(2020ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மூத்த இதழாளர் / வளர்தொழில் வணிக இதழ் ஆசிரியர் திரு.க.ஜெயகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை
கதைகள் கேட்கும் ஆர்வம் குழந்தைகள் மழலை பேசும் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. கொஞ்சம் நன்றாகப் பேசப் பழகிய உடன் அவர்கள் தங்கள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, தாத்தா, பாட்டியிடமோ கதைகள் சொல்லச் சொல்லி ஆர்வமாகக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். அப்போது தொடங்கும் ஆர்வம் எப்போதும் மறைவது இல்லை. உள் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுதான் சிறுகதைகள் படிக்கும் ஆர்வமாக, நாவல்கள் படிக்கும் ஆர்வமாக, திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமாக, தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் ஆர்வமாக முகிழ்க்கிறது.
திரு. மதுரகவி இந்த நூலில் தான் படித்து ரசித்த சிறுகதைகளை ஒரு மாறுதலான நடையில், வடிவத்தில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஒரு வானொலி நிகழ்ச்சி போல தொடக்கம் முதல் இறுதி வரை கொண்டு செல்கிறார். அதற்கு ஏற்ப கற்பனையாகவே அறிவிப்பாளர்களைப் படைத்து அவர்கள் வாயிலாக நூலை நகர்த்துகிறார். இடையிடையே வானொலி நிகழ்ச்சியில் வருவது போன்ற விளம்பர இடைவேளை விட்டு சமுதாயத்துக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார்.
தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகைள மட்டும் இல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற சிறுகதைகள் பற்றியும் ஆற்றோட்டமாக எழுதிச் செல்கிறார்.
இந்த நூலைப் படிப்பவர்களுக்கு தமிழ்ச் சிறுகதை உலகம் பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும். குறிப்பாக சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நண்பனைப் போல துணை நிற்கும்.
விளம்பரத்துறையில் ஒரு சொல் சிற்பியாக விளங்கும் நண்பர் மதுரகவி, தனக்கு இருக்கும் பல பணிகளுக்கு நடுவே எழுதுவதற்கு நேரம் ஒதுக்கி செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது. பாராட்டுக்கு உரியது.
அன்புடன்
க. ஜெயகிருஷ்ணன்
ஆசிரியர்,வளர்தொழில்
முன்னுரை
இலக்கிய வடிவங்களில் ஒன்றான சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த நூல் மலர் மலர்கிறது. இதனை முழுமையான ஆய்வு என்றோ இலக்கணத்திற்கு உட்பட்டதான ஆய்வு நூல் என்றோ கூற முடியாது. இருப்பினும், இன்றைய இளம் தலைமுறையினரிடம் சிறுகதை இலக்கியம் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதாக இந்த நூல் இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு கற்பனையான சூழலில் எனது கற்பனை மாந்தர் சிறுகதை உலகத்திற்குள் செல்கிறார்கள். வாருங்கள் நீங்களும். மிக்க நன்றி.
இந்த நூலுக்கு அன்புடன் அணிந்துரை வழங்கிய வளர்தொழில் ஆசிரியர் க.ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
-எஸ். மதுரகவி
காணிக்கை:
புதிய தலைமுறையினருக்கு
அனைவருக்கும் வணக்கம்.
இளந்தென்றல் பண்பலையின் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சிக்கு நேயர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கி றோம். நான் உங்கள் RJ திருமகள் இன்றைய மழைச்சாரல் நிகழ்ச்சிக்கு பேராசிரியர் அரங்கநாதன் அவர்கள் வருகை தந்துள்ளார். சிறுகதைகள் பற்றி நம்மிடையே அவர் பேச உள்ளார். நேயர்களின் வினாக்களுக்கும் பதில் அளிப்பார். வாருங்கள். பேராசிரியர் அவர்களே! வணக்கம். அரங்கநாதன் : வணக்கம்மா.
திருமகள் : சார், இன்று நீங்கள் சிறுகதைகள் பற்றிப் பேச உ உள்ளீர்கள். உங்கள் அறிமுக உரையைத் தொடங்கலாம்.
அ.நா. : சிறுகதை என்பது உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிற ஓர் இலக்கிய வடிவம். சிறுகதைகளில் காலம், சூழல், பண்பாடு, பழக்க வழக்கங்கள், நையாண்டி, வலிகள், பிரச்சினைகள், வட்டார வழக்குகள் ஆகியவை வெளிப்படுகின்றன.
சுற்றும் முற்றும் பார்க்கிறேன். எழுதுகிறேன்’ என்று முது பெரும் எழுத்தாளர் தி. ஜானகிராமன் தம்முடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் கூறகிறார். சுற்றும் முற்றும் பார்க்கும் காட்சிகளையும், சம்பவங்களையும் மனிதர் களையும் எழுத்தாளர்கள் தங்கள் நோக்கில், தங்கள் பாணியில் பதிவு செய்கின்றனர். நடை என்பது கவர்ந்திழுக்கும் அம்சம். தாங்கள் பார்த்தவற்றை சொல்லோவியங்களாக சிறுகதைகளில் வடிக்கும் போது, பாத்திரப் படைப்புகளையும் நம் கண்முன்னே எழுத் தாளர்கள் நிறுத்துகின்றனர். சிலர் வரலாற்றப் பின்னணி யைக் களமாகக் கொண்டு சிறுகதைகள் புனைவதுண்டு. ஜெயகாந்தன் அவர்களின் ஒரு பிடி சோறு, வாசிக்கும் போது உங்களை நெஞ்சுருகச் செய்யும் அடித்தட்டு தொழிலாளிப் பெண், வயிற்றில் கருவைச் சுமந்த கர்ப்பிணிப் பெண், ஒரு பிடிச் சோறுக்காக படும்பாடு, கல்நெஞ்சங்களையும் கரைக்கும். ராசாத்தி, மாரியாயி ஆகிய பாத்திரங்கள் உங்கள் நெஞ்சை விட்டு அகலவே மாட்டார்கள். அதுபோலவே, அறிஞர் அண்ணாவின் செவ்வாழை சிறுகதையில் வரும் செங்கோடனை எளிதில் மறந்து விட முடியுமா?
இந்திய விடுதலைக்கு முன்பாகவே, மணிக்கொடி, கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி உள்ளிட்ட பல இதழ்களில் தமிழ்ச் சிறுகதைகள் உலா வரத் தொடங்கின. வெகுஜன பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் இலக்கிய ஏடுகளிலும் சிறுகதைகள் வெளியிடப்பட்டன. எல்லாமே தரமான சிறுகதைகளாகத்தான் அந்தக் காலத்தில் படைக்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல சிறுகதை வடிவம் சுருங்கி, ஒரு பக்கக் கதை, 2 நிமிடக் கதை என்றெல்லாம் பரிணாமம் பெற்றுவிட்டாலும் சிறுகதை என்கிற வடிவம் இன்னும் ஜீவித்து வருகிறது.
திருமகள் : சார். சிறுகதைகள் பற்றிச் சொன்னீங்க. ஜெயகாந்தனின் ஒரு பிடிச் சோறு, அண்ணா அவர்களுடைய செவ்வாழை பற்றி எல்லாம் சொன்னீங்க. இந்த இரண்டு சிறுகதைகளில் செவ்வாழை, எங்களுக்குப் பள்ளிக்கூடத்தில் பாடமாவே வெச்சிருந்தாங்க. இதனால நீங்க சொல்லும் போது செங்கோடன் பாத்திரம் என் மனக்கண்முன்னாலே வந்தது. ஒரு பிடிச் சோறு பத்தி கொஞ்சம் விவரமா கேட்க விரும்பறேன். அதுக்கு முன்னாலே நேயர்களுக்காக ஒரு திரைப்பாடல் ஒலிபரப்புவோம். நேயர்களே இதோ… பஞ்ச வர்ணக்கிளி படத்திலிருந்து புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய தமிழுக்கு அமுது என்று பேர் பாடல். பி. சுசீலா பாடியது. கேட்டு இன்புறுங்கள்.
…(பாடல்)…
திருமகள் : சார், பாடலுக்கு முன்பாக…
அ.நா.: ஒரு பிடிச்சோறு கதைய விவரிக்கச் சொன்னீங்க.
திருமகள் : ஆமாம் ஐயா. அதுக்கு முன்னாலே… சிறுகதைக்கு என்று இலக்கணம் இருக்கிறதா?
அ.நா. : சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணங்கள் வகுத்தால் இன்று புதிதாக எழுத வருபவர்கள் பின்பற்றுவார்களா என்பது தெரியாது. முதுபெரும் எழுத்தாளர்கள் அனைவருமே ஓர் இலக்கணம் வகுத்துக் கொண்டு அதன்படியே படைத்து வந்துள்ளனர். நாவல் என்கிற புதினம், தொடர்கதை, நெடுங்கதை ஆகியவற்றிலிருந்து சிறுகதை வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே. மூதறிஞர் ராஜாஜி அவர்கள், சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிக்கும் கட்டுரை ஒன்றை வடித்துள்ளார். அந்தக் கட்டுரையின் தலைப்பு சிறுகதை.
திருமகள் : ஐயா, குறுக்கீட்டுக்கு மன்னிக்கணும். ராஜாஜி அவர்கள் விடுதலை வீரராக, இந்திய கவர்னர் ஜெனரல் ஆக, தமிழக முதலமைச்சர் ஆக இருந்தார் என்றெல்லாம் படித்திருக்கிறேன். இலக்கியத் துறையிலும் ஈடுபட்டாரா?
அ.நா. : ஆம். ராஜாஜி அவர்கள், இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய தமிழில் வடித்தவர். அவரது ஓயாத அரசியல் பணிகளுக்கு இடையே இலக்கியப் பணிகளையும் ஆற்றி வந்தவர். மது அருந்தும் பழக்கத்தால் விளையும் நாசங்களைப் பற்றிப் பிரசாரம் செய்ய விமோசனம் என்ற இதழை நடத்தினார். திக்கற்ற பார்வதி உள்ளிட்ட பல புனை கதைகளையும் படைத்தவர். திக்கற்ற பார்வதி தமிழ்த் திரைப்படமாகவும் வெளிவந்தது. காரைக்குடி நாராயணன் என்னும் மூத்த இயக்குநர் அதனை இயக்கினார். இந்தக் கதை மதுவின் கொடுமையை விவரிப்பது.
திருமகள் : தகவல்களுக்கு நன்றி. இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. கல்கி இதழில் வெளியான பைண்டு செய்யப்பட்ட சக்ரவர்த்தித் திருமகன் புத்தகத்தை என் தாத்தா பாதுகாத்து வாசித்து வந்ததைப் பார்த்திருக்கிறேன்.
அ.நா. : அதுதான் அவர் எழுதிய இராமாயண நூல். மகா பாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரில் படைத்தார்.
திருமகள் : இப்பொழுது அவர் சிறுகதை பற்றிக் கூறியதை நீங்கள் கூறுங்கள்.
அ.நா. : அந்தக் கட்டுரையை முழுக்க சொல்வதற்கு நமக்கு நேரம் இருக்காது. ராஜாஜி அவர்களின் கட்டுரையிலிருந்து சில துளிகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
“நீண்ட கதை எழுதுவதற்கு வேண்டிய பொறுமையும் அவகாசமும் இல்லாமல் சுருக்கமாக எழுதப்பட்ட கதை சிறுகதை ஆகும் என்று யாராவது எண்ணினால் அது தவறாகும். சிறுகதை வேறு. பெருங்கதை வேறு. அளவு வித்தியாசம் மட்டும் அல்ல. வகையே வேறு. ஆலமரம், புளிய மரம் முதலிய மரங்கள் ஒரு ஜாதி. கிளைகளின்றி ஒரே தண்டாக வளரும் தென்னை, பனை, கமுகு முதலிய மரங்கள் வேறு ஜாதி. அதைப் போல் சிறுகதை பேறு. நெடுங்கதை வேறு.
சிறுகதை எழுதுவது எப்படி? வாழ்க்கையில் நாம் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் புதிய அனுபவங்களைப் பெறுகிறோம். மனத்தை ஆட்டிக் குலுக்கும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அவற்றில் ஒன்றை உட்கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சியை நம்முடைய உணர்ச்சியில் உருக்கொள்ளச் செய்ய வேண்டும்.
இதற்குக் கற்பனா சக்தி வேண்டும். கற்பனா சக்தி ஒரு பிறவிச் செல்வமா அல்லது பயிற்சிப் பொருளா என்கிற கேள்வி உண்டு. எவ்வாறாயினும், எல்லாரும் ஓரளவு கற்பனா சக்தி படைத்திருக்கிறோம். அதற்குப் பயிற்சி தந்தால் வளரும். கண்ணும் காதும் திறந்திருந்தால் மட்டும் போதாது.உணர்ச்சி பாய்ந்த முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
இதுவன்றி வெறும் நிகழ்ச்சிகள் – ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் நிகழ்ச்சி நிரவல் -ஜீவன் கொண்ட கதை ஆகாது. பல கருத்துக்கள் இங்குமங்கும் சிதறிக் கிடக்காமல் கதைக் கட்டுடன் கருத்துக் கட்டும் சிதைவின்றி அழகுடன் அமைந்து விளங்க வேண்டும். வியப்பு தரும் நிகழ்ச்சி யமைப்பு இல்லாமலும் முதல்தரமான சிறுகதைகள் உண்டு.
கதையின் கவர்ச்சி வேகம் வரவரப் பெருகிக் கொண்டு போக வேண்டும். தாழ்ச்சி கூடாது. இது சிறுகதைக்கு இன்றியமையாத இலக்கணம்.
நல்ல கதை என்பதற்கு அடையாளம் அதில் யாரேனும் மனத்தைச் செலுத்திப் படித்தால் உள்ளத்தில் ஓர் அதிர்ச்சி உண்டாகும். இதயத்தைக் கலக்கவோ ஆட்டவோ செய்யும்.
வழி புரண்ட காதலைக் கொண்ட அவசரமாகத் தோற்று விக்கும் சிறுகதைகள் பயனற்றவை. எல்லா இலக்கண விதிகளையும் புறக்கணித்து அற்புதமான இலக்கியப் பொருள் தோன்றுவதுமுண்டு.
நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே; அதைப் படித்து முடிக்கும் போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.
திருமகள் : சார். நன்றாக இருந்தது சிறுகதை பற்றி ராஜாஜி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்… மேலும் தொடர்வதற்கு
முன் ஒரு பாடலை செவி மடுப்போம். பாரதி திரைப்படத்திலிருந்து பாரதியாரின் நிற்பதுவே… நடப்பதுவே பாடல்… நேயர்களே உங்களுக்காக.
..(பாடல்)…
திருமகள் : நேயர்களே.. நீங்களும் பேராசிரியரிடம் கேள்விகள் தொடுக்கலாம். பாரதியாருடைய பாடலைக் கேட்டோம். ஐயா, பாரதியார் சிறுகதைகள் எழுதி யிருக்கிறாரா?
அ.நா.: பாரதியார் கதைகள் தொகுப்பில் அவர் எழுதிய பல சிறுகதைகளும், நெடுங்கதைகளும் இடம் பெற் றுள்ளன. சிறுகதை என்ற தலைப்பிட்டே பாரதி ஒரு சிறுகதையை எழுதியுள்ளார்.
திருமகள் : அதைப் பற்றி பேராசிரியரிடமிருந்து நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சிறிய விளம்பர இடைவேளை.
(விளம்பரம்:
டயர், டியூப், ரப்பர் பொருட்களை
எரிக்காதீர்.
ஓசோன் படலம் ஓட்டை
ஆகாமல் காப்பது நம் கடமை
என்பதை மறவாதீர்.)
(விளம்பரம்:
வாகனங்களை ஓட்டும்போது
கவனத்துடன் சாலை விதிகளைப்
பின்பற்றி ஓட்டுங்கள்.
மற்றவர்களை அனுசரித்து
நட்புடன் ஓட்டுங்கள்.
சாலையைக் கடக்கும்
பாதசாரிகளுக்கு வழிவிடுங்கள்)
திருமகள் : மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சியில் சிறுகதைகள் பற்றி பேராசிரியர் அரங்க நாதன் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார். அய்யா. பாரதியாருடைய சிறுகதை பற்றி குறிப்பிட்டீர்கள்.
அ.நா. : சிறுகதை என்ற தலைப்பில் மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறுகதையை நான் வாசிக்கிறேன். கேளுங்கள்.
திருமகள் : கூறுங்கள். கேட்க ஆவலாக உள்ளோம்.
அ.நா. : ”ஒரு வீட்டில் ஒரு புருஷனும் ஸ்த்ரீயும் குடி யிருந்தார்கள். ஒரு நாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்த்ரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது.
அந்த ஸ்த்ரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அசௌகரியமாக இருந்தபடியால், தனக்கு ஆகாரம் வேண்டாம் என்று நிச்சயித்துப் புருஷனுக்கு மாத்திரமென்று சமைத்தாள்.
புருஷன் வந்தவுடன், ‘நான் இன்றிரவு விரதமிருக்கப் போகிறேன். எனக்கு ஆகாரம் வேண்டாம்” என்றாள்.
உடனே பாதி கொதிக்கிற சோற்றை அவள் அப்படியே சும்மா விட்டுவிட்டு அடுப்பை நீரால் அவித்துவிடவில்லை. தாங்களிருவருக்கும் உபயோகம் இல்லாவிடினும் மறுநாள் காலையில் வேலைக்காரிக்கு உதவுமென்று நினைத்து, நன்றாக கொதிக்கும் வரை காத்திருந்து வடித்து வைத்து விட்டுப் பிறகு நித்திரைக்குச் சென்றாள். அதுபோலவே, கர்மயோகி, தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றி னால் அதை அப்படியே நிறுத்தி விட மாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.” பாரதியின் நவதந்திர கதைகள் சிறுகதை இலக்கியத்திற்கு வித்திட்டது.
திருமகள் : சூப்பர் சார். சின்னஞ்சிறிய கதையில் மெசேஜ் வெச்சிருக்காரு. எடுத்த காரியத்தைத் தனக்குப் பயனில் லேங்கறதுக்காக நிறுத்தக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. ஆனால், இப்ப எல்லாம் சாதம் யாரும் வடிக்கிறது இல்ல. பிரஷர் குக்கர்ல தான் வைக்கறாங்க.
அ.நா. : அதாவது உங்களுக்குத் தெரியுமா?
திருமகள் : சார். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்காதீங்க. லைன்ல ஒரு நேயர் வந்திருக்காரு. பேசுவோம்.
அ.நா. : பேசுவோம்மா.
திருமகள் : சொல்லுங்க சார்.
குரல் : வணக்கம். நான் சைதாப்பேட்டையிலிருந்து மணிவண்ணன் பேசறேன்.
திருமகள் : வணக்கம். சார் கிட்ட உங்க கேள்வி கேளுங்க.
மணிவண்ணன்: வணக்கம் சார்.
அ.நா. : சொல்லுங்க வணக்கம்.
மணிவண்ணன் : புதுமைப்பித்தனைப் பத்தி சொல்லுங்க சார்.
அ.நா. : நன்றி. உங்கள் கேள்விக்கு. புதுமைப்பித்தன் தமிழ் இலக்கியத்தின் கலங்கரை விளக்கம். சிறுகதை மன்னன் என்றும் போற்றப்படுபவர். மணிக்கொடி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் சிறுகதைகளையும் கட்டுரை களையும் நெடுங்கதைகளையும் எழுதியவர். இவருடைய சிற்றன்னை என்ற சிறுகதையையே இயக்குநர் மகேந்திரன் அவர்கள், உதிரிப்பூக்கள் என்ற திரைப் படமாகப் படைத்தார். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ என்ற சிறுகதை முக்கியத்துவம் வாய்ந்த சிறுகதை. சிற்பியின் நரகம் என்ற புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற சிறுகதையை நீங்கள் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும்.
வரலாற்றுச் சிறுகதை இது. வரலாற்றுக் கதைகளில் எப்பொழுதும் ராஜாக்கள் இளவரசர்கள் வருவார்கள். ஆனால் இந்தச் சிறுகதையில் வயது முதிர்ந்த சிற்பி ஒருவரின் நுண்ணிய உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் கவிதைகளும் படைத்துள்ளார்.
திருமகள் : நன்றி.அய்யா. நேயருக்கும் நன்றி. நான் அரசமரத்தின் கதை என்றொரு சிறுகதையைப் பற்றி தமிழ்ச் சிறுகதை இலக்கியம் குறித்து பேசுகிறவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தச் சிறுகதையைப் பற்றிக் கூறுங்களேன்.
அ.நா. : நீங்கள் குறிப்பிடும் சிறுகதையின் பெயர் குளத்தங் கரை அரசமரம். இதனை எழுதியவர் வ.வே.சு. அய்யர். 1927ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மங்கையர்க் கரசியின் காதல் என்ற தலைப்பிட்ட கதைக் கொத்தில் இந்தச் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்புக்கு பாரதியின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் அணிந்துரை அளித்துள்ளார். ஒவ்வொரு சிறுகதைக்கும் சூசிகை என்ற
பெயரில் பீடிகையைத் தந்துள்ளார் படைப்பாளர். மங்கையர்க்கரசியின் காதல் ஒரு வரலாற்றுச் சிறுகதை.
நீங்கள் குறிப்பிட்ட குளத்தங்கரை அரசமரம், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது
ஓர் அரசமரமே பேசுவது போல் சித்தரிக்கப்பட்டள்ள இந்தச் சிறுகதையில், ஓர் இளம் பெண் படுகிற பாடுகள் விவரிக்கப்படுகின்றன. அவளை ஒதுக்கி வைத்து விட்டு அவளுடைய கணவனுக்கு மறுமணம் செய்து வைக்க முற்படுகின்றனர் புகுந்த வீட்டுக்காரர்கள். மனைவி மீது காதல் மாறாத கணவன், கடைசி நேரத்தில் பெற்றோர்களை ஏமாற்றி இரண்டாவது கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று திட்டமிடுகிறான். ஆனால், கணவனும் கைவிட்டதாக எண்ணி அவள் தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். காலத்தைக் கடத்தியதால் அன்பு மனைவியை கணவன் இழந்து விடுகிறான்.
உங்களுக்கு இன்னொரு தகவலையும் தருகிறேன். மங்கையர்க்கரசியின் காதல் என்ற இந்தத் தொகுப்பில் ஐயர் எழுதிய, புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் ஜோடியைப் பற்றிய லைலா மஜ்னூன் என்ற சிறுகதையும் உள்ளது. இந்த சமயம் ஒரு தகவல். மரம், மனித வாழ்வுடன் ஒன்று கலந்து நிற்பதை பிரபஞ்சன் எழுதிய பிரும்மம் சிறுகதை நன்றாக விளக்கும்.
திருமகள் : நன்றி ஐயா. நீங்கள் காதல் கதை பற்றி குறிப்பிட்டதால், ஒரு காதல் பாடலைக் கேட்டு விட்டு நிகழ்ச்சியைத் தொடர்வோம். கப்பல் ஓட்டிய தமிழன் படத்தில் இடம் பெற்ற பாரதியார் பாடல் காற்று வெளியிடைக் கண்ணம்மா…
(பாடல்)
திருமகள் : சார். உலகின் சிறந்த சிறுகதைகள் பற்றி இப்ப நீங்கள் சொல்லுங்க. நாங்க தெரிஞ்சுக்கறோம்.
அ.நா. : சிறந்த சிறுகதைகள் என்கிற மதிப்பீட்டுக்குள் நாம் போக வேண்டாம். நான் உங்களுக்கு ஒரு மேற் கோளைக் குறிப்பிடுகிறேன். அக்பர் சாஸ்திரி என்னும் தம்முடைய சிறுகதைத் தொகுப்பின் முன் வரைக் குறிப்பில் தி.ஜானகிராமன் கூறுகிறார்.
‘இவையெல்லாம் இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை நான். சிறுகதைகள் என்று கூடச் சொல்லவில்லை. அசல் சிறுகதைகள் எழுதுகிறவர்கள், உலக இலக்கியத்திலேயே பத்துப் பேருக்குள் இருந்தால் அதிகம்.எனவே, காட்சிகள் அல்லது வேறு ஏதாவது சொல்லி இவற்றை அழைக்கலாம்”
திருமகள் : இப்பொழுது புரிகிறது. நீங்கள் சிறந்த சிறுகதைகள் பற்றிய மதிப்பீடு குறித்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று. அது தி.ஜா.வின் கருத்து என்று கூறிவிடுவீர்கள்.
அ.நா. : ஆமாம். நீங்கள் உலகச் சிறுகதைகள் பற்றி கேட்டதால், உலகப் புகழ் பெற்ற ஓஹென்றியின் சிறுகதையைப் பற்றிக் கூறுகிறேன்.
திருமகள் : ஆகா! கிஃப்ட் ஆஃப் மாகி பத்தித்தானே சொல்லப் போறீங்க. நேயர்களே. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இளந்தென்றல் எஃப்எம் வழங்கும் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சி சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் தொடரும்.
(விளம்பரம் : மின் சிக்கனம் தேவை இக்கணம்.
வீட்டிலும் அலுவலகத்திலும் யாருக்கும் பயன் இல்லாமல் யங்கும் மின் விளக்கு மின் விசிறிகளை நிறுத்தி வையுங்கள். மின்சேமிப்புக்கு வழி வகுத்திடுங்கள்.)
(விளம்பரம்: பாடுபட்டு சம்பாதித்த பணத்திற்கு தேவை பாதுகாப்பான முதலீடு.
முதலீடு செய்வதற்கு முன் ஆராய்ந்து அறிந்து முதலீடு செய்யுங்கள்.)
அ.நா. : ஓ ஹென்றி உலகப் புகழ் பெற்ற ஆங்கில சிறுகதை எழுத்தாளர். இவரது படைப்புகளில் நகரத்தின் சாதாரணப் பிரஜைகளான எழுத்தர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் காணப்படுவார்கள். இவர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவர்.
உலகை எழுத்துக்களால் வசப்படுத்தியவர். வசீகரித்தவர். தம்முடைய சிறுகதைகளில் தமது சமகால அமெரிக்காவைப் படம்பிடித்துக் காட்டியவர்.
கிஃப்ட் ஆஃப் மேகி சிறுகதையில் அந்நியோந்நியமான இளந்தம்பதியர் காட்டப்படுகின்றனர். அந்த ஜோடிதான் ஜிம் மற்றும் டெல்லா. சொற்ப வருவாயில் நிறைவான வாழ்வு வாழ்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் தருணத்தில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பரிசு வாங்கித் தர நினைத்தனர். ஆனால் பணத்தட்டுப்பாடு. டெல்லா கணவனுக்குத் தெரிவிக்காமல், ஜிம் வைத்திருக்கும் பட்டை இல்லாத விலைமதிப்புமிக்க வாட்சுக்கு தன்னுடைய அழகான நீண்ட கூந்தலை விற்று பிளாட்டினம் பட்டையை பரிசாக வாங்கி வந்தாள். டெல்லாவுக்குச் சொல்லாமல் ஜிம், தன்னுடைய விலை உயர்ந்த வாட்சை விற்று மனைவியின் அழகான கூந்தலுக்கு வேலைப்பாடுகள் நிறைந்த தங்க கிளிப் வாங்கி வந்தான். இந்தக் கதையில் இழையோடும் கணவன் – மனைவி இடையேயான ஆழமான காதல், அனைவரையும் கவர்ந்தது. உலகின் பல மொழிகளில் இந்தச் சிறுகதை எண்ணற்ற முறை மொழிபெயர்க்கப்பட்டு தலைமுறைகளால் ரசிக்கப்பட்டது. கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது.
திருமகள் : சூப்பர் சார். இந்தச் சிறுகதை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒங்க வெர்ஷன் கேட்கணும்னு தான் இத்தனை நேரம் வாயைத் திறக்காம இருந்தேன்.
அ.நா.: மற்றொரு சிறுகதையில்… ஓஹென்றி ..
திருமகள் : சார். மன்னிக்கணும். ஒரு பாடலைக் கேட்டு விட்டு நிகழ்ச்சியைத் தொடரலாம் சார்.
அ.நா. : அப்படியா?
திருமகள் : ஆமாம் சார். தம்பதிகளின் இலக்கணத்தை விளக்கும் கண்ணதாசனின் பாலும் பழமும் திரைப்பாடல் இதோ உங்களுக்காக… நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
(பாடல்)
திருமகள் : மற்றொரு சிறுகதை பற்றி சொல்வதாகக் கூறினீர்கள்.
அ.நா. : இந்தச் சிறுகதையின் தலைப்பு Ransom of Red Chief இதில் இரண்டு இளைஞர்கள், பத்து வயது சிறுவனை சுலபமாக பணம் சம்பாதிப்பதற்காக கடத்தி விடுகின்றனர். அந்தப் பையனைக் கடத்திக்கொண்டு வந்த பின்னர், அவன் செய்த சேட்டைகளையும், விஷமங்களையும், தொல்லைகளையும் தாங்க முடியாமல் இளைஞர்கள் இருவரும் பையனின் தந்தையிடம் 250 டாலர் கொடுத்து பையனை அழைத்துப் போகச் செய்கின்றனர்.
திருமகள் : பையன் கிட்டேந்து நாம ரிலீஸ் ஆனா போதும்னு ஆயிடுச்சு அவங்களுக்கு. நல்லா இருக்கு சார்… ஹென்றியின் மற்றும் ஒரு கதை சொல்லுங்களேன்.
அ.நா. : கதை கேட்பதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
A Retrieved Refomation என்றொரு சிறுகதை. ஜிம்மி வேலன்ட்டைன் என்ற இளைஞன், எப்படிப்பட்ட சேஃப் லாக்கர் அதாவது பாதுகாப்பு பெட்டகம், அலமாரி இப்படி எதையும் சாவி இல்லாமல் திறக்கக் கூடிய திறமை படைத்தவன். சிறைச்சாலையிலிருந்து தப்பித்து வெளியே வருகிறான்.
அருகில் உள்ள சிறிய நகரத்திற்குள் நுழைகிறான். ஒரு வங்கியைப் பார்க்கிறான். அங்கு கொள்ளை அடிக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளே நுழையும் போது, வங்கி உரிமையாளரின் அழகான மகளைப் பார்க்கிறான்.
கண்டதும் காதல்… love at first sight இருவரிடையே ஏற்படுகிறது.
ஜிம்மி வேலன்ட்டைன், குற்றச் செயல் பாதையை விட்டுவிட்டு ரால்ஃப் ஸ்பென்சர் என்ற பெயரில் ஷூ ற ஷ தயாரிப்பாளராக மாறிவிடுகிறான். காதல் செய்த மாற்றம்.
ஒரு நாள் இவன் வங்கிக்குள் செல்லும்போது தருணத்தில் இவனுக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி வருகிறார். அங்கே வங்கியில் ஒரே பரபரப்பு. புதிதாக வாங்கிய ஒரு பெட்டகத்திற்குள் உள்ளே வாடிக்கையாளரின் குழந்தை தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டுவிடுகிறது. வங்கி உரிமையாளரும் வேலன்ட்டைனின் காதலியும் கைகளைப் பிசைந்து நிற்கின்றனர். காவல்துறை அதிகாரி இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். காவல்துறை அதிகாரியின் முன்னால் அலமாரியை உடைத்தால் தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடும் என்று தெரிந்தும், ஜிம், ஆனது ஆகட்டும் என்று அலமாரியை உடைத்து குழந்தையைக் காப்பாற்றுகிறான். ஜிம்முக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், காவல்துறை அதிகாரி, அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் போய் விடுகிறார்.
திருமகள் : சார். இதே போன்ற காட்சி, மூன்று தெய்வங்கள் திரைப்படத்தில் பார்த்த ஞாபகம்.
அ.நா. : பழைய திரைப்படம் பற்றி நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆச்சரியம்தான்! காட்சியையும் நீங்களே விவரியுங்கள்.
திருமகள் : என்ன சார். பார்த்த நினைவுல சொன்னேன். நீங்க சொன்னால்தானே நல்லா இருக்கும்.
அ.நா. : மூன்று தெய்வங்கள் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த திரைப்படம். நடிகர் திலகம் கதாநாயகனாக நடித்திருப்பார். மூன்று கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று எஸ்.வி.சுப்பையா வீட்டில் கைதிகள் என்பதை வெளிப்படுத்தாமல் அடைக்கலம் ஆகி இருப்பார்கள். அவருடைய மளிகைக் கடையில் பணியாளர்களாக இருந்து வரும்போது, ஓஹென்றி கதையில் வருவதுபோல், சுப்பையா வீட்டு அலமாரியில் ஒளிந்து கொண்ட பக்கத்து வீட்டு குழந்தை கதவை பூட்டிக் கொண்டு திறக்க முடியாமல் தவித்ததுக் கொண்டிருக்கும். அப்பொழுது இந்தக் கைதிகள் ஒவ்வொருவருடைய செயல்கள் பற்றி தகவல் கிடைத்த உள்ளூர் போலீஸ் அதிகாரி அங்கு வந்து விடுவார். திரும்பி சிறைக்குப் போனாலும் பரவாயில்லை என்று கதாநாயகன் அலமாரியின் பூட்டை உடைத்து குழந்தையைக் காப்பாற்றி விடுவார்.
போலீஸ்காரர், இவர்களைப் பற்றி அறிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் சென்றுவிடுவார். இந்தத் திரைப்படம் பற்றி ஒப்புமைக்காத்தான் இங்கே கூறப்பட்டது.
திருமகள் : இனி…மீண்டும் தமிழ்ச் சிறுகதை உலகத்திற்குச் செல்வோம். ஜெயகாந்தன் அவர்களுடைய ஒரு பிடி சோறு கதைச் சுருக்கத்தைச் சற்றே கூறுங்கள்.
அ.நா : நீங்கள் நினைவுப்படுத்தியதற்கு நன்றி. ஒரு பிடிச் சோறு சிறுகதை விளிம்புநிலை மக்களின் வாழ்வின் வறுமை பற்றிய பதிவு. இந்தச் சிறுகதையில் வருகிற முக்கிய கதாபாத்திரம் ராசாத்தி என்ற கூலித் தொழிலாளி எட்டு மாத கர்ப்பிணி. அவளுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான்.
சிறுவன் மண்ணாங்கட்டி. மண்ணாங்கட்டி என்பது ராசாத்தியின் இறந்து போன அப்பாவின் பெயர். அதனாலே மகனுக்கு அந்தப் பெயர் வைத்திருக்கிறாள்.
மண்ணாங்கட்டியை செல்லமாகக் கோபித்துக் கொள்கிறாள். மண்ணாங்கட்டியை பக்கத்தில் இருக்கும் மாரியாயி சோற்றைத் திருடித் தின்றதற்காக முதுகில் அறைகிறாள்.
இதனால், மாரியாயிக்கும் ராசாத்திக்கும் வாய்ச்சண்டை முற்றி கைகலப்பு ஏற்படுகிறது. மாரியாயின் கணவன் மாணிக்கம் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணை அடிக்கலாமா? என்று கூறி தன் மனைவியை அழைத்துச் செல்கிறான். மண்ணாங்கட்டிப் பையனும் எங்கோ ஓடி விடுகிறான்.
சற்று நேரத்தில் பசியோ அல்லது ஏதாவது வலியோ – ராசாத்தியை வாட்டுகிறது. குடிசைக்குள் அனத்திக் கொண்டிருந்தவளின் குரல் கேட்டு மாரியாயி ஓடி வருகிறாள். கொஞ்ச நேரத்திற்கு முன் சண்டை போட்டவள்தான். லாரி வந்திருக்கிறதே விறகு இறக்கணுமே இல்லேன்னா கஞ்சி வைத்து தருவேன் என்கிறாள் மாரியாயி.
அரிசி இருந்தால் கொடு நானே கஞ்சி காய்ச்சிக் கொள்கிறேன் என்கிறாள் ராசாத்தி. மாரியாயி அரிசியைக் கொடுத்து விட்டு வேலையைப் பார்க்கப் போகிறாள்.
பசி வயிற்றை வாட்ட, கஷ்டப்பட்டு குழாயடி வரை சென்று தண்ணீர் பிடித்து வந்து சுள்ளிகளை வைத்து அடுப்பை மூட்டி, கஞ்சியைத் தயார் செய்து வைக்கிறாள். பானையிலிருந்து கலயத்தில் மாற்றுகிறாள். ஆறட்டும் என் று காத்திருந்து அதைச் சாப்பிடுவதற்குள் மண்ணாங்கட்டி எனக்குக் கஞ்சிம்மா கஞ்சிம்மா என்று வருகிறாள். ஒரு வாய்க் கஞ்சியைக் குடிச்சு ஒரு பிடி சோத்தை தின்னா பசி பறந்து போயிடும். நிம்மதியாத் தூங்கலாம் என்று இருந்தவளைக் கோபமூட்டினான் மகன்.
பையனை விரட்டி அடித்தாள். மீண்டும் வந்து விடுகிறான் அந்தப் பையன். மண் கலயத்தைத் தாயிடமிருந்து பறிக்க முயன்றான். கலயத்திலிருந்து கஞ்சியெல்லாம் கீழே கொட்டி விடுகிறது. தரையில் விழுந்த கொஞ்சம் சோற்றை அள்ளி விழுங்கி ஓட்டம் பிடிக்கிறான் பையன்.
சற்று நேரத்தில் குடிசையிலிருந்து ராசாத்தியின் அலறல். லாரியிலிருந்து லோடு இறக்கிக் கொண்டிருந்த மாரியாயிக்குக் கேட்கிறது. வந்து பார்த்தால் ராசாத்தி இறந்து விட்டிருக்கிறாள். சண்டையிட்ட மாரியாயிதான் அவளுக்காக ஒப்பாரியிடுகிறாள்.
மண்ணாங்கட்டி வந்து பார்த்தான். கேவிக் கேவி அழுதான். மாணிக்கமும் மாரியாயியும் அவனை அரவணைத்து ஆறுதல் கூறினர். இப்பொழுது மாரியாயியும் மாணிக்கமும் மண்ணாங்கட்டியைக் கவனித்துக் கொண்டனர். மண்ணாங்கட்டியின் குறும்புத்தனமும் கொட்டமும் பறந்து போய் விட்டது.
மறுநாள், மண்ணாங்கட்டி ஒரு பிடிச் சோற்றை தனியாக எடுத்து வைத்து தகரக் குவளையில் போட்டு வைத்தான். எடுத்துத்துன்னு என்கிறாள் மாரியாயி. அது எங்க அம்மாவுக்கு என்கிறான் மண்ணாங்கட்டி. வானத்தைப் பார்த்தவன் கண்களில் கண்ணீர். அம்மா அம்மா என்று மாரியாயியைப் பிடித்து அணைத்துக் கொண்டு கதறுகிறான் மண்ணாங்கட்டி. மவனே என்று அவனைத் தழுவிக் கொள்கிறாள் மாரியாயி
திருமகள் : நீங்கள் கூறிய கதைச் சுருக்கமே நெஞ் உருக்குகிறது. முழுக்கதையையும் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. ஐயா.. சண்டை சச்சரவுகளை நொடியில் மறந்து ஆபத்து காலத்தில் துணை நிற்கும் மாரியாயியும் மாணிக்கமும் நெஞ்சில் நிற்கிறார்கள். இறுதிக் காட்சியில் ராசாத்தியின் மகனைத் தன் மகனாக அரவணைத்துப் பாசம் காட்டும் மாரியாயியின் பெண்மை வணக்கத்திற்குரியது. நேயர்களே இளந்தென்றல் பண்பலை வழங்கும் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சி சிறிய விளம்பர டைவேளைக்குப் பின் தொடரும்.
(விளம்பரம் : மேகங்கள் தரும் கொடை வான்மழை சேமிக்காமல் இருக்கலாமா அதை?)
(விளம்பரம் : குடிநீரைக் காய்ச்சிப் பருகுங்கள்.)
திருமகள் : மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சியில் சிறுகதைகள் பற்றிய சிந்தனைகளையும் தகவல்களையும் பேராசிரியர் அரங்கநாதன் நம்முடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.சார்..இதோ ஒரு நேயர். பழனியப்பன் அவர்கள் எஸ்.எம்.எஸ்-ல் கேள்வி அனுப்பியிருக்காரு.
அரங்கநாதன் : கேளுங்க.
திருமகள் : கண்ணதாசனின் திரைப்பாடலைக் கேட்டதும், கண்ணதாசன் சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்ற கேள்வியை இவர் முன் வைத்திருக்கிறார்.
அரங்கநாதன் : கவியரசு கண்ணதாசன் அவர்கள், தமிழக அரசியல் அரங்கிலும் திரைத்துறையிலும் முழுமூச்சுடன் பணியாற்றி வந்த நிலையில் அவ்வப்போது தனிக் கவிதைகள், காவியங்கள், உரைநடை காவியங்கள் எழுதினார். குமுதம், ராணி, தினமணிகதிர் இதழ்களில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் எழுதிய அதை விட ரகசியம் என் ற தொடர்கதை திரைப்படமாகவும் வெளிவந்தது. சிந்தனையைத் தூண்டும் குட்டிக் கதைகள் ஏராளமாக எழுதியுள்ளார். நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கும் சிறுகதை வடிவில் கவியரசு கதைகள் புனைந்துள்ளார். குமுதம் வார இதழில் செய்திகளின் அடிப்படையில் உண்மைச் சிறுகதைகள் படைத்துள்ளார். அவை ‘செய்திக் கதைகள்’ என்ற தலைப்பிலான நூலாக 1980 ஆம் ஆண்டு வானதி பதிப்பகத்தால் முதற் பதிப்பாக வெளியிடப்பட்டது.
ட்விஸ்ட் எனப்படும் திருப்பம் கொண்ட இச் சிறுகதைகள் அக்காலகட்டத்தில் வாசகர்களின் உள்ளங் களைக் கொள்ளை கொண்டவை. கவியரசு கண்ணதாசன் அவர்கள், இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்: “சிறுகதைகளில் நான் சில உத்திகளைக் கையாளுகிறேன். அவையெல்லாம் வங்காளத்து சரத்பாபு எனக்களித்த பிச்சை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். சில கதைகளில் தாராசங்கர் பானர்ஜியின் பாணியைப் பின்பற்றுகிறேன்.
இன்று என்னைப் பின்பற்றுகிறவர்கள் பலர் இருந்தாலும் எனது குருநாதர்களைப் பற்றி சொல்லி ஆக வேண்டும் அல்லவா? எல்லாக் கதாசிரியர்களும் ஏதோ ஒரு பாணியைத் தான் பின்பற்றுகிறார்கள் என்றாலும் பலர் சொல்வதில்லை; நான் சொல்லிவிட்டேன்” எப்பொழுதும் போல் கவியரசு அவர்களின் வெளிப்படையான மனம் இதில் வெளிப் படுகிறதல்லவா? சரத்பாபு என்று கவியரசு குறிப்பிடுவது று யார் என்று தெரியுமா?
திருமகள் : தெரியும் சார். வங்காள எழுத்தாளர் சரத் சந்திரர்.
அ.நா. : பிரபல பத்திரிகைகளில் எழுதி வந்தபோதிலும் அவரே தென்றல் உள்ளிட்ட பல பத்திரிகைகளை நடத்தி வந்த இதழாளரும் கூட. எழுபதுகளில் அவர் ‘கண்ணதாசன்’ என்ற பெயரிலேயே ஓர் அருமையான இலக்கிய இதழை நடத்தினார். அவருடைய ஆசிரியத்துவத்தில் பீடு நடை போட்ட இந்த இலக்கிய இதழில் எழுத்தாளர்கள் பலரின் பல்வேறு இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகளை வெளி யிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியத்தை ஊக்குவித்த இதழ்களில் கண்ணதாசன் இதழுக்கு முக்கிய இடம் உண்டு.
திருமகள் : நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி. அண்மையில் கவிஞர் அமரர் வாலி அவர்களின் சிறுகதை களும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சரி. இப்பொழுது ஒரு திரைப்பாடலைக் கேட்போம் -இரத்தத்திலகம் திரைப் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று தொடங்கும் கண்ணதாசனின் திரைப் பாடல்.
(பாடல்)
திருமகள் : சார். ஒரு நேயர் அழைக்கிறார்.
குரல் : வணக்கம் மேடம். வணக்கம் சார். திருமகள் / அ.நா. : வணக்கம். சொல்லுங்க.
குரல் : நான் கொறட்டூர் ராஜாமணி. கண்ணதாசன் பத்தி சொன்னீங்க. வண்ணதாசன் பற்றி சொல்லுங்க சார்.
அ.நா. : சரி. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகில் வாழ்வியலை நுணுக்கமாகப் படைத்துக் காட்டி வரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவர் கல்யாண்ஜி என்ற பெயரில் புதுக்கவிதைகளையும் படைத்துள்ளார். இவர் கைவண்ணத்தில் நெஞ்சைத் தைக்கிற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் இலக்கியத் திறனாய்வாளர். தி.க. சிவசங்கரன் அவர்களின் புதல்வர். ஓர் எழுத்தாளரின் முகத்தை அவருடைய முன்னுரையே பறை சாற்றும் என்பார்கள். சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்” என்னும் தம்முடைய சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் அவர் கூறுவதைச் சொல்கிறேன். கேளுங்கள். “எப்படி ஆயினும் இன்னும் இந்த வாழ்க்கை வெறுப்புக்குரியதாகிவிடவில்லை. இதுவரையிலும் அது நேசிக்க மட்டுமே கற்றுக் கொடுத் திருக்கிறது என்பதே என் பக்கத்து நிஜமாக இருக்கிறது.
முற்றிலும் வெறுப்புக்குரிய கோளமாக என்றாவது இந்த பூமி பெயர் கொள்ளுமெனில் அது துக்கத்திற்குரியதே. இது ஒரு போதும் அப்படி ஆகாத அளவுக்கு, அடையாயம் காட்டத் தெரியாத ஒரு சமன்பாடு நம் மத்தியில் எப்போதும் இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க நாம் அன்பற்றவர்களாகியா போனோம்? இன்னும் இல்லையே…”
திருமகள் : வாசித்தலும் நேசித்தலும் குறைந்து வருகிற காலகட்டத்தில் நீங்கள் தந்த வண்ணதாசனின் மேற்கோள் சிந்தனையைத் தூண்டுகிறது. முற்றிலும் வெறுப்புக்குரிய தாக இந்த பூமி உருமாறி விடக் கூடாது என்றே நாமும் வேண்டுவோம்.
அ.நா. : இளமையில் நீங்கள் இவ்வளவு பக்குவமாகப் பேசுகிறீர்கள். என்ன ஆச்சரியம்!
திருமகள் : ஐயா, உங்களைப் போன்ற பெரியவர்களின் நட்பால் விளைந்தது அந்தப் பக்குவம். இப்பொழுது ரமணா திரைப்படத்தில் ஹரிஹரன் பாடிய வானவில்லே வானவில்லே… பாடலைக் கேட்போம்.
(பாடல்)
திருமகள் : சார், சிறுகதை, நாவல் என்றாலே மண்வாசனை பற்றிய பேச்சு எழுவதுண்டு. நீங்கள் கூட உங்கள் அறிமுக உரையில் வட்டார வழக்கு என்று குறிப்பிட்டீர்கள். அதுதான் மண் வாசனையா?
அ.நா. : ஆமாம். திருமகள் அவர்களே. மண் மனம் என்பதும் மண் வாசனை என்பதும் வட்டார வழக்குகளைக் குறிப்பதாகும். ஜெயகாந்தனின் ஒரு பிடிச் சோறு, உன்னைப் போல் ஒருவன் ஆகிய கதைகளில் சென்னை வாழ் அடித்தட்டு மக்களின் பேச்சு வழக்குகள் இடம் பெற்றன. தி. ஜானகிராமனின் சிறுகதைகளிலும் புதினங்களிலும் தஞ்சை மண் மணத்தைக் காணலாம். கி. ராஜநாராயணனின் எழுத்துக்களில் நெல்லை மண் வாசனையைக் காணலாம். மதுரை வட்டாரத் தமிழ் மணம் கமழ, எழுத்தாளர் சி.சு. செல்லப்பா வாடிவாசல் என்ற புதினத்தைப் படைத்தார். ஜல்லிக்கட்டு பற்றிய களத்தில் இந்தக் கதை நிகழும். இப்படி பல எழுத்தாளர்கள், தங்களுடைய கதைக் களத்துக்கு ஏற்ற வழக்கு மொழிகளைக் கையாள்வதைப் பார்க்கலாம்.
இப்பொழுது கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மஞ்சி விரட்டு சிறுகதை பற்றிக் கூறுகிறேன்.
திருமகள் : சார். குறுக்கீட்டுக்கு மன்னிக்கணும்.
அ.நா. : கொத்தமங்கலம் சுப்பு அவர்களைப் பற்றிய அறிமுகம் வேண்டுமா?
சரி. கூறுகிறேன். கேளுங்கள். கொத்தமங்கலம் சுப்பு அவர்கள், அமரர் எஸ். எஸ். வாசன் அவர்களின் புகழ் பெற்ற ஜெமினி என்னும் சினிமா நிறுவனத்திலும் ஆனந்த விகடனிலும் பணி ஆற்றியவர். அமரர் வாசன் அவர்களின் ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவர்.
கலைமணி என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதிக் குவித்தவர். நடனத் தாரகைக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் இடையேயான காதலைப் பற்றி இவர், ஆனந்தவிகடனில் எழுதிய தொடர்கதை அந்தக் காலத்தில் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இந்தத் தொடர்கதையை இயக்குநர் A.P. நாகராஜன் அவர்கள், அழியாப் புகழ் பெற்ற திரைக் காவியமாக உருவாக்கினார். அந்தத் திரைப்படம்தான் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளி பத்மினியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த தில்லானா மோகனாம்பாள். காந்தி மகான் வரலாற்றை வில்லுப்பாட்டில் எழுதிக் காட்டியவர். கிராமிய மணம் கமழும் பல கவிதைகளையும் எழுதியவர் இவர்.
இந்திய விடுதலைக்கு முன்பாகவே இவர் பல சஞ்சிகைகளில் எழுதிய மண் மணம் கமழும் சிறுகதைகளின் தொகுப்புதான் மஞ்சி விரட்டு. சமீபத்தில் விகடன் நிறுவனம் இந்தத் தொகுப்பை 2007ஆம் ஆண்டில் நவீன முறையில் புதுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. முதற் பதிப்புக்கு முது பெரும் எழுத்தாளர் மணிக்கொடி எழுத்தாளர் வ.ரா என்னும் வ. ராமஸ்வாமி அளித்த அணிந்துரை விகடன் பதிப்பித்த தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இனி மஞ்சி விரட்டு என்ற சிறுகதையைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன்.
மஞ்சி விரட்டு சிறுகதையில் ஒரு கிராமத்தின் இரு வேறு வகுப்பார் பற்றி விவரிக்கப்படுகிறது. அதில் ஒரு பிரிவைச் சேர்ந்த பொன்னுசாமி ரங்கூ ரங்கூனுக்குப் போய் பல வருடங்கள் வேலை பார்த்து பணத்துடன் வந்து சேர்கிறான். கோயில் உள்ளிட்ட பொதுக் காரியங்களுக்கு அள்ளி யிறைக்கிறான். ஏற்கனவே நாட்டாமை ஆக உள்ள வகுப்பாருக்கும் இவனுடைய வகுப்பாருக்கும் பூசல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, பொங்கலுக்கு நடத்தப் படும் மஞ்சி விரட்டு நிகழ்ச்சி கலகத்திலும் கலவரத்திலும் முடிகிறது. இரண்டு பிரிவுக்கும் தலைமை வகித்த கருப் பண்ணனும் பொன்னுச்சாமியும் மதுபானக் கடைகளில் விழுந்து கிடக்கிறார்கள். இருவருக்கும் கூடாதவர்களின் சிநேகமும் ஏற்பட்டுவிடுகிறது. சரி அந்த கிராமத்திற்கு எப்படித்தான் விமோசனம் ஏற்பட்டது? இதற்கான விடையை இந்தச் சிறுகதையின் இறுதிப் பத்திகளில் சுப்பு அவர்களின் வார்த்தைகள் மூலமாகவே அறிவோம். வாருங்கள்.
இருவருக்கும் காலிகளின் சேர்க்கை ஏற்பட்டது. மொத்தத்தில் ஊரில் காலிகளின் கூட்டம் அதிகப்பட்டது. ரிசர்வ் பட்டாளம் (கேம்ப்) வந்தது. தெண்ட வரி வசூலிக்கப்பட்டது.
ஊரின் அழகு ஊரை விட்டுப் புறப்பட்டுவிட்டது. கோவில் பக்கம் யாரும் திரும்புவதே கிடையாது. காலிகள் ஒளிந்து கொள்ளக் கோவில்கள் மறைவிடமாக இருந்தன.
1927ஆம் வருஷத்தில் ஏற்பட்ட இந்தச் சோக சம்பவத்தின் எதிரொலி ஐந்து வருஷங்கள் நீடித்தது.
நாட்டுக்கு விமோசன மணி அடித்த மாதிரி,உப்புச் சத்தியாகிரக இயக்கம் பாரத பூமியில் ஆரம்பித்தது. அநேகர் தேச நன்மைக்காகச் சிறை புகுந்தனர்.
பின்னர், காங்கிரஸ் தேர்தலும் வந்தது. தேசியப் பிரசாரம் கரை புரண்டு ஓடிற்று. அப்போது ஊரில் ஒற்றுமை
ஏற்பட்டதுதான் ஆச்சர்யம்.காங்கிரஸ்காரர் மந்திரிகளாய் வந்த பின்பு கடன் தொந்தரவுகளும் சற்று நீங்கின.ஊர் ஒருமுகப்பட்டது. மழைக்கும் விளைவுக்கும் குறைவில்லை.
அடடா! ஒற்றுமையுடன் இந்த ஊரில் நடக்கும் உற்சவத்தை இப்போது நீங்கள் பார்க்க வேண்டும்.
கதர் வேட்டி கட்டித்தான் சார் போன வருஷம் மஞ்சி விரட்டும் நடந்தது. அதோ அரச மரத்தின் உச்சியில் கதர்க் கொடி தெரிகிறதே அதுதான் ஊரின் மஞ்சு விரட்டுப் பொட்டல்.
திருமகள் : மஞ்சி விரட்டால் ஒரு கிராமம் ஒற்றுமை இழந்ததையும், பின்னர் ஒன்றுபட்டதையும் சொற்சித்திரங் களாக வடித்துள்ளார் என்று சொல்லுங்கள். நேயர்களே… இப்பொழுது ஒரு பாடலைக் கேட்போம். ஊருவிட்டு ஊருவந்து படத்தில் இடம் பெற்ற இளையராஜா அவர்களும், ஜானகி அம்மாவும் பாடிய சொர்க்கமே என்றாலும் .. நம்ம ஊரு போல வருமா?
(பாடல்)
திருமகள் : சார். ஓர் அழைப்பு வருகிறது. செவி மடுப்போம்.
குரல் : வணக்கம். நான் பார்த்திபன், செங்கல் பட்டிலிருந்து பேசுகிறேன்.
அ.நா. : வணக்கம் பார்த்திபன். நிகழ்ச்சியைக் கேட்டு கிட்டு வர்றீங்களா?
பார்த்திபன் : ஆமாம் ஐயா. அ.நா. : சொல்லுங்க.
பார்த்திபன் : நீங்கள் மண் மணம்னு சொல்லும்போது எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமி நினைவுக்கு வர்றாரு. உரையாடல்களில் மட்டுமல்லாமல் அவர் கதை சொல்லும் பாங்கிலும் பாணியிலும் மண்மணம் வந்து உட்காரும். உங்களுக்குப் பிடித்த அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றிக் கூறுங்களேன்.
அ.நா.: நன்றி. இவர் ஓர் அருமையான வாசகர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.
திருமகள் : மேலாண்மை பொன்னுச்சாமியின் எந்த சிறுகதையைப் பற்றிக் கூறப் போகிறீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அ.நா. : ஊரகப் பகுதி மக்களின் உணர்வுகளையும் பிரச்சினை களையும் எளிய நடையில் நம்முடைய நேயர் பார்த்திபன் குறிப்பிட்டது போல் அந்த மண்ணின் மணத்தோடு கூடிய நடையில் படைத்துக் காட்டுபவர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவருடைய படைப்புகள் இலக்கிய இதழ்களில் மட்டும் அல்லாமல் ஜனரஞ்சக இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
மத நல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை என்றெல்லாம் பேசப்படுகிற கருத்தை பிரசார நெடி இல்லாமல் மேலாண்மை பொன்னுச்சாமி ‘கதகதப்பு’ என்கிற சிறுகதையில் வலியுறுத்தியிருக்கிறார். அந்தச் சிறுகதையில் படைப்பாளர் படைத்தளித்ததை சுருக்கமாக உங்களுக்குத் தெரிவிக்க முயற்சி செய்கிறேன்.
ஊதுபத்திகள், பன்னீர் பாட்டில்கள், தலைவலித் தைலங்கள் இவற்றை சைக்கிளில் வைத்து விற்கும் மைதீன் ராவுத்தருக்கும் அருஞ்சுனை என்ற சீனியர் சிட்டிசனுக்கும் இடையேயான நட்பை விளக்கும் வகையில் சிறுகதை வளர்கிறது. ‘வயசான கெழட்டுச் சனியனா மண்ணுக்குப் பாரமா உக்காந்துருக்கேன்’ என்று பெரியவர் சலித்துக் கொள்ளும்போது ராவுத்தர் கூறுகிறார்: ‘வீட்ல ஒரு பெரியாளு இருந்தா… பெருமாளு இருந்தா மாதிரி. வீட்டுக்கே தனி மரியாதை. நீரில்லேன்னா நா யாரைப் பார்க்க வரப்போறேன்.’
இப்படி ஆறுதல் அளிக்கும் நண்பர், பல விஷயங் களையும் பேசிச் செல்லும் நண்பர் இரண்டு மாதங்களாக வரவே இல்லை. ஒரு நாள் சைக்கிள் மணியோசை கேட்க அருஞ்சுனை பரவசப்பட்டு எழுந்து நிற்கிறார். ஆறுதல் சொல்லும் பாயின் முகத்தில் விசனக் குறிகள். என்னதான் ஆச்சு என்று கேட்கிறார்.
பாய் தழுதழுக்கப் பதில் கூறுகிறார்: அருஞ்சுசனை நீரே சொல்லும்.. எவன் எவனோ எங்கேயோ குண்டு வைச்சான். நான் என்ன செய்வேன். என்ன பாய் இப்படி குண்டுக வெடிக்குன்னு எங்கிட்டேயே விசாரிக்கறாங்க. மனசு வெறுத்துப் போகுது.
அருஞ்சுனை பதில் கூறுகிறார்: நம்மை மனுசரா மட்டுமே பார்க்கணும். அதான் மனுசப் பண்பு. நம்மை ராவுத்தரா நெனக்கறதே தப்பு. அதுலயும் குண்டுகளை வெச்சுக் கொல்லுற பயங்கரவாதியா நெனக்குறது அதை விடக் கொடூரத் தப்பு.’
‘அருஞ்சுனையின் பாசக் குழைவான சொற்கள், அவரது ஆன்மாவையே வருடி விட்டன. கண்ணில் வந்து முட்டிய நீர்த்துளி, உடைந்து சிதறித் தெறிக்கிறது. அருஞ்சுனையின் உள்ளங்கைக்குள் மைதீன்பாயின் கைகள் கதகதப்பை உணர்ந்தன” என்று ஆசிரியர் சிறுகதையை முடிக்கிறார்.
திருமகள் : சுருக்கமாகச் சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். கஷ்டப்பட்டு சுயதொழில் செய்யும் ராவுத்தருக்கும் அருஞ்சுனைக்கும் இடையேயான நட்பும், மனிதநேயமும் இந்தக் கதையில் இழையோடுவதைக் காண்கிறோம். நெஞ்சத்தைத் தொடுகிறது கதகதப்பு என்னும் இந்தச் சிறுகதை. இனி ஒரு திரைப்பாடலைக் கேட்போம்.
பாரத விலாஸ் திரைப்படத்திலிருந்து இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு என்ற பாடல்.
(பாடல்)
திருமகள் : தேசபக்தியூட்டும் பாடல் ஒன்று கேட்டோம். இப்பொழுது சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் நமது நிகழ்ச்சி தொடரும்.
(விளம்பரம்: மருந்து மாத்திரைகள், பேக் செய்யப்பட்ட தின் பண்டங்கள் ஆகியவற்றை வாங்கும்போது உபயோகிப்ப தற்கான கெடுத் தேதியைப் பார்த்து வாங்குங்கள்.)
விளம்பரம்:
மரம் வளர்த்தால்
ன்பம் என்றும் மரங்களைப்
பாதுகாத்திடுங்கள் இன்பம் பெறுங்கள்.)
(விளம்பரம்: குண்டு பல்புகளைத் தவிர்த்திடுங்கள்)
திருமகள் : இளந்தென்றல் பண்பலை வழங்கிக் கொண்டிருக்கும் மழைச்சாரல் இலக்கிய நிகழ்ச்சியில் சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவங்களை பேராசிரியர் அரங்கநாதன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அய்யா.. நீங்கள் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றி உங்கள் உரையில் அடிக்கடி குறிப்பிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்த அவருடைய ஒரு சிறுகதை பற்றிக் கூறுங்களேன்.
அ.நா. : சொல்கிறேன். யாதும் ஊரே, அக்பர் சாஸ்திரி, கொட்டுமேளம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் தி.ஜா. அவர்களின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள்.
கொட்டுமேளம் என்கிற சிறுகதையில் உரையாடல் களிலேயே கதையைக் கொண்டு செல்வார்.
எனக்குப் பிடித்த சிறுகதை யாதும் ஊரே என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள வெயில் என்ற தலைப்பிட்ட சிறுகதை. அந்நியோன்னியமான மனைவியை மரணத்தால்
பிரிந்த கணவன், ஆசை மனைவியைப் பற்றி நினைத்துப் பார்க்கும் கதை.
திருமகள் : யாதும் ஊரே என்பது கணியன் பூங்குன்றனா ரால் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டது அல்லவா? தனை ஒரு சிறுகதைக்குத் தலைப்பாக வைத்திருக்கிறாரா? அ.நா.: ஆம். யாதும் ஊரே என்பதும் ஒரு சிறுகதை. இது சந்நியாசியாக ஆனவர் பற்றிய கதை.
திருமகள் : அந்தச் சிறுகதை பற்றி சுருக்கமாகக் கூறுங்கள் ஐயா.
அ.நா. : உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒருவரைச் சூழ்ச்சியால் அழித்து விடுவதைப் பல கதைகளில் பார்த்திருக்கிறோம். இந்த சந்நியாசி, கதாகாலட்சேபம் கேட்கப் போகிறார். அப்பொழுது உபந்யாசகர் அதாவது கதாகாலட்சேபம் செய்கிறவர், கதை சொல்லும் போது, இவருடைய கதையை சபையினருக்கு கூறுகிறார். ஓஹோ என்று வாழ்ந்த செல்வந்தர் இவர். சந்தான பாக்கியம் இல்லை. அதாவது பிள்ளைகள் இல்லை. திரண்ட சொத்து. மனைவிக்கு சாமர்த்தியம் இல்லை. இவருக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமாயிற்று. உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஆபத்து சந்நியாசம் வாங்கிக் கொள் என்று தாயாதிகள் அவர் மனசைக் கரைத்து சந்நியாசம் வாங்க வைத்து விட்டார்கள். படுத்த படுக்கையான இருந்தவரிடம் கமண்டலத்தையும் காஷாயத்தையும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், நாலைந்து நாளில் நன்றாக உடல் தேறிவிட்டது. பிழைத்து விட்டார். சந்நியாசி வீட்டில் இருக்கக் கூடாது என்று வெளியே அனுப்பிவிடுகிறார்கள் உறவினர்கள். சூழ்ச்சியால் அவருடைய செல்வத்தை அபகரித்து விடுகிறார்கள். சூதுவாது தெரியாத மனைவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வீடு வீடாகச் சென்று ஊர் ஊராகச் சென்று சாப்பிட்டு வருகிறார். தம்முடைய கதையை உபந்யாசககர் சொல்வதைக் கேட்டு சந்நியாசி அழத் தொடங்குகிறார்.
திருமகள் : இந்தக் கதைக்கு யாதும் ஊரே என்ற தலைப்பு பொருத்தமானதுதான் சார்.
அ.நா. : எழுத்தாளன் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் சம்பவத்தையும் வாசகர்களை வசீகரிக்கும் விதத்தில் படைக்க முடியும்.
இராமானுஜர் என்னும் மகான், திருக்கோட்டியூர் நம்பிகள் என்கிற குருவிடம் சென்று மன்றாடி நாராயண மந்திரத்தைக் கற்று வருகிறார். இராமானுஜருடைய குருநாதர், இந்த மந்திரத்தை வேறு யாருக்கும் கூறக் கூடாது, மீறி கூறினால் நரகம் புகுவாய் என்று சொல்லி விடுகிறார்.
மகான் இராமானுஜர் குருவின் கட்டளைக்கு விரோதமாக, நானிலத்தோர்க்கெல்லாம் மந்திரத்தைக் கற்றுத் தருகிறார். தாம் நரகம் புகுந்தாலும் மற்றவர்கள் பலன் அடையட்டும் என்னும் உயரிய நோக்கில்.
இராமானுஜர் வாழ்வில் நடைபெற்ற இந்த முக்கியமான சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு, எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள், “நரகு புகத் துணிந்தவர்” என்ற பெயரில் வரலாற்றுச் சிறுகதையாக, வாசகர்களை வசீகரிக்கும் நடையில் படைத்துள்ளார். சமயம் சார்ந்த விஷயத்தை அனைவரையும் கவரும் விதத்தில் படைத் துள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னீலனின் இந்தச் சிறுகதை, தினமணி 2011 தீபாவளி மலரில் வெளிவந்தது.
பொதுவுடைமைத் தோட்டத்தில் மலர்ந்த சிவப்புச் சிந்தனையாளரான பொன்னீலன், உழைக்கும் மக்கள் பற்றிய பல நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் படைத்துள்ளார். ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளை வழங்கி, சிறுகதை இலக்கியத்துக்கு அளப்பரிய பங்களிப்பைத் தந்துள்ளார்.
இவர் எழுதிய ‘உறவுகள்’ என்னும் சிறுகதையை இயக்குநர் மகேந்திரன் ‘பூட்டாத பூட்டுக்கள்’ என்ற திரைப்படமாக எண்பதுகளில் கொடுத்தார்.
– தொடரும்…
– சிறுகதைகள் பற்றிய சிந்தனைச் சிதறல்கள், முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை