இவரை நாங்கள் பொக்கிஷம் பொன்னுசாமி என்றே அழைப்போம். பல அரிய தகவல்களைக் கூறுவார் இவர்.
திருமகள் : அப்படியா? சார். இந்த நிகழ்ச்சியில் ஒங்களோட பொக்கிஷமான தகவலை எதிர்பாக்கிறோம். குரல் : அதற்குத்தான் நான் அழைச்சேன். நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது ஒரு சிறுகதை. இந்தச் சிறுகதையை எழுதியவர் பிரபல ஓவியர் மணியம் செல்வம் என்கிற மசெ. நேசம் என்ற பெயரில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதை புதிய பார்வை செப்டெம்பர் 1992 இதழில் வெளிவந்தது. ஒரு நாய் ஈன்ற நாய்க்குட்டிகளில் தனித்து விடப்பட்ட ஒரு நாய்க்குட்டியை இவரது குழந்தைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இரவு நேரம். அக்கம்பக்கத்தில் அனைவரும் உறங்கிய பின்னரும் நாய்க்குட்டி கத்திக் கொண்டே இருக்கிறது. தாயைப் பிரிந்த ஏக்கம்.
வைத்த பாலையும் குடிக்கவில்லை. தோட்டத்தில் கொண்டுபோய் நாய்க்குட்டியை விட்டு விடுகிறார் இவர். மறுநாள். காலையில் குழந்தைகள் இவரிடம் அப்பா நாய்க்குட்டி எங்கே என்று கேட்கிறார்கள். அம்மாவைத் தேடிப் போயிருக்கும் என்று சமாதானம் செய்கிறார். மகன் சொல்கிறான் நாம யாரும் அதுக்கு கம்பெனியே கொடுக்கல. அதான் போயிடுச்சு… மாலைவேளை. குழந்தைகளுக்கு இவரது மனைவி பள்ளிப்பாடம் சொல்லிக் கொடுக்கிறாள்.. நாம் மிருகங்களை நேசிக்க வேண்டும். இப்படி முடிக்கிறார் இந்தச் சிறுகதையை.. இந்தச் சிறுகதைக்கு அவரே படமும் வரைந்தார்.
அரங்கநாதன்: சித்திரங்களால் வாசகர்களைக் கொள்ளை கொண்ட ஓவியக் கலை ஜாம்பவான் மணியம் அவர்களின் புதல்வர் பிரபல ஓவியர் அவர்களின் சிறுகதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.
திருமகள் : நன்றி அய்யா.. நேயர்களே… இளந்தென்றல் பண்பலையின் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சியில் சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்களை பேராசிரியர் அரங்கநாதன் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நேயர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதைப் பார்க்கிறேன். இப்பொழுது ஒரு திரைப்பாடலைக் கேட்போம்… திக்குத்தெரியாத காட்டில் படத்தில் பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா…
(பாடல்)
திருமகள் : நிகழ்ச்சி தொடர்கிறது. ஓர் அழைப்பாளர் தொடர்பில் இருக்கிறார். வணக்கம்
குரல் : வணக்கம். நான் கோயம்புத்தூரிலிருந்து அழைக்கிறேன். என் பெயர் கொங்குமணி
அ.நா. : வணக்கம். கொங்கு நாட்டு கொங்குமணி. சொல்லுங்கள்.
மணி : அய்யா. நீங்கள் நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய வலம்புரிச்சங்கு பற்றி குறிப்பிட்டீர்கள். வலம்புரிச்சங்கு என்ற தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பு நூல் என்னிடம் உள்ளது. இதில் நா.பா. அவர்கள் எழுதிய வரலாற்றுச் சிறுகதைகள் உள்ளன. முன்னுரையில் சிறுகதைகள் பற்றி நா.பா. குறிப்பிடுவதை இங்கு மேற்கோளாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அ.நா. : கூறுங்கள். கேட்போம் அனைவரும். மணி : நா.பா. எழுதுகிறார்:
கற்பனை இலக்கியம் படைக்கும் எழுத்தாளனின் மனத்தில் பூக்கும் உணர்ச்சி மலர்களில் உதிர்ந்து மடிந்து விடுவன சில. பிஞ்சு விட்டுக் காய்த்துக் கனிந்து கனிகளாய்ச் சுவை நல்குபவை மிகவும் சில. ஒரு நல்ல சிறுகதையில் பல சிறுகதைகளுக்கான வித்துக்கள் பொதிந்திருக்க வேண்டும். பழத்தின் உள்ளீடாகிய வித்துக்களைப் போல் நல்ல சிறுகதைக்கு இந்த உள்ளீடு இன்றியமையாதது.
போட்டோ ஆல்பத்தைப் பேணும் புகைப்படக் கலைஞனைப் போல உலகத்துக் காட்சிகளின் பல்வேறு உயிர்ப்படங்களைத் தன் மனமாகிற ஆலபத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு சிந்திக்கிறவன் எழுத்தாளன்.
எழுத்து ஒரு தொழிலாக என்றும் மனத்தில் பட்டதில்லை. நான் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை அதை ஒரு தூய புனிதமான வேள்வியாகவே எண்ணிக் கொண்டு வருகிறேன்.
திருமகள் : நன்றி மணி அவர்களே…சார்.நா.பா. அவர்களின் ஆல்பம் தாட் நன்றாக இருந்தது அல்லவா? அ.நா.: ஆமாம் அம்மா.
திருமகள் : ஒரு படைப்பாளனின் வாக்குமூலத்தை வாசித்து நமக்கு வழங்கிய மணி குறிப்பிட்ட சிறுகதைத் தொகுப்பில் உள்ள வரலாற்றுச் சிறுகதை பற்றி அவரிடமே கேட்கலாமா?… மணி இணைப்பில் இருக்கிறீர்களா… இல்லை…சரி. மீண்டும் தொடர்பு கொள்வார் என்று நம்புவோம்.
திருமகள் : இப்பொழுது ஒரு நேயர் அழைக்கிறார். ஹலோ…
குரல் : வணக்கம். நான் ஜோதி பேசுகிறேன். குரோம்பேட்டையிலிருந்து. வணக்கம் அய்யா.
அ.நா. : வணக்கம் அம்மா. சொல்லுங்கள். நீங்க எதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
ஜோதி: சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த சிறுகதை இது. நீங்கள் மேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நேயர் ஒருவரும் குறிப்பிட்டார். நான் நினைவு கொள்ளும் சிறுகதையை எழுதியதும் அவர்தான். சிறுகதையின் தலைப்பு தழும்பு சமூக நல்லிணக்கத்திற்கான படைப்பாக இந்தச் சிறுகதை இருக்கிறது. சுருக்கமா கதையைப் பத்தி சொல்றேன்.
அ.நா. : சொல்லுங்கள்.
ஜோதி : ராமலிங்கம் – மைதீன் ராவுத்தர் இருவர் இடையே நட்பு துளிர்க்கிறது. கிராமத்தில் செல்லிவீரம்மாள் கோயில் திருவிழா. திருவிழா நடத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ராவுத்தருக்கும் ராமலிங்கத் திற்கும் இடையே உள்ள நெருக்கத்தைப் பார்த்த ஊரார், ராவுத்தரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்கிறார்கள். தயக்கத் துடன் ராமலிங்கம், நாட்டாமையுடனும் ஊர்ப் பிரமுகர் களுடனும் ராவுத்தர் வீட்டுக்குப் போகிறான். வந்திருந்த அனைவருக்கும் காபி பரிமாற்றம். விஷயத்தை தயக்கத் துடன் கேட்கிறார்கள். ராவுத்தரின் எட்டு வயது மகன் அருகில் நிற்கிறான். ‘ஆண்டவர் எல்லாருக்கும் பொது தானே… கும்புடுற மனுஷங்க எல்லாம் ஒண்ணுதானே’ பேசுகிற ராவுத்தரைப் பார்த்து வியக்கிறார்கள். ராவுத்தர் வில்லடிக்கான மொத்த செலவையும் ஏற்பதாக சொல்வ தோடு தமது காரில் அழைத்து வரச் செய்வதாகவும் கூறுகிறார். ராமலிங்கமும் நாட்டாமையும் இன்பத் தாக்குதலில் இம்புட்டு நல்ல மனமா என்று யோசிக்கிறார்கள்…
சில நாட்கள் கழித்து சமூக விரோதசக்திகள் சமூகங்களிடையே கலவரத்தைத் தூண்டிவிடுகிறார்கள்.
வன்முறைக் கும்பல், ராவுத்தர் வீட்டையும் கடை களையும் முற்றுகையிடப் போவதை அறிந்து ராமலிங்கம் நண்பர்களுடன் அங்கே போகிறான்.
ராமலிங்கமும் அவனது நண்பர்களும் போகும் போது ராவுத்தரின் மகனை வெட்ட வன்முறையாளன் அரிவாளை ஓங்கும் போது பையனைக் காப்பாற்றி நண்பர்களிடம் தருகிறான் ராமலிங்கம். அவன்மீது வெட்டு விழுந்து இரத்தம் கொப்பளிக்கிறது.
என் உசுரைக் காப்பாத்துனது பெரிது இல்ல. என் கடையக் காபத்துனது பெரிசு இல்ல. என் வம்ச விதையைக் காப்பாத்துனே பாரு. அதுதான் பெரிய விஷயம் என்கிறார் ராவுத்தர் கண்ணீர் மல்க. ராமலிங்கம் ‘வுடுங்க பாய். தாயா புள்ளையா மனுச மக்கள் சேர்ந்து வாழறது ஒரு பெருசா? இதுதான் நம்ம சுபாவம்… வாங்க ஆஸ்பத்திரிக்குப் போவோம்’ என்கிறான். ராமலிங்கத்தின் முகத்தில் உபாதை தெரியவில்லை. மனசில் ஒரு நிறைவு. அவன் முகத்தில் மட்டும் அல்ல.. சகலர் முகங்களிலும்.
ஆசிரியர் சிறுகதையை இப்படி முடிக்கிறார்: இந்த வெட்டுக் காயம் ஆறிப் போய்விடும். காயத்தழும்பு என்றென்றும் மாறவே மாறாது. மனுசத்தன்மையுள்ள மக்கள் கலாசாரத்தைப் போலவே.
அ.நா.: எல்லா காலகட்டத்திலும் தேவையான சமூக நல்லிணக்கத்திற்கான சிறந்த பதிவாக இச்சிறுகதையைக் கொண்டாட வேண்டும். நன்றாக விவரித்த உங்களுக்கு நன்றி.
ஜோதி : நன்றி வணக்கம்.
திருமகள் : சீரியஸான விஷயங்களைப் பற்றிய சிறுகதைகளையே பேசிக்கிட்டு இருக்கோம். ஐயா. ஒரு மாறுதலுக்கு நகைச்சுவைச் சிறுகதை ஒன்று சொல்லுங்களேன்.
அ.நா. : எஸ்.வி.வி. என்ற எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் 1880-1950 அவர் வாழ்ந்த காலம். நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர். அந்தக் கால சூழலில் நகைச்சுவை எழுத்துக்கு வித்திட்டவர்.
இவர் எழுதிய பால்கணக்கு என்ற சிறுகதை உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். இச்சிறுகதை முழுவதும் உரையாடல். கணவன் மனைவி இடையே பால்கணக்கு பற்றிய ஓர் உரையாடல். கணவனுக்கு மனைவியின் கணக்கு புரியவில்லை. முடிவுதான் முத்தாய்ப்பு-
நீ சொன்ன கணக்குத்தான். இப்போ எனக்கு ஒழிவில்லை. சாயந்திரம் வரும்பொழுது என்னாபீஸ்ல ஒரு அக்கவுண்டன்ட் இருக்கான்.கணக்கில் ரொம்பக் கெட்டிக்காரன். அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன். கணக்கையெல்லாம் பார்துவிடலாம் என்று ஆபீசுக்குப் போய்விட்டேன் என்று முடிக்கிறார். ஆய்வறிஞர் வெ. சாமிநாத சர்மாவும் நகைச்சுவை சிறுகதைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமகள் : இப்பொழுது ஓர் அழைப்பாளர் அழைக்கிறார். குரல் : வணக்கம் மேடம். வணக்கம் சார்.
திருமகள் : வணக்கம் சொல்லுங்க.
குரல் : என் பெயர் வீணா. கோயம்புத்தூரிலிருந்து பேசுகிறேன். நான் படித்த ஒரு சிறுகதையை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அ.நா. : வணக்கம். சொல்லுங்கள். எங்கள் செவிகள் காத்திருக்கின்றன.
வீணா : இந்தச் சிறுகதை மூக்குத்தி என்ற தலைப்பில் முதுபெரும் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் படைப்பு.
அ.நா. : எம்.வி. வெங்கட்ராம் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளுள் ஒருவர். சௌராஷ்டிர மக்களின் வாழ்வைப் பற்றித் தமது படைப்புகளில் வடித்தவர். நீங்கள் குறிப்பிடும் சிறுகதை கிராம ஊழியன் என்ற இதழில் 1944ஆம் ஆண்டு வெளிவந்தது. மன்னிக்கவும். நீங்கள் தொடருங்கள்.
வீணா : தகவலுக்கு நன்றி. கதைக்கு வருகிறேன். ஐம்பத்தைந்து வயதில் மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரின் கதையாக விரிகிறது. இந்த மூக்குத்தி. அவரது
பெயர் சீதாராமன். அவன் அரைப் பிரக்ஞையில் இருக்கும் நிலையில் அவனுடைய மகனும் மருமகளும் அவனுடைய சொத்துக்களை அடைவது பற்றி விவாதம் செய்கிறார்கள். மூக்குத்தியை தந்தையின் இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் கைப்பற்றுவது பற்றி யோசிக்கிறார்கள்.
மகனும் மருமகளும் மூக்குத்தி பற்றிப் பேசியதைத் கேட்டதும் சீதாராமனின் மனம் பழைய நினைவுகளில் ஆரகிறது.
சீதாராமன் எண்ணமிடுகிறார். இந்த சீதாராமன், பொய்க் கணக்குகள் எழுதிப் பொய்ச் சாட்சிகள் சொல்லி பொய் வழக்குகள் ஆடி எத்தனையோ குடும்பங்களைப் பாழாக்கி யிருக்கிறான்.
மகன் கிருஷ்ணன் குறிப்பிட்டானே அந்த மூக்குத்தியை சீதாராமன் அபகரித்த கதை எவ்வளவு சோகம் நிறைந்தது.
அந்த மூக்குத்தியின் சொந்தக்காரர் வயோதிகர். அவனுக்கு எட்டின உறவினரும் கூட. அவர் கொடுக்க வேண்டிய கடன் கொஞ்சமிருந்தது. திடீரென்று படுக்கையி லிருந்த அக்கிழவர், தன் மனைவி மூலம் அந்த வைர மூக்குத்தியை அனுப்பிக் கணக்கைத் தீர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்.
கிழவியிடமிருந்து மூக்குத்தியை வாங்கிக் கொண்ட சீதாராமன், நான் உங்களுக்கு வஞ்சனை செய்ய மாட்டேன் என்று தான் வழிபடும் தெய்வமான முருகன் முன்னிலையில் கையடித்துக் கொடுத்தான். ஆனால், மறுநாளே, அந்த நகையை மறந்துவிட்டு, அந்தக் கிழவர் மீது வழக்குப் போட்டு, அவர் சொத்துக்களை எல்லாம் ஜப்தி செய்தான். அவர் வீட்டையும் ஏலத்திற்குக் கொண்டு வந்தான். செயல் இழந்து படுக்கையில் இருந்த கிழவர் என்ன வேதனைப் பட்டாரோ? அந்த மூக்குத்தி குடும்பத்தில் ஒரு விஷ விருட்சத்தை வளர்த்தது. மூக்குத்தியின் வைரம் மிக நன்றாக இருந்ததால் அது தன் மனைவிக்கு வேண்டும் என்று கேட்டான் கிருஷ்ணன்.
அது எனக்குத்தான் என்று பிடிவாதம் பிடித்தாள் சீதாராமனின் இளம் மனைவி கோமளம்.
மனைவிக்கும் மகனுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட அவன் இருவருக்குமே அதைக் கொடுக்காமல் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டான்.
ஆனால், சில நாட்களில் அது சிறகு முளைத்துப் பறந்துவிட்டது. முதலில் அவனுக்குப் புத்திரன் மீது சந்தேகம் உண்டாகியது. ஆனால், அதை எடுத்தது இளைய மனைவிதான் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. தெரிந்து என்ன செய்ய? அவளிடம் வாய் கொடுக்க அவனுக்கு எப்போதுமே பயம்.
இளம்மனைவி அருகில் இருப்பது தெரிந்தது. ‘எல்லாம் மூக்குத்தியால் வந்த வினை. அதைத் திரும்பவும் அந்தக் கிழவரின் குடும்பத்தில் சேர்த்துவிடு என்று சொல்ல துடித்த நாக்கு செத்துக் கிடந்தது.
கணவரின் நிலையைக் கண்ட மனைவி காதருகில் வாய் வைத்துக் கூறினாள். இனி, இந்தப் பக்கத்து நினைப்பே விட்டு முருகன் பெயரைச் சொல்லுங்கள். அதுதான் நல்ல கதிக்குப் போகும்.
மு..மு.. என்று முக்கி முணுமுணுத்தான் தன் ஆற்றலை திரட்டி.
முருகா முருகா என்று கூக்குரலிட்டாள் மனைவி. ‘ஐயரே. சீக்கிரம் சூடம் கொளுததிடுங்கள். தேங்காய் உடையுங்கள்.. சீக்கிரம்..
இறுதி மூச்சு பிரியும்போதும் சீதாராமன் முருக நாமத்தைக் கைவிடவில்லை என்று ஊரார் பேசிக் கொண்டனர். தவறா அது? நல்லதும் கெட்டதும் சேர வேண்டிய இடம் அதுதானே.. என்று முடிக்கிறார் கதாசிரியர்.
திருமகள் : நன்றாக விவரித்தீர்கள் வீணா அவர்களே.
வீணா : கதைச்சுருக்கத்தை ஆசிரியரின் வார்த்தைகளி லேயே நான் கூறினேன் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.
திருமகள் : நன்றி. ஐயா நம்மிடையே பேச இன்னொரு அழைப்பாளர் வந்திருக்கிறார்.
குரல் : வணக்கம். நான் கிருஷ்ணா வாசுதேவன் பேசுகிறேன்.
அ.நா : வணக்கம் பேராசிரியர் கிருஷ்ணா வாசுதேவன் அவர்களே. நீங்கள் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்களும் ஆசிகளும் இன்றைய தலைமுறையினருக்கு வேண்டும்.
கி.வா. : உங்களுக்கும் திருமகள் என்னும் அந்த இளம் பெண்ணுக்கும் என்னுடைய மனப்பூர்வமான ஆசிகள். திருமகள் : நன்றி ஐயா.
கி.வா. : உ.வே.சா. அவர்களின் சீடர். கி.வா.ஜ. எழுதிய சிறுகதைகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவே அழைத் தேன். கி.வா.ஜ. என்று யாவராலும் அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதன் அவர்கள் தமிழ் அறிஞர். 2012ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா நிறைவுற்றது. கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்தவர். பழந்தமிழ் இலக்கியம் பற்றியும், இலக்கணம் பற்றியும் பல நூல்களை இயற்றியவர். விடையவன் பதில்கள் என்ற பெயரில் கேள்வி பதில் பகுதியில் வாசகர்களின் இலக்கியம் இலக்கணம் சார்ந்த சார்ந்த ஐயப்பாடுகளைப் போக்கியவர். வாகீச கலாநிதி என்று போற்றப்பட்ட கி.வா.ஜ.,சிறுகதைகளும் படைத்துள்ளார். இவருடைய மூன்று சிறுகதைத் தொகுதி களில் கலைச்செல்வி என்ற சிறுகதைத் தொகுதி 1951ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் துணைப் பாட நூலாக இருந் துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய கலைச்செல்வி சிறுகதைத் தொகுதியிலிருந்து இரண்டு சிறுகதைகளை உங்களுக்குக் கூறுகிறேன்.
தீபாவளி விருந்து என்ற தலைப்பிட்ட ஒரு சிறுகதை.
கோபாலன் என்கிற இளைஞர் இங்கிலீஷ்காரன் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றுகிறார். அவருடைய தந்தையார் அந்த ஆண்டு இறந்துவிட்டதால் அவருக்கு தீபாவளி இல்லை. அவனுடைய மேலாளர் ராமதுரை வீட்டிற்கே வந்து சாப்பிட வருமாறு அழைக்கிறார். அவருடைய தாயார் வேண்டாம் என்கிறாள். அதன் பின்னர் மேலாளரின் மனைவியும் வந்து அழைக்கிறாள். தம்பதி சமேதராக வாருங்கள் என்கிறார்கள். தாயார் பாயசம் பருப்பு தவிர்த்து சாப்பிடு என்கிறாள். மறுநாள் தீபாவளி. வீட்டில் பண்டிகை இல்லாததால் நண்பர்கள் நெருங்கிய சொந்தக் காரர்கள் வீடுகளுக்கும் மனைவி இல்லாமல் தான் மட்டும் செல்கிறார் கோபாலன். போகும் இடமெல்லாம் பட்சணங் களையும் இனிப்புகளையும் வெளுத்து வாங்குகிறார். மதிய நேரத்தில் மேலாளரின் வீட்டில் விருந்து. அங்கு தீபாவளிக் காக பாயசம் செய்யாமல் சர்க்கரைப் பொங்கல். சொன்னால் தானே தெரியப் போகிறது சாப்பிடுங்கள் என்கிறார். பண்டிகை கொண்டாடியவர்களுக்கு ஒரு வீட்டு விருந்து. கொண்டாடாதவர்களுக்கு ஊரெல்லாம் விருந்து என்று கோபாலன் நினைத்துக் கொள்கிறார்.
மறுக்க முடியாமல் சென்ற இடங்களில் கொடுத்ததை எல்லாம் வாயில் போட்டுக் கொண்டதால் இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்து படுத்தபோது தலைவலி. அன்றிரவு வயிறு புரட்சி செய்ய ஆரம்பித்தது. அஜீர்ணம், பேதி. அதன் விளைவாக பலவீனம், லேசான ஜுரம்.
சிரமப்பட்டதை எல்லாம் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்தார்.
காலையில் தாயார் எழுந்து வந்து பார்த்தாள். கோபாலன் காய்ச்சலோடு படுத்திருக்கிறார். தாய் பேசுகிறாள் ஆவேசம் வந்தவளாக… ‘நான் அப்பொழுதே சொன்னேனே… வேண்டாம் வேண்டாம் என்று. பிதுர் சாபம் பொல்லாததே. பெரியவர்கள் தெய்வமாக இருந்து குழந்தையைக் காப் பாற்ற வேணும். அடியே மஞ்சள் துணியைக் கொண்டு வா. ஒரு ரூபாயை எடுத்து முடி. இந்த அபச்சாரத்தைப் பொறுத்துக்கொள்ள வேணும்மென்று வேண்டிக்கொள்.. இப்படி முடிக்கிறார் தீபாவளி விருந்து என்ற இந்தச் சிறுகதையை.
அ.நா. : வாயைக் கட்டினால் வம்பு இல்லை.. வயிற்றைக் கட்டினால் துன்பம் இல்லை. இடையூறுக்கு மன்னிக்கவும் கி.வா. அவர்களே. கி.வா.ஜ.வின் மற்றொரு சிறுகதையைப் பற்றிக் கூறுங்கள்.
கி.வா.: இந்தச் சிறுகதைத் தொகுதியின் தலைப்பு கலைச்செல்வி என்று குறிப்பிட்டேன். கலைச்செல்வி என்பது வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு கற்பனைக் கதை. இந்தச் சிறுகதை பற்றி ஆசிரியர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அதை வாசிக்கிறேன் கேளுங்கள்.
‘கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரம் என்ற இடத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவில் உள்ளது. அவன் தந்தையாகிய ரண்டாம் ராஜராஜன் பேரால் அமைந்தது அவ்வாலயம். ராஜராஜேஸ் வரம் என்பதே சிதைந்து தாராசுரம் என வழங்குகிறது. அக்கோயிலில் உள்ள மிக அற்புதமான துவாரபாலிகையின் விக்கிரகம் ஒன்றைக் கண்டு சொக்கிப் போனேன். அந்த உருவத்தின் நினைப்பிலே படர்ந்த கற்பனைதான் இந்தக் கதை. சரித்திரத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதைச் சொல்லி விடுவது என் கடமை.
அ.நா.: இந்தக் குறிப்பைக் கவனத்தில் கொண்டோம். கலைச் செல்வி சிறுகதையைக் கேட்க ஆவல் பெருகுகிறது.
கி.வா. : உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. கலைச்செல்வி சிறுகதையில் வருபவர்கள் சோழ மன்னன் குமார குலோத்துங்கன், ஆடல் அரசி மழலைச்சிலம்பு, மழலைச் சிலம்புவின் தாய். பரதநாட்டியத்தில் கைதேர்ந்த மழலைச் சிலம்பு திருக்கோயிலில் ஆண்டவன் சந்நிதி முன்பு தெய்வப் பனுவல்களை இசைத்து நடனமிடும் கணிகையர் வம்சத்தில் வந்தவள் மழலைச் சிலம்பு. அபிநயத்தால் அரசரின் மனத்தைக் கொள்ளை கொண்ட மழலைச் சிலம்பு திருக்கோயிலில் ஆடாமல் அரண்மனையில் ஆடல் அரங்கில் ஆடி வருகிறாள். இவளுடைய ஆடல் பாடலை ரசிப்பதில் காலம் கழிக்கிறான். ஆண்டவனுக்காகத்தான் இந்தக் கலை என்பதைத் தாய் எடுத்துரைக்கிறாள். இடித்துரைக்கிறாள். மழலைச் சிலம்பு யோசிக்கிறாள்.
மழலைச் சிலம்புவுக்கு காய்ச்சல் கண்டு படுத்திருக்கும் போது அரசன் வருகிறான். அரசனுடன் ஓவியர் ஒருவரும் வருகிறார். அரசன், நீ அபிநயிப்பதை வரைவதற்காகவே வரை அழைத்து வந்தேன் என்கிறான். அப்படியானால், வேண்டுகோள். நான் கூறும் முறையில் இவர் ஓவியத்தை வரைய வேண்டும் என்கிறாள். அரசன் சம்மதிக்கிறான்.
காலக்கிரமத்தில் வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்தில் மழலைச் சிலம்பு என்னும் கணிகை, ஆடல் அரசனாகிய தில்லைக்கூத்தன் நடராஜன் முன்பு நடனமாடுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியம் அரசன் மனத்தை மாற்றியது.
முன்னோர்களின் அரண்மனைகள் இருந்த இடம் தெரியவில்லை. அவர்கள் கட்டிய திருக்கோயில்கள், அவர்களது புகழைச் செப்பிக் கொண்டிருக்கின்றன. எனவே, சிவபெருமானுக்குத் திருக்கோயில் கட்ட சித்தமாகிறான்.
அரசன், குடமுழுக்கு நடக்கும் சில நாட்களுக்கு முன்பாக மழலைச் சிலம்பைத் தேடி வந்தான். அவளை அழைத்துச் சென்று திருக்கோயிலை அவளுக்குச் சுற்றிக் காட்டினான். என் தந்தையார் பெயரில் ராஜராஜேஸ்வரம் என இத்திருக்கோயில் விளங்கும் என்றான். ஒவ்வொரு சந்நிதியாக பார்த்து வந்தார்கள். ஓரிடத்தில் ஒரு சிலை யுருவத்தைத் திரைச்சீலையிட்டு மறைந்திருந்தார்கள்.
அரசன் பேசினான்: நீ உன்னை சித்திரத்தில் வரையச் செய்தாயே. தெய்வத்திற்கு கலையை அர்ப்பணம் செய்வதுதானே உன் விருப்பம்…
கணிகை பேசினாள்: ‘திருக்கோயில் பணியில் அடியாளை ஈடுபடுத்த தேவரீர் நினைப்பது போல் தெரிகிறது. என் பாக்கியம்’
அது மட்டும் அன்று. இந்தச் சந்நிதி உள்ள வரை நீ இருப்பாய்’ அரசன் கூறினான். அரசன் ஜாடை செய்ய ஒருவன் வந்து திரையை விலக்கினான். இந்த உருவம்.. மழலைச் சிலம்புவுக்கு வார்த்தை வரவில்லை.
அரசன் கூறினான்: மழலைச் சிலம்பு மகாதேவியின் உருவம்தான். என் அகங்காரத்தைப் போக்கிக் கலைத் தத்துவத்தை உணர்த்திக் கண்திறக்கச் செய்து இந்த ஆலயம் எழுப்ப அடியிட்ட இந்தக் கலைச்செல்வியினுடையதுதான். இந்த ஆலயம் உள்ள அளவும் அவள் அழகு இந்த உருவத்தில் இருக்கும். கடவுளின் சந்நிதானத்தில் அவள் நிரந்தரமான சேவை செய்ய வேண்டுமென்பதை இந்தப் பேதை இதுகாறும் அறியவில்லை. இப்போது அறிந்து கொண்டேன்.
அதைச் செவியுற்று அவள் மூர்ச்சை ஆகி விட்டாள் என்று முடிகிறது கலைச் செல்வி என்னும் சிறுகதை.
அ.நா. : நன்றி. கிருஷ்ணா வாசுதேவன் ஐயா..கி.வா.ஜ. அவர்களின் சிறுகதைகளை நினைவுப்படுத்திப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
கி.வா. : நன்றி. விடை பெறுகிறேன்.
அ.நா. : கி.வா.ஜவின் கதைகள் பற்றி கி.வா. நன்றாக எடுத்துரைத்தார்.
திருமகள் : சார். சிறுகதைகள், படைப்பாளர்கள் பற்றி எல்லாம் பேசினோம். தமிழில் முதல் சிறுகதை என்று எதனைச் சொல்வீர்கள்? யார் எழுதியிருப்பார்கள்?
அ.நா. : நாமாக ஒரு தகவலைச் சொல்வதைக் காட்டிலும் ஆய்வறிஞர்கள் கண்டறிந்த தகவல்களைக் கூறுவதே சாலச் சிறந்தது. தமிழறிஞர், ஆய்வறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி என்ற தமது ஆய்வு நூலில் சிறுகதை என்ற தலைப்பிலான அதிகாரத்தில் சிறுகதைகள் பற்றி ஆராய்கிறார். அவர் குறிப்பிடும் சில தகவல்களை அவரது வார்த்தைகளில் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அறிஞர் கூறுகிறார் : “நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள், மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்பு பற்றிய வணிக மாதின் கதை செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையேயாகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நலமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும்.
இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும், சீவகசிந்தாமணியிலும் பல சிறுகதைகள் செருகப் பெற்றுள்ளன.
தொல்காப்பியத்திற்குப் பின்பு எழுந்த கலித்தொகைச் செய்யுட்களுள் பல, சிறுகதை நிகழ்ச்சிகளைக் கொண்டவையாகும்.
அகநானூறு, குறுந்தொகை என்னும் அகப்பொருள் செய்யுட்களிலும் சிறுகதைக்குரிய உயிர்நாடியான குறிப்புகள் மலிந்து கிடக்கின்றன. ஆயினும் அவை கதை வடிவத்தில் உரைப்போக்கில் இல்லை.
நாம் முதன்முதலாகத் தமிழில் காணும் சிறுகதைகள் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகள் என்பவையாகும். தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள், வீராசாமிச் செட்டியார் எழுதிய வினோதரச மஞ்சரியில் காணப்படும் பல கதைகள் பத்தென்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலிருந்து பல கதைகள் தமிழில் எழுதப் பெற்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும் கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேனாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர்.
பண்டித நடேச சாஸ்திரியார் (1859 – 1906) ஈசாப் கதைகள், தக்காணத்துப்பூர்வ கதைகள், மத்திய காலக் கதைகள் என்று மூன்று கதை நூல்களை எழுதினார்.
இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வ கேசவராய முதலியார் எழுதிய அபிநய கதைகள் காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு.அய்யர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதி யுள்ளார்.
கவியரசர் பாரதியாரும், இராமானுசலு நாயுடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எஸ்.வி.வி., கொணஷ்டை ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர்”
இப்படியாக அறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் கூறியுள்ளார். இதிலிருந்து சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
திருமகள்: எப்படி சிறுகதைகள் எழுத வேண்டும் என்று யாராவது இளம் எழுத்தாளர்களுக்குச் சொல்லிக் கொடுத் திருக்கிறார்களா? ஐயா.
அ.நா. : குமுதம் வார இதழில் அதன் துணை ஆசிரியராகப் பணி ஆற்றிய பன்முக எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள், எப்படி கதை எழுதுவது என்ற ஒரு தொடர் எழுதினார். படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்த இந்த கட்டுரைத் தொடர் 1987ஆம் ஆண்டு வெளிவந்தது. சமீபத்தில் குமுதம் நிறுவனத்தினர் இதனைப் புத்தகமாக வெளி யிட்டுள்ளார்கள். சிறுகதைகள், நாவல்கள் எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய பலவழிமுறைகளை அவர் வாசகர்களுக்கு எடுத்துரைத்தார். பல சூட்சுமங்களைப் போட்டு உடைத்தார்.
திருமகள் : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி நடை தனி பாணி எழுத எழுத வசப்படும் அல்லவா?
அ.நா. : ஆமாம். எர்ணஸ்ட் ஹெமிங்வேயின் புனை கதைகள் சம்பாஷைணைகளிலேயே கொண்டு செல்லப் படும் என்று சொல்வார்கள். வர்ணனை, விவரித்தல் ஆகியவற்றுடன் உரையாடல்களும் சிறுகதைகளிலும் புதினங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கு கின்றன.
திருமகள் : சார். இப்ப ஒரு அழைப்பாளர் வந்திருக்காரு. வணக்கம்.
குரல் : வணக்கம். நான் சைதாப்பேட்டை லாரன்ஸ் பேசுகிறேன்.
அ.நா. : வணக்கம். லாரன்ஸ் சொல்லுங்க.
லாரன்ஸ் : சிறுகதைகளைப் பற்றி விரிவாக விவரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நிகழ்ச்சியில் சிறுகதைகளி லிருந்து சுவையான பகுதிகளை மேற்கோளாகக் குறிப்பிட லாமே..
அ.நா. : தங்கள் ஆலோசனைக்கு நன்றி லாரன்ஸ்.
லாரன்ஸ் : முதலில் நானே ஒரு மேற்கோளை உங்கள் அனுமதியுடன் முன் வைக்கிறேன்.
அ.நா. : அப்படியே ஆகட்டும். கேட்க ஆர்வமாக உள்ளோம்.
லாரன்ஸ் : பிரபஞ்சன் அவர்கள் எழுதிய சுமதிக்கு ஒரு கடிதத்திலிருந்து ஒரு மேற்கோளை நான் வாசிக்கிறேன். “உன் கடிதம் இப்போது என் கைகளில். என் கைகளுக்குள் நீயே இருப்பதாக ஒரு எண்ணம். தப்பில்லையே. கடிதங்கள் மனிதர்களின் வேறு வடிவங்கள்” நன்றி.
அ.நா. : நன்றி. நன்றாக இருந்தது தாங்கள் அளித்த மேற்கோள்.
திருமகள் : அய்யா. மற்றொரு அழைப்பாளர். வணக்கம். குரல் : வணக்கம்மா. நான் தமிழ் நேசன் பேசுகிறேன். வணக்கம் அரங்கநாதன்.
அ.நா. : வணக்கம் அய்யா.
தமிழ்நேசன் : எனக்கு இப்பொழுது அகவை எண்பது. இருபது வயதிலிருந்து தமிழ் இலக்கியங்களை வாசித்து வருகிறேன்.லாரன்ஸ் மேற்கோள் பகிர்ந்து கொள்வதைத் தொடங்கி வைத்தார். நானும் ஒரு மேற்கோளைப் பகர்ந்து கொள்ள விரும்புகிறேன். லா.ச.ரா. அவர்களின் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விளக்கம். வாசிக்கிறேன். செவிமடுங்கள்.
”எழுத்தைச் சாதகம் செய்து கொண்டிருப்பதிலே எனக்குக் கிடைக்கும் பெரும்பேறு மனித மாண்பை அதன் தருணங்களில் தரிசனம் காண்பதுதான். இது விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன். புண்ணிய காலமென்று ஒன்று உண்டா என்ன? இவற்றைப் பற்றி எனக்குச் சொல்லக் கிடைக்கிறதே இதுதான் புண்ணிய காலங்கள். நேர்ந்து கொண்டே இருக்க வேண்டும்”
நன்றி அரங்கநாதன். வாழ்க வளமுடன்.
அ.நா. : நன்றி அய்யா.
திருமகள் : சார். ஒவ்வொருத்தரும் மேற்கோள் சொல்லி அசத்தறாங்க. நான் என் கைவசம் இருக்கிற மேற்கோளைப் படிக்கிறேன்.
அ.நா. : சரி. வாசியுங்கள்.
திருமகள் : வண்ண நிலவன் கூறுகிறார் : “சொல்வதற்கு என்று எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று. எல்லாவற்றையும் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லாரையும் போலத்தான் வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.
அ.நா. : சைதாப்பேட்டை லாரன்ஸ், சிறுகதைகளிலிருந்து படித்த பிடித்த மேற்கோள் தர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழ்நேசன் அவர்களும் நீங்களும் வாசித்த மேற்கோள்கள் இலக்கியங்களுடன் தொடர்பு உடையவை. எனினும்..
திருமகள் : சிறுகதைகளிலிருந்து மேற்கோள் வேண்டும் என்கிறீர்கள். நேயர்கள் தருவார்கள்.
குரல் : வணக்கம் அய்யா. வணக்கம் மேம்.
திருமகள் / அ.நா. : வணக்கம். உங்கள் பெயர்?
குரல் : நெய்வேலியிலிருந்து தீனதயாளன் பேசுகிறேன். சிறுகதை மேற்கோள்களுக்காக நான் தங்களிடம் ஒரு மேற்கோளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பூமணி என்னும் மண்வாசனை மிக்க எழுத்தாளர். இவரது நல்ல நாள் என்ற சிறுகதை தொகுப்பு இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அக்னி அட்சர விருது பெற்றேது. இதில் நல்ல நாள் சிறுகதையிலிருந்து அவருடைய நலம் மிக்க வரிகள் இதோ..
‘அய்யம்மா மூக்கையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள். அவிழ்ந்த கொண்டையைக் கூட முடிய நேரமில்லை. புகை மண்டலில் தகரக் குழலால் அடுப்புக்கு முன்னால் விழுந்து விழுந்து ஊதவே சரியாக இருந்தது. பானையில் சோற்றுக் கொதிப்பு சில நேரம் கொந்தளித்து வெளியேறியது. முண்டியடிக்கும் சோற்று நீரை அகப்பை யால் ஆற்றிக் கொடுத்தாள். பருக்கையை நசுக்கிப் பதம் பார்த்தாள். பிறகு அகப்பையை விளிம்பில் தட்டி பானை மீது படுக்க வைத்து விட்டு தீமுகத்திலிருந்து கொஞ்சம் திரும்பி வேர்வையைத் துடைக்க முந்தானை தேடினாள்.
உள்கூரையில் ஒட்டடை கருப்புத் திரிகளாகத் தொங்கியது. மூணு வருசமாக கூரை மேய முடியவில்லை. ஒவ்வொரு வருசமும் மேயணுமென்று தட்டை யெடுத்து வைப்பதுதான். கடைசியில் மாட்டுக்குக் கூளம் பற்றாமல் அதுக்கே இழுத்துக் கொள்கிறது.
நாலு பிள்ளைக்குத் தாயாகியும் உஸ்ஸென்று வீட்டிலிருந்தது கிடையாது. ஓயாத வேலை. அப்படியும் சில சமயம் சோற்றுக்குத் தட்டி விடுகிறது. இத்தனைக்கும் வந்த நாளிலிருந்து நல்ல சேலை எடுத்துக் கட்டியதுண்டா… நல்லது பொல்லது அனுபவித்ததுண்டுமா… அதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தித்தான்.” ஓர் இல்லத்தரசியின் இயல்பும் நினைவுகளும் இவ்வாறு பொங்குகின்றன வர்ணனையில். நன்றி. விடைபெறுகிறேன்.
அ.நா. : நன்றி.
திருமகள் : ஐயா. நேயர்கள் தேடிப் படிப்பதற்காக. பூமணி அவர்களின் பிற சிறுகதைத் பிற சிறுகதைத் தொகுதிகளைப் பற்றி கூறுங்களேன்.
‘ரீதி’ ‘நொறுங்கல்’ ஆகியவை இவரது பிற சிறுகதைத் தொகுப்புகளுள் அடங்கும். பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வண்டல் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.
குரல் : வணக்கம். நான் திருநெல்வேலி ரஹ்மான் பேசுகிறேன்.
அ.நா. : வணக்கம் ரஹ்மான் அவர்களே. மேற்கோள் கைவசம் வைச்சிருக்கீங்களா?
ரஹ்மான் : இருக்குங்க ஐயா. வாசிக்கிறேன். பிரபஞ்சன் அவர்கள் எழுதிய எங்கள் தெருவில் யானை என்ற சிறுகதையிலிருந்து…
“தெருவுக்கு என்று முன்பெல்லாம் சில விசேஷமான மனிதர்கள் வருகை புரிவார்கள். குட்டி மலைப்பாம்பைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு, வழவழப்பான தடியில் மிட்டாய் விற்றுக் கொண்டு மிட்டாயாலேயே குழந்தை களுக்கு வாட்சு, மோதிரம் ஆகியவைகளைத் தந்து இன்புறுத்திய ஒருவன், வண்ண ஜவ்வுத் தாள், கண்ணாடி விற்கும் ஒருவன், சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா போன்ற விநோதமான வர்ணங்களில் சர்பத் விற்கிற ஒருவன். பதினைந்து பைசாவுக்கு பஞ்சாமிர்த ஐஸ் விற்கிற ஒருவன் என்று ஒரு அபூர்வமான தெருவுக்கு ஜீவன் தருகிற மனிதர்கள் காணாமலேயே போய் விட்டார்கள். சமயங்களில் தெரு தன் பழைய அழகுகளை நினைவுக்குக் கொண்டு வந்து வருத்தப்படக் கூடும்.” நன்றி. ஐயா.
அ.நா. : நன்றி. கால மாறுதல்கள் நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தி உள்ள மாற்றங்களை அழகாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர். வீட்டுக்கு வீடு நல்லசேதி சொல்ல ஆள் இல்லை. காணாமல் போன குடுகுடுப்பைக்காரர்கள் என்று என் நண்பர் அனந்தபுரம் அரங்கன், துளிக் கவிதை எழுதினார்.
திருமகள் : செண்பகப் பாண்டியன் என்ற நேயர் நம்முடைய மின்-அஞ்சல் முகவரிக்கு ஒரு மேற்கோளை அனுப்பியிருக்காரு. இது சிறுகதையிலிருந்தான மேற்கோள் அல்ல. ஒரு படைப்பாளர் தம்மைப் பற்றி குறிப்பிட்டது. இந்நிகழ்ச்சியில் இந்த வேளையில் பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து எழுதியிருக்காரு. வாசிக்கலாமா?
அ.நா. : வாசியுங்கள்.
திருமகள் : அசோகமித்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிடு கிறார்.
‘ஒருவன் ஒரு முறை, ஐந்து முறை, பத்து முறை கூட சாமர்த்தியமாக அவனுடைய உள்ளுணர்வை கூட மறைத்து எழுதி விடலாம். ஆனால், சுமார் தொடர்ந்து எழுதி வந்தால் அவன் உள்ளிருப்பது அனைத்தும் வெளிக்காட்டப்படாமல் இருக்க முடியாது. ஆதலால், அவனுடைய படைப்புகளைப் படிப்பதைக் காட்டிலும் சிறந்த நேர்காணல் இருக்க முடியாது. என்னை அறிவது யாருக்காவது முக்கியமானால், அவரை என் படைப்புகளைப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.”
அ.நா. : படைப்புகளே படைப்பாளியைப் பற்றிப் பறைசாற்றும் என்கிற கருத்து நன்றாக இருக்கிறது. மூத்த எழுத்தாளரின் கருத்தை இன்றைய இளம் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது என்று நான் கருதுகிறேன். இப்போது பேராசிரியர் முத்துக்குமரன் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
திருமகள் : நீங்கள் பார்த்து விட்டீர்களா?
அ.நா. : அவர் அனுப்பியிருப்பது கால் முளைத்த மனம் என்ற சிறுகதையின் தொடக்க வரிகள் எழுதியவர் எஸ். வைதீஸ்வரன் என்ற எழுத்தாளர். “பனிக்காலம். மழை அலம்பி விட்ட தெருக்களில், சாம்பிராணிப் புகை படர்ந்திருக்கிறது. நோட்டீஸ் ஒட்டாதே சுவர்களில் அங்கங்கே பாதி கிழிந்து தொங்கும் சினிமா நடிகர்களின் முகங்கள். கீழே அறுந்து தொங்கும் டெலிபோன் கம்பிகள். மூடிக் கிடக்கும் கடைவாசல்களில் கயிற்றுக் கட்டில்களில் விழித்துக் கொண்டு கொட்டாவி விடும் தெருவாசிகள் கலைந்து விட்ட ஸர்க்கஸ் கம்பெனி மாதிரி உலகமே காட்சியளிக்கிறது. இரவில் ஆடிக் களைத்து விட்டு, அமைதி கிடைக்காத கவலையும் நிராசையும் தெரு மண்ணின் ஈர வாடையில் நெடியடிக்கிறது.
திருமகள் : நன்றி ஐயா. இப்பொழுது ஓர் அழைப்பாளர் வந்திருக்கிறார். வணக்கம்.
குரல் : இருவருக்கும் வணக்கம். என் பெயர் கார்த்திக் ராஜ்குமார். வண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அடி’ என்ற சிறுகதையிலிருந்து ஒரு மேற்கோளை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
அ.நா. : படியுங்கள்.
கார்த்திக்: “நான்கு பிரம்பு நாற்காலிகளைப் பழுது பார்க்க நான்கு வாரங்கள் என்பது நியாயம்தானே! இந்த ஊரில் பிரம்புவேலை செய்கிறவர் களே அபூர்வம் போல ருக்கிறது. எல்லாம் நைலான் வயர் மயமாகிவிட்டது. இப்போது பிறக்கிற விரல்களுக்கு எல்லாம் பிரம்பு என்கிற விஷயம் இருப்பதும் உறுதியும் வழவழப்பும் வளைந்து கொடுக்கிறதும் நிமிர்ந்து கிடக்கிற நேர்த்தியும் தெரியுமா என்பதே கஷ்டம்.
என்ன இருந்தாலும் மண்ணில் முளைத்து, வனத்தில் கொடிக்கொடியாப் படர்ந்து வெயிலில், மழையில், பனியில் எங்கேயாவது மலையுச்சியில் கிடந்த பிரம்பும், சாயமும் ரசாயனமும் இயந்திரமும் கக்கின நைலான் வயரும் ஒன்றாகிவிடுமா? ஆகாது அல்லவா. நான் எப்போதும் உட்கார்ந்திருக்கிற கனத்த வட்டமான நாற்காலியின் பிரம்பு. காட்டில் தொய்ந்து கிடந்தபோது ஒரு அணிலோ கருங்குரங்குக் குட்டியோ, செம்மண் நிறத்தில் ஒரு பறவையோ அதில் உட்கார்ந்து பறந்திருக்கக் கூடும் அல்லவா. இவள் உட்கார்கிற சன்னமான நாற்காலியின் பிரம்புகள் இளசானவை. அவைகளும் பச்சைப் பாம்புகள் போலத்தான் மரத்தின் மேல் கிடந்திருக்கும். ஒரு பால்குடி மறக்காத யானைக் குட்டியின் துதிக்கை வளைத்து வளைத்து முறித்த பசுமையுடைய குருத்தாக அவை இருந்திருக்கலாம் தானே?”
திருமகள் : நன்றி கார்த்திக். ரொம்ப ஃபீலிங் கோட எக்ஸ்பிரனோட வாசிச்சுக் காமிச்சீங்க. நன்றி. மற்றொருவர் அழைக்கிறார்.
குரல் : வணக்கம். நான் பூவழகி பேசுகிறேன். வணக்கம் ஐயா.
திருமகள் : வணக்கம்.
அ.நா. : வணக்கம். சொல்லுங்கள். உங்கள் குரலே கம்பீரமாக இருக்கிறது. நீங்கள் ஆசிரியரா?
பூவழகி : நான் டாக்டர் ஆகப் பணிபுரிகிறேன்.
அ.நா. : மனித குலத்திற்கு மகத்தான சேவை செய்பவர் நீங்கள்தான்.வாழ்த்துக்கள்.
பூவழகி : நன்றி. நம் தமிழ் இலக்கியத்தில் கவுந்தியடிகள் என்னும் பெண் துறவியை இளங்கோவடிகளின் சிலம்பில் பார்த்தோம். அதன் பிறகு எனக்குத் தெரிந்த வரை இலக்கியத்தில் பாரதி காட்டிய ஒரு பெண் சாமியார்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பாரதியார் அவர்களின் சிறுகதையில் – மிளகாய்ப் பழச் சாமியார் கதையில்தான் இந்தப் பக்குவப் பெண்மணி காட்டப்படுகிறார்.
பாரதியாரின் கதைகளில் வரும் வேதபுரம் ஊர்தான் இந்தக் கதையிலும் வருகிறது.
எல்லோரும் வந்து வணங்கிச் செல்லும் நிலையில் இருக்கும் மிளகாய்ப் பழச்சாமியார் என்னும் மாது, கதாசிரியரின் வீடு தேடி வருகிறாள். அவரைக் கும்பிடுகிறாள். வயதில் பெரியவள். துறவி, “எதன் பொருட்டு கும்பிடுகிறீர்! என்று கேட்கிறார் கதாசிரியர்.
பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற சகாயம் செய்ய வேண்டும் என்கிறாள் அந்த மாது.
செய்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார் ஆசிரியர்.
அதன் பின்னர் அவள் ஆசிரியரின் வீட்டிலேயே சிறிய உபந்நியாசம் செய்கிறாள்.
திருமகள் : தேங்க்ஸ் டாக்டர். மருத்துவர் ஒருவர் லக்கியத்தில் காட்டும் ஆர்வம் வியப்பைத் தருகிறது.
அ.நா. : மருத்துவர்கள் பலர் இலக்கியத்திற்கு காத்திர மான பங்களிப்பை அளித்துள்ளனர். பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட லக்ஷ்மி என்ற எழுத்தாளர் டாக்டர். இவரது இயர்பெயர் திரிபுரசுந்தரி.
திருமகள் : தகவலுக்கு நன்றி. மிளகாய்ப் பழச்சாமியார் ஒரு பெண்மணி என்பது டாக்டர் சொல்லித்தான் தெரிந்தது. அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டதன் பெயர்க் காரணத்தை மேடம் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுங்கள். நானும் நேயர்களும் தெரிந்து கொள்கிறோம்.
அ.நா. : மிளகாய்ப் பழச்சாமியார், சரீரத்தில் நல்ல பலமும் வீர தீர பராக்கிரமங்களும் உடையவள் என்று விவரிக்கிறார். முகம் முதிர்ந்த உறுதியான ஆண் முகம் போலிருக்கிறது. அத்துடன் பெண்ணொளி கலந்திருக்கிறது. கண்கள் பெரிய மான் விழிகளைப் போல் இருக்கின்றன. திருக்கார்த்திகையன்று அடியார்கள் சேர்ந்து இவளுக்கு மிளகாய்ப்பழத்தை அரைத்து உடம்பெல்லாம் தேய்த்து ஸ்நானம் செய்விக்கிறார்கள். அதனாலேதான் இவளுக்கு மிளகாய்ப்பழச் சாமியார் என்ற நாமம் ஏற்பட்டது என்கிறார் கவிஞர் பெருமான். இவரைப் பற்றி எழுதியிருப்பதால் பாரதியார், புதுவையில் சந்தித்த சான்றோர்களில் இவரும் ஒருவராக இருக்கலாம். அவரையே கதையில் காட்டி யிருக்கிறார்.
திருமகள் : குள்ளச்சாமியார் போல் அல்லவா.?
அ.நா. : ‘நீங்களும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
திருமகள் : தங்களுடைய காற்று தரும் பெ பெருமை. பெண்விடுதலை பற்றியே பாரதியார் இச்சிறுகதையிலும்
முரசு கொட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னிக்கவும். நீங்கள் சொல்ல வேண்டிய கருத்தை நான் சொல்லிவிட்டேன்.
அ.நா. : சரியாகத்தான் சொன்னீர்கள். பாரதியின் பெண் விடுதலை பற்றி, ஒரு பெண்மணி பேசுவதுதானே பொருத்தம்..
அ.நா. : அடுத்து.. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் நுண்ணிய உணர்வுகளை அதுவும் சீனியர் சிட்டிசன் எனப்படும் மூத்தத் தமிழ்க்குடிமகன் ஒருவரின் தேசபக்தியைப் பிரதிபலிக்கும் விதமாக லங்கை எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் எழுதிய நேதாஜியின் நாற்காலி என்ற சிறுகதை பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திருமகள் : ஓ.. நீங்களே கூறுகிறீர்களா.. சொல்லுங்கள்.
அ.நா. : நாகலிங்கக் கவுண்டருக்கு இன்னொரு பெயர் இருந்தது. நாற்காலித் தாத்தா என்பதாகும் என்று சிறுகதையின் முக்கியப் பாத்திரத்தை அறிமுகப்படுத்து கிறார் கதாசிரியர். மலேசியத் தமிழர்களுக்கு நாற்காலித் தாத்தா என்று அறிமுகம் ஆனவர். இனி மாத்தளை சோமு அவர்களின் சித்தரிப்பில் இந்தச் சிறுதைச் சுருக்கம்…
எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கங்கள் கொடுத்து உருவாக்கப்பட்ட நாற்காலி. நாகலிங்கக் கவுண்டர், நல்ல நாள் நேரம் பார்த்து அந்த நாற்காலியில் உட்கார வேண்டும் என்று தன் மனைவியிடம் கூறுகிறார் அவர். அவருடைய மனைவி கிண்டலாகக் கேட்கிறார்: நாற்காலியில் உட்கார நல்லநேரம் பார்க்கணுமா?
அதற்கு நாகலிங்கக் கவுண்டர் இது நா சொல்லிச் செஞ்சது. அதும் தேக்கு மரத்தில செஞ்சது. ஒக்கார நல்ல நேரம் பார்க்கணும் ம் என்று பதில் கூறுகிறார். சிங்கப்பூர் ஜப்பானியரின் ஆட்சிக்குள் இருந்த காலத்தில் நேதாஜி அங்கு வருகிறார். நாகலிங்கமும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராவுத்தரும் நேதாஜியைப் பார்க்கப் புறப்படுகிறார்கள். நேதாஜியை நேருக்கு நேர் பார்ப்பதற்காக மேடையருகே போய் நின்றார்கள். அங்கே போட்டிருந்த நாற்காலிகளைப் பார்தார்கள். மேடையில் தலைவர் ஒக்கார நல்ல நாற்காலி உங்களுக்கு கெடைக்கலியா என்று கேட்டார் ராவுத்தர்.
ராவுத்தர் நாகலிங்கக் கவுண்டரைப் பார்க்க, அவர் ‘என்கிட்ட தேக்கு மரத்துல செஞ்ச நாற்காலி இருக்கு. நானே இன்னும் ஒக்காரல. எடுத்திட்டு வரவா’ என்று கேட்கிறார்.
அங்கிருந்த சிப்பாய் கொண்டாங்க தலைவர் ஒக்காரலாமே என்கிறார்.
நாகலிங்கம் வீட்டுக்குப் போனார். அவருக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ தெரியவில்லை. அந்த நாற்காலியை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். மேடையில் இருந்த நாற்காலியை எடுத்துவிட்டு நாகலிங்கத்தின் தேக்குமர நாற்காலியைப் போட்டார்கள். அது மற்ற நாற்காலியை விட உயரமாகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. நேதாஜி மேடைக்கு வந்த நாகலிங்கத்தின் நாற்காலியில் உட்கார்ந்தார். நாகலிங்கத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி. எப்பேர்ப்பட்ட தலைவர். பிரிட்டிஷ்காரனே பயப்படுகிற தலைவர். அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்தது வாழ்க்கையில் கிடைத்த பரிசாக நினைத்தார் அவர் நாற்காலியை செய்து கொண்டு வந்த சீனனை மனதுக்குள் பாராட்டினார்.
தலைவர் நேதாஜி உட்கார்ந்துவிட்டுப் போகிற காலமறிந்து நாற்காலியைக் கொண்டு வந்து கொடுத்தானே!
ஒரு மாமன்னரைப் போல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த நேதாஜியையேப் பார்த்தார் நாகலிங்கம்.
மேடையை விட்டு இறங்கிய நேதாஜியை நெருங்கிப் பார்க்க முண்டியடித்தார்கள். நாகலிங்கத்தால் அவரை நெருங்க முடியவில்லை. அவர் போன பிறகு மேடைக்குப் போய் அந்த நாற்காலியைத் தொட்டுக் கும்பிட்டு தூக்கிக் கொண்டு போனார்.
அந்த நாற்காலியில் வேறு எவரும் உட்கார்ந்ததில்லை. சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்தபோதும் எத்தனையோ பொருட்களை விட்டு வந்தவர், அந்த நாற்காலியை மட்டும் விடவில்லை.
காலங்கள் உருண்டோட, எதிர்வீட்டு சீனனுடைய விருந்துக்காக இருக்கிற நாற்காலிகளுடன் நாகலிங்கக் கவுண்டர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்த நாற்காலி யையும் அவர் இல்லாத நேரத்தில் அவரது மகன் கொடுத்து விடுகிறார்.
இரவெல்லாம் நாகலிங்கக் கவுண்டர் தூங்கவில்லை. நாற்காலியை நினைத்துக் கொண்டே படுக்கையில் கிடந்தார். விடிந்தது. ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிற நாகலிங்கம் படுக்கை விட்டு எழும்பவே இல்லை.
எல்லாரையும் காலையில எழுப்பி விடுகிற அவரை எட்டு மணிக்கு மேல் எழுந்த மகனும் மருமகளும் எழுப்பி விடப் பயந்தார்கள். படுக்கையை விட்டு எழுந்ததும் நாற்காலியைக் கேட்டால்?
நாகலிங்கக் கவுண்டர் படுத்ததும் பன்னிரண்டு மணிக்கு மேல் சீனன் வீட்டில் அடிதடி சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க மகனும் மருமகளும் போனார்கள். பர்த்டே பார்ட்டிக்கு வந்த இருவர் குடிபோதையில் போட்ட சண்டையில் ஒருவன் நாகலிங்கத்தின் நாற்காலியைத் தூக்கிப் போட அதன் கைப்பிடி உடைந்து போனது. சண்டையை விலக்கி விட்ட சீனன் கவலையோடு அந்த நாற்காலியை ரிப்பேர் செய்து தருவதாகச் சொன்னான். அவன் செய்வானா? அதை எப்படிச் சொல்வது?
காலை பதினொரு மணிக்கு மேலாகியும் நாகலிங்கக் கவுண்டர் எழும்பவே இல்லை. ஒரு நாளும் அவர் இப்படிப்
படுத்திருந்ததே இல்லையே. படுக்கையருகே போய் உடலைத் தொட்ட அவருடைய மனைவியின் அலறல் அந்த வீட்டையே குலுக்கியது.’ இவ்வாறு முடிகிறது நேதாஜியின் நாற்காலி என்னும் தலைப்பிலான மாத்தளை சோமு அவர்கள் எழுதிய நெஞ்சை உருக்கும் சிறுகதைப் படைப்பு. 10.2.2013 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் இச்சிறுகதை வெளியிடப்பட்டுள்ளது.
திருமகள் : ஆமாம். நெஞ்சை உருக்குவதாக இருந்தது சார் சிறுகதை. சார் நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதிக்கு வந்திருக்கிறோம். நிறைவாக நான் ஒரு சிறுகதையைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அ.நா. : சொல்லுங்கள். கேட்போம்.
திருமகள் : சாயாவனம் என்ற புதினத்தின் மூலம் தமிழ் லக்கிய உலகில் புகழ் பெற்ற முதுபெரும் எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களின் மேஃபிள் வனம் சிறுகதை. வெளிநாட்டு சூழலை தமிழ்ச் சிறுகதையின் ஆசிரியர் வடித்திருப்பது இச்சிறுகதையின் தனிச் சிறப்பு.
இச்சிறுகதை மார்ச் 2013 மாதத்தில் அகில இந்திய வானொலியின் ரெயின்போ பண்பலையின் இலக்கிய நிகழ்ச்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. திருமதி சௌம்யா வெங்கடேசன் அவர்கள் இச்சிறுகதையை உணர்ச்சி பொங்க வாசித்துக் காட்டினார்.
அ.நா. : மேஃபிள் வனம் – சிறுகதையின் தலைப்பே கவர்ந்து இழுக்கிறது. மேலே கூறுங்கள்.
திருமகள் : மேஃபிள் வனம் சிறுகதையை சௌம்யா வெங்கடேசன் அவர்களின் குரலில் உணர்ச்சி பொங்க வாசிக்கப்பட்ட பிறகு இந்தக் கதை பற்றிய அறிமுகத்தை சா. கந்தசாமி அவர்கள் வழங்கினார்கள். அவருடைய உரையிலிருந்து சில சிறப்பம்சங்கள்: “மேஃபிள் வனம் என்பது மேஃபிள் மரங்கள் நிறைந்த வனம். வட அமெரிக்காவில் கனடாவில் இருக்கிறது. கனடா என்பதற்கு கிராமம் என்ற பொருள் மேஃபிள் முக்கியமான நேர்த்தியான மரம். இந்த மரம் பச்சையாகத் துளிர்த்து ஆகஸ்டு செப்டெம்பர் மாதங்களில் இலைகள் பழுத்து கீழே கொட்டுகிறது. இலைகள் கொட்டும்போது அப்பொழுது தரை சிவப்பாக இருக்கும். இந்த மரம் பூத்திருக்கும்போத வானம் சிவப்பாக இருக்கும். இந்தச் சிறுகதை செவ்விந்தியர்களைப் பற்றிய கதை. நான் இரண்டு ஆண்டுகள் கனடாவில் வெங்குவர் என்ற நகரத்தில் இருந்தேன். அங்கு இந்தக் கதை தோன்றியது. சால்வன் என்பது நன்னீர் ஏரியில் தோன்றுகிறது. இதன் கதை காவியம் போன்றது. இந்தக் கதையில் வருகிற அன்னகோவா என்ற செவ்விந்தியப் பெண் உத்தமமான பெண். தமிழில் கூறப்பட்ட மணிமேகலை போன்றவள். மணிமேகலை எப்படி பசித்தவர்களின் பசி ஆற்றினாளோ அது போல் இவள், துயரப்படுகிற ஒரு வெண் கரடியைத் துப்பாக்கிக் குண்டிலிருந்து காப்பற்றுவதற்காக தன்னை இழந்து நிற்கிறாள்.
இந்தக் கதை என்பது அதுமட்டும் அல்ல. சொல்லப் பட்டதை விட சொல்லாமல் விட்டது அதிகம். அது படிப்வர்களுக்குப் புரியும்.”
அ.நா. : அறிமுகம் அசத்தலாக இருக்கிறது. சிறுகதை பற்றி கூறுங்கள்.
திருமகள் : அசத்தல்னு எங்க வார்த்தையைப் பிடிச்சுக்கிட்டீங்களா. சா. கந்தசாமி சார் தம்முடைய அறிமுக உரையில சொல்லி இருக்கிற மாதிரி அவர் இந்தக் கதையில மேஃபிள் வனத்தைப் பத்தி செவ்விந்தியர்களைப் பத்தி வெள்ளையர்களைப் பத்தி ஒவ்வொன்னா இழை இழையா நமக்கு ப்ரசென்ட் பண்றாரு.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாரதி பாடினாரே அது போல் உயிர்களிடத்து அன்பு செலுத்துகிற அன்னாகோவா, ஊர்
ஊராகச் சென்று கதை சொல்கிறவள். தன்னுடைய பணிக்கு இடையூறாக இருக்கும் என்று குழந்தைகளைக் கூட பெற்றவனிடம் கொடுத்துவிட்டு பணியைத் தொடங்கு கிறாள். கையைப் பார்த்து குறிசொல்கிறவளும் கூட. இந்தக் கதையில் செவ்விந்தியர்களின் வாழ்க்கையும் சித்தரிக்கப் படுகிறது.
அன்னாகோவா என்னும் பெண்மணி, மேஃபிள் வனத்தினூடே சென்று கொண்டிருக்கும்போது அணில்களிடம் பேசியபடி செல்கிறாள். சால்வன் மீன்களைப் பார்க்கிறாள். அங்கே குதிரைகளில் வந்த சிப்பாய்கள், இவளைப் பார்த்தவுடன் இவளைப் பற்றிப் பேசுகிறார்கள். வெண்கரடி ஒன்று வருகிறது. அதனைச் சுட ஒருவன் துப்பாக்கியைத் தயார்ப்படுத்துகிறான். அப்பொழுது அன்னாகோவா, குழைந்தபடியே பேசி நானும் வருகிறேனே என்று குதிரைமீதேறி அவனை அணைத்துக் கொள்கிறாள். வெண்கரடி ஓடுகிறது.
அ.நா. : சா. கந்தசாமி அவர்கள், அவரே கூறியது போல் இவள் உத்தமமான பெண். தன்னை இழந்து ஒரு ஜீவனைக் காபந்து செய்திருக்கிறாள். தமிழர்களைப் பற்றி இலக்கியம் படைத்த சா. கந்தசாமி அவர்கள், செவ்விந்தியர்களைப் பற்றிய நேர்த்தியான பதிவைப் படைத்துள்ளார் என்பது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
அ.நா. : சிறுகதைக் கடலில் நமக்குக் கிடைத்த சில முத்துக்களை நேயர்களுக்குக் காட்டி நின்றோம். மேலும் பல முத்துக்களை நேயர்கள் தேடித் தேடிக் கண்டெடுப்பார்கள் என்று நம்புகிறோம். நன்றி.
திருமகள் : நன்றி ஐயா. நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நேயர்களிடமிருந்து விடைபெறுவது திருமகள்.
அ.நா. : திருமகள் அவர்களே. நிகழ்ச்சியை முடிப்பதற்கு முன்பாக, பிற மொழி சிறுகதை இலக்கிய ஆளுமைகளின் பெயர்களை நேயர்களுக்குத் தெரிவிக்கலாமா?
திருமகள் : கண்டிப்பாக.
அ.நா. : கன்னடத்தில் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், மராத்தியில் வி.ச. காண்டேகர், மலையாளத்தில் எஸ்.கே. பொற்றேகாட், எம். டி. வாசுதேவ நாயர், தகழி சிவசங்கரம் பிள்ளை….. தெலுங்கில் சரஸ்வதி தேவி, பலகும்மி பத்மராஜு, மதுராந்தகம் ராஜாராம் இப்படிப் பிற மொழி இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளான மொழி பெயர்ப்புகளையும் நேரம் கிடைக்கும்போது தேடிப் பிடித்து வாசிக்க வேண்டுகிறேன். வி.ச. காண்டேகரின் படைப்பு களை கா. ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார். திருமகள் : நல்ல தகவல் சார்.
அ.நா.: இப்போது விடை பெறுவோம் நேயர்களிட மிருந்து.வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு! வாழ்க வளமுடன். உலகம் அமைதியின் கைகளில் தவழும் குழந்தையாகட்டும். நன்றி.வணக்கம்.
நிறைந்தது.
– சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள், முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை