(2020ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருமகள் : இப்பொழுது ஒரு பாடலைக் கேட்போம். பின்னர் நிகழ்ச்சியைத் தொடரலாம். சார். நீங்கள் விரும்பும் பாடலை ஒலிபரப்புகிறோம். கேளுங்கள்.
அ.நா. : என் விருப்பமா? பாதை தெரியுது பார் என்று திரைப்படத்தில் தென்னங்கீற்று ஓலையிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது… P.B. ஸ்ரீநிவாஸ், ஜானகி பாடிய பாடல். இந்தப் பாடலை இயற்றியவர்…
திருமகள் : நான் சொல்கிறேன். ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய பாடல். இது சரியா? இதோ பாடல் ஒலிக்கிறது…
(பாடல்)
திருமகள் : நிகழ்ச்சியைத் தொடர்கிறோம் சார். ஒரு நேயர் லைன்ல வந்திருக்காரு.
குரல் : வணக்கம் மேம். வணக்கம் சார்.
திருமகள் : சொல்லுங்க. நிகழ்ச்சியைக் கேட்டுக்கிட்டு இருக்கீங்களா? ஒங்க பேர் சொல்லுங்க.
குரல் : செல்வராஜ் -செங்கல்பட்டு. ஒங்க புரோகிராம் கேட்டுகிட்டு வர்றேன்.
அ.நா. : வணக்கம் செல்வராஜ். சொல்லுங்கள்.
செல்வராஜ் : சார். லா.ச.ரா. பத்தி சொல்லுங்க. நன்றி.
அ.நா. : நன்றி செல்வராஜ். லா.ச.ரா. என்று அழைக்கப் படுகிற லா.ச. ராமாமிர்தம், பல சிறுகதைகள், புதினங்கள் படைத்துள்ளார். இவருடைய எழுத்துக்களை உரைநடைக் கவிதைகள் என்றே சொல்ல வேண்டும். மனித உறவுகளின் நுண்ணிய உணர்வுகளை கதை போகிற போக்கிலேயே அங்கங்கே காண்பித்து விடுவார். இந்த முதுபெரும் எழுத்தாளர். அதற்கு எடுத்துக்காட்டாக, பாற்கடல் என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம். புதிதாகத் திருமணம் ஆன பெண், கணவனுடன் தலைதீபாளியைக் கொண்டாட முடியாத நிலை. கணவன் உத்யோகக் காரணமாக தொலை தூரத்தில் இருக்கிறான். கணவன் இல்லாமல் எப்படி போயிற்று தலைதீபாளி என்பதை மனைவி கணவனுக்கு எழுதும் கடிதமாக இந்தச் சிறுகதை விரிகிறது.
ஆம். கடித வடிவில் சிறுகதை. சிறுகதையிலிருந்து ”அப்பா வாசலில் யாராவது வயதானவர்கள் போனால், அவரை அறியாமல் அவர் கைகள் கூம்பும். என்னப்பா என்று கேட்டால், சொல்வார்.
அம்மா, இந்தக் கிழவனார் வயது நான் இருப்பேனா என்று எனக்கு நிச்சயமில்லை.
இந்த நாளில் இத்தனை வயது வரைக்கும் இருக்கிறதே காலத்தையும் வயசையும் இவர்கள் ஜயம் கொண்ட மாதிரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்கு கிறேன் என்று வேண்டுமென்றே குரலைப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமாயிருக்கும்.”
வாழ்வின் யதார்த்தத்தை இந்தச் சிறுகதையில் சில வரிகளில் நம் நெஞ்சில் கல்வெட்டு போல் பதியச் செய்து விடுகிறார் லா.ச.ரா.
“எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப் போனால், யார்தான் விடுதலையாக இருக் கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையி லிருக்கிறோமே. இந்த உலகத்தில்“
பணக்காரன் தங்கக் கூண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப் போல் இருக்கிறவர்கள் இதுலுமில்லை. அதிலுமில்லை.”
இந்தக் கடித வடிவச் சிறுகதையில், கூட்டுக் குடித்தனமாக உள்ள தன்னுடைய புகுந்த வீட்டு உறுப்பினர்களைப் பற்றி எழுதுகிறாள். ஓரகத்திகள் பற்றியும் தன்னுடைய மாமியார் பற்றியும் விவரிக்கிறாள். இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்ட ஓர் ஓரகத்தி,அதாவது இவளுடைய கணவனின் சகோதரனின் மனைவி விதவையாக இருக்கிறாள். அவள் வயிற்றில் குழந்தை இருக்கும்போது கணவனை இழந்து விடுகிறாள். நான் கூறிய இந்தப் பின்னணியைக் கவனத்தில் கொள்ளுங்கள். சிறுகதையின் முடிவுப் பகுதியை வாசிக்கிறேன். செவிமடுங்கள்.
”அம்மாவுக்குக் கனகோபம் வந்துவிட்டது. நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏன் கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சிக்கோ. இன்னிக்குத்தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க?நானும்தான் பிள்ளையைத் தொலைச்சிட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதற எறிஞ்சுட்டு வளைய வரலை?
மன்னி சீறினாள். உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?
நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசறாவாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?
அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்டு குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள்.
அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோருக்கும் கண்கள் நனைந்திருந்தன.
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிர்தமும் அதிலேயேதான்.”
திருமகள் : லா.ச.ரா.வின் சிறுகதையான பாற்கடல் பற்றி சற்றே விரிவாக கூறிவிட்டீர்கள் ஐயா இப்பொழுது ஒரு திரைப்பாடலைக் கேட்போம். எஸ். பி. பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடிய பாடல் சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்… (பாடல்)
திருமகள் : இனி, சிறிய விளம்பர இடைவேளை.
(விளம்பரம் : கண்ட இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்.)
(விளம்பரம் : பண்பாட்டுச் சின்னங்கள் உள்ள இடங்களைப் பார்க்கச் செல்லும் போது அந்த இடங்களில் தூய்மைக் கேட்டை உண்டாக்காதீர்கள்.)
(விளம்பரம் : வதந்திகளைப் பரப்பாதீர்கள்.)
திருமகள் : நிகழ்ச்சி தொடர்கிறது.ஐயா…
அ.நா. : லா.ச.ரா. பற்றிப் பேசிய இந்தத் தருணத்திலே அவருடைய நால்களிலிருந்து ஒரு மேற்கோளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘பாலா’ என்கிற குறுநாவலில் கூறுகிறார்: ‘மெய்யான படிப்பே படிப்பு முடிந்ததும் ஆரம்பமாகிறது. நம்முடைய படிப்பு முறை அப்படி இருக்கிறது. பரீட்சை தேறுவதுதான் நோக்கம்”
இந்த எண்ணத்தைப் பற்றிச் சிந்திக்கும்படி தங்களைப் போன்ற புதிய தலைமுறையினரிடம் கேட்டுக் கொள்கி றேன்.
திருமகள் : இனி… சிறிய விளம்பர இடைவேளை.
(விளம்பரம் : வாகனங்களை இயக்கும் போது கவனச் சிதறல் ஏற்படுத்தும் மொபைல் போனில் பேசாதீர்கள்.)
(விளம்பரம் : பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்திடுங்கள்.)
(விளம்பரம் : அயோடின் உப்பைப் பயன்படுத் திடுங்கள்.)
(விளம்பரம் : ரயில்களில் இருக்கைகள் அமர்வதற்கு மட்டுமே. எதிரே காலியாக உள்ள இருக்கைகளில் காலை வைக்காதீர்கள்.)
(விளம்பரம் : கடலோரங்களில் அலட்சியமாக பிளாஸ்டிக் பைகளை வீசாதீர்கள். காற்று வாங்கச் செல்லும்போது கடற்கரையின் தூய்மையைக் கெடுக்காமல் இருக்க உறுதி கொள்வோம்.)
திருமகள் : தொடர்ந்து நாம் பேசுகிறோம் சிறுகதைகள் பற்றி… சார். வாசகர்கள்
கொண்டாடுவதால்தான் எழுத்தாளர்கள் அவரவருக்கு உரிய இடத்தைப் பெறுகிறார்கள். வாசகர்கள், எழுத்தாளர்கள் உறவு பற்றி இந்த வேளையில் ஓரளவு நீங்கள் பேச வேண்டும் என்று அடியேன் கேட்டுக் கொள்கிறேன்.
அ.நா. : திருமகள் அவர்களே. நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். வாசகர்களின் பங்கு இலக்கிய வளர்ச்சியில் அளப்பரிய பங்கை வகிக்கிறது. வெகுஜன பத்திரிகைகள், இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள், வானொலி,
இணையதளங்கள் போன்ற பிற ஊடகங்கள் இவற்றில் இடம் பெறுகிற சிறுகதைகள் வாசகர்களின் வரவேற்பைப் பெறுகின்றன. அதனால், எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கிடைக்கின்றன. இந்தத் தருணத்தில் 1-1-2012 தேதியிட்ட தினமலர் வாரமலரில் வெளியிடப்பட்ட ‘வாசகர்தர்மம்’ என்ற சிறுகதை… விசேடக் கவனத்துக் குரியது இதனை எழுதியவர் அகிலா கார்த்திகேயன். அயராமல் கருத்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கும் ஒரு வாசகரின் நேரடி நட்பு ஓர் எழுத்தாளருக்குக் கிடைக்கிறது. அந்த வாசகர் சிறந்த படிப்பாளியாக இருக்கிற ஒரு சீனியர் சிட்டிசன், நல்ல எழுத்தைப் பாராட்ட வேண்டியது வாசகர் தர்மம் என்ற குறிக்கோள் உடையவர்.
அந்த எழுத்தாளர், ஒரு பெரிய பதிப்பகத்தின் சிரியரைப் பார்க்கப் புறப்படுகையில் அந்த சீனியர் சிட்டிசன் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. இருந்தாலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப் போகாமல் பதிப்பக அலுவலகத்திற்கு செல்கிறார் எழுத்தாளர். அங்கே போனால், அந்த பதிப்பாளர் இந்தப் பெரியவரின் மரணத்தால் அங்கு அஞ்சலி செலுத்த சென்றிருப்பதாகவும் வேறொரு நாள் வரும்படியும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்தாளர், அந்த வாசகரின் வீட்டிற்கு விரைகிறார். ஆனால், அங்கு எல்லாம் முடிந்து வீட்டைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய புதல்வரைச் சந்திக்கிறார். ‘நெஞ்சுவலி வருவதற்கு முன்பு இந்தக் கடிதத்தை அப்பா போஸ்ட் செய்யும்படி கூறினார்’ என்று புதல்வர் கடிதத்தைக் காட்டுகிறார். அந்தக் கடிதம் அவருடைய சமீபத்திய சிறுகதை பற்றிய பாராட்டாய் பத்திரிகை ஆசிரியருக்கு எழுதப்பட்டது. படித்ததும் எழுத்தாளரின் கண்கள் கலங்குகின்றன. ‘சாரோட ஞாபகார்த்தமாக இந்த லெட்டரை போஸ்ட் பண்ணாம நானே வெச்சுக்கறேன்’ என்று கூறி அந்தக் கடிதத்தை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்கிறார் எழுத்தாளர். அத்துடன் கதை முடிகிறது.
திருமகள் : சூப்பர் சார். எழுத்தாளர் வாசகர் உறவைக் கருப்பொருளாகக் கொண்ட இந்தச் சிறுகதை பாராட்டுக்குரியது. புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும் டங்களில் எழுத்தாளர், வாசகர் சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன இல்லையா சார்?
அ.நா. : ஆமாம்.
திருமகள் : இனி ஒரு பாடல் கேட்போம். சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய எம்.எஸ்.வி. அவர்கள் பாடிய பாடல் கண்டதைச் சொல்கிறேன். உங்கள் கதைகளைச் சொல்கிறேன். இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு தலையெழுத்து உண்டென்றால் அவமானம் எனக்கு உண்டோ…
(பாடல்)
திருமகள் : சார். என்னுடைய நண்பர் துளசிங்கம் என்பவர் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்காரு. அவருடைய கேள்வியின் சாராம்சம் இலக்கிய எழுத்துக்களில் பயன் எழுத்துப் படைப்பு என்பது இல்லையே… என்டெர்டெய்ன் மென்ட் ஆகத்தான் படைக்கப்படுகின்றன. பயன் எழுத்துகள் உள்ளனவா என்று…
அ.நா. : இலக்கியத்தால் பயன் இல்லை என்று கூறவும் முடியாது. எழுத்தாளர்கள் மீது என்டெர்டெய்னர்ஸ் என்று முத்திரை குத்திவிட முடியாது. நாம் இதுவரை கூறி வந்த சிறுகதைப் படைப்புகள் அனைத்தும் மனதுக்கும் அறிவுக்கும் நன்மை பயப்பவை என்பது சொல்லாமலே விளங்கும். இருப்பினும் தங்கள் நண்பர் கேட்டதற்காக, வெகுஜனப் பத்திரிகையில் வெளியான ஒரு சிறுகதையைப் பற்றிக் கூறுகிறேன்.
இந்தச் சிறுகதையும் தினமலர் வாரமலரில் வெளியிடப் பட்டுள்ளது. ஜன 5 2012 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பி.எஸ். புகழேந்தி என்பவர் எழுதிய ‘ஒட்டகச் சிவிங்கியின் உதை’ என்கிற இந்தச் சிறுகதையில் சுயமுன்னேற்றப் புத்தகங்களில் சொல்லப்படும் கருத்தை நான்கு பக்க சிறுகதையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
நண்பர்களுக்கு தொழில்நுணுக்கம் கற்றுக் கொடுத்து ஒர்க்கிங் பார்ட்னராக வர்த்தகத்தில் ஈடுபடுகிறான் ஆனந்த். முதல் போடாத கூட்டாளி என்பதால், நண்பர்கள் வர்த்தகத்தின் நுணுக்கங்கள் பிடிபட்டவுடன் இவனைக் கழற்றிவிட்டு விடுகிறார்கள். சோர்ந்து வீட்டுக்கு வந்தவனை அவனது மனைவி நிர்மலா தேற்றுகிறாள்.
அவள் ஒட்டகச்சிவிங்கியை உதாரணம் காட்டி கூறுகிறாள் :
‘இது அடி. தொழிலில் வெற்றிவரும்போது, மனிதர்கள் ஆயிரம் வகையில் உருமாறுவர். அப்படி ஆகாமல் ஒரே நிலையில் நிற்பவர்கள் ஒரு சிலரே. உங்களுக்கு அமைஞ்சவர்கள், பெருந்தன்மை இல்லாதவர்களா கிட்டாங்க. ஒட்டகச்சிவிங்கி, குட்டி போட்டதும், குட்டி எழுந்திருக்க முடியாமல் தடுமாறும். அப்போது குட்டியை காலால் படீர்னு ஒரு உதை உதைக்குமாம் அம்மா. உயிர் போகும் உதை அந்தக் குட்டிக்கு. இது தாயா பேயான்னு நினைக்குமாம் அந்தக் குட்டி. ஆனால், ஒட்டகச்சிவிங்கி எதையும் பொருட்படுத்தாமல் குட்டி எழுந்து நிற்கும் வரை, உதை விட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் காட்டில் எந்த நேரமும் ஆபத்து வரலாம். ஓடத் தெரிந்தால்தான் குட்டி பிழைக்கும். குட்டி எழுந்து ஓடத் தயாராகவே இந்த உதை. பார்ட்னர்கள் உங்களை கழட்டி விட்டது ஒட்டகச் சிவிங்கி தன் குட்டிக்கு விட்ட உதை.
நீங்கள் அவர்களையே நம்பியிருந்து, ஒரு நாள் ஏமாறுவதற்கு பதில், சுயமாக நிற்க கொடுத்த வாய்ப்பு. “எங்களுக்காக உழைச்சது போதும். இனி உன் சொந்த வழியைப் பார்… என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றனர். உதைத்து விட்டனரே என்று கோபமோ துக்கமோ படுவதற்கு பதில், நீங்கள் தொழிலில் சுயமாக ஒரு இடத்தை பிடிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்குன்னு எடுத்துக்குங்க’
மனைவி நிர்மலா தொழிலுக்கான உத்திகளையும் கணவனுக்குக் கூறுகிறாள். அவற்றை செயல்படுத்தி கணவன் வெற்றி காண்கிறான். கூட்டாளிகளை அசடு வழிய வைத்து அசர வைக்கிறான். இப்படியாக முடிகிறது அந்தச் சிறுகதை.
திருமகள் : ஒட்டகச்சிவிங்கியின் உதையை உதாரணம் காட்டி மனைவி கணவனுக்கு உற்சாகம் ஊட்டியிருப்பதாக எழுத்தாளர் சித்தரித்திருப்பது நன்றாக உள்ளது.
திருமகள் : ஐயா, தொலைபேசியில் ஒரு நேயர் காத்திருக்கிறார். சொல்லுங்கள். ஹலோ.
குரல் : வணக்கம் மேடம். வணக்கம் சார். திருமகள் : வணக்கம்.
குரல் : நான் உறையூர் உலகநாதன் பேசுகிறேன். அ.நா. : வணக்கம். சொல்லுங்க.
உலகநாதன் : சார். பி.எஸ். ராமையா மணிக்கொடி கால எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன். சரியா? அவரைப் பற்றி
திருமகள் : இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று…
அ.நா. : அவர் பி.எஸ். ராமையா பற்றி அறிய விரும்புகிறார். சொல்கிறேன். பி.எஸ். ராமையா 1905 ஆம் ஆண்டு பிறந்தவர், 1983ஆம் ஆண்டு இந்த மண்ணை விட்டு மறைந்தார். பல சிறுகதைகள் எழுதியவர். இவருடைய கதையையே இயக்குநர் ஸ்ரீதர் போலீஸ்காரன் மகள் என்ற திரைப்படமாகப் படைத்தார்.
1932ஆம் ஆண்டு ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்கு இவர் அனுப்பி வைத்த மலரும் மணமும் சிறுகதைக்கு பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.
மணிக்கொடி இலக்கிய இதழின் இன்றியமையாத அங்கமாகத் திகழ்ந்தவர் இவர். இவர் எழுதிய மணிக்கொடி காலம் என்ற ஆய்வு நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. இவருடைய ‘நட்சத்திரக் குழந்தைகள் என்ற சிறுகதையில் குழந்தையின் உளவியலை நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
குழந்தைகள் எப்போதும் கேள்விகள் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கதையில் வரும் பெண் குழந்தை, தன் தந்தையிடம் நட்சத்திரம் எப்படி பிறக்கிறது என்ற கேள்வியை முன் வைக்கிறது.
நாம் ஒவ்வொரு தடவையும் ஓர் உண்மையைச் சொல்லும் போது நட்சத்திரம் பிறக்கிறது என்று அதன் தந்தையார் கூறுகிறார். சில நாட்கள் கழித்து, இரவு நேரத்தில் வானத்தையே பார்த்திருந்த குழந்தை அழுது கொண்டே உள்ளே வருகிறது. அழுகைக்கான காரணத்தைக் கேட்கிறார் தந்தையார்.
“யாரோ நம்ம ஊர்ல போய் சொல்லிவிட்டார் அப்பா” என்கிறது குழந்தை. ‘எப்படி சொல்கிறாய்?’ என்று கேட்கிறார் தந்தை.
“நீதானே அப்பா சொன்னே. நிஜம் சொன்னால் நட்சத்திரம் பிறக்கிறதுன்னு. அப்போ ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தா யாரோ ஒரு பொய் சொல்லிட்டாங்கன் னு அர்த்தம்? சுவாமியினுடைய மனசு இப்போ எப்படி இருக்கும் அப்பா? எனக்கே நிறைய அழுகை வரதே என்று சொல்லி விட்டு அழுகிறது குழந்தை. ஆசிரியர் இதை எல்லாம் விவரித்து விட்டு பின்வரும் வார்த்தைகளைச் சொல்லி தமது சிறுகதையை முடிக்கிறார்.
‘அந்தப் பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இருதயம் இருதயத்தினொடு தனது சொந்த பாஷையில் உணர்த்தவேண்டிய புனிதமான ஒரு துக்கம்.’
திருமகள் : நீங்கள் குறிப்பிட்டது போல் இந்தச் சிறுகதை குழந்தைகளின் உளவியலை நன்றாகச் சித்தரிக்கிறது. இனி…
இரண்டு திரைப்பாடல்கள் கேட்போம். குரு திரைப் படத்தில் பாலசுப்ரமணியன் பாடிய கண்ணதாசன் அவர்களின் பாடல். ஆடுங்கள்.. பாடுங்கள்.. பிள்ளைப் பொன்வண்டுகள்.
எங்க மாமா… திரைப்படத்தில் டி.எம்.எஸ். அவர்கள் பாடிய கண்ணதாசன் செல்லக்கிளிகளாம் பள்ளியிலே… செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே…
திருமகள் : ஐயா, நிகழ்ச்சியைத் தொடர்கிறோம். சிறுகதைகள் வளர்ச்சிக்கு பத்திரிகைகளின் பங்களிப்பு பற்றி கூறுங்கள்.
அ.நா. : சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு அந்தக் காலத்து இலக்கிய இதழ்களான மணிக்கொடி, சரஸ்வதி, கலைமகள் ஆகியவை மட்டுமல்லாமல் ஆனந்தவிகடன், அமுதசுரபி, கல்கி, குமுதம், தினமணிகதிர், சாவி, குங்குமம், இதயம் பேசுகிறது உள்ளிட்ட வெகுஜன சஞ்சிகைகளும் உறுதுணை புரிந்தன. எழுத்தாளர் இந்துமதி அவர்கள் நடத்திய அஸ்வினி இதழையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஆய்வறிஞர் தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய சாந்தி, சி.சு. செல்லப்பா அவர்கள் நடத்திய எழுத்து, சா.கந்தசாமி அவர்களின் கசடதபற, நா. பார்த்தசாரதி அவர்கள் நடத்திய தீபம்,மக்கள் தலைவர் ஜீவா அவர்கள் ஆசிரியராக அமர்ந்து நடத்திய தாமரை, செம்மலர், ஜெயகாந்தன் அவர்களின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கல்பனா, கோமல் சுவாமி நாதன் அவர்கள் ஆசிரியராக இருந்த சுபமங்களா, சுந்தரராமசாமி அவர்களின் காலச்சுவடு, கணையாழி உள்ளிட்ட பல இலக்கிய இதழ்கள், ஏராளமான சிற்றிதழ்கள்,சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தன. நாம் மேலே குறிப்பிட்டவற்றில் தாமரை, கணையாழி, காலச்சுவடு ஆகிய இதழ்கள் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை, குமுதம் குழுமத்தின் தீராநதி உள்ளிட்ட பல்வேறு இலக்கிய இதழ்கள், சிற்றேடுகள், தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்பை வழங்குகின்றன. தூர்தர்ஷனின் தேசியத் தொலைக்காட்சி இந்தியச் சிறுகதைகளைத் தொடராக ஒளிபரப்பியது. பொதிகை தொலைக்காட்சி யிலும் சிறுகதைகளின் சித்திரக்காட்சிகள் ஒளிபரப்பப் பட்டுள்ளன.
திருமகள் : நாடகவியலாளரான கோமல் சுவாமிநாதன் அவர்கள் ஊடகவியலாளராகவும் இருந்தார் என்ற தகவலை இன்று எங்களிடமிருந்து அறிந்து கொண்டேன். நன்றி.
அ.நா. : சிறுகதைகள் யதார்த்தத்தின் வெளிப்பாடு என்பதை இந்த நிகழ்ச்சியில் நாம் தெரிவித்தோம். சுபமங்களா ஆகஸ்டு 1993 இதழில் வெளியான செங்கை ஆழியான் எழுதிய “ஷெல்லும் ஏழு இன்சுச் சன்னங்களும்” என்ற சிறுகதை, கல் நெஞ்சங்களையும் கரைத்து விடும்.
திருமகள் : அந்தச் சிறுகதை பற்றி கூறுங்கள் ஐயா.
இலங்கை யாழ் பகுதியைக் களமாகக் கொண்ட ச்சிறுகதை தன்மை நிலையில் எழுதப்பட்டுள்ளது. வீடுவீடாக காலிபாட்டில்கள் சேகரிக்க வருகிற சிறுவன், இந்தக் கதையைக் கூறுபவரின் வீட்டுக்கு வருகிறான். காலிபாட்டில்களுக்கு மற்றவர்களை விட அதிக விலை கொடுக்கிறான். இராணுவத்தினரின் கொடுமையால் தாய் தந்தையை இழந்த இந்தப் பன்னிரண்டு வயது சிறுவன்தான் தன்னுடைய இரண்டு தங்கைகளையும், தம்பிகளையும் காப்பாற்றி வருவதாகத் தெரிவிக்கிறான். சிட்டுக்குருவியின் தலைமீது பனம்பழத்தை வைத்தது போல் இவன் தலையில் இறக்க முடியாத சுமை என்று கதை சொல்லி பரிதாப் படுகிறார். வேலு என்கிற அந்தச் சிறுவன், அவனுடைய பேச்சாலும் நேர்மையாலும் கதை சொல்லியின் மனத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்று விடுகிறான்.
மற்றொரு நாள் கதை சொல்லி அவனைப் பார்க்கிறார். அப்பொழுது அவன் பழைய சைக்கிளில் இரும்புப் பெட்டியுடன் வருகிறான். இவரிடம் இரும்பு பைப்பு இப்படி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறான். நீயே பார்த்து எடுத்துக் கொள் என்று அனுமதிக்கிறார். அவன் தேடிப் பொறுக்கி இரும்பு சாமான்களை அள்ளிக் கொண்டு இவரிடம் நூறு ரூபாய் தரும் போது அவர் வியந்து போகிறார்.
உருப்பட மாட்டாய் என்று செல்லமாய்த் தட்டுகிறார். பவுடர் டப்பாக்களை வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்கிறார். பவுடர் டப்பாக்கைள மட்டும் விற்காதீங்க. கண்ட மாவை அடைச்சு பவுடர் என விக்கிறான் என்று வேலு கூற கதை சொல்லி விக்கித்து நிற்கிறார். இரும்பு வாங்கி முடித்தபின் என்ன செய்வாய் என்று கேட்க, பழைய அலுமினியம் வாங்குவேன் என்று கூறுகிறான் வேலு. இனி கதையின் முடிவுப் பகுதியை எழுத்தாளரின் வார்த்தை களிலேயே கேட்பது நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். வாசிக்கிறேன். செவிமடுங்கள்.
“யாழ்ப்பாண நகரம் திடீரென கதிகலங்கியது. கோட்டைப் பக்கம் இருந்து வெடித்த ஒரு குண்டின் சத்தம், நகரத்தில் நின்றிருந்த மக்களைக் கிலி கொள்ள வைத்தது. வாகனங்கள் விரைந்து மறைந்தன. கணப்பொழுதில் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடிப் போனது.
கடை ஒன்றினுள் பாதுகாப்பாகப் பதுங்கி இருந்த நான், வேகமாக ஓடி வந்தேன். வீதியில் எவரையும் காணவில்லை. மரக்கறிச் சந்தையில் நின்றிருந்த மரத்தின் பின்னால் ஒருவன் பதுங்குவதைக் கண்டேன். பயத்துடன் பார்த்தபோது அவன் வேலு எனத் தெரிந்தது. பாவம் அகப்பட்டுக் கொண்டானோ?
‘வேலு ஓடி வா.. ஷெல் அடிக்கப் போறான்கள். ஹெலிகாப்டர் சத்தமும் கேட்குது. சுடப்போறான்கள். ஓடி வாடா…’
‘நீங்க போங்க சேர்… கெதியா ஓடிப் போங்க சேர்…’ அடங்காத கோபத்துடன் நான் அவனை நோக்கி ஓடிப் போனேன்.
‘உனக்கென்ன விசரா… வாடா ஷெல் அடிக்கப் போறான்கள். ஹெலியில இருந்து சுடுகிற சன்னங்கள்…. ஏழு இஞ்சு நீளத்தில, தெரியுமே…வா..’
அவன் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுத் தலை குனிந்தான்.
‘அதுக்காகத்தான் காத்திருக்கிறேன் சேர்…’
நான் புரியாமல் அவனைப் பார்த்தேன்.
‘ஷெல் விழுந்து சிதறினால், அதில் இருந்து சிதறுகிற பித்தளைத் துண்டுகள், கொலிக்கொப்டர் சுடுகிற வெற்றுச் சன்ன பித்தளைக் கவர்கள் இவற்றைச் சேகரித்தால் நல்ல விலைக்கு விற்கலாம் சேர்’
ஷெல் என்பது என் மண்டைக்குள் சிதறுவது போல் உணர்ந்தேன். தூரத்தில் ஹெலியின் சத்தம் எழுகிறது” என்று செங்கை ஆழியான் சிறுகதையை முடிக்கிறார்.
திருமகள் : நிஜமாகவே நெஞ்சைப் பிழிகிறது இந்தச் சிறுகதை.
அ.நா. : இந்தச் சிறுகதையைப் பற்றி முதுபெரும் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தம்முடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததாக எனக்கு ஞாபகம்.
(விளம்பரம் : உந்து வண்டிகளை ஓட்டிச் செல்லும் போது இருக்கைப் பட்டையை அணிந்து செல்லுங்கள்.)
திருமகள் : தேடிப் பிடித்து படிக்க என்று சில சிறுகதைகளைக் குறிப்பிடுங்களேன்…
அ.நா. : கடல் போன்ற தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் தேடத் தேட பல முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இருப்பினும் நீங்கள் கேட்பதால் இப்பொழுது சில சிறுகதைகளைக் குறிப்பிடுகிறேன்.
மு.வ. என்று அன்புடன் அழைக்கப்படும் தமிழறிஞர் மு. வரதராசனாரின் குறட்டை ஒலி,நா.பார்த்தசாதியின் வலம்புரிச் சங்கு இவை எல்லாம் கல்லூரி நாட்களில் எனக்குப் பாடமாக அமைந்தவை. முதுபெரும் எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் எழுதிய விடியுமா? என்னும் சிறுகதை, சமூக அவலத்தைச் சித்தரிக்கும் இந்திரா பார்த்தசாரதியின் நாசக்காரக்கும்பல், மௌனியின் அழியாச் சுடர், சுஜாதாவின் நகரம். இப்படி பல முத்துக்கள் நீங்கள் தேடத் தேடக் கிடைக்கும். அமரர் கல்கி, தேவன், ஜெயகாந்தன், ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், வண்ணதாசன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, பாலகுமாரன், சுப்ரமண்யராஜூ, இந்திரா சௌந்தரராஜன், கூத்துப்பட்டறை முத்துசாமி, சிவகாமி, திலகவதி, கி. ராஜநாராயணன், சு. சமுத்திரம், க.நா.சு.ஜெய மோகன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், கு. அழகிரிசாமி, விந்தன், தி.சா. ராஜு, பிரேமா நந்தகுமார், பூமணி, சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்) கரிச்சான் குஞ்சு, மாத்தளை சோமு, டொமினிக் ஜீவா, அ.செ.யோகநாதன், எஸ்.பொ., இப்படிப் பல இலக்கியவாதிகளின் படைப்பு களைத் தேடித் தேடி வாசியுங்கள். எழுத்தாளர்களின் பதிவுகள் நன்றாகப் புரியும். தமிழ்ச் சிறுகதைகள், கூகுள் பிளே ஸ்டோரில் ‘ஆப்’ ஆகவும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இணையதளத்தில் சில எழுத்தாளர்களின் சிறுகதைகள் ஒலிப் புத்தகங்களாகவும் கிடைக்கின்றன.
திருமகள் : நீங்கள் நன்றாகச் சொன்னீர்கள். தமிழ்த்தாத்தா பற்றியும் நீங்கள் கூற விரும்புவதாக பாடல் ஒலிபரப்பும் போது குறிப்பிட்டீர்கள்.
அ.நா. : நினைவுப்படுத்தியதற்கு நன்றி. கலைமகள் இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள், சிறுகதை என்ற வடிவத்தைக் கூறாவிட்டாலும் தாம் கண்டவற்றை கேட்ட வற்றை சுவையான நடையில் உண்மைச் சம்பவக் கதை களாகப் பதிவு செய்து வைத்துள்ளார். அவற்றில் ஒன்றி ரண்டை குற்பிபிடுகிறேன். ‘சங்கராபரணம் நரசையர்’ இதில் பணமுடைக்காக செல்வந்தர் ஒருவரிடம் அடகு வைக்க தம்மிடம் எதுவும் இல்லை. தாம் சிறப்பாகப் பாடும் சங்கராபரணம் ராகத்தையே அடகு வைப்பதாகக் கூறி பணம் பெறுகிறார் சங்கராபரணம் நரசையர் என்னும் சங்கீத வித்வான்.
அடகு வைத்ததனால் வேறு எந்தக் கச்சேரியிலும் அந்த ராகத்தைப் பாடாமல் வார்த்தையை காத்து வருகிறார். இப்படி இருக்கையில் மற்றொரு செல்வந்தரின் வீட்டுத் திருமணத்தில் கச்சேரி செய்யும்போது அனைவரும் சங்கரா பரணத்தில் வெளுத்து வாங்குவீர்களே அதைப் பாடுங்கள் என்கிறார்கள். அவரோ தயக்கத்துடன் மறுக்கிறார். செல்வந்தர் வற்புறுத்திக் கேட்க உண்மையைச் சொல் கிறார். இப்படியும் உண்டோ என்று கேட்ட செல்வர் தம்முடைய பணத்தை கடன் தந்தவரிடம் தர அனுப்பி வைக்கிறார். கடன் தந்தவரும் அங்கே வந்து, ‘வித்வான் உரிமையுடன் பணத்தைக் கேட்காமல் ராகத்தை அடகு வைக்கிறேன் என்று சொன்னதால் நானும் விளையாட்டாக ஒப்புக் கொண்டேன். இவர் இப்படி வார்த்தையைக் காப்பார் என்று எண்ணவில்லை. மன்னிக்க வேண்டும்’ என்கிறார். அனைவரும் இந்த மூவருடைய செயலையும் கண்டு வியக்கின்றனர்.
சிறுகதை போன்ற அவரது மற்றொரு உண்மைக் கதை. ‘கல்யாணப் படித்துறை’ தள்ளாத வயதில் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கிறார் ஒரு கிழவர். அதனைத் தக்க தருணத்தில் தடுக்கிறார் ஓர் இளைஞர். கிழவரும் உண்மையை உணர்ந்து திருந்துகிறார். வருந்துகிறார். கல்யாணத்திற்காக வைத்திருந்த பணத்தை வைத்துக் கொண்டு ஊர்த் திருக்குளத்தில் படித்துறை கட்டுகிறார். மக்கள் அந்தப் படித்துறையை கல்யாணப் படித்துறை என்றே அழைக்கிறார்கள். ‘கண்டதும் கேட்டதும்’ ‘பழையதும் புதியதும்’, ‘நினைவு மஞ்சரி’ ஆகிய தொகுதிகளில் இது போன்ற பல உண்மைச் சம்பவங்கள் உயிரோட்டமான நடையில் தமிழ்த் தாத்தா அவர்களால் சிறுகதைகள் போல் படைக்கப்பட்டுள்ளன.
திருமகள் : அய்யா.. தமிழ்த் தாத்தாவின் உண்மைக் கதைகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இப்பொழுது ஒரு திரைப்படப் பாடலைக் கேட்போம். கருப்புப் பணம் திரைப்படத்தில் இடம் பெற்ற சீர்காழி அவர்கள் பாடிய கண்ணதாசன் பாடல்.. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்…
(பாடல்)
அ.நா. : இந்தத் திரைப்பாடலின் சிறப்பு படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலைப் பாடுவார். இந்தப் படத்தின் திரைநாயகனும் அவரே.
திருமகள் : அய்யா.. நான் படித்த மாப்பசான் சிறுகதை ஒன்றை இங்கே தங்கள் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அ.நா. : அப்படியா? ஒரு மாறுதலுக்கு நீங்கள் சொல்ல நான் கேட்கிறேன்.
திருமகள் : ஒரு நிபந்தனையின் பேரில்.
அ.நா. : என்னம்மா?
திருமகள் : மாப்பசான் பற்றிய அறிமுகக் குறிப்பை நீங்கள் கூற வேண்டும் முதலில்.
அ.நா. : அப்படியே ஆகட்டும். மாப்பசான் 19ஆம் நூற்றாண்டின் உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். உலக இலக்கியத்தில் சிறுகதைகளின் தந்தையருள் ஒருவ ராகப் போற்றப்படுகிறார். ஆங்கிலத்தில் இவரது பெயர் Herri Rene Albert Guy de Maupassant. இவர் வாழ்ந்த காலம் 1850-1893. இவரது சிறுகதைகளை முதுபெரும் எழுத்தாளர் அகிலன், தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
திருமகள் : தங்கள் தகவல்களுக்கு நன்றி. நான் படித்த சிறுகதையை நீங்களும் படித்திருப்பீர்கள். அதுதான் டயமண்ட் நெக்லஸ்.
அ.நா. : கூறுங்கள். கேட்போம் நேயர்களும் நானும்.
திருமகள் : இதன் கதைக்களம் நிகழிடம் வெளிநாடு. 19ஆம் நூற்றாண்டு சூழல். ஆனால், பெண்களின் மனோ பாவம் கால தேச இடங்களைத் தாண்டி ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை மாப்பசானின் வைர மாலை கதை எடுத்துரைக்கிறது. குமாஸ்தா ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட ஓர் இளம் பெண், வசதிகளுடன் வாழ வேண்டும் என்ற கனவுகளில் மிதந்தவள். ஏழை எழுத்தருடன் மிகக் குறை வான வசதிகளுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு நாள் கணவன் அமைச்சகத்தின் விருந்து அழைப்புக் கடிதத்தைக் காண்பிக்கிறான். விருந்துக்கு நீங்கள் மட்டும் போங்கள் என்கிறாள். தம்பதிகளாகத்தான் போக வேண்டும் என்கிறான். எனக்கு பார்ட்டிக்குப் போட்டுச் செல்ல எடுப்பான உடை ஏதும் இல்லை என்கிறாள் மனைவி. வேட்டைத் துப்பாக்கி வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து நல்ல டிரஸ் வாங்கிக் கொள்ளச் சொல்கிறான் கணவன்.
அதன் பின்னர், மூளிக் கழுத்தாய் செல்வதா? அணிந்து கொள்ள ஆபரணம் இல்லையே என்கிறாள் மனைவி.
கணவன், நல்ல மலர்களைச் சூடிக் கொள். மற்றவர்களின் கவனம் எல்லாம் அதில்தான் இருக்கும் என்று கூறுகிறான். இல்லை. நகை அணிந்துதான் செல்ல வேண்டும் என்கிறாள் மனைவி.
அப்படியானால் கான்வென்ட்டில் உன்னுடன் படித்த தோழி இப்பொழுது செல்வச் சீமாட்டியாக அருகில்தானே இருக்கிறாள். அவளிடம் இரவல் ஆபரணம் வாங்கிக் கொள் என்று ஆலோசனை சொல்கிறான்.
செல்வச் சீமாட்டியைச் சந்தித்து வைரமாலை ஒன்றை இரவல் வாங்கி வருகிறாள். பார்ட்டிக்குச் செல்கிறார்கள். பார்ட்டி முடிந்ததும் பனி இரவில் வீடு திரும்ப வெகுதூரம் அலைந்து ஆட்டோ பிடித்து வந்து சேர்கிறார்கள். பார்ட்டிக்குப் போட்டுக் கொண்ட உடையைக் கழற்றாமல் நிலைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்கிறாள். திடுக் கிடுகிறாள். வைரநெக்லஸைக் கழுத்தில் காணோம். கணவன் வந்த வழியில் போய் தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. பார்ட்டி இடத்திலும் காணவில்லை. திருப்பிக் கொடுத்தாக வேண்டுமே. நகைக் கடைக்குப் போய் விலை உயர்ந்த அந்த வைரமாலையைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அதற்காக மனைவி தன்னுடைய அப்பா வைத்து விட்டுப் போன தொகையைக் கொடுக்கிறாள். மீதித் தொகைக்கு கடன் வாங்குகிறார்கள். நகையை வாங்கி பெட்டியில் வைத்து தோழியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வருகிறாள். கடன் அடைக்க பெரிய வீட்டை காலி செய்து சிறிய போர்ஷனுக்குப் போகிறார்கள். கணவன் கூடுதலாக பார்ட்டைம் பணியைப் பார்க்கிறான். வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி கடன் அடைக்கிறார்கள்.
ஒருநாள், மாலைப் பொழுது. பூங்கா ஒன்றில் செல்வச் சீமாட்டியைப் பார்க்கிறாள். எப்படி இருக்கே என்று அவள் அருகே செல்கிறாள். யார் நீங்க என்கிறாள் அவள். நான்தான் உன் தோழி..
நீயா? என்னம்மா… இப்படி உரு தெரியாமல்
போய்விட்டாய் இந்த சின்ன வயதில்… என்ன ஆச்சு என்று கேட்கிறாள்.
அவள் சொல்கிறாள்.. எல்லாம் உங்களிடம் இரவல் வாங்கிய நெக்லஸால். அதைத் தொலைத்து விட்டு முடியாத விலை கொடுத்து வாங்கி திருப்பிக் கொடுத்தோம். படாதபாடு பட்டோம்…
பணக்காரத் தோழி சொல்கிறாள்… இதற்காகவா இவ்வளவு பாடுபட்டாய். என் தோழி… அது வெறும் கவரிங்தான். ஐநூறு ரூபாய் தான் அதன் விலை.
அ.நா. : முடிப்பதற்குள் குரல் தழுதழுத்துப் போகிறது உங்களுக்கு. நீங்கள் வாசித்த மாப்பசான் கதையை நன்றாக விவரித்தீர்கள். நன்றி.
திருமகள் : பாராட்டுக்கு நன்றி. இப்பொழுது ஒரு விளம்பர இடைவேளை.
(விளம்பரம்: இனிப்பு நாக்குக்கு சுவை தரலாம். வரம்பு மீறினால் விழித்திரைக்கு பாதிப்பு வரலாம். எச்சரிக்கையாக இருங்கள். ஆண்டுக்கொரு முறை கண்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.)
(5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து தந்திடுங்கள்.)
(வாகனப் புகை தவிர்ப்போம். சுற்றுச்சூழல் காப்போம்.) (மின் சிக்கனம் எக்கணமும் தேவை.)
திருமகள் : நேயர்களே! சிறுகதை உலகின் சில காட்சிகளை நம் செவிகளின் முன் நிறுத்தும் நிகழ்ச்சியாக இளந்தென்றல் எஃப்.எம்.வழங்கும் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறோம் நிகழ்ச்சியை.
அ.நா.: உலக இலக்கியத்தின் சிறப்பான சிறுகதை ஒன்றை நீங்கள் வழங்கினீர்கள். இப்பொழுது நாம் சற்றே இந்தி இலக்கியம் பற்றிப் பார்ப்போம். நவீன இந்தி இலக்கியத்தின் பிதாமகனாக விளங்குபவர் பிரேம்சந்த்ஜி. பிரேம்சந்தின் எழுத்துக்கள் உங்களைச் சிந்திக்க வைக்கும். கதற வைக்கும். அழ வைக்கும். முற்றிலும் புத்தம் புதிய உலகுக்கு உங்களை அழைத்துச் செல்லும். பல புதினங்கள், சிறுகதைகள் படைத்த முன்ஷி பிரேம்சந்த், இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தின் இந்தி பேசும் மக்களின் சூழலையும் வாழ்வியலையும் தம்முடைய எழுத்துக்களில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
ஷதரஞ்ச் கி கிலாடி – சதுரங்க ஆட்டக்காரர்கள் என்னும் சிறுகதை.
வட இந்திய சமஸ்தானம் ஒன்றின் அரசரும் மற்றொரு ராஜ பிரமுகரும் சதுரங்கம் ஆடுவதிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருக்கிறார்கள். அரசுப் பொறுப்புகளை முற்றிலும் மறந்து போகிறார்கள். அதுவும் எப்போது? பிரிட்டிஷாரின் படைகள், அரண்மனையையும் ராஜ்யத்தையும் முற்றுகை யிட்டு கைப்பற்றிய நிலையிலும் ஹுக்கா பிடித்தபடியே சதுரங்க ஆட்டத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து 1977ஆம் ஆண்டு இந்தச் சிறுகதையை பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே திரைப்படமாகப் படைத்தார்.
இது வசதி படைத்தவர்களின் வீழ்ச்சியைக் காட்டியது என்றால், கஃபன் என்கிற சிறுகதை அடித்தட்டு மக்களின் அவலத்தைக் காட்டுகிறது. கிராமம் ஒன்றில் அப்பனும் மகனுமாக இரண்டு கூலித் தொழிலாளிகள். இருவருமே கொடுத்த வேலையை சரியாக முடித்துத் தர மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்க வில்லை. இருவரும் குடிசைக்கு வெளியே இருக்கிறார்கள். குடிசைக்குள் மகனின் மனைவி பிரசவத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். ஒத்தாசைக்கு ஆள் இல்லை. இரவு முழுக்க அவள் துடிக்கிறாள். தந்தை உள்ளே போய் அவளைப் பார் என்கிறார். ஆனால், மகன், அவள் கஷ்டப் படுவதைப் பார்க்க விரும்பவில்லை என்று ஏதேதோ பேசுகிறான். இருவரும் குடிசைக்கு வெளியே இருந்து விடுகிறார்கள். விடிகிறது. மகன் உள்ளே போய்ப் பார்க்கிறான். மனைவி இறந்து கிடக்கிறாள். பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. ஈக்கள் மொய்க்கின்றன. இருவரும் கதறுகின்றனர். அவளுக்கு சவக்கோடி என்ற கஃபன் போர்த்த வேண்டும். அதை வாங்க வேண்டும். இவர்கள் கையில் காசில்லை.
ஜமீன்தாரரைப் போய்ப் பார்க்கிறார்கள். ஜமீன்தாரர், ளகிய மனம் படைத்தவர்தான். ஆனால் இவர்கள் இருவரும் வேலையில் ஏய்ப்பவர்கள் என்பதால் அரையணா நாணயம் மட்டுமே கொடுக்கிறார்.
ஊரில் உள்ள மக்களிடம் வசூலித்து ஐந்து ரூபாய் திரட்டுகிறார்கள். டவுனுக்குப் போய் துணியும், இறுதிக் கான பிற பொருட்களையும் வாங்கிக் கொண்டு உடனே வந்து விடுவதாக அக்கம் பக்கத்தவரிடம் கூறிவிட்டு நகரத்திற்கு புறப்படுகிறார்கள்.
நகரத்திற்கு வருகிறார்கள். கஃபன் வாங்க வந்தவர்கள், மதுபானக் கடையைப் பார்க்கிறார்கள்; மது அருந்துகிறார்கள்.சாப்பிடுகிறார்கள். இறந்தவளைப் பற்றி உளறியபடியே பட்டினத்துத் தெருவோரம் போதையில் மயங்கி விழுகிறார்கள் இருவரும்.
திருமகள் : குடிப்பழக்கத்தால் மிகவும் முக்கியமான கடமையை ஆற்றாமல் இருந்து விடுகிறார்கள்… நெகிழ வைக்கிறது இந்தச் சிறுகதை.
அ.நா. : உங்கள் உள்ளத்தைத் தொடக் கூடிய பிரேம்சந்த் அவர்கள் மற்றொரு சிறுகதையைக் குறிப்பிடுகிறேன். பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்படுகிற ‘ஈத்காஹ்’ என்னும் சிறுகதை. உள்ளத்தைத் தொடும் இந்தச் சிறு கதையை ஆங்கில எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இச் சிறுகதையில் வரும் ஹமீத் உங்கள் மனதில் உட்கார்ந்து விடுவான்.
திருமகள் : குஷ்வந்த் சிங் அவர்களின் ஆங்கில ஆக்கம் இணையதளத்தில் கிடைக்கும் சார். இருந்தாலும், நீங்கள் உங்கள் பாணியில் இச்சிறுகதையின் சாராம்சத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அ.நா. : கிராமம் ஒன்றில் சிறுவர்கள் ரம்ஜான் பண்டிகைக்காகக் காத்திருக்கிறார்கள். பெரியவர்கள் நோன்பு இருக்கிறார்கள். இவர்கள் பண்டிகை வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளஞ் சிறுவர் களில் ஒருவன் ஹமீத். ஏழைச் சிறுவன். அவனுடைய தந்தை இறந்து விடுகிறார் நோய்வாய்ப்பட்டு… தாயும் சில மாதங்களில் இறந்து விடுகிறாள். இருவரும் அல்லாவிடம் சென்றிருப்பதாகத் தெரிவித்து சமாதானப்படுத்தி அவனுடைய பாட்டி அமீனா அவனை வளர்த்து வருகிறாள்.
ஈத் திருநாள் வருகிறது. எல்லாக் குழந்தைகளும் தங்கள் அப்பாவுடன் ஈத்காஹ் எனப்படும் பெருநாள் கூட்டுத் தொழுகைக்காக நகரத்திற்குச் செல்கிறார்கள்.
பாட்டி அமீனா அவனைத் தனியாகவே அக்கம் பக்கத் தவருடன் அனுப்பி வைக்கிறாள்.
நகரத்திற்குச் செல்கிறார்கள். திருநாள் சிறப்புத் தொழுகை முடிந்ததும் பெரியவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். சிறுவர்கள் கடைகள் இருக்கும் திசை நோக்கி ஓடுகிறார்கள். ஹமீத்தின் நண்பர்கள், மொகம்மத், நூரி, மோஹ்சின்,சம்மி ஆகிய ஒவ்வொருவரும் இனிப்புகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். விதம் விதமான களிமண் பொம்மைகள் வாங்குகிறார்கள். ஹமீத்திடம் இருப்பது பாட்டி கொடுத்த மூன்று பைசா மட்டுமே. என்னதான் வாங்கலாம்… என்று யோசிக்கிறான் ஹமீத். பாட்டி சப்பாத்தி தயாரிக்கும் போதெல்லாம் கையால் போட்டு எடுத்து கையைச் சுட்டுக் கொள்கிறாள். துடுப்பு வாங்கலாம். பெரியர்வர்களுக்கு நல்லது செய்தால் அல்லாவின் கருணை கிடைக்கும் என்று சொல்வார்களே… இப்படி எல்லாம் எண்ணமிட்டபடியே இரும்புச் சாமான்கள் இருந்த கடையை நோட்டமிடுகிறான். ஒரு ஜோடி இரும்புத் துடுப்பு இருக்கிறது. ஹமீத்தைப் பார்த்த கடைக்காரர் உன்னால் இங்கு எதுவும் வாங்க முடியாது என்கிறார். இந்த தோசைத் துடுப்பு எவ்வளவு என்கிறான். மீண்டும் உன்னால் வாங்க முடியாது என்கிறார் கடைக்காரர். விலையைச் சொல்லுங்கள் பையன் அடம் பிடிக்கிறான்.
ஆறு பைசா என்கிறார் கடைக்காரர். மூன்று பைசாவுக்கு கொடுப்பீர்களா என்று சற்றே தள்ளி நின்றபடியே கேட்கிறான் ஹமீத். திட்டப்போகிறார் கடைக்காரர் என்று எதிர்பார்த்தான் ஹமீத். ஆனால் கடைக்காரர், சரி … எடுத்துக்க என்கிறார் கடைக்காரர். சிறுவர் சிறுமியர் ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு பொம்மை. வக்கீல் பொம்மை, போலீஸ்காரர் பொம்மை, சைக்கிள் பொம்மை… ஹமீத்தின் கையிலோ தோசைத் துடுப்பு… அவனுடைய சகாக்கள் சிரிக்கிறார்கள். இதுவும் துப்பாக்கி மாதிரிதான் என்று தோளில் வைத்துக் கொள்கிறான் ஹமீத்…
குழந்தைகள் வாங்கிய பொம்மைகள் எல்லாம் அவரவர் வீடு சென்று விளையாடும்போது கீழே விழுந்து உடைந்து விடுகின்றன.
ஹமீத்தின் வரவுக்காக வாசலில் காத்திருந்த அமீனா, பேரனைக் கண்டு ஆனந்தம் அடைகிறாள். இது என்னப்பா தை வாங்கி இருக்கிறாயே என்று சிரிக்கிறாள்.
நீதான் சப்பாத்தி செய்யும்போது கைவிரலைச் சுட்டுக் கொள்கிறாயே… அதற்காகத்தான் பாட்டி இதை வாங்கி வந்தேன்…
அமீனாவுக்கு பேரனின் வார்த்தைகளைக் கேட்டு, நெஞ்சு நெகிழ்கிறது. பேரனை ஆரத் தழுவுகிறாள். கண்களில் கண்ணீர். அப்பொழுதே விரிப்பை விரித்து பேரனுக்காகத் தொழ முற்படுகிறாள்.
திருமகள் : ஹார்ட் டச்சிங் ஸ்டோரி சார். மன்னிக்கவும். உள்ளத்தைத் தொடும் சிறுகதை ஐயா இந்தச் சிறுகதை. சார்.. இப்ப ஒரு காலர் லைன்ல இருக்காரு. பேசுவோம்.
குரல் : வணக்கம் மேடம். வணக்கங்க அய்யா. திருமகள் / அரங்கநாதன் : வணக்கம் சொல்லுங்க.
குரல் : என் பேரு வாசுகி. நான் படித்த ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சொல்லலாமா?
திருமகள் : தாராளமா சொல்லுங்க… கேட்க காத்திருக்கோம்.
வாசுகி : இது வேலிமுள்னு ஒரு சிறுகதை. அடித்தட்டு மக்களைப் பற்றிய சிறுகதை. நீங்க ஓஹென்றியோட தாம்பத்யம் பற்றிய சிறுகதையைச் சொன்னீங்க.
இது ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிந்து கொண்டு கோபத்தில் சில நாட்கள் பிரிந்து பிறகு சேர்கிற தம்பதிகள் பற்றிய சிறுகதை.
இதை எழுதியவர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள்.
மாரிக்காளையும் பார்வதியும் இளந் தம்பதிகள். மாரிக் காளை வேலி மரம் வெட்டிப் பிழைப்பு நடத்துகிறான்.
பார்வதியும் கட்டிட கட்டுமானத்திற்கான சித்தாள் பணியைப் பார்க்கிறாள்.
ஒரு முறை… பள்ளிக்கூடத்துக் கட்டிட வேலையில் பார்வதி பணி செய்யப் போகிறாள். மாரிக்காளை எதேச்சையாக அங்கு வர நேர்கிறது.
கொத்தனார் விஷமப் புன்னகையுடன் பார்வதியிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவள் அவனிடம் செல்லக் கோபமாய்ச் சீறி அவனைத் தவிர்க்கிறாள். ‘ஆம்புளைக எல்லாம் கொழுப்பேறிப் போய் திரியுதீக… முறையில்லாம நீளுற நாக்கை இழுத்துப் பிடிச்சு நறுக்கணும். அப்பத்தான் திமிறு ஒடுங்கும்… அவள் சொல்லிக் கொண்டே சிரித்து நகர்கிறாள். கொத்தனார், சிமிண்டுச் சாந்தை அவள் மீது எறிகிறான். காறித் துப்பிக் கொண்டே ஓடுகிறாள். இந்தக் காட்சியைப் பார்த்ததும் மாரிக்காளைக்கு உள்ளுக்குள் எரிகிறது.
அன்றிரவு. சாப்பிடும் போது தீப்பெட்டி ஆபீசுக்கப் போயேன். இந்த வேலை எதற்கு என்கிறான் மனைவியிடம்.
அவள் சொல்கிறாள். விடியுறதுக்கு முந்திப் போய் இருட்டுன பெறகு வரணும். அவன் சித்தாள் வேலை வேண்டாம் என்றான். அவள் ஏன் என்று கேட்க, அவன் வாயிலிருந்து வந்து விழுந்தன சொற்கள்: இருபது ரூவாய்க்கா போற… புருசம்மார் கூட வெளயாடப் போற. அவள் அதன் பிறகு பேசவில்லை. விடிந்ததும் பார்த்தால் ஆளைக் காணவில்லை. அதன் பிறகு மாரிக்காளைக்கு உடல் சுகவீனம். வயிற்றுப் போக்கு. வயிற்றுப் போக்குக்காக வேகமாகச் சென்றதில் காலில் முள் தைத்து வீக்கமாக வீங்கி விட்டது. தனியாய் வீட்டில் இருக்கிறான்.. போய் காலில் விழுந்தாவது அவளைக் கூட்டி வர வேண்டும் என்று முடிவு செய்கிறான். ஆனால் இப்பொழுது உடல் முடியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு திருமணம் செய்து வைத்த சோலைச் சாமி நாடாரை அழைத்து வரச் செய்தான். அவரும் வந்தார். கதறி அழுது நடந்ததைச் சொன்னான். அவரோ ரெண்டு நாள் பொறுத்துக்க. நான் போய்ப் பேசிப் பார்க்கறேன் என்று சொல்லி விடுகிறார்.
பாசக்காரியான, ஆசைக்காரியான மனைவியை நினைத்தும் அருகில் ஆள் இல்லாத நிலையை நினைத்தும் மனம் வெதும்புகிறான். பரிச்சயமான அரவம் கேட்கிறது. பார்வதியோ என்றுதிரும்பிப் பார்க்கிறான். அவளே தான்.
பார்வதி சொல்கிறாள்: வரவே கூடாதுன்னு நெனச்சேன். கால்ல முள்ளு குத்தி நகர மாட்டாம கொல பட்டினியாய்க் கிடக்கறீர்னு கேள்விப்பட்டு மனசு கேட்கல. வந்து தொலைச்சேன். நீரு எம்மேல சந்தேகப்படல. ஒமக்கு ஒம்ம மேல சந்தேகம்தான். நீரு என்னைப் பத்தி பேசி உம்ம மேல நீரே எச்சிலைத் துப்பிக்கிட்டீரு ஒமக்குத்தான் அசிங்கம்.
அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் முள் மாதிரி தைக்கிறது. புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கிறது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் வீட்டை மினுக்கி குத்து விளக்காக ஆக்கிக் கொண்டிருந்தாள்.
ஆசிரியர் முடிக்கிறார்: தைத்த வேலி முள்ளை வென்று வேலிமரம் வெட்ட புறப்படும் பாதம், வாழ்க்கையைப் போல…
திருமகள் : நன்றாக விவரித்தீர்கள் வாசுகி. அடித்தட்டு மக்களின் கணவன்-மனைவி உறவில் கணவனை விட்டுக் கொடுக்காத மனைவியைச் சித்தரிக்கும் முதுபெரும் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் சிறுகதையைப் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி.
வாசுகி : நன்றி. வணக்கம்.
அ.நா. : வாசுகி அவர் ஒரு சிறந்த வாசகி என்று நிரூபித்து விட்டார்.
திருமகள் : சூப்பர். இப்பொழுது ஒரு திரைப்பட பாடலைக் கேட்போம். பாகப்பிரிவினை திரைப்படத்தில்
இடம் பெற்ற தாழையாம் பூமுடிச்சு தடம் பார்த்து நடை நடந்து…
(பாடல்)
(விளம்பரம் ஒலிக்கிறது)
(கண்ட இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்.
சுற்றுப்புறத் தூய்மை நம் அனைவரின் கடமை.)
திருமகள் : சார். இப்ப ஒரு நேயர் லைன்ல இருக்காரு. பார்ப்போம்.
குரல் : வணக்கம் அம்மா. வணக்கம் ஐயா…
திருமகள் / அரங்கநாதன் : வணக்கம் சொல்லுங்க அம்மா. குரல் : என் பெயர் தேன்மொழி. நான் வாசித்த ஒரு சிறுகதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திருமகள் : சொல்லுங்க தேன்மொழி அம்மா. காத்திருக்கிறோம்.
தேன்மொழி : இது நான் இருபது வருடங்களுக்கு முன் ஒரு பருவ இதழில் வாசித்த சிறுகதை. தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் எழுதிய சிறுகதை. சிறுகதையின் தலைப்பு தங்கராசு. குமரி மாவட்டம் மண்வாசனை மிக்க அந்தச் சிறுகதையில் பொன்னம்மா என்ற விதவைத் தாய். ஏழை. கடின உழைப்பில் காலத்தை ஓட்டி தங்கராசு என்னும் தன் மகனைப் படிக்க வைக்கிறாள். பையன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறான். எல்லாரும் அவனை கூலி வேலைக்கு அனுப்பச் சொல்கிறார்கள். பொன்னம்மாவோ அவன் வாத்யாராகணும் என்னும் தன் இலட்சியத்தைக் கூறுகிறாள். அவர்களுடைய கிராமத்தில் ப்ளஸ்டூ படிக்க மேல்நிலைப் பள்ளி இல்லாமல் டவுனுக்குச் சென்று ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்குகிறார்கள். கடைசியாக முனிசிபாலிட்டி மேல்நிலைப்பள்ளிக்குச் செல்கிறார்கள். அங்கேயும் இங்க படிச்சவங்களுக்குத் தான் சீட் வெளி மாணவர்களுக்கு கிடையாது என்று முகத்தில் அடித்து விடுகிறார்கள். விரட்டப்பட்டனர் பொன்னம் மாவும் தங்கராசும். ‘இனி நீ வாத்யாராவ மாட்டாயா?’ என்று பொன்னம்மாதன் மகனைப் பார்த்து கேட்கும்போது அவள் குரல் தொண்டைக்குள்ளேயே அமுங்குகிறது.
தங்கராசுவின் மனதில் அம்மாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தங்கராசு தனக்குள் பேசிக் கொள்கிறான்: நான் கூலி வேலைக்குப் போவேன். கேஸ் கிடைக்கத போது போலீஸ் காரர்கள் ஊதச் சொல்வார்கள். குடிக்காத என்னை குடித் தொக பிடித்துச் செல்வார்கள். அம்மா இனி ஒரு முறை டவுனுக்கு வருவது என்னுடைய பிரேதத்தைப் பெற்றுக் கொள்தற்காக.
இப்படி முடியும் இந்தச் சிறுகதை.
நீங்கள் தேடிப்பிடித்துப் படித்தால்தான் அந்த மண் வாசனையையும், ஏழைத் தாய் மற்றும் வளர் இளம் பாலகரின் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
திருமகள் : நீங்கள் உங்கள் நினைவிலிருந்து சொன்னீர்களா?
தேன்மொழி : என் மனதை விட்டு நீங்கவில்லை இந்தச் சிறுகதை.
திருமகள் : நன்றி. முதுபெரும் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களுடைய சிறுகதையை நினைவுப் படுத்திப் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி. சார். ப்ளஸ் ஒன் அட்மிஷனுக்காக ஏழைகள் கஷ்டப்பட்டிருக்காங்கறதை மீரான் அய்யா அவர்கள் படம் பிடித்துக் காட்டியிருக்காரு இல்லையா?
அ.நா. : வாசகர்களும் ஊக்கத்துடன் கலந்து கொண்டு சிறந்த சிறுகதைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
திருமகள் : உங்களுக்கு வேலை இல்லாம பண்ணிடுவாங்க போலிருக்குன்னு நினைக்கறீங்களா?
அ.நா. : அப்படி அனைவரும் வாசிப்பதை நேசித்தால் என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே ஏற்படும். திருமகள் : இப்பொழுது ஓர் அழைப்பாளர்.
குரல் : ஹாய் திருமகள். நான் ப்ரியம்வதா. திருமகள் : யார் சகுந்தலையின் தோழியா?…
குரல் : நான் உன்னுடைய தோழி… வணக்கம் சார். அ.நா. : வணக்கம். சொல்லுங்க. தோழியிடம் பேச வந்தீர்களா? நிகழ்ச்சியில் பேச வந்தீர்களா?
ப்ரியம்வதா : நான் படித்த ஒரு சிறுகதையைப் பகிர்ந்து கொள்ளத்தான் அழைத்தேன்.
திருமகள் : நீ சிறுகதை எல்லாம் படிக்கறதுண்டா…
ப்ரியம் வதா : ஏய் .. மன்னிக்கணும் அய்யா. உங்கள் நிகழ்ச்சியில் இதுவரை பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேசவே இல்லை. இது ஒரு குறை.
அ.நா. : நன்றாகக் கவனித்து வருகிறீர்கள்.
ப்பரியம்வதா : அந்தக் குறையைப் போக்க நான் வாசித்த ‘தாயகம்’ என்னும் சிறுகதையைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தச் சிறுகதையை எழுதியவர் மூத்த பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்கள்.
அ.நா. : தொடருங்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தை.
ப்ரியம் வதா : சகுந்தலையின் கதையை வைத்து இந்தச் சிறுகதையை ஆசிரியர் புனைந்துள்ளார்.
ராஜா துஷ்யந்தன் நினைவு மறந்து சுடுசொற்களைக் கூறி கர்ப்பிணிப் பெண்ணான சகுந்தலையை நிராகரித்து விடுகிறான். சகுந்தலையுடன் உடன் வந்தவர்கள் யாரும்
அருகில் இல்லாததால் தனித்து நின்ற சகுந்தலா இது என்ன சோதனை அம்மா என்று பேசும் போது வானிலிருந்து அவளுடைய அம்மா மேனகை வருகிறாள். நான்தான் உன் அம்மா என்கிறாள். அம்மா என்று அரற்றியதால் வந்தேன் என்கிறாள். வா விண்ணுலகில் இருக்கலாம் என்று அழைக்கிறாள்.
தாய் யார் தந்தை யார் என்பதை எல்லாம் விவரிக்கிறாள். தாய் தேவலோக மங்கை மேனகை தந்தை விசுவாமித்திர மகரிஷி என்பதை அப்பொழுது அறிந்து கொள்ளும் சகுந்தலை, தாயுடன் வர மறுக்கிறாள்.
நான் யார் எந்த ஜாதிக் குழந்தை என்றெல்லாம் பார்க்காமல் எனக்குத் தாய்க்குத் தாயாகவும் தந்தைக்குத் தந்தையாகவும் இருக்கிற கண்வ மகரிஷி அவர்களிடம் மீண்டும் நான் செல்வேன். உங்களுடன் வர மாட்டேன் என்கிறாள்.
அங்கே கண்வ மகரிஷி சகுந்தலைக்கு என்ன ஆயிற்றோ என்று துடிக்கிறாள். உடன் சென்றவர்களும் மனைவி கௌதமியும் இப்படி அவளை விட்டு விட்டு வந்து விட்டார்களே என்று நினைக்கிறார். அப்போது சகுந்தலை ஆசிரமத்து வாசலில் வந்து நிற்கிறாள்.
புகுந்த வீடு சென்ற பெண்.. இப்படி வந்து நிற்கிறாயே என்கிறார் கண்வர்.
‘தாயகம் வந்து விட்டேன் அப்பா. இங்கே இருக்க அனுமதிக்காவிட்டால் சென்று விடுகிறேன்’ என்கிறாள் சகுந்தலை.
கணவர் நீ இங்கேயே இருக்கலாம்.. உன் கணவன் உன்னைத் தேடி வருவான்.
அவன் வந்தாலும் வராவிட்டாலும் நான் கௌதமி அன்னையுடனும், ஆசிரமம் வாசிகளுடனும் இங்கேயே இருக்கிறேன்’ என்கிறாள்.
‘உன் விருப்பம் போலவே ஆகட்டும்’ என்கிறார் வளர்ப்புத் தந்தை. தூரத்தில் சகுந்தலையைக் கண்ட பிரியம்வதையும் அனுசூயாவும் ஆவலுடன் ஓடி வந்தார்கள். இப்படி முடிக்கிறார் ஆசிரியர் சிறுகதையை.
அ.நா. : நன்றிம்மா.
திருமகள் : மிக்க நன்றி என் தோழி ப்ரியம்வதாவுக்கு. ப்ரியம்வதா : நன்றி.
அ.நா. : சாகுந்தலம் என்னும் மகாகவி காளிதாசரின் காவியத்தின் சில துளிகளை ஆர்.சூடாமணி அவர்கள் சிறுகதையாக நன்றாகப் படைத்துள்ளார். அதனை உங்கள் தோழி நினைவுப்படுத்தி நம்முடன் பகிர்ந்து கொண்டார். உங்கள் தோழியும் நல்ல வாசகி.
திருமகள் : அந்த இரகசியம் எனக்கு இன்றுதான் தெரிகிறது.
இப்பொழுது மற்றொரு அழைப்பாளர் வருகிறார்… வணக்கம்….
குரல் : வணக்கம் திருமகள்… நான் உன்னுடைய பேராசிரியை ராஜேஸ்வரி.
திருமகள் : வணக்கம் மேம்…. நீங்கள் லைன்ல வருவீங்கன்னு எதிர்பார்க்கலை. ஸர்ப்பரைஸ்.. நலமா மேம்..
ராஜேஸ்வரி : நலமாக உள்ளேன். வணக்கம் அரங்கநாதன் சார்.
அ.நா. : வணக்கம் அம்மா. நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி.
ராஜேஸ்வரி : ரவீந்திரநாத் தாகூரின் பல சிறுகதைகள் திரைப்படங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. அவருடைய போஸ்ட் மாஸ்டர் என்னும் சிறுகதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன் அய்யா.
அ.நா. : சொல்லுங்கள் அம்மா.
ராஜேஸ்வரி : குக்கிராமத்திற்கு ஒற்றை ஆளாய் வருகிறார் ஒரு போஸ்ட் மாஸ்டர். அவருக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்து தர வந்து சேர்கிறாள் கிராமத்து வளர் இளம் பெண் ரதன். ரதனிடம் தன்னுடைய குடும்பக் கதைகள் எல்லாவற்றையும் சொல்கிறார். இருவரிடமும் ஒரு பந்தம் உண்டாகிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களை இவளும் அக்கா அம்மா என்று சொல்வாள். ஒரு நாள் அவருக்கு உடல் சுகவீனம் ஏற்பட… ரதன் உடனிருந்து அன்னையைப் போல் நேரத்துக்கு நேரம் தவறாமல் கஞ்சி தயாரித்து மாத்திரை மருந்து கொடுத்து காப்பாற்றுகிறாள்.
இந்த இடம் ஒத்துக் கொள்ளவில்லை. வேறு இடத்திற்கு மாறுதல் கேட்கிறார் போஸ்ட்மாஸ்டர். அரசாங்கம் மறுக்கிறது. ராஜினாமா செய்துவிட்டு ஊரை விட்டுப் போக முடிவு செய்கிறார்.
இதனை ரதனிடம் சொல்கிறார்.. ரதன் என்னையும் உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறீர்களா என்று கேட்கிறாள். அது எப்படி முடியும் என்று கேட்கிறார் போஸ்ட் மாஸ்டர். புதிய போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லிவிட்டுப் போகிறேன் என்கிறார். யாரிடமும் சொல்ல வேண்டாம். நான் இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்கிறாள் ரதன்.
அவருக்குக் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு கைவசம் உள்ள சம்பளப் பணத்தை ரதனிடம் தருகிறார். பாபுஜீ! உங்கள் காலில் விழுகிறேன். எனக்கு ஒன்றும் தர வேண்டாம். எனக்காக ஒருத்தரும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு ரதன் ஓடி விடுகிறாள். அவர் பெருமூச்செறிந்து ஊருக்குப் போக படகு இருக்கும் இடத்தை நோக்கிச் செல்கிறார். படகில் அமர்கிறார்… வாழ்வில் இதைப் போல் எத்தனையோ பிரிவின் துயரங்கள் ஏற்படுவது இயல்புதானே? திரும்பித் தான் என்ன பயன்? இந்த உலகில் யார் யாருக்கு உறவு? என்று முடிக்கிறார் தாகூர் இந்தச் சிறுகதையை.
– தொடரும்…
– சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள், முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை